இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை

குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்(படக்கவிதை - பார்க்கச்சுவை - கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது)'அன்புடன்' குழுமம் நடத்திய படக் கவிதைக்கான போட்டி முடிவுகளை வெளியிடும் இந்நேரம் போட்டி குறித்த நடுவர்களின் அனுபவங்களையும், போட்டியாளர்களுக்கான சில குறிப்புகளையும் வழங்கினால் அடுத்த முறை போட்டியில் கலந்து கொள்பவர்கள் பயன் பெறக்கூடுமென்று அன்புடன் நிர்வாகம் கருதியதால், போட்டி குறித்த எனது வாசிப்புரையை இங்கே தருகிறேன்.

ஒரு முக்கியமான விசயத்தை முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்.

நிறைய இளம் எழுத்தாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட போட்டி. 150க்கும் மேற்பட்ட படைப்புகள். 10 படங்களுக்காக எழுதப்பட்ட கவிதைகள். வித்தியாசமான படங்கள். அழகான படங்கள். நிறைய பாடுபொருளை கவிஞர்களுக்குள் தோற்றுவிக்கக் கூடிய படங்கள் என்பதால் மிகுந்த ஆர்வமாகத்தான் இருந்தது எனக்கும். ஆனால்.......

கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் எழுதப்படக்கூடியதுதான் என்பது போன்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது என்பதை இந்தப் போட்டி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் போல மூச்சு விட அவகாசமின்றி நீண்டு போகின்ற கவிதைகளைக் காண நேரும்போது இயேசுநாதரைப் போல 'கர்த்தரே! இவர்களை மன்னியுங்கள். இவர்கள் செய்வதென்னவென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அதற்காகக் கவிதைப் போட்டியே பிரார்த்தனை கூடம் போல மாறிவிட்டது கொஞ்சம் அதீதம்தான்.

கவிதை - உணரப்படுவது. உணர்த்தப்படுவது அல்ல என்பதை உணர மறுப்பவர்கள் வார்த்தைகளின் ஊர்வலங்களை ஒழுங்கின்றி அமைத்துவிட்டு கவிதை எழுதுவதாகக் காட்டிக் கொள்ள விழைகிறார்கள் என்பதுதான் பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதாக அமைந்திருந்தன பெரும்பாலான கவிதைகள்

கவிதை அதன் நீளத்தில் இல்லை மாறாக அதன் செறிவில் பொதிந்து கிடைக்கிறது. மொட்டாக இருக்கும் அந்த உணர்வு வாசிப்பவனின் மனதிற்குள் நுழையும்போது மொட்டவிழ்ந்து மலர்ந்து ஒரு அனுபவரீதியான மலராகிறது. இந்த மலரின் நுகர்ச்சிதான் கவிதையின் வெற்றியாகக் கூட இருக்க முடியும். சில சமயங்களில் மொட்டவிழாமலேயே போகக் கூடும். சில மலர்கள் மணம் தராமல் வெறும் அழகினை மட்டும் தரலாம். சில அழகின்றி இருந்தாலும் அடர்த்தியான மணம் தரக்கூடும். மலர்களின் குணங்கள் வேறாக இருப்பினும் அது தரும் ஆனந்தமே தனி. கவிதையும் ஏறக்குறைய அதுபோலத்தான். வலியச் சென்று மொட்டவிழ்க்கும்போது அது ஏறக்குறைய இல்லாமலேயே போய்விடும் சாத்தியங்களே அதிகம்

இனி படக் கவிதைகளுக்கு வரலாம். இது ஒரு புதிய முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக கவிஞர்களுக்கு இயற்கை மேல் அலாதியான காதல் இருக்கும். சமூகக் கோபம் கொண்ட கவிஞர்களும் கூட ஏதேனும் காட்சியை மனதில் கொண்டே கவிதையை வெளிப்படுத்துகிறார்கள். ஆக, காட்சியும் கவிதையும் ஒன்றோடொன்று இணைந்ததுதான். அதில் மாற்றமில்லை. ஆனால், அவ்வாறு எழுதப்படும் கவிதைகளுக்கான காட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த கவிஞர்களுக்கே இருக்கும். சில காட்சிகளைப் பார்க்கும்போது "அடடா! நான் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் இதனை கவிதையாக்கியிருக்கலாமே?' என்று கூடத் தோன்றும்.ஆனால், அதையே ஒரு காட்சிப்படமாக்கி நண்பனிடம் கொடுத்து கவிதை புனையச் சொன்னால் எப்படியிருக்கும்? இதை மனதில் கொண்டுதான் சில அழகான புகைப்படங்களை முன்னிறுத்தி அவற்றுக்கான கவிதைகளை வரையச் சொல்லி புதுமையான கவிதைப் போட்டிக்கு அன்புடன் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.

ஏதேனும் ஒரு படமாக மட்டுமே இருந்தால் அது ஒரு கட்டுக்குள் அடங்கி விடக்கூடுமென்பதால் வித்தியாசமான காட்சிகளைக் கொண்ட பத்து படங்களைத் தந்து கவிஞர்கள் தத்தமது கோணங்களுக்குள் காட்சியை உளவாங்கிக் கவிதை வடிக்கக் கேட்டிருந்தார்கள்..

சாதாரணமான கவிதைப் போட்டி எனும்போது தலைப்பு வழங்கப்பட்டிருக்கும். அல்லது தலைப்பை நாமே வழங்கிக் கொண்டு எழுதலாம். இங்கே படம் கொடுக்கப்பட்டிருப்பதால் அதுதான் தலைப்பு. ஒரு படம் ஒரு செய்தியைத்தான் சொல்ல வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு படம் நூறு செய்திகளைச் சொல்லும் என்பதால் படக் கவிதைகள் தலைப்பு என்ற நெருக்கடிக்குள் கவிஞனைத் தள்ளுவதில்லை. ஆனால், படத்தை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோமோ அவ்வாறேதான் நமது கவிதையும் உருவாகும்.

உதாரணமாக படம் எண் ஒன்றை எடுத்துக் கொண்டால் இரு கரங்கள் ஒன்றையொன்று தொட முயல்வதாக ஒரு காட்சி. இந்தக் காட்சி சாதாரணமாக உள்வாங்கிக் கொள்ளப்படும்போது 'தொடுதல்' என்பது மட்டுமே புலப்படும். அதையே 'தொட முடியாதவனின் ஏக்கமாக' காட்சிப்படுத்தினால் வரும் கவிதையின் அடர்த்தியே வேறாக இருக்கும். அதையே தீண்டாமையாகவும் பார்க்கலாம். தொடுதல் என்பதை ஒரு குறியீடாகக் கொண்டு புதிய படிமங்களையும் உருவாக்கிப் பார்க்கலாம். ஆனால், அப்படி எதுவும் நிகழாமல் நேரடியான பொருளிலேயே காட்சியைப் பார்ப்பதால் பெரும்பாலான கவிதைகள் நீர்த்துப் போய்விட்டன.

தாஜ்மஹாலை அற்புதமான காதல் சின்னமாகவும் பார்க்கலாம். எத்தனை ஏழை உழைப்பாளிகளின் வியர்வை என்றும் பார்க்கலாம். ஏன் இத்தனை ஆடம்பரம் என்றும் கேட்கலாம். ஏழ்மைக் காதலர்களின் மேலான எள்ளி நகையாடல் என்றும் விமர்சிக்கலாம். அது அவரவர் சிந்திக்கும் கோணத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையையும், வாசிப்பறிவின் சக்தியையும் பொறுத்தது.அது காட்சிப்படுத்துதலுக்கும், கவிதைக்கான பாடுபொருளை ஏற்றுக் கொள்வதற்கும் மட்டும்தான்.

ஆனால், கவிதை என்று வந்த பிறகு அதில் எவ்வித சமாதானமும் செய்து கொள்ள வேண்டியதில்லை. கவிதை சொற்செறிவும், வார்த்தை சிக்கனமும், பாடுபொருளைத் தெளிவாகச் சொல்வதாகவும், சொல்ல வந்ததை நேரடியாகவோ, உட்குறியீட்டு வழியாகவோ வாசகனுக்குக் கடத்துவதாகவும், கவிஞனின் உணர்வுகளை வாசகனிடமும் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

செங்கல்லை அடுக்கி அடுக்கி வீடு கட்டுவது போல கட்டுவதல்ல கவிதை. மாறாக, தேவையற்ற பாகங்களைக் கல்லிலிருந்து செதுக்கி அகற்றி சிலையாக உருவாக்குவது போல தேவையற்ற வார்த்தைச் சடலங்களை அகற்றி இருக்கும் வார்த்தைகளுக்கு உயிர் தருவதுதான் கவிதை.

இத்தனை சிரமங்கள் இருப்பதாலேயே கவிதை உரைநடையை விட கடினமானதாக, உரைநடையை விட போற்றப்படக் கூடிய இலக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு இலக்கிய முயற்சியை மேற்கொள்ளும்போது அதற்கான தனியான பயிற்சியும், முயற்சியும் அவசியம்.
இந்தப் பயிற்சியும் முயற்சியும் அதீதமான வாசிப்பனுவங்களால் கிடைக்கக் கூடும். பல்வேறு விதமான உத்திகளைக் கொண்ட கவிதைகளை வாசிக்க நேரும்போது, கவிதை தொடர்பான தொடர் விவாதங்களில் ஈடுபடும்போது கவிதை என்னவென்பது புலப்படக்கூடும். அப்படியில்லாமல், ஏதோ நண்பர்கள் பாராட்டிவிட்டார்கள் என்பதோடு நிறுத்தி விட்டால் கவிதையைப் புரியாமலேயே கவிதை எழுதும் நிலைதான் ஏற்படும். அதனைத்தான் இந்தப் போட்டியும் ஒருவகையில் மெய்ப்பிக்கிறது.

பெரும்பாலான கவிதைகள் சொல்ல வந்ததை சொல்லிக் கொண்டே............ இருக்கின்றன. எங்கே நிறுத்துவது, எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்பது பற்றிய தெளிவான சிந்தனை இல்லாமல் எழுதப்படும் கவிதைகளை எளிதில் அடையாளம் காண முடியும். வார்த்தைகளுக்குள் பொருள் புதைக்கும் சூட்சுமம் புரிந்து கொண்டால் கவிதை அழகுபெறும். ஆனால், அழகியல் மட்டுமே கவிதையா என்றால் இல்லை. சமூகக் கோபமும், தனிமனித உணர்வுகளும், காட்சிப்படிமங்களூம், இயற்கை அழகுகளும், அன்றாட நிகழ்வுகளுமே கூட கவிதைகளுக்குக் களமாக அமையும் . ஆனால், அவற்றைச் சொல்லும்போது சுவையாக, தெளிவாக, எளிமையாக, செறிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டூம்.

சில கவிதைகள் நாட்டுப்புற பாடல்களைப் போல் இயல்பான நடையில் அமைந்திருந்தது அழகுதானென்றாலும் பாடுபொருளிலும் கொஞ்சம் அழுத்தம் சேர்ந்திருக்கலாம். நாட்டுப்புறப் பாடல்களைப் போல வழக்கு மொழியிலும் சில கவிதைகள் இருந்தன. இம்மாதிரியான பாடல்களில் இயல்பாகவே ஒரு சந்த லயம் இருக்கும். ஆனால் அதனை கவிஞர்கள் தவற விட்டிருந்தார்கள். சில கவிதைகள் செறிவாக இருந்தன.ஆனால் தலைப்போடு ஒன்றவில்லை. ஒரே ஒரு கவிதை மட்டுமே கொஞ்சம் அங்கதச் சுவையோடு இருந்தது. சில கவிதைகளில் கருத்துக்கள் செறிவாகவும் சொல்லப்பட்ட விதம் சொதப்பலாகவும் இருந்தன. சில கவிதைகள் என்ன சொல்வதென்றே தெரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தன.புதிய நீதிக்கதை ஒன்றை வெகு நீளமாகச் சொன்னதால் சொல்ல வந்ததை நீர்த்துப் போகச் செய்தது ஒரு கவிதை. இப்படி பலவிதமான கவிதைகளைப் படிக்க நேர்ந்தது ஒரு வித்தியாசமான, மகிழ்ச்சியான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அந்த மகிழ்ச்சியிலும் கவிதை குறித்த உணர்வின்றி எழுதுகிறார்களே என்ற வருத்தமும் கலந்தே இருந்தது.

முகம் தெரியாத இந்தக் கவிஞர்களின் ஆர்வத்தையும், அவர்களுக்கு வாய்ப்பளித்து இப்படி ஒரு போட்டியை நடத்திய அன்புடன் குழுமத்தையும் பாராட்டுவோம். வெறும் இயல் கவிதைகளோடு நின்று விடாமல் காட்சி, ஒலி என்று பல்வேறு புதிய முயற்சிகளுக்கும் இடம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மரபுக்கவிதைகளுக்கும் ஒரு போட்டியை ஏற்படுத்தியிருக்கலாம்.. இளம் கவிஞர்களுக்கு ஒரு மேடை அமைத்துத்தர முயலும் அன்புடனின் முயற்சிகள் தொடரட்டும்.

இனி கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகளுக்கு வரலாம். பத்து படங்கள் தரப்பட்டபோதும் முதல் படம் மட்டுமே அனைவரையும் எழுத வைத்திருக்கிறது என்று சொல்லிவிடலாம். அநேகமாக முதல் படத்திற்கு எழுதப்பட்ட கவிதைகள்தான் ஓரளவுக்கேனும் கவிதை வாசிப்பனுவத்தைத் தந்தது எனலாம்.மற்ற படங்களைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில கவிதை வரிகள் சிலிர்ப்பூட்டினாலும் ஒட்டு மொத்தமாகக் கவிதை என்ற அளவில் சில கவிதைகள் ஈர்க்கத் தவறிவிட்டன.

கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நடுவர்களுக்குப் பெரிய சிரமம் இல்லையென்று சொல்லியிருந்தேன்.ஆனால் அது முதல் சுற்றில் மட்டும்தான். இரண்டாவது சுற்றுக்கு வரும்போது வெறும் 20 கவிதைகளாக அவை சுருங்கிவிட்டன. இந்த இரண்டாம் கட்ட தேர்வு மீள்வாசிப்பிற்கும், கவிதைகளை இன்னமும் இணக்கமாக அணுகுவதற்கும் பேருதவியாக இருந்தது. மீள்வாசிப்பின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கவிதைகளின் மீது மீண்டும் வாசிப்பு செய்து அந்தக் கவிதைகளை அவை படக்காட்சியோடு உடன்படுகிறதா என்ற காரணத்திற்காகவும், கவிதைச் செறிவுக்காகவும், மொழிநடைக்காகவும் மீண்டும் மீண்டும் வாசித்தபின் இந்த முடிவுகளுக்கு வந்தோம்.

வறண்ட மார்புடன்
வானம் பார்த்த பூமி
ஏங்கிக்கிடக்கிறது,
பானையிலிருந்து சிந்தும்
ஒரு துளி நீருக்கு!

தனியாக விளக்கிச் சொல்ல ஏதுமில்லாத வெளிப்படையான கவிதை. நான்கு பக்கத்திற்கு நீட்டி முழக்காமல் நான்குவரிகளில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இது கவனத்தை சட்டென்று ஈர்த்து விடுகிறது. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் கவிதையில் முக்கிய பங்கு வகிக்கிறது - . எவ்வளவு நீளமாகச் சொல்கிறோம் என்பதல்ல என்பதை நிரூபித்த கவிதை. அழகான காட்சிப்படுத்துதலைக் கையாண்டிருக்கும் இந்தக் கவிதை மண்ணடி நீரை மனிதன் உறிஞ்சி மண்ணையே தாகத்தால் தவிக்க வைத்திருக்கும் விசயத்தை சூசகமாக எடுத்துரைக்கிறது.
ஆறுதல் பரிசைப் பெறுகிறது இந்தக் கவிதை

"தொட்டு விடு!"

பூமி
எத்தனை முறை
மரண தண்டனை வழங்கினாலும்
அழியாமல் இருக்கும்
மனித விதையை யார் போட்டது!

அவன்
தொட்டுத்தொட்டுத் தொடங்கிய
தொடர் ஓட்டத்தை யார் தொடங்கியது!

தொடுவதுதான் வேற்றுமையை
விடுவதின் தொடக்கம் என்பதால்
தொடுவோம்!

தவறுகளை
சுட்டிக்காட்டுவதற்குதான்
விரல்கள் என்று யார் சொன்னது!
உறவுகளை ஒட்டிப் பார்ப்பதற்கும்
தொடுவதுதானே தொடக்கம்!

தீண்டாமையைக் கொளுத்தும்
தீக்குச்சிகளாய் விரல்கள் மாறட்டும்!
ஏனென்றால்
தொடுவது இருக்கும் வரைதான்
இந்த மண்ணில்
மனித நேயம் இருக்கும்!-அதனால்
தொடுவோம்! (47அ)

எதையும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும் அவசியமில்லாத எளிய கவிதை. கவிதைகள் எதனை வேண்டுமானாலும் பாடலாம் என்றிருப்பினும் அதன் ஆதாரமாக நம்பிக்கைகளையும் மனிதருக்குள் விதைக்கும் போக்கை ஆதரிக்காமல் இருக்க முடியாது. இங்கே தீண்டாமை பற்றித்தான் பேச்செழுகிறது. தீண்டாமையைக் குறைக்க தீண்டுதல் போல சிறந்த வழி வேறில்லை என்று சொல்லியிருக்கும் அழகில் இருக்கும் எளிய முரண் இந்தக் கவிதைக்கு அழகு சேர்க்கிறது. இரு கைகள் தொடமுயலும் ஒரு படத்தை வைத்துக்கொண்டு தொடுதலையும், விலகலையும் கவிதையின் ஒரே புள்ளியில் கொண்டு வந்ததற்காகக் கவிஞருக்கு சிறப்பு பாராட்டுதல்கள். இந்தக் கவிதையும் ஆறுதல் பரிசுக்கான தகுதி பெறுகிறது.

படம்# 7 - "குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்"

குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?
பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்!

இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே!
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்...
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்...!

மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம் !

ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே...!

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்...
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்...!

தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது;
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்!

ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று...
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை...!

'கவிதைக்கான ஜீவன் அதன் கடைசி வரையில் ஒளிந்து கிடக்கிறது' என்று நண்பர் யுகபாரதியை நேர்முகம் காணும்போது சொல்லியிருந்தார். அது தொடர்பான கேள்விகள் எஞ்சியிருந்தபோதும் சில கவிதைகளின் கடைசி வரிகளில் தரும் அதிர்வு கவிதைக்கான முழுப்பரிமாணத்தையும் எளிதில் வாசகனிடம் கடத்திச்சென்று விடுகிறது.. உலகமயமாதல், உற்பத்தி பெருக்குதல், இயந்திரமயமாக்கல் என்று மனிதர்கலின் சுயநலங்களால் பூமியின் நீர்வளங்கள் உறிஞ்சப்படும் இன்றைய நிலையை மனதில் வைத்து நாளைய சந்ததியினரைக் குறித்த கவலையாக எழும் இந்தக் கவிதையின் நன்னோக்கம் கவிதையின் மேல் மதிப்பேற்படுத்துகிறது. இன்னமும் நீளத்தைக் குறைத்து வார்த்தைகளைச் செப்பனிட்டு செறிவாக்கியிருந்தால் முதல் பரிசை வென்றிருக்கும் இந்தக் கவிதை. ஆனால், இந்தக் குறைபாடுகளுக்காக இரண்டாவது பரிசைப் பெறுகிறது. உலகளாவிய நீர்வள ஆதாரத்தை முன்னிறுத்திய கவிஞருக்கு வாழ்த்துகள்!!

"ஒரு மனைவியின் விடைபெறல்"

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்...

நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்...
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு!

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை...
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்!

எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!

வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து...!

இதுவும் ஒரு அலாதியான சிந்தனைதான். நேசமானவர்களாக இருந்து பிரிவதின் ரணமும் வேதனையும் உலகில் வேறெந்த வலியோடும் ஒப்பிட முடியாது. காதலிக்கும் காலங்களில் புலப்படாத எதிர்குணங்கள் சேர்ந்து வாழும்போது தென்படும்போது விரிசல்கள் இயற்கை. அந்த விரிசல்களை வெல்வதாய் அமையாத நேசம் விடைபெறலில் மட்டுமே முடியும். அந்த விடைபெறலுக்கான காரணமும் 'புராதன மூளை'யின் வெளிப்பாட்டால் விளைந்தது என்பதைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் மனதைரியமும், அடங்கிக் கிடந்தேனும் மீதி வாழ்வைக் கழிக்கத் தேவையில்லாத பெண்ணியச் சிந்தனையும் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது செறிவான எளிமையான வார்த்தைகளின் வழியே

எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!

இந்த வார்த்தைகள் சொல்லிவிடுகின்றன பிரிவிற்கான கசப்புணர்வுகளை. இதனை விலாவாரியாகச் சொல்லிக் கொண்டு போய் வாசகனை அயர்ச்சிக்குள்ளாக்கும் பணியைக் கவிஞர் செய்யவில்லை. என்ன நடந்திருக்கலாம் என்பதை வாசகனுக்கு விட்டுச் சென்று விடுகிறார் கவிஞர்.
என்றாலும்,

கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து...!

என்ற வார்த்தைகளின் பின்னிருக்கும் கண்ணீர்ச்சுவையை உணர முடிகிறது நம்மால். இன்னமும் நிழலாடுகிறது அவன் மேலிருக்கும் நேசம். இருந்தாலும் கணவனான பின் அவனது ஆணாதிக்கச் சிந்தனைகளால் அடிமைப்பட முடியாமல் விலகுகிறாள் அவள். விலகும்போதும் அவளால் தன் பழைய நினைவுகளை அகற்ற முடியவில்லை மனதிலிருந்து - மீண்டும் கைகுலுக்க அவளால் முடியும் - கணவனாய் அவன் இருந்த கசப்புகளை மறக்கும்போது மட்டும்.

கவிதை உணர்த்தப்படுவது என்பதை இந்தக் கவிதை ஓரளவு செம்மையாகவே செய்திருக்கிறதென்றே சொல்லலாம். தொடுகையை எல்லாரும் யோசிக்கும்போது ஒரு விடைபெறலுக்கான கடைசி கைகுலுக்கலாக இதனைப் பார்த்திருப்பதற்காகக் கவிஞருக்கு பாராட்டுதல்கள். எல்லாருக்கும்தான் பார்வை இருக்கிறது. ஆனால் காணும் காட்சி என்ன என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம். நல்ல காட்சியைக் காண விழைந்த கவிஞருக்கு வாழ்த்துகள். ஆகவே, இந்தக் கவிதை முதல் பரிசைப் பெறுவதில் வியப்பேதுமில்லை.

இதே கவிஞரின் புதிய நீதிக்கதையும் ரசிக்கும்படியாக இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

..........
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!

என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் - சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று!
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்...!

கவிதைப் போட்டி என்பது எழுதத் தூண்டும் ஒரு முயற்சிதானே தவிர இந்தப் போட்டி முடிவுகளே முழுமையானதென்று யாரும் கருத அவசியமில்லை. ஒரு போட்டியில் விளையும் கவிதைகளை விடவும் நல்ல கவிதைகளை இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்கள் படைத்திருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் படைக்கலாம்.ஆகவே இந்தப் போட்டியை ஒரு சுய பரிசோதனைக்கான களமாக மட்டும் எடுத்துக்கொண்டு உங்கள் எழுத்து முயற்சிகளில் மேலும் தொடருங்கள். நல்ல கவிதைகளைத் தேடித்தேடி படியுங்கள். நல்ல கவிதைகளைப் பற்றிய விவாதங்களை உங்களுக்குள் நிகழ்த்துங்கள். கவிதைக்கான தளத்தில் கலந்தாலோசனை செய்யுங்கள். நல்ல கவிதைகள் படைத்து உங்களுக்கென ஒரு பெயரை உருவாக்குங்கள்.

இந்தப் போட்டியில் என்னோடு இணைந்து தேர்வாளர்களாக செயல்பட்ட அன்புச் சகோதரர்கள் பாலபாரதி மற்றும் அகிலனுக்கு என் இதய நன்றி!! மிகக் குறைந்த கால அவகாசமே வழங்கி அவர்களைத் தொந்தரவு செய்தபோதும், கவிதைகளை மீள்வாசிப்பு செய்து மதிப்பெண் வழங்கக் கூறியபோதும் அவற்றை சரியாகச் செய்து தந்து கவிதைகளை தேர்ந்தெடுக்க எனக்குப் பேருதவியாக இருந்த அவர்களுக்கு நன்றி!!

கவிதைப் போட்டிகளுக்காக மிகப்பெரும் களம் அமைத்து அந்தக் களத்தில் எல்லாக் கவிஞர்களையும் எழுதத் தூண்டி இந்தப் போட்டியை மிகப் பெருமளவில் விளம்பரம் செய்து சிறப்பாக நடத்தியதிலும். நடுவர்களுக்கான உதவிகளையும், ஏற்பட்ட ஐயங்களுக்கான தெளிவை நல்குவதில் காட்டிய துரிதத்தையும், நல்ல கவிதைகளே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதற்காக காட்டிய முனைப்பினையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அன்புடனில் அதிகம் எழுதாமல் ஒதுங்கி இருந்தபோதும் கூட இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த அன்புச்சகோதரனும் கவிஞனுமான ப்ரியனுக்கும், அன்புடனை சிறப்பாக வழிநடத்தும் புகாரிக்கும், சேதுக்கரசிக்கும் அன்புடன் குழும உறுப்பினர்ளுக்கும் எனது வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஆசிப் மீரான்

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - படக்கவிதைப் பிரிவு

நடுவர்கள்: ஆசிப் மீரான், துபாய்; யெஸ். பாலபாரதி, சென்னை; மற்றும் இன்னொருவர்

படக்கவிதை - பார்க்கச்சுவை - கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது

முதல் பரிசுக்குரிய படக்கவிதை

"ஒரு மனைவியின் விடைபெறல்"

ஒரு மனைவியின் விடைபெறல்
 

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்

நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை...
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்

எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா

வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து...!

- மேரித் தங்கம்
சென்னை


(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

இரண்டாம் பரிசுக்குரிய படக்கவிதை

"குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்"

"குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்"

குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?

பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்

இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்

மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம்

ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்

தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்

ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை

- சோ. சுப்புராஜ்
துபாய்


(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை

"தொட்டுவிடு"


ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை

பூமி
எத்தனை முறை
மரண தண்டனை வழங்கினாலும்
அழியாமல் இருக்கும்
மனித விதையை யார் போட்டது

அவன்
தொட்டுத்தொட்டுத் தொடங்கிய
தொடர் ஓட்டத்தை யார் தொடங்கியது

தொடுவதுதான் வேற்றுமையை
விடுவதின் தொடக்கம் என்பதால்
தொடுவோம்

தவறுகளை
சுட்டிக்காட்டுவதற்குத்தான்
விரல்கள் என்று யார் சொன்னது
உறவுகளை ஒட்டிப் பார்ப்பதற்கும்
தொடுவதுதானே தொடக்கம்

தீண்டாமையைக் கொளுத்தும்
தீக்குச்சிகளாய் விரல்கள் மாறட்டும்
ஏனென்றால்
தொடுவது இருக்கும் வரைதான்
இந்த மண்ணில்
மனித நேயம் இருக்கும் - அதனால்
தொடுவோம்!

- மு. பாண்டியன்
நெய்வேலி

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)


ஆறுதல் பரிசுக்குரிய படக்கவிதை


வறண்ட மார்புடன்
வானம் பார்த்த பூமி
ஏங்கிக்கிடக்கிறது
பானையிலிருந்து சிந்தும்
ஒரு துளி நீருக்கு!

- கே.வி. உஷா
சென்னை

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner