| 
    
      
      
    
      
      
  குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் 
  மூழ்கி…..( குறுநாவல் தொகுதி)
 - முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன் -
 
 (07-11-2009 அன்று Canada, Toronto,25 Slan Ave கேட்போர் கூடத்தில் 
  நிகழ்த்தப்பட்ட ஆய்வுரையின் செப்ப முற்ற வடிவம்.)
 
 
  கனடியத் 
  தமிழ்ச் சூழலில் இலக்கியத் துறையில் முனைப்பாகச் செயற்பட்டு வருபவரில் ஒருவர் 
  குருஅரவிந்தன அவர்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையில் அவர் புனைகதை, நாடகம், 
  திரைக்கதைவசனம், சிறுவர் இலக்கியம் முதலான பல்துறைகளிலும் கவனம் செலுத்தி 
  வருபவர். அவரது அண்மைக்கால ஆக்கமாக நீர் மூழ்கி நீரில் மூழ்கி… என்ற தலைப்பிலான 
  குறுநாவல் தொகுதி வெளிவந்துளது. இலங்கை தெல்லிப்பழை மகாஜனா கல்லுரியின் 
  மழையமாணவரான இவர் ‘நூறாண்டுகாணும் மகாஜனா மாதா’விற்குச் சமர்ப்பணமாக இவ்வாக்கத்தை 
  வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூலாக்கம் பற்றிய ஒரு திறனாய்வுக்குறிப்பாக இச்சிறு 
  கட்டுரை அமைகிறது. 
 இந்தத் தொகுதியில் இரு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக அமைந்த நீர்மூழ்கி 
  நீரில் மூழ்கி… என்ற ஆனந்தவிகடனில் வெளிவந்த புனைகதை ஆழ்கடலில் 
  விபத்துக்குள்ளாகிய நீர்மூழ்கிக் கப்பலில் உயிராபத்தை எதிர்நோக்கியிருந்தவர்கள் 
  பற்றியது. இரண்டாவது புனைகதையான உறைபனியில் உயிர்துடித்தபோது… என்பது கனடா, உதயன் 
  பத்திரிகையில் வெளிவந்த பனிநிறைந்த வடதுருவத்திற்குச் சென்ற ஆராய்ச்சிக்குழு 
  ஒன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டதாகும்.
 
 நீர்மூழ்கி நீரில் மூழ்கி… என்ற குறுநாவலின் கதையம்சமானது, ‘நீர்மூழ்கி’ 
  சம்பந்தமான இராணுவஇரகசியங்கள் வெளிப்படாதிருப்பதற்காக 
  அதிகாரமட்டத்திலிருப்பவர்கள் மேற்கொண்ட சில அணுகுமுறைகள் தொடர்பானதாகும். 
  இத்தொடர்பில,; நடுநிசி 12மணி ஒருநிமிடத்திலிருந்து மறுநாள் பின்நேரம் 6மணிவரை, 
  அதாவது 18மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற சம்பவங்களையும் எண்ண ஓட்டங்களையும் 
  மையப்படுத்தி இதன் கதையம்சம் விரிகிறது.(இவ்வாறான இந்நாவலின் கதையம்சமானது. சில 
  ஆண்டுகளின் முன்னர் ரஷ்யாவின் கடற்பரப்பில் நிழ்ந்த நீர்மூழ்கி தொடர்பான சோக 
  நிகழ்வொன்றை இங்கு நினைவிற்கு இட்டுவருகிறது.)
 
 உறைபனியில் உயிர்துடித்தபோது…என்ற இரண்டாவது கதையானது வடதுருவத்திற்கு விஞ்ஞான 
  ஆராய்ச்சிக்குச் சென்ற 12பேர் கொண்ட குழுவினர் தொடர்பானது. அவர்கள் பனிப்புயலில் 
  சிக்கித்தவித்ததான – முன்னைய நாவலில் சுட்டப்பட்டது போன்ற ஒரு உயிராபத்தான - 
  சூழலை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது. அவர்களில் இருவர் எங்குதேடியும் 
  கிடைக்காத சூழ்நிலையில் 10பேர் மட்டுமே மீட்கப்படுகின்றனர். ஆனால் 12பேரும் 
  மீட்கப்பட்டதாகவே ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதற்கான 
  காரணம் மேலிடத்தின் அதிகாரநிலை சார்ந்ததே. ஆய்வுக்குப்போனவர்களில் இருவர் உயிர் 
  துறந்தனர் என்ற செய்தி வெளிப்படுமானால் இத்தகு ஆய்வுச்செயற்பாட்டில் தொடர்ந்து 
  ஈடுபட ஆய்வுநிபூணர்கள் தயங்குவார்கள். இவர்களின் ஆய்வுபற்றி நாட்டுமக்களும் 
  சர்வதேசமும் நம்பிக்கையிழந்துவிடும். இத்தகுகாரணங்களால் மேலிடம் இதனை 
  மூடிமறைக்கின்றது. மீட்கப்படாத இருவரில் ஒருவரின் மனைவி தன்னுடைய கணவன் 
  உயிராபத்திலிருந்து மீண்டு விட்டான் என்ற நம்பிக்மையோடு இருந்த வேளையிலே அதிகார 
  வர்க்கம் அவளுக்கு உண்மைநிலையை – அவன் இறந்துவிட்டான் என்ற உண்மையைக் 
  கூறுகின்றது. அதே வேளை அந்த ‘உண்மைநிலையினை வெளிப்படுத்த வேண்டாம்’ என்ற 
  கட்டுப்பாட்டையும் விதிக்கின்றது. அதற்காக பெருந்தொகைப்பணத்தையும் சலுகைகளையும் 
  வழங்குவதாக ஆசையும் காட்டுகிறது. இச்சலுகைகள் ஒன்றும் அவளது கணவனுக்கு 
  ஈடாகமாட்டாது என்பதை உணர்ந்த அவள் தனது வாரிசுக்காக உயிர்வாழ நினைக்கிறாள். 
  இதுதான் இரண்டாவது குறுநாவலின் சாராம்சமாகும்.
 
 குறிப்பாக, ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு மக்களின் உயிரைவிட 
  தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதே மிக முக்கியமான கடமையாகிவிடுகின்றது. 
  சராசரி மனிதர்களின் ஆசாபாசங்களும் துன்ப துயரங்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல 
  என்பதே இந்த இரண்டு கதைகளிலும் தொனிப்பொருள்களாக அமைகின்றன. இனம், மொழி, நாடு 
  என்பவற்றைக் கடந்தநிலையில் எல்லாவகையான அதிகார வர்க்கங்களும் குறிப்பிட்ட 
  சூழ்நிலைகளில் இவ்வாறான குரூர மனப்பாங்குடனேயே செயற்பட்டுவந்துள்ளன - 
  செயற்பட்டுவருகின்றன. இவ்வாறான அதிகாரவர்க்க மனப்பாங்குகளை, குறித்த இரு 
  சூழ்நிலைகளை மையப்படுத்தி குறுநாவல்களின் வடிவில் எடுத்துப்பேச முற்பட்டுள்ளார், 
  குரு அரவிந்தன் அவர்கள். இவ்வாறான அதிகாரவர்க்க நிலைப்பாடுகளால் பாதிக்கப்படும் 
  சராசரி சமூகமாந்தரின் அவலநிலையை வாசகர்களுக்கு உணர்த்துவதே குருஅரவிந்தனுடைய 
  நோக்கமென்பதை மேற்படி இரு ஆக்கங்களிலிருந்தும் உய்த்துணரமுடிகிறது. இதற்கு 
  ஏற்றவகையில் இருகதைகளினதும் கதையம்சங்களையும் கதாபாத்திரங்களின் 
  உணர்வுநிலைகளையும் அவர் ஒரு திட்டப்பாங்குடன் உருவாக்கி வளர்த்துச் சென்றுள்ளமை 
  தெரிகிறது.
 
 நீர்;மூழ்கி… குறுநாவலிலே உயிராபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் 
  ஈடுபட்டு உயிர்துறந்த மைக்கேலை ஒரு தியாக உணர்வுடைய பாத்திரமாகக் காட்டும்வகையில் 
  அவனுடைய காதலுணர்வுசார் பின்புலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தன்னால் 
  காதலிக்கப்பட்ட, அதேசமயம் திருமணம் செய்யமுடியாது போன ஒரு பெண்ணின் கணவனை 
  உயிராபத்திலிருந்து மீட்கவேண்டுமென்ற உள்ளுணர்வால் தூண்டப்பட்டவனாக அவனைச் 
  சித்தரித்துள்ள முறைமை கதையம்சத்திற்குச் சுவை சேர்ப்பதாகும்.
 
 உறைபனி…குறுநாவலிலே உயிராபத்திலிருந்த ஒருவனின் (டெனிஸ்) மனைவியின் காதல்சார் 
  உணர்வுநிலைகளை மையப்படுத்திக் கதையம்சம் வளர்த்தெடுக்கப்படுகிறது. காதலனாகிய 
  கணவன் ஆய்வுநிமித்தம் பிரிந்து சென்ற நிலையில் அப்பிரிவுத்துயரில் தவித்த 
  அவளுக்கு அவன் உயிராபத்தில் இருக்கிறான் என்ற செய்தி கிடைத்தபொழுது அதிர்ச்சி 
  ஏற்படுகிறது. பின்னர் அவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டான் என்ற செய்தி கிடைத்த 
  பொழுது அவளுக்கேற்பட்டநிம்மதி நீடிக்கவில்லை. அதிகாரியானவர் உண்மைநிலையைக் 
  கூறியபொழுது திடுக்கிட்ட அவள் சோகத்தின் விழிம்பிற்குச் செல்கிறாள். பின்னர் அரசு 
  தரும் சலுகைகளை மறுத்த அவள் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தனது வாழ்வைத் 
  தொடர்கிறாள் என்றவகையில் இந்தக்கதை அமைகிறது. இப்பாத்திரத்தின் உணர்வுகளினூடாக 
  அதிகாரவர்க்கத்தின் மேற்படி குரூர குணாம்சம் விமர்சனத்துக்குள்ளாகிறது.
 
 இவ்விரு குறுநாவல்களின் கதையம்சங்களும் முறையே ஆழ்கடல் மற்றும் பனிச்சூழல் 
  என்பவற்றோடு தொடர்புடையவை. அச்சூழல் சார்ந்த அறிவியல் அம்சங்களும் 
  இக்குறுநாவல்களில் பரந்துபட்டுக்காணப்படுகின்றன. முதலாவது குறுநாவலில் 
  நீர்மூழ்கிக் கப்பலின் கட்டமைப்பு மற்றும் பொறியியல் நுட்பம் என்பவற்றை ஆசிரியர் 
  விளக்குகிறார். அக்கப்பல் விபத்துக்குள்ளாகும் நிலையில் அதிலிருப்பவர்களைக் 
  காப்பாற்ற முயல்பவர்கள் எத்தகைய தொழில்நுட்பச் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் 
  என்பதான அறிவியல்சார் பார்வை அரவிந்தனின் எழுத்தில் தெரிகிறது. அதுபோலவே 
  பனிப்புயல் தொடர்பான கதையிலும் அப்புயல்சார்ந்த பல்வேறு அறிவியல் சார்ந்த 
  செய்திகளையும் நாவல்களில் அவர் பதிவுசெய்துள்ளார். இவ்வாறான அறிவியல்; மற்றும் 
  தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளையும் உள்ளடக்கிய படைப்புக்கள் என்ற வகையில் 
  இவ்விரு குறுநாவல்களும் ‘அறிவியல்சார் புனைகதைகள்’ என்ற வகைமைக்குரிய 
  அடையாளங்களையும் இவை பெற்றுள்ளன. இத்தகைய எழுத்து முறைமைக்குத் தமிழகத்தில் 
  ‘சுஜாதா’ போன்ற சிலர் முன்னோடியாக அமைந்துள்ளனர் என்பது இங்கு நினைவிற் 
  கொள்ளப்படவேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.
 
 இவ்விரு குறுநாவல்களின் தகுதிப்பாடு பற்றிச் சிந்திக்கும்வேளையில் குருஅரவிந்தன் 
  அவர்களுடைய படைப்பாளுமையில் புலப்படும் வளர்ச்சிநிலை யொன்றை இங்கு சுட்டுவது 
  அவசியமாகிறது.
 
 குருஅரவிந்தன் அவர்கள் ஏற்கெனவே இருநாவல்களையும் ஒரு குறுநாவலையும் எழுதியவர். 
  இவற்றில் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்?’(2004) என்ற முதல் நாவல் ஈழத்தின் 
  விடுதலைப்போராட்டச் சூழலின்; பின்புலத்திலான சமூக அவலங்களையும் 
  நம்பிக்கைத்துரோகம் விளைவிப்பவர்களின் செயற்பாடுகளையும் கூறுவது. 
  போராட்டச்சூழலில் பாதிப்புற்ற பெண்களின் பிரச்சனைகளையும் மையப்படுத்தி யமைந்த 
  கதையம்சங்கொண்டது இது.
 
 ‘உன்னருகே நான் இருந்தால்’(2004) என்ற நாவலும் ‘எங்கே அந்த வெண்ணிலா?’(2006) என்ற 
  குறுநாவலும் புலம்பெயர் சூழலில் குறிப்பாக வடஅமெரிக்க – கனடியச்சூழ்களில் வாழும் 
  ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுப் பிரச்சனைகளை 
  மையப்படுத்தியவையாகும். காதல், குடும்ப உறவுகளில் திருமணம்முடித்தல் என்பன 
  தொடர்பாக எழும் பண்பாட்டுப் பிரச்சினைகள் இவற்றில் கதையம்சங்களாக விரிகின்றன. 
  உணர்ச்சிகளை மோதவிட்டு அவற்றின் முரண்பாடுகளுக்கிடையிலே கதையம்சங்களைச் சுவைபட 
  வளர்த்துச் செல்லும் ஒரு எழுத்தாக்க முறைமையை இவற்றில் நாம் காண்கிறோம். 
  குருஅரவிந்தன் அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட கதையம்சத்தைச் சுவைபட வளர்த்துச் 
  சென்று எதிர்பாராத முடிவுகளோடு நிறைவு செய்யக் கூடியவர் என்பதை மேற்படி நாவல்கள் 
  குறுநாவல் என்பன உணர்த்தி நிற்கின்றன. அவருடைய இந்த ஆளுமையே அவருக்கு பரந்ததொரு 
  வாசகர் வட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் எம்மால் உணரமுடிகிறது.
 
 இங்கே விமர்சனத்திற்குரிய அம்சம் என்பது குருஅரவிந்தனது மேற்சுட்டிய இரு நாவல்கள் 
  மற்றும் குறுநாவல் என்பவற்றின் உள்ளடக்கங்கள் பற்றியதாகும். இவ் உள்ளடக்கங்கள் 
  எல்லாமே சமூகத்தின் குறித்த சில மாந்தர்களின் உணர்வுகள் மற்றும் 
  உணர்ச்சியம்சங்கள் என்பவற்றை மையப்படுத்தி அமைகின்றன என்பதே நமது கவனத்துக்கு 
  வரும் அம்சமாகும். இவ்வாக்கங்களின் கதைமாந்தர்கள் பெரும்பாலானோர் சமூகத்தின் 
  தனித்தனி மாந்தர்களாகவே காட்சிக்கு வருகின்றவர்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது 
  அவசியமாகிறது.
 
