| புலம்பெயர்ந்தும் தமிழ் வளர்க்கும் 
  செம்மல்கள்-1
 
 - ஆல்பேர்ட் (அமெரிக்கா) -
 
 
  உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்"  இப்படிச் 
  சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை!  வடநாட்டு அறிஞரா? இல்லவே இல்லை! 
  சொன்னவர் அமெரிக்க மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!
  "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லி 
  உயிர் துறந்த 
  தமிழ்பற்றாளர் யார் தெரியுமா?  தமிழகத்தில் பிறந்த தவத்திரு 
  தமிழ்க் குடிமக்களில் ஒருவரோ? இல்லை! 
  "என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று 
  நீங்கள் எழுத வேண்டும்"  என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் 
  ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார். 
 இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து தமிழ் கற்று பாரதியின் வாக்கை
 தனக்கே சொன்னதாய்க் கருதி வள்ளுவத்தை தம் மொழியில்
 சொல்லிவைத்த அருமைப் பாதிரியார் ஜி.யு.போப்தான் லண்டன்
 மாநகரில் தன் கல்லறையில் மேற்சொன்ன வாசகத்தைச்
 செதுக்கிவைக்கச் சொன்ன தமிழ் மாணவன்!
 
 இப்படி நம் தமிழை பிறர் மெச்சி உச்சி குளிர வைப்போர்
 வரிசையில் இன்றைக்கு வாழும் வரலாறாக...இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியான கோல்ட் 
  ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பேரா.சிவாபிள்ளை அவர்களை 
  புலம்பெயர்ந்தும் தமிழ் வளர்க்கும் செம்மல்கள் வரிசையில் முதலாவதாக பதிவுகள் இணைய 
  இதழுக்காக நிகழ்த்திய மின்
 நேர்காணல்.. இனி.....
 
 ஆல்: வணக்கம், அய்யா.
 
 புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் வேரை மறக்காமல், கடல் கடந்தும் தமிழ் வளர்க்கப் 
  பாடுபடும் உங்களை நேர்காணல் செய்வதில்
 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வணக்கம்.
 
 சி:பி:வணக்கம், ஆல்பர்ட். இதன் மூலம் உங்களைச் சந்திப்பதில்
 எனக்கும் மகிழ்ச்சியே.
 
 ஆல்: உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொலுங்களேன்,முதலில்
 
 தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு....
 
 ( பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, தொழில்,
 புலம்பெயர்தலுக்கான காரணம், பணி...)
 
 சி:பி: பிறப்பு கட்டைப்பிராய் (கிராமம்) யாழ்ப்பாணம், இலங்கை- 21 வயது வரை 
  யாழ்ப்பாணத்தில் 18 வயது வரை யாழ் இந்துக்கல்லூரி மாணவன். பின் பல்கைலக்கழக 
  படிப்பிற்கு விகிதாசாரத்தால் தெரிவுசெய்யப்படவில்லை.
 
 1 வருடம் மாணவ ஆசிரியர், கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி பெற்றோர் வசதி 
  படைத்திருந்ததால் மேல்படிப்பிற்கு லண்டனுக்கு 1967-ல் அனுப்பி வைத்தார்கள். 
  லண்டனில் இன்ஜினியரிங் படித்தும் அனுபவம், இல்லாததால் படிப்பிற்கு ஏற்ற வேலை 
  கிடைக்கவில்லை.
 
 தொழிறசாலையில் வேலைசெய்து கொண்டு மாலை நேர யூனிவர்சிட்டியில் கணினி பற்றி 
  படித்துப் பட்டம் பெற்றேன். இதன் பலனாக பாலிடெக்னிக் ஒன்றில் கணினி தொழில் நுட்ப 
  வேலை கிடைத்தது. PGCE in Computing பட்டப்படிப்பு கிடைத்ததும் தற்போது உள்ள 
  யூனிவர்சிட்டியில் கணினிப்பகுதிக்குப் பொறுப்பாக ஆசிரிய பயிற்சிEducation Dept. 
  டிப்பாட்மென்டில் விரிவுரையாளராகவும் வாய்ப்புக் கிடைத்தது. அத்தோடு மாலை நேர 
  பள்ளியிலும் கணினி விரிவுரையாளராக தொழில் நியமனம் கிடைத்தது.
 
 இங்கு முக்கியமாக கணினி மூலம் எவ்வாறு ஐரோப்பிய மொழி சமூக மொழிகைளக் கற்றுக் 
  கொடுக்கலாம் என்ற துறைக்குப் பொறுப்பாக இருக்கிறேன். அத்தோடு பயிற்சி 
  ஆசிரியர்கள் எவ்வாறு கணினி உதவியுடன் பாடங்கைளக் கற்றுக் கொடுக்கலாம் என்ற 
  பகுதியில் பயிற்சி அளிப்பவராகவும் கடந்த 30 வருடமாகப் பணி புரிகிறேன். 
  சனிக்கிழைமகளில் நடக்கும் தமிழ் கலைப்பள்ளிக்கும் அரசாங்கப் பள்ளியில் பள்ளி 
  முடிந்ததும் நடக்கும் தமிழ் பள்ளிக்கும் பொறுப்பாக இருக்கிறேன்.
 
 கேம்பிரிஜ் யூனிவர்சிட்டி அசெற் மொழிகள் தலைமைத் தேர்வு அதிகாரியாகவும் 
  லண்டன் எட் எக்சல் பரீட்ஷைப் பகுதி தமிழ் மொழி தலைமைத் தேர்வு அதிகாரியாகவும் 
  பணிபுரிகிறேன்.
 
 ஆல்: இலண்டனில் நீங்கள் ஆற்றும் தமிழ் பணி குறித்து நேயர்களுக்கு கொஞ்சம் 
  சொல்லுங்களேன்.
 
 சி:பி: 1982-84-ல் உள்ளூர் கல்வி அதிகாரசபை தாய் மொழியை கற்பிக்கப் படவேண்டும் 
  என ஒருதிட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதில் சமூகப்பள்ளிகள் மாலை நேரத்தில் வார 
  இறுதியில் ஆரம்பிப்பதற்கு ஊக்கம் அளித்தார்கள். அத்தோடு அச்சமயம் கணினி, 
  கற்பிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட கால கட்டம். மொழிகைளயும் கணினி மூலம் கற்றுக் 
  கொடுக்க வேண்டும் என ஒரு திட்டம்(புராஜக்ட்) ஆரம்பித்தார்கள், சமூகத்தில் 
  உள்ள 8 மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு எழுத்துருவ வடிவமைப்பை உருவாக்க ஒரு 
  குழு ஆரம்பிக்கப்பட்டது.
 
 அதில் சில எழுத்து உருவ அமைப்பிற்கு நான் பொறுப்பெடுத்து ஆல்ரைட் என்ற 
  மென்பொருளை 84 ல் எல்லா சமூகப் பள்ளியிலும் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 
  டாஸ் ஆப்பரேட்டிங்கில் பாவிக்கப்பட்டது. அச்சமயம் எனக்கு டாக்டர் குப்புசுவாமி 
  இணையம் மூலம் அறிமுகமானார் அவர் அருமையான அணங்கு தமிழ் உருவெழுத்தை 
  அறிமுகப்படுத்தினார்.
 
 அது ஆப்பிள் கணினிக்கும் வின்டோஸ் கணினிக்குமாக ஆக்கியிருந்தார். அவர் 
  அனுமதியுடன் அந்த உருவெழுத்துக்கைள லண்டன் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தினேன். 
  2000 ஆணடுகளில் தாய்மொழி என்ற பெயர் மாறி சமூக மொழியை முன்பள்ளிகளில் 
  கற்பிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் கல்விச் சபையால் முன்வைக்கப்பட்டு 300க்கு 
  மேல் பேசப்படும் லண்டன் மாநகரில் மொழிகளில் 8 மொழிகள் தேர்ந்தெடுக்கபட்டது.
 
 முதல் நான்கு மொழிகள் எனது பல்கலைக்கழகத்தால் இந்த நாட்டிற்கு ஏற்ற பாடத்திட்டம் 
  உருவாக்க கல்விக் கழகம் முன்வைத்தது. பாடத்திட்டம் உருவாக்கும் குழுவில் கணினி 
  பகுதிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். எனக்கு தமிழ் ஆங்கிலம் தவிர வேறு 
  ஐரோப்பிய மொழிகள் தெரியாது எனக் கூறி வேண்டுமானால் தமிழ் மொழியை உதாரணமாக 
  வைத்து ஏனைய ஆசிய ஐரோப்பிய மொழிகைளக் கற்றுக் கொடுக்கலாம் என எனது கருத்தை 
  முன்வைத்தேன்.
 
 ஆசிய மொழிகளில் சைனீஸ், பஞ்சாபி,அராபிக், உருது என 4-மொழிகளுக்குப் 
  பாடத்திட்டம் அமைக்க குழு உருவானது. அச்சமயம் தமிழையும் ஏன் சேர்க்கக் கூடாது என் 
  நான் முன்மொழிந்தேன், அதற்கு தமிழ் அரசாங்க முன்பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை 
  அதனால் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை எனக் கூறப்பட்டது. 
  அச்சமயம் நான் குடியிருக்கும் சமீபத்தில் உள்ள முன்பள்ளியில் ஐரோப்பியாவில் 
  இருந்து ஆங்கிலப்பள்ளியல் தமது குழந்தைகைளக் கற்பிக்க வைக்க வேண்டுமெனக் 
  குடியேறிய மக்கள் அங்கு செறிந்து வாழ்ந்தார்கள் அப்பள்ளியில் 40 குழந்தைகள் 
  கற்றுக்கொண்டு இருந்தார்கள், தலைமை ஆசிரியரை அணுகி அங்கு பள்ளி முடிந்ததும் 
  தமிழ் வகுப்பை ஆரம்பித்தேன்.
 
 இதை உதாரணமாகக் காட்டி தமிழ் மொழியையும் பாடத்திட்ட உருவாக்கக் குழுவில் 
  புகுத்தி அதற்கு நான் பொறுப்பாக இருக்கிறேன் என்றும் தமிழ் மொழிக்கும் 
  இந்நாட்டிற்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்க நாம் மூவர் உதவியுடன் இங்கிலாந்தில் 
  அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டத்தை ஏனைய நாலு மொழிகளுக்கு உள்ளது போல் 
  உருவாக்கினேன்.
 
 ஆல்: மாணவர்கள் ஆங்கில வழி தமிழ் கற்க புத்தகம், குறுவட்டு போன்று ஏதும் 
  தயாரித்திருக்கிறீர்களா?
 
 சி:பி: இங்கிலாந்தில் வெளியிட்ட தமிழ் மொழி பாடத் திட்டத்தில் ஒவ்வொரு தரத்திலும் 
  எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்? எவ்வாறான வளங்கள் இருக்கின்றன? எவ்வாறான வளங்களை 
  உருவாக்கிக் கொள்ள
  வேண்டும் என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.   9 தரங்களாகப் 
  பிரிக்கப்பட்டுள்ளதில் ஒவ்வொரு தர மாணவர்களுக்கும் எப்படி? என்ன? விபரங்களைக் 
  கற்றுக்கொடுக்கலாம் என்ற விபரங்கள் அடங்கியுள்ளன.
  சமீபத்தில் தமிழகத்துக்குச் சென்ற போது தமிழ் மாணவர்கள் கற்க எளிதான ஃப்ளாஷ் 
  கார்டுகள் உருவாக்கி
 வந்து அறிமுகம் செய்துள்ளேன்.
 
 
 ஆல்: புலம்பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களில் உள்ள சிறார்கள் எல்லாம் 
  விருப்பத்துடன் தமிழ் கற்கிறார்களா?
 
 சி:பி: இந்த நாட்டில்... இங்கிலாந்தில் எவ்வாறு மொழியைக் கற்பிக்கிறார்கள் 
  என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் தமிழ் மொழியையும் மாணவர்களுக்கு 
  கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆர்வமாகக் கற்பார்கள்.  ஐரோப்பிய மொழிகளைச் இங்கு சுலபமாக,கற்றுக்கொள்கிறார்கள். ஏன் தமிழ் மொழியைக் 
  கற்றுக்கொள்ள முடியாது? காரணம் அவர்கள் சலிப்படையக் காரணம் நாம் ஊக்கமில்லாமல் 
  அவர்களுக்கு அந்ததமிழைக் கற்றுக்கொடுப்பதால்தான். 
  ஏனைய முறையில் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆர்வம் 
  ஏற்படும் வகையில் கற்றுக்கொடுத்தால் எந்த மாணவர்களும் சுலபமாகத் தமிழைக் 
  கற்றுக்கொள்வார்கள்.
 
 இந்தநாட்டில் வீட்டில் பிரெஞ்ச் பேசாமல் இருந்தும், தமிழ் மாணவர்கள் பிரெஞ்ச் 
  மொழியை அழகாகப் பிரெஞ்ச் பேசுகின்றனர். ஏன்? காரணம், வகுப்பில் கற்று அழகாகப் 
  பேசுகின்றனர். அதேபோல தமிழைக் கற்றுகொடுத்தால் அவர்கள் தமிழைக் கற்றுகொள்வார்கள். 
  அதிலும் 2006ம் ஆண்டிலிருந்து தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்டு கற்பவர்களுக்கு 
  சான்றிதழ் வழங்கி கிரடிட் முறை கொடுக்கப்படுகிறது. இதனால் ஆர்வமாக தமிழை 
  மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கடந்தகாலத்தில் கற்றுக்கொடுத்தது போல் இல்லாமல் 
  நவீனத் தொழில்நுட்பத்துடன் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
 
 
 ஆல்: தங்கள் குழந்தைகளிடம் வீட்டில் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசினால் 
  தமிழில் நாட்டம் ஏற்படும் இல்லையா? பெரும்பாலான பெற்றோர்
  இல்லங்களில் ஆங்கிலத்திலேயே உரையாடுவதும் குழந்தைகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வம் 
  பேசும் எண்ணம் குறைவதாக பரவலாக கருத்து உள்ளது.
 இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
 சி:பி: வீட்டில் தமிழ் பேசினால் விரைவில் தமிழை அழகாகப் பேசுவார்கள், என்பது 
  உண்மை. ஆனால், இங்கிலாந்தில் இரண்டுவிதமான சமூகம் இருக்கிறது. க.மு. இரண்டு க.பி. 
  என இரண்டு வகைப்படுத்தலாம். அதாவது கலவரத்துக்கு முன் வந்தவர்கள்; கலவரத்துக்குப் 
  பின் வந்தவர்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம். கலவரத்துக்கு முன் வந்தவர்கள், 
  தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இதனால் 
  கலவரத்துக்கு முன் வந்தவர்கள் குழதைகள் தமிழ் பேச கூச்சப்படுகிறார்கள். 
  கலவரத்துக்குப் பின் வந்தவர்கள், முக்கியமாக ஐரோப்பிய நாட்டிலிருந்து 
  இங்கிலாந்துக்கு வந்தவர்கள் தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தில் 
  பேசுவது சிரமம். அதனால் அந்த ஐரோபியக் குழந்தைகள் வீட்டில் தமிழில் பேசுவது 
  அதிகமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. காரணம் இவர்கள் தமிழை வீட்டில் பேசினால் 
  குழந்தைகள் சுத்தமாகத் தமிழ் பேசுவார்கள் என்பது என் நம்பிக்கை.
 
 ஆல்: கடந்த ஆண்டு தங்கள் தமிழ் கல்விச் சேவைக்காக கிடைத்த விருது குறித்து 
  பகிர்ந்துகொள்ளுங்களேன்.
 
 2007 ஆண்டு மொழிகளுக்கான விருது கிடைத்தது. சமூக மொழியை (தமிழ்) முன்பள்ளிகளில் 
  எவ்வாறு மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படும் வகையில் கற்பிக்கலாம்? அவர்களை அதில் 
  ஈடுபாடடையச் செய்யலாம் என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை உருவாக்கி அது ஐரோப்பிய 
  மொழிச் சபையால் சிறந்த ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளித்தார்கள்.
 
 இதை என்னால் மறக்க முடியாது. ஏனைய ஆசிய மொழிகளுக்கும் (சைனீஸ், உருது, பஞ்சாபி, 
  அராபிக்) பவர்பொயின்ட் மென்பொருளை உபயோகித்து கணினியை எவ்வாறு மொழிகள் 
  கற்பிப்பதற்கு வளமாக உபேயாகிக்கலாம் என்பது பற்றிய விளக்க உரையை பள்ளிகளில் 
  கருத்தரங்கு பட்டறைகள் நடத்திச் செயல்பட்டு வருகிறேன். 2000 ஆண்டில் இதை 
  சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் ஏனைய ஆசிரிய மாநாட்டிலும் மல்டிமீடியா 
  வளங்கள் மூலம் தமிழ் கற்பிக்கும் வழிமுறை பற்றி எடுத்துரைத்திருந்தேன்.
 
 சமீபத்தில் நாட்டியத்தையும் தமிழையும் வளங்கைளப் பயன்படுத்தி எவ்வாறு மொழியைக் 
  கற்றுக் கொடுக்கலாம் (நாட்டிய வாத்தியாரையும் தமிழ் வாத்தியாரையும் 
  ஒன்றுபடுத்தி) என்ற வழிமுறையை தற்போது அறிமுகப்படுத்தி அது தேசிய ரீதியாகத் 
  தெரிவுசெய்யப்பட்டு அது பற்றிய விளக்க உரையை ஜலை 24-ல் சவுதாம்டன் 
  பல்கலைக்கழகத்தில் காண்பிக்க இருக்கிறேன், அதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
 
 ஆல்: தமிழாளர்கள் அனைவரின் ஒட்டுமொத்த ஆசீரும் உங்களுக்கு
 கண்டிப்பாக கிடைக்கும். ஆசி அளிக்கும் நிலையில் உள்ளவன் நானில்லை; புனிதப்பணியாம் 
  ஆசிரியப்பணியில் அற்புதங்களை அயலகத்தில், தமிழ் மாணவர்களுக்காக நிகழ்த்தும் 
  தங்களுக்கு
 என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.தமிழகம் சென்று தமிழ் 
  கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும்போது உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கருத்தரங்கு 
  நிகழ்ந்திருக்கிறதா? ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற கருத்தரங்குகள் நடாத்தும்போது 
  எவற்றையெல்லாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?
 
 சி:பி: உலகத்தமிழ் ஆசிரிய மாநாட்டிற்கு நடந்த 7 வருடமாகப் போய்வருகிறேன் 
  படைப்புகள் காண்பித்திருக்கிறேன் பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். முக்கியமாக பல 
  புதிய ஒரே எண்ணம் கொண்ட நண்பர்கைளச் சந்தித்திருக்கிறேன். இணையத்தில் 
  சந்தித்தவர்கைள நேரே பார்க்கும் போது ஒரு ஆத்ம திருப்தி, முக்கியமாக சிங்கை 
  கிருஷ்ணன், பழனி, மணியம் மறக்க முடியாத நண்பர்கள். இவர்கைள எல்லாம இவ்வாறான 
  மாநாடுகளில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இன்னும் முக்கியமாக எனது நெருங்கிய 
  உயிர் நண்பன் திரு வெங்கட் (மைக்ரோசாஃப்ட் இயக்குனர்) மறக்க முடியாதவர்.
 
 குறிப்பாக தமிழ் நாட்டு முன்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் நிறைய இருந்தும் 
  இவ்வாறான ஆசிரிய மாநாடுகளில் ஆண்களின் தலைகள் தான் நிறைய எனக்குத் தெரிந்தது. 
  சமத்துவம் அளிக்கப் படவில்லையே என்ற கவலை எனக்கு உண்டு. மேடையில் இதுபற்றிக் 
  கேட்டும் இருந்தேன்.
 
 தமிழ்நாட்டு ஆசிரிய மாநாடுகள் சிறப்பாக நடத்துகிறார்கள் பெரும்பாலும் மலேசிய 
  ஆசியர்கள்கூட பங்கெடுக்கிறார்கள். கருத்துக்கைள, படைப்புகைளப் பரிமாற ஒரு அரிய 
  சந்தர்பம்.
 இதற்கு வருவதன் மூலம் தமிழ்நாட்டு கிராமப் பள்ளிகளுக்குச் சென்று கணினி 
  வகுப்புகள் நடத்துவது எனக்கு மிக மனத்திருப்தி.
 
 ஆல்: ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள தாங்கள் ஆற்றும் ஆன்மீகப்பணிகள் பற்றி கொஞ்சம் 
  சொல்லுங்களேன்.
 
 சி:பி: எனது அப்பா அம்மா தமிழ் ஆசிரியர்கள். அப்பா எமது ஊர் கோவில் நிர்வாகி. 
  இதனால் எமது வாழ்க்கை கோவிலிலேயே கழிந்திருக்கிறது. அப்பா பூந் தோட்டத்திற்குத் 
  தண்ணீர் இறைக்கும் போது தமிழ் சமயம் கேள்வி வாயிலாகக் கற்றுக்கொண்டேன். சிறு 
  வயதிலேய என்னை அப்பா ஆசிரமங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 9 வயதில் 
  ரிஷிகேஷம் அப்பாவுடன் பேயிரு்ந்தேன்.
 
 தென் இந்தியக் கோவில்களுக்கும் போயிருந்தேன். 9 வயதில் அப்பா யோகா 
  கற்றுக்கொள்ள சுவாமி சச்சிதானந்தாவிடம் ஒப்படைத்தார். அதனால் சில காலம் யோகா 
  ஆசிரியராகவும் இருந்தேன்.
 (இப்போ நான் இல்லை, என்பொண்ணு பண்றா (klayaniyoga.co.uk)
 அவ்வாறு வளர்நததால் எங்கும் சமநிலையில் என்னால் வாழக்கூடியதா உள்ளது. 
  சுவாமிஜியின் பலர் அறிஞர்கள்; அறிமுகமாகி வீடு வந்து போகிறார்கள்.
 
 ஆல்: இலங்கையில் உங்கள் பதின்ம வயதில் நடந்த மறக்கவியலாத நிகழ்வு என்று நீங்கள் 
  கருதுவதை சொல்லுங்களேன்?
 
 சி:பி: சுவாமி சச்சிதானந்தர் குருவாகக் கிடைத்தமை எந்த சூழ்நிலையிலும் வாழக்கூடிய 
  மனப்பக்குவத்தைதத் தந்தது, மருந்தின்றி வாழ வழிவகுத்தது.
 
 ஆல்: நீங்கள் ஒருவேளை புலம்பெயராமல் இலங்கையிலேயே இருந்திருக்க நேரிட்டால் 
  நீங்கள் புலம்பெயர்ந்து சாதித்ததைவிட சிறப்பாகச் சாதித்திருக்க முடியும் என்று 
  கருதுகிறீர்களா? ஆம், எனில் அது பற்றி...?
 
 சி:பி: இவ்வளவு வசதி வாய்ப்புகள் அங்கு கிடைத்திருக்காது. 2007 வரை இலங்கை சென்று 
  கணினி வகுப்புகளை யாழ்பாணம் மற்றும் தீவு முன்பள்ளிகளில் நடத்தி வந்தேன். எனது 
  யூனிவர்சிட்டியில் பாவித்த கணினிகளை ஊருக்கு அனுப்பி அங்கெல்லாம் கணினி நிலையம் 
  உருவாக்க வய்ப்பு இங்கிருப்பதால் கிடைத்தது.
 
 ஆல்: இதுவரை சாதித்ததாக நீங்கள் கருதுவது, இனி சாதிக்கபோவது என்று நீங்கள் 
  குறிப்பாகச் சொல்ல முடியுமா?
 
 சி:பி: உள்ளவரை மற்றையோர் மனம் மகிழ உதவுவது. இதுவரை சாதித்தாகக் கருதுவது தமிழ் 
  மொழி பாடத்திட்டம்! இது இங்கிலாந்தில் ஏனைய ஐரோப்பிய மொழிகளின் தரத்தில் 
  உள்ளது. இதுதான் சாதித்தது.
 ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிப்பது.
 
 ஆல்: புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?
 
 சி:பி: இன்று நம்நாடு கலங்கி இருக்கிறது. பலமக்கள் அடைபட்டு உண்ண உணவின்றி உடுக்க 
  உடையின்றி படுக்கக் கூரையின்றி இருக்கிறார்கள் முடிந்தளவு தனிப்பட்ட முறையில் 
  கரங்கள் நீட்டி நாம் எல்லோரும் உதவ வேண்டும்
 
 ஆல்: ஈழத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து உங்கள் அவதானிப்பைச் சொல்லமுடியுமா?
 
 சி:பி: "ஈ இருக்கும் இடம்தன்னும் ஈயேன் என்கிறார் மகிந்தா, சரி நிம்மதியாக 
  வாழவிடு என்று இன்றைய மக்கள் கேட்கிறார்கள். ஒருவேளை உணவு கிடைத்தால் போதும் 
  என்றாகிவிட்டது. தந்தை செல்வா காலத்தில் சாத்வீகப் போரில் தோற்றுவிட்டோம்.
 தலைவர் காலத்தில் ஆயுதப்போரால் தோற்றுவிட்டோம் பல உயிர்கைள உறவுகைள 
  இழந்துள்ளோம்.
 
 ஆல்: பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தங்களின் எதிர்காலத் திட்டம் குறித்து முடிவு 
  செய்து வைத்திருப்பீர்கள்.
 அது பற்றி....?
 
 சி:பி: ஓய்வு என்பது எனக்கில்லை, உடல் அசையும் வரையில் தொடர்ந்தும் இதே பணிகள் 
  செய்ய விருப்பம் ஊருக்குப் போக வேண்டும் எம் குழந்தைகளுக்கு எனக்குத் தெரிந்ததை 
  கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே என் ஆசை!
 
 ஆல் : உங்களின் பொன்னான நேரத்தை பலவேலைகளைக்கிடையில் அதையெல்லாம் 
  ஒதுக்கிவைத்துவிட்டு நேயர்களுக்காக/வாசகர்களுக்காக சிரமம் பாராமல் எனது 
  கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தமைக்கு எமது இணைய இதழின் சார்பாக மிக்க 
  நன்றிகளய்யா, நன்றி, வணக்கம்.
 
 சி.பி : இந்த சந்தர்ப்பத்தை அளித்த உங்களுக்கு மிகவும் நன்றிகள். உங்கள் சேவை 
  வாழ்க! நன்றி, வணக்கம்.
 
 albertgi@gmail.com
 |