| 
  செனட்டர் பராக் ஒபாமாவின் வெற்றியும், அமெரிக்காவும், சர்வதேசமும்!
 
   இதுவரையிலான 
  அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் முறையாக வெள்ளையரல்லாத ஒருவர் அமெரிக்க 
  அதிபருக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவு பெற்றுள்ளார். கென்ய 
  நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், அமெரிக்க வெள்ளையினப் பெண்மணியான தாய்க்கும் 
  பிறந்த செனட்டர் பராக் ஒபாமாவே இவ்விதம் வெற்றி பெற்ற வேட்பாளராவார். 
  அமெரிக்காவின் இரு பிரதான இனங்களின் பிரதிநிதியான செனட்டர் பராக் ஒபாமாவின் 
  வெற்றியானது சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு சிறப்பளிப்பதாகும். முன்னாள் 
  ஜனாதிபதியான மிகவும் செல்வாக்குப் படைத்த பிள் கிண்டனின் மனைவியான செனட்டர் 
  ஹிலாரி கிளிண்டனும் மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். அவரை எதிர்த்துப் 
  போட்டியிட்டு வெல்வதென்பது அவ்வளவு இலேசானதல்ல. போட்டியின்போது நிறம், மதம் எனப் 
  பல்வேறு வடிவங்களில் வாரியிறைக்கப்பட்ட அரசியல் சேற்றினையெல்லாம் துணிச்சலுடன் 
  எதிர்கொண்டு மேற்படி வெற்றியினை எதிர்கொண்டுள்ளதே பராக் ஒபாமாவின் சிறப்பாகும். 
  மேற்படி தேர்தல்களில் பல்வேறு மாநிலங்களிலும் கறுப்பின மற்றும் படித்த, பணக்கார 
  வெள்ளையினத்தவர்களெல்லாரும் அதிக அளவில் பராக் ஒபாமாவுக்கு வாக்களிந்திருந்த அதே 
  வேளை, அமெரிக்காவின் 
  மிகப்பெரிய மாநிலங்களிலெல்லாம் செனட்டர் கிளாரி கிளிண்டனே பெரும்பாலான 
  வெள்ளையினத் தொழிலாளர்கள், வயது முதிர்ந்த 
  வெள்ளையினத்தவர்கள், ஸ்பானிஷியர்கள் போன்றவர்களின் ஆதரவினையும் பெற்றுள்ளதும் 
  நோக்கத்தக்கது. மேலும் மேற்படி
  தேர்தலானது இணையத்தின் செல்வாக்கினையும் எடுத்துக் காட்டுகிறது. 'You Tube', Face 
  Book'  போன்ற நவீன இணையத்தின் வளர்ச்சியானது இளம் அமெரிக்கர்களை அதிக அளவில் 
  அரசியல் பக்கம் திருப்பியுள்ளது. இதுவரை காலமும் அரசியலில் சிரத்தை 
  அவ்வளவின்றியிருந்த அமெரிக்க இளஞ்சமுதாயத்தினர் பெருமளவில் பராக் ஒபாமாவுக்கு 
  ஆதரவளித்துள்ளனர். இதுவும் குறிப்பிடத்தக்கதொரு அம்சம். 
 மேற்படி ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 
  செனட்டர் பராக் ஒபாமாவுக்கு 2,149 வாக்குகள் 
  கிடைத்தபோதும் செனட்டர் கிளாரி கிளிண்டனுக்கு 1,925 வாக்குகள் கிடைத்துள்ளதைப் 
  புறக்கணிக்க முடியாது. இது ஜனநாயகக் 
  கட்சியினர் இரு கூடாரங்களாகப் பிரிந்து கிடப்பதையே காட்டுகிறது. இதே நேரத்தில் 
  அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் பராக் 
  ஒபாமாவும், கிளாரி கிளிண்டனும் இணைந்து அதிபர் , துணை அதிபர் பதவிகளுக்காகப் 
  போட்டியிட வேண்டுமெனவும்
  பெரும்பாலானவர்கள் கருதுகின்றார்கள். இவ்விதம் 'கனவுக் கூட்டணியாக (Dream Team)' 
  இணைவதன் மூலம், ஒரு கறுப்பினத்தவரும், வெள்ளையினப் பெண்மணீயும் இணைந்து 
  போட்டியிடுவது அமெரிக்க அரசியலுக்கும், நாட்டுக்கும் மேலும் 
  சிறப்பையளிக்குமெனவும் பலர் கருதுகின்றார்கள். அதே சமயம் இருவேறு கூடாரங்களாகப் 
  பிளவு பட்டிருக்கும் ஜனநாயகக் கட்சியினர் ஒன்றுபட்டு அமெரிக்க அதிபர் தேர்தலை 
  எதிர்கொள்வதற்கும் இது வழிவகுக்குமெனவும் பலர் கருதுகின்றனர். இவ்விதம் இணைந்து 
  போட்டியிடுவது அமெரிக்க அரசியலில் தற்போது வீசும் ஜனநாயகக் கட்சியினருக்கான 
  அலையினை மேலும் அதிகரிக்குமெனவும் கருதப்படுகிறது. கிளாரி கிளிண்டனும் தனது 
  தோல்வியினை உடனடியாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இவ்விதம் துணை அதிபருக்கான 
  வேட்பாளராக பராக் ஒபாமாவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஆதரவாகவே கருத்துத் 
  தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதுவரையில் பராக் ஒபாமாவின் பக்கமிருந்து இதற்குச் 
  சாதகமான பதிலெதுவும் இதுவரையில் வரவில்லை.
 
 ஆயினும் மேற்படி வெற்றியானது தனித்து நின்று எத்தகைய இடர்களையும், அரசியல் 
  சூறாவளிகளையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்று வெல்லும் பராக் ஒபாமாவின் 
  ஆளுமையினை வெளிப்படுத்தியுள்ளது. கிளாரி கிளிண்டனுடன் இணைந்தோ , தனித்தோ 
  போட்டியிட்டாலும் குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோன் மக்வெயினுக்கெதிராக எவ்விதம் 
  கிளாரி கிளிண்டனுக்கெதிராகத் தனது போட்டியினை முன்னெடுத்தாரோ அவ்விதமே பராக் 
  ஒபாமா முன்னெடுப்பாரென எதிர்பார்க்கலாம். வழக்கமாகக் குடியரசுக் கட்சியினர் 
  நாட்டுப்பற்று, இனம் போன்றவற்றை ஆயுதங்களாகப் பாவித்து தேர்தலில் வெல்வது 
  வழக்கம். அத்துடன் எதிரிகளுடனான அபாயங்களைப் பூதாகாரப்படுத்தி, இயலுமானால் அவற்றைக் காரணமாக வைத்து யுத்தங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் அத்தகைய யுத்தங்களை நாட்டின் தேசியப்பாதுகாப்புடன் இணைத்துப் பிரசாரங்களை மேற்கொள்வர். அதன் மூலம் மக்களைப் பயந்ததொரு நிலைக்கு ஆட்படுத்தி மக்களின் நினைவுகளை மழுங்கடித்து , தம்பக்கம் ஈர்த்து வெற்றிக்கொடியினைப் பறிக்க முயல்வர். இன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் ஆரம்பிக்கப் பட்ட ஈராக் யுத்தம் இதற்கு நல்லதொரு உதாரணம். ஆனால் அவற்றை இம்முறை பாவிக்க முடியாது. அவ்விதம் பாவிக்க முனைந்தால் 
  செனட்டர் கிளாரி கிளிண்டனுக்கேற்பட்ட நிலையே ஜோன் மக்வெயினுக்கும் ஏற்படும். 
  ஏனெனில் படித்த , பணக்கார அமெரிக்கர்களின் மற்றும் அண்மைக்காலமாக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் ஆதரவை அவர் இழக்க நேரிடும் அபாயம் 
  அவ்விதமான அணுகுமுறையிலுள்ளது.
 
 இதுவரையில் அரசியலில் இந்தியாதான் இவ்விதமான ஆச்சரியங்களை நிகழ்த்திக் 
  காட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த நரசிம்மராவ், தேவகெளவுடா , 
  மன்மோகன்சிங் எனப் பலரை நாட்டின் சக்தி வாய்ந்த பிரதமர்களாக்கிச் சாதனை புரிந்த 
  இந்தியா இத்தாலியரான சோனியா காந்தியை நாட்டின் பிரதான கட்சியான காங்கிரஸ் 
  கட்சியின் தலைவியாகவும், இன்றைய இந்தியாவின் மிகவும் வலிமையுள்ள அரசியல் 
  தலைவியாகவுமாக்கியுள்ளது. பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகவும், கிளாரி கிளிண்டன் 
  துணை அதிபராகவும் ஆகும் பட்சத்தில் அமெரிக்காவும் இத்தகைய புகழினை அடையும். 
  ஆனால் மேற்படி அரசியல் சாதனை படைத்தபோதும் அயல், உலக சர்வதேச அரசியலில், 
  உள்நாட்டரசியலில் பெரும் மாற்றங்களை இந்தியா அடைந்து விடவில்லை. 
  மாநிலங்களுககிடையிலான அரசியல் 
  முறுகல்கள்,தீணடாமை, வறுமையெனபன தீர்ந்தபாடில்லை. அரசியல், சமூக அமைப்பில் 
  புரட்சிகரமான மாற்றங்களேற்படாதவரையில் 
  இத்தகைய வெற்றிகளெல்லாம் ஆளுமவர்க்கங்களின் சந்தைப்படுத்தும் சாதனங்களாகவே 
  இருந்துவிடும். அமெரிக்காவின் உள்நாட்டு, சர்வதேச அரசியல் அணுகுமுறைகளில் 
  எந்தவிதப் பெரிய மாற்றங்களையும் இவை உருவாக்கி விடப்போவதில்லை. அமைதி நாடி 
  வெற்றிபெறும் தலைவர்கள் பலரின் காலங்களில்தான் யுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. 
  தொடரும் போர்கள், வறுமை, தீண்டாமை போன்ற நவகாலத்து அடிமைமுறை ஆகியனவெல்லாம் 
  தீராதவரையில் மேற்படி வெற்றிகளெல்லாம் விம்பங்களின் ஆதிக்கத்தில் இலங்கும் 
  நவகாலத்தரசியலைச் சந்தைப்படுத்தும் சிறப்புமிகு சாதனங்கள் மட்டுமே.
 
   - நந்திவர்மன் - |