இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2007 இதழ் 90  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அறிவித்தல்!
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!

 - கவிஞர் புகாரி

கவிஞர் புகாரிஅன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கிக் கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறன. அதில் இவ்வாண்டின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இதோ இதோ வந்துவிட்டது.... மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும் நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அதை விட, போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா, பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார், எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வு செய்தார் என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.

http://groups.google.com/group/anbudan

அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம். அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 758 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள், 66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது. தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன. எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.

அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன. அன்புடன் சுடரோட்டம் - ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது. அன்புடன் தித்திப்பு யுத்தம் - நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது. அன்புடன் பட்டிமன்றம் - நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது. அன்புடன் கவிதைப் போட்டிகள் - இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்...

அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராகக் கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்றுத் தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார். துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும் மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி சேதுக்கரசி செய்து வருகிறார்.

போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக நடுவர்கள் யார் யார் என்று அறிவிக்க வேண்டாமா?

கவிதைப் போட்டிகளை ஐந்து வகையாகப் பிரித்துப் போட்டி வைத்தோம்.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை - கவிதையை யுனித்தமிழில் தட்டச்சு செய்து தரவேண்டும்.
2. படக்கவிதை - பார்க்கச்சுவை - கவிதையை கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப எழுதித் தரவேண்டும்
3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்
4. இசைக்கவிதை - பாடச்சுவை - கவிதையை பாடிப் பதிவு செய்து தரவேண்டும்.
5. காட்சிக்கவிதை - இயக்கச்சுவை - கவிதையை இயங்கும் காட்சி இணைப்போடு பதிவு செய்து தரவேண்டும்

எதிர்பார்த்ததைவிட கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்து குவிந்துவிட்டன. படைப்பாளிகளிடமிருந்து சில சந்தேகங்களும் எழுந்தன. அவற்றுள் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு நான் இவ்வேளையில் பதில் தர விரும்புகிறேன். ஏன் மரபுக் கவிதைகளுக்கு என்று ஒரு பிரிவு ஏற்படுத்தவில்லை என்பதுதான் அந்தக் கேள்வி.

கவிதை என்றால் எனக்கு அனைத்து வகைகளும் ஒன்றுதான். கவிதைக்குள் கவிதை இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கும் கவிஞன் நான். கவிஞனிடமிருந்து கவிதையாய் மலர்ந்திருக்கும் கவிதை, களையாகிக் போன கவிதை முயற்சி என்ற இரு பிரிவுகள் மட்டுமே எனக்குக் கவிதைகளில் உண்டு. இந்த இரண்டுமே எனக்கு நிகழ்ந்தும் இருக்கிறது :) மற்றபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை, பின் நவீனத்துவகவிதை என்றெல்லாம் நான் பிரித்து போட்டி வைக்க வில்லை. மேலும் மரபுக்கவிதைக்குள் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, கலிப்பா, சிந்து என்றெல்லாம் பல பிரிவுகள் பிரித்து போட்டி வைக்க விரும்புவதும் இல்லை.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு வெண்பாவை எழுதி ஒரு படத்திற்குக் கவிதையாய் அனுப்பியிருக்கலாம். இன்னொருவர் ஒரு ஹைக்கூ கவிதையை வீடியோ காட்சி அமைத்து காட்சிக் கவிதைக்கு அனுப்பியிருக்கலாம். எல்லாமும் சமமாகவே கருதி நன்றாக வந்திருக்கும் கவிதையைப் பரிசுக்குரியதாய் நடுவர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "காற்றுவெளியிடைக் கண்ணம்மா" என்ற கவிதையை பாரதி யுனித்தமிழில் தட்டச்சு செய்து மட்டும் அனுப்பி இருந்தாரானால் அது இயல் கவிதை பிரிவில் வெற்றி பெற்றிருக்கும். அதே கவிதையை தன் சொந்தக் குரலில் வாசித்து பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது ஒலிக்கவிதை பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அவர் ராகத்துடன் பாடி பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது இசைக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அன்புடன் அனுப்பிய பத்தாவது படமான கடற்கரையில் நிற்கும் காதல் ஜோடிக்கு அனுப்பி இருந்தாரானால் அது படக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை ஜெமினி கணேசனையும் சாவித்திரியையும் வைத்து காட்சிப் படமாக்கி அனுப்பி இருந்தாரானால் அது காட்சிக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அவ்வளவுதான். ஆனால் எழுதியது பாரதியார் என்று மட்டும் நடுவர்களுக்குத் தெரியவே தெரியாது :) பாரதியார் மீசையை முறுக்கிக்கொண்டு வந்து பரிசு வாங்கும்போது மட்டுமே நடுவர்களுக்குத் தெரியவரும் :)

இதேபோல இந்த ஐவகைப் பிரிவுகளிலும் எவரும் மரபோ, புதுசோ, ஹைக்கூவோ, நவீனமோ, பின்நவீனமோ எழுதி இருக்கலாம். அன்புடன் அனைத்துக் கவிதைகளையும் அணைக்கும் அன்புடன்தான் இந்தப் போட்டிகளை அறிவித்தது. போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிவைத்த கவிஞர்கள் யார் யார் என்று எந்த நடுவருக்கும் தெரியாது. நடுவர்கள் யார் யார் என்று எவருக்குமே தெரியாது. அதைத் தெரிந்த மூவர்:

1. ஆண்டுவிழாத் தலைவர் ப்ரியன் என்கிற விக்கி
2. அன்புடனின் தொடர் சேவைக்கரசி சேதுக்கரசி
3. நான் (உங்கள் அன்புடன் புகாரி)

இப்போதும் நான் உங்களுக்கு இயல் கவிதைப் பிரிவின் நடுவர் மாலனை மட்டுமே அறியத் தந்திருக்கிறேன். அடுத்தடுத்த கவிதைப் பிரிவின் பரிசுக்கவிதைகளின் அறிவிப்பின் போதுதான் அந்தந்த நடுவர்களையும் முறையாக நாங்கள் உங்களுக்கு அறியத் தருவோம். படைப்பு மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இதற்கான காரணம். ஆயினும் நாங்கள் தேர்வு செய்த அத்தனை நடுவர்களும் கவிஞர்களின் பெயர்களைத் தந்திருந்தாலும்கூட நடுநிலையாகவே தேர்வு செய்திருப்பார்கள்.

கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்திருந்ததால் நடுவர் குழுவையும் அதற்கேற்றவாறு பல நடுவர்களாக நியமிப்பதே சரி என்று பட்டது. எழுத்தாளர் "திசைகள்" மாலனை நடுவராய் இருக்க அழைத்தோம். தன் பணிச்சுமைகளுக்கு இடையே அவர் அன்புடன் இயைந்தார். மாலனை அறியாதோர் இணையத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் புதியவர்களுக்காக மாலனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

மாலன் ஒரு கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமரிசகர், கணிஞர் என்று பலமுகங்கள் கொண்டவர். நீண்டகாலம் இலக்கியம் மற்றும் அரசியல் அனுபவங்களை அழுத்தமாகப் பெற்றவர். இணையத்தில் அதிகம் எழுதும் முக்கிய எழுத்தாளர். முதன் முதலாக யுனித்தமிழில் வந்த இணைய சஞ்சிகையான திசைகளின் ஆசிரியர். மைக்ரோசாப்டின் விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி ஆகியவற்றின் திட்டங்களை முன்னின்று நடத்தியவர். இவரிடம் இயல்கவிதைப் பிரிவினைக் கொடுத்தோம். எண்ணிக்கையில் அவை மிக அதிகமாக இருந்தும் எங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்று இவர் மட்டுமே தனித்த நடுவராக இருந்து இயல் கவிதைப் பிரிவின் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்திருக்கிறார். எனவே அன்புடன் முதலில் அறிவிக்கப்போகும் வெற்றிக் கவிஞர்கள் இயல்கவிதைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசு பெற்ற கவிதைகள் தனியாகவும், நடுவரின் தேர்வுரை தனியாகவும் வருகின்றன. அவற்றையும் "பதிவுகள்" இணையதளத்தில் காணலாம்.

அன்புடன் புகாரி

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan anbudansupport@gmail.com

அன்புடன் கவிதைப் போட்டி முடிவு - நடுவர் மாலன் உரை
கவிதை இருக்கட்டும் முதலில் ஒரு கதை கேளுங்கள்


எழுத்தாளர் மாலன்தங்கள் நாட்டில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டதால், ஆறாம் நூற்றாண்டில், எட்டாயிரம் பேர் தங்கள் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தார்கள், வந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். உலக அனுபவம் வாய்ந்தவர்கள். ஒழுக்கம் நிறைந்தவர்கள். சமணர்கள் ஆதலால் பிற உயிர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்கள். நல்ல தமிழறிவும் கொண்டவர்களாக அவர்கள் விளங்கினார்கள்.

பாண்டியனுக்கு அவர்கள் தனது நாட்டை நாடி வந்தது குறித்து மகிழ்ச்சி. அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை நன்றாகவே பேணி வந்தான். அவர்களைத் தனக்கு ஆலோசனை சொல்ல அரசவையிலேயே வைத்துக் கொண்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் நாட்டில் பஞ்சம் தீர்ந்து விட்டதாக அவர்களுக்கு செய்தி கிடைத்தது. மீண்டும் தங்கள் நாட்டிற்கே திரும்பி விட விரும்பினார்கள். எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா?

மன்னனிடம் போய் தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள். பாண்டியனுக்கு அந்தச் சான்றோர்களைப் பிரிய மனம் இல்லை. இங்கேயே இருந்து விடுங்கள், உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் செய்து தரச் சொல்கிறேன் என்று உறுதியளித்தான். ஆனால் துறவிகளுக்குப் பெரிதாக என்ன தேவை இருந்துவிடப் போகிறது? அவர்கள் சொந்த ஊருக்கே திரும்பத் துடித்தார்கள்.

ஓரிரவு, அரசனிடம் சொல்லிக் கொண்டு போவதெல்லாம் இனி நடக்காது என்று தீர்மானித்த அவர்கள், இரவோடு இரவாகப் பாண்டிய நாட்டு எல்லையைக் கடந்து போய்விட முடிவு செய்து கிளம்பினார்கள். ஆனால் இடர் வந்தபோது, இத்தனை நாள் தங்களைப் பரிவோடும், மரியாதையோடும் நடத்திய மன்னனது அன்பையும் மறக்க முடியவில்லை. அதனால் அவனுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என எண்ணினார்கள். அரசனுக்குக் கொடுப்பதற்குத் துறவிகளிடம் என்ன இருக்கும்? அவர்களிடம் தமிழ் இருந்தது. எனவே ஆளுக்கு ஒரு கவிதை எழுதி அதைப் பாண்டியனுக்குப் பரிசாகக் கொடுத்துவிடத் தீர்மானித்தார்கள்.

மறுநாள் காலை அவர்கள் ஊரை விட்டுப் போய்விட்ட தகவல் மன்னனுக்குக் கிட்டியது. அத்தோடு அவர்கள் பரிசாக வைத்து விட்டுப் போயிருந்த எண்ணாயிரம் கவிதைகளும் அவனிடம் கொண்டு வந்து கொடுக்கப்பட்டன. அவனுக்கோ கடும் சினம். 'நாம் அவ்வளவு சொல்லியும் அவர்கள் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புறப்பட்டுப் போய்விட்டார்களே, இது நம்மை அவமதிக்கிற செயல் அல்லவா?' என அவன் மனம் புகைந்தான். 'யாருக்கு வேண்டும் அவர்களது பரிசு. கொண்டு போய் அதை ஆற்றிலே போடுங்கள்' என உத்தரவிட்டான்.

அந்த எண்ணாயிரம் கவிதைகளும் வைகையில் வீசியெறியப்பட்டன. ஆனால் என்ன ஆச்சரியம், அவற்றில் நானுறு கவிதைகள் ஆற்றின் வெள்ளத்தை எதிர்த்துக் கரை நோக்கி நீந்தத் துவங்கின. 'அப்படியொரு சக்தியா அந்தக் கவிதைகளுக்கு? அப்படியானால் அவற்றில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும்' என எண்ணிய அரசன் அவற்றை சேகரித்துத் தொகுத்தான்.

அந்த நூல்தான் நாலடியார்.

இந்தக் கதையை - கதை என்றுதான் சொல்ல வேண்டும், வரலாறு என்று ஏற்க ஆதாரங்கள் இல்லை- என் பள்ளி நாட்களில், தமிழ் வகுப்பில் கேட்ட போது, நான் ஆசிரியரைக் கேட்டேன்: "அந்த நானூறு கவிதைகள் அற்புதமானவை, எதிர்த்துக் கரையேறின என்றால், மீதமுள்ள, ஆற்றோடு அடித்துக் கொண்டு செல்லப்பட்ட, ஏழாயிரத்து அறுநூறு கவிதைகளும் பொக்கைக் கவிதைகள் என்றல்லவா ஆகிறது?" "உட்காருடா அதிகப் பிரசங்கி" என்று ஆசிரியர் என்னை அடக்கிவிட்டார்.

பின்னாளில் வளர்ந்து இலக்கிய வாசிப்பும் ஏற்பட்ட பிறகு புரிந்தது, கவிதை மட்டுமல்ல, எந்த இலக்கியமும், ஏன் எந்த மனித முயற்சியுமே, கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடாமல் இருக்க வேண்டுமானல், அது காத்திரமானதாக இருக்க வேண்டும்.

காத்திரமான கவிதை எப்படி இருக்கும்?

நல்ல இலக்கியத்தின் அடையாளங்களில் ஒன்று நினைவில் தங்கிவிடுவது. திருப்பதிக்குப் போனார் ஒருவர். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து கடவுளைப் பார்த்து விட்டு வெளியே வந்தார். நல்ல பசி. ஒரு புளியோதரைப் பொட்டலம் வாங்கிக் கொண்டார். பஸ் வந்ததால் அதில் ஏறிக் கீழே வந்து விட்டார். கீழே வந்து பொட்டலத்தைப் பிரித்தார். உள்ளே சோற்றோடு ஒரு எறும்பு. ஒரு நிமிடம் திகைத்துப் போனார்: இந்த மலையில் ஒரு படியாகக் கிடவேனா? தூணாக நில்லேனா? புல்லாக இருக்கமாட்டேனா? 'எம் பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆகேனோ' என்று ஒருவர் உருகி உருகிப் பாடினாரே அவர்தான் இந்த எறும்பாகப் பிறந்திருப்பாரோ, அவரைத்தான் நான் கீழே எடுத்து வந்து விட்டேனோ, என்ன பாவம் செய்துவிட்டேன் எனப் பதறிப் போய் அப்படியே அந்தச் சோற்றுப் பொட்டலத்தை மறுபடியும் மலையேறிப் போய் அங்கேயே போட்டுவிட்டு வந்தார் என ஒருவரைப் பற்றி பேராசிரியர் தொ.பரமசிவம் ஒருமுறை சொன்னார். பசி நேரத்திலும் கட்டெறும்பைப் பார்த்த போது அவருக்குக் குலசேகர ஆழ்வாரது பாட்டு ஞாபகம் வந்தது. அதன் பின் எறும்பைச் சாதாரண எறும்பாக எண்ண முடியவில்லை. நல்ல இலக்கியம் இப்படியெல்லாம் இம்சிக்கும்.

உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் நீங்கள் உங்கள் மனதில் தங்கிவிட்ட கவிதையைத்தான் சொல்லுவீர்கள். அது சினிமாப் பாடலாகக் கூட இருக்கலாம்.

ஏன் நாம் படிக்கும் பல கவிதைகளில் கேட்கும் பாடல்களில் ஒருசில மட்டும் நம் மனதில் தங்கி விடுகிறது? ஆழ்ந்து அலசிப் பார்த்தால் அதனுள் நாம் வாழ்க்கை அனுபவம் சிறிதளவேனும் படிந்து கிடக்கும். நம்முடைய மகிழ்ச்சி, நம்முடைய ஏமாற்றம், நம்மமுடைய கோபம், நம்முடைய காதல், நம்முடைய அழகுணர்வு, நம்முடைய பக்தி, இப்படி ஏதேனும் ஓர் உணர்வு அதனுள்ளே புதைந்து கிடக்கும். நீங்கள் சொல்ல விரும்பிய ஒன்றை, நீங்கள் விரும்பியமாதிரியே அல்லது நீங்கள் நினைத்தைவிட சிறப்பாகக் கவிஞர் சொல்லியிருப்பார்.

இன்னும் கொஞ்சம் பார்த்தால் உங்களுடையதைப் போலத் தோன்றுகிற அந்த வரி, உண்மையில் அவரவர் மனதிற்குத் தோன்றுவதைப் போல எல்லோரும் நினைத்துக் கொள்ள இடம் தரும் ஒரு பொதுத் தன்மையைக் கொண்டிருக்கும். தனி ஒருவரது அனுபவம் உலகப் பொது அனுபவமாக மாறுகிற ரசாயனத்தால்தான் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. "நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை; நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை" இது காதல் தோல்விக்கு மட்டும்தானா பொருந்தும்? ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பெருமிதம், இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை என்ற கழிவிரக்கம் இரண்டையுமே வெவ்வேறு தருணங்களில் அடைந்திருக்கிறோம்.

கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது

என்று பாரதிதாசன் போல நாமும் பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் நம் குழந்தையைக் கெஞ்சியும் நயந்தும் கடிந்தும் கொண்டிருக்கிறோமே!

நம் மனதில் தங்கிய கவிதைகள் அல்லது நல்ல கவிதைகளின் லட்சணங்களில் ஒன்று அது எளிமையாக இருக்கும். எளிமையாக இருப்பது எளிதல்ல. எளிமையாக இருப்பது பல நேரங்களில் வலிமையானதாகவும் இருக்கும். தண்ணீரைப் போல எளிமையானது வேறொன்றில்லை. ஒரு சிறு குழந்தைகூட அதைக் கையில் ஏந்தி விட முடியும். தண்ணீரைப் போல வலிமையானதும் வேறொன்றில்லை. அது மலைகளையும் பெயர்த்தெடுத்து இழுத்து வரும், என்கிறது சென் பெளத்தம். மகாத்மா காந்தியின் ஆங்கிலமும் பாரதியின் தமிழும் எளிமையானவை. அவை ஒரு சாம்ராஜ்யத்தையே புரட்டிப் போடக் கூடிய வல்லமை கொண்டிருந்தன. எளிமை எங்கிருந்து அதன் பலத்தைப் பெறுகிறது? எளிய சொற்கள் எவருக்கும் புரியும். அதனால் அது மனதில் தங்கிவிடுகின்றது. 'ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' - இது 2000 வருடத்திற்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ். இதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்று ஐந்தாம் வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்குக் கூடப் புரியும்.

எனவே நல்ல கவிதை என்பது, நம் அனுபவத்தைச் சொல்லும் (somewhere personal), எல்லோருக்கும் பொருந்தும் (somewhat universal) எளிமையாகவும் ஆனால் அழுத்தமாகவும் (simple yet strong) இருக்கும்.


இப்படி ஒரு நல்ல கவிதையை, இந்தக் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் என அன்புடன் நண்பர்கள் புகாரி, சேதுக்கரசி, விக்கி ஆகியோர் கேட்டபோது சற்றுத் தயக்கமாகவும், மலைப்பாகவும் இருந்தது. படைப்பு என்பதன் மகத்துவமே அதன் பன்முகத் தன்மைதான். ஒரே மாதிரியான பூ ஒரு செடியிலேயே கூடக் கிடையாது. ஒரு செடியில், ஒரு பருவத்தில் பூக்கும் பூக்களே, ஒன்றுபோல இருப்பதில்லை. எனவே படைப்பில் உயர்வு தாழ்வு, சிறந்தது, குறைந்தது, எனக் கிடையாது. பிடித்தது, மனதைத் தொடாமல் போனது என்ற வகைகள்தான் உண்டு. ஒன்று நமக்குப் பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் நம்முடைய நம்பிக்கைகள், வாழ்க்கை அனுபவம், ரசனை, பார்வை, வாசிப்பனுபவம் எனப் பல காரணங்கள். நீரளவே ஆகுமாம் நீராம்பல்.

அன்புடன் தமிழ்க் கவிதைக்குக் கொடுத்துவரும் ஊக்கம் பாராட்டிற்குரியது. புதுக்கவிதை இயக்கத்தின் விளைவாகத் தமிழ்க் கவியுலகம் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஊருக்கு நடுவே ஒரு குளம் என்ற நிலையை மாற்றி ஒவ்வொரு வீட்டுக் குழாயிலும் ஒரு வாளித் தண்ணீர் என்னும் ஜனநாயகம். வரவேற்கப்பட வேண்டியதான். ஆனால் தமிழ்க் கவிஞர்களின் எண்ணிக்கை வளர்ந்திருக்கிற அளவு, தமிழ்க் கவிதை வளர்ந்திருக்கிறதா என்ற கேள்வி தமிழ் மீது அக்கறை கொண்ட மனங்களில் இருந்து வருகிறது. பாரதி போன்ற ஒரு பெரும் ஆளுமையை தரிசித்தவர்களிடம் இந்தக் கேள்வி உக்கிரம் பெறுகிறது. ''பாரதிக்குப் பின் பிறந்தார் பாடை கட்டி வச்சிவிட்டார் ஆரதட்டிச் சொல்வார் அவரிஷ்டம் நாரதனே'' என்ற புதுமைப்பித்தன் குரலில் ஆத்திரத்தை விட ஆதங்கம்தான் அதிகம் தெரிவதாக நான் கருதுகிறேன். ஆனால் பாரதி எதிர்காலக் கவிஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தான். தனக்குப் பின்னே பிறந்து காவியம் செய்யவிருக்கிற வரகவிகளுக்குத் தன் பாஞ்சாலி சபதத்தை சமர்ப்பித்திருப்பதே சான்று. பாரதியைப் போலவே அன்புடனும் கவிஞர்கள் மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டிருப்பது அதன் ஆக்கபூர்வமான (positive) மனோபாவத்தைக் காட்டுகிறது. தன் சமகாலத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்த்துகளுக்குரியவர்கள்.

அன்புடன் கொடுத்த இந்த வாசிப்பனுபவம் பல சிந்தனனைகளைத் தந்தது. சிலரின் கவிதை வரிகள் எண்ணங்களைக் கிளறின.

பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும்சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை


எத்தனை வயதானாலும், (பயணிக்கும் அவசரத்தில் இல்லாத நாட்களில்) நம்மைக் குழந்தைகளாக்கிவிடும் மாயம் திறந்த வெளியில் விரையும் இரயில் வண்டிகளுக்கு உண்டு. அந்த அதிசயத்தை மட்டும் சொல்ல வரவில்லை கவிதை. அலுப்பும் எரிச்சலும் ஊட்டும் வாழ்க்கைக்கு நடுவில் நம்மை ரசனைகளுக்கு இட்டுச் செல்லும் தருணங்களை ஒரு புகைப்படம் போலக் கவிஞர் பதிவு செய்கிறார். நல்ல snap shot. ஆனால் அந்தத் தொழில் நுட்பம் மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை என அலுத்துக் கொள்ளும் கவிதைகளுக்கு இடையே மனிதர்கள் அலுத்துப் போகிறார்கள், இயந்திரம் உயிர்ப்பிக்கிறது என வாழ்வின் மறுதலையை (converse) பேசமுற்படும் அந்த மாறுபட்ட பார்வை யோசிக்க வைத்தது. அதை அவர் உரத்துப் பேசாமல், மேசையைத் தட்டி வாதிடாமல், டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் நண்பனிடம் பேசுவது போலப் பேசும் தொனி எனக்குப் பிடித்திருந்தது.

பாத்திரம் பெரிதா, அல்லது அந்தப் பாத்திரத்தைப் படைத்தவன் பெரியவனா? கற்பனை பெரிதா, அல்லது அந்தக் கற்பனைக்குக் காரணமானவன் பெரியவனா? ராமன் பெரியவனா? ராமனைப் படைத்த கம்பன் பெரியவனா? யோசிக்க யோசிக்க இலக்கியத்தின் பல பரிமாணங்களையும், விடைகாண முடியாத நித்தியத்துவம் பெற்ற கேள்விகளையும் எழுப்பியது ஒர் கவிதை.

கல்வியை நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் மாயக் கம்பளத்தோடு ஒப்பிட்டு (அந்த ஒப்பீட்டையும் நுட்பமாகச் செய்து) எழுதப்பட்ட ஒரு கவிதையும் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கவிதையை ஒரு கதை போல நெய்திருந்தார் கவிஞர். கல்வியின் அவசியத்தைப் பற்றி தமிழ்க் கவிதைகள் காலம் காலமாகப் பேசுகின்றன. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாமல் கற்றல் நன்றே என்ற சங்காலக் கவிதையில் துவங்கி கல்வி பற்றி ஒரு சில நூறு கவிதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கலாம். வெள்ளத்தால் போகாது, வெந்தணலில் வேகாது என்பதில் துவங்கி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வரை கல்வியின் பயனையும் பட்டியல் இட்டிருக்கிறார்கள். மலை வாழை அல்லவோ கல்வி நீ வாயார உண்பாய் புதல்வி என பாரதிதாசனின் கல்வியை எளிய வாழைப்பழமாக செய்த கற்பனையிலிருந்து இன்று நாம் வெகு தூரம் வந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறது மந்திரக் கம்பள உவமை. ஆனால் கவிதையின் சிறப்பு அந்த அம்மா பாத்திரம். ஞானக்கூத்தனின் அம்மா சொன்ன பொய்களில் வரும் அம்மாவின் ஜாடை கொண்ட கெட்டிக்கார ஆனால் அன்பான அம்மா. கற்பனையும் பாத்திரமும் சமகாலத்தைப் பதிவு செய்கின்றன. படைப்பிலக்கியத்தின் பலன்களில் அதுவும் ஒன்று.

சமகாலப் பிரசினைகளைக் கூர்மையான பார்வையோடும், ஆழமான கவலையோடும் பார்க்கும் சில கவிதைகள், அதிலும் சுற்றுச் சூழல் கெட்டு வருவதை, கடல்களில் எண்ணைப் படலங்களைப் பரப்பிச் செல்லும் கப்பல்கள், ஓசோன் படலத்தில் விழும் ஓட்டை இவை குறித்து அக்கறையோடு எழுதப்பட்ட கவிதைகளை அதன் பின் உள்ள உலகு தழுவிய பார்வை, எதிர்காலம் குறித்த, கேள்விகள் கொண்ட நோக்கு இவற்றிற்காகப் பாராட்டுகிறேன். எய்ட்ஸுடன் ஒரு பேட்டி, யுத்தம் பற்றிய கவிதைகளையும் சமகாலப் பதிவாக பார்க்கிறேன்.

சில கவிதைகளில் காணப்படும் உவமைகள் அசர வைக்கின்றன. வெயில் தின்ற முகம் என்று உழவனை வர்ணிக்கிறது ஒரு கவிதை.

ஐந்து தலைமுறையாய்
ஆண் வாரிசு
இல்லாத குடும்பத்தில்
ஆண் குழந்தை
பிறந்ததைப் போல
இருந்தது
என்னைப் பிடிச்சிருக்கு
என்றபோது.

என்ற வரிகள் முறுவலை வரவழைத்த உவமை.

இறுதிச் சுற்றில் இரண்டு கவிதைகள் என் முன் நின்றன. நலம் நலமறிய ஆவல் என்று ஒரு கவிதை. வெளிப்படு என்றொரு கவிதை. ஒன்று உணர்வுகளால் நெய்யப்பட்டது. மற்றொன்று சிந்தனைகளால் செறிவூட்டப்பட்டது.

கடிதம் வருமா வருமா எனக் காத்திருந்து, வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடை பயின்று, வருவர் எல்லாம் தபால்காரர் என்று மயங்கி, ஒருநாள் கடிதம் வந்ததும் அதைப் பரபரப்பாய்ப் பிரித்து, உள்ளே வழக்கம் போல உலகுக்கு முக்கியம் இல்லாத, ஆனால் உணர்வுகளோடு பேசுகிற வரிகளை வாசித்து, உடனே பதில் போட உட்கார்ந்து, நலம் விசாரிப்பதில் துவங்கி ஊர் வம்பில் முடிகிற கடிதங்கள் எழுதிய, கடந்த காலத்தை சுவையாய் அசை போடுகிறது நலம் நலமறிய ஆவல். மண் வாசனை ததும்பும் ஈரமான தமிழ். பேச்சு வழக்கிற்கு அருகில் கவிதை மொழியைக் கொண்டு வந்துள்ள ஆற்றல். கவிதைக்கு லயம் கொடுக்கும் மோனை நயம். மிகைப்படுத்தாத மெய்யான உணர்வுகள். இவை எல்லாம் கவிதையைச் சிறக்கச் செய்கின்றன.

ஆனால்-
மின்னஞ்சல் வந்துவிட்டதால் காத்திருக்கிற சுகம் போய்விட்டது என்ற வாதத்தை ஏற்க என் மனம் மறுக்கிறது. அறிவியலின் மிகப் பெரிய சிறப்பே அதன் ஜனநாயக அம்சம்தான். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இப்படிச் செய், இப்படி வாழு என்று வாஞ்சையுடன் ஆணையிடுகிற தகப்பன் அல்ல. இன்னின்ன இருக்கு வேணுமா உனக்கு எனக் கடைபரத்துகிற வியாபாரி. அறிவியல் சாதனங்கள் எவையும் என்னை ஏற்றுக் கொள் என எவரையும் வற்புறுத்தாது. ஏற்றுக் கொள்ளாமல் போனால் ஏங்கி இளைக்காது. ஏற்றுக் கொண்டவர்களுக்கு சலிக்காமல், சிணுங்காமல் அடிமைச் சேவகம் செய்யும். உங்களுக்குக் கடிதம் எழுதிக் காத்திருப்பதுதான் சுகம் என்றால், தாரளமாகக் காகிதம் எடுத்து எழுதுங்கள். உலகத்தில் உள்ள தபால் அலுவலகங்களையெல்லாம் தாழ் போட்டு சீல் வைத்து விட்டார்களா என்ன? மின் அஞ்சல் உலகத்தில் பாசத்தைக் காணல, தமிழ் சுவாசத்தைக் காணல என்கிற புலம்பல் பொய்யானது. எழுதுவது தொழில்நுட்பம் அல்ல. மனம். பாசம் இருக்க வேண்டிய பாண்டம் அதுதான். சட்டியில் இருந்தால் அகப்பைக்கு எட்டாமலா போய்விடும்? என் கோடிங் வேறு உன் கோடிங் வேறு என ஆளாளுக்கு ஒரு encodingல் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், இணையத்தில் எவர் எழுதுவதையும் அவரன்றி அடுத்தவர் வாசிக்க இயலாமல் தமிழ் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. யுனித் தமிழ் என்று ஒன்று ஏற்பட்டு அதை உலகில் கணிப்பொறியின் எல்லைகளைத் தீர்மானிக்கிற மைக்ரோசாஃப்ட்டின் மென் பொருட்களும். அவர்கள் தீர்மானிக்கிற விளிம்புகளை ஏற்க மாட்டோம் அதை விசாலப்படுத்துவோம் என்கிற தளையறு மென் கல இயக்கமும் யுனித் தமிழுக்கு இடம் கொடுத்த பின்னும் தமிழ் சுவாசத்தைக் காணல என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. அப்படியே இணையத்தில் போதுமான அளவிற்குத் தமிழ் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் அதற்குத் தொழில்நுட்பம் காரணம் அல்ல. வினைத் திட்பம் இல்லாமை காரணமாக இருக்கலாம்.

கடந்து போன காலத்தைப் பொற்காலமாகக் கருதும் இந்த மனப்பான்மை ஊக்குவிக்கத் தகுந்ததல்ல என்ற ஒரே காரணத்திற்காக இந்தக் கவிதையை நிராகரிக்கிறேன். எவ்வளவு அழகாகக் கட்டப்பட்டிருந்தாலும் நாம் கல்லறைகளில் வசிக்க முடியாது. காரணம் அங்கே ஜன்னல்கள் இல்லை. கடந்த காலங்கள் எத்தனை உன்னதமாக இருந்தாலும் அதில் நாம் கால் பதிக்க முடியாது. சென்றதினி மீளாது மூடரே என்று பாரதியைப் போலக் கடுமையான வார்த்தைகளில் சாடவிரும்பவில்லை. ஆனால் புதியன விரும்பு என்ற அவனது கட்டளையைக் கவனப்படுத்த விழைகிறேன்.

வெளிப்படு, (கவிதை எண் 5 ஈ) கவிமனத்தின் உணர்ச்சிப் பெருக்கால் நனைந்து கிடக்கும் நதியல்ல. சிந்தனைக் காற்று சலனம் எழுப்பும் சிறு தடாகம். மனித குலத்திற்கும் மதத்திற்கும் உள்ள உறவை உன்னிப்பாக ஆராய்கிறது. மதம் மனிதனுக்குக் கிடைத்த புதிய சிறகுகளா? அல்லது பூட்டப்பட்ட பொன் விலங்கா? மனிதனுக்கு மதம் தேவையா? தன்னைத் தானே நெறிப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்கிற காலம் வரை, அது நமக்குத் தேவை. கவிஞர் சொல்கிற மாதிரி அது நடக்கக் கற்றுக் கொடுக்கிற நடைவண்டி. ஆனால் அதற்காக ஆயுசு பரியந்தம் நடைவண்டியைப் பிடித்துக் கொண்டே நடக்க முடியமா? சப்பாணிகளாகவே சாகப் பிறந்தோமா நாம்? கற்றுக் கொடுக்கிற எதுவும், கற்றுக் கொள்கிற எதுவும், நம்மைச் சிறப்பிப்பதாக இருக்கலாம். சிறைப்பிடிப்பதாக இருந்துவிடக் கூடாது. அவை நமக்குக் கையாக உதவ வேண்டும். காலாக இட்டுச் செல்ல வேண்டும். கை விலங்காகவோ, காலில் கட்டிய கனமான குண்டாகவோ ஆகி விடக் கூடாது.

ஆகிவிட்டால்? தலையானது எனக் கருதிய ஒன்று தளையாக ஆகிவிட்டால் அறுத்தெறிய வேண்டியதுதான். இது நன்றி கொன்றதாகாதா? சிந்திக்கவே நான் தான் உனக்குக் கற்றுக் கொடுத்தேன் என்பதற்காக சிந்துபாத் கதையில் வரும் கிழவனைப் போல அவை நம் முதுகை விட்டிறங்காமல் வருமானால் அதை உதற வேண்டியதுதான். இது நன்றி கொன்றதாகாதா? எந்த வீட்டிற்குள்ளும் வாசற்படி இருப்பதால்தான் ஏறி உள்ளே போகமுடிகிறது. அதற்காக அதைப் பெயர்த்தெடுத்துப் பூசையில் வைத்து விட வேண்டுமா? இது நன்றி கொன்றதாகாதா? விடை கவிதையில் இருக்கிறது.

கவிதை அணிந்திருக்கும் மொழி சாதாரணமானது. ஒப்பனையின்றி நேரடியானது. செறிவானதைச் சொல்ல முற்படுவது எனினும் இருண்மை இல்லாதது. மனித குலம் முழுமைக்கும் பொதுவான ஒன்றைப் பற்றி அடங்கிய குரலில் ஆழ்ந்து யோசிப்பது. கேள்விகளை அடுக்கிவிட்டுக் கிளம்பிவிடாமல், சரியெனப் பட்டதைப் பரிந்துரைப்பது. கவிதையின் லட்சணங்கள் எனக் கம்பன் முன்மொழிந்த, பாரதி வழிமொழிந்த தெளிவு, தண்மை, ஒழுக்கம் (ஒழுக்கம் என்றால் நேரடியாகச் செல்வது) என்ற அம்சங்கள் கொண்ட இந்தக் கவிதையை பரிசுக்குரியதாகப் பரிந்துரைக்கிறேன்.

எதிர்காலத் தமிழ்க் கவிதை சிந்தனைச் செறிவால் ஊட்டம் கொள்ளட்டும். விளிம்பு நிறைய உணர்ச்சி என்ற எண்ணெய் ததும்பி நின்றாலும் சிந்தனைப் பொறி ஒன்றல்லவா விளக்கில் வெளிச்சம் ஏற்றும்?

அன்புடன்,
மாலன்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு - பரிசுக்குரிய கவிதைகள்! அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் நடத்திய இயல்கவிதைப் போட்டியில் நடுவர் "திசைகள்" மாலன் தெரிவு செய்த பரிசுக்குரிய கவிதைகள்:

முதல் பரிசுக்குரிய கவிதை:
"வெளிப்படு"

முதல் பரிசுக்குரிய கவிதை:"வெளிப்படு"

மதம்
ஒரு நடைவண்டி

கற்பவனுக்கு வரம்
கற்றவனுக்கோ சாபம்

சாப விமோசனம்
சர்வ நிவாரணம்

ஓட்டை உடைத்தல்
விதையின் கடமை
கூட்டைச் சிதைத்தல்
குளவியின் உரிமை

அது
நன்றி கொல்லல் அன்று
நன்று கொள்ளல்

மீண்டும் பிற.

- ஜாபர் அலி
துபாய்

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

இரண்டாம் பரிசுக்குரிய கவிதை:
"நலம் நலமறிய ஆவல்"!

இரண்டாம் பரிசுக்குரிய கவிதை:"நலம் நலமறிய ஆவல்"

கடுதாசி போட்டுபுட்டு
கடத்தெருவுக்கு போறப்பலாம்
தபால்காரன பாத்துபுட்டா
தலையாட்டி கேட்டுக்குவேன்,
என் அம்மாகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கான்னு...

சைக்கிள் மணி சத்தம் கேட்டா
சட்டுனு எழுந்து ஒடிவருவேன்
தபால் வந்திருக்குமோன்னு
தட்டுத் தடுமாறி ஒடிவந்தா
பொடவக் காரன் வந்திருப்பான்
என் நெனப்புல மண்ணள்ளிப்போட...

காத்திருந்து காத்திருந்து
கடுதாசி கெடைக்கிறப்போ
சேத்துவச்ச சந்தோசமெல்லாம் மூஞ்சில தெரியும்,
அன்னிக்கி மட்டும் தபால்காரன் ஆண்டவனா தெரிவான்!

ஆசப்பட்ட கடுதாசி வந்துடுச்சி
அதுவரைக்கும் இருந்த பசியும் மறந்துபோச்சி
கொண்டாந்த தபால்கார மாமாவுக்கு
கபாலி கட மசால் வட பரிசா போச்சி!

கடுதாசிய கையில வாங்குறப்போ
என் அம்மா கைபுடிச்ச ஞாபகம் வருது
அத நெஞ்சோட அணச்சிகிட்டு நடக்குறப்போ
என்ன கட்டிபுடிச்சி அழுதது கண்ணுல தெரியுது...

அவசரமா ஒரு தடவ
ஆசையா ஒரு தடவ
காலையில ஒரு தடவ
தூங்குறப்போ ஒரு தடவ
திருப்பி திருப்பி படிச்சிட்டு
கண்ண கொஞ்சம் கசக்கிட்டு
பேனா எடுத்து எழுதுறப்போ
பாசம் ஊருது நெஞ்சுக்குள்ள
அத பேனா வரையுது பேப்பருல...

அம்மாவோட ஆஸ்த்துமா,
அப்பாவோட B.P.,
அக்காவோட கல்யாணம்,
தம்பியோட காலேஜி,
லக்ஷ்மி போட்ட கன்னுக்குட்டி,
பைரவன் கடிச்சி வெச்ச பால்காரன் பையன்,
தோட்டத்துல நட்டுவெச்ச ரோஜா செடி,
தண்ணி வராத கார்ப்பரேஷன் கொழா,
'அடடா மறந்துட்டனே'ன்னு
பக்கத்து வீட்டு பாட்டி சொகம்,
ஒன்னொன்னா விசாரிச்சிட்டு
பக்கம் தீந்ததுக்கு அப்புறம்
நெடுக்க திருப்பி எழுதிடுவேன்
எனக்கு ப்ரமோஷன் கெடச்ச விஷயத்த...

பாத்து பாத்து பக்குவமா
எழுத்து அழியாம மடிச்சிபுட்டு
சமச்சி வெச்ச சாதத்துல
ஒரு பருக்க எடுத்து ஒட்டிவெப்பேன்

என்னதான் அவசரமா
ஆபீஸுக்கு கெளம்பினாலும்
அன்னிக்கி மட்டும் மறக்கமாடேன்
அம்மாவுக்கு எழுதின கடுதாசிய...

மாடவீதி வரைக்கும் நடந்து வந்து
போஸ்ட் பாக்ஸ்ல போட்டுபுட்டு
தலையில ரெண்டு சைடுல ரெண்டு
தட்டு தட்டுவேன்...
அக்கறையா தட்டினதுக்கு
துறுபிடிச்ச பெட்டி நைஸா
கையில ஒட்டி அனுப்பிடுவான்
இரும்பு பிசுக்க..
அத தட்டிவிட்டு கெளம்பிடுவேன்
காத்துகெடக்க..!

இன்னிக்கி,
தபால் போட்ற ஆள் இல்ல
தபால் தலையில பசையும் இல்ல
போஸ்ட் ஆபீஸ்ல கியூ இல்ல
போஸ்ட்மேன் தலையில மயிருமில்ல...

எலக்ட்ரானிக்கா பேசிக்கிறோம்
எதுக மோன மறந்துபோச்சு
எழுதிப் பாத்து நாளும் ஆச்சு
அட பேனா பென்சில் மறந்து போச்சு!

இமெயிலு இன்டர்நெட்டு
வாய்ஸ் மெயிலுக்கெல்லாம் வாக்கப்பட்டு
இன்பர்மேஷன் டெக்னாலஜி இனிமையா தெரியுது...
இன்னிக்கொன்னு நாளிக்கொன்னுன்னு புதுமையா போகுது...

உண்ம ஒண்ண சொல்லனும்
உரிமைய கொஞ்சம் எடுத்துக்குறேன்,
தப்பிருந்தா மன்னிச்சிடுங்க
தப்பா ஏதும் சொல்லிப்புட்டா...

இமெயிலு அனுப்பிட்டு
இந்தப்பக்கம் திறும்புறதுக்குள்ள
பதில் வந்து சேந்துறுது - அதுல
'காத்திருக்குற சொகம்'
செதில் செதிலா போயிறுது...

பாசத்த காணல
தமிழ் சுவாசத்த காணல
பேனா புடிச்சி எழுதுறப்போ
கண்ணீர்பட்டு காஞ்சி போன தடயத்த காணல...

வேகமா பேசிக்கிறோம்
வேடிக்க காணல
கீபோர்ட தட்டி தட்டி
கிறுக்கு மட்டுந்தான் புடிக்கல!

புதுசு புதுசுன்னு பூரிச்சிப்போறோம்
பழசோட வாசனைய பதப்படுதாம...
எதுக்கு எதுக்குன்னு தெரியல
அட ஏண்டா இன்னும் புரியல?

நலம் நலமறிய ஆவல்,
இது பழைமையின் அறைகூவல்!


- தண்டபாணி பொன்னுரங்கம்
சென்னை

(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 1:
"பறக்கும் கம்பளம்"
ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 1

சிறுவயதில் பள்ளிக்குப் போக - நான்
அடம் பிடிக்கும் போதெல்லாம்
அம்மா சொல்வாள் அடிக்கடி
"ஒழுங்காய் பள்ளிக்குப் போய்
நல்லபடியாய் படித்து முடித்தால்
உனக்கு நான்
பறக்கும் கம்பளம் ஒன்று வாங்கி
பரிசளிக்கிறேன்... " என்று.

ஆச்சரியத்தில் கண்கள் விரிய
ஆகட்டுமென்று ஓடியிருக்கிறேன்
ஆகாயம் பார்த்தபடி பள்ளிக்கு;
கதைகளில் கேட்டதுண்டு
சினிமாக்களில் பார்த்ததுண்டு - ஆயினும்
பார்த்ததில்லை நிஜத்தில்
பறக்கும் கம்பளத்தை...

ஏறி உட்கார்ந்ததும் விர்ரென்று
மனதில் நினைக்கும் இடத்திற்கு
பறந்து போய் இறக்கி விடுமாம்;
எத்தனை சந்தோஷம் அது!
நினைக்கும் போதே பறக்கிற உணர்வில்
நெஞ்செல்லாம் இனித்திருக்கும் அப்போது!

கனவுகளில் மிதந்தபடி
காத்திருந்தேன் பறக்கும் கம்பளம்
கைவசமாகும் நாளுக்காக.
அப்புறம் தான் புரிந்தது...
அறிவு வளர விவரம் புரிய
அம்மா சொன்னது பொய்யென்று!

அவள் சொன்ன அனேகம் பொய்களில்
இதுவும் ஒன்றென்று விட்டுவிட முடியாமல்
திணறித் திரிந்தேன் சில நாட்களுக்கு;
ஏன் இப்படி ஏமாற்றினாள்?

எல்லாப் பெற்றோர்களும்
சைக்கிளோ உடைகளோ
தின்பண்டங்களோ - அல்லது
சாத்தியமான வேறொன்றோ
வாங்கித் தருவதாய்ச் சொல்லித்தான்
படிக்க வைப்பார்கள் பிள்ளைகளை;
இவள் மட்டும் ஏன்
இல்லாத ஒன்றிற்கு ஆசை காட்டினாள்?

யோசித்தபோது புரிந்தது;
சைக்கிளோ வேறெதுவோ
வாங்கித்தர வசதியில்லை அவளுக்கு
இல்லாத ஒன்றை இரையாய்ப் பிடித்து
இழுத்து வந்திருக்கிறாள் இவ்வளவு தூரம்
பாவம் அம்மா என்று
பரிதாப பட்டேன் அவளுக்காக...

அவளிடமே இது பற்றி
ஒரு முறை கேட்டபோது
"வாக்குத் தந்தபடி எப்போதோ
வாங்கித் தந்து விட்டேன்
பறக்கும் கம்பளத்தை உனக்கு;
எதுவென்று புரியவில்லையா?
காலம் உணர்த்தும் மகனே
காத்திரு அதுவரை" என்றூ
நழுவிப்போனாள் சிரித்தபடி...

அப்போதும் புரியவில்லை;
அறிவு கொஞ்சம் கம்மி தானெனக்கு.
ஒவ்வொரு நாடாய்ப் பறந்து
உலகம் சுற்றும் போது
உண்மை புரிந்த தெனக்கு; அவள்
பரிசளித்த பறக்கும் கம்பளம்
பத்திரமாய் இருக்கிறது என்னிடம்
கல்வி என்னும் பேறுருவில்....

ஆசை ஆசையாய் அம்மா
பரிசளித்த பறக்கும் கம்பளத்தில்
ஒரே ஒருமுறை கூட அவளை
உட்கார்த்தி அழகு பார்க்கும்
பாக்கியந்தான் இல்லாமலானது - எனது
வாழ்வின் இன்னொரு அவலம்!

- சோ. சுப்புராஜ்
துபாய்

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*
ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 2:

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 2

பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும் சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை.

- கார்த்திக் பிரபு
சென்னை

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner