இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2008 இதழ் 104  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இலக்கியம்: நூல் விமரிசனம்!

ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!

- தாஜ் -


ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!ஆபிதீன்'இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும், அந்தப் பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்..... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது' - ஆல்பெர் காம்யூ.(நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி)

தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் சிறுகதை/ நாவல்/ கட்டுரை முதலான ஆக்கங்களை ஆத்மசுத்தியோடு எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அருகிக் கொண்டிருக்கிறது. இங்கே கொஞ்சத்திற்கு தலைத் தூக்கிய படைப்பாளிகளும், பெருகிவரும் நவீன புத்தகச் சந்தையை முன்வைத்து எழுதுபவர்களாக ஆகிவிட்டார்கள். எழுதும் வேகம் மட்டுமே இப்பொழுது படைப் பாளிக்குப் போதும் என்றாகிவிட்டது! சந்தையும் அதன் போட்டியும் இன்றைய இலக்கிய ஆக்கங்களின் மேல் ஆதிக்கம் செய்யும் நிலை!

நவீன சிறுகதைகள், நவீன நாவல்கள் எழுதுவதற்கான இலக்கண வரம்புகள்(?) குறித்து இந்த சந்தை வியாபாரத்தில் விழுந்த ஒரு சில படைப்பாளிகள் எழுதிக் குவிக்கும் சட்ட திட்டங்கள் கொஞ்சமல்ல. ஆனால், அதெல்லாம் மற்றவர்களுக்காக மட்டும்தான்! தாங்கள் எழுதுகிறபோது அதில் ஒன்றைக்கூட அவர்கள் பரிசீலிப்பதே இல்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் பாய்ந்தோடும் தங்களது கற்பனைக் குதிரையின் காலடி சப்தத்தைதான்! மறக்காமல், அதை இலக்கிய ஆக்கம் என்று பின்னா ட்களில் சாதிக்கவும் செய்கிறார்கள். இப்படியான 'குணசீலப்' பேர்வழிகளையும் சகித்துக் கொண்டும்தான் தனது முன்னோக்கிய அடிகளை இப்பவும் நம்முடைய நவீன இலக்கியம் அழுந்த/ சீராக வைத்துக் கொண்டிருக்கிறது. சில படைப்பாளிகளின் இத்த கைய அராஜகத்திற்குப் பின்னாலும் ஆசுவாசம் கொள்ளத் தகுந்த சில நல்ல படைப்புகள் இன்றைக்கும் தமிழில் வரவே செய்கி றது. நமது நவீன இலக்கியத் தாயின் சுரப்பு அப்படி ஒன்றும் வற்றிவிடவில்லை. இப்பொழுது வெளிவந்திருக்கும் ஆபிதீனின் சிறுகதைத் தொகுதியான 'உயிர்த்தலம்' அதற்கு ஓர் சரியான சான்று!

இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன் வெங்கட் சாமிநாதனின் 'யாத்ரா'வில் அவரது 'குழந்தை' குறுநாவல் வந்திருந்ததை, பின்னர் பத்து வருடங்கள் கழித்து கோள்வியுற்ற நான், "யாத்ராவிலா...?" என்று கேட்ட வியப்பை விட, அது வாசிக்க கிடை த்து, வாசித்தபோதான வியப்பு இன்னும் அதிகம்! இன்றைக்கும் கூட அதன் பிசிர் என்னில் உண்டு. அந்தக் குறுநாவலில் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது சொந்த வட்டார வழக்கு மொழி என்னை கிளர்ச்சியூட்ட செய்தது. அதுவரை யாரும் அப்படி ஒரு அழகில், அந்த வட்டார வழக்கை, நம் இலக்கியத்தில் பதிவு செய்ததில்லை.

