இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!

ஒரு அசலான மனுஷன் - என். எஸ். கிருஷ்ணன் -

- வெங்கட் சாமிநாதன் -

ஒரு அசலான மனுஷன் - என். எஸ். கிருஷ்ணன்வெங்கட் சாமிநாதன் நாற்பதுகளின் பின் பாதி வருடங்களில் ஒரு நாள். நிலக்கோட்டையில் முகாமிட்டிருந்த டூரிங் டாக்கீஸின் விளம்பர வண்டி. மாட்டு வண்டி ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்தது. அதன் இருபுறங்களிலும் விளம்பர அட்டை. என்ன படம் என்பது என் நினைவில் இல்லை. பாண்டு வாசித்துக்கொண்டு அன்றைய படத்திற்கான நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு சென்றது அந்த வண்டி அந்த விளம்பர தட்டியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டருக்குக் கீழே கையால் எழுதப்பட்ட வாசகம். " என்.எஸ். கிருஷ்ணனின் மிளகாய்ப் பொடி காமிக்கைக் காணத் தவறாதீர்கள்." அதையே வண்டிக்குள் இருந்த ஆளும் உரக்கக் கத்திக் கொண்டே போனான். அந்த முக்கிய விஷயத்தை யாரும் கவனிக்காமல் போய்விடப் போகிறார்களே என்ற கவலை போலும். படம் தெரிந்த படமாக இருக்கவேண்டும். அதில் முன்னர் இல்லாது இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஐட்டத்திற்காக முன்னர் படம் பார்த்தவர்கள் திரும்ப பார்க்க வரவேண்டும்.

நான் அந்தப் படம் பார்க்கவில்லை. என்ன படம் என்பதும் நினைவில் இல்லை. ஆனால் பின்னர் தான் தெரிந்து கொண்டேன். இது என்.எஸ். கிருஷ்ணன் அப்போதெல்லாம் செய்து வந்த 'ரிபேர்' வேலை என்று. யாருடைய படமாவது சரியாக ஓடவில்லை என்றால், என்.எஸ். கிருஷ்ணனை அந்தப் படத் தயாரிப்பாளர் அணுகி, படத்தை அவர் வழியில் 'ரிபேர்' செய்து தரச் சொல்வாராம். என்.எஸ். கிருஷ்ணன் அந்தப் படத்தை ஒரு முறை பார்த்து அதில் தன் காமிக் அயிட்டத்தையும் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்துக் கொடுத்து விடுவாராம். என்.எஸ். கிருஷ்ணன் காமிக் சேர்த்த அந்தப் படம் பின்னர் ஓடும். ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்து விடும் என்று சொல்லப்பட்டது. இரண்டு விஷயங்கள். ஒன்று, என்.எஸ் கிருஷ்ணனின் காமிக் பங்கேற்பு இருந்தால் எந்தப் படமும் ஓடும். வெற்றி தரும்.

இந்த மாதிரி 'ரிபேர்' காரியங்களை என்.எஸ் கிருஷ்ணன், அத்தகைய 'ஸ்டார் வால்யூ" கொண்டிருந்த என்.எஸ். கிருஷ்ணன், செய்துகொண்டிருந்தார். அது அவருக்கு ஒரு கௌரவக் குறைவான காரியமாகத் தோன்றவில்லை. ஊதிய சுய பிம்ப அகங்காரங்களே பவனி வந்த திரை உலகில் இப்படி ஒரு மனிதரும் உலவியது, அந்த காலத்தையோ, சினிமா உலகத்தையோ பிரதிபலிப்பது அல்ல. என் எஸ் கிருஷ்ணனின் உடன் பிறந்த குணம் என்றே சொல்ல வேண்டும். இந்த குணத்தின் வெளிப்பாட்டை அவர் வாழ்க்கையின் முழுதிலும் காணலாம். இதை ஒரு வியாபாரமாக அல்ல, நண்பருக்கும், தொழிலில் உள்ள சக மனிதனுக்குச் செய்யும் உபகாரமாகத் தான் செய்து வந்தார். நகைச் சுவை துணுக்குகளுக்காக வசனம், பாட்டு எழுதி, நடிகர் களை நடிக்க வைத்து எல்லாம் செய்ய அவரிடம் ஒரு troupe எப்போதும் இருந்தது. வேலை இருக்கோ இல்லையோ, அந்த troupe-ன் சம்ரக்ஷணம் என்.எஸ்.கே யின் பொறுப்பில் இருந்தது.

அங்கங்கே ஒட்டுவதற்கு ஓரோரு சமயம் நஷ்டப்பட்ட மனிதர் கேட்காமலேயே தாமாக முன்வந்து உதவிய சம்பவங்களும் சொல்லப்பட்டன. இந்த மாதிரியான 'ரிபேர்' வேலை செய்யப்பட்ட பின் படம் வெற்றிகரமாக ஒடியதும் கிடைத்த லாபத்தை என் எஸ் கிருஷ்ணன் முன் வைக்க, கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் செய்திகள் உண்டு. இருப்பினும் சினிமா உலகம், அதன் குணத்தை விட்டு விடாது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், என்.எஸ்.கிருஷ்ணன் 'ரிபேர்' காரராகத்தான் சினிமாக் காரர்களால் குறிப்பிடப்பட்டார். "ஒரு காரியம் செய்யுங்க, இதை எடுத்துக்கிட்டு என் எஸ் கிருஷ்ணன் கிட்டே போனீங்கன்னா, அவர் ஏதாவது 'ரிபேர்' செய்து தருவார். படம் ஓடும். தயங்காம போங்க" என்பது அந்நாட்களில் படம் எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டவர்களுக்குச் சொல்லப்பட்ட உபதேசம். '"இங்கு சகலவிதமான ரிபேர் வேலைகளும் செய்து தரப்படும்" என்ற வாசகங்களை அந்நாட்களில் தெருவில் ஒரு சில கடைகளின் விளம்பர பலகைகளில் காணலாம்.

அந்த 'இடை செருகல்' ஏதோ காமிக்காகத் தான் இருக்கும். கதையோடு ஒட்டியும் இருக்கலாம். அல்லது தனித் துணுக்காகவும் இருக்கலாம். இந்த மாதிரியான நகைச் சுவை காட்சிகளை இடையிடையே செருகுவது என்பது, கதைக்குச் சம்பந்தம் உண்டோ இல்லையோ, என்பது நம் பாரம்பரியம் தான். கதையின் தீவிரத்திற்கிடையே பார்வையாளருக்கு அவ்வப்போது ஆசுவாசம் தர இது தேவை. அப்படித்தான் என்.எஸ்.கிருஷ்ணனும் தன் ஆரம்பகாலங்களிலிருந்து, பால நாடக சபாக் காலத்திலிருந்து வந்தார். அப்படி ஒரு தேவைக்குத் தான் அவர் உபயோகப்படுத்தப்பட்டார். அதற்கு அவரது இயலபான உடன் பிறந்த கோமாளித்தனம் உதவியது. ஆனால் அவரது இயல்பு அதற்கும் மீறிய சில குணங்களையும் கொண்டிருந்தது. ஒரு தன்னிச்சையான போக்கு, எங்கும் தன்னை நிலை நிறுத்திக்கொள்வது, தன் கோமாளித்தனம் வெற்றுக் கோமாளித்தனமாக இல்லாமல், அது சமூக விமரிசனமாக, தன்னைச் சுற்றிய உலகின் மீதான தன் அபிப்ராய வெளிப்பாடாகவும் அது ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. 'பாய்ஸ் கம்பெனி' காலத்திலிருந்தே அவர் போக்கே தனிப்பட்டதாக, மற்ற பசங்களையும் தன் வழிக்கு இழுத்துச் செல்பவராகத்தான் இருந்திருக்கிறார். இது ஏதும் யாருடைய உபதேசம் கேட்டோ, புத்தகங்கள் படித்தோ, அல்லது வருவதல்ல. தன் இயல்பானது. அந்த இயல்பும் தனித்வமும் தான் அவர் சினிமாவில் காலடி வைத்தும் தொடர்ந்தது. அந்தக் காலத்திலும் சரி இப்போதும் சரி சினிமாவில் நுழைவதற்கே என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. என்னென்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டியிருக்கிறது, எல்லோருக்கும் தெரியும். நீட்டி முழக்கி சொல்ல வேண்டியதில்லை. அப்படியிருக்க சினிமாவில் காலடி வைத்ததுமே என்.எஸ்.கிருஷ்ணன் தன்னை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்பவராயில்லை. 'அடக்கி வாசிப்பவராகவும்' இல்லை. அந்தக்காலத்திலேயே முதலாளிகளுக்கெல்லாம் முதலாளியாக, கடும் கட்டுப்பாடுகள் கொண்டவராகக் கருதப்பட்ட எஸ்.எஸ் வாசனிடமே, என்.எஸ்.கே. "படம் நல்லா வரணும்கிறதுக்காகத் தான் சொல்றேன். நான் செய்வதைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். படம் நல்லா ஒடினா, எனக்குச் சம்பளம் கொடுங்கள், இல்லாவிட்டால் எனக்கு நீங்கள் சம்பளம் தரவேண்டாம்" என்று ஒப்பந்தம் ஷரத்துக்களைச் சொல்லி பேரம் பேசத் தொடங்கினார் என்றால், அவரது திறமையில் இருந்த தன்னம்பிக்கையும், எவரிடமும் தலை நிமிர்ந்து பேசம் துணிவும் வாசனையும் தன் முதலாளித்வ சிந்தனைகளை மறக்கச் செய்தது. அன்று தொடங்கியதே, என்.எஸ்.கிரிஷ்ணனின் திரைப்பட வாழ்க்கை முழுதும் அவர் நடித்த எல்லாப் படங்களிலும் கடைப்பிடித்த வழக்கமும் ஆயிற்று. என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் ஒப்பந்தம் செய்வதோடு சரி. மற்ற வேலைகளையெல்லாம் அவரும் அவரது troupe-ம் பார்த்துக்கொள்ளும் எனபதே நடைமுறையாயிற்று.

இந்த தனித்வம் மாத்திரம் என்.எஸ்.கிருஷ்ணனை அடையாளப்படுத்தியதாகாது. அத்தோடு அவர் தனக்கு எடுத்துக் கொண்ட சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்திக்கொண்டார் என்பது அவரது அடையாளமாகும். அவர் அளவுக்கு அவரது நகைச் சுவை பங்கேற்பை வெற்றுச் சிரிப்பூட்டும் காரியமாக மட்டும் அல்லாமல், சமூகத்தில் தான் காணும் கேலி செய்யப்பட வேண்டியவற்றை கேலி செய்யவும், கண்டனம் செய்யப்படவேண்டியவற்றைக் கண்டனம் செய்யவும் பயன்படுத்திக்கொண்டார். எப்படி கேலி என்பது தான் ஏற்றுக்கொண்ட பாத்திர வெளிப்பாடாக அவர் கருத வில்லையோ அப்படியே இந்த சமூக கேலியையும் கண்டனத்தையும் அவரது தன் வெளிப்பாடாகவே காணவேண்டும். இது மிக அரிதாகக் காணும் காரியம். இதை நான் சார்லி சாப்ளினைத் தவிர வேறு யாரிடமும் கண்டதாகத் தோன்றவில்லை தமிழ் நாட்டில் என்.எஸ்.கிருஷ்ணனனைத் தவிர. அது அவரது சிந்தனைகள் சார்ந்து, நம்பிக்கைகள் சார்ந்ததாக இருந்தது. அவரது நகைச் சுவை, சந்தர்ப்பங்களால் ஆனது, சிந்தனைகளால் ஆனது. பேச்சினால் ஆனது. அவரது தோரணைகளால் ஆனது. அவரது நடையே இடமும் வலமும் சாய்ந்து நடக்கும் தோரணை கொண்டது. அவரை நான் நேரில் கண்டதில்லை. நேரில் எப்படி நடப்பாரோ தெரியாது. எந்தப் படத்திலும் அவர் நேராக நடந்து பார்த்ததாக எனக்கு நினைவில் இல்லை. இது தான் அவரது இயல்போ என்னவோ. நகைச் சுவை அவரது இயல்பே போல. அக்கால சினிமா கதைகளுக்கும், பேச்சுக்களுக்கு முற்றிலும் மாறாக, நகைச் சுவைப் பகுதிகள் மிக இயல்பான பேச்சு மொழியிலும், இயல்பான பாத்திரங்களாகவும் தான் இருந்தன. அங்கு கேலி செய்ய்பட்டது, கண்டனம் செய்யப்பட்டதும், சிரிப்புக்காக உருவாக்கப்பட்டவையல்ல. நாம் அன்றைய வாழ்க்கையில் கண்டவை தான். அவரது கண்டனங்களும் சில சமயம் போதனை அம்சம் கொண்டவையாக அல்லது கனவு காண்பவையாக இருந்ததுண்டு. 'ஐம்பதும் அறுபதும்' அது போன்ற ஒன்று. ஐம்பதுகளில் இருந்து கொண்டு அறுபதுகளில் இந்த நாடு சாதிக்கப்ப்போவதாக அவர் ஆரூடம் சொன்னது எதுவும் இன்று வரை சாத்தியமாகவில்லை. 2160 -லும் அவரது கனவு மெய்ப்படும் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும், அது பெரிய விஷயமில்லை. சாதி வேற்றுமைகளை (ராமலிங்க ஸ்வாமிகள்) குருட்டு நம்பிக்கைகளை(ஹரிதாஸ்), மதுப்பழக்கத்தை, தீண்டாமையை (நல்ல தம்பி) அவர் கேலி செய்தார். அவர் உயிருடன் இருந்தால், இன்னமும் அவர் கேலி செய்துகொண்டே இருக்க வேண்டியதுதான். அவை ஒழிந்து விடவில்லை. ஒழிந்துவிடப் போவதும் இல்லை. இவற்றை எதிர்க்கும், பிரசாரம் செய்யும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இவற்றை உள்ளூர விரும்புகிற காரணத்தால் தான் இவை அழியவில்லை. அரசியல் தலைமைகளைப் போல அவர் தான் நம்பாதது எதையும் சினிமா நகைச் சுவைக்குப் பயன்படுத்தியதில்லை. ஒரு வேளை மது ஒன்றைத் தவிர. அதையும் அவர் பழக்கத்தின் அடிமையான காரணத்தால், அது நல்லது என்று நம்பியதால் அல்ல என்று வேண்டுமானால் கொள்ளலாம். அன்று வேறு யார் சிந்தனையிலும் படாத ஒன்று சிறுவயதுப் பெண்குழந்தைகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று காதல் வயப் பட்ட பெண்ணின் விரக தாபத்தைச் சொல்லும் பதங்களைச் சொல்லிக்கொடுத்த நட்டுவனாரை அவர் அடிக்கும் அளவுக்குப் போய்விடுகிறார். எந்தப் படம் என்று நினைவில் இல்லை
இப்போது.

எல்லாம் நினைவிலிருந்து தான் எழுதுகிறேன் அவரது நகைச்சுவையின் பல பரிமாணங்களில் ஒன்றிரண்டை காட்சிகளிலிருந்து சொல்லலாம். ஒரு காட்சி, பின்னால் வந்த படங்களிலும் மற்றவர்களால் கையாளப்பட்டிருக்கிறது. அது தானே தமிழ்ப் படங்களின் குணமும். வெளியே வேலை செய்துகொண்டிருக்கும் பெரியவரிடம் ஏதோ வேண்டுமென்று கேட்கிறார், கிருஷ்ணன். உள்ளே எம் பொண்ணு இருக்கா, எடுத்துக் குடுப்பா போய்க்கேள் என்று சொல்லி ஒரு சத்தம் போடுகிறார், தன் மகளைக் கூப்பிட்டு, "தம்பிக்கு என்னமோ வேணுமாம், நீயே எடுத்துக்குடு, நான் வேலையா இருக்கேன்." என்று ஒரு சத்தம் போடுவார். உள்ளே போன கிருஷ்ணன், அந்தப் பெண்ணிடம், "உங்கப்பாவே சொல்லீட்டாரில்லே, கொடு ஒரு முத்தம்" என்று சொல்ல, அவள் மறுக்க, இவர் "அய்யா இந்த பாருங்கய்யா உங்க மக கொடுக்கமட்டாளாம்" என்று புகார் செய்ய, அவர் திரும்பவம், "தம்பி கேட்குதில்லே கொடும்மா" என்று இவர் சத்தம் போட..... இந்தக் காட்சியை நான் வேறு ஒரு படத்தில் சில வருஷங்களுக்கு முன் பார்த்தேன். எந்தப் படத்தின் பெயரும் என்
ஞாபகத்தில் இல்லை.

இன்னொரு படம். ஒரு காளி கோயிலுக்கு என்.எஸ்.கேயும் அவர் கூட்டாளியும் போகிறார்கள். அங்கே ஒருவன் காளியிடம் வேண்டிக்கொள்கிறான், "அம்மா தாயே நான் வெளியூர் போறேன், நீ தான் தாயே வீட்டைக் காப்பாத்தணும்" என்று. அவன் போன பிறகு இன்னொருவன் வந்து காளியை வேண்டிக்கொள்வான்."அம்மா தாயே, திருடப் போற இடத்திலே எல்லாம் நல்ல படியா நடக்கும்ணு வரங்கொடு தாயே, இல்லாட்டி நான் எப்படி பிழைப்பேன். உன்னைத்தான் நம்பியிருக்கேன் தாயே, கை விட்டுடாதே." என்று வேண்டிக்கொள்வான்.

"என்ன இது! காளியாத்தா யாரைத்தான் காப்பாத்துவா, திருடனும் வேண்டிக்கறான். வீட்டுக்காரணும் வேண்டிக்கறான்." என்று கூட்டாளி கேட்க, கிருஷ்ணன் சொல்வார், "இரண்டையும் கேட்டுட்டு சும்மா இருப்பா, எப்பவும் போல. அதுக்காத்தானே கல்லா இருக்கா." இதில் என்.எஸ்.கே யாரைக் கேலி செய்கிறார்? அவர் ஆத்திகரும் இல்லை. நாத்திகரும் இல்லை.

ஆனால் நிறைந்த மனிதாபிமானி. சம்பாதித்த சொத்தையெல்லாம் வாரிக்கொடுத்து விட்டவர். வறுமையில் ஆட்பட்டவருக்கும், தான் பாராட்டுதலாகக் கொடுக்க விரும்பியவர்களுக்கு. பின்னதில் தகுதியற்றவர்களாக நமக்குத் தோன்றுபவர்களும் உண்டு. கொலை வழக்கில் எல்லாப் பணத்தையும் இழந்து நின்ற சமயத்திலும் அவரை உதவிக்காக அண்டி வந்தவர் கூட்டம் நிற்க வில்லை. அப்படி ஒரு நிலையில், "பக்கத்தில் இருந்த மதுரத்தை, "நீ போய் கொஞசம் தண்ணிகொண்டா?" என்று சொல்லி அனுப்பிவிட்டு தன் முன்னால் இருந்த வெள்ளி கூஜாவைக் கொடுத்து "இதை எடுத்துட்டுப் போய் என்ன செய்ய முடியுமோ செய்யுங்க. இப்ப இவ்வளவு தான் என்னால் செய்ய முடிஞ்சது. உங்களுக்குக் கொடுக்க நான் நல்ல நிலைமையில் இல்லயேன்னு தான் வருத்தமா இருக்கு." என்று சொன்னாராம் கிருஷ்ணன்.

தியாக ராஜ பாகவதர்என்.எஸ்.கிருஷ்ணனும் தியாகராஜ பாகவதரும் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் சம்பந்ததப்பட்டு சிறையில் இருந்த போது, தியாக ராஜ பாகவதர் தான் தன் நிலை இழந்து மனம் ஒடிந்து போனார் என்றும், ஆனால் இனி விடுதலை பெற்று வெளி உலகில் நடமாடுவோமா என்ற நம்பிக்கையே இல்லாத அந்த நிலையிலும் அவர் கேலியும் கிண்டலுமாக தன் இயல்பில் தான் சிறையிலும் இருந்தார் என்று சொல்லப்பட்டது. "என்ன கிருஷ்ணா, இப்பவும் உன் தமாஷ் விடலையா உனக்கு?" என்று பாகவதர் வேதனைப் படுவாராம். அவர்களுக்கு வக்கீலாக இருந்த கே.எம். முன்ஷி பின்வருடங்களில் 'சுதந்திரா" பத்திரிகையிலோ அல்லது வேறு எங்கோ எழுதியதைப் படித்த நினைவு எனக்கு. என்.எஸ்.கிருஷ்ணன் எப்போதும், கோர்ட்டில் நடப்ப வற்றையும் கோர்ட்டு சம்பவங்களையும் நீதிபதி, வக்கீல்கள் பேசுவதையும் மிமிக் செய்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம். அதோடு கவலையற்று இருப்பதற்கு அவர் சொல்லும் சமாதானம், "சிறைக்கம்பிக்கு இந்தப் பக்கம் நான் இருக்கேன். அந்தப் பக்கம் நீங்க இருக்கீங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்தப் பக்கம் இருக்கறவங்க தான் கவலையோட இருக்காங்க. எனக்கு இல்லை." என்பாராம் என்.எஸ்.கிருஷ்ணன். இதையும் திரையில் அல்லாது வெளி உலகில் நகைச் சுவை உணர்வு கிஞ்சித்தும் இல்லாத நகைச் சுவை நடிகர்களையும் பார்க்கிறோம். அதே போலத் தான் வீர வசனம் பேசும் தமிழினத் தலைவர்களும். "நான் திருப்பி அடிச்சேன்னா, யாரும் தாங்கிக்க முடியாது தெரியும்ல" என்று வீரம் பேசிய தலைவர்கள் "ஐய்யோ கொல்றாங்களே" என்று கதறியதை நாம் அறிவோம்.

டி.ஆர்.ராஜகுமாரி வீடு கட்டி அதற்கு கிரஹப்பிரவேசம் நடக்கிறது. அன்று ஒரு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாடகர் வரவில்லை. என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த போது, என்.எஸ். கிருஷ்ணன், 'கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கறேன்." என்று அந்த மேடையில் தன் 'கிந்தனார் காலட்சேபத்தை" நடத்திக் கொடுதாராம். இதனால் எல்லாம் தன் கௌரவம் போய்விட்டதாக நினைப்பவர் இல்லை அவர். 'ரிபேர்' வேலையில் போகாத கௌரவமா இதில் போய்விடப்போகிறது. ஆனால் அதே சமயம், எங்கும் யாருக்கும் எந்நிலையிலும் தன் கௌரவத்தை விட்டுக்கொடுக்காத தீரமும் என்.எஸ். கிருஷ்ணன் ஆளுமையில் இருந்தது. துர்கா பாய் தேஷ் முக் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பேசி அவர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்பதற்கு சம்மதமும் பெற்ற பிறகு, "கூத்தாடிகளையெல்லாம் கட்சிக்குள்ளே விட்டா பின்னே காங்கிரஸ் உருப்பட்டாப்பல தான்" என்று காமராஜ் சொன்னதாக செய்தி அவர் காதில் விழுந்ததும், "என்னை மதிக்காத இடத்திற்கு நான் ஏன் போகணும்?" என்று மனம் வருந்தி அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். என்.எஸ்.கிருஷ்ணனைக் 'கூத்தாடி' என்று காங்கிரஸில் சேர்த்துக்கொள்ள விரும்பாத அதே காமராஜர், பின்னர், தன் அப்போதைய எதிரி எம்.ஜி.ஆர் திமுக வில் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டு அது போல தானும் செல்வாக்கு பெறவேண்டும் என்ற ஆசைக்காகவே காங்கிரஸில் சேர வந்த சிவாஜி கணேசனை ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை அவர். வாழ்க்கை விளையாடிய விடம்பனங்களில் இதுவும் ஒன்று. இந்த சுய கௌரவ உணர்வை வேறு எந்த சினிமாக்காரரிடம் நாம் கண்டிருக்கிறோம்?

அந்த நாட்களில் என்.எஸ். கிருஷ்ணன் பெரும்பாலும் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் நட்புறவிலேயே காணப்பட்டார். ஆனால் அதற்காக அவர் திராவிட கழக கொள்கைகளில் ஆழ்ந்தவர் என்பதும் இல்லை. ஆரம்ப காலத்திலிருந்தே அண்ணாதுரை அவருடைய சொந்த ஆர்வம் காரணமாக, சினிமா நாடகக் கலைஞர்களுடன் மிக நெருங்கியவராக அவ்வப்போது அவர்களைப் பாராட்டிப் பேசுபவராக அறியப்பட்டவர். இந்த திராவிட கழகத்தவர் நட்பு, காமராஜர் அவரைக் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்க வைப்பதற்குக் காட்டிய அசிரத்தை எல்லாம் என்.எஸ். கிருஷ்ணனுக்கு எவ்வித லேபிளையும் ஒட்ட உதவாது. காந்திக்கு தான் பிறந்த மண்ணில் மண்டபம் கட்டியவர் அவர். திராவிட கழகத்தவர் காந்தி அடிகள் என்றொ, காந்தியார் என்றோ மரியாதையோடு குறிப்பிடத் தொடங்கியது வெகுகாலம் பின்னர் தான். எதற்காகச் சொல்கிறேன் என்றால், என்.எஸ்.கிருஷ்ணன் எந்த அரசியல் வாதியுடனும் நட்புறவு கொள்வது என்பது அவருக்கு எந்த வித அரசியல் சாயமும் பூச உதவாது. பொது உடமைக் கட்சி சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டு அதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்த போது, ஜீவா மறைந்திருந்தது என்.எஸ்.கேயின் வீட்டில். இதன் காரணமாக என்.எஸ். கிருஷ்ணண் தேசவிரோதியாகிவிடமாட்டார்.

என்.எஸ்.கிருஷ்ணன், கே.சுப்ரமணியம், நிமாய் கோஷ் போன்ற சினிமாக் கலைஞர்கள் கொண்ட நல்லெண்ண தூதுக்குழு ரஷ்ய அரசின் அழைப்பில் ரஷ்யா சென்றது. அவர்களுக்கு அங்கு அளிக்கப்பட்ட வரவேறு நிகழ்ச்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் பேசினார்: "இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் முன்னிருக்கும் லட்சியம் ஒன்றே. இந்தியா ஒரு ஏழை நாடு. எங்கள் பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் வளப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். இங்கு ரஷ்யாவில் நீங்கள் கைக்கொண்டுள்ள ஹிம்சையும் வன்முறையும் உங்கள் லக்ஷ¢யத்தை சீக்கரம் அடைய வழிசெய்யும். ஆனால் நாங்கள் காந்தியடிகள் இட்ட பாதையில் அஹிம்சையையும் ஜனநாயகத்தையும் கைவிடாது மெதுவாக முன்னேறி வருகிறோம்." என்று பேசவே அதை மொழிபெயர்ப்பாளர் ரஷ்ய மொழியில் சொல்ல மறுத்து விட்டார். அது ஸ்டாலினின் ரஷ்யா. அவர் உயிரோடு வீட்டுக்குத் திரும்ப வேண்டுமே. மொழிபெயர்த்துத் தான் ஆகவேண்டும் என்ற என்.எஸ்.கிருஷ்ணனின் பிடிவாதம் நடக்கவில்லை. என்.எஸ்.கிருஷ்ணன் கோபித்துக்கொண்டு தன் ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டார். இந்த இக்கட்டான நிலையை அறிந்ததும் ரஷ்ய அரசுதான் பணிந்தது. என்.எஸ்.கிருஷ்ணனை சமாதானம் செய்து ஹோட்டலிலிருந்து திரும்ப அழைத்து வந்து அவர் பேசியது முழுதும் மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது மாஸ்கோவில் இந்திய தூதுவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் இது பற்றிக் கேள்வியுற்று, என்.எஸ்.கிருஷ்ணனைப் பாராட்டினாராம். இத்தகைய ஒரு சுய கௌரவமும் கொள்கைத் திடமும் கொண்ட ஒருவரை இன்று வரை நான் கண்டதில்லை சினிமா உலகத்தில். ஆட்சியில் இருப்பவர்க்கு தெண்டனிடும் கூட்டம் தான் நமக்குமுன் இப்போது பிரத்யக்ஷம். ஜெயலலிதா முன்னும், கருணாநிதி முன்னும் குரல் மாறாத, சொல் மாறாத அதே முகஸ்துதிகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் நாம். என் மூச்சில் தமிழிருக்கும் என்று ஆடிப் பாடியவர்கள் எல்லாம் கர்நாடகாவில் தன் படம் திரையிடப்படாது என்ற உடனேயே சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்துவிடுகிறார்கள்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைசாலையின் அடைக்கப்பட்டு வழக்கு நடந்து கடைசியில் பிரிவி கவுன்ஸில் தான் அவர்களை விடுதலை செய்தது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் பாகவதர் தான். அதன் பிறகு அவர் சினிமாவில் இழந்த இடத்தைப் பெற இரண்டு மூன்று முயற்கள் செய்தாலும், அவரால் தலை தூக்க முடியவில்லை. அவருக்கு புகழ் தந்த காலம் மாறிவிட்டது. சமூகத்திலும் சரி சினிமா உலகத்திலும் அவருக்கு இடமில்லாமல் போய்விட்டது. என்.எஸ். கிருஷ்ணன் இறந்த போது அவருக்கு மரியாதை செய்யச் சென்ற பாகவதரை அன்று அந்த இடத்தில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. தேனியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதி யாரோ ஒரு அநாதையின் சமாதியாகி கவனிப்பாரற்றுக்கிடப்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். இது தமிழ் நாட்டைப்பற்றியுமான ஒரு அவலச் சித்திரம் தான். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை. அவர் புகழும், சமூக அந்தஸ்தும் முன்னைவிட பெரிய அளவில் உயர்ந்தன.

கடைசியாக ஒரு சம்பவத்தைச் சொல்லியே ஆகவேண்டும். மருத்துவ மனையில் இருக்கிறார் என்.எஸ்.கே. அது அவரது இறுதி நாட்கள் என்று பின்னர் தான் தெரிந்தது. தமிழ் நாட்டின் பெரிய தலைகள் எல்லாம், திரை உலக பெரியவர் சிறியவர் எல்லோரும் வந்து பார்த்து விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். எம்.ஜி.ஆர். வரவில்லை. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி.ஆருக்கு செய்தி சொல்லி அனுப்புகிறார், "எம்.ஜி. ஆர்ட்ட நான் கூப்பிட்டேன்னு சொல்லு" என்று. எம்.ஜி.ஆர் வருகிறார். "வரணும்னு தான் இருந்தேன். ரொம்ப பிசியாயிட்டேன். அவசரமா கூப்பிட்டனுச்சீங்களாமே" என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார். "நீ பிஸியா இருகேன்னு எனக்குத் தெரியும்பா. ஆனா நம்மைச் சுத்தி இருக்கற இந்த உலகத்துக்குத் தெரியணுமே. இவங்க ஏதாவது பேசப்போறாங்களே, உனக்குக் கெட்ட பேர் வந்திரக்கூடாதேன்னு தான் கூப்பிட்டனுப்பிச்சேன்." என்று என்.எஸ். கே

ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. An authentic human என்று. என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு authentic human. மற்றதெல்லாம் இதில் அடங்கிய பரிமாணங்கள். இப்படிச் சொல்ல தமிழ் நாட்டில் அதிகப் பேர் கிடைக்கமாட்டார்கள்.

வெங்கட் சாமிநாதன்/30.8.08
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner