| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள்! |  
| மீள்பிரசுரம்: http://www.sramakrishnan.com அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதை: 
  எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம்!
 
 - எஸ்.ஏ. பெருமாள் -
 
 
  நெடுங்குருதிக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் என்ற இந்தப் பெரிய நாவல் 
  வந்திருக்கிறது கற்பனை செய்து காண முடியாத பழைய நூற்றாண்டுகளின் வாழ்வை, அதுவும் 
  தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. 360 பெரிய 
  பக்கங்களைக் கொண்ட யாமத்தில் நான்கு நூற்றாண்டு வரலாற்றின் வழியே மனித வாழ்வு 
  பயணிக்கிறது. மனிதர்களின் அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதைகளை எழுதுகிறது. 
  இந்திய மரபின் அதிசயங்கள் நிறைந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ 
  நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்த செல்லும் பிரிட்டிஷ் இந்தியாவாக மாறும் கால 
  கட்டத்தைப் பின்புலமாய்க் கொண்டது இந்த நாவல். 
 வரலாறு, எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து யாமம் செல்கிறது. மனித 
  வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகிடும் வாழ்வின் மகத்துவங்களை 
  அடையாளம் காட்டி நாவல் வெற்றி பெற்றுள்ளது. ஓய்வறியா வாழ்க்கைப் பயணத்தின் 
  அழிந்து போன சுவடுகளையும், தழைக்கப் போகும் புதிய தளிர்களையும் அவற்றின் 
  அந்தரங்கங்களையும் யாமம் வெளிப்படுத்துகிறது. பூக்களைப் போலவே ஒவ்வெரு 
  காலத்திற்கும் நிறம், மணம், குணம் என்பது உண்டு. அதைக் கதைப் புனைவில் 
  வெற்றிகரமாய்க் காட்டி வாசகனை மெய்மறக்கச் செய்வதில்தான் எழுத்தாளனின் வெற்றி 
  அடங்கியுள்ளது. நாவலைப் படித்து முடிக்கும்போது யாமத்தின் தீராத வாசனை நம்மைக் 
  கவ்வி மூழ்கடித்து விடுகிறது.
 
 யாமம் என்பது ஒரு நாவல் அல்ல. முதலில் லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனி தோன்றி 
  உருவாகி வளர்ந்த கதை ஒரு குறுநாவலாய் வருகிறது. லண்டனுக்கு மிளகு, ஏலம் போன்ற 
  நறுமணப் பொருட்களை டச்சுக் கடல் வணிகர்கள்கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். 
  இந்தியாவிலிருந்து ஒரு கப்பலில் சரக்கைக் கொண்டுவந்து லண்டன் சேர்ப்பதற்குள் 
  கடலோடிகளில் இருபது பேரின் உயிர் போய்விடுகிறது. இக்காரணத்தைக் கூறியே டச்சு 
  வணிகர்கள் மிளகின் விலையை உயர்த்துகிறார்கள். இதனால் பிரிட்டானிய வணிகர்கள் 
  இருபத்தி நான்கு பேர் சேர்ந்து இந்தியாவிலிருந்து வணிகம் செய்ய மகாராணியிடம் 
  அனுமதி கூறுகிறார்கள்.
 
 வில்லியம் ஹாக்கின்ஸ் தலைமையில் லண்டனிலிருந்து கிளம்பிய கப்பல்கள் சூரத் நகரை 
  1600ஆம் ஆண்டு ஆகஸ்டில் அடைகின்றன. மாமன்னன் ஷாஜகானைச் சந்திக்கிறார்கள். 
  மன்னரின் ஆசை மகள் தீக்காயம் பட்டு முகம் அழகு குலைந்து கிடக்கிறாள். அதை லண்டன் 
  டாக்டர் குணப்படுத்தியதால் மகிழ்ந்த மன்னன் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு 
  இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதியளிக்கிறான். பின்பு வெள்ளையர்கள் 
  புதுச்சேரியையும், அதன்பின் மதரா பட்டணத்தையும் (சென்னை) வணிக 
  மையங்களாக்குகிறார்கள். இந்த வரலாறு வியப்பூட்டும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.
 
 வெள்ளையர்கள் கடலோரப்பாக்கங்களைஆக்கிரமித்து மீனவர்களை விரட்டியடிக்கிறார்கள். 
  அதை எதிர்த்து மீனவர்கள் வெள்ளையர்களின் கூடாரங்களைத் தீயிட்டுக் 
  கொளுத்துகிறார்கள். பின்னர் வெள்ளைத் துப்பாக்கிகள் வெற்றிகொள்கின்றன. மதரா 
  பட்டணத்தில் வெள்ளையர்கள் குடியேறி வாழத் தொடங்கினர். வெள்ளையர்கள் நகரையே பிளாக் 
  டவுன், ஒயிட் டவுன் என்று பிடிக்கிறார்கள். தாங்கள் வாழும் பகுதியான ஒயிட் 
  டவுனுக்கு குடிநீருக்காக பிளாக் டவுனின் ஏழு கிணறு பகுதியைக் கைப்பற்றுகிறார்கள். 
  எதிர்த்தவர்களை பீரங்கியால் சுடுகிறார்கள். மதரா பட்டணம் முழுவதும் வெள்ளையரின் 
  ஆளுமையின் கீழ் வந்தபின் மக்களின் வாழ்விலும், நாட்டிலும் பலவிதமான மாற்றங்கள் 
  வரத் துவங்கின. இதைத் தொடர்ந்து, நாவல் வரலாற்றுத் தடத்திலிருந்து வாழ்க்கைத் 
  தடத்திற்குத் தாவுகிறது. நாவல் பட்டணத்து வாசிகளின் சரிதம் என்ற தலைப்பில் நான்கு 
  நாவல்களாய் பீறிட்டுத் தாவிப் பாய்கிறது. 
  கரீமின் குடும்ப சரிதம் என்ற நாவல் அப்துல் கரீமின் கனவில் தோன்றும் பக்கீரின் 
  உரையாடலில் தொடங்குகிறது. கடலில் உள்ள மீன்களை எண்ண முடியுமா - கடலில் ஒரே 
  அலைதான் பல மடிப்புகளாய் வருகிறது; நம் உடல் மிகவும் மர்மமானது. அதை நாம் 
  புரிந்துகொள்ளவே இல்லை. அது ஒரு கடற்கரையைப் போல மர்மமும் அழகும் மிக்கது. தீராத 
  புதிருடையது போன்ற தத்துவ உரையாடல்கள் வருகின்றன.
 
 தொடர்ந்து பக்கீர் மீர்காசிமுடன் உரையாடுகிறார். உரையாடல் இரவைப் பற்றியதாய் 
  உள்ளது. இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத திரவம். அது எல்லாத் 
  திசைகளிலும் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. இரவென்னும் வண்ண மலர் எண்ண மடியாத 
  இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் 
  ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதல்ல என்கிறார் பக்கீர். இதைத் தொடர்ந்து 
  ரோஜா மலர்களிலிருந்து காசிம் மயக்கமூட்டும் மணம் நிறைந்த அத்தரைக் காய்ச்சி 
  எடுக்கிறார். அதன் முதல் மணத்தால் தெருக்கள் வீடுகள் யாவும் சுகந்தத்தால் 
  நிரம்பத் துவங்கியது. ஆண்கள் பெண்கள் ஒருவரை ஒருவர் முகர்ந்து பார்த்துக்கொண்டு 
  மயக்கத்தோடு அலைந்தார்கள். ஊரே கமகமக்கத் தொடங்கியது. அந்த மணம் அடங்குவதற்கு ஒரு 
  வார காலம் ஆனது. அந்த அத்தருக்கு காசிம் யாமம் என்று பெயரிட்டு விற்பனை செய்யத் 
  தொடங்கினார்.
 
 கரீமுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்தது. ஆனால் அவருக்கு ஆண் பிள்ளை 
  வேண்டும் என்று ஆசை. தனக்கு ஆண் பிள்ளை இல்லாமலே போய்விட்டால் தன்னோடு அத்தர் 
  வடிப்பது முடிந்து விடும் என்ற அச்சம் மேலோங்கி யிருந்தது. அதற்காகவே அவர் மேலும் 
  இரண்டு பெண்களை மனைவியாக்கிக் கொண்டார். எனினும் அவர் ஆசை நிறைவேறவேயில்லை. யாமம் 
  தாயாரிக்கும் அற்புத வித்தையை வேறு யாருக்கும் சொல்லித் தர அவர் தயாராக இல்லை. 
  குதிரைப் பந்தயத்தில் பணத்தை எல்லாம் இழந்து விரக்தியடைந்து வீட்டிலிருந்து 
  காணாமல் எங்கோ காணாமல் தொலைந்து போனார் கரீம். அவரது குடும்பம் வாழ்வதற்குப் 
  போராடியது. அவர் போனதோடு யாமமும் விற்பனைக்கு வரவில்லை.
 
 கரீமின் மனைவிகள் மீன் விற்றுப் பிழைக்கிறார்கள். நகரில் காலரா பரவி, நகரமே ஒரு 
  கழிப்பறையாகி விட்டது. காலராவுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகிறார்கள். இதில் 
  கரீமின் மனைவி ரகுமானி இறக்கிறாள். அவர்களுக்கு ஒரே ஆதரவாயிருந்த சிறுவன் 
  சந்தீப்பும் பலியாகிறான். இவன் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். காலரா பயத்தில் 
  வெள்ளையர்கள் ஏழு கிணற்றை பிளாக் டவுன் வாசிகளிடமே கொடுத்து விடுகிறார்கள். 
  கடைசியில் கரீமின் குழந்தையோடு அவரது மனைவி வகிதா தெற்கே உப்பளத்திற்கு 
  வேலைக்குப் போகிறாள். கரீமின் மூன்றாவது மனைவி சுரையாவையும் அழைத்து செல்ல முடிவு 
  செய்கிறான். ஊரையே மணக்கச் செய்த குடும்பம் பிழைக்க வழி தேடி வாழ்க்கை நாறிப் 
  போய்கிறது. யாமம் என்ற அத்தரை விற்பனை செய்த குடும்பம் நாறும் மீனை விற்று, 
  பின்பு உப்பளம் நோக்கிச் செல்கிறது. வாழ்வின் விசித்திரங்கள் தொடர்கிறது. கதை 
  மேஜிகலில் துவங்கி ரியலிசத்தில் முடிகிறது.
 
 
 கதை 2
 
 பிரிட்டிஷார் இங்கு வந்தபின் சர்வே இலாக்காவும் வந்தது. அவர்கள் நகரங்களையும், 
  நிலங்களையும், மலைகளையும் அளந்து வரை படங்கள் தயாரித்தார்கள். தெற்கே பரணியாற்றங் 
  கரையிலிருந்து பத்ரகரி பிழைப்புத் தேடி மதரா பட்டணம் வந்து சர்வே இலாகாவில் 
  பணியாற்றுகிறான். அவன் தந்தை ஒரு கொடுமைக்காரன். தந்தையின் அடி தாங்க முடியாமலேயே 
  தாய் இறந்து விடுகிறாள். பத்ரகிரியும் அவன் தம்பி திருச்சிற்றம்பலமும் சித்தி 
  நங்கையின் வீட்டில் வளர்கிறார்கள்.
 
 பத்ரகிரியின் மனைவி விசாலத்திற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. தம்பி 
  திருச்சிற்றம்பலத்திற்குத் திருமணமாகிறது. தம்பியை லண்டனுக்கு அனுப்பி வைத்து 
  பத்ரகிரி படிக்க வைக்கிறான். தம்பி லண்டன் போனபின் தம்பி மனைவியுடன் பத்ரகிரிக்கு 
  தொடர்பேற்டுகிறது. அவளுக்ளு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. லண்டன் சென்ற 
  திருச்சிற்றம்பலம் படிப்பில், ஆராய்ச்சியில் புகழ் பெறுகிறான். புதிய 
  கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறான். பணம் கிடைக்கிறது.
 
 தம்பியின் மனைவியே தன் கணவனுக்குக் குழந்தை பெற்றதை அறிந்து விசாலம் தன் 
  குழந்தையுடன் கடயத்திற்குத் தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள். 
  திருச்சிற்றம்பலத்தைப் போல லண்டனுக்குப் படிக்கச் சென்ற சற்குணம் அவனது நண்பன். 
  ஆனால் லண்டனில் ஏழைகளும் தொழிலாளிகளும் படும்பாட்டைப் பார்த்து அவர்களைத் திரட்டி 
  பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடுகிறான். திருச்சிற்றம்பலம் லண்டனிலிருந்து 
  திரும்பி வீட்டிற்குச் செல்கிறான். தனது மனைவியுடன் உயிருக்குயிரான தனது அண்ணனே 
  தவறான உறவு கொண்டதையும், விசாலம் கடையம் சென்றதையும் அறிந்து அங்கு செல்கிறான். 
  அண்ணியையும் அவள் குழந்தையையும் காப்பாற்றுவதே தனது கடமை என்று முடிவெடுக்கிறான்.
 
 கதை 3
 
 சொத்துக்காக வழக்காட மதரா பட்டணத்தில் லாட்ஜில் தங்கி ஆண்டுக்கணக்கில் வாழும் 
  கிருஷ்ணப்பாவின் கதை வித்தியாசமானது. பல ஆண்டுகளாய் வழக்கு முடியவில்லை. அவரது 
  சொத்துகளில் மலைக்காடுதான் பிடித்தமானது. எலிசபெத் என்ற வெள்ளைக்காரப் பெண்ணோடு 
  மலைக்காட்டுக்கு கிருஷ்ணப்பா குடியேறுகிறார். அங்கு எலிசபெத் காட்டின் ருசியில் 
  மயங்குகிறாள்.
 
 கௌதாரி சேவலை எதிர்த்து சண்டையிடுகிறது. போதை தரும் நீலாவரணச் செடிகள் 
  வளருகின்றன. மலைக்காட்டில் திருட வந்த பூதி கானகத்தின் அனைத்துச் சங்கேத 
  முணுமுணுப்புகளையும் அறிந்தவன். அவர் அவனைப் பிடித்து வைத்துக் கொள்கிறார். 
  மலைக்காட்டின் மீது எலிசபெத்துக்கு மாளாத காதல் வந்துவிட்டதால் அதை மட்டும் 
  பெற்றுக்கொண்டு சொத்து வழக்கில் பங்காளியுடன் கிருஷ்ணப்பா சமரசம் 
  செய்துகொள்கிறார். மலையிலேயே தங்கிவிடுகிறார். வெள்ளைக்காரர்கள் சிலர் வந்து ஒரு 
  செடியை நட்டுப் பரிசோதனை செய்கிறார்கள். அது தேயிலைச் செடி. எலிசபெத் தனது 
  நாட்டுக்குப் போய் திரும்ப வேண்டும் என்கிறாள். கிருஷ்ணப்பா அவளை அனுப்பி 
  வைக்கிறார். 
  எஸ்ரா காட்டை வருணித்து எழுதியிருப்பது வாசிக்கும் நம்மையும் கானகத்துக்கே 
  இழுத்துச் சென்று மயங்க வைக்கிறது. காட்டின் மூலிகைகள், பறவைகள், மரங்கள், செடி 
  கொடிகள் அனைத்தையும் நம்மை நேர்காணச் செய்திருக்கிறது. எழுத்தை ஒரு வரம் என்பார் 
  கவியரசு கண்ணதாசன். அது எஸ்ராவுக்கு நிறையவே கிடைத்திருக்கிறது என்பது இந்த 
  நாவலைப் படித்தால் தெரியும்.
 
 கதை 4
 
 பெற்ற தாய் எவ்வளவோ வேண்டியும் கேளாமல் அந்த இளைஞன் பண்டாரமாகி ஓடிப்போனான். அவன் 
  மனிதர்கள் யாரையும் பின்பற்றாமல் ஒரு நாயைப் பின்பற்றி அதன் பின்னால் ஓடினான். 
  அதையே தனது ஞான குருவாக, வழிகாட்டியாகக் கருதினான். நாய்க்குப்பின்னே ஒடுவதும், 
  அது நின்று படுத்துவிடும் இடத்தில் இவனும் படுத்துக்கொள்வான். அந்தக் காலத்துச் 
  சித்தன் பத்ரகிரியாரும் நாயும் இணைந்திருந்தது போலத்தான் இந்தப் பண்டாரமும் சித்த 
  சுவாதீனமின்றி அலைகிறான்.
 
 இடையில் ஒரு நாள் கோவில் வாசலில் அவனது தாய் வந்து இடைமறித்து வீட்டுக்கு வா 
  உனக்குத் திருமணம், பெண் பார்த்துள்ளேன் என்று அழைக்கிறாள். பண்டாரம் 
  மறுத்துவிட்டு நாயின் பின்னே ஓடுகிறான். நோயில் படுத்திருக்கும் ஒரு கிழவனும் 
  அவனது மகளும் வாழும் வீட்டின் அருகில் பண்டாரமும் நாயும் கொஞ்ச நாள் 
  தங்குகிறார்கள். அந்தப் பெண் கனகா பண்டாரத்துடன் படுத்து சம்சார சாகரத்தில் 
  மூழ்கடிக்கிறாள். கர்ப்பமும் அடைகிறாள். பிரசவ காலம் நெருங்குகிறது. குழந்தையை 
  பார்க்க பண்டாரம் ஏங்கி நிற்கும்போது நாய் கிளம்பிவிடுகிறது. நீலகண்டம் என்று 
  பெயர் சூட்டிய அந்த நாயின் பின்னே பண்டாரம் மீண்டும் ஓடிப் போகிறான்.
 
 ஒரு பித்தனையும் ஒரு நாயையும் கதாநாயகர்களாய் கொண்டு படைக்கப்பட்ட முதல் நாவலாக 
  இது இருக்கும். உண்மையில் இது போன்று ஒரு கதை எழுதுவதுகூட அபூர்வமான விஷயம்தான். 
  இந்நாவலின் கடைசி காட்சியில் எதிர்பாராதது நடக்கிறது. திருவாலங்காட்டுக்குப் 
  பண்டாரத்தை அழைத்து வந்த நாய் மறைந்துவிடுகிறது. பண்டாரம் நாயைத் தேடி அலைகிறான். 
  நாய் எங்கும் இல்லை.
 
 பின்பு நாய் வந்து பண்டாரத்தை திருவிடைமருதூருக்கு அழைத்துச் செல்கிறது. பின்பு 
  பட்டிணத்தார் சமாதியை அடைகிறது. பண்டாரம் கடைசியாக நாயிடம் விடை பெற்றுக்கொண்டு 
  ஒரு மடத்தின் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக்கொண்டான். நாயும் பின்பு வந்து அந்த 
  மடத்தின் முன்பு படுத்துக்கொண்டது. பல நாட்கள் கழித்து நாயும் மறைந்து விட்டது. 
  பண்டாரம் சென்ற மடமும் திறக்கவே இல்லை. மூடிக்கிடந்த மடத்தின் முன்னே காலையும் 
  மாலையும் பூஜைகள் நடைபெற்றன. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. கிராம் 
  நிர்வாகிகள் கதவை உடைத்துத் திறந்து பார்த்தாள் உள்ளே பண்டாரம் இல்லை. ஒரு 
  பஞ்சமுக விளக்கு எரிந்துகொண்டிருந்தது. எல்லா சாதுக்களையும் போலவே இந்த சதாசிவப் 
  பண்டாரத்தின் வாழ்வும் ஒரு கதையாகி முடிந்திருந்தது.
 
 இது பரம்பரையாய் நாம் படிக்கும் சித்தர்களின் கதைபோல் இல்லாமல் நவீன நடையில் 
  எளிமையாய் சுவைபடச் செல்கிறது. நீலகண்டம் என்ற அந்த நாய் சதாசிவப் பண்டாரத்தை 
  மட்டுமல்ல, நம்மையும் கூடவே இழுத்துச் செல்கிறது.
 
 லண்டனில் நீக்ரோக்களுக்கும், ஏழைகளுக்கும் இழைக்கப்படும் துன்பத்தைக் கண்டித்து, 
  தமிழ் மாணவன் சற்குணம் லண்டன் நகரப் பிரபுக்கள் யாவரும் நோய்க் கிருமிகள். 
  அவர்கள் ரத்தம் குடிக்கும் அட்டைகள். இந்த அட்டைகள் இந்தியாவை உறிஞ்சத் துவங்கிப் 
  பல வருடங்களாகிவிட்டன. நம்மவர்கள் சொரணையற்றவர்கள். அட்டைகளை தீவைத்துக் 
  கொளுத்தாவிட்டால் நம் ரத்தத்தைக் குடித்துவிடும் என்று பேசுகிறான்.
 
 நான்கு கதைகளிலும் அருமையான பல வரிகள் சிதறிக் கிடக்கின்றன. அவை கதை உரையாடல்களை 
  செழுமைப்படுத்துகின்றன.
 
 மண்புழுகூட தன் இருப்பிடத்திலேயே இருக்கிறதில்லை. ஈரம் கண்ட இடத்துக்கு 
  ஊர்ந்துக்கிட்டுதான் இருக்கு. மனுசன் மட்டும்தான் நட்ட கல்லு மாதிரி இருப்பிடம் 
  விட்டு அசையாமல் இருக்கப் பாக்குறான்
 
 கப்பல்ல வந்து இறங்கிட்டா வெள்ளைக்காரன் பெரிய ஆளா? பிணந்தின்னிப் பயல்கள். மதரா 
  பட்டணத்தைக் கருமித் தின்பதற்காகவே இங்கிலாந்திலிருந்து வந்து 
  சேர்ந்திருக்கிறார்கள். வந்து இறங்கும்போது எலிக்குஞ்சாக இருப்பவன் ஊரை விட்டுப் 
  போகும்போது பெருச்சாளியாகவோ, வெருகாகவோ உருமாறியிருப்பான். எலிகளை எல்லாம் 
  தாட்சண்யம் இல்லாமல் அடித்துவிட வேண்டும். வளர விட்டால் ஊரில் மிச்சம் இருப்பது 
  சுடுகாடு மட்டும்தான்.
 
 மழை ஏன் நின்னுபோச்சு தெரியுமா?
 சாமியை வேண்டிக்கிட்டு மழைமேல மூத்திரம் பேஞ்சா மழை நின்னுடும். நான் 
  அப்படித்தான் செய்தேன்.
 
 நாவலில் சுவையான உரையாடல்கள் நிறையவே உள்ளன. லண்டனில் அச்சுக் கலை படிக்கும் 
  சர்குணம் தனியே நடனம் ஆடிப் பழகுகிறான். வெள்ளைக்காரப் பெண் அவனைப் பார்த்துக் 
  கேட்கிறாள். அதற்கு சர்குணம் பதிலளிக்கிறான்,
 
 எங்கள் ஊரில் எவரும் நடனம் ஆடுவதே கிடையாது. அதனால் நடனப் பயிற்சி செய்கிறேன்.
 
 உங்கள் ஊரில் பெண்களே கிடையாதா?
 இருக்கிறார்கள். ஆனால் அவர்களை கற்சிலைகளைப் போல தொலைவிலிருந்துதான் பார்க்க 
  வேண்டும். கையால் தொடமுடியாது.
 
 பிறகு நீங்கள் எல்லாம் எப்படிப் பிறந்தீர்கள்?
 அதுதான் எங்களுக்கும் ஆச்சரியமாய் இருக்கிறது என்று கூறிவிட்டு சர்குணம் 
  வாய்விட்டுச் சிரித்தான். இப்படிச் சுவையான உரையாடல்கள் நாவல் முழுவதும் 
  பரவிக்கிடக்கின்றன.
 
 யாமம் என்ற அத்தரின் மணம் நம்மை முற்றிலும் கவ்விக்கொள்கிறது. அதன் சுவாசம் 
  லேசில் போகாது போலிருக்கிறது.
 
 http://www.sramakrishnan.com/view_p.asp?id=6&PS=1
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |