| மை கவிதைத் தொகுப்பு! 
 - வே. தினகரன், பத்தனையூர், இலங்கை -
 
 
  பதிவு 
  என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க 
  முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை 
  இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான 
  வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு கால சேகரிப்புகளில் 
  உள்ளடங்கிய கவிதைகள் இங்கு மை கவிதைத்தொகுப்பாகிறது என மை கவிதைத்தொகுதிக்கான 
  தேவையை ஆசிரியர் குழாம் வெளிப்படுத்தியுள்ளது. ஊடறு எனும் பெண்கள் அமைப்பு புலம் 
  பெயர்ந்வர்களால் சுவிஸில் உருவாக்கப்பட்டு 2002 இல் ஊடறு எனும் நால் 
  வெளியிடப்பட்டது. 2004 இல் ஊடறு இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2006 இல் 
  பெண்ணியாவின் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2007 இல் ஊடறு கவிதைத்தொகுதி 
  வெளியிடப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 35 கவிஞர்களின் 110 கவிதைகள் 
  இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. 
 முன்னுரையில் சொல்லப்பட்டது போல் இக்கவிதைகள் பெண்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி 
  சமூகத்தை கலை இலக்கியங்களை
 ஆண்நோக்கிலிருந்து இடம்பெயர்த்து பெண்நோக்கில் வைத்து புரிந்துகொள்வதற்கான 
  முயற்சிகளும் அதன் வழியான பெண் மொழிகளின் உருவாக்கம் பற்றிய பொருளாக முனைப்புக் 
  கொண்டுள்ளது.
 
 ஊடறு கவிதைத்தொகுதி 2007 இதுவரை தமிழில் வெளிவந்த பெண் கவிஞர்களின் 
  கவிதைததொகுதிகளிடையே தனக்கெனவோர் நீண்ட
 கால இடத்தைப் பிடித்துக்கொள்ளும். என்பதை தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் 
  போதே உணர முடியும். பிரபல்யமான தமிழ்க்
 கவிதாயினிகள் பலரினதும், புதியவர்கள் சிலரினதும் கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன.
 
 அவ்வகையில் அவுஸ்ரேலியா ஆழியாளின் வீடு கவிதையில்
 
  என்னைச் சுழற்றும் கடிகாரமும்
 என்னோடே வளரும் சுவர்களும்
 சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதிலுமற்றதோர்
 வீடு வேண்டும் எனக்கு…
 
 குளிரில் கொடுகி
 வெயிலில் உலர்ந்து
 மழையில் குளித்து
 காற்றில் அசைந்து என் பூக்கள்
 பறந்து பரவசம் எய்த
 ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
 வானத்து வளைவுடன்
 
 என பெண்ணின் வாழ் சூழலையும் வாழவிரும்பும் வாழ்க்கையையும் தொனித்து நிற்கிறது. 
  இக்கவிதையில் |ஒரு வட்ட வீடொன்று
 வேண்டும்| எனும் அடிகளில் ஒரு வீடு எனும் கருத்தை விளக்க கவனமின்மை காரணமாக ஒரு, 
  ஒன்று என இரு சொற்கள் வந்து
 விழுந்திருக்கின்றன. வட்ட வீடொன்று வேண்டும். எனக்கு என்பது போதுமானது. இவரின் 
  கி.பி. 2003ல் தைகிரிஸ் எனும் கவிதையில்
 மனம் தொலைந்து போகிறது.
 
 மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் எனும் இலங்கை அனாரின் கவிதையில்
 
 மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
 பழக்கம் பட்டிருந்தும்
 குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
 அலறி வருகையில்
 நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகிறேன்
 இப்போதுதான் முதல் தடவையாக காண்பது போல
 |இரத்தம|; கருணையை; பரிதவிப்பினை
 அவாவுகின்றனது…
 
 எனத் தொடங்கும் கவிதை தொடர்ந்து செல்கையில் இலங்கையின் வெளிப்படை அரசியலை பேசிப் 
  போகிறது பெண்ணின் மென்மன
 அதிர்வை காட்சிப்படுத்தப் போகிற ஆவலைச் சுமந்த வண்ணம் அடுத்த வரிக்குத் 
  தாவுகையில் எதிர்பாராத அதிர்ச்சிகளை பல்வேறு
 தளங்களில் விரிவதனூடாக தருகிறது.
 
 பஞ்சுத் தலையணையில் படுத்துறங்க வேண்டிய
 பதின்ம வயதின் ஆரம்பம்
 கரகரத்த தரையில்
 கையூன்றி சரிந்திருக்கிறேன்.
 கனக்கின்ற குண்டுகளைச் சுமந்தபடி
 எல்லைகளில் காவல் நிற்கிறேன்
 
 மதனியின் சொல் தெரிவில் குழப்பங்களும் சுருக்கமிலா சொல்லாடல்களும் 
  மிகுந்திருக்கின்றன. கரகரத்த எனும் சொல் பொதுவாக குரலோடு தான் 
  தொடர்புபடுத்தபடுவது இங்கு தரையோடு இணைந்து வருகிறது. சொர சொரத்த தரையில் என 
  கையாளப்பட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் இவரது இன்னொரு கவிதையில்
 
 என் மகன்
 நாட்டின் ஏதொவொரு மூலையில்
 இன்னொரு கிடங்கிலிருந்து
 எதிரிக்குக் குறிவைப்பான்
 மீண்டும் என் பரம்பரை
 அடிக்கடி இடம் பெயரும்
 குழிகளில் ஒதுங்கும்
 மண்ணுக்காய் சண்டையிடும்
 முடிவில் மண்ணை உண்ணும்
 எனும் வரிகள் ஒரு தாயின் போர் மறுப்பும், 
  விரக்தியும் நிராகரிப்பும் மேலெழுகிறது. இதற்குள் இருக்கும் அரசியல் வெளிப்படை 
  முடிவில் மண்ணை உண்ணும் எனும் வரிகளில் வெளிப்படும் நம்பிக்கையீனம் |தம் மண்ணில் 
  நிம்மதியாய் உண்ணும்| எனும் முடிவிற்கு
 காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் முகத்தில் ஏமாற்றத்தை பீய்ச்சியடிக்கிறது.
 
 இந்தியா புதிய மாதவியின் கவிதைகள் ஈர்ப்பு மிக்கவை புல்லின் நுனியில்
 
 மலர்ந்த பனித்துளியில்
 ஊஞ்சலாடும் காதலிருட்டு
 எப்போதும்
 காணாமல் போய்விடுகிறது.
 யோனியும் முலைகளும்
 தேடித்தேடி
 பாறைகளின் இடுக்களில்
 படரும் வெளிச்சங்களைக் கண்டு
 
 காமச சுகத்தை தேடியலையும் பேர்களிடம் தொலைந்து போய்விடும் காதலின் மெல்லிய 
  உணர்வுகளை புல் நுனி பனித்துளியில்
 ஒளித்திருக்கும் மெல்லிய இருட்டுக்கு உவமித்திருக்கின்றமை புதிய படிமங்களை 
  தோற்றுவிக்கிறது.
 
 கரப்பான்களின் தொல்லை
 எவ்விடமும்
 எக்காலமும்
 எல்லேரிடமும்
 
 ஓரிடத்தில் குவித்திருந்த கரப்பான்கள்
 ஊரெல்லாம் பரவி
 
 வௌ;வேறு பெயர்களில்
 ஊhந்து கொண்டிருப்பது
 
 எனும் வரிகள் எல்லா களங்களையும் பேசுகிறது. இவரின் |மின்னலைப் பரிசளிக்கும் மழை| 
  எனும் கவிதையில் புதிர்மையை
 மொழிப்பெயர்த்தல் |ராஜவனம்| போன்ற சொல்லாடல்கள் கவிதையின் தொடர்வில் உற்சாகத்தைப் 
  பொழிகின்றன. எளிமையான
 மொழியினுடாக ரசனா வெளியை விஸ்தரிப்பது புதிய மாதவியின் பலம் எனலாம். 
  இத்தொகுதியில் இவரது 4 கவிதைகள்
 உள்ளடங்கியுள்ளன.
 
 ஜேர்மன் மதனியின் கவிதைகள் நான்கும் இலங்கையின் போர்ச்சூழலில் சிறுவர் 
  போராளிகளின் உளவியல் ஊடாட்டங்களையும் தாய்மாரின் தவிப்புக்களையும் பாடுகின்றன.
 
 லீனா மணிமேகலை (இந்தியா) எழுதிய தலைப்பிலிக் கவிதையொன்றில்
 
 காயங்கள் நாறும்
 முலைகள் தோறும்
 சிதைவுற்றழிந்த
 கருப்பைகள் தோறும்
 எமது மானுடத்தின்
 வெற்றிக்கும் தோல்விக்குமான
 குருதி தோய்ந்த
 கொடித்தடங்கள்
 
 எனத் தொடரும் கவிதையின் முடிவில்
 
 ஆயதங்கள்
 தீரும் - பின்
 யோனிகளற்றுப் போகட்டும்
 பிரபஞ்சம்
 வேட்டையாடுவதற்கும்
 எந்த உயிருமின்றி
 இடுகாடாகட்டும்
 
 எனும் சாபத்தோடு கூடிய முடிவில் பிரசார நெடிமேலுயர்ந்து வீசுகிறது லீனா 
  மணிமேகலையின் எழுத்துக்களில் வழமையாக
 எங்காயினும் காணக்கிடைக்கும் நடைமுறைக்கு மாறான விடயங்கள் இக்கவிதையிலும் 
  காணக்கிடக்கின்றது.
 
 மெல்ல அசையும் திரையின் இடுக்கில்
 வீழ்ந்து சிதறும் வெண்மணி வெளிச்சம்
 தோற்றம்,தெளிவு, சுவாசக் கறையென
 வெளிச்சக் கீற்று விரசம் பயில
 தியானம் தொடரும்
 உலகை நோக்கி
 
 என முடிவுறும் அமெரிக்கா மோனிகாவின் மூடிய அறை எனும் கவிதை ஒரு பெண்ணின் 
  தனிமையின் தாய்க்குரலை பேசுகிறது.
 அக்கவிதை முதல்வரி தொடங்கி இறுதிவரை காட்சிப்படுத்தலில் தொடர் இணைப்பை சிறப்பாக 
  பேணி வருகிறது. எனினும் இறுதி
 வரியான |உலகை நோக்கி| எனும் வரி கவிதையின் பாடுபரப்புக்கு வரம்பிடுகிறது. 
  கவிதையின் முடிப்பை சப்பென்றாக்கி விடுகிறது. ஓசை நயத்துக்கு போதிய 
  முக்கியத்துவமளித்திருக்கிறார். மோனிகா
 
 முலைகளும் இரவுகளும் எனும் இன்னொரு கவிதையில்
 
 தேடித் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
 நம் காதல்களை, கடவுளர்களை, கேள்விகளை
 என்பாராமுற்ற முலைகளுக்கும் உனது
 எல்லையற்ற சிறகுகளுக்கும் ஊடே
 
 என ஆண் பெண் உறவிகளுக்கிடையிலான உணர்வுத் தேடலின் அசம நிலையை தெளிவு 
  படுத்துகிறார். இத்தொகுதியில் மோனிகாவின் |உடலைத் தவிர்த்து| எனும் தலைப்பில்
 
 உடலைத் தவிர்த்தென்ன உண்மை
 வேண்டும் உங்களுக்கு
 அண்ணாசாலையின் ஆடைவிளம்பர
 அழகியின் உடலும்
 தேவியில் திரையில் தீண்டத் துடிக்கும்
 திரைப்பட உடலும்
 தின்று தொலைக்கும் வறுகடலை
 காகிதமும,; அந்த கவர்ச்சிப் படமும்
 என்னுடலல்ல...!
 
 ஒப்பனைக் கவர்ச்சிக்கும் நிஜவாழ்வில் சாமான்ய பெண்ணுக்குமிருக்கும் முக்கியத்துவ 
  இடைவெளிக்கிடையில் கம்பீரமாக எழுந்து நின்று பெண்மையின் அடையாளத்தைப் 
  பிரகடனப்படுத்துகிறார். மோனிகா கவிதைகளின் பாடுபொருளும் உத்திகளும் 
  மகிழ்வுட்டுகின்றன.
 
 நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய |புரியும் வேதனை| எனும் கவிதை தலைப்பிலேயே 
  கவிதையைச் சொல்லிவிடுகிறது சுவிஸ்
 நளாயினியின் ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் இன்னும் பயணிக்க 
  வேண்டியிருக்கிறது. ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் நோக்கி இன்னும் பயணிக்க 
  வேண்டியிருக்கிறது. ஹைக்கூ என்றாலே விடுகதைப்பாணி என்று பொதுவான 
  வாய்ப்பாட்டுக்குள் இவரது கவிதைகள் உள்ளன.
 
 இலங்கை பஹிமா 4 கவிதைகள் எழுதியுள்ளார். இவற்றில் எனது சூரியனும் உனது சந்திரனும் 
  எனும் கவிதை இவ்வாறு முடிகிறது.
 
 வாழ்வின் விதிமுறைகள்
 எனதுலகையும் உனதுலகையும்
 வேறுபிரித்த வேளையில்
 விடைபெற்றோம்
 ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
 இறுதியாக அன்று தான் அழகாய் சிரித்தோம்
 எனது சூரியனும் தனித்துப் போயிற்று
 உனது சந்திரனும் தனித்து போயிற்று
 
 இத் தொகுதியில் இருக்கும் சிறந்த காதல் கவிதையாக இதனை முன்மொழிய முடியும். 
  தொடர்ச்சியாக ஏறத்தாழ ஒரே பாடுபொருளை
 கொண்டிருந்த கவிதைகளின் இடையில் இக்கவிதை வாசகருக்கு வேறுவகை சிலிர்ப்பை 
  ஏற்படுத்துகிறது பஹிமாவின் அழிவின் பின்னர் தடுமாறும் தனிப்பாதம் போன்றவை வேறு 
  வேறு விடயங்களை பேசுவது வாசகருக்கு உற்சாகமளிக்கின்றது
 
 இலங்கை விஜயலக்சுமியின் கவிதை குடும்ப பெண்ணின் அடுப்படி வாழ்வு பற்றி பேசுகிறது.
 
 இலங்கை சுல்பிகாவின் கற்பும் கதவும் எனும் கவிதையில்
 
 கதவுக்கும் கற்புக்கும் உறவுண்டு
 கருகிப் போன புல் வெளிக்கும்
 இறவாதிருக்கும் உன் தாய்க்கும்
 இருப்பது போல
 
 எனும் உவமை நமக்குள் மீண்டும் மீண்டும் அதிர்வுகளோடு பரவுகிறது. இவரின் 
  உயில்களல்ல உயிர்கள் எனும் கவிதை உரத்து
 கூவுகிறது
 
 இந்தியா திலகபாமாவின் உதிரும் நதியில் சிறந்த முறையில் குறியீடுகள் 
  கையாளப்பட்டுள்ளன எனலாம்.
 
 தாய்ச் செடி வாசம் துறந்து
 கடத்தி வரப்பெற்று
 கரையோரம் வேர்விட்ட விருட்சம் நான்
 
 எனத் தொடங்கும் கவிதையில் துறந்து எனும் சொல் கவிதையின் வீச்சினை சிதறடித்து 
  அல்லது சொல்ல வந்த விடயத்தை கூர்மையாக வெளிப்படுத்த தடையாக அமைகிறது. துறந்து 
  என்பதை விட துண்டிக்கப்பட்ட போன்ற சொல் கவிதையின் கணத்தை அதிகரிக்கச் 
  செய்திருக்கும்.
 கந்தல்களைக் கட்டிக்கொண்டு அருவருப்பில் அல்லாடும்
 என் உணர்வுகள்
 சாக்கடைக்குள் புரளும்
 பூச்சிகளின் தாபம் உனக்கும் புரியாதவை
 
 இங்கு பூச்சிகிளின் தாபங்கள் உனக்கும் புரியாதவை என வரவேண்டிய இடம் |தாபம|; எனும் 
  ஒருமைச் சொல் வசனப் பிழையை தோற்றுவிக்கிறது. எனினும் இவ்விடத்தில் கையாளப்பட்ட 
  உனக்கும் என்ற பதம் மறைவாக இன்னும் பலருக்கு என்பதைச்
 சொல்லிவிடுகிறது.
 
 லண்டன் சாரங்காவின் ஒரு கவிதாமரத்தின் இறப்பு எனும் கவிதையில்
 
 ஒரு அழகிய நதி
 குதியல் தெலைந்து
 குளமாகிய
 அதே கணத்தில் இருந்துதான்
 என் கழுத்தில் ஆடுகிறது
 உன்னால் இடப்பட்ட மூன்று முடிச்சி
 
 பெண் ஒருத்தியின் கனவுகள் களவாடப்பட்ட காட்சியை அழகாய் கண்முன்கொண்டு வருகிறது 
  இவரின் |எல்லாம் செய்கின்றாய்| எனும்
 கவிதை பக் (64) இறுதி வரியில் எதிர்பாரா அதிர்ச்சியை தந்து அழுகிறது.
 
 இலங்கை இஸ்மாலிகாவின் கொள்கைக் குடைபிடித்து நடப்பாள் பக் 65 மிக எளிமையாக ஓர் 
  சிறுவர் பாடலாக, நிறையவற்றை பேசி
 நடக்கிறது. பாடசாலைகளில் படிப்பிக்க வேண்டிய பாடல்களில் ஒன்றாக இதனை 
  முன்மொழியலாம். மை தொகுதியில் மலையக
 மண்ணை அடையாளப்படுத்தி எழுதப்பட்ட ஒரே ஒரு கவிதையாக இதனை கூறமுடியும்.
 
 எட்டக் தெரிகின்ற ஏற்றமிகு நம்பிக்கை
 ஏந்திடவே மொழிகள் பல உரைப்பாள்
 சுட்ட பொன்னாக விளங்கி மலைநாட்டில்
 சூழ்ந்த கருமைதனைத் துடைப்பாள்
 
 எனும் வரிகள் மலையக சூழலில் வளரும் குழந்தைகட்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பைச் 
  சொல்லி நிற்கிறது. சிறந்த
 தாளக்கட்டோடு எழுதப்பட்ட கவிதையாக இதனைச் சொல்லலாம்.
 
 அவுஸ்ரேலிய பழங்குடியினரின் போராட்டம் பற்றி அவுஸ்ரேலிய பாமதியினால் எழுதப்பட்ட 
  |தொலைக்கப்பட்ட தரவுகள|;
 குறிப்பிடப்படவேண்டிய கவிதை. அவுஸ்ரேலிய பழங்குடியினர் வந்தேறு குடிகளால் 
  விரட்டியடிக்கப்பட்டு தமது தாய் நிலத்தில்
 வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட அவலத்தை வர்க்கப்பார்வையுடன் படைத்துள்ளார். 
  பாமதியின் இக்கவிதை எல்லைகள் கடந்து வியாபிக்கிறது. இம்மக்கள் மீதான பாமதியின் 
  கவிதா நெஞ்சம் இறுதிவரிகளில் இவ்வாறு சினமுற்று சிலிர்க்கிறது. (பக் 69)
 
 அவர்களின் அடையாளத்தை
 
 காவி நின்றவை
 எல்லைகளுக்கு அப்பால்
 அழுது கொண்டிருந்த மலைப்பாறைகள் மட்டும் தான்
 அதில்
 வரிபோட்ட மீன் குஞ்சுகளும்
 வயிற்றில் குட்டிகளைப் சுமந்துகொண்டு
 நிற்கும் கங்காருவும்
 இலைகளின் ஆயள் ரேகையை
 இயற்கையை நேசித்து பாதுகாத்த
 அழகான மனிதர்களையா சீ...!
 
 இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் முகம் திருப்பி பார்க்க வேண்டிய 
  இன்னொரு பக்கதத்திற்கு தன் எழுதுகோலை
 திருப்பியிருக்கிறார். முழுமனித குல விடுதலையை நேசிக்கும் படைப்பாளிகளின் 
  நோக்குதிசை ஒன்றிரண்டு மட்டுமல்ல என்பதை
 இக்கவிதை உணர்த்துகிறது. பாமதி போன்றவர்களின் இத்தகைய பார்வை இன்னும் விரிவடைய 
  நிறைய இடமுள்ளது. கவிதையின்
 சொல் ஒழுங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
 
 இலங்கை வாசுகியின் |கருக்கலைப்பு| இவ்வாறு முடிகிறது.(பக் 73
 
 தாயின் கரு உதிர்த்த
 ஒரு பிள்ளையைத் தானும் கொல்லும் அதிகாரத்தை
 இனத்தின் பெயராலும்
 மதத்தின் பெயராலும்
 உலக தலையென்ற பெயராலும்
 யாரும் எடுப்பாரெனில்
 கருவில் கரைக என் பிள்iளாய்…!
 
 இக்கவிதையில் வெளிப்படும் போர் மறுப்புக்குரலும் போர்ச்சூழலின் நிர்ப்பந்திப்பும் 
  தாய்மையின் கையறு நிலையும் வெளிப்படை.
 
 இலங்கை அச்சு ஊடகங்களுக்கு தொடர்ந்து பெண்ணியப் படைப்புக்களை வழங்கிவரும் லண்டன் 
  நவஜோதியின் |பிரசவம்| |பறவைப்பெண்| கவிதைகள் நன்றாயிருக்கின்றன. இந்தியா
 
 குட்டிரேவதியின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன. |உனக்கான கடிதங்கள்| |பிரசவம்| 
  |எனது வீடு| என்பவையே அவை.
 குட்டிரேவதியின் வெகுஜன கவிதா மொழியை துல்லியமாக இக்கவிதைகளில் கையாண்டுள்ளார் 
  இவரது மொழியில் கவிதையின்
 வீச்சுக்கள் உச்சத்தை தொடுகின்றன.
 
 பிரசவம் கவிதை இவ்வாறு படர்கிறது
 
 நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது
 தாவர இச்சையின் மிடுக்குடன் எழும்
 திரண்ட கவர்ச்சியின் வாழை
 குலைத்தள்ளும் நாளில்
 உமது அரிவாள் வெட்டி சாய்த்தது.
 தோலுரித்தது
 உடல் கழித்தது
 காலைச் சுற்றிலும்
 கணுக்கால் உயரத்தில்
 மறுமுறை முளைத்தெழும்
 என் கம்பீரத்தோகைகள்
 
 வாழையை பெண்ணாக பார்த்தால் எல்லாமே புரிந்துவிடும்
 
 பிரான்ஸ் தர்மினியின் 4 கவிதைகள் இடம் பெற்றுள்ளன அவற்றுள் |யுத்தமும் தர்மமும்| 
  கவிதை இவ்வாறு பேசுகிறது.
 
 எங்கள் பெண்களும் குழந்தைகளும்
 அப்பாவி இளைஞரும்
 துப்பாக்கிகள் மீதும்
 அதிகாரங்கள் மீதும்
 வெறிகொண்டவர்களால் மட்டுமே
 சூழப்பட்டுள்ளனர்
 கிழக்கிலும் மேற்கிலும்
 வடக்கிலும் தெற்கிலும்
 தீவின் திசையெங்கிலும்
 தீவின் திசையெங்கும்
 வெறிகொண்டவர் அலைகின்றனர்.
 
 என முடிவுறும் இக்கவிதை ஈழச்சூழலை படம் பிடிக்கிறது. இவரின் |விலங்குகள்| |ஆயதம் 
  வைத்திருப்பவர் நாசமாய் போகட்டும்| எனும்
 கவிதைகள் குறிப்பிடக் கூடியன.
 
 இலங்கை மலராவின் மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன காதலின் இனிய அனுபவங்களை 
  பெண்ணின் பார்வையில் பதிவு
 செய்துள்ளார்.
 
 இலங்கை பெண்ணியாவின் கவிதைகள் 4 இடம்பெற்றுள்ளன. காதலுணர்வை பெரிதும் 
  மையப்படுத்தி எழுதப்பட்ட இவரது கவிதைகளில் அவசரக்குறிப்பு குறிப்பிடத்தக்கது.
 
 உண்மைகளை எல்லாம்
 அழுக்குத் துணிகளுக்கடியில்
 ஒளித்துவைத்துள்ளேன்
 நான்
 இறக்க வைக்கப்பட்டால்
 என்
 அந்தரங்க சிநேகிதியிடம்
 இடத்தை
 அறிந்துகொள்ளுங்கள் (பக் 90)
 
 இக்கவிதையில் இடம் பெறும் நான் இறக்க வைக்கப்பட்டால் எனும் சொல்லாடல் ஈர்ப்பு 
  மிக்கது நிறைய பேசுகிறது. எளிமையான
 மொழியில் அதிகம் பேசுகிறார். பெண்ணியா இவரது 4 கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன.
 
 கற்பகம் யசோதரவின் 4 கவிதைகள் தன் இயலுமையின் எல்லைகளைத் தேடி தீவிரமாக விசாரணை 
  நடத்துகின்றன கவிதைகளின் உருவ விரிவுக்கேற்ப பொருள் விரிவையும் வியாபித்துச் 
  செல்கின்றன. இவரின் |கவிஞர்களின் குசு| |இருகால அழைப்பு| |பிள்ளைகள் தேவை| 
  என்பவற்றோடு தலைப்பிலிக் கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது தலைப்பிலிக் கவிதையில்
 
 என்றைக்கோ
 எனக்கான முத்தங்களைக்
 காற்று விழுங்கிவிட்டது
 என்னை என்னால்
 கைவிட முடியாது முடியவில்லை
 என தனக்குள் தானே மீண்டெழும் நம்பிக்கை வாசகருக்கு நம்பிக்கையூட்டுகின்றன. 
  எனினும் இறுதி வரியில் என்னை- என்னால்-
 கைவிடமுடியாது. முடியவில்லை கைவிடமுடியாது என வந்திருந்தால் இறுதிவரி தனது இலக்கை 
  இன்னும் உறுதியுடன்
 எட்டியிருக்கலாம்.
 
 இந்தியா உதயச்செல்வியின் |முக்கிய அறிவிப்பு| , சுவிஸ் தில்லையின் |வரிமங்குகிற 
  நினைவு|, |வாழ்ந்து முடிந்த கதை|, இந்தியா
 வைகச்செல்வியின் |போரில் சிந்தும் மகிழம்பூக்கள்| என்பனவும் 
  குறிப்பிடப்படவேண்டியவை. டென் மார்க் சந்தியாவின் இன்னும்
 பிறக்காத எனது குழந்தைக்கு கவிதை உரையாடல் கலந்து சுவையூட்டுகிறது. இன்னும் 
  பிறக்காத குழந்தையுடனான தாயின் அனுபவம் குழைத்த உரையாடலாக தொடர்கிறது எனினும் 
  கவிதையின் இறுதிவரியே தலைப்பாகவும்ம் அமைந்திருப்பதால் இறுதி வரியில் கிடைக்க 
  வேண்டிய திகிலும் அனுபவமும் வரண்டு போய்விடுகின்றன.
 
 இந்தியா அரங்கமல்லிகாவின் |உழைப்பு| தலித்துக்களின் மொழி குறித்து 
  எழுதப்பட்டுள்ளது இக்கவிதை முழுமையான தலித் மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என் 
  எண்ணத்தோன்றுகிறது
 
 இந்தியா சுகிர்தராணியின் 4 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. |இயற்கையின் பேரூற்று| 
  |எதுவும் மிச்சமில்லை| |உப்பின் சுவையேறிய
 காதல்| |சாம்பல் பூக்காத முத்தங்கள்| என்பன மொழியை கனமாக கையாள்கின்றன
 
 நானே நிலமாகி
 நானே நெருப்பாகி
 நானே வானாகி
 நானே காற்றாகி
 நானே நீராகி
 அடைக்க அடைக்க பீறிடுகின்ற
 பிரபஞ்சத்தின் ஊற்றுக்கள் நான்
 
 எனும் வரிகளில் பெண்மையைக் காணலாம் இவரின் எதுவும் மிச்சமில்லை. கவிதை 
  ஈழப்போராட்டத்தைப் பாடுகிறது
 
 பள்ளியிலிருந்து திரும்பி வருகையில்
 வல்லுறவால் உயிரிழந்த மகளுக்கு
 வாங்கி வைத்த துணி
 கள்ளத் தோணியில் அனுப்பி வைத்த
 அகதி மகனின் மரண ஓலம்
 சேலைத்தலைப்பில் முடிந்துவைத்த
 குருதி நனைத்த பிறந்த மகன்
 -----------------
 பஞ்சடைந்த என் கண்களுக்கு
 படமாய் விரிகின்ற தனிஈழம்
 
 என முடியும் கவிதை யுத்தச் சூழலையும் தனிமனித வாழ்வுச் சூழலையும் 
  காட்சிப்படுத்துகின்ற அதே வேளை விடுதலைப்போராட்டக் கனவையும் (எல்லா இழப்புகளின் 
  பின்னரும்) கண்களில் ஏந்திய தாயின் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. எனினம் இறுதி 
  வரியில் வருவது தனி ஈழம் தமிழ் ஈழமா என்பதில் கவிதையின் பாடுபொருள் வேறுபடுகிறது.
 
 இலங்கையை சேர்ந்த மரியா என்டனீட்டா |புதியபூமியோடு முகாரி ராகங்களாய் பெண்கள|; 
  சமீலா |சிலுவை|, |அகதி| ஆகிய கவிதைகளை படைத்துள்ளனர் எழுத்துக்களை உணர்வு 
  மயப்படுத்த வேண்டிய தேவை இவர்களிடம் உள்ளது.
 
 இலங்கை சலனியின் நாணல் சிறகுகளில் என் நயனங்கள் கருமேகங்களும் காக்கணாங் 
  குரவிகளும் வெள்ளைநடனம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபச்சரித்து 
  தொடக்கிறுத்து முழுக்கிறுக்கிறது போன்ற சொல்லாடல்கள் கவிதையில் துருத்தி 
  நிற்கின்றன. ஏனைய கவிதைகளில் மொழி வளமாக கையாளப்பட்டுள்ளது.
 
 இலங்கை மாதுமையின் அப்பா, திரவப்பாடல், என்புத்தகம் ஆடை என நான்கு கவிதைகள் 
  இடம்பெற்றுள்ளன. மாதுமையின்
 கவிதைகளில் புதியவற்றை தரிசிக்கவும் மனதை சிறைப்படுத்தவும் விவரிக்க்கவும் 
  கவிதைகள் முயல்கின்றன. மாதுமையின்
 கவிதைகளில் இழையோடும் உணர்வுகள் மனவெளியெங்கும் ஒருவித சிலிர்ப்பைத் தூவுகிறது.
 
 இவரின் என் |புத்தகம்| கவிதையில் வரும்
 
 சிலர் அழுதார்கள்
 சிலர் சிரித்தார்கள்
 சிலர் ஏதேதோ பேசினார்கள்
 எல்லாவற்றையும் கேட்டும்
 திறந்துதானிருந்தது புத்தகம் (பக் 125)
 
 என் புத்தகம் கவிதை ஒரு கவிதைப் புத்தகத்தை போன்றது நீங்களும் வாசிக்க வேண்டும்
 
 இவ்வாறான நல்ல கவிதைகள் நிறையவற்றை சுமந்து வந்திருக்கிறது மை.
 
 மை கவிதைத் தொகுதியையும் ஊடறு இணைய சஞ்சிகையையும் றறற.ழழனயசர.உழஅ எனும் இணையத்தள 
  முகவரியில்
 வாசிக்கமுடியும்.
 
 மை கவிதைத்தொகுதி பெண்ணியச் சிந்தனைகளை பெண் எழுத்துக்களோடு பதிவு செய்ய 
  முனைந்துள்ளது இத்தொகுதியில் உள்ளடங்கிய கவிதைகள் வரையறைகளை கடக்க துடிக்கும் 
  பிரவாகமாக மிளிர்கின்றன. எனினும் பாடுபொருள்கள் தொகையளவில் வரையறைகளை 
  தாண்டவில்லை. எமது சமுதாய அலகுகளின் அனைத்து மூலைகளிலும் பெண்கள் 
  ஒடுக்கப்படுகின்றனர் இவ்வொடுக்குமறை ஒரு நூற்றாண்டுக்குள் திடீரென எழுந்ததல்ல 
  பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்து ஆண்மேலாதிக்கச் சிந்தனைகளால் திட்டமிட்டு
 கட்டமைக்கப்பட்டவை. இவை கலாச்சாரத்தின் அடித்தளத்தில் உறுதியாக ஊன்றப்பட்டவை. 
  இவ்வாறு முனைப்பிக்கப்பட்ட
 இச்சிந்தனைகளை தகர்க்க வேண்டிய அவசியம் அவசரமெனினும் மையத்தகர்ப்பை முதன்மையாக 
  கொண்டு மேற்கொள்ளப்படும்
 போராட்டங்களின் சாத்தியப்பாடு பற்றியும் எதிர்விளைவுகள் பற்றியும் நாம் 
  சிந்தித்தாக வேண்டும். எனவே பெண்ணானவள்
 தன்னளவிலும் குடும்ப அலகிலும் சமூக அலகிலும் தனக்கான விடுதலையை பரிமானிக்க 
  வேண்டிய நிலையில் உள்ளாள். இந்நிலை
 வளர்ந்து சமூகவிடுதலைக்கான முன் நிபந்தனை பெண்விடுதலையே எனும் சிந்தனைப்புரிதல் 
  ஏற்கப்படும் நிலையிலேயே நாம்
 |பெண்விடுதலை| என்பதன் பொருளை உணரமுடியும்.
 
 |மை| தொகுதியின் கவிதைகள் அவ்வாறான வளர்நிலையை உதிர்க்காவிட்டாலும் கூட முழுமொத்த 
  பெண் சமூக
 விடுதலைக்கோஷங்களை கையிலெடுத்த பெரும் பரப்பில் ஆங்காங்கு நின்று தன் இயலுமையின் 
  எல்லைவரை முன்வைக்கின்றன
 என்பதை ஏற்கவேண்டும். பெரும்பாலான கவிதைகள் ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான 
  மாற்றுக்கலாச்சாரத்தை கட்டமைக்கும்
 பணிக்கு உழைக்க வந்திருக்கின்றன. அனுபவமற்ற கவிதாயினிகள் சிலரின் எழுத்துக்கள் 
  ஆணாதிக்கத்திற்கும் ஆண்களுக்குமிடையிலான
 வேறுபாட்டை உணராமல் கூவிக் களைக்கின்றன தமிழ்ப்பெண் எழுத்துச்சூழலில் அறியப்படும் 
  கவிஞைகள் கூட |மை|யில் பாலியல்
 விடுதலையை மையப்படுத்தியே தம் படைப்புக்களை தந்துள்ளமையானது நம் சிந்தனைகள் 
  விரிவடைய வேண்டிய தூரத்தைக் காட்டி நிற்கிறது. ஆணாதிக்க சிந்தனைக் கூறுகளையும் 
  அதன் உட்பிரிவுகளையும் தோலுரித்துக் காட்டவும் பெண்ணின் ஆளுமை தொடர்பாகவும் 
  மேலும் பல கோணங்களில் முனைந்திருக்கலாம்.
 
 பெண் பொருளாதார ரீதியிலும் உடல்,உள உழைப்பின் அடிப்படையிலும் சாதிய 
  அடிப்படையிலும் சுரண்டப்புடுவதும் நிறையிடப்படுவதும்
 கண்முன்னே காணக் கிடைப்பன இவற்றோடு கலாச்சாரத்தின் பேரால் ஒடுக்கப்படும் 
  பெண்குரலும் சிந்தனையும் மொழியூடு பீறிட்டெழவும்
 நுண்ணதிர்வுகளை பதிவு செய்யவும் முடியும்.
 
 முன்னெப்போதுமில்லாத வகையில் உலகளாவிய ரீதியில் மானுடர் தம் விடுதலை நோக்கிய 
  சிந்தனைகளை விரிவு படுத்தியுள்ளனர்.
 அவ்வகையில் பெண்களின் விடுதலை ஆழமாக கண்கொள்ள வேண்டியது மேலைத்தேய அதிதீவிர 
  பெண்ணியச்சிந்தனைகள் பாலியல் பிறழ்வுகளை நியாயப்படுத்தி நிற்கின்றன. |மை| 
  கவிதைத்தொகுதி கவிதைகள் அவற்றை வேண்டி நிற்காவிட்டாலும் பாலியல் விடுதலையை 
  வேண்டும் எழுத்துக்கள் தன்னை நிதானமாய் உணர்வதும் அவசியமாகும்.
 
 பெண்ணானவள் மானுட வாழ்வை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாவாள். பெண் 
  விடுதலையே மானுட விடுதலையின் பெரும்
 பகுதியாகும். பெண்களுக்கான விடுதலையே அப்பெண்வாழும் சமூகத்தின் விடுதலையை 
  நிர்ணயிக்கிறது. எனவே பெண்விடுதலையின் சமூக விடுதலை நோக்கம் இருத்தல் 
  அவசியமானதாகும். உலகில் இடம்பெற்ற வரலாற்றுத் திசைமாற்றங்களுக்கு பெண்களின் 
  முக்கியத்துவம் கணிசமானவை ஒக்டோபர் புரட்சி, சீனப்புரட்சி, வியட்நாம், கியூபா, 
  கொரிய புரட்சிகளுக்கும், தேசியவிடுதலை இயக்கங்களுக்கும் பெண்களின் 
  பங்களிப்புக்கள் அதிகமானவை. இலங்கையின் தமிழீழ போராட்டவரலாற்றிலும் இடதுசாரி 
  இயக்கவளர்ச்சியிலும் வெகுஜன போராட்ட முன்னெடுப்புக்களிலும் பெண்களின் 
  அர்ப்பணிப்புக்கள் மதிக்கத்தக்கன.
 
 இத்தகைய வரலாற்று உண்மைகள் தற்கால பெண்ணிய சிந்தனையாளர்களால் 
  பதிவுசெய்யப்படவேண்டும் எழுத்துக்களில் இலக்கியங்களில் இவை புதுப்பிக்கப்பட்டு 
  கூட்டு சமூக மீளுருவாக்கத்திற்கு பெண்கள் தம் விடுதலைச் சிந்தனைகளோடு 
  இயங்கவேண்டும். குடும்ப சமூக உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவம் தீவிரமாக 
  உணர்த்தப்படுவதும் பெண் சிந்தனை விரிவு பெறுவதற்கும் அதனூடு சமூக விடுதலை 
  முன்னெடுக்கப்படுவதற்கும் பெண் எழுத்துக்களும் பெண்விடுதலையை நேசிக்கும் 
  எழுத்தாளர்களும் உழைக்க வேண்டும். அவ்வுழைப்பு சாத்தியமாகும் போதே நாம் 
  பெண்விடுதலை எனும் சிந்தனையால் முழுமையாய் மகிழ்வுற முடியும். இவ்வாறான 
  மகிழ்ச்சிக்கு தன்னாளான பணியை |மை| ஆற்றியுள்ளது. ஆங்காங்கு மிகக்குறைவாய் 
  எழுத்துப் பிழைகள் காணப்படினும் அவை கவிதைகளில் பொருட்பிழைகளை ஏற்படுத்தவில்லை. 
  என்பது கவலைக்குரியதல்ல
 
 உலகளாவிய ரீதியில் எழுதிக்கொண்டிருக்கும் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த 
  கவிதாயினிகளின் கவிதைகளை ஒன்றுசேர்த்த
 முக்கியநிகழ்வாக இதனைக் கூறலாம். வௌ;வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக 
  புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்களின் ஒருமித்த சிந்தனைகளை ஒன்றாய் வாசிக்கும் 
  வாய்ப்பை வழங்கியுள்ளமை |மை| யின் அடர்த்தியை அதிகமாய் உணரத் தூண்டுகிறது. தரமான 
  கடதாசியும் சிறந்த ஓவிய முகப்பும் நேர்த்தியான வடிவமைப்பும், அச்சுக்கோர்ப்பும் 
  மகிழ்சியூட்டுகின்றன. நூலின் உள்ளே ஒரு சில ஓவியங்களையாவது இணைத்திருக்கலாம். 
  கவிதைகளை முழுதாய் வாசித்து முடித்த வாசகர் தனது பொழுதை பயனுடையதாய் கழித்தார் 
  என்பதை நிச்சயம் உணர்வார்
 
 தமிழ்க்கவிதையுலகில் பெண் எழுத்துக்கான வரிசையில் |மை|க்கு நீண்ட கால இடமுண்டு. 
  இத்தொகுதியை உருவாக்க முனைந்த ஊடறு
 இணையசஞ்சிகை ஆசிரியர் குழுவை நாம் பாராட்டுவதில் மகிழ்ச்சியடையலாம்.
 
 இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் (16,23,30செப்டம்பர் ஞாயிறு தினகரன்) 
  பத்திரிகையில் வெளியான விமர்சனம் நன்றியுடன்
 பிரசுரமாகின்றது.
 
 பதிவுகளுக்கு அனுப்பியவர்: றஞ்சி (சுவிஸ்)
 ranjani@bluewin.ch
 |