ஓர் அறிமுகம்: 'கண்ணாடி முகங்கள்'
- பாமினி -
அண்மையின்
சூர்யாவின் வெளியீடான கண்ணாடிமுகங்கள் கவிதைத்தொகுதியை காண நேர்ந்தது.
இத்தொகுதியிற்கு தமது பங்களிப்பை வழங்கிய கவிஞைகளில் சிலரை நான் ஒரு தடவை
மட்டுநகரில் சந்தித்திருந்தேன், அப்போது என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தேனோ
தெரியாது, இந்த தடவை கண்ணாடிமுகங்கள் கவிதைத்தொகுதியை வாசிப்பதாக
உறுதியளித்திருந்தேன். அதையாவது செய்யாவிட்டால் நான் ஒரு நல்ல தோழியாக இருக்க
முடியாதல்லவா, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினை வாசகர்களுக்கு நான்
அறிமுகம் செய்ய வேண்டியதில்லை, இந்நிலையத்தின் மூலம் பல பெண்களின் படைப்புக்கள்
வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரிசையில் இந்த ஆண்டு கண்ணாடிமுகங்கள் கவிதைத்தொகுதி
வெளிவந்துள்ளது.
கையடக்கமான கவிதைத்தொகுதி, எழுத்துப்பிழைகளற்ற, நேர்த்தியான அச்சுத்தொகுப்பு,
கனதியான தலைப்பிற்கு பொருத்தமான அட்டைப்படம், உள்ளே நுழைகையில், சித்ரலேகா
மௌனகுரு அவர்களின் முன்னுரை, பார்க்காமலே கடக்க வைக்கிறது. ஈழத்துப் பெண்களின்
படைப்புக்கள் வெளிவரத் தொடங்கி எத்தனையாண்டுகளாகிவிட்டன, எத்தனை கவிஞைகளை ஈழம்
உருவாக்கியுள்ளது, இன்னமும் நாம் பிரபல்யங்களில் தான் தங்கியிருக்கிறோமா என்ற
ஆதங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. கவிதை என்பது விபரிப்புக்களில்
மிகவும் தனித்துவமானதும் தனி மனிதர்களின் தனிப்பட்ட அநுபவங்களாகும். படைப்பாளிகள்
தமது அநுபவங்களை, தம் உணர்வுகளை வாசர்களுக்கு வெளிப்படுத்தும் முயற்சியிது. தமது
உணர்வுகளையும், அநுபவங்களையும் வாசகர்களின் மனக்கண்ணில் தோற்றுவிப்பதற்கு அமைந்த
வகையில் சொற்களை, சொற்கோர்வைகளை, படிமங்களைத் தெரிந்தெடுக்க வேண்டியுள்ளது.
படைப்பாளியினால் கூறப்படும் விடயங்கள் மற்றும் குறிப்புணர்த்தும் விடயங்களை
புரிந்து கொள்ளக்கூடியதாக, உணரக்கூடியதாகவும், படைப்பாளியின் அநுபவம் வாசகர்களின்
மனக்கண் முன் மீளுருவாக்கம் செய்யும் வகையிலும் படைப்புக்கள் அமையும் போது
படைப்பாளி தனது முயற்சியில் வெற்றி பெறுகிறார்.
கண்ணாடிமுகங்கள் கவிதைத்தொகுதியிற்கு தமது அநுபவங்கள் மூலம் விம்பங்களைப்
பதித்திருப்பவர்கள் பதினாறு கவிஞைகள், கவிதைகளின் கருப்பொருள் நான், எனது,
சூழவுள்ளோர், என பரந்து அமைந்துள்ளது.நாட்டின் நிலவும் நச்சுசூழல், நம்பிக்கை,
காத்திருப்பு, ஏக்கம், இழப்பு, நடப்புக்கால அநுபவங்களை பதிவு செய்கிறது
இத்தொகுதி.
கவிதைத்தொகுதி நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கனவு காணும் மனிதரை நிஜ உலகிற்கு
கொண்டுவந்து சோகம் புகட்டி மீண்டும் கனவு காண வைக்கிறது. நிகழும் சம்பவங்கள் மனதை
மிகவும் அவலப்பட வைக்கிறது. தினமும் எதிர்பார்ப்புக்களுடன், நாளாந்த
வாழ்க்கைக்கான போராட்டம், பச்சிளம் சிறுவர், சிறுமிகளை பறிகொடுத்த அன்னையரின்
பரிதவிப்பு, வெளிநாட்டுநிறுவனங்களின் வரைமுறைகளுக்குள் சிக்கித்தவிக்கும் மக்கள்
என்பவற்றோடு நம்பிக்கை துகள்களையும் தாங்கிவரும் கவிதைகள், ஆயுத அரக்கர்களின்
அனர்த்தனம்மிக்க இரவுகள் எனப் பல விடயங்களை ஆழமாகப்பதிந்து செல்கின்றன கவிதைகள்.
கண்ணாடிமுகங்கள் ஈழத்து மனங்களின் உணர்வுகளை அழகாக பதிந்துள்ளது. இவ்வகையான
படைப்புக்கள் மேலும் வெளிவரவேண்டும், சூரியா தனது பணியை செவ்வனே செய்துள்ளது.
கவிதைதொகுதிக்கான அறிமுகத்தை மட்டுமே நான் இங்கு செய்கிறேன். இங்கு நான் ஒரு
விடயத்தைக் கூற வேண்டும். நான் முன்பு வாசித்த கோசம் போடும் தன்மைமிக்கதும்,
பெண்ணுரிமையை வலிந்து நிலைநாட்டுகின்ற செயற்கை தன்மைகளும், அர்த்தமற்ற
அடுக்குமொழியிலான கவிதைகளை உள்ளடக்காது கனதியான நிஜத்தை வெளிப்படுத்தும்
கவிதைகளுடன் கண்ணாடிமுகங்கள் கவிதைத்தொகுதி அமைந்துள்ளது.
bamini18@gmail.com |