இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

நினைவுகளின் தடத்தில் - (21 & 22)

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன் -மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர் என்று அவரும் என்னிடம் பிரியமாக இருந்தார். ஆனால் அம்பி மாதிரி அவ்வளவுக்கு எங்கு போனாலும், "வாடா போலாம்" என்று என்னையும் அழைத்துச் செல்பவர் இல்லை. வீட்டிலேயே அவர் கொஞ்சம் ஒதுங்கி பட்டுக்கொள்ளாமல் இருப்பது போல (reserved) தோன்றுபவர். ஆனால் அவர் என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் ஏதோ தேர்ந்தெடுத்தது போல, அவருடைய விருப்பங்கள் வீட்டில் மற்றவர்களதிலிருந்து தனிப்பட்டது போல தோன்றும். இதெல்லாம் இப்போது அவற்றை நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறதே தவிர அப்போது இப்படியெல்லாம் நான் பாகுபடுத்திப் பார்த்ததில்லை. எல்லாமே எனக்கு சுவாரஸ்யம் மிகுந்ததாய், புதியனவாய் இருக்கும். வீட்டில் யாருமே நினைத்துப் பார்க்காத ஹிந்தி படங்களுக்கு அவர் போவார். என்னையும் அழைத்துச் செல்வார். தெற்கு ஆவணிமூல வீதியிலோ அல்லது மாசி வீதியிலோ, சரியாக ஞாபக மில்லை. ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. அங்கு தான் ஹிந்தி படங்கள் திரையிடப்படும். அங்குதான் நான் முன் சொன்ன ரத்தன், அன்மோல் கடி போன்ற படங்களைப் பார்த்தேன். அவற்றின் பாட்டுக்கள் தமிழ்த் திரையுல பாடல்களையே மிகவும் பாதித்தன. எல்லோருமே ஹிந்தி மெட்டுக்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தனர். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அது போல நான் மிகவும் ரசித்த ஒரு தெலுங்குப் படம், 'ஸ்வர்க்க சீமா. நாகய்யாவும் பானுமதியும் நடித்தது. இரண்டு பேரும் மிக அழகாகப் பாடுபவர்கள். அதில் தான் பானுமதி அறிமுகமாகிறார். 'பாபுரமா" என்று அவர் பாடிய பாட்டு மிகப் பிரசித்தம். ஆங்கிலப்படங்களுக்கும் அவர் அழைத்துச் செல்வார். அவர் அழைத்துச் சென்றதால் தான் அந்நாளைய ஆங்கிலப் படங்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. பரிச்சயம் என்று சொல்வது சரியில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவை எனக்கு புரிந்ததில்லை. ஏதோ சுவாரஸ்யமாக, வேடிக்கையாகப் பார்ப்பேன் என்பதோடு சரி. இருட்டத் தொடங்கிய அந்தி நேரங்களில் சில சமயம் அவர் வைகையாற்றுக்குப் போய் மணலில் உட்கார்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கும். வைகை யாற்றில் தண்ணீர் கிடையாது. சித்திரைத் திருநாளின் போது அழகர் ஆற்றில் இறங்குவதற்காக ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக ஆற்றில் தண்ணீர் விடுவார்கள். அது தவிர வேறு எப்போதும் நான் வைகை ஆறு மணல் வெளியாகத் தான் இருக்கும். ஆங்காங்கே ஊற்றுக்கள் தோண்டி வைத்திருப்பார்கள். அது குளிக்கப் பயன்படுவதற்காக. நானும் சில நாட்கள் அந்த ஊற்றில் குளித்ததுண்டு. காசு கொடுத்தேனா சும்மாவா என்பது இப்போது நினைவில் இல்லை. வெளிச்சம் இருக்கும் மாலை நேரங்களில் வைகை ஆற்றின் பாலத்தின் மேல் ரயில் வண்டி போவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஏதோ மரவெட்டை ஊர்வது போலத் தோன்றும். இரவு நேரங்களில் ரயில் வண்டி பாலத்தைக் கடக்கும் போது அதன் ஒளிவரிசை மிக அழகாகக் காட்சி தரும். ராஜா சொல்வார், "கல்கி இதை அழகாக வர்ணித்து எழுதியிருப்பார், நவராத்திரியின் போது வரிசையா விளக்கு ஏத்தி வைப்போமே அது மாதிரி இருக்குன்னு, படிச்சிருக்கியா?" என்று.

ராஜா மிகவும் ரசித்துச் செல்லும் இடம் இன்னொன்று உண்டு. நாங்கள் குடியிருந்த லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரம் முனை வரை வந்து வலது கைப்புறம் திரும்பினால் வைகை ஆற்றுக்கு அந்த வழி இட்டுச் செல்லும். ஆனால் அந்த தெருவின் முனையிலேயே ஒரு சின்ன கடை உண்டு. அது ராஜாவுக்கு மிகவும் பிடித்த இடம். அங்கு தினம் காலையில் ஏழு மணியிலிருந்து ஒன்பது ஒன்பதரை மணி வரை அந்த கடையில் தோசை கிடைக்கும். நெய் தோசை. மணக்க மணக்க இருக்கும். தோசையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது. காலை 7 லிருந்து 9.30 மணி வரை தான். பிறகு கடை மூடிவிடும். பின் மறு நாள் காலையில் தான் திறக்கும். அந்த நெய் தோசைக்காகவே மிக விசுவாசமான வாடிக்கையாளர்களில் ராஜாவும் ஒருவர். அந்த கடைக்காரர் எப்படி தனக்கு ஆகி கைவந்த அந்த வட்டாரத்தில் வெற்றிகரமாக வியாபாரம் செய்ய உதவும் அந்த தோசையைத் தவிர வேறு எதையும் தப்பித் தவறிக் கூட சிந்திக்காதவரோ, அது மாதிரியே நம்மூர் எழுத்தாளரும் ஒருவர் இருக்கிறார். எனக்குத் தெரிந்து கிட்டத் தட்ட அறுபது வருஷ காலமாக ஒரே மாதிரியான நடை, கதை சொல்லும் முறை, ஒரே மாதிரியான மத்திய தர மக்களின் அன்றாட இன்னல்கள், ஏமாற்றங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள், இதைத் தாண்டி மனிதர் வேறு எங்கும் கால் வைத்துவிட மாட்டார். இருவரும் ஒரே தரத்தை, ஒரே உத்தரவாதமான மார்க்கெட்டைக் கொண்டவர்கள். ஏதும் ஏமாற்றமும் இல்லை. ஆச்சரியங்களும் இல்லை. ரயில் வண்டித் தொடர் ராஜாவுக்கு கல்கியை ஞாபகப்படுத்துவது போல, பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் இச்சமயத்தில், இந்த முனைக்கடை தோசை எனக்கு இந்த எழுத்தாளரை நினைவு படுத்தி விட்டது. ஆனால் சாதாரணமாக இந்நாட்களில் இவரைப் பற்றி யாரும் கேட்டாலோ, நினைத்தாலோ அந்த முனைக்கடை தோசையைத் தான் உதாரணம் காட்டிச் சொல்வேன்.

கொஞ்ச நாட்களே, ஒரு சில மாதங்களே அங்கு இருந்த போதிலும் அப்போது வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் சரி, அந்நாட்கள் மிக சுவாரஸ்யமானவையாகவே இருந்தன. இரண்டு சம்பவங்கள் எனக்கு இப்போது நினைத்துப் பார்க்கவும், நான் ஏன் அப்படி பாதிக்கப்பட்டேன் என்பது புதிராக இருக்கிறது. இரண்டும், நான் இருந்த தெருவிலிருந்து சிம்மக்கல் வருவது
தினமும் கட்டாயம் இரண்டு தடவையாவது நிகழும் ஒன்று. வடக்கு வெளி வீதியைத் தொட்டதும், எதிர்ச்சாரியில் ஒரு சோடாக் கடை. அங்கு பத்திரிகைகளும் கிடைக்கும். பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைத் தாங்கிய ஒரு போஸ்டர் தொங்குமே, அதில் கொட்டை எழுத்துக்களில் "தியாக ராஜ பாகவதர், என் எஸ் கிருஷ்ணன் விடுதலை" என்று போட்டிருந்தது. அன்று அந்த செய்தியைப் படித்ததும், மெய் சிலிர்க்க, அது என்னவோ உலகத்தையே புரட்டிப் போடும் மிகப் பெரிய செய்தியாகத் தோன்றியது. இதைப் போய் வீட்டில் எல்லோருக்கும் சொல்லியாக வேண்டுமே. அப்படி ஒரு தவிப்பு. இந்த மன நிலைக்குக் காரணம் தியாகராஜ பாகவதர் பாட்டுக்களை நிலக்கோட்டையில் வீட்டுக்கு எதிரே உள்ள சினிமா கொட்டகையில் தினம் கேட்ட பழக்கத்தில் எம். எஸ், செருகளத்தூர் சாமா, பி.யு. சின்னப்பா போல தியாக ராஜ பாகவதரும் மனதில் நிலைபெற்று விட்ட ஒரு பிம்பம். அது போக, நிலக்கோட்டையில் இருந்த போது இந்த மாதிரித் தான் கடைகளில் தொங்கும் போஸ்டர்களில் "தியாக ராஜ பாகவதர் கைது" என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் வெளியாகியிருந்ததைப் படித்திருந்தேன். பின்பு பள்ளிக்கூடத்தில் ஒரு சில ஆசிரியர்கள் பத்திரிகை படிப்பவர்கள், அவ்வப்போது வழக்கு விசாரணை நடக்கும்போது, சாட்சிகள் வாக்குமூலங்கள், வக்கீல்களின் குறுக்கு விசாரணை எல்லாம் விவரமாக பத்திரிகைகளில் வெளிவர அவற்றை உரக்கப் படிப்பார்கள், பின்னர் அவர்களுக்கு அது பற்றி சர்ச்சைகள் நடக்கும். அந்த சர்ச்சைகளைக் கேட்டு, எனக்கு வடிவேலு, லட்சுமி காந்தன், இந்து நேசன், ஸ்ரீ ராமுலு நாயுடு, ராஜா பாதர், ரிக்ஷாவில் கத்திக் குத்து, எல்லாம் எனக்கு பத்திரிகை படிக்காமலேயே மனதில் பதிந்திருந்தன. நிலக்கோட்டையாக இருந்தால் இன்னேரம் அம்பி வாத்தியார் உடனே மாமாவிடமும் சின்ன மாமாவிடமும் இந்த செய்தியைச் சொல்ல ஓடோடி வந்திருப்பார். அப்போதெல்லாம் தினந்தோறும் பத்திரிகை வாங்குவது படிப்பது என்பது அவ்வளவாக பரவலாகத விஷயம். ஓடிப்போய் ராஜாவிடமும் அம்பியிடமும் சொன்னால் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ராஜாதான் வீட்டில் இருந்தார். ஓடிவந்ததில் மூச்சிறைத்தது. ஆனால் ராஜாவிடம் எந்த பதட்டமோ திகைப்போ இல்லை. ஒரு புன்னகையோடு, "அது சரி, இதைச் சொல்ல ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வரணும்.?" என்றார். எனக்கு என்னவோ போல வெட்கமாக இருந்தது. என் சுவாரஸ்யம் கெட்டது.

ஆனால் இதே போல வால் போஸ்டரிலிருந்து படித்த செய்தி மனதில் பதிந்த காரணம் எனக்குத் தெரியவில்லை. அந்த செய்தி படித்ததும் நான் தியாகராஜ பாகவதர் செய்தியைப் போல யாரிடமும் சொல்ல ஓடவில்லை. "பிரபல ஹிந்தி நடிகர் பாடகர் சைகல் மறைந்தார்" என்பது தான் அந்த வால் போஸ்டர் செய்தி. அந்த செய்தியில் தான் நான் முதன் முதலாக சைகலின் பெயரையே கேள்விப் படுகிறேன். அதற்கு மேல் எனக்கு அன்று சைகலைப் பற்றி ஏதும் தெரியாது. 1952-லோ 1953-லோ தான் புர்லாவில் சைகலின் தேவதாஸ் படம் பார்க்கிறேன். அதிலிருந்து 'துக் கே தின் பீதத் நாஹி" யும் "பாபுல் மோரா" வும் மனதில் பதிந்துள்ளது புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் 1946-ல் ஒரு கடையின் வெறும் வால் போஸ்டரில் படித்த, பழக்கமில்லாத இன்னும் ஏழெட்டு வருஷங்களுக்கு கேட்க விருக்காத ஒரு பெயரைப் பார்த்தது ஒரு பதினாலு வயதுப் பையனின் மனதில் பதிந்துள்ளது எனக்குப் புதிர் தான். இன்னொரு பத்திரிகைச் செய்தியும் மனதில் பதிந்துள்ளது, அதன் வரலாற்று முக்கியத்வம் பின்னரே தெரியவருவது, நேரு தலைமையில் காங்கிரஸ¤ம் முஸ்லீம் லீகும் சேர்ந்து ஒரு இடைக்கால சர்க்கார் அமைக்கப்படும் என்று பிரிட்டீஷ் பிரதமர் அட்லீ அறிவித்தது. அந்த இடைக்கால சர்க்காரில் லியாகத் அலிகான், சர்தார் அப்துர் நிஷ்டார் என்ற பெயர்கள் என் நினைவில் பதிந்துள்ளன. அப்துர் நிஷ்டார் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர் என்பது தவிர, அவர் யார் அவர் பொறுப்பென்ன என்பதெல்லாம் தெரியாது. பெயர் மனதில் பதிந்துள்ளது. அவ்வளவே. தல்லா குளத்தில் நடந்த அருணா ஆஸ·ப் அலி பேசிய கூட்டமும் என் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. அது பற்றி முன்னர் வேறு இடங்களில் எழுதியுமிருக்கிறேன்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், அந்த 1946-ம் வருடத்திய அந்த மாதங்கள், மதுரையில் படிப்பைத் தொடர்ந்த மாதங்கள், என் படிப்பைக் காட்டிலும் மற்ற பல நிகழ்வுகளால், சுற்றி இருந்த மனிதர்களால், எனக்குத் தெரிய வந்த அளவில் கூட நாட்டு நடப்புகளால், those were exciting times. இதை எப்படித் தமிழில் சொல்வது?   15.5.08

நினைவுகளின் தடத்தில் (22)

வெங்கட் சாமிநாதன் -இதற்கு அடுத்து என் நினைவிலிருப்பது, நிலக்கோட்டையில் அப்போது புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் மாமாவுடன் என் பெட்டி படுக்கைகளுடன் கொடைரோட் போகும் பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் காட்சி தான். மதுரையில் படிப்பு முடிந்து விட்டது. அங்கு இருந்தது பரிட்சை முடியும் வரைதான். பின்னர் நிலக்கோட்டை வந்தாயிற்று. இனி படிப்பைத் தொடர்வதற்கு ஒன்று வத்தலக்குண்டு போக வேண்டும். ஆனால் அதைப் பற்றியே யாரும் சிந்திக்காததற்குக் காரணம், அப்பாவிடமிருந்து மாமாவுக்குக் கடிதம் வந்திருக்க வேண்டும். நான் உடையாளூருக்குப் போய் அப்பா அம்மாவுடன் இருந்து கொண்டு கும்பகோணம் போய் படிப்பைத் தொடர்வதென்று தீர்மானித்திருக்க வேண்டும். என் அடுத்த தம்பி, கிருஷ்ணன், எனக்கு நான்கு வயது இளையவன், அப்போது உடையாளுரில் படிக்கக் கிடைத்த ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தான். அவன் இங்கு நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொள்வான் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது என்பது பின்னர் உடையாளூர் சென்ற பிறகு தான் தெரிந்தது.

இன்னும் விடியவில்லை. அதற்கு வெகு நேரம் இருந்தது. இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. ஐந்து மணி ஆகவில்லை. பஸ்ஸ¤க்காகக் காத்திருக்கும் போது பாட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டு பாட்டி இருட்டில் தனியாக நடக்கக் கூடிய தூரம் இல்லை. இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும். பாட்டி வீட்டைப் பூட்டிக்கொண்டு இருட்டில் எதற்காக இவ்வளவு தூரம் நடந்து வருகிறாள் என்பது திகைப்பாக இருந்தது. ஓடிப் போய் பாட்டியிடம் சென்று, "நீ என்னத்துக்கும்மா இருட்டில் இங்கே வந்தே?" என்று நான் கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதே, பாட்டி " இந்தா இதை நீ மறந்து வச்சிட்டு வந்துட்டயே.. அப்பறம் இதில்லாம திண்டாடுவியேன்னு எடுத்துண்டு வந்தேன்," என்று கையை நீட்டினாள். அவள் கையிலிருந்தது ஒரு சீப்பு. தலைவாரும் சீப்பு. காலணா பொறாத சமாச்சாரம் என்று சொல்வது வழக்கம். உண்மையிலேயே அது காலணா கூடப் பெறாத பொருள் தான். "அங்கே வாங்கிக்கமாட்டேனாம்மா" என்று பெரிய மனுஷத்தனமாகச் சொன்னாலும், உடையாளூரில் ஒரு சீப்பு விற்கும் கடை கிடையாது தான் அந்நாட்களில். அரிசி, புளி விற்கும் கடை உண்டு. கண்டியன் கடை என்பார்கள். அது கடைக்காரனின் பெயர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மை என்னவென்று தெரியாது. கேட்கவில்லை. சந்தேகத்துக்குக் காரணம் உடையாளூரில் கண்டியன் வாய்க்கால் என்று ஒரு வாய்க்காலைச் சொல்வார்கள். இந்த சந்தேகங்கள் எல்லாம் இப்போது தான் இதை எழுதும்போது தான் தோன்றுகின்றன. அந்த கணியான் கடையில் தாம்புக் கயிறு கிடைக்கும். தகர வாளி கிடைக்கும். ஆனால் சீப்பு, கண்ணாடி, வகையறாவுக்கு கும்பகோணம் தான் போகவேண்டும் அதை நினைத்துத் தான் பாட்டி ஒரு சீப்பை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டி, இருட்டில் பஸ் ஸ்டாண்டுக்கு அவ்வளவு தூரம் நடந்து வந்தாள் என்று சொல்ல முடியாது. உடையாளூரை பாட்டி அறிவாளே தவிர, உடையாளூரில், அல்லது வேறு எங்கும் பாட்டி வீட்டை விட்டு எங்கும் சென்று அறியாதவள். கோவில் குளம் என்று கூடப் போகாதவள். அந்நாளைய பிராம்மண விதவை. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னை குழந்தையாக, இரண்டு வயதிலிருந்து வளர்த்தவள். என்றும் பிரிந்தவள் இல்லை. இப்போது மேலே கும்பகோணத்தில் படிக்கப் போகிறான். எவ்வளவு நாளைக்குத் தான் அவனை அம்மா அப்பாவிடமிருந்து பிரித்து வைத்துக் கொள்ள முடியும். இனி அவன் பிரிந்து போகவேண்டியவன் தான். நிரந்தரமாக. இனி அவன் தன்னோடு இருக்கப் போவதில்லை என்றெல்லாம் அவள் மனம் தவித்திருக்கும். ஒரு சீப்பு அவனோடது, மறந்து விட்டான். எப்படியாவது அவனிடம் சேர்த்து விடவேண்டும். இருட்டாக இருந்தால் என்ன? கொஞச தூரம் தானே. போய்க்கொடுத்து விடவேண்டும் என்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். ஆனால் மாமாவும் நானும் அவளைக் கோவித்துக் கொண்டோம். பாசம் எப்படியெல்லாம் அசட்டுத் தனமாகக் கூட வெளிப்படுகிறது! அசட்டுத் தனமாக இருந்தாலும் பாசம் பாசம் தான். அது களங்கப்படாது. குறைபடாது ஆனால் இப்போதும் அது பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனம் மிகவும் நெகிழ்ந்து போகிறது.

பிரிந்த பின்பும் இன்னும் நான் பின் வருடங்களில் விடுமுறையில் நிலக்கோட்டைக்கு வந்த போதும், பாட்டியின் பாசம் சில சமயங்களில் வெளிப்பட்டது திகைப்பூட்டும். 'இப்படியுமா?" என்று இன்னமும் எனக்கு திகைப்பாகத் தான் இருக்கிறது. அவையெல்லாம் பின்னால் அவற்றின் சந்தர்ப்பத்தில். தான் பெறுவதற்கு ஒன்றும் இல்லை என வாழ்க்கையின் மிஞ்சிய நாட்களை கழித்துக் கொண்டிருப்பவர்கள் தான் அன்பு கொண்டவர்களின் வாழ்க்கையில் கொள்ளும் அக்கறை மிகவும் புனிதமானது தான். அரை நூற்றாண்டுக்கும் மேல காலம் கழிந்துவிட்டது. இருப்பினும், மற்றது எது நினைவிருக்கிறதோ இல்லையோ, பாட்டியுடனான நினைவுகள் அழிவதே இல்லை.

அப்பா, மாமா சகிதம் கும்பகோணம் டபீர் தெருவில் ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுக்காரருக்கு பாணாதுரை ஹைஸ்கூல் ஹெட் மாஸ்டரைத் தெரியும் போலிருக்கிறது. அவா தான் எங்களை ஹெட்மாஸ்டரிடம் அழைத்துச் சென்றார். எனக்கு பள்ளியில் இடம் கிடைத்து விட்டது. அன்று மாலை ஏழு எட்டு மணிக்கு உடையாளூர் வீட்டுத் தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கைச் சுற்றி மாமா, அம்மா, அப்பா எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். என் தம்பி அப்போது உடையாளூரில் படிக்கக் கிடைக்கும் ஐந்தாவது வகுப்பு படித்து முடித்திருந்தான். அதற்கு மேல் படிக்க அவனும் கும்பகோணம் தான் என்னுடன் போகவேண்டும். "ரொம்ப சின்னவன். அவனால் தினம் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. என்னோடு அவனை அழைத்துப் போகிறேன். என்னோட ஸ்கூல்லேயே படிக்கட்டும்" என்று மாமா சொன்னார். ஆக நிலக்கோட்டையில், மாமாவின் சம்ரக்ஷணையில் என்னிடத்தை அவன் எடுத்துக் கொண்டான். அவன் படிப்பு அங்கு முடிந்ததும், அவன் இடத்தை இன்னொரு தம்பி நிரப்பினான் என்பது எனக்கு பல வருஷங்கள் பின்பு தான் தெரியவந்தது. ஆக, நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் படிக்க மாமாவே தான் காரணமாக இருந்திருக்கிறார். மாமா என் தம்பி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு நிலக்கோட்டைக்கு கிளம்பினார்.

கும்பகோணம் பாணாதுரை ஹை ஸ்கூலில் ஒரு கூரை வேய்ந்த கூடம் ஒன்றில் 40-50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் பாணாதுரைப் பள்ளி நாட்களின் ஆரம்ப மாக என் நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஆங்கிலப் பாடம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரையும் ஓவ்வொருவராக ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க, மாணவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ஆங்கிலத்தில். எனக்கு ஒன்றும் புரிவதாக இல்லை. ஆங்கிலத்தில் தான் பாடங்கள் நடக்குமோ, என்ன செய்வது? பயமாக இருந்தது. இருந்தாலும் வந்தாயிற்று. சமாளித்துத் தான் ஆகவேண்டும். கேள்விகளையும் அதற்கு சரியான தப்பில்லாத பதில் என்று ஆசிரியர் எதைச் சொல்கிறாரோ அந்த பதிலையும் நான் என் நோட் புத்தகத்தில் எழுதிக் கொண்டு வந்தேன். வீட்டில் போய் மனப்பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில். வகுப்பில் என்னைத் தவிர வேறு யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் ஒருத்தன் தான் அவற்றை நல்ல பிள்ளையாக எழுதிக் கொள்பவனாக இருந்தேன். அதற்காகவெல்லாம் வெட்கப்பட்டுப் பிரயோஜனம் இல்லை. இங்கே இத்தனை புத்திசாலிகளிடையே கடைத்தேறவேண்டுமே. கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் வகுப்பிலேயே கர்ம சிரத்தையாக எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, "க்ளாஸிலே இவ்வளவு பேர் இருக்கீங்களே, யாருக்காவது இதை எழுதிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியதா, அதோ கோடி பெஞ்சிலே இருக்கிற பையனைத் தவிர" என்று என்னை நோக்கி கரத்தை நீட்டிக் கொண்டே சொன்னார். எல்லோர் பார்வையும் என் மேல் பதிந்தது. உடனே எல்லோரும் அவசர அவசரமாக நோட் புக்கை எடுத்து டெஸ்க் மேல் வைத்துக் கொண்டனர். "நீ என்ன புதுசா வந்திருக்கியா? எங்கேயிருந்து வரெ? என்று கேட்டார். "சேதுபதி ஹைஸ்கூல் மெஜுரா" என்று பதில் சொன்னேன். இப்படி பதில் அளித்ததில் ஆங்கிலத்தில் பேசிவிட்டதாக ஒரு நினைப்பு எனக்கு. "உட்கார்" என்று சொல்லிவிட்டு, "அந்தப் பையனுக்கு நானா சொன்னே?. உங்களுக்கே சிரத்தையும் அக்கறையும் இல்லையென்றால் வாத்தியார் என்ன செய்யமுடியும்?" என்றதும், எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் பிடிபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என் குறையை நிவர்த்திக்கொள்ளச் செய்த காரியமே எனக்குப் பெருமை சேர்த்த காரியமாகி விட்டது. அன்று அந்த வகுப்பிலேயே நான் ஒரு ஹீரோ ஆகிவிட்டேன். இப்படியாகும் என்று யார் நினைத்துப் பார்த்திருக்க முடியும்? அன்றே நான் வகுப்பிலே எல்லோருக்கும் தெரிந்தவனாகி விட்டேன். இப்படி இன்னும் பல விஷயங்களில் நான் எதிர்பார்த்திராத வகையில் எனக்கு சாதகங்கள் நேர்ந்துள்ளன.

அன்று உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்கு எப்படிப் போனோம் என்று ஞாபகம் இல்லை. மாமா, அப்பா, அப்புறம் நான், மூன்று பேர். சாதாரணமாக வலங்கிமான் வரை வண்டி வைத்துக்கொண்டு போய், வலங்கிமானிலிருந்து பஸ் ஏற வேண்டும், கும்பகோணம் போக. அது தான் நிறையப் பேர், பெண்டு குழந்தைகளுடன் போவதென்றால் சாத்தியமான ஒரே வழி. சாதாரணமாக ஆண்கள் பெரியவர்களோ சிறியவர்களோ கும்பகோணத்துக்கு குறுக்கி வழியிலே வயல் வரப்புகளினூடே, மூன்று ஆறுகள் தாண்டி நடந்து போனால், ஐந்தரை மைல் தூரத்தில் கும்பகோணம் இருக்கிறது. அப்பா மாமாவை வயல் வழியாக நடத்தி அழைத்துச் சென்றிருக்க மாட்டார். ஆனால், பாணாதுரை ஹைஸ்கூலில் நான் சேர்க்கப்பட்ட பிறகு, வயல், வரப்புகள் வழியே தான் நடந்து தான் பள்ளிக்கூடம் போய்வந்தேன். காலையில் ஏழரை மணிக்குள் கிளம்பினால் பள்ளிக்கூடத்திற்கு 9.00 அல்லது 9.15க்குள் போய்ச் சேர்ந்து விடலாம். பின் சாயந்திரம் பள்ளி விட்டு உடையாளூர் வந்து சேர்வதற்கு மணி ஏழு ஆகிவிடும். அப்பா முதல் நாள் உடையாளுருக்கு அருகில் அரை மைல் தூரத்தில் ஓடும் ஆற்றின் கரை வரை வருவார். என்னைப் போல் இன்னும் நாலைந்து பையன்கள் கும்பகோணம் போய் படித்து வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து போவது வழக்கமாயிற்று. அவர்கள் வேறு பள்ளிகளில் படித்ததால், மாலை திரும்பும் போது நான் தனியாகத் தான் வருவேன். வழி தெரிகிறதோ, ஆற்றைத் தாண்டி வரணுமே, பத்திரமா திரும்பி வரணுமே என்ற கவலைகள் அம்மாவுக்கு கொஞ்ச நாள் இருந்தது. சிறு வயதில் இவ்வளவு தூரம் பள்ளிக்கூடம் போவதற்கு நடப்பது என்பது எனக்கு அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அதுவும் ஒரு விளையாட்டைப் போல மனம் எடுத்துக்கொண்டு விட்டது. ஆற்றில் தண்ணீர் இடுப்புக்கு மேல் போய்விட்டால் தான் கஷ்டம். புத்தகஙளும் டி·ப்ன் பாக்ஸ¤ம் வைத்துக் கொள்ள ஒரு கான்வாஸ் பை வைத்திருப்போம். அதில் தண்ணீர் புகாது. அதிலேயே சட்டை, வேஷ்டி எல்லாம் சுருட்டித் திணித்து பையைத் தலையில் வைத்துக்கொண்டு வெற்றுக் கோவண தாரியாக ஓடும் ஆற்றில் இறