| 
தவிர்க்க முடியாதவைகளாய்... 
 
- சந்திரவதனா செல்வகுமாரன் - 
 என் 
கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே 
நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும், 
கோட்டான்களினதும் கூச்சலும், சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த 
சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக் குறுக்கறுத்து நின்ற பாலத்தைக் கடக்கும் போது 
குத்தெனத் தெரிந்த ஆற்றின் மீது படர்ந்திருந்த குளிர்ந்த அமைதி சுனாமியை ஞாபகப் 
படுத்தி என்னைக் கிலி கொள்ளச் செய்தது. அழகான இயற்கை ஏதோ ஒரு கணத்தில் ஆக்ரோஷமாக 
உயிர் குடிக்கும் என்ற உண்மை இப்போதெல்லாம் அடிக்கடி மனசை உதைத்து விட்டுச் 
செல்கிறது. 
 நேற்றிரவு எரிமலை சஞ்சிகையில் வாசித்த, சித்திரா சுதாகரனின் ´மாபிள்கல் பதித்த 
விறாந்தை´ சிறுகதை நினைவுக்குள் உருண்டது. போர் எப்படியெல்லாம் எங்களைச் சிதைத்து 
விட்டது. இந்தக் குளிரிலும், பனியிலும் இராப்பகலாய் உழன்று வேலை செய்து மாபிள்கல் 
பதித்த விறாந்தையுடனான வீட்டுக்காக ஏங்கிய ஏழைத்தாய்க்குப் பணம் அனுப்புகிறான் ஒரு 
ஐரோப்பியா வாழ் ஈழ அகதி. தாயும் அந்த வீட்டைக் கட்டுகிறாள். கட்டி முடியும் 
தறுவாயில்தான் அந்தக் கொடுமை நடக்கிறது. அந்த மாபிள்கல் பதித்த தரையிலேயே அந்தத் 
தாயும், அவனது சகோதரி குடும்பமும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவன் 
தொலைக்காட்சியில் பார்க்க நேர்கிறது. அந்தக் கொடுமை மனசைப் படுத்தியது. அந்த 
நினைவில் சப்பாத்தையும் துளைத்துக் கொண்டு கால்விரலில் ஏறிய குளிரை மனசு கொஞ்சம் 
கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தது.
 
 நான் தனியே நடந்து கொண்டிருந்தேன். ஆற்றங்கரையும், அதையொட்டிய புல்வெளியும் பனி 
போர்த்தியிருந்தன. தூரத்தில் அந்தப் பனியின் மேல் நின்று சில ஜேர்மனியர்கள் மிகவும் 
சிரத்தையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஆணானாலும் நீண்ட 
கூந்தலைப் பிடியாகக் கட்டியிருந்தார்.
 
 மீண்டும் மீண்டுமாய் அந்த ஐரோப்பிய அகதி இளைஞனும், அவனது குடும்பமும் மனசுக்குள் 
உருண்டார்கள். உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டும் போது ஆசிரியர் பல 
தடவைகள் தலையை என் பக்கம் திருப்பினார். நான் நடந்து கொண்டிருந்தேன்.
 
 இலக்கின்றிய, ஏகாந்த நடையென்றாலும் இன்னும் அரைமணியில் பேரூந்துத் 
தரிப்பிடத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்பது மட்டும் நினைவில் துருத்திக் 
கொண்டு நின்றது.
 
 கோடைகாலத்தில் இப்படிப் பலரும் நடப்பார்கள். எனக்கு இந்தப் பனியிலும் இந்த வெளியில் 
நடப்பதில் ஏதோ ஒரு ஆர்வம். தினமும் காலை வேலை முடிந்ததும் என்னையறியாமலே என் 
கால்கள் இந்த வழியை ஏகும். பனி எவ்வளவு அழகானது. ரோஜாவின் முட்களைப் போல இந்தப் 
பனிக்கு குளிர் மட்டும் இல்லாதிருந்தால் நான் என் வாழ்க்கையின் 
பாதிப்பொழுதுகளையேனும் இந்தப் பனியின் மேல்
 படுத்தும், புரண்டும்... என்று கழித்து விடுவேன்.
 
 பனிப்பூக்கள் பூத்திருந்த ஹாசல்நட்ஸ் மரத்தில் சிறகடித்த ஒரு சிட்டுக்குருவி என் 
மேல் பனிகளை சிதற விட்டுக் கொண்டு அவசரமாய்ப் பறந்தது. உடல் ஒரு தரம் சிலிர்த்தது. 
நினைவு துருத்தியது. திரும்பி பேரூந்துக்கான தரிப்பிடத்தை நோக்கி நடக்கத் 
தொடங்கினேன். "பகுதி நேர வேலை ஒண்டு இருக்கு. செய்தால் கொஞ்சம் காசு வரும்.." என்று 
மருமகள் சில தடவைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நான்தான் "நான் அப்ப முகிலைப் 
பார்க்கிறன். நீங்கள் அந்த வேலையைச் செய்யுங்கோ" என்று சொல்லிப் பேத்தி முகிலைப் 
பார்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். அதுதான் இந்த அவசரம்.
 
 மருமகளின் பாடும் ஓட்டம்தான். முகிலை வெளிக்கிடுத்திக் கொண்டு வந்து என்னிடம் தந்து 
விட்டு வேலைக்கு விழுந்தடித்து ஓடுவாள். திரும்பி வருகிற பொழுது நன்றாகக் களைத்துப் 
போயிருப்பாள். ஆனாலும் இருந்து மெனக்கடாமல் முகிலையும் கூட்டிக் கொண்டு போய் 
சமையல், கூட்டல், கழுவல்... என்று தனது வீட்டு வேலைகளுடன் ஒன்றி விடுவாள்.
 
 முகில் நல்ல பிள்ளை. சொல்லுக் கேட்பாள். ஆனாலும் எனக்கு கால்கட்டு மாதிரித்தான். 
முன்னரைப் போல நினைத்த மாத்திரத்தில் கடைக்கு அதுக்கு இதுக்கு என்று ஓட 
முடிவதில்லை. ஏதேனும் அவசரம் என்றாலும் வெளியின் குளிருக்கு ஏற்ப முகிலை 
வெளிக்கிடுத்திக் கொண்டு புதையும் பனிக்குள் புஸ்செயரைத் தள்ளிக் கொண்டு போய் 
வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இருந்தும் அலுத்துக் கொள்ளும் 
படியாகவும் இல்லை. முகிலோடு பொழுது போவதில் ஒரு அலாதியான சந்தோசம்தான். 
வானொலியோடும், கணினியோடும் மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடிய மனதின் அழுத்தமான 
மௌனங்களை முகிலின் மழலை கலைத்து விடும். எனது குழந்தைகளிடம் இருந்து எனக்குக் 
கிடைத்த அதிஅற்புத பரிசுகளில் ஒன்றென நான் புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் 
படியாகத்தான் முகில் என் வீட்டிலும், என் மனசிலும் தவழ்ந்தாள்.
 
 இப்போதெல்லாம் வாழ்க்கையே அவசரமாக விரைவது போன்றதொரு உணர்வு. காலையும், மாலையும், 
திங்களும், வெள்ளியும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக ஓடிக் 
கொண்டே இருப்பது போன்ற பிரமை. ஒவ்வொரு விடயத்தையும் செய்து முடிக்கும் வேகத்துக்கு 
முன் மணிகளும், நாட்களும் விரைந்து விடுகின்றனவே என்ற பரிதவிப்பு. இருந்தாலும் 
முன்னரைப் போன்ற அனாவசிய சலிப்புகள் எப்படியோ என்னிடமிருந்து மறைந்திருந்தன.
 
 பனி தாண்டி, குளிர் தாண்டி வீடு வந்து சேர்ந்த போது மெலிதான களைப்புத் தெரிந்தது. 
வெப்பமூட்டியின் கதகதப்பு வீடு முழுக்கப்
 பரவியிருந்தது. அதிகாலையிலேயே வேலைக்குப் போய்விட்டதால் இழுத்து விடப் படாதிருந்த 
யன்னல்களின் சட்டர்களை இழுத்து
 விட்டேன். மங்கலாக இருந்த வீட்டின் உட்புறம் சட்டென்று வெளிச்சமாகியது. ஆதவனின் 
ஆதிக்கத்தை விட வெண்பனியின் ஒளிர்வு தூக்கலாக இருப்பது போல இருந்தது. எதிர்வீட்டு 
மாது தனது வீட்டு ஜன்னலினூடு கையசைத்தாள். புன்னகைகளும், கையசைப்புகளும் கூட மனதை 
வருடி விடும் என்பதை இவர்கள்தான் எனக்கு அதிகமாக உணர்த்தினார்கள்.
 
 வானொலியைத் தட்டி விட்ட போது கஜனி படத்தின் சுட்டும் விழிச் சுடரே.. பாட்டு 
இனிமையாக ஒலித்தது. இந்தப் பாட்டு முகிலுக்கும் பிடிக்கும். பாட்டுத் தொடங்கியதுமே 
தலையை அசைத்து அசைத்து ரசிப்பாள். இத்தனை தூரமான அவதானிப்பும், ரசிப்பும் இரண்டு 
வயது மழலையிடமே வந்து விடும் என்பது என் குழந்தைகளை வளர்க்கும் போது எனக்குப் 
புரியவில்லை. முகில் எனக்குப் பல ஆச்சரியங்களைத் தருவாள். இன்னும் சில நிமிடங்களில் 
வந்து விடுவாள்.
 
 அதற்கிடையில் தேநீர் தயாரித்து முகிலுக்கான பாற்போத்தலுடன் வந்தமர்ந்த போது மருமகள் 
அவசரமாக வந்து முகிலை என்னிடம் தந்து விட்டுப் பறந்தாள். ´அம்மா ஓடுகிறாளே!´ 
என்பதில் முகிலின் முகத்தில் ஒரு மெல்லிய கவலை படர்ந்தது. சில வினாடிகள் 
வாசற்கதவையே பார்த்துக் கொண்டு நின்றவள் எனது கொஞ்சலில் மீண்டும் இயல்பு நிலைக்குத் 
திரும்பினாள்.
 
 பாலைக் குடித்ததும் இன்னும் உசாராகி வீட்டுக்குள் இயல்பாக தத்தித் தத்தி நடந்தாள். 
படுக்கையறைக்குள் சென்று லாச்சிகளைத் திறந்து ஆராய்ச்சிகள் செய்தாள். ஒரு 
லாச்சிக்குள் இருப்பதை எடுத்து இன்னொரு லாச்சிக்குள் போட்டாள். புத்தக 
ஷெல்பிலிருந்த புத்தகமொன்றை இழுத்தெடுத்த போது அதன் பாரத்துக்கு ஈடு கொடுக்க 
முடியாது ´தொப்´ பென விழுந்தாள். அப்படியே நிலத்திலிருந்து புத்தகத்தை விரித்து 
பெரிய மனுசத் தோரணையில் படிப்பது போல புத்தகத்தைப் பார்த்தாள்.
 
 அவள் இப்படிப் பராக்காக இருப்பதைப் பார்த்ததும் நான் கணினியின் முன் போய் 
அமர்ந்தேன். ஒரு கட்டுரை எழுத வேண்டும். பெண்கள் தினத்தை முன்னிட்டு கட்டுரையொன்று 
எழுதித் தரும்படி பத்திரிகையொன்று கேட்டிருந்தது. தருவதாகச் சொல்லி விட்டேன். ஆனால் 
இன்னும் எழுதுவதற்கான நேரம் வரவில்லை. வேலை, வீட்டுவேலை, சமையல்... என நேரங்கள் ஓடி 
விடுகின்றன. முன்னரைப் போல நினைத்த கையோடு இரவிரவாய் இருந்து எழுதி முடித்த 
காலங்கள் என்னைக் கடந்திருந்தன. இன்று எப்படியாவது எழுதிக் கொடுத்து விட வேண்டும். 
நாளை பேப்பர் பிறின்ற் க்குப் போகும்.
 
 நான் கணினியின் முன் அமர்ந்ததைப் பார்த்ததும் புத்தகத்தை தள்ளி விட்டு முகில் 
தத்தித் தத்தி ஓடி வந்தாள். அவளுக்கு நான்
 கணினியின் முன் இருந்தால் பிடிக்காது. சிணுங்கிக் கொண்டு தூக்கச் சொன்னாள்.
 
 
  அவளை 
மடியில் வைத்துக் கொண்டே சில இணையத்தளங்களை மேயத் தொடங்கியதில் நேரம் போனது 
தெரியவில்லை. ´இனி மெதுவாகச் சமைக்கத் தொடங்க வேண்டும்´ என்று மூளை எச்சரிக்க, முகிலுடன் குசினிக்குள் 
நுழைந்தேன். பாத்திரங்களை எடுத்து வைத்து, காய்கறிகளை வெட்டத் தொடங்கவே முகில் 
கண்களைக் கசக்கிக் கொண்டு 'அப்பம்மா.., தூக்குங்கோ' மழலை பொழிந்தாள். ம்... 
அவளுக்கு நித்திரை வந்து விட்டது. தூக்கித் தோளில் போட்டு முதுகை மெதுவாகத் 
தட்டினேன். "கை வீசு.. அப்பம்மா! கை வீசு.."  எனறாள். ´கை வீசம்மா கை 
வீசம்மா...´ பாடச் சொல்லிக் கேட்கிறாள். அது பாடி ´நிலா நிலா ஓடி வா...´ பாடிக் 
கொண்டு போக நித்திரையாகி விட்டாள்.
 
 அவளைப் படுக்கையில் போட்டுப் போர்த்தி விட்டு ´மள மள´ வென்று சமைத்து முடித்தேன். 
அத்தனை அவசரமாக நான் செயற்பட்டும் பாத்திரங்களைக் கழுவி முடிக்க முன்னர் தூக்கம் 
கலைந்து எழுந்து விட்டாள். 'அப்...பம்...மா...' சிணுங்கலோடு கூப்பிட்டாள்.
 
 'ஓமடா... என்ரை குஞ்சில்லே வந்திட்டன், வந்திட்டன்.' ஓடிப் போய் தூக்கினேன். 
அப்படியே என் தோளில் சாய்ந்தாள். இனி,
 இப்போதைக்கு குசினிப் பாத்திரங்களோடு மினைக்கெட முடியாது. நித்திரை கலைந்த இந்த 
நேரத்தில் சிறிது நேரத்துக்காவது என்
 மடியிலோ அல்லது தோளிலோ ஒய்யாரமாகச் சாய்ந்திருக்கத்தான் அவளுக்கு விருப்பம். 
அவளையும் தூக்கிக் கொண்டு போய்
 கணினியின் முன் அமர்ந்தேன்.
 
 மடியில் முகிலை வைத்துக் கொண்டு கணினி விசைப்பலகையைத் தட்டுவது கொஞ்சம் 
அசௌகரியமாகத்தான் இருந்தது. சௌகரியம் பார்த்தால் இன்றும் எழுதி முடிக்க மாட்டேன். 
அதனால் அந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.
 
 ஏதாவது தினங்கள் வந்தாலே பத்திரிகைகளும், சஞ்சிகைளும் போட்டி போட்டுக் கொண்டு அவை 
பற்றிய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள்.. என்று பிரசுரிப்பார்கள். இப்போது 
பெண்கள் தினம். அது சம்பந்தமாகத்தான் எழுத வேண்டும்.
 
 எதை எழுதினாலும் என்ன? சில விடயங்களில் முழுதான மாற்றங்கள் இன்னும் இல்லை. பல 
விடயங்கள் மாறி விட்டனதான். ஆண்களும் சமைக்கிறார்கள்தான். பெண்களும் வேலைக்குப் 
போகிறார்கள்தான். ஆனாலும் சமையல் என்பது பெண்களினதுதான் என்பதில் மாற்றம் இன்னும் 
வரவில்லை. ஆண்கள் வீட்டில் நின்றால் சமைப்பார்கள். பெண்கள் சமைக்கிறதுக்காகவே 
வீட்டில் நின்றாக வேண்டிய அல்லது விழுந்தடித்து வீட்டுக்கு ஓடி வரவேண்டிய நிலைமை. 
ஐரோப்பிய வாழ் தமிழ்க் குடும்பங்களில் கூட இந்த நிலையில் பெரியளவான மாற்றங்கள் 
ஏற்படவில்லை. அனேகமான ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தனது வழமையான வேலை நேரத்தை விட சில 
நிமிடங்களே கூடச் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் பதறுகிறாள். பதட்டத்தில் வேலையிலான 
கவனத்தைச் சிதறடிக்கிறாள். இது பற்றிக் கண்டிப்பாக எழுத வேண்டும் என்றாலும் இன்றைய 
நேரத்தில் இந்தப் பிரச்சனையின் தார்ப்பரியத்தை ஒவ்வொரு ஆணும் சரியான முறையில் 
புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதுவதற்கு இன்றைக்குக் கிடைக்கும் நேரம் போதாது. 
அதனால் சமையலில் இருந்து இன்னும் சில வேலைகள் பெண்களுக்குத்தான் என்ற நிலை அடுத்த 
தலைமுறையிலாவது இல்லாமல் போகும் படியாக என்ன செய்யலாம் என்பதைக் கருவாகக் கொண்ட 
கட்டுரையை எழுதத் தொடங்கினேன்.
 
 அது பெரிய நீண்ட கட்டுரையாக வந்து விட்டது. 'உவ ஜேர்மனியிலை இருந்து பெண்ணியம் 
எழுதினாப் போலை இங்கை இந்தியாவிலை பெண்விடுதலை கிடைச்சிடுமோ' என்று யாராவது 
வலைப்பூக்களில் கிறுக்கி வைப்பார்கள்தான். அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது, 
ஜேர்மனியிலும் பெண்களுக்கு விடுதலை தேவைப் படுகிறது என்ற விடயம்.
 
 எழுதியதை உடனேயே மின்அஞ்சல் மூலம் அனுப்புவதில் எனக்கு இஸ்டமில்லை. யாரோ ஒரு பிரபல 
எழுத்தாளர் "எழுதியதை ஊறுகாய் போடுவது போல வைத்து வைத்து எடுத்துத் திருத்த வேணும். 
அப்பதான் அந்த எழுத்து நல்லா வரும்" என்று சொன்னது அடிக்கடி என் நினைவில் வந்து 
போகும். ஊறுகாய் போடுவது போல வைக்க முடியாவிட்டாலும் சில மணி நேரங்களுக்காவது 
வைத்து விட்டு எடுத்துப் பார்த்தால் எழுத்துப் பிழைகள் ஏதாவது இருந்தால் தெரியும். 
திருத்தி விட்டு அனுப்பலாம் என்பது என் எண்ணம்.
 
 நேரமும் 1.00மணியாகி விட்டது. நினைத்ததை எழுதி முடித்து விட்டதில் என் மனதில் 
பெரியதொரு திருப்தி. அந்த நிறைவோடு
 முகிலுக்கு சாப்பாட்டைக் கொடுக்க நினைத்தேன். இன்று மருமகளையும் சாப்பிடச் சொல்லாம் 
என்ற நினைப்பில் சோறு, கறிகளை மேசைக்குக் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தேன். 
தன் பாட்டில் விளையாடிக் கொண்டிருந்த முகில் திடீரென மழலை தழுவக் கேட்டாள்
 
 'அப்பம்மா.., அப்பாவுக்கோ சாப்பாடு? அப்பா இண்டைக்கு இங்கையோ சாப்பிட வருவார்?'
 
 பிரசுரம் - மே யுகமாயினி
 chandra1200@gmail.com
 Homepage- http://www.selvakumaran.de/
 Blog - http://manaosai.blogspot.com/
 |