- அன்பாதவன் -
[கவிஞர் புதியமாதவியின் 'நிழல்களைத் தேடி' கவிதைத்
தொகுதிக்குக் 'கவிஞர் சிற்பி இலக்கிய விருது' கிடைத்துள்ளது. வாழ்த்துகிறோம்.-
பதிவுகள்]
தாய்த்தமிழகம்
விட்டு வலகி நிற்கும் தமிழ்ப் படைபாளிகள் சமகாலத் தமிழ்ப் படைப்புலகத்தோடு
இணைந்து எழுதுவது அரிது. ஆனால், புதியமாதவி மும்பையில் இருந்துகொண்டு இணைய
இதழ்களிலும் தமிழகத்து பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ச்சியாக கவிதை, கதை,
கட்டுரை, விமர்சனமென தனது படைப்பு பங்களிப்பை தருபவர். புதியமாதவியின் 14
சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கூடியத் தொகுப்பாக மருதா பதிப்பகம் (சென்னை)
வெளியீட்டில் மலர்ந்திருப்பது 'மின்சார வண்டிகள்'. புதியமாதவியின் கதைமாந்தர்கள்
தமிழ்நாட்டின் தென்கோடி கிராமத்தினர். தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு பிழைப்புத்
தேடி வருபவர்கள். மற்றும் மும்பை பெருநகர வாழ்வோடு தம்மைப் பிணைத்துக்
கொண்டவர்கள்.
தொகுப்பின் சற்றே வித்தியாசமான கதையெனில் அது 'செய்தி ஒன்று கதையானது'. மிக
விலகலான உள்ளடக்கம். பாகிஸ்தான் அதிபரின் இந்திய விஜயம், அவரின் நுண்மன உணர்வு
ரகசியம், சர்வாதிகாரிகளுக்கும் உண்டு அந்தரங்க மனம் என்பதை மிக கவிதை நயத்தோடு
சொல்லும் கதை.
'ஆக்ரா உச்சி மாநாட்டில் எந்த விதமானத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.
வெறுங்கையுடன் பாகிஸ்தான் திரும்பிய முஷ்ரப் தூக்கமில்லாமல் புரண்டு
கொண்டிருந்தார். காஷ்மீரைத் தாண்டி.. இமயத்தின்
சிகரங்களைத் தாண்டி.. கண்கள், சலனமில்லாத இரண்டு கண்கள்.. அவர் தோழியின் கண்கள்..
அந்த நள்ளிரவிலும் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தன" -சில கண்களை நேரடியாக
சந்திப்பது சர்வாதிகளுக்கும் சாத்யமில்லை.
பக்தியின் இலக்கிய வடிவமான ஆண்டாளையும் பெருவாரியான மக்களின் குலச் சாமியான
ஆத்தங்கரையானையும் இணைத்து வாசிப்பவரின் சிந்தனைத் தளத்துக்கும் பெருவேலைத்
தருவதில் வெற்றி பெறுகிறார் புதியமாதவி தனது 'ஆண்டாளும் ஆத்தங்கரைசாமியும்'
கதையில்.
தோழமை, நட்பு, காதல் எல்லாவற்றையும் தாண்டிய ஏதோ ஓரு பெயரற்ற உறவு குறித்து
பேசுகிறது 'பிச்சிப்பூ' " இது வெறுங் காதல் இல்லை; அதற்கும் மேலே ஒன்று. சொல்லத்
தெரியவில்லை. எல்லாமே சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதுமில்லை. பிச்சிப்பூவை
வரையலாம், நிறைய எழுதலாம் படம் பிடிக்கலாம், பிச்சிப்பூவின் வாசனையை..?"
-புதியமாதவியின் கேள்வி தோழமை கொண்ட நெஞ்சங்களில் கரைகிறது, அலைகிறது விடைகளைத்
தேடி..!
'கண்ப்பதி பப்பா மோரியா' மும்பையின் கணபதி விழாவை சமூக நோக்கில்
விமர்சிக்கிறது.வயிற்றுப்பிழைப்புக்காக மாநிலம் விட்டு வேறிடம் வந்தாலும் தேவர்
கணபதி, நாடார் கணபதி, பள்ளர் னகணபதி, பறையர் கணபதி, நாயக்கர் கணபதி என
கடவுளுக்கும் 'சாதிச் சான்றிதழ்' தருகிற மும்பைத் தமிழர்களின் சாதிவெறியின் மீது
அறையும் விமர்சனமாக இக்கதை.
செய்திகளைக் கதையாக்குவது ஒரு கலை. புதியமாதவியோ செய்திகளோடு மனித உணர்வுகளை
மிகச் சரியான விகிதத்தில் கலந்து சிறுகதைகளாக வடிக்கிறார். 'கவுரியின்
எதிர்காலம்' பெற்ற தகப்பனே மகளைப் பாலியல் பலாத்காரம் செய்வதும் அதனால் அந்தப்
பெண் கருவுறுவதும் கருக்கலைப்புக்காகப் போராடுவதுமான கதை. இப்படியும் நடக்குமா
உலகத்தில் என வாசிப்பவரை யோசிக்க வைக்கும் கதை.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும்
போட்டியை பதிவு செய்வது. அம்மா அப்பா கூட வயதாகிவிட்டால் பழசாகிவிடுவார்கள்.
புதிய உறவுகள் என்ன செய்யப்
போகின்றன. சற்றே நாடகத்தன்மை தூக்கலாக இருப்பினும் பழமையை மதிக்க, அனுபவங்களைச்
சேமிக்க கற்றுத்தரும் கதை.
'கூட்டணி' அரசியல் குறித்த கூர்மையான விமர்சனம். சென்ற தேர்தலில் அடித்துக்
கொண்டவர்கள் இந்தத் தேர்தலில் உறவு கொண்டாடுவதையும் ஒன்றாயிருந்தவர்கள் பிரிந்து
போய் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதையும் அவதானிக்க நமக்கு இந்தச் சிறுகதையின்
முக்கிய பாத்திரமான கிழவியின் வேதனைகள் புரியும். ஆனால் ஒலிவாங்கிக்கு முன்னால்
திரண்ட ஒளியில் தனது அழுக்குகளை மறைத்திருக்கும்
அரசியல்வாதிகளுக்கு..?
அவிழ்த்து எறிபவர்களுக்குத் தான் தெரியும் ஆடைகளின் மதிப்பு. காமநெடி வீசும்
கண்களை மற்றப் பெண்களைக் காட்டிலும் பாலியல் தொழிலாளி அறிவாள். மனிதம் மிக்க
பாலியல் தொழிலாளி ஒருத்தியின் கண நேர மனசை கல்யாணி என்கிற அதிநடுத்தர பெண்வழியாக
படம்பிடிக்கிற கதை 'தீபாவளிப் பரிசு'
மாற்றங்கள் சில நேரங்களில் சந்தோஷம் தருபவை. பல நேரங்களில் கொடியவை. ஏமாற்றம்
தருபவை. பெருநகரத்திலிருந்து பொங்கல் திருவிழா குறித்த கனவுகளோடு கிராமம்
செல்பவனை வரவேற்று, ஏமாற்றம் மாற்றங்கள் குறித்துப் பேசுவது 'பொங்கலைத்
தேடி'.இழந்த சொர்க்கத்தைப் பற்றிய இனிய பதிவு.
'மகனுடன் மேட்னி' தலைமுறை இடைவெளி குறித்து விவாதிப்பது. ரசனைமாற்றம்,
காலமாற்றம், வயது வித்யாசம் என நுணுக்கமான பல்வேறு சங்கதிகளை சிறுகதைச்
சிமிழுக்குள் தந்து வெற்றி பெற்ற கதை இது.
எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களுக்கு வித்தாக அமைகின்றன. 'வரங்கள் வீணாவதில்லை'
கதையும் அப்படியோர் எதிர்பார்ப்போடு செல்கிற பெண் ஒருத்தி சந்திக்கிற
ஏமாற்றங்களப் பதிவு செய்கிறது. மிகச் சரியானப் புரிதல்களே இது போன்ற
ஏமாற்றங்களிலிருந்து விடுதலை அளிக்கும்.
இயல்புக்கும் இயற்கைக்கும் எதிரான தவமான கன்னிமைக் கலையா 'சிஸ்டர்' குறித்த விவாத
அலைகளின் உணர்வு தொகுப்பாக 'சிஸ்டர்' சிறுகதை.
'தாராவியில் ஒரு தாய்' மும்பை மாநகரில் மதமாச்சரியங்களைக் கடந்து வாழும்
தமிழ்க்குடும்பங்களைப் பற்றிய மிகச் சிறந்த பதிவு. மும்பைக் கலவரம் (1993) பற்றி
கோடி காட்டி விட்டு மனித உறவுகளின் மகத்தான பண்புகள் குறித்து பேசும் அற்புத
சிறுகதை.
நீர் சேமிப்பின் அவசியம் கருதி எழுதிய கதையாக 'பாசுவின் தவம்'. மும்பை மாநகருக்கு
ஏற்ற கருத்துகள்தான். ஆனாலும் ஏற்க வேண்டுமே பெரும்பான்மைகள்!
'மின்சார வண்டிகள்' குறுநாவல். ஒரு தரமானத் திரைப்படம் பார்த்த உணர்வை வாசகனுக்கு
தோற்றுவிக்கும் கதை. மும்பை மாநகருக்கு தினசரி வருகைத் தருகிற அயலவரின் வாழ்வு
அவலங்கள், சந்தோஷங்கள், வாழ்வியல் நடைமுறைகள், அனைத்துமே மிகச் சிறப்பாக பதிவு
செய்யப்பட்டிருப்பது
குறுநாவலின் சிறப்பு. புதியமாதவியின் பாத்திரங்கள் மிக யதார்த்த மனிதர்கள்.
சராசரிக்கே உரிய சிந்தனைப் போக்கை உடையவர்கள். அதனால்தான் மற்றவர்களுக்கு
கஷ்டமெனில் வரிந்து கட்டிக்கொண்டு ஓட முடிகிறது. உதவ முடிகிறது.
மாநகர வேக ஓட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடாமல் வாழ்வை அதன் சுகதுக்கங்களோடு
எதிர்கொள்வது புதியமாதவியின் கதை மாந்தர்களின் சிறப்பு. வாசிப்பவர்களும் அந்த
உணர்வை பெறக்கூடிய சாத்தியம் நிறையவே இருக்கிறது. மனித வாழ்வைச் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கிறது புதியமாதவியின் மின்சாரவண்டிகள்.
நூல்: 'மின்சாரவண்டிகள்'
வெளியீடு : மருதா பதிப்பகம், சென்னை 14.
பக் : 128, விலை: ரூபாய் 70/
jpashivammumbai@rediff.com