Khaled Hosseiniயின்
A Thousand Splendid Suns!
- பாமினி பாலச்சந்திரன் -
பாடப்புத்தகத்தையும்,
இந்த புத்தகங்கள் எல்லாம் வாசிக்க மிகவும் நன்றாக இருக்கின்றன என புத்தகப்பட்டியல்
அனுப்பும் நண்பனின் கோரிக்கைகளையும் மீறி ஆங்கில வாசிப்புக்களை தள்ளிப் போடுவது
எனது சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம். நாம் கட்டாயம் இவற்றை இந்த கோடைக்காலத்தில்
வாசிப்போம் என்று உறுதி; கொண்டு வாங்கிய புத்தங்கள் எல்லாம் புத்தக அலுமாரியிற்குப்
பாரமாக இருந்து என்னை எப்போதும் குற்றவுணர் கொள்ளச் செய்கின்றன. ஆனால் இந்த
சோம்பேறிதனத்தை உதற வைத்து இரு புத்தகங்களை அதுவும் மிகக் கணிசமானளவு பக்கங்களைக்
கொண்டவற்றை நான் வாசித்து முடித்துள்ளேன் என்றால் அது படைப்பாளியின் வெற்றி என்று
தான் கூறவேண்டும்.
Khaled Hosseiniற்கு
கதை சொல்லும் நடை மிகவும் வளமாக அமைந்துள்ளது. The Kite Runner இவரது முதலாவது
நாவலாகும் A
Thousand Splendid Suns 2007
இல் வெளிவந்துள்ளது. இது 25 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விரு நாவல்களும்
முப்பது வருடங்கள் சோவியத் மற்றும் தலிபானின் ஆட்சியின் கீழிருந்த ஆப்கானில்
வசிக்கும் இரு பெண்களின் வாழ்வு எனும் சம பின்புலத்திலிருந்தே படைக்கப்பட்டுள்ளன.
படைப்பாளி
காபுல் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர், புலம் பெயர்ந்து தற்போது அமெரிக்காவில்
வசிப்பவர்.
ஆப்கானிலுள்ள ஹெர்ட் எனுமிடத்தி;ல் கதை ஆரம்பிக்கிறது. மரியம் தனது தாயுடன் வசித்து
வருகிறார். தந்தை தொடர்பான பல கற்பனைகளைக் கொண்டிருக்கும் இவர் தாயின் சொல்லை மீறி
தந்தையை பார்க்க செல்கிறார். தந்தையை உடனடியாக பார்க்க முடியாது போக அவருக்காக
காத்திருக்கிறார்,; வீட்டிற்கு வெளியிலே இரவைக் கழிக்கிறார். மரியத்தின் தாய்
தூக்கு மாட்டி தற்கொலை செய்கிறார். மரியத்தின் உலகம் இருண்டு
விடுகிறது. தாயின் சொல்லை மீறியது தொடர்பாக அவர் தனது மனச்சாட்சியுடன் மோதிக்
கொள்கிறார். 15 வயதான மரியத்தை 40 வயதுடைய அதிக தொலைவிலுள்ள காபுலில் வசிக்கும்
காலணிதயாரிக்கும்; ரஷிடிற்கு தந்தை மணமுடித்து வைக்கிறார். ரஷிட் அவளை புர்க்கா
அணிய வற்புறுத்துகிறார். புதிய சூழல், அந்நிய பேச்சு வழக்கு மற்றும் மாற்று உடைக்
கலாச்சாரத்திற்கு தன்னை ஒருவாறு தகவமைத்துக் கொள்ளும் மரியத்திற்கு குழந்தைகள்
கிடைக்காமல் போகின்றன. மரியம் தனது துணைவருக்கு பயந்தவராக தனது வாழ்க்கையை
தொடர்கிறார்.
வெவ்வேறு அரசியல் சூழலை உள்ளடக்கியுள்ள ஆப்கானை 1992 காலப்பகுதியில் ரஷ்யபடை
ஆக்கிரமிக்கிறது. இ;க் காலப்பகுதி ஆப்கானைப் பொறுத்தவரையில் அந்நிய ஆக்கிரமிப்பாக
இருந்த போதும் பெண்களுக்கு சற்று சுதந்திரத்தை வழங்கிய காலமாக அமைகிறது.
இக்காலப்பகுதியில் நாம் மரியத்தின் அயலில் வசிப்பவர்களான லைலா குடும்பத்தினரையும்
அவரது விளையாட்டுத் தோழன் தாரிக்கையும் சந்திக்கிறோம். லைலாவின்
குடும்பத்தில் அவரது ஆண் சகோதரர்கள் படையணி ஒன்றில் இணைந்து நாட்டை மீட்டெடுக்க
சென்றுவிட்டனர். லைலாவினது வட்டம் தனது தந்தையின் கல்வி புகட்டலும், அவரது நண்பன்
தாரிக், தாய் என அமைகிறது. லைலா ஓரளவு சுதந்திரத்துடனும் சிந்திக்கும் தன்மையுடனும்
வளர்கிறார். தாரிக் தனது பெற்றோர்களுடன் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்கின்றார்.
அப்போது மீண்டும் வருவதாக உறுதியளித்துச் செல்கிறார். போராடச் சென்றுவிட்ட தமது
புதல்வர்களை எண்ணி கவலை கொள்ளும் தாய் தனது மைந்தர்கள் வெற்றிவாகை சூடி வரும் நாளை
எண்ணி மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார். ஆனால் தாயும் தந்தையும் ஒரு ரொக்கற்
தாக்குதலில் இறந்து போக லைலாவின் உலகம் சிதைந்து போகிறது, தொடர்கிறது நாவல்.
ஆண்கள் துணையும் புர்காவுமின்றி பெண்கள் நடமாடமுடியாத நிலைமையும் ஆப்கானின் அரசியல்
நிலைமைகள் அதாவது வௌ;வேறு அரசியல் மாற்றங்களையும் வௌ;வேறு குழுக்கள் அதிகாரத்தைக்
கைப்பற்றிக் கொண்டாலும் அடிப்படையில் பொதுமக்கள் அங்கு நடைபெறும் சர்வதேச அரசியல்
சதுரங்கத்தில் பாதிக்கப்படுகின்றனர், நாவலை மிக இலகு நடையில் நகர்த்தி செய்கிறார்
படைப்பாளி. இங்கு பிரதான கதை நாயகிகளாக வலம் வருபவர்கள் பெண்கள், இங்கு மரியமும்
லைலாவும் வௌ;வேறு சந்ததியினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவ்விரு சந்ததியினரும்
எதிர்கொள்ளும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் சற்றுக் கூட மாறுதல் இன்றி
தொடர்கிறது.
கதை மிகமிக சிறிய சம்பவ நினைவலை மீட்டல்களான மரியம் அடிக்கடி தனது தாய் கூறியவற்றை
நினைவு கூர்வது முதல் லைலா தாரிக் உடனான சிறிய சம்பவங்கள் தொடர்பான நினைவலைகளை
கொண்டு நுண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. மேலும் நாவலில் அங்கு
நிலவும்
இனங்களுக்கிடையேயான பதட்டநிலை கோடிகாட்டப்பட்ட போதும் புனையப்பட்டுள்ள பாத்திரங்கள்
இனங்கள் மீதும் காழ்ப்புணர்வை தெளிக்காது நகர்கின்றன. யுத்தங்கள் பல நடைபெற்றாலும்
யுத்தங்கள் மட்டும் அதிகார கட்டமைப்புக்களிலும் கருத்துக்களிலும் மாற்றத்தை
ஏற்படுத்தப் போவதில்லை என்பதை நாம் மீண்டும் நினைவுகூர வைக்கிறது.
bamini2007@gmail.com |