 பொதுவாகப் புனைகதை என்ற இலக்கியவகையின் (சிறுகதை, நாவல், குறுநாவல்) உயிரான 
  அம்சம் அதன் சமூக யதார்த்தமாகும். அதாவது சமூகப்பிரச்சனைகள் அதன் வகைமாதிரியான 
  கதைமாந்தருக்கூடாக எடுத்துப்பேசப்படவேண்டும். அப்படிப்பேசினால்தான் படைப்புகள் 
  சமூகயதார்த்தப் படைப்புகளாக அமையமுடியம். அவ்வாறு அமையாதவிடத்து அவை சராசரி 
  கதைகளாக மட்டுமே கணிப்பெய்திவிட நேர்கிறது. குரு அரவிந்தன் அவர்களின் மேற்படி 
  முன்னைய ஆக்கங்கள்;; சமூகப் பிரச்சினைகளை எடுத்துப்பேசினாலும் கதையம்சம் மற்றும் 
  பாத்திர உருவாக்கம் என்பவற்றில் சராசரி ஜனரஞ்சக நிலைப்பட்ட ஆக்கங்கங்களாகவே 
  கணிப்பெய்துவனவாகும.;
 
 நீர்மூழ்கி நீரில் மூழ்கி …. மற்றும் ;உறைபனியில் உயர் துடிக்தபோது…’ ஆகிய இந்த 
  இரு நாவல்களிலும் மேலேசுட்டப்பட்ட நாவல்களிலிருந்து ஓரளவு வேறுபட்ட 
  படைப்புமுறைமையை இனங்காண முடிகிறது. இவற்றில் சமூகத்தின் அதிகாரமட்டம் சார்ந்த 
  வகைமாதிரியான பாத்திரங்கள் நமது காட்சிக்கு வருகின்றன. நீர்மூழ்கி… குறநாவலில் 
  வரும் இராணுவ அதிகாரியும் மற்றக் குறுநாவலில் வருகின்ற அதிகாரியும் இவ்வகையான 
  பாத்திரங்களாகக் கணிக்கத்தக்கவர்கள். இவ்வாறான ஆட்சியதிகாரத்தால் பாதிக்கப்படும் 
  சராசரி மனித சமூகத்தின் பிரதிநிதிகளாக அல்லது வகைமாதிரிகளாகவே ‘மைக்கேல்’மற்றும் 
  ‘டெனிஸ்’, ‘கிறிஸ்டினா’, ‘லாரிஸா’ முதலிய பாத்திரங்கள் நமது கவனத்திற்கு 
  வருகின்றனர். இதனால் இவ்விரு நாவல்களிலும் சமூக யதார்த்தப்பாங்கான படைப்பாக்க 
  முறைமையை ஓரளவு இனம் காணமுடிகிறது. இது குருஅரவிந்தனுடைய புனைகதைப் 
  படைப்பாளுமையின் ஒரு வளர்ச்சிநிலையாகக்; கணிக்கத்தக்கது என நான் கருதுகிறேன்.
 
 படைப்புகளுக்கான கதையம்சங்கள் மற்றும் கதைநிகழ் களங்கள் என்பவற்றைத் 
  தேர்ந்துகொள்வதிலும் குரு அரவிந்தன் அவர்கள் தமது பார்வைகளை அகலப்படுத்திவருவதனை 
  இவ்விரு குறநாவல்களும் தெளிவாக உணர்த்திநிற்கின்றன. மேலும், அறிவியல் மற்றும் 
  தெழில்நுட்பம்சார்ந்த வளர்ச்சிநிலைகளை உள்ளடக்கியும் சூழல்மாசடைதல் போன்ற 
  உலகளாவிய பிரச்சினைகளைக் கவனத்துட் கொண்டும் படைப்புகளை அவர் உருவாக்க 
  முயன்றுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு வளர்ச்சி நிலையாகும.;
 
 இவ்வாறாக வளர்ச்சியும் விரிவும் எய்திவரும் அவருடைய படைப்பாளுமையானது 
  எதிர்காலத்தில் தமிழின்புனைகதைத்துறைக்கு மேலும் வளம்சேர்க்கும் என்ற நம்பிக்கையை 
  முன்வைத்து, இத்திறாய்வுரையை நிறைவுசெய்கிறேன்.
 |