| சக்தி சக்திதாசன் கவிதைகள்! 
  
  ஏய் உன்னைத்தானே !
 
  காலடிச் சுவடுகள் கண்டாயா ? தம்பி
 கருத்தினை நெஞ்சினில்
 கொண்டாயா ?
 
 நேற்றைய உலகினில்
 தோன்றிய மனிதர்கள்
 தோற்றிய சரித்திரம்
 புகட்டிய பாடங்கள்
 தீட்டிய செவியினில்
 பாய்ச்சிய செய்திகள்
 பூத்திடும் விழிகளில்
 காட்டிய காட்சிகள்
 நெஞ்சினில் நீயும்
 கொண்டாயா ?
 
 நாளத்தில் பாய்ந்திடும்
 
 
  உதிரத்தின் வேகம் உசுப்புகின்ற ஆசைகளை
 உணருகின்ற தருணத்தில்
 உதிர்ந்துவிடும் இலை போல
 முதிர்ந்து விடும் மனம்
 அறிந்து விடு தம்பி
 புரிந்துகொள் உண்மையை
 
 முன்னே
 
 
  நடந்தோர் பாதையை நீ தொடர்ந்திடும் போதிலும்
 மனதினில் கேள்வியை
 அடுக்கடுக்காய் தொடுத்திடு
 கிடைத்திடும் விடைகளை
 தராசிலே நிறுத்திடு
 நீதியின் எடைதனை நீயும்
 ஏற்றியே காத்திடு
 
 உண்மையின் பாதையில்
 
 
  உழைத்திடும் செல்வமே உன்னிடம் உறைந்திடும்
 உள்ளத்தின் சத்தியம்
 இருப்பது அனைத்தையும்
 இழப்பதல்ல உன் தர்மம்
 கிடைப்பதில் ஒரு துளி
 கிடைக்காத உயிர்களுக்கு
 கொடுப்பதில் உள்ள சுகம்
 கொஞ்சமல்ல அறிந்து கொள்
 
 உலகம் என்னும் புத்தகத்தில்
 உனக்கென சில பக்கங்கள்
 புரட்டிப் பார்க்கையில்
 புல்லரிக்கும் வகை செய்திடு
 நாளகள் உன் கையில்
 நல்லவையும் கெட்டவையும்
 நாளைய தலைவர்கள் ஆகிடும்
 தம்பி, தங்கையர் உங்கள் செயல்களில்
 உள்ளத்தில் தெறித்த உணமைத்
 துளிகளை உங்கள் மீதும்
 தெளித்து நான் வாழ்த்தி நின்றேன்
 
 அவளே …. அவளே
 
  நெஞ்சமெனும் வானத்தில் எண்ணமெனும் தூரிகையால்
 வர்ணம் தீட்டிய வானவில்லாய்
 விளைந்து நின்ற பொன்மயிலே
 
 உள்ளமென்னும் தடாகத்தில்
 வெள்ளமான அன்பினிலே
 மலர்ந்து நின்ற தாமரையாய்
 மிதந்த வண்ணப் பூங்கொடியே
 
 பசுமையான இதயத்தினுள்ளே
 பயிராய் வளர்ந்த காதலுக்கு
 மழையாய் உந்தன் புன்னகையால்
 உயிரைத் தந்த மான்விழியே
 
 விரும்பாக் குணங்கள் மலிந்த
 இதயம் இரும்பாய் ஆனவரிடையே
 கரும்பாய் இனிக்கும் பூங்கொடியே
 காதலுக்கு அருமருந்தாய்ச் சுரந்தவளே
 சக்தி சக்திதாசன்http://www.thamilpoonga.com
 *** *** *** வாழ்க்கை - மட்டுவில் ஞானக்குமாரன்.-
 
  கிட்லரும் யேசுவும் எனை சரி சமனாகவே
 ஆட்சி செய்து கொள்கிறார்கள்.
 
 சமனிலை தவறாமல் இருப்பதற்காக
 கடுமையான
 பிராயத்தனங்கள்.
 
 கிட்லரை விடவும்
 யேசுதான்
 அதிகமாக ஆட்சி செலுத்துகிறார்.
 என்னை
 அதனாலே தான் தோள்கள் எங்கும்
 அதீத பாரச் சுமைகள்.
 
 ஆனாலும்
 எங்கோ ஒரு ஓரத்திலே
 கிட்லர் தூங்கிக் கொண்டுதான்
 இருக்கிறான்.
 
 யேசுவாக இருந்து கொண்ட
 பாதி காலங்கள்
 பறந்தன.
 
 மிஞ்சியதெல்லாம் தேய்ந்த செருப்பும்
 சிலுவை தூக்காத
 துன்பமும் தான்....!
 
 maduvilan@hotmail.com
 *** *** *** 
  பொப்பிசைச் சூரியனே!
 - வேதா. இலங்காதிலகம்.
 (ஓகுஸ், டென்மார்க்) -
 
 
   இகலோகம் 
  இணைக்கும் இசையெனும் ஐசுவரியமே! இந்தியானாவில் முளைத்த இனிய இசை விருட்சமே!
 ஆபிரிக்க அமெரிக்கக் குடிமகனே!
 அகிலம் நிமிர்ந்து பார்க்கும் சிகரம் பொப்பிசைச் சக்கரவர்த்தி மைக்கல் ஐhக்சனே!
 வேதனைகளால் திரண்ட விநோதமே!
 வைராக்கிய உரத்தால் வளர்ந்;த
 தைரிய சாதனையாளனே!
 இனிய உன் இசை நடனங்களால்
 எம் நெஞ்சம் கண்களை நிறைத்தாய்!
 அப்பப்பா! எத்தனை விழுதுகள் உன் சாயலில்!
 கை நிறைத்தாய் மில்லியன்களால்!
 பலர் மனம் நிறைத்தாய் உன் தானங்களால்!
 
 திருப்தியெனும் செல்வத்தால் உன் மனம்
 நிறைக்க மட்டும் ஏனோ தவறிவிட்டாய்!
 
 
  உன்னிசை 
  கேட்கும் மக்களின் தசை நார்கள் முறுக்கேறி
 விசை கொண்டு ஆட்டுவிக்கும்
 விந்தை எங்கு கற்றாய்!
 
 ஆடையில் நவீனம்! ஆட்டத்தில் நவீனம்!
 உன் குரலில் ஒரு ஈர்ப்பு!
 அறுபது பாடல்கள் தானாம்! ஆயினும்
 என்னவொரு துறுதுறுப்பு உன்னிசையில்!
 
 
  நிலவு 
  நடையை நிரந்தரமாக்க நிலவுக்கே சென்று விட்டாயா!
 ஐந்தில் அரங்கேறிய பொப்பிசைச் சூரியனே!
 ஐம்பதில் ஆவி பிரிந்தது.
 உன் வாழ்வு ஐந்து தசாப்தம்
 ஒரு அளவெடுத்த காலமோ!
 
 உன்னுடல் அழிந்தாலும் உன்னிசையூற்று அழியாது!
 உலகோரைப் பலவசத்திலாழ்த்தினாய்!
 இனியாவது நீ அமைதி பெறுவாய்!
 உன் ஆத்ம அமைதிக்கு எம் அஞ்சலிகள்!
 
 vetha@stofanet.dk
 
  *** *** *** 
  ப.மதியழகன் கவிதைகள்! ( திருவாரூர் மாவட்டம், 
  தமிழ்நாடு )
 என் தேவதை இருக்குமிடம்
 
 
  பசியடங்க 
  உண்பதெல்லாம் ருசியற்றுப் போனது
 கடந்து செல்லும் பாவைகளிடத்தில்
 உன் சாயல் தெரிந்தது
 திசையெங்கும் உன் வாசம்
 வானெங்கும் உன் எழில் தோற்றம்
 தோட்டத்தில் மலர்ந்துள்ள பூக்களெல்லாம்
 என்னிடத்தில்
 உன்னைப் பற்றி நலம் விசாரிக்கின்றன
 
 'அவள் பொன்மேனியை
 மழையாய் நான் சற்று
 உரசலாமா'- என்று
 கருமேகம் கூட
 என்னைக் கிண்டல் செய்கிறது
 
 'அவள் கைகளில் தவழும் குடையாக
 நீ பிறந்திருந்தால்
 அவள் கூடவே இருக்கலாமென்று'-
 கதிரவன் என்னைப் பார்த்துக்
 கண்சிமிட்டியது
 
 'சொகுசுவாகனம் இல்லையென்று
 கலலைப்படாதே
 மேகங்களில் நீ அவளுடன்
 உல்லாசமாய் ஊர்வலம் செல்லலாமென்று'
 கிளியொன்று பறந்தோடி வந்து
 காதில் கிசுகிசுத்தது
 
 நேற்றிரவு என்னைப் பற்றிய
 நினைவுகளில் ஆழ்ந்து
 அவள் கன்னம் சிவந்ததாக
 வெண்ணிலா என்னிடம்
 ரகசியம் சொல்லிச் சென்றது
 
 'உனக்குறியவளின் மூக்குத்தியாக
 நான் மண்ணில் வந்து
 ஜொலித்திடவா' - என்று
 அனுமதி கேட்டு
 வான் நட்சத்திரங்கள்
 என் வீட்டு வாசலில்
 வரிசையில் காத்திருந்தன
 
 'என்னைப் பற்றிய கனவுகளின்
 இடைவிடாத தொந்தரவுகளால்
 உறக்கம் வந்து அவளைத்
 தழுவுவதே இல்லை' - என
 புவிமகள் வந்து புது செய்தியொன்றை
 விடியலில் தந்தாள்
 
 'தேன்நிலவுக்கு தேவலோகம்
 வந்துவிடுங்கள்' - என்று
 தேவேந்திரன் வேண்டுகோள் வைத்தான்
 
 இந்திரனிடம் நான் சொன்னேன்
 என் தேவதை இருக்குமிடமே
 எனக்குத் தேவலோகமென்று!
 
 சொற்களின் ஜனனம்
 
 
  காற்று 
  வெளியெங்கும் அருவமாய் சொற்கள்
 அலைகின்றன.
 
 மானிடர்கள் எல்லாரையும் ஒரு கருவியாகப்
 பயன்படுத்தி
 தனது ஆளுமையை
 நிலை நிறுத்திக்கொள்ள,
 இருப்புகொள்ளாமல் சதா
 துடிக்கின்றன அவைகள்.
 
 எருதுகள் எழுப்பும் ஓசையும்
 பறவைகளின் கூக்குரலும்
 குழந்தைகளின் மழலையும்
 நிசப்தத்தைக் கலைத்து
 வீதியில் திடீரென கேட்கும்
 சத்தமும்
 ஏதோ ஒரு சொல்லை
 நம்முடைய ஞாபகப்பதிவுகளிலிருந்து
 மீட்டெடுக்கும்.
 
 சொற்களுடன் உறவுகளற்ற
 ஒரு நாள்
 நமது இருத்தலையே சூன்யமாக்கும்.
 
 உடலில் ஓடும் உதிரம் போல
 மனித உயிரின் வாழ்க்கைச் சக்கரம்
 சொற்களுடன் இரும்புச் சங்கிலியால்
 உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
 
 கரையை கடக்கும் புயலால்
 வீசும் பேய்காற்று கூட,
 கண் மூடி கேட்டால்
 'ஓம்' - என்ற
 பிரணவ மந்திரச் சொல்லை
 கட்டற்ற பிறீடலுடன்
 ஜெகமெங்கும் ஒலிக்கச் செய்யும்.
 
 பூமியின் எல்லையில்
 வானுயர நிற்கும்
 ராட்சச சுவரை
 உடைத்தெறியும் நோக்கில்
 ஓர் விடியலில் உதிக்கும்
 உயிர் பயமற்ற தீரனிடமிருந்து
 ஒரு சிறு சொல்.
 
 தேடல்
 
 
  மக்கள் தாங்கள் தேடுவது, புசிப்பது,
 ஆழ்ந்து லயிப்பதனைத்தும்
 அநித்யம் என
 தெளிந்த புத்தியோடு இருக்கின்றார்கள்
 எனவே அவர்கள்
 கி.மு.வில் ஆரம்பித்து
 கி.பி வரையிலும்
 பல நூற்றாண்டுகளாய்
 பிரபஞ்சவெளில் தேடுவது
 நித்யமான பரஞ்சுடர் உடம்பை,
 தானும் நித்யமாக
 வழியொன்று பிறக்காதா?-
 என்ற சுயநலம்
 மறைந்துள்ளது அத்தேடலினூடே...
 
 mathi2k9@gmail.com
 செல்:09952541345
 *** *** *** 
  பிரதீபா (புதுச்சேரி) கவிதைகள்!
 காதல்
 
 
  கதிரவன் ஒளிக்கதிர்களில்
 மலர்ந்த மலரும்
 நானும் ஒன்றென்றாய்.
 உண்மை என்றுணர்ந்தேன்.
 உன் பார்வையில்
 மொட்டாயிருந்த
 நான் மலராய்
 மலர்ந்த மறுகணமே.......
 
 மொழி
 
 
  நாம் 
  உரையாட பல மொழிகள்
 இருந்தும்
 நீயும் நானும்
 தனித்து நிற்கிறோம்
 மௌனமாய்
 நம் இதயத் துடிப்புகள்
 பேசுகின்ற மொழியை
 ரசித்தபடியே...
 
 இதயத்துடிப்பு
 
 
  உன் 
  பார்வை வீசிய காந்த அலைகளில் நனைந்த
 என் மனம்
 என்னுடன் வீடு திரும்ப
 மறுத்து துள்ளி குதிக்கிறது
 என் இதயத்துடிப்பாய்........
 
 மின்விசிறி
 
 
  தூணில் 
  கட்டிவைத்த பிள்ளை விளையாட்டோ,
 நீ சுற்றுவது!!
 மின் தாக்கிப் பலர் மடிய,
 நீ மட்டும்
 அந்தரத்தில் தொங்கி உனக்கு
 உயிர் கொடுத்தமைக்கு
 மின்னுக்கு விசிறி ஆனாயோ....
 
 bradipagen@yahoo.com
 
  *** *** *** 
  மொட்டை மாடி!
 ரூசோ
 
 
  பக்கத்து 
  வீட்டுக்கு பத்திரமான பாதை
 
 பட்ட"த்து மேதைகளுக்கு
 பரிசு மேடை
 
 கதை கேட்க
 காத்திருக்கும் காற்று
 
 காக்கைக்கும்
 காதலருக்கும்
 வேடந்தாங்கல்
 
 சூரியனின் தாகம்
 தணிக்கும்
 மொட்டைமாடியின் ஈரத்துணிகள்
 
 மல்லாந்து படுத்த
 இல்லத்தின் இனிய குடை ..
 
 marine_engineeruso@yahoo.com
 
  'ராம்ப்ரசாத்' (சென்னை) கவிதைகள்!
 திறவாத கதவுகள்...
 
 
  வார்த்தைகளைச் 
  சரமாய்க்கோர்த்து உன் பதில்களுக்கான
 கேள்விகளாக்கி
 அச்சிலேற்றுகிறேன் மின்னஞ்சலில்...
 அவ்வார்த்தைகளின்
 கொல்லைப்புரக்கதவு வழியே
 ஒடுகிறாய்
 தலைவாசல் கதவுகளைத்
 தாழிட்டுவிட்டு...
 திறக்க சாவியின்றி
 தொடர்ந்து தட்டுகிறேன்
 அக்கதவுகளை,
 வெகுநேரமாய்....
 
 
 திடீரென்று அவ்வழியேபோன
 கருத்த மேகத்திலிருந்து
 இறங்கி வருகிறாய்
 ஏதும் நடவாததுபோல்...
 திறவாத கதவுகளைப்பற்றி
 ஏதும் கேளாமல்
 மெளனமாய்த் தொடர்கிறேன்
 உன்னை...
 பின்னாளில் அதே கதவுகளுக்கு
 சாவி நீயே தருவாய்
 என்று...
 
 *** *** ***
 
 தேடல்கள்
 
 
  வார்த்தைகளின் 
  கைப்பிடி இறுகப்பற்றி
 ஊடல் கொண்ட மட்டும்
 உயர்த்திப்பிடித்து,
 பொய்க்கோபம் கொண்ட மட்டும்
 வேகமாய் வீசிக்
 குத்தினேன் உன் இதழ்
 தவறி விழுந்த
 சில பத்திகளை...
 
 தெரித்த வார்த்தைகளில்
 சில சொற்கள்
 மிக அழகாய் இருந்தது...
 தெரிக்காத வார்த்தைகளில்
 அழகை எதிர்பார்த்து
 மீண்டும் குத்த
 எத்தனிக்கையில்
 ஒரு வார்த்தையின் பின்னே
 ஒளிந்து கொண்டாய்...
 
 போட்டிக்கு நானும்
 இன்னோரு வார்த்தையின்
 பின்னே ஒளிய,
 ஒவ்வொரு வார்த்தையாய்
 நீ என்னையும்
 நான் உன்னையும்
 தொடர்ந்து தேடித்தேடி
 எண்ணிக்கையில் பல நூறைக்
 கடந்து கொண்டிருக்கிறோம்
 நமக்குள் நாம் பகிர்ந்துகொண்ட
 இப்படியான தேடல்களை...
 
 *** *** ***
 
 விதவை மறுமணம்
 
 
  வேலியில்லா 
  பூவையும், துடுப்பில்லா மிதவையும்
 போலத்தானிந்த
 மாங்கல்யமில்லா விதவையும்.
 
 இளம்பெண்ணென்றழைத்த
 நாவாலினி கூசாமல்
 கைம்பெண்ணென்றழைக்கும்
 மூட சமூகமினி
 முக்காடிட்டு முகத்தை மூடி
 வெட்கமின்றி அவளை
 இரவுக்குமழைக்கும்
 ஓரக்கண்களால்...
 
 அபசகுனமிவளென்று
 ஒதுக்கிவைக்கும்,
 அவ்வாறொதுக்குவதே தங்களுக்கும்
 அபசகுனமென்றறியாமல்...
 
 நிறங்களை நிராகரிக்கச்சொல்லி,
 உப்பில்லா உணவுண்ணச்சொல்லி,
 நான்கு சுவர்களுக்குள் அடைந்து
 அறுசுவைகளையும் மறந்து
 கைதியைப்போலொரு வாழ்க்கை
 வாழ்ந்தால் மட்டுமே
 உத்தமியென்போமென்கிறது உலகம்...
 
 பட்டமுடித்தபின் பள்ளிப்பாடம்
 என்பதுபோல,
 மணமுடித்து மனவிளிம்புகளையும்
 தாண்டித்தளும்பி நிரையும்
 அன்பை உடலில் ஏந்தி
 பரிமாரப் பழகியவளுக்கெதற்கு
 இந்திரியங்களை அடக்கும்
 பயிற்சி மீண்டும்...
 
 வெம்மையின் வெக்கையுள்ளவரை
 உடல் தடுமாறும்
 உடலில் வேட்கையுள்ளவரை
 மனம் தடுமாறும்,
 வாழ்க்கை தடம்மாறும்.
 மணமுறிந்த பெண்ணுக்கிதனை
 மனமுவந்து அளித்திடவேண்டா.
 
 மறுமணமொன்றே
 ஈடுசெய்யுமவள் இழந்தவைகளை,
 அது முறையாக்குமவள்
 உடல் வேட்கைக்கான வடிகாலை.
 அஃதொன்றே திருப்பித்தருமவள்
 மனம் களைந்தவைகளை.
 
 மணமுறிவென்பதோர்
 பக்கத்தின் முடிவே...
 அத்தியாயத்தின் அடுத்த பக்கங்களில்
 எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்து
 வாழ்க்கைப் புத்தகம்
 தொடரவே செய்யும்.
 அந்தப் பக்கங்களில்
 தன் வரிகளைச்சேர்க்கும் உரிமை
 அவளுக்கும் உண்டு,
 ஓர் ஆணைப்போல...
 *** *** ***
 ரோஜா
 
 
  லட்சங்கோடி மின்னல்கள் ஒன்றுகூடி
 உறுவாக்கிய
 பிரகாசமானதோர் ஒளிப்பந்தாய்
 அண்டவெளிக்கதிரவன்
 பூமித்தாயினுடல் வெப்பந்தன்னை
 ஊடுறுவி வருகிறான்
 அதுகாறும் காத்திருக்கும்,
 விடிகாலை வானுடலின்
 இரத்த நாளத்தில் விரல்
 நுழைத்து குழைத்தெடுத்த
 நிறத்தை ஆங்காங்கே
 சிதறலாய்த் தூவியிருக்கும்
 வெஞ்சிவப்புத்தாமரை,
 ஆரவாரித்தெழுகின்ற சலசலப்பில்
 அதிர்ந்தெழும் ரோஜாப்பூக்கள்...
 
 அத்திவ்வியதருணத்தில்
 வீசுங்காற்றின் மெல்லிசையில்
 கண்விழித்து
 சன்னல் வழியே, தென்றலை
 சிறையெடுத்து
 பட்டுத்தாவணி புனைந்துடுத்திய
 வஞ்சியவள் எட்டிப்பார்க்கிறாள்...
 
 அதிர்ந்தெழும் ரோஜாப்பூக்களை
 கானல் நீர் உருவாக்கும்
 காட்சிப்பிழைதான்
 எனக்கொள்ளும் தாமரையினி
 ரோஜாவென்றாலது அவள்
 மட்டுமே என்றே கொள்ளுமே...
 
 *** *** ***
 
 நதிகள் இணைப்பு...
 
 
  வெள்ளைப் 
  புடவை, திருநீர் அமர்ந்த
 நடு நெற்றி,
 குலுங்காத வளை,
 கலையாத மெளனம்.
 நீரின்றி இப்படியிருக்கும்
 எந்த நிலமும்
 காய்ந்த பயிறும்
 ஒட்டிய வயிறுமாய்,
 வரண்ட நதியும்
 திரண்ட புழுதியுமாய்,
 வெடித்த பாறைகளும்
 தடித்த வரட்சியுமாய்...
 
 பாரம்பரியம் பேணி
 கலாசாரம் வளர்த்து
 அமைத்தோம் நம்மைச்சுற்றி
 ஓர் அரண்...
 இடைவேளியின்றி நடப்பட்ட
 மரக்கன்றுகள் வளர்ச்சி போல்,
 வரட்சியின் மறுபக்கம்
 வெள்ளமாய் ஏனிந்த முரண்...
 
 பூமித்தாயின் குருதி
 ஓடும் நாளங்கள்
 அல்லவோ நதிகள்...
 இயற்கை அன்னையின்
 உயிர் சுமக்கும்
 நரம்புகளல்லவோ நீர்நிலைகள்...
 அவள் பசி தீர்க்கும் ஆகாரம்
 இந்த நீர் ஆதாரம்....
 
 ஐந்தறிவு காக்கைகள் கூட
 இருக்கும் உணவை
 பகிர்ந்துண்ணும் போது
 இயற்கை அன்னை
 மடிசுரக்கும் அமிர்தநீரை
 அவள் பிள்ளைகள் நாமே
 பகிர்ந்து கொள்ள
 மறுப்பது சிறுபிள்ளைத்தனம்...
 கட்டுக்குள் அடங்காத
 நீரை எல்லைகளிட்டு
 அடக்க முயல்வது
 அறிவீனம்...
 எவ்வித நிறமுமில்லாத
 நீருக்கு அரசியல்
 சாயம் பூசுவது ஈனம்...
 நாட்டிற்கு பொதுவான
 நீரை பகிர மறுப்பதும்
 ஒரு வகையில் ஊனம்...
 
 ஊர் கூடுவோம்
 ஒன்றுபடுவோம்
 பெருநிதி திரட்டுவோம்
 நதிகளை இணைப்போம்
 நாடெங்கிலும்
 ஏர் பூட்டுவோம்
 உழுது உரமிடுவோம்
 பயிர் வளர்ப்போம்...
 உண்டது போக எஞ்சியதை
 ஏற்றுமதி செய்வோம்...
 பதிலுக்கு,
 அடிமைப்பட்டிருந்த காலத்தில்
 பகல் கொள்ளைபோன
 நம் சொத்துக்களை
 இறக்குமதி செய்வோம்...
 வளர்ந்த நாடுகளின்
 பட்டியலில் நாமும்
 முதலிடம் பிடிப்போம்...
 
  ashwin_i1980@yahoo.co.in |