-அ.முத்துலிங்கம் -
சமீபத்தில் பொஸ்டன் நகரத்துக்கு வந்த ஒரு ரஸ்யப் பெண்மணி கம்புயூட்டர் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் நிரல் எழுதும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் மிகத்திறமையாகச் செய்து வேலை கிடைக்கப்போகும் தறுவாயில் கம்பனி அதிபர் ஒரு சாதாரணக் கேள்வி கேட்டார். 'உங்கள் பொழுதுபோக்கு என்ன?' பெண் உடனேயே பரவசமாகி 'வைரஸ் எழுதுவேன்; உலகத்தரமான வைரஸ்கள் சில நான் உண்டாக்கியவைதான்' என்றிருக்கிறார். கம்பனி அதிபர் அதிர்ச்சி அடைந்த அளவுக்கு ரஸ்யப் பெண்ணும் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு தான் செய்தது நாசவேலை என்பதுகூட தெரியவில்லை.
இதே மாதிரித்தான் யாழ்ப்பாணத்தில் 19ம் நூற்றாண்டில் ஒரு புலவர் இடைச்செருகல் செய்வதில் வல்லவராயிருந்தார். எந்தப் பிரபலமான கவியின் பாடல்களிலும் தன்னுடைய இரண்டு பாடல்களை நுழைத்துவிடுவார். தான் செய்வது தீங்கான வேலை என்பதைக் கூட அவர் உணரவில்லை; மாறாக பெருமைப் பட்டார். 'இடைச்செருகல் அம்பலவாணர்' என்றே அவரை அழைத்தார்கள்.
அப்பொழுது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வாழ்ந்த புலவர் சுப்பையனார் 400 பாடல்கள் கொண்ட 'கனகி சுயம்வரம்' என்ற புராணத்தைப் பாடியிருந்தார். கனகி என்பவள் அக்காலத்தில் சிவன் கோவில் கணிகையாக இருந்த பேரழகி. அவள் அழகில் மதிமயங்கிய பலரில் சுப்பையனாரும் ஒருவர். எடுத்த எடுப்பிலேயே கனகியின் அழகை இப்படி வர்ணிப்பார்.
நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரி நாட்டிற் கொங்கைக்
குடந்தா னசைய வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார் சந்நியாசிகள் யோகம்
விட்டார் சுத்தசை வரெல்லாம்
மடந்தா னடைத்துச் சிவ
பூசையுங் கட்டி வைத்தனரே.
ஆனால் கனகி சுயம்வரம் பாடல்களில் இன்று கையில் கிடைத்தவை 28 பாடல்கள்தான். அதிலும் 16 பாடல்கள் இடைச்செருகல் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்திற்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். அச்சுக்கலை ஏற்கனவே வந்துவிட்டபடியால் பல புலவர்கள் நூல்களை எழுதி வெளியிட்டார்கள். இந்தப் புலவர்களுக்கு எல்லாம் நாயகர்போல விளங்கியவர் ஆறுமுக நாவலர். அதே காலத்தில்தான் சி.வை. தாமோதரம்பிள்ளை, நா.கதிரைவேற்பிள்ளை போன்ற பல புகழ்பெற்ற புலவர்களும் வாழ்ந்தார்கள்.
நாவலருக்கும் பெர்சிவல் பாதிரியாருக்கும் இடையில் மாணாக்கர், நண்பர், குரு என்ற விசித்திரமான ஓர் உறவு இருந்தது. தமிழ் நாட்டில் அனுபவம் வாய்ந்த ஆங்கில தமிழ் புலமையாளர்கள் பலர் இருந்தபோதிலும் இருபது வயதேயான நாவலரிடம் பெர்சிவல் பாதிரியார் பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும்பணியை ஒப்படைத்தார். நாவலர் நாளுக்கு ஆறு மணி நேரம் என்று எட்டு வருட காலம் உழைத்து பணியை முடித்தார். பாதிரியாரும் நாவலரும் சென்னைக்கு வந்து பைபிள் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்று அதை 1850ம் ஆண்டு வெளியிட்டார்கள்.
யாழ்ப்பாணப் புலவர்களுக்கு தமிழ் நாட்டில் பெரும் கௌரவம் இருந்தது. நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்கூட தம் நூலில் இப்படி எழுதியிருக்கிறார்.
'
பொதுவாக அக்காலத்தில் யாழ்ப்பாண வாசிகளே தமிழில் நன்றாய்க் கற்றவர்கள் என்று மதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குள்ளும் தாமோதரம்பிள்ளை அவர்கள் சிறந்த புலமையுள்ளவர் என்று மதிக்கப்பட்டார். பேசும்போது ஏறக்குறைய தமிழ்ச் சொற்களையே கையாளுவார்.'
2300 ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழகத்துடன் ரோமர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று 'பதிவிரதை விலாசம்' எழுதிய ஈழத்து குமாரகுலசிங்கத்தின் மகன் கலாநிதி தம்பையா தன் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார். கி.பி 40ல் ரோமாபுரியை ஆண்ட குளோடியஸ் காலத்தில் அவருடைய அவைக்களத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா என்னும் தமிழர் இருந்தார் என்று இலங்கை வரலாறு எழுதிய எமர்சன் ரென்னற் சுட்டிக் காட்டியுள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
நெல்லைநாத முதலியார் என்றொரு புலவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். எதையும் ஒருமுறை கேட்டால் அதை அப்படியே ஞாபகத்தில் வைத்து திருப்பிச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். முத்துக்குளிப்பில் அளவற்ற ஆதாயமீட்டிய வைத்திலிங்கம் செட்டியார் பெரும் செல்வந்தர். நெல்லைநாதரும் இன்னும் பல புலவர்களும் புடைசூழ தினம் செந்தமிழ் பாடல்களை அனுபவிப்பது அவருடைய வழக்கம்.
ஒருநாள் அவர் சபையில் செந்திக்கவி என்ற தமிழ்நாட்டு புலவர் பல எடுபிடிகளோடு வந்து தன் பாடல்களைப் பாடிக்காட்டினார். அவர் முடித்ததும் செல்வந்தர் நெல்லைநாதரைப் பார்த்து பாடல்கள் எப்படி என்று வினவியிருக்கிறார். அவரோ 'பாடல்கள் நல்லவைதான், ஆனால் அவையெல்லாம் பழம்பாடல்கள்' என்று கூறி அத்தனை பாடல்களையும் மடமடவென்று வரிசை தவறாமல் பாடிக்காட்டினார். செந்திக்கவி ஏங்கி கதிகலங்கி நின்றதைப் பார்த்த நெல்லைநாதர் சிரித்து, உண்மையைக் கூறி அவரைத் தழுவி வாழ்த்தினார். அவரும் அகமகிழ்ந்து பரிசு பெற்று திரும்பினார் என்பது கதை.
அதே காலத்தில் முத்துக்குமார கவிராயர் என்பவரும் ஈழத்தில் வாழ்ந்தார். இவருடைய சிறப்பு ஊர்களின் பெயர்களை இட்டுக்கட்டி அவற்றுள் வேறு பொருளை வைத்து பாடுவது. பார்வைக்கு ஊர்ப்பெயர்களாக இருந்தாலும் பாடலின் பொருள் இன்னொன்றாக இருக்கும். யாழ்ப்பாணத்து ஊர்கள் சில: சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை.
கைலாச மலை சிவன் மகன் குதிரையில் வர பெண் கொடி காமம் மிகுதியாகி, ஆனைக்கொம்பு போன்ற மார்புகளைக் கட்டவிழ்த்து விட்டாள். கரும்பு வில் மன்மதனும் இளவாலை மடக்கொடியிடம் வந்து சேர்கிறான். இதுதான் பொருள்.
முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்து
அடைய வோர்பெண் கொடிகாமத் தானசைத்து
ஆனைக் கோட்டை வெளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னன்கடம் புற்றமல் லாகத்துத்
தடைவி டாதனை யென்று பலாலிகண்
சார வந்தன ளோர்இள வாலையே.
என்னுடைய சிறுபிராயத்தில் அம்மா மகாபாரதத்தில் இருந்து பாடல்கள் பாடிக் காட்டுவார். திரௌபதி என்றால் அம்மாவுக்கு கண்ணீர் வந்துவிடும். துச்சாதனன் போய் திரௌபதியை இழுத்துவரும் கட்டத்தில் இப்படி ஒரு பாடல் வரும்.
ஐவருக் கொருத்தியாய அன்னமே நடந்து வாடி
தைவரு தருமன்தோற்ற தையலே நடந்து வாடி
பொய்நல மெய்யதாகப் புணரு மெல்லியலே வாடி
துய்ய அண்ணனைச் சிரித்த தோகையே நடந்து வாடி
இந்தப் பாடலை உண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருணாசலம் சுவாமிநாதர் என்ற புலவர்தான் பாடியிருந்தார். இவர் இராம நாடகமும், தருமபுத்திர நாடகமும் எழுதினார். ஒரு காலத்தில் இந்த நாடகங்கள் ஊரூராக நடிக்கப்பட்டு சனரஞ்சகமாக இருந்தன. ஆறுமுக நாவலரும், பின்னர் வந்த விபுலானந்த அடிகளும் அவற்றைப் போற்றியிருக்கிறார்கள். இவருடைய பாடலைத்தான் அம்மா பாடினார் என்பது எனக்கு பல வருடங்களுக்கு பின்னரே தெரியவந்தது. இன்றைய சினிமாப் பாடல்கள்போல ஒரு காலத்திலே சுவாமிநாதரின் பாடல்கள் ஈழநாட்டின் கிராமத்து பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்திருக்கவேண்டும்.
இந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு நீண்ட விவாதம் நடந்தது. அதிலே வியப்பளிப்பது என்னவென்றால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள்.
விசுவநாதபிள்ளை தன் இருபதாம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம், கணிதம், வானசாஸ்திரம் என்று பல துறைகளையும் கற்றுத் தேர்ந்திருந்ததோடு எழுத்திலும், பேச்சிலும் வல்லவராயிருந்தார். இவருக்கும், 18 வயது நாவலருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் மூண்டது.
'கண்ணுக்கு சுய ஒளி உண்டா, இல்லையா?' என்பதுதான் தலைப்பு. இது நடந்தது 1840ம் ஆண்டில். இந்த வாக்குவாதத்தில் நாவலர் எந்தக் கட்சி, விசுவநாதபிள்ளை எந்தக் கட்சி என்பது தெரியவில்லை. கண்ணுக்கு சுய ஒளி உண்டென்றால் இருட்டிலே இருக்கும் சாமான்கள் எல்லாம் டோர்ச் அடித்ததுபோல பளிச்சுப் பளிச்சென்று தெரியுமே என்பதை ஒரு குழந்தைகூடச் சொல்லும். இது தவிர, இந்த விவாதம் நடப்பதற்கு 800 வருடங்கள் முன்பாகவே அரபிய விஞ்ஞானி அல்ஹாசன் என்பவர் பொருள்கள் ஒளியை பிரதிபலிப்பதன் மூலமே கண்கள் அவற்றைப் பார்க்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருந்தார். இரண்டு பெரும் தமிழ் புலவர்கள் ஏற்கனவே கண்டறிந்த ஒரு விஞ்ஞான உண்மையை மீளக் கண்டுபிடிப்பதற்கு ஈழத்தில் சண்டைபோட்டது ஒரு புதுமைதான்.
இதே விசுவநாதபிள்ளை, அவர் இரண்டு வயது மூத்தவராயிருந்த போதிலும், பின்னர் சிதம்பரத்தில் நாவலரைக் குருவாக ஏற்றுக்கொள்கிறார். விசுவநாதபிள்ளையிடம் படித்தவர்தான் சி.வை.தாமோதரம்பிள்ளை. இருவரும் சென்னை சென்று அங்கே 1857ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஏ பரீட்சைக்கு விண்ணப்பித்தார்கள். பல்கலைக்கழகம் நடாத்திய முதல் பி.ஏ வகுப்பில் சித்தி பெற்றவர்கள் இவர்கள் இருவருமே யாவர். இவர்களால் அன்று ஈழம் பெரும் புகழ் பெற்றது.
சி.வை. தாமோதரம்பிள்ளை தொடர்ந்து சட்டம் படித்து பி.எல் பட்டம் பெற்று புதுக்கோட்டை நீதிபதியாக உத்தியோகம் பார்த்தார். விசுவநாதபிள்ளை சென்னை பல்கலைக் கழகத்திலேயே வேலைபெற்று பரீட்சகராக கடமையாற்றினார். இவருடைய பெரிய சாதனை 676 பக்கங்கள் கொண்ட தமிழ் - ஆங்கில அகராதி ஒன்றை உருவாக்கியது. சென்னைக் கலாசங்கத்தார் 1929ம் ஆண்டு வரை ஐந்து பதிப்புகள் வெளியிட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாண தமிழ் அகராதி எனப் பெயர் பெற்ற பேரகராதியை சந்திரசேகர பண்டிதர் தன்னந்தனியனாய் தயாரித்தார். 1842ல் வெளிவந்த இந்த அகராதி 58,500 வார்த்தைகளை உள்ளடக்கியது. தமிழ் உலகம் இதை வியந்து போற்றியதற்கு காரணம் இருந்தது. ஆங்கிலத்தில் வந்த முதல் அகராதியை தயாரித்தவர் சாமுவெல் ஜோன்சன் என்ற அறிஞர். எட்டு வருடம் தனியாக உழைத்து 1755ம் ஆண்டு வெளியிடப்பட்ட அகராதியில் 40,000 வார்த்தைகளே இருந்தன. இத்துடன் ஒப்பிடும்போது 87 ஆண்டுகள் பிந்தி வெளிவந்த தமிழகராதியை பெரும் சாதனை என்றே சொல்லவேண்டும்.
மற்றுமொரு ஈழத்து புலவரான ஹென்றி மார்ட்டின் என்பவரை 'சகலாகம பண்டிதர்' என்று போற்றுவர். இவர் போதகராயும், ஆசிரியராயும், புலவராயும், கலைஞராயும், பொறியியலாளராகவும் பணியாற்றினார். பாலோடு நீர் கலந்தால் அதைக் காட்டிக்கொடுக்கும் கருவியை கண்டுபிடித்தார். இவர் உருவாக்கிய விநோதமான பூகோள உருண்டையைக் கண்ட பிரித்தானிய அரசு இவருக்கு கௌரவ அங்கத்தினர் பதவி கொடுத்தது. இவரே முதன்முதலாக காளிதாசரின் சகுந்தலை காவியத்தை தமிழில் நாடகமாக தந்தவர்.
இவர் சிறுவராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இவருடைய விடாமுயற்சியையும், புத்திக்கூர்மையையும் காட்டும். மேற்படிப்பில் சேர்ப்பதற்காக இவருடைய தந்தையார் இவரை தெல்லிப்பழை மிஷன் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் காலை அழைத்துச் சென்றார். அங்கே அதிபராக இருந்த பூர் என்ற வெள்ளைக்காரர் இடமில்லை என்று மறுத்துவிட்டார். தந்தையார் மனமுடைந்து திரும்ப முற்படவே சிறுவன் மறுத்து இரவு மட்டும் அங்கேயே நின்றான். வேலை முடிந்து வெளியே பூர் வந்தபோது சிறுவன் 'ஐயா, நூறு ஆடுகள் மேய்கின்ற நிலத்திலும், கிடக்கின்ற பட்டியிலும் ஓர் ஆட்டுக்குட்டிக்கு இடம் இருக்காதோ?' என்று கேட்டதும் பெரியவர் பூர் அவனை வாரியணைத்து இடம் கொடுத்தாராம்.
நாவலர் மெச்சிய இன்னொருவர் வைமன் கதிரைவேற்பிள்ளை. இவர் ஆழ்ந்த படிப்பாற்றலுடன் இயற்கை விவேகியாகவும் இருந்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், ஹீபுரு முதலிய மொழிகளை கற்றுத் தேர்ந்திருந்தார். கணிதத்தில் தூய கணிதம், பிரயோக கணிதம் என்றும், வானசாஸ்திரம், தர்க்கசாஸ்திரம் என்றும் ஒன்றையும் விட்டுவைக்காமல் படித்து முடித்து ஆசிரிய வேலை பார்த்தவர் தனது 26ம் வயதில் சட்டம் படிக்க ஆரம்பித்தார். அந்தக்கால வழமைப்படி தோமஸ் றஸ்ட் என்பவரிடம் நூறு பவுண் கொடுத்து இரண்டாண்டு பயிற்சி பெற்றார். பயிற்சி முடிவில் கதிரைவேற்பிள்ளையின் திறமையால் கவரப்பட்ட றஸ்ட், 50 பவுணை திருப்பி அவரிடமே கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.
1872ல் இவர் நீதவானாக பதவி ஏற்றார். இளைப்பாறியதும் தன்னோடு பல புலவர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழகராதி தொகுக்கத் தொடங்கினார். அந்தப் பணி முற்றுப்பெற முன்னர் அவர் காலமானாலும் 1910ம் ஆண்டில் 'கதிரைவேற்பிள்ளை தமிழகராதி' என்ற பெயரில் அது வெளிவந்தது.
இந்த தகவல்கள் எல்லாம் என் சொந்த முயற்சியில், நான் செய்த ஆராய்ச்சியில் பெற்றவை அல்ல. சமீபத்தில் பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் எழுதி வெளிவந்த 'செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்' நூலில் கிடைத்தவைதான். இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும், அரிய தகவல்களையும் அந்த நூலில் அவர் தருகிறார். நேரம் போவது தெரியாமல் புத்தகத்தை ரசித்து வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.
பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஏகச்சக்கர நகரத்தில் வாழ்ந்தபோது ஒவ்வொரு வாரமும் பகாசுரனுக்கு ஒவ்வொரு வீட்டினரும் வண்டி நிறைய உணவுடன் ஓர் ஆளையும் பசியாற அனுப்பி வைக்கவேண்டும். இந்தப் பகாசுரனைத்தான் வீமன் ஒரு காலை நேரம் ரகஸ்யமாக வதம் செய்தான். புராணத்தில் மாத்திரமல்லாமல் உண்மையில் யாழ்ப்பாணத்திலும் இப்படியான ஒரு சம்பவம் போர்த்துக்கீசர் காலத்தில் நடந்தது. போர்த்துக்கீச அதிபதிக்கு ஒவ்வொரு வீட்டாரும் முறைவைத்து அவர் உண்பதற்கு பசுக்கன்று ஒன்றை அனுப்பிவைக்கவேண்டும். காராளபிள்ளை ஞானப்பிரகாசர் என்பவர் அதிபதியின் கட்டளையை துச்சமாக மதித்தார். இவரால் அவனை வதம் செய்யமுடியவில்லை ஆனால் இரவிரவாக இந்தியாவிற்கு ஓடி துறவியாகி வடமொழியிலும், தமிழிலும் பாண்டித்தியம் பெற்று, பல நூல்கள் செய்து ஆதீனப் பெருமை பெற்றார்.
நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போல திருகோணமலை அகிலேசபிள்ளையும் பல அரிய நூல்களைப் பரிசோதித்து பதிப்பித்தார். நாவலர் பாராட்டிய இன்னொருவர் உடுப்பிட்டி சிவசம்பு புலவர். புலமைப் பெருக்கம் உள்ளவர்; பேரும் புகழும் படைத்தவர். தமிழ்நாட்டு மீனாட்சி சுந்தரம்பிள்ளைபோல மூவாயிரத்துக்கும் மேலான பாடல்களை அசையாமல் பாடிக் குவித்தார். ஏழைகளுக்கு பொருளை அள்ளிக் கொடுத்து அவருக்கு முடை வந்தபோது மட்டக்களப்பு வர்த்தகர் கந்தசாமி தன்னை வந்து பார்க்கும்படியும், தான் அவருக்கு ஆயிரம் ரூபா தருவதாகவும் வாக்களித்தார். புலவர் சிரமத்தைப் பாராது பல நூறு மைல் தூரம் பயணம் செய்து வர்த்தகரிடம் போனால் அவர் வீட்டில் இல்லை. தாம் வந்த காரியத்தைச் சொன்னபோது அவருடைய மனைவி இரண்டாம் கதை பேசாது ஆயிரம் ரூபாவை தூக்கி கொடுத்து வணங்கினாராம். ஆயிரம் ரூபா அந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய தொகை. இந்தச் சம்பவம் புலவர் மீது வர்த்தகர் வைத்த மரியாதையை சொல்கிறதா அல்லது கணவன் மனைவியின் அந்நியோன்யத்தை சொல்கிறதா? இரண்டையும்தான். கந்தசாமியையும், மனைவி தெய்வானையையும் புலவர் பிரபாவப் பாமாலையாக பாடி தன் நன்றிக் கடனை தீர்த்துக் கொண்டார்.
நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை கணித பாடத்தில் அதிவல்லவராய் இருந்ததால் யூக்ளிட் என்றே அவரை அழைத்தார்கள். மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தலைப்பாகை, கோர்ட், உத்தரியம் அணிந்து தாளங்குடை பிடித்து காலை வேளையில் ஆறுதலாக நடந்து வருவார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மாணாக்கர்கள் ஓடியோடி படிப்பார்களாம். இவருடன் ஆங்கிலேயர் பலரும் கற்பித்தனர். ஒருநாள் மாணாக்கன் ஒருவன் பூசிச் சென்ற திருநீற்றை ஆசிரியர் அழிக்கச் சொன்னதால் உண்டாகிய மனக்கசப்பில் அவர் கல்லூரியை விட்டு நீங்கினார் என்று கூறுவர்.
அளவெட்டி கனகசபைப் புலவர் சிலேடையாகப் பேசுவார். தையல் பூ வேலை செய்யும் பெண்ணிடம் நகைச்சுவையாக 'நீ ஒரு பூத்தை' என்றாராம். மட்டக்களப்பு மொட்டை வேலாப்போடியார் எடுத்த எடுப்பில் எள்ளலாக பாடல்கள் எழுதுவார். தம்பிலுவில் வேலை பார்க்க வந்த ஒருவர் தவறான வழியில் ஒருத்தியோடு தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். ஊரவர் அந்த உத்தியோகத்தரின் காதை எட்டிய மட்டில் அறுத்து துரத்திவிட்டனர். அவர் நிலை கண்டு இரங்கிய பெண் அவருக்கு ஒரு பசு மாட்டையும், கன்றையும் ரகசியமாக அனுப்பிவைத்தாளாம். புலவர் அந்தச் சம்பவத்தை இப்படி மக்கள் இலக்கியமாக்கினார்:
காதறுந்த வேதனைக்கு பால் கறந்து உண்ணவென்று
காரிகையாள் மாடு கன்று தான் கொடுத்தாளாம்
காதறுந்து நாவரண்டு காமவிடாயால் மெலிந்து
காட்டகத்திற் பேயதுபோல் ஓடலுற்றானாம்.
புலவரும் வறுமையும் பிரிக்க முடியாதது என்று கூறுவார்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது 19ம் நூற்றாண்டு ஈழத்துப் புலவர்கள் உயர் பதவிகளில் நல்ல வசதியாக வாழ்ந்தது தெரிகிறது. உண்மையான தமிழ் ஆர்வம் ஒன்றே அவர்கள் பணி செய்யக் காரணமாக அமைந்தது. சேனாதிராய முதலியார் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், அப்புக்காத்தாகவும் இருந்தார். சைமன் காசிச்செட்டி நில அளவையாளராக இருந்தார். சி.வை. தாமோதரம்பிள்ளை நீதவானாகவும், ஹென்றி மார்ட்டின் ஆசிரியராகவும், கனகசபை வைத்தியராகவும், கந்தப்பிள்ளை ஆராய்ச்சியாகவும் இருந்தார்கள். ஒருத்தரும் வயிற்றுப் பிழைப்புக்காக 'சந்திரனே, சூரியனே' என்று பொய்யாகப் புகழ்ந்து பாடி இரந்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கவில்லை. தன்மானத்தோடும், தன்னார்வத்தோடும் தரமான கவிதைகளையும், நிறைவான சாதனைகளையும் படைத்தார்கள்.
இன்னுமொன்று காணலாம். புலவரின் பெயருக்கு முன்னே - அவர் கிறிஸ்துவரோ, இந்துவோ - ஓர் ஆங்கிலப் பெயரும் இணைந்து கொண்டிருக்கும். எவாட்ஸ் கனகசபை, வைமன் கதிரைவேற்பிள்ளை, சைமன் காசிச்செட்டி, கறோல் விசுவநாதபிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, இப்படி. அந்தக் கால வழக்கத்தின் பிரகாரம் அமெரிக்கப் புரவலர் ஒருவரின் பெயரை நன்றிக்கடனாக சூடிக்கொள்ளவேண்டும். இந்த நியதியின் படி கிறிஸ்தவ கல்லூரிகளில் படித்தவர்கள், அவர்கள் இந்துவாக இருந்தாலும், ஒரு கிறிஸ்தவ பெயரை முன்னுக்கு ஒட்டவைத்தார்கள்.
இந்த நூலைப் படித்து முடித்தபோது ஒரு யோசனை தோன்றியது. அந்தக் காலத்தில் இடைச்செருகல்காரர்கள் கெடுதி செய்ததுபோல, இந்தக்காலத்திலும் வைரஸ்காரர்கள் தங்கள் பெயரை மறைத்து, தங்கள் மேலான உழைப்பைக் கொடுத்து, தீங்கான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு மாற்றத்துக்கு, யாராவது புலவர் சுப்பையனாரின் கனகி சுயம்வரத்தையும், கட்டுவன் சட்டம்பியாரின் வசந்தன் நாடகத்தையும், மங்களநாயகி எழுதிய 'உடைந்த உள்ளம்' என்ற நவீனத்தையும் இணையத்தில் இடைச்செருகல் செய்தால் அது எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும். வைரஸ்காரர்களும், இடைச்செருகல்காரர்களும் இதைக் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.
amuttu@gmail.com