-மு.பொ-
நான்
அண்மைக்காலத்தில் வாசித்த கவிதை நூல்களில் எனது ரசனையை கிளர்த்தியதாக, அமைந்த
நூல்; ஆழியாள் எழுதிய 'துவிதம்' கவிதைத்தொகுப்பாகும். இன்று கவிதை பெரும்
மாற்றங்களுக்குள்ளாகி வருவது கண்கூடு. 'கவிதையியலும் தமிழ்க்கவிதையும்' என்ற
எனது ஆக்கத்தில் (பார்க்கவும் காலம்:26) இது பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளேன்.
மரபு நிலையில் எதுகை மோனைகளுக்குள் இயங்கிய கவிதை 'புதுக்கவிதை' என்ற உருவத்தை
எடுத்தது. புதுக்கவிதை மரபுதந்த எதுகை, மோனை சீர்,தளை,அடி என்கிற சோடனைகளைத்
தூக்கி எறிந்ததான நிலை, புதுக்கவிதை என்ற புதிய உருவம் தனது ஜீவிதத்தை நிலை
நிறுத்த, தான் பாவிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் தங்கியிருக்க வேண்டிய
நிலைக்குள்ளாகிறது. அதாவது "முன்னர் மூக்கினாலும் சிலசமயம் வாயினாலும் மூச்சு
விட்ட நான், ஜீவித்திருக்க, இப்போ எனது உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றினாலும்,
ஒவ்வொருமயிர்காலினாலும் மூச்சுவிடும் தேவை நிகழ்ந்துள்ளது" என்று இதை விளக்கி
நான் இன்னோர் கவிதை எழுதினேன். எதுகை மோனைகளின் சல்லாரிச் சந்தங்களில்
கவிதையில்லாதவையும் கவிதை போல தோற்றங்காட்டலாம். ஆனால் புதுக்கவிதை அப்படித்
ப்பித்துக் கொள்ள முடியாது. அதனால்தான் இன்று புதுக்கவிதையை லேசான ஒன்றாகக்
கருதி, புதுக்கவிதைக் கடை பரப்பி வியாபாரம் பண்ணுவோரின் கவிதைகள் எல்லாம்
ஒரேயடியாக ஒதுக்கப்பட வேண்டியவையாய் நிற்கின்றன.
அடுத்த முக்கிய விடயம் புதுக்கவிதை என்ற உருவமும், தனக்குரிய 'உருவத்தை'
வரித்துக் கொண்டு அந்தக் குண்டுச்சட்டிக்குள் குதிரைவிடும் விவகாரமாக
மாறிக்கொண்டிருப்பதே. அந்தப்போக்கையும் உடைத்து கவிதையின் பரப்புகளை விரித்துக்
கொண்டிருப்பதே எனது கவிதைத் தொழிலாகத் தற்போது மாறியிருக்கிறது. இதுபற்றிய
பிரக்ஞை இன்று புதுக்கவிதை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு இல்லை. இந்தப் புதிய
உடைப்பு பற்றிப் பேசினால், முன்னைய மரபுக் கவிதைக்காரர் எவ்வாறு
புதுக்கவிதையின் வரவு பற்றிப் பேசியபோது முகத்தைச் சுழித்துக் கொண்டார்களோ,
அவ்வாறே இன்று மரபாகிவிட்ட புதுக்கவிதையையும் உடைத்து முன்னேற வேண்டும் என்று
நான்கூறுவது இன்றைய புதுக்கவிதைக்காரர்களுக்கு வயிற்றில் புளிகரைப்பது மாதிரி
அமைகிறது. அதனால்தான் நான் அண்மையில் வெளியிட்ட விசாரம் என்ற நூல் ஆங்கிலம்
படித்த முக்கிய விமர்சகர்களால் பாராட்டப்பட்டபோது, சில புதுக்கவிதை எழுதும்
கவிஞர்களால் வெறுப்போடு, பார்க்கப்பட்டது. இதற்குக் காரணம் நான் அதில் அடக்கிய
"கவிதையின் எதிர்காலம்" என்ற உரையாடலும் அதன் பின்னர் புதுக்கவிதை உடைப்புக்கு
உதாரணமாகப் போட்ட சில கவிதைகளுமே. இவர்களுக்கு ஆத்திரம் தமது 'கவிதை'களையும்
நான் அதில் சேர்க்காது விட்டுவிட்டேனே என்பதனாலேயே. உண்மை, எத்தனையோ சிறந்த
புது உடைப்பு கவிதைகளை நான் போடாமல் போனதற்குக் காரணம் அவை என் கைக்கு
கிட்டாமையே. நான் கவனம் செலுத்தியதெல்லாம் சிறந்த மரபுக்கவிதைகளிலோ புதுக்
கவிதைகளிலோ அல்ல. மாறாக புதுஉடைப்புக்கான சமிக்ஞை காட்டும் ஆக்கங்களிலேயே.
இந்தப் பின்னணியில்தான்; ஆழியாளின் துவிதம் கவிதைத் தொகுப்பில் எமது பார்வை
பரப்பப்படுகிறது. நான் மேலே குறிப்பிட்ட மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதுஉடைப்பு
கவிதைகள் என்ற மூன்று பிரிவுக்குள்; ஆழியாளின் கவிதைகள் எங்கு நிற்கின்றன?
நிச்சயமாக புதுக்கவிதைகளும் அதை உடைக்கும் கவிதைகளுமாக அவரது தொகுப்பு
நிற்கிறது. உதாரணத்துக்கு; காமம், சின்னப்பாலம், கலாசாரம், அடையாளம், மரணம்
என்பவற்றைக் காட்டலாம்.
(2)
கவிதை என்பது பலதளங்களுக்குள் இயங்குவது என்பது இன்னும் பலருக்கு புரிவதில்லை.
மரபுக்கவிதையோ, புதுக்கவிதையோ புது உடைப்புக்கவிதையோ எதுவானாலும் சரி பல
தளங்களில் இயங்குவன என்பது பற்றித் தெரியாத ஒருவன் கவிதை பற்றித்தட்டையான,
அறிவுடையவனாகவே இருக்கிறான். எல்லா சாலைகளும் ரோம் நகருக்கே இட்டுச் செல்கின்றன
என விஷயமறிந்தவன் கூறும்போது இவன்மட்டும் தான்நிற்கும் ஒற்றையடிப்பாதையே ரோம்
நகருக்கு இட்டுச்செல்வது எனக்கூறும் நகைப்புக்குரிய நிலை இவர்களுடையது.
காதல் வயப்பட்ட ஒருவன் எழுதும் கவிதைகளில் நெஞ்சையள்ளும் உணர்வுகளுக்கு முதன்மை
தருகிறான். ஆகவே அவன் கவிதைகள் உணர்வுக்கலவையிட்ட சொற்களால் பின்னப்படுகின்றன.
இதோ டபிள்யு.பி.யேற்ஸ் எழுதிய ஒரு காதல் கவிதையின் இறுதி வரிகளைக் கீழே
தருகிறேன். 'அவன் தேவலோகத்தில் நெய்யப்பட்ட துணிகளையே அவள் காலின் கீழ்
பரவவிரும்புகிறான்.' ஆனால் அவன் ஏழை. அதனால் அவனால் அது முடியாது. ஆகவே அவன்
எதை அவள் காலின் கீழ் பரவுகிறான்? இதோ கவிதை
But I, being poor, have only my dreams
I have spread my dreams under your feet
Tread softly because you tread on my dreams
"ஏழையாய் நான் இருப்பதால்
என்னிடம் இருப்பதெல்லாம் கனவுகளே
உன் காலின் கீழ் அவற்றைப் பரவியுள்ளேன்
மென்மையாய் மிதிக்கவும் ஏனெனில்
என் கனவுகளின் மீது மிதிக்கிறாய்"
காதல் வயப்பட்ட நெஞ்சின் ஆற்றாமை அதற்குரிய உணர்வூட்டும் சொற்களோடு
வெளிவருகிறது.
இன்னொரு கவிதை, இது சிந்தனைத் தளத்திற்குரியது. அது கவிதையில் புதிய
மாற்றங்களையும் விடுதலையையும் கொண்டுவர வேண்டும் என்னும் நோக்குடன், இன்று
விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நம்போர்களச் சூழலை வைத்தே
பின்னப்பட்டது:
"தற்போதைக்கு,
உனைச்சூழ்ந்து விலங்கிடும் பழஞ்சொற்கள்
படைத் தளத்தைத் தகர்த்தெறி.
போராளிச் சொற்கள் புகுந்து புகுந்து புரட்சிக்க
ஓசை அவி, பாஷையின் பின் பதுங்கு, அப்போது
உன் மூச்சிலெழும்
உந்தித்தணலில் உணர்வுக் கோலிடு
எடுத்ததை ஒவ்வோர் மொழியிலும் விழியிடு" (1996)
இது சிந்தனைக்குரியதென்றால், இன்னொருவகை சிந்தனையை தத்துவார்த்த செறிவுக்குள்
புகுத்தும்வகை. அனேகமாக மனித இருப்பு, அதன் அர்த்தம், அபத்தங்கள் பற்றியெல்லாம்
சிந்திக்கும் ஒருவனுடைய ஆக்கம் கவிதையாய் வரும்போது அது தத்துவார்த்த தளத்தை
தொட்டு கொண்டுதான் வருகிறது.
Where is the life we have lost in living?
"நாங்கள் வாழ்ந்ததன் மூலம் தொலைத்துவிட்ட
வாழ்க்கை எங்கே?"
என்று டி.எஸ்.எலியட் கேட்கும் போது இந்தத் தத்துவார்த்த தொடுகை நிகழ்கிறது.
ஏன் இத்தனையும் சொல்ல வந்தேன் என்றால் இன்றைய கவிதைப்போக்கின் பலதளங்களையும்
ஆழியாளின் அதிகமான கவிதைகள் தொட்டுச்செல்கின்றன என்பதைக் காட்டவே.
(3)
கொழும்பு டெக்னோ பிரின்டர்ஸ் வெளியீடாக வந்துள்ள இத்தொகுப்புக்கு முன்னுரை
வழங்கிய தெ.மதுசூதனன் பின்வருமாறு சொல்கிறார்:
“தொண்ணூறுகளில் உருவான பெண் எழுத்தாளர்கள் அதுகாறுமான வாழ்வியல் அனுபவம்,
இருப்பு சார்ந்த தர்க்கபூர்வமான எழுத்துச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடத்
தொடங்கினார்கள். ஆண்மையக்கருத்தாக்கம் உருவாக்கியிருக்கும் 'பெண்மை' பற்றிய
ஒழுங்குகளை கலைக்கிறார்கள்.
இந்தப் பின்புலத்தில் தோன்றியவர் தான் ஆழியாள். இவரது முதற்தொகுப்பான
'உரத்துப்பேச..' 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அத்தொகுப்பு அப்பொழுது பலராலும்
பேசப்பட்டது. தற்போது இவரது இரண்டாவது தொகுப்பான 'துவிதம்' வெளிவருகிறது.
இத்தொகுப்பு ஐந்தாண்டு இடைவெளியில் வெளிவருகிறது.
துவிதம் தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகளில் பெரும்பாலானவை அவுஸ்திரேலியா
வாழ்புலத்தில் உருவானவை. இருப்புக்கும் வாழ்வுக்கும் இடையில் எதிர்வினை
புரியும் எழுத்து தன்னளவில் தனக்கேயுரிய தர்க்கமுறை அறிதல் முறைசார் மொழியைக்
கண்டடையும். அனுபவங்களை அணுகும் கோணமும் தனித்துவமாக வெளிப்படும். இந்த
ரீதியில் ஆழியான் கவிதைகள் புதிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.”
ஆழியாள் கவிதையின் உருவங்கள் வழக்கிலுள்ள புதுக்கவிதைத் தோற்றங்களை
ஒட்டியவையாய் தெரிந்தபோதும் அவற்றில் பெய்யப்பட்டிருக்கும், சொற்களினதும்
கருத்துகளினதும் கையாள்கையால் அவர் வழக்கிலுள்ள புதுக்கவிதை முறையை
உடைக்கிறார். இது அவரது முதல் தொகுப்பான "உரத்துப்பேச" தொகுப்பிலேயே
காணக்கூடியதாய் இருந்ததை நான் அதுபற்றி
விமர்சித்தபோது சுட்டியுள்ளேன். இதோ அத்தொகுப்பில் உள்ள "நிலுவை" :
நீ திருப்பித் தரலாம்
மணிக்கூட்டை
கைவிளக்கை, கத்தரிக்கோலை
(கன்னி மீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை
உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப்பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்
20-10-1995
இந்தப் போக்கு அவரது இரண்டாவது தொகுப்பான துவிதத்திலும் காணக்கூடியதாய் உள்ளதே
சிறப்பு. இதை அவருக்குச் சாத்தியமுறச் செய்வதற்கான பின்புலம், அவர் பெண்ணிய
கவிதைக்கான மொழிப்பற்றிய பிரக்ஞையால் வழி நடத்தப்படுதலும் ஒரு காரணமாய்
இருக்கலாம். பெண்ணிய நோக்கால் உந்தப்பட்டோ அல்லது உள்ளிருந்து சதா எதையும்
வித்தியாசமாகப் பார்க்கவைக்கும் "பேரியல்பின் சிற்றொலித் தூண்டுதல்களால்"
அள்ளுப்பட்டோ அவர் இப்படிச் செயற்படலாம். இதோ அவரது 'மரணம்' கவிதையின் இறுதி
வரிகள்
எதிர்ப்பட்ட யுக சந்திகளில்
மெல்லெனத்
துமித்துப் பெலத்தது
கடிகாரத்துக் கம்பிகள் மூன்றொடு
காலங்கள் ஆறும்.
காற்றின் சுழலில்
திசைகள் கூத்திட
தீத்திரள் மலைகளை உமிழும் கண்டங்கள்
எழுந்தன
கற்குகை ஓவியமாய்,
அப்போதும் கூட
பிரியத்துக்குரிய ஆசிரியராய்ப் பேசி விவாதித்தபடி
புத்தகத்தோடும், புன்முறுவலோடும் என் கூடவே அமர்ந்திருந்தார் அவர்.
இவை நீங்கலாக, இன்றைய பெண்ணிய கவிஞர்கள்; குறிப்பாக, தமிழ் நாட்டிலுள்ள
பெண்கவிஞர்கள், பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் துணிச்சலோடு
எழுதுவதோடல்லாமல், பெண்களின் மறைப்புக்குரிய அங்கங்கள் பற்றியும் அழகிய
கவிதைகளாக, ஆண்களின் முகத்தில் அறைவதுபோல் தந்துள்ளனர். உதாரணமாக
தமிழ்நாட்டிலுள்ள குட்டிரேவதி, சுகிர்தராணி, சல்மா, மாலதிமைத்ரி போன்றவர்கள்
அத்தகைய துணிச்சலான பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது கண்டுகூடு. இதோ சுகிர்தராணியின்
பலவாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திய,
"ஆக, மயிர்கள் சிரைக்கப்படாத என்நிர்வாணம்"
அழிக்கப்படாத காடுகளைப் போல் கம்பீரம் வீசுகிறது"
என்ற வரிகளைக் காட்டலாம். இன்னும் சல்மா எழுதிய “எல்லா அறிதல்களுடனும்
விரிகின்றதென் யோனி” குட்டிரேவதியின் 'முலைகள்' எல்லாம் இத்தகையனவே. இவை
அனைத்தும் நமது 'மரபுச்சான்றோரின்' காப்பரண்களை உடைத்துக்கொண்டு வீறுநடைபோடும்
கவிதைகள.; இவை சாருநிவேதிதாவின் கதைகள் போல் தமிழருக்கு sex படிப்பிக்க கடை
பரப்பியவை அல்ல.
இத்தகைய பெண்கவிஞர்களுக்கு ஈடாக, மட்டுமல்ல தனக்குரிய தனித்துவத்தோடு ஈழத்து
ஆழியாள் நிற்கிறார். நான் மேலேகாட்டிய 'நிலுவை' இதைத் தொடங்கிவைத்தது எனலாம்.
துவிதத்தில் உள்ள “காமம்” அதைத்தொடர்கிறது
உயரும்
மலையடிவார மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின்
ஆழப்புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு
சுவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று-
அவளுக்கு
(10-11-2002)
இங்கே ஆழியாளின் சிறப்பாகவும் அதுவே அவரின் தனித்துவமாகவும் இருப்பது
என்னவெனில் இவர் புரட்சி செய்ய வேண்டும் என்பதற்காக செய்ய முனைபவர் அல்லர்.
இயல்பாக அது இவரிடம் ஒட்டி வருவது. அதேநேரத்தில் அந்தப்புரட்சியானது அடக்கு
முறைகளுக்கெதிரான passive resistanceபோன்றது. தமிழ் நாட்டில் உள்ள
பெண்கவிஞர்களதுபோல் violent ஆக வெளிப்படுத்தப்படுவதல்ல. ஆனால் மொத்தத்தில்
விடுதலை நோக்கிய புரட்சியே.
ஆழியாள் தன் அடுத்த கவிதை தொகுப்பில் ஆண்- பெண் என்ற இரு உலகை இணைத்து,
இரண்டுக்கும் பொதுவான ஆத்மாவின் ‘துவைதிலியாக’ எழுவாரென எதிர்பார்ப்போமாக.
இறுதியாக இந்நூல் இலங்கைப் பல்கலைக்கழகப் பாரம்பரியம் தந்த நமது மிகச் சிறந்த
சிந்தனையாளரும் கலைஞருமான செ.வே.காசிநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டுள்ளது மிகப்பொருத்தமானதே.
நூல்: துவிதம் (கவிதைகள்)
ஆசிரியர்: ஆழியாள்
பதிப்பு: மார்ச் 2006
வெளியீடு: மறு வெளியீடு, Mathubashini, 20
Dulverton Street,
Amaroo, Canberra ACT 2914, Australia
தொலைபேசி: 61262418183
மின்னஞ்சல்: aazhiyaal@hotmail.com
aazhiyaal@hotmail.com