எழுத்தாளர் ஆபிதீன்அரபி சொற்களில் சிலவற்றை சந்தனப் பூச்சாக பூசிகொண்டிருந்த அந்த மொழியின் மினு மினுப்பும், கிண்டல் கேலி ததும்பிய அதன் பரிபாஷையும் வாசிப்பவரின் புருவத்தை உயர்த்தவே செய்யும்! அன்றைக்கு நமது நவீனஇலக்கியத்தில் 'இந்திரன், சந்தி ரன்' என்று புகழப்பட்ட எழுத்தாளர்களுக்கெல்லாம் அப்படியொரு வட்டார வழக்கு நம் தமிழ்ப்பரப்பில் இருப்பதை அறிந்திரு ப்பார்களா? என்பதே சந்தேகம்தான். இந்த வட்டார வழக்கு மொழியின் இன்னொரு கிளையாய் கருதத்தகுந்த 'ஓர் வட்டார வழக்கு மொழி'யை (கடைக்கோடி தென்மாவட்ட கடற்கரையோர இஸ்லாமியர்கள் பேசும் வட்டார மொழி) தோப்பில் முகம்மது மீரான், தனது முதல் நாவலான 'கடலோரக் கிராமத்தின் கதை'யில் எழுதியதெல்லாம், ஆபிதீனின் குழந்தைக்குப் பிற்பட்ட காலக்கட்டத்தில்தான்.

உயிர்த்தலம் தொகுப்பில் காணும் பதிமூன்று சிறுகதைகளையும் ஒரு பொதுநோக்கில் 'யதார்த்த' கட்டுக்குள் வைத்துப் பார்க்க லாம். என்றாலும், இதன் செய்நேர்த்தியில் அதை மீறும் கூறுகள் உண்டு. சிறுகதை என்கிற பெயரிலான கட்டுரையோ, தகவல் தரும் பத்தியோ, நண்பருக்கான கடிதமோயென ஒரு கணம் யோசிக்க வைக்கிற 'நவீன யதார்த்த'மாக இந்தக் கதைகளை கணிக் கலாம்! அது பெரிய தவறாக ஆகிவிடாது."இலக்கணங்களை மீறிய ஓர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின் றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன" என்று இந்த தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிற திரு.கோபால் ராஜாராம் சுட்டுகிறார். எத்தனை சரியானப் பார்வை!!

இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் ஆபிதீன் தன்னையே முன்னிலைப்படுத்தி, தானே கதைச் சொல்லியாகி, படைப்பினூடாக வாழ்வின் நிஜங்களை கூச்ச நாச்சமற்று பதிவாக்கியிருப்பதிலும் / தான் சார்ந்த மத, இன,மொழி, கலாச்சாரங்களின் மீது தயவு தாட்சண்யமற்று விமர்சனங்கள் வைத்திருப்பதிலும் / வாழ்வின் தேவை குறித்து பஞ்சம் பிழைக்கவென்று தஞ்சமான அரபு மண் ணில் அவர் எதிர்கொண்ட அல்லது அவரைப் பாதித்த அத்தனை நிகழ்வுகளையும் நிறம் காட்டி, அந்தந்த மக்களை அவரவர்க ளின் மொழிபேசும் முகங்களோடான பதிவினூடாகவும் / மனதை ரணப்படுத்துகிற சம்பவங்களை அங்கதமாக மாற்றி நம்மை சிரிக்கவைத்தும், பிரச்சனைகளின் உள்ளார்ந்தக் கூற்றை நுட்பமாக உணர வைத்திருக்கிற அழகியல் வித்தை கண்டும் நாம் யோசிக்கிறபோது, அவரின் ஆக்கங்கள் அவரிடம் எத்தனைப் பெரிய உழைப்பை பெற்று எழுந்து நிற்கிறது என எண்ணத் தோன்றுகிறது. வாசித்து முடித்து, அவர் எழுப்பியிருக்கும் அந்த பிரமாண்டத்திலிருந்து வெளியேறுவ தென்பதும் மனதளவில் எளிதற்று போய்விடுகிறது!

இந்த மனச் சலனத்திற்கு அடிப்படைக் காரணம், அந்த பிரமாண்டம் உண்மைகளின் அஸ்த்திவாரத்தில் என்பதில்தான்! இந்த தொகுப்பின் எல்லாகதைகளிலும் அவர் வலிந்து சொல்லியிருக்கிற உண்மை கொஞ்சமல்ல! தன்னைச்சார்ந்த உண்மைகளையும் கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறார். உண்மைதான் எல்லாவற்றையும்விட வலியது. வாசகனின் சுவைக்கேற்ப கற்பனையின் வித்தை கொண்டு மாய உலகத்தை விதவிதமாக படைத்துக்காட்டலாம். ஆனால் உண்மைச் சார்ந்து எழுதுவதென்பது அத்தனை எளிதல்ல. எழுத்திற்காக படைப்பாளி தன்னை கொடுக்கவும் முன்வருகிறபோதுதான் அந்த நிஜத்தின் வாசலே திறக்கும்! வாழ் வின் ஓட்டத்தில் தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் அசிங்கங்களையும், அபத்தங்களையும், தோல்விகளையும், எதிர்கொள்ளும் சகமனிதர்களின் கோரங்களையும் பதிவில் ஏற்றுவதற்கு நிச்சயமாக அச்சமற்ற / முதிர்ந்த மனம் வேண்டும். தவிர, 'எல்லாவற் றையும் ஒன்றெனப் பார்க்கும் மனநிலை' கிட்டினால் ஒழிய உண்மையை பதிவில் ஏற்றுவதென்பது இயலாது. வாசகனை ஒவ் வோர் திருப்பத்திலும் நிறுத்தி வைத்து நீதி சொல்லி, தத்துவார்த்தங்கள் பேசி, வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களை இஸ் டத்திற்குப் புழங்கி, தன் கீர்த்தியை நிலைநாட்டலாம். அதுவும் அலுத்துப்போகும் நாளில், ஆதியில் எவரோ நெய்து வைத்திருக் கிற புராண இதிகாசங்களின் பக்கம்போய், பகுதி பகுதியாய் சூரையாடி புது மோஸ்தரிட்டு சுடச்சுட வாசகனுக்குப் படைத்து பணம் பார்க்கலாம். ஆனால் தான்சார்ந்த நிஜத்தை சொல்ல, எப்போதுமான அவர்களின் வித்தையோ / அவர்களின் அந்தக் குதிரையோட்டமோ அவர்களுக்கு ஒருபோதும் பயன்படாது.

ஆபிதீன், தன்கதைகளில் தன்னையே முன்னிலைப்படுத்தி, கதைச் சொல்லிப் போகிறார் என்றாலும், சில கதைகள் விதிவிலக்கா கவும் இருக்கிறது. 'உயித்தலம்' கதையில், முன்னிலைப் படுத்தப்படுபவரும், கதைச் சொல்லியும் அவர் அல்ல. தனது தம்பி என்பதாக ஒருவரை முன்னிலைப்படுத்தி கதையின் சம்பவங்களை நகர்த்துகிறார். இந்த செய் நேர்த்தியினூடே தன்னை அவர் விமர்சனத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும் யுக்தி, இந்தக் கதையில் கவனிக்கத் தக்க ஒன்றாக இருக்கிறது.

இந்த கதையின் நாயகன் மூளை வளர்ச்சியற்ற / இயக்கமற்ற / சுயத்தின் நிதானத்தை முழுவதுமாய் இழந்தவன். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பாரமாக, வயதிற்கேற்ற பருமானத்தோடு வீட்டின் மையக் கூடத்தில் மாட்டப்பட்டு தொங்கும் தொட்டிலில் தன் வாழ்நாளை அறியாமலேயே கழிப்பவன். பெயர் வஹாப். அவனைக் கொண்டு எழும் பிரச்சனைகள்தான் கதை. கதையின் முத்தாய்பில் 'லௌகீக' சாபு(ஹஜ்ரத்)ஒருவர், ஓர் சந்தர்ப்பத்தில் நாயகனின் வீட்டிற்கு வருகிறார். வஹாபை கண்டவுடன் அவ ருக்கு மனிதாபிமானமும், உயிர்களிடத்திலான நேயமும் ஒரு சேர பெருக்கெடுத்து விடுகிறது. வஹாபை எடுத்தணைத்து உச்சி முகரா குறையாக அன்பை வழியவிடுகிறார். வீட்டில் உள்ளவர்களிடத்தில் மேலும் வஹாப் குறித்த நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்கிறார். அதோடு அவர் முடித்துக் கொண்டிருக்கலாம். அவனுக்கு இன்னும் சுன்னத் செய்யாததை சுட்டி, மதரீதியான வீம்பில் இறங்குகிறார். இது போதாதோ ஆபிதீனுக்கு! இஸ்லாத்தை முன்வைத்து அவர் செய்யும் கிண்டலும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் அல்லாஹ்வும் என்பதாக கதை பிரமாதப்படுகிறது! முடிவில், பிரமாதப்படுத்துவதில் ஆபிதீனையும் மிஞ்சுகி றான் கதையினூடே வஹாப்! சாபு அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிப்பதென்பது வஹாபின் அந்த முத்திரைத் தனத்தால்தான். எந்த முத்திரைத் தனம்? தொகுப்பை வாங்கிப் படிக்காமலா போய் விடுவீர்கள்?

இந்த தொகுப்பில் பதிமூன்று கதைகள் உள்ளன. 'விளக்கக் குறிப்புகள்' மிக அதிகமான, எட்டுப் பக்கங்கள் கொண்டதாக இருப் பதால் அதனை சிறுகதையென கணக்கில் கொண்டுவிட முடியாது! ஆக, பதிமூன்று என்றது சரியே. இந்த பதிமூன்றில் என் பார்வையினூடான முதல் தேர்வென்றால் அது 'ருக்உ' தான்! அந்தத் தொகுப்பில் அதிகப் பக்கங்களை கொண்ட கதை அது. அத்தனைக்கு ஒன்றும் அதிகமில்லை வெறும் ஐம்பத்தியோர் பக்கங்கள்தான்! என்றாலும், அவை அலுக்க வைக்காதப் பக்கங் கள்! 'ருக்உ' உரைநடையால் தீட்டப்பட்ட ஓர் மனிதனின் பல்வேறு கோணங்களிலான சித்திரம்!

'நகுதா' என்கின்ற 'நானா' அடிப்படையில் கவிஞர்! மேலும், அரசில்வாதி / நகைச்சுவைத் ததும்பப் பேசும் மேடைப் பேச்சாளர்/ எளிமையும் தன்மையும் கொண்டு ஏழையிலும் மலர்ச்சி கொண்டவர் / பிரச்சனைகளோடு அவரை அணுகும் எவருக்கும் அரிய மருந்தானவர் / இறைவனின் மீது அபார நம்பிக்கை கொண்டவர் / அவருக்கென்று ஓர் இஸ்லாத்தை வடிவமைத்துக் கொண்ட வர்/ அந்த இஸ்லாம் ரொம்ப எளிமையானது, கையடக்கமானது/ அதில் அவரது இறைவன், சதா நேரமும் அவர் கேட்பதை தருவதற்காகவே இருப்பவன் / நானே உனக்கு சகலமும் தருகிறேன் என்று சொல்லப்போய் அவரிடம் எக்குத்தப்பாய் சிக்கிக் கொண்டவன் / 'கேட்டால் தருகிற இறைவன் இருக்கிறபோது' ஏன் வேலைக்குப் போகனுமாம், எதற்கு தொழில் பண்ணனுமாம் என்கிற ரீதியில் வாழ்வின் அத்தியாவசியமான நடப்புகளைத் தவிர்த்தவர். இப்படி, நானாவின் அத்தனை முகங்களையும் பல் வேறு முனைகளில் இருந்து பார்த்து, எழுத்தால் ஆபிதீன் வரைந்திருக்கும் சித்திரங்கள் சாதாரணமானதல்ல!

ஆபிதீனின் கதைகளில் பரிச்சியம் கொள்ள முனையும் வாசகர்கள், வாசிப்பினூடே காணும் நெருடலையும் / திணறலையும் முயன்றுணர்ந்து தாண்டிப்போகவேண்டியே இருக்கும். அந்த நெருடல், கதைகளில் காணும் வழக்கு சொல்லினால் நிகழ்வது. அதன் நிவர்த்திக்கு போதும் போதும் என்ற அளவில் விளக்கக் குறிப்புகள் அந்தத் தொகுப்பில் உண்டு. சுட்டப்படும் அந்தத் திணறல், அவரது யுக்தி சார்ந்த வலைப் பின்னலான எழுத்தினால் ஏற்படுவது.

மனிதர்கள் எப்பவும் எங்கும் புரிந்து உணரமுடியாத சிக்கல் கொண்டவர்கள். அவர்களைப் பற்றி எழுதும் எழுத்தும் அப்படி சிக்கலாக அவரிடம் உருகொண்டு, நம்மை திணறவும் அடிக்கிறது. அவரின் பார்வையை உறுத்தும் மனிதர்கள், பெரும்பாலும் அவருக்கு மதத்தின் கூறாகவே தெரிகிறார்கள். அவர்களை படைப்புக்குள் இழுத்து முடக்கிக் திணித்து இருத்திக்காட்ட நினைக் கும் போதும், அவர்களிடமிருந்து ஆசுவாசம் தோடிக் கொள்ள முயலும்போதும், அவர் தன் எழுத்தை லாவகமான வலையாய் பின்னத்தான் வேண்டியிருக்கிறது.

அவரது இந்தக் கதைகளை சரியாக உள்வாங்கிக் கொள்ளும் ஒருவன் சற்று மூளியாக இருக்கும் பட்சத்தில், மதவாதிகளிடம் ஓடிப்போய், "இவைகள் ஃபத்வாவுக்கு உறிய கதைகள்!" என்று துடிதுடித்துப் போவான். அந்த சம்மந்தப்பட்டவர்கள் அந்தக் கதைகளை ஆற அமர படித்து முடித்தாலும் பெரிய பாதகமில்லை, "தம்பி இஸ்லாமியக் கதைகளைத்தானே எழுதியிருக்கிறது!" என்கிற தீர்ந்த தீர்வுக்குதான் வருவார்கள். அவர்களை அப்படி, அந்த நிலையிலேயே, அங்கேயே பிடித்து நிறுத்தும் அந்தப் பின்னலான எழுத்து அவருக்கு இன்றைக்கு அவசியமும் கூட. வாசிப்பில், தட்டுப்படும் சிரம்மங்களை வாசகர்கள் ஊய்த்துணர் ந்து தாண்டிப் போவதே சரி.

எழுத்தாளர் தாஜ்படைப்பாளிகளில் சிலர் வலிய அங்கதத்தை எழுத வாசித்திருக்கிறேன். புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற சிலர் அப்படியில்லாமல் படைப்பினூடே அகத்தையும் மலர வைக்கும்படியான அங்கதங்களை, தங்களது கதைகளின் வளமான வரிகளில் அவ்வப்போது பொட்டு மாதிரி தொட்டு வைப்பார்கள். ரசிக்கும்படியே இருக்கும். சுஜாதாவின் எழுத்தில் நகைச்சுவை நவீனகூறுகளுடன் ஆங்காங்கே சுழித்துக் கொண்டு நம்மை திக்குமுக்காட வைக்கும். ஆனால், தி.ஜானகிராமனின் எந்த ஒரு கதையினையும் கையில் எடுக்கும்போதே நம்மையறியாமல் நகைச்சுவைக்கு தயாராகி, முகத்தில் சிரிப்பை மலரவிட்ட வர்களாக வாசிக்க முனைவோம். படைப்பிலக்கியத்தில் விசேசமான நகைச்சுவைக்கு நம்பிக்கைதரும் படைப்பாளியாகவேகடைசி வரை ஈடுகொடுத்து நின்றவர் அவர்! தி.ஜாவுக்குப் பிறகு, படைப்பினூடே அப்படியான அங்கதத்திற்கு நம்பிக்கைத் தருபவராக இன்றைக்கு ஆபிதீன் தெரிகிறார். இவரது எழுத்தின் வாசிப்பினூடே ஏதேனும் இரண்டு வரிகளை விட்டுவிட்டோம் என்றால், சிரிக்க வேண்டிய ஒரு தருணத்தை கைநழுவ விட்டுவிட்டோம் என்று கருதும்படி, தன் படைப்புகளில் அங்கத மணத்தை பல் வேறு விதமாய் பரப்பி பிரமாதப் படுத்துபவராக இருக்கிறார். இது குறித்து அவர் சொல்கிறபோது, 'என் படைப்புகளில் வாழ்வி
னூடேயான சகமனிதர்களது ரணங்களைத்தான் நான் பூடகமாகச் சொல்கிறேன், அதை நீங்கள் சிரிப்பு என்கிறீர்கள்' என்கிறார். பரவாயில்லை, சக மனிதர்களது வாழ்வின் ரணங்களை இனியும் அவர் பூடகமாகவே தொடர்ந்து சொல்லட்டும். சொல்லவும் வேண்டும்.

*******************
உயிர்த்தலம் / ஆபிதீன்
எனி இந்தியன் பதிப்பகம்
102, எண் 57 / பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்
தெற்கு உஸ்மான் சாலை / தி. நகர்
சென்னை - 600017
மேலும் விபரங்களுக்கு:
http://www.anyindian.com
http://www.abedeen.googlepages.com
*****************
satajdeen@gmail.com
http://www.tamilpukkal.blogspot.com

satajdeen@gmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner