நினைவு கூர்வோம்!
கறுப்பு ஜூலை 1983!
அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும்!
ஈழத்தமிழர்களின்
பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருவாக்கிய கறுப்பு ஜூலை 1983
இனப்படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து 25 ஆண்டுகள் எவ்வளவு விரைவாகக்
கடந்து சென்றுவிட்டன. 1983 ஜூலைக் கலவரம்தான் அன்றையப் பாரதப் பிரதமர்
இந்திராகாந்தியின் தலையிலான இந்திய அரசினை ஈழப்பிரச்சினையில் தீவிரமாக
ஈடுபடவைத்தது. எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அரசுடன் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும்
ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பின. பூமிப்பந்தின் அனைத்துத்
திக்குகளையும் நோக்கி ஈழத்தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தனர். சர்வதேசம்
ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊன்றிப்பார்க்க ஆரம்பித்தது. இந்த இருபத்தைந்து
ஆண்டுகளில் மீண்டுமொருமுறை ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையினை அன்றைய நிலையுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால்... இடையில்தான் எத்தனை எத்தனை பேச்சுவார்த்தைகள்,
தலையீடுகள்... சர்வதேச ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டங்கள்.. இன்றைய மகிந்த
ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்காவின் அரசின் கீழ் மீண்டும்
ஈழத்தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. சொந்த
மண்ணிலேயே தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அடைந்து வருகின்றார்கள்.
பய்ங்கரவாதததிற்கெதிரான யுத்தமென்ற போர்வையில் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருநாளும்
கொன்றொழிக்கப்பட்டு வருகின்றார்கள். தமிழர்களின் தாயகத்தின் பல பகுதிகள் மீண்டும்
இராணுவப் பாதுகாப்பு வலையமென்ற பெயரில்
ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அமைப்புகளுகிடையிலான பிளவுகளைத் தனக்கு
சாதகமாக்கி ஸ்ரீலங்கா அரசு பிரித்தாளும்
தந்திரத்தைப் பாவித்துத் தனது ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து வருகின்றது.
ஈழத்தமிழர்களின்
மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையினொரு குறீயீடாக இன்று வரலாற்றில் பதிந்து
விட்டிருக்கின்ற கறுப்பு யூலை 1983இனை நினைவு கூரும அதே சமயம் ஒன்றினை மீண்டும்
நினைவு படுத்திக் கொள்வோம். ஸ்ரீலங்கா அரசின் தமிழ மக்கள் மீதான இராணுவச்
செயற்பாடுகள் தொடரும் வரையில் அங்கு அமைதி ஏற்படப் போவதில்லை.
ஈழத்தமிழர்களின் தாயக மற்றும் சுயநிரணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு,
அதனடிப்படையில் சமாதானத்திற்கான யுத்தநிறுத்தச் செயற்பாடுகள் மீண்டும்
சர்வதேசச் சமூகத்தின் ஆதரவுடனும், உத்தரவாதத்துடனும் முன்னெடுகக்கப் படுவதொன்றே
தற்போதுள்ள சூழலில் அரசியல் மோதல்களுக்குள் சிக்கி அல்லலுறும் ஈழத்தமிழர்களின்
வாழ்வில் சிறிதளவாவது அமைதியினைக் கொண்டுவரும். அந்தத் தற்காலிக அமைதியினை
முதற்படியாக வைத்தே சமாதானத்திட்டத்தின அடுத்த கட்டச்
செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் துரதிருஷ்ட்டவசமாக ஸ்ரீலங்கா அரசுகளின்
கடந்தகாலச் செயற்பாடுகள் நம்பிக்கையளிப்பதாகவில்லை. இதனால்தான் எததகைய
சமாதானத்திட்டங்களும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும், உத்தரவாதத்துடனும்
கூடியதாகவிருக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம். கறுப்பு யூலை 1983இனை
நினைவு கூரும் இத்தருணத்தில் ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாகத்
தலைநிமிர்ந்து வாழுமொரு சந்தர்ப்பம் ஏற்பட , ஆரம்பப் படிக்கட்டாக மீண்டும்
அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென வேண்டுகின்றோம்.
-நந்தி
கறுப்பு ஜூலை 1983இனை விபரிக்கும் சில இணையத் தளங்கள்:
http://genocide.org.uk/genocide/?page_id=4
http://genocide.org.uk/genocide/?cat=1
http://www.tamilnation.org/indictment/genocide83/index.htm
http://en.wikipedia.org/wiki/Black_July
http://www.tamilcanadian.com/page.php?cat=145&id=4218
http://www.sangam.org/articles/view2/?uid=463
http://www.hrsolidarity.net/mainfile.php/1999vol09no10/1916/
மீள்பிரசுரம்: நன்றி- பதிவுகள்! |