- தமிழன் (நோர்வே) -

              தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனும் 
              முத்திரையோடு வெளியாகி தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் எல்லாம் 
              வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தேசியப் இனப்பிரச்சனையைக் 
              கருப்பொருளாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மூன்று திரைப் 
              படங்களை இயக்கியிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் எங்கள் ஈழப் 
              பிரச்சனையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கன்னத்தில் முத்தமிட்டால் 
              திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு முதல் வெளியான தேனாலியோ அல்லது 
              நந்தா போன்ற திரைப்படங்கள் இயல்பான கருத்தியல் விவாதங்களின் 
              அடிப்படையில் எங்கள் பிரச்சனையை கையாளவில்லை. அதிக திரைப்பட அறிவும் 
              கருத்துத் தெளிவும் உள்ள இப்படைப்பாளிகள் எங்கள் வாழ்வின் வலிகளை 
              அல்லது போரியல் வாழ்வை வியாபார நோக்கத்தோடு மட்டுமே பதிவு 
              செய்திருந்தார்கள் என்ற விமர்சனங்களே மேலோங்கியிருந்தது. இவற்றை 
              எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையிலும், உலகத் தமிழர்கள் உள்ளம் 
              குளிரும் வகையிலும் உண்மை நிலையினை எடுத்துரைக்க ஒரு காத்திரமான 
              படைப்பாக வெளிவந்திருக்கிறது ஆணிவேர். 
              
              ஒரு ஆவணப் படத்திற்குரிய பாணியில் உள்ளது எனச் சில ரசிகர்கள் 
              கருதிநின்றாலும் இது ஒரு முழுமையான தமிழீழத் திரைப்படம் என்பதை 
              அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். இத்திரைப்படத்தை நேர்த்தியாக 
              இயக்கியிருக்கும் திரு.ஐhன் மகேந்திரன் அவர்கள் நல்லதொரு 
              அத்திவாரத்தை எங்களுக்காகவே அமைத்துக் கொடுத்தது ஓர் வரலாற்றுப் 
              பதிவாகிவிட்டது.
              
              ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் திரையிட்ட இடங்களில் 
              எல்லாம் திருவிழாக் கூட்டம். கண்ணுக்கு விருந்தாக தாயக தரிசனம் 
              கிடைத்தாலும் கண்களில் உற்றெடுத்து கொண்டேயிருக்கிறது கண்ணீர்த் 
              துளிகள். தமிழீழத்துக் கலைஞர்களும் தமிழகத்துக் கலைஞர்களும் முதல் 
              முறையாக இணைந்து எங்கள் மண்ணில் உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம் 
              தொடர்பாக ஏற்கனவே பல ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வந்திருக்கலாம். 
              ஆனால் அந்த விமர்சனங்கள் தொடாத சில பக்கங்களைத் தொட்டுக்கொண்டு 
              அடுத்து நாங்கள் என்ன செய்யலாம்? என்பது பற்றி அலசுவதே என்னுடைய 
              விமர்சனப் பார்வையின் நோக்கமாகும். 
              
              இத்திரைப்படம் வெறுமனே பார்த்துவிட்டு பாரட்டுக்களை அள்ளி 
              வழங்கிவிட்டுப் போகவேண்டிய படம் மட்டுமில்லை என்பதை நாங்கள் 
              ஒவ்வொருவரும் மிகவும் தெளிவாக கவனிக்கவேண்டிய கடமையும் உள்ளது. 
              தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற சாதாரன திரைப்படங்களைப் போல் 
              அல்லாமல் இத் திரைப்படத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய 
              இருக்கின்றது. 
              
              நவீன வசதிகள் உள்ள இக்கால கட்டத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட 
              உபகரணங்களைக் கொண்டு பொருளாதாரச் சுருக்கத்தோடு தயாரிக்கப்பட்ட 
              பிரமாண்டமான படமாகவே கணிக்;கத் தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல் 
              எங்கள் தாயகத்திலேயே தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஓர் முழுமையான 
              திரைப்படமும் கூட. தொழில்நுட்ப வேலைகள் சில தமிழகத்திலும் 
              வெளிநாடுகளிலும் செய்யப்பட்டாலும், இது உருவான தளம் நமது தாயகம் 
              என்பதை மனதில் ஆணித்தரமாகப் பதிவுசெய்யவேண்டும்.
              
              எங்களை பொறுத்தமட்டில் ஏதாவது ஒரு படைப்பு பெயர் சொல்லும்படியாக 
              வெளிவந்துவிட்டால் அதைப் பாராட்டி, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் 
              வார்த்தைகளை அள்ளி வழங்கிவிட்டுப் போய்விடுவதுதான் நடைமுறை. அதற்கு 
              மாறாக அத்திரைப்படம் பற்றி ஆழமான விமர்சனங்களை வைப்பதோ அன்றி அது 
              பற்றிய விவாதங்களை நிகழ்த்துவதோ மிகக்குறைவு. இது திரைப்படத்திற்கு 
              மட்டுமே ஏற்படுகின்ற ஒரு பிரச்சனை மட்டும் அல்ல. இது எந்த 
              கலைப்படைப்பாக இருந்தாலும் அது பற்றிய நியாயமான விமர்சனங்களை முன் 
              வைத்து கலைஞர்களை ஊக்கப் படுத்தி, அவர்களை மேலும் பல புதிய 
              படைப்புகளை படைப்பதற்கான ஆக்கபூர்வமான சூழ்நிலைகளை 
              ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கமில்லை. அதைவிடுத்து தம்பி படம் 
              எப்பிடியாம் என்றால் ஒன்றில் அந்தமாதிரி அல்லது பரவாயில்லை என்ற 
              பதில்கள் மட்டுமே கூடுதலாக எம்மவர் வாய்களில் இருந்து வெளிவரும். 
              அல்லது ஒரு புன்னகை மட்டும் பதிலாகத் தருவார்கள். எங்கள் மத்தியில் 
              தரமான கலைப்படைப்புகள் உருவாக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. 
              எம்மவர் படைப்புகளை எம்மவர்களே இலவசமாகவும் நுகரத் துடிப்பதும், 
              சந்தைப்படுத்துவதற்;குரிய நல்ல தளம் இல்லாமல் இருப்பதும் முக்கிய 
              காரணங்களாகும். ஆனால் இதை எல்லாவற்றையும் முறியடித்து வெற்றிகரமாக 
              வெளிவந்ததுதான் இந்த ஆணிவேர் திரைப்படம். இத்திரைப்படத்தை 
              தயாரித்தவரால் இந்த முறியடிப்பு எப்படி சாத்தியமானது?
              
              
              நாங்கள் எல்லாத்துறைகளிலும் எங்கள் எல்லைகளை விரிவடையச் 
              செய்திருக்கிறோம். ஆனால் இந்தத் திரைப்படத்துறையில் முப்பது 
              வருடங்கள் பின்தங்கியே நிற்கிறோம். அதாவது இந்தப் 
              புலம்பெயர்நாடுகளுக்கு நாங்கள் தாயகத்தைப் பிரிந்து வந்து 
              கிட்டத்தட்ட மூன்று தசாப்த்தங்கள் கடந்துவிட்டது. இன்னமும் தமிழகத்தை 
              அண்ணாந்து பார்த்துக் கொண்டும், அவர்களைக் குறைகூறிக்கொண்டும்தான் 
              இருக்கிறோம். எங்களை வைத்து அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்று 
              சொல்லிக்கொண்டே அவர்களுடைய திரைப்படங்களையும் 
              சின்னத்திரைகளிலேயும்தானே பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். 
              பலதரப்பட்ட முறைப்பாடுகளை வேறு அவர்கள் மேல் இலகுவாக அள்ளிக் 
              கொட்டிவிட்டு மீண்டும் அங்கலாய்த்து நிற்பதும் அவர்களிடம்தான். இந்த 
              நிலை மாறவேண்டும் என்றால் தரமான, ஆழமான, காத்திரமான நிறையப் 
              படைப்புகளை தயாரிக்க நாங்கள் முன்வரவேண்டும். திரைத்துறையென்று 
              சொன்னால் அனுபவம் உள்ள தமிழகக் கலைஞர்களை அணுகி அவர்களோடு இணைந்து 
              திரைப்படங்களைத் தயாரிக்கலாம். அதில் எந்தவிதமான தவறுமில்லை. 
              
              இங்கு முக்கியமான ஒரு கருத்தை இத்தருணத்தில் சொல்ல விரும்புகிறேன். 
              எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருபவர்களை தடுப்பதற்கு தமிழகத் 
              தமிழர், ஈழத் தமிழர் என்ற தரப்படுத்தலுக்கு உட்படுத்துகின்ற சிலர் 
              எங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். என்றுமே எங்களோடு இணைந்து 
              பணியாற்ற முன்வருகின்ற தமிழகக் கலைஞர்கள் மனதை 
              புண்படச்செய்யக்கூடாது. இதுபோன்ற சில விமர்சனங்கள் இணையத்தளங்களில் 
              உலவுவதாக இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிகவும் கவலையோடு 
              என்னிடம் தெரிவித்தார். 
              
              தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் இருந்து முதலில் 
              நாட்டுக்கு ஒரு திரைப்படம்; எனும் அடிப்படையில் தரமான முறையில் 
              தயாரிக்கப்படுமானால் வருடத்தின் நிறைவில் எத்தனை திரைப்படங்கள் 
              எங்கள் கைகளுக்கு கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 
              அதைவிட்டு விட்டு எங்களுக்கென ஒரு திரைப்படமாக ஆணிவேர் 
              வந்துவிட்டதுதானனே என்ற ஆனந்தத்தில் மயங்கக்கூடாது. மாலை நேரத்து 
              மயக்கங்களில் இருந்து முதலில் விடுபடவேண்டும். கலைத் தேடுதல்கள் கடின 
              உழைப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். 
              
              இன்றைய காலகட்டத்தில் சினிமா என்கிற ஊடகம் ஒர் அற்புதமான கலைவடிவமாக 
              எமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வடிவத்தையும் நாங்கள் முழுமையாக 
              கையாளப்பழகிக் கொள்ளுவோமே ஆனால் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் 
              வெற்றிக்கு வழிவகுக்க இதுவும் பலவழிகளில் உதவும் என்பது நிதர்சனம். 
              அதுமட்டுமில்லாமல் எங்கள் மொழி, கலை கலச்சார வாழ்வின் விழுமியங்களை 
              சர்வதேசத்தோடு பகிர்ந்து கொள்ள பலவழிகளிலும் உதவும் என்பதும் உண்மை. 
              ஈரானியத் திரைப்படங்களைப் போல் பல நிஐங்களை வெளிப்படுத்தக்கூடிய பல 
              உண்மைக் கதைகள் எங்கள் வாழ்விற்குள் புதைந்து கிடக்கின்றது.
              
              ஆணிவேர் திரைப்படம் மூலம் நமது திரைப்படத்துறை வளர்ச்சி பெறப்போகிறது 
              என்ற ஒரு கருத்து பரவலாக பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த 
              கருத்தை புலம்பெயர்நாடுகளில் வாழும் எத்தனை திரைப்படத்துறை சார்ந்த 
              கலைஞர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள்? அப்படி உள்வாங்கியிருந்தால் 
              அவர்கள் செய்கின்ற முயற்சிதான் என்ன? சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு 
              தயாரிப்பாளர் முன்வந்தது போல ஏனைய நாடுகளில் இருந்து எத்தனை 
              தயாரிப்பாளர்கள் முன்வரப்போகிறார்கள். அவர்களுடைய திரைப்படத் 
              தயாரிப்பின் திட்டமிடல் எப்படி அமையப்போகிறது? எங்கள் மத்தியில் உள்ள 
              பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிறையப் பணம் வைத்திருந்தாலும் யாரை 
              நம்பி பெரும்தொகைப் பணத்தை முதலீடு செய்வது என்ற சந்தேகத்துடனும், 
              மனப் பயத்துடனும்தான் இருக்கின்றார்கள். 
              
              ஆணிவேர் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களில் எத்தனை 
              பேருக்கு நாங்களும் இப்படி ஒரு திரைப்படத்தைத் தயாரித்தால் என்ன 
              என்று தோன்றியிருக்கும். ஆனால் எவரிடம் போவது அல்லது குறித்த 
              இயக்குனரை எப்படி நாடுவது போன்ற தயக்கங்களோடு எத்தனை ஆர்வலர்கள் 
              காத்திருப்பீர்கள்?;; எனக்குப் பரிட்சயமான சில இயக்குனர்கள் 
              தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடனான தொடர்புகளை 
              ஏற்படுத்தித்தரக் காத்திருக்கிறேன். இந்த விமர்சனத்திற்கு உங்கள் 
              கருத்துகளை வழங்குவதன் மூலம் என்னோடு தொடர்பு கொள்ளலாம்.
              
              
              இதுவரையில் தாயகத்தை தவிர்த்துப் பார்க்கையில் இரண்டு அல்லது நான்கு 
              படங்கள்தான் புலம்பெயர்நாடுகளில் வெளிவந்திருக்கும். இவை 
              பெரும்பாலும் தமிழகத்திரைப்படங்களைத் தழுவிய திரைப்படம் என்ற 
              வட்டத்திற்குள் அகப்பட்டே திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றது. இந்த 
              கருத்தை முற்றுமுழுதாக சிலர் ஏற்கலாம் அல்லது ஏற்காமல்கூட போகலாம்.
              
              ஆனால் அதுதான் உண்மையென்பதை எளிதாகக் கூறலாம். திரைப்படம் எடுக்கும் 
              முயற்சிகள் சில குறும்படம் எடுக்கும் முயற்சியில் போய் 
              முடிவடைந்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் 
              பார்க்கையில் முழுநீளத் திரைப்படத்தைவிட எம்மவர் பல தரமான 
              குறும்படங்களைத் தயாரித்திருகிறார்கள் என்பது உண்மையும்கூட. ஆனால் 
              எவ்வளவு காலத்திற்குத்தான் குறும்படங்களை மட்டும் 
              தயாரித்துக்கொண்டிருக்கப் போகிறோம்? இப்போது உள்ள சூழ்நிலையில் 
              எங்களுக்கான வெண்திரைக்களம் எங்கு நிறுவப்படப்போகிறது? இதுபோன்ற 
              கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லாத நிலையிலேயே இன்னும் 
              வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 
              
              ஆணிவேர் திரைப்படத்தை எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் 
              உருவாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த சிரமங்கள் எல்லாம் அங்குள்ள 
              எங்கள் உறவுகள் வழங்கிய பாரிய ஒத்துழைப்பால் மறைந்து போய் எங்கள் 
              மனம் நிறைந்தது என்று கூறியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் 
              திரு.ஐhன் மகேந்திரன் அவர்கள். இந்தப் படத்தில் இணைந்து மிகவும் 
              உயிரோட்டமாக எங்கள் வலிகளை தங்கள் உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்திய 
              நடிகர் நந்தா, நடிகைகள் மதுமிதா, நீலிமா மூவரையும் பெரிய மனதோடு 
              பாராட்டவேண்டும். இத்திரைப்படத்தில் இயல்பாகவே நடித்துள்ள எங்கள் 
              கலைஞர்கள் ஒவ்வொருடைய முகத்திலும் வார்த்தைகளால் வருணிக்க முடியாத 
              எதிர்பார்ப்புகள் பூத்திருக்கின்றன. இது எங்கள் திரைக்களம் என்னும் 
              பெருமகிழ்ச்சியின் சாரல் வழிகிறது.
              
              இத்திரைப்படத்தில் குறை நிறைகளை அளவிடும்போது நிறைகளே எங்கள் 
              பார்வையை நிறைவடையச் செய்கின்றது. இருப்பினும் ஓர் தரமான படைப்பெனும் 
              வகையில் இதில் ஒர் குறையென சொல்ல வேண்டுமானால் இசையின் பங்களிப்பைச் 
              சொல்லலாம். இதில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் மட்டும் எங்கள் உயிரை 
              வருடியது. ஆனால் இத்திரைப் படத்திற்கான பின்னணி இசை பெரிதாக எதுவும் 
              செய்யவில்லை என்பதுதான் உண்மை. இதில் பல ரசிகர்களுக்கு என்னோடு 
              உடன்பாடு இருக்கலாம் அல்லது பல வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். 
              ஆனால் ஒரு ரசிகனாக என்னால் இதை உணரக்கூடியதாகவே இருந்தது. ஓவ்வொரு 
              கதாபாத்திரங்களுடைய உணர்வுகள் அழகாக வெளிப்படும் போது இசையால் அந்தத் 
              தருணங்கள் மெருகூட்டப்படவேண்டும். அந்த விடயத்தில் இசையமைப்பாளரின் 
              திறமை குறைவாகவே வெளிப்பட்டிருக்கிறது.
              
              நமது போரியல் வாழ்வை, நமது மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தாமல் 
              மிகவும் உயிர்த்துடிப்போடு சொல்லப்பட்ட ஒரு காத்திரமான படைப்பில் 
              பின்னணி இசையப்பணியினை திறம்படச் செய்திருந்தால் சர்வதேச திரைப்பட 
              விழாக்களில் பங்குபற்றக்கூடிய முழுமையான தகமைகளையும் பெற்றிருக்கும். 
              ஒரு சில இடங்களில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தாலும் 
              நேர்த்தியான நெறியாள்கையால் அவையெல்லாம் மறைந்து போகின்றன.
              
              இதை ஒரு ரசிகனின் கருத்தாக இசையமைப்பாளர் ஏற்றுக்கொள்வார் என்று 
              நம்புகின்றேன். ஏனைய தொழிநுட்பக் கலைஞர்களை திறந்த மனதோடு 
              பாராட்டுவதைத் தவிர எனக்கு வேறு ஒரு விமர்சனங்களையும் 
              முன்வைக்கமுடியவில்லை. ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் தங்கள் 
              பொறுப்பினை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செய்திருக்கிறார்கள். 
              அடுத்து வெளிவரயிருக்கின்ற படைப்பு எல்லாவகையிலான மேம்படுத்தலோடு 
              வெளிவரவேண்டும் என்பதே எனது ஆதங்கம். நாங்கள் தொடர்ந்தும் 
              திரைப்படத்துறையில் வளரவேண்டும் என்பதே எமது பெருங்கனவு.
              
              எங்களுக்கான திரைப்படத்துறை வளர்ச்சியடையவேண்டும் என்ற நோக்கில், 
              எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லாம் ஓர் அற்புதமான திரைப்படத்தை 
              துணிந்து தயாரிக்க முன்வந்த சி.பிரபாகரன் அவர்களை இதயபூர்வமாக 
              வணங்குகின்றேன். ஆணீவேர் என்னும் ஒர் வரலாற்றுப் பதிவான 
              அத்திவாரத்தைப் போட்டிருக்கிறீர்கள். உங்கள் பின் இனி வருபவர்களுக்கு 
              நிங்கள் சொல்ல வருவம் செய்திதான் என்ன? உங்களுடைய அடுத்த தரமான 
              படைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகத்தழிழ் ரசிகர்களில் 
              ஒருவனாக நானும் இணைகிறேன்.
              
              தமிழன் நோர்வே
              kovilkadvai@gmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




