பாலேந்திராவிற்கு சுயாதீன திரைப்படக் கழக
விருது! -
ரதன் -
சுயாதீன
திரைப்பட கழகம் 2008 க்கான விருதை திரு. பாலேந்திராவிற்கு வழங்கி கௌரவிக்கின்றது.
ஈழத்தவரின் நாடக இயக்கத்தைத் தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரில்
க.பாலேந்திரா அவர்கள் மிகவும் முக்கியமானவர். கடந்த முப்பது வருடங்களாகத்
தொடர்ச்சியான நாடக மேடையேற்றங்களைச் செய்து வருபவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்
அவைக்காற்று கலைக் கழகத்தின் ஸ்தாபகரான இவர் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட
நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இலண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து,
நோர்வே, டென்மார்க், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தனது நாடக விழாக்களை
நடாத்திய இவருக்கு மழை, கண்ணாடி வார்ப்புகள், முகமில்லாத மனிதர்கள், யுக தர்மம்,
மன்னிக்கவும் போன்ற பல நாடகங்கள் புகழ் சேர்த்தன.
தற்போது இலண்டனில் சிறுவர்களைப் பயிற்றுவித்து மேடையேற்றிவரும் க.பாலேந்திரா
அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக சிறுவர்களுக்கான நாடகப் பள்ளியினை வாரா வாரம்
நடாத்தி வருகின்றார். இதன் மூலம் அரசனின் புத்தாடை, வேடரை உச்சிய வெள்ளைப்
புறாக்கள், தப்பி வந்த தாடி ஆடு, நம்மைப் பிடித்த பிசாசுகள், மலைகளை அகற்றிய
மூடக் கிழவன், அயலார் தீர்ப்பு, பரமார்த்த குருவும் சீடர்களும், ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு, ஒரு பயணத்தின் கதை, பண்டார வன்னியன் போன்ற சிறுவர் நாடகங்களை
மேடையேற்றியுள்ளார்
நாடகத்தைத் தன் வாழ்வாக வரித்துக் கொண்ட க.பாலேந்திரா அவர்களுக்கு அண்மையில்
கலையரசு சொர்ணலிங்கம் விருதான ‘கலா விநோதன்’ வழங்கிக் கெளரவிக்ப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
ரதன்
சுயாதீன திரைப்பட கழகம் சார்பாக
416-450-6833
Rathan@rogers.com |