ஈழத்தமிழர்களும், தமிழக அரசியலும்!
அண்மையில்
ஸ்ரீலங்கா அரசின் விமானப்படைத் தாக்குதலில் அகாலமரணமடைந்த விடுதலைப் புலிகளின்
அரசியற் பொறுப்பாளர்
'பிரிகேடியர்' சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டித் தமிழக முதல்வர் கலைஞர்
கருணாநிதி எழுதிய இரங்கற் கவிதை மீண்டும் தமிழக அரசியலில் அரசியற் சூறாவளியைக்
கிளப்பிவிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் இதனைக் கலைஞர் அரசுக்கெதிரான
துருப்பாகப் பாவிக்க அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான
செல்வி ஜெயலலிதா முனைந்தார். தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் அன்றும் சரி,
இன்றும் சரி ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பலவேறு வழிகளில் அங்குள்ள அரசியல்
கட்சிகள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே கையாண்டு வந்துள்ளன;வருகின்றன.
எண்பதுகளில் ஈழத்தமிழர்களுக்காதரவாக இந்தியாவின் பிரதான கட்சிகளனைத்தும்
ஒருமித்துக் குரல் கொடுத்தன. ஈழத்தமிழர்களுக்காதரவாளர்கள் தாமே என்பதை
நிருபிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கூட்டங்கள், உண்ணாவிரதங்களை
நடத்தின. அந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்கள் மீதான அனுதாப
அலையிருந்தது. அன்றையப் பிரதமரான இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியின்
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கான ஆதரவென நிலவிய அந்த அரசியற்
சூழல் பின்னர் முன்னாள பிரதமர ராஜிவ் காந்தி படுகொலையின் பின்பு மாறிவிட்டது
துரதிருஷ்ட்டமானது. அதன் பின்னர் அங்குள்ள கட்சிகள் தத்தமது அரசியல் நலன்களை
முதன்மையாக வைத்துத் தாம் சார்ந்திருக்கும் கட்சியினரின் வெற்றி தோலவிகளுக்காக
விடுதலைப் புலிகளின் மீதான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையினைப் பாவிக்கத்
தொடங்கின. முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மாநில அரசு கூட இந்த அடிப்படையில்
அன்றைய மத்திய அரசால் கலைக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
ஆனால் இன்று மீண்டும் ஈழத்தமிழர்களின் மீதான தமிழக மக்களின் அனுதாபம் முன்பு
போலில்லாவிட்டாலும் ஓரளவாவது அதிகரித்துக்
காணப்படுகிறது. இத்தகைய சூழலிலும் தமிழகத்தில் அகதி முகாம்களின் வாடும்
ஈழத்தமிழர்களின் நிலை எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின்றதென்றால் அது
கேள்விக்குறியே. தொடர்ந்தும் அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீதான் ஸ்ரீலங்காக்
கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம்தானுள்ளன. இத்தகையதொரு சூழலில் தமிழக
அரசியலின் உட்பிரச்சினையில்
தம்மை ஈடுபடுத்திக் கொண்டு கட்சி சார்பாகத் தம்மை இனங்காட்டுவது ஈழத்தமிழர்களின்
மீதான அனுதாபத்தைக் கூறுபோட்டு வைப்பதாகவே இருந்துவிடுமென்பதை அனைவரும் புரிந்து
கொள்ளவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்றும் இருபெரும் கட்சிகளாக
விளங்குபவை தி.மு,.க.வும் அ.தி.முக.வுமே. தமிழக மக்களில் பெரும்பான்மையினர்
இன்னும் இந்த இரு கட்சிகளின் பின்னால்தான் அணிதிரண்டு நிற்கின்றார்கள். இந்த
நிலையில் தமிழகக் கட்சிகள் அரசியல்ரீதியில் ஈழப்பிரச்சினையைத் தமக்கேற்ற வகையில்
பாவித்துக் கொண்டு அடிபடும் மோதல்களுக்குள் சிக்காமல் ஈழத்தமிழர்கள் இருக்கும்
அதே நேரத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அனைத்துத் தமிழக அரசியற் கட்சிகளும்
ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டுமென்பதை மையமாக வைத்துத் தமது செயற்பாடுகளை
வைத்துக் கொண்டால், தமது கருத்து வேறுபாடுகளைப் பக்குவமாகச் சொல்லிப் புரிய
வைத்தால் அத்தகைய அணுகுமுறை தொலைநோக்கில் மிகுந்த பயனைக் கொடுக்குமென்பது எமது
கருத்து.
'பரம்பரைப்
பகையாளி ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்டுங்கள்' போன்ற அறிக்கைகள்
அ.தி.மு.க வைச் சேர்ந்த தமிழக மக்களை ஆத்திரம் மனவேதனையடைய வைக்கலாம். இதற்குப்
பதிலாக ஈழப்பிரச்சினையை உங்களது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
அனைவரும் ஒருமித்துக் குரல் தாருங்களென்று வேண்டுகோள் விடுப்பது ஆக்க பூர்வமானதாக
இருக்கும். ஈழத்திலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையும் இத்தகைய
ஆக்கபூர்வமான கருத்தினை வலியுறுத்தி அண்மையில் ஆசிரியத்தலையங்கமொன்றினை
வரைந்திருந்தது. இதுபோல் அண்மையில் தமிழக வார இதழான நக்கீரனுக்கு அளித்த
பேட்டியொன்றில் விடுதலைப் புலிகளின் தற்போதைய அரசியற் பொறுப்பாளரான பா.நடேசனும்
'தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரங்கல் தெரிவித்ததை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள்ளார். அத்துடன் கருணாநிதியின் அரசைக்
கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?', 'தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி
இரங்கல் தெரிவித்ததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள்ளார். அத்துடன்
கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' மற்றும் 'தமிழகத்துடன் 1990 ஆம் ஆண்டு வரை
நீங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவராக நாங்கள் அறிகிறோம். இலங்கைத் தமிழர்
பிரச்சனையில் எங்கள் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழக மக்களிடம் நீங்கள்
எதிர்பார்ப்பது என்ன?' என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் 'தமிழக முதல்வர்
கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழீழ தேசத்தின் மீதும், தமிழ் மக்களின் மீதும் அளவிலா
அன்பும், பாசமும் கொண்டவர். நாம் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை
விரும்புவார். தமிழ் இன உணர்வு மிக்கவர். கவிதை வடிவில் அவர் தெரிவித்த இரங்கல்
செய்தி ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச்
செய்துள்ளது. அதற்காக நாம் அவரிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'
என்றும் 'தமிழக மக்கள் எமது உடன்பிறப்புக்கள், அவர்கள் எப்போதும் எம்முடன்
இருப்பவர்கள். எமக்கு ஒன்றென்றால் அவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றாகக்
கொதித்தெழுவார்கள். அவர்கள் தொடர்ந்தும் எமது போராட்டத்திற்காக, நாம் விடுதலை
அடையும் வரை எமக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். தமிழக அரசும்,
மத்திய அரசும் எமது போராட்டத்தை அங்கீகரித்து எமது மக்களின் விடுதலையை வேகமாக
வென்றெடுப்பதற்கு சகல அங்கீகாரங்களையும் எமக்குத் தர வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றோம்' என்றும் பதிலளித்திருக்கின்றார். கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழகத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டியதுதான் காலத்தின் தேவை. இந்நிலையில் அதனைக் குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழக வெகுசன வார
இதழ்களிலொன்றான குமுதம் கூடத் தனது ஆசிரியத் தலையங்கத்தில் 'இந்திய அரசு
இக்கட்டான இந்த நிலையிலாவது அங்கே சமாதானம் உருவாகச் சில நிர்ப்பந்தங்களை
உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்ததைக் கூட, உள்ளூர்
அரசியலாக்கும் குறுகிய வட்டத்திலிருந்து இங்குள்ள கட்சிகள் வெளிவர வேண்டும்'
என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆக்கபூர்வமான அணுகுமுறையினையே ஈழத்தமிழர்கள் தமிழக அரசியல் விடயத்தில்
கைக்கொள்வது ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு நன்மை பயக்கவல்லது. அன்றிலிருந்து இன்றுவரையில் பெரும்பாலான தமிழக
அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஏதோவொரு விதத்தில் தமது கட்சி அரசியலுக்காகப் பாவிக்க முனைந்து
வந்துள்ளார்கள். இந்த நிலையில் அவர்களது அரசியல் போட்டி, பூசல்களுக்குள் சிக்கி விடாமல் ஈழத்தமிழர்கள் விடயத்தில்
ஒருமித்த கருத்தினை, ஆதரவினையேற்படுத்தும் செயற்பாடுகளை ஈழத்தமிழர்கள் முன்னெடுக்கும் அதே நேரத்தில் தமிழக மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்கள் பிரசிச்னையினைத் தொடர்ந்தும் விளங்க வைக்க முயலவேண்டும். அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள்
தம்மத்தியில் நிலவும் சகல விதமான பிளவுகளையும் நீக்குவது என்பதை மையமாக வைத்துச் செயற்பாடுகளைத் தொலைநோக்கில் முன்னெடுக்க வேண்டும். அதே சமயம் இலங்கைத் தீவின் அனைத்துச் சமூகங்களினதும் முற்போக்குச்
சக்திகளுடனான நட்புறவினை மேலும் சீரடையும் வகையிலான செயற்பாடுகளையும்
முன்னெடுக்க வேண்டும். ஒருகாலத்தில் தென்னிலங்கையின் ஊடகங்கள் பெரும்பாலானவை
முற்று முழுதாகத் தமிழர் விரோதப் போக்கினையே கடைப்பிடித்து வந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. அங்குள்ள
அரசியற் கட்சிகள் மத்தியில், மக்கள் மத்தியில், ஊடகங்கள் மத்தியில், புத்திஜீவிகள் மத்தியில் ஈழத்தமிழர்கள் பிரச்சினை பற்றிய
ஒருவித தெளிவான நிலைப்பாடு நிலவுவதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது. சில சமயங்களில் அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் உண்மை நிலையினை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் செய்திகளை, கட்டுரைகளை ஊடகங்கள் பிரசுரிக்கின்றன. இது நல்லதொரு அறிகுறி. இதற்கு
முக்கிய காரணங்களில் சிலவாகத் தகவற்தொழில் நுட்ப வளர்ச்சி, அண்மையில்
சர்வதேசநாடுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் என்பவற்றைக்
குறிப்பிடலாம். இன்றைய இலங்கை அரசின் யுத்தச் செயற்பாடுகள் மூலம் சமாதான
முயற்சிகள் ஓரங்கட்டப்பட்டுக் கிடந்தாலும், அதனை முறையாக நடைமுறைப்படுத்த சர்வதேச
சமூகத்தினை, தமிழக, இந்திய மக்களைத் தூண்டும் செயற்பாடுகளைத் தொடர்ந்தும்
முன்னெடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதுவே
நல்ல பலன்களைத் தரவல்லது. - ஊர்க்குருவி - |