இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2009 இதழ் 118  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் அறிமுகம்
1. நூல் அறிமுகம்: கருணாகரனின் 'பலிஆடு'

-முல்லைஅமுதன் -


கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவத் கவிதை நூல் 'பலிஆடு' ஆகும்.

கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவத் கவிதை நூல் 'பலிஆடு' ஆகும்.

'..உனனை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?...'


கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே 'வெளிச்சம்' சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள் வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கிய படி எழுதப்பட்டிருக்கிறது. காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல் விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்...குண்டுகள் வீழ்கின்ற வழவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்...எது வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும் மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில் நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும் தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான் வேண்ட்டும்.

அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். 'உண்மையைக் கண்டறியும் போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது பேராறுதலைத் தருகின்றது....'என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

'என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும்
எடுத்துச் செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை.
ஒளிக்குச் சுவடுகளிலை.
எனது புன்னகை
நிலவினொளியாகட்டும்.'


இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி 'பலிஆடு' எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

'நிலவெறிக்குது வெறுங் காலத்தில்
வீடுகள்
முற்றங்கள்
தோட்டவெளி
தெரு
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல
அமுங்கிக் கிடக்கின்றன..'
கவிஞனின் கவலை
நமக்கும் வலிக்கவே செய்கிறது..
'நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கேதும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..'


போரினுள் அன்பையும் கருனையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற ஏக்கம்...

'பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா...'
'நாடு கடக்க முடியவில்லை
சுற்றி வரக் கடல்
சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்
அலைகளின் நடுவே
துறைமுகத்தில்
நீண்டிருக்கும் பீரங்கிக்கு
படகுகள் இலக்கு.
மிஞ்சிய பாதைகளில்
காவலர் வேடத்தில் கொலையாளிகள்..
குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட
கைதியானேன்...'


ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப் படுவர்.கைதியாக்கப்படுவர்.

'எனது மொழி என்னைக் கொல்கிறது
மொழியொரு தூக்கு மரம்
என்றறிந்த போது
எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று
எனது குரல்
என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது
விரோதியாக்கி...'


நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்...உலக வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில் நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத அவலம்....கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும் வேகத்தில் மனிதம்...

'யாருடயதோ சாவுச் செய்தியை
அல்லது கடத்தப்பட்டதான
தகவலைக் கொன்டுபோகக்
காத்திருந்த தெரு...'
....'சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்
விலகிச் சென்றன அப்பால்
கண்ணொழுக..
பாம்புகள் சொற்களினூடே
மிக லாவகமாய் நெளிந்து சென்றன
நடனமொன்றின் லாவகத்தோடு...'

சொற்கள் சுதந்திரமாய் விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

...'வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்கு குழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்....
..... நிலம் அதிர்கிறது.
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தகநெடில்
கபாளத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்...'


உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன் மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் 'பலிஆடு' போன்று தொடர்ச்சியாக நூல்களைத் தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை. இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருனாகரனுடன் வளர்கிறது. 113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

mullaiamuthan_03@hotmail.co.uk

*** *** ***

2. நூல் அறிமுகம்: த.அகிலனின்.. 'மரணத்தின் வாசனை.' (போர் தின்ற சனங்களின் கதை)

- முல்லைஅமுதன்
-

நூல் அறிமுகம்: த.அகிலனின்.. 'மரணத்தின் வாசனை.' (போர் தின்ற சனங்களின் கதை)

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர். நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப் பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு, பொருளாதார இழப்பு / தடை,  விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும் உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில் போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு , சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

'தனிமையின் நிழற்குடை'யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே 'மரணத்தின் வாசனை'.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதனை 'வடலி.கொம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..
2.ஓர் ஊரிலோர் கிழவி.
3.மந்திரக்காரன்டி அம்மான்டி.
4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.
5.ஒருத்தீ.
6.சித்தி.
7.நீ போய்விட்ட பிறகு.
8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.
9.தோற்றமயக்கங்களோ.
10.கரைகளிற்க்கிடையே
11.செய்தியாக துயரமாக அரசியலாக...
12.நரைத்த கண்ணீர்.  

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர் மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின் வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள், இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள் வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான பயணம்... ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது.  பாம்பு கடித்து இறக்கின்ற தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான் நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி .... பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள் மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில் பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் , குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் , புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர் , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் ... இவைகள் சில விளக்கங்களுக்கான சொற்கள்..

'நரைத்த கண்ணீர்' எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின் நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச் செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை முடிச்சுகளுடன் பயத்துடன்... தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும் பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன் வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில் படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது 'கரைகளிற்கிடையே' கதையில்..  மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற குமார் அண்ணையின் அவலம்/சோகம் 'குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்'கதை சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது.  ஏகலைவர்களின்றி நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது 'மரணத்தின் வாசனை' சொல்லி நிற்கிறது. ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம் மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.

mullaiamuthan_03@hotmail.co.uk


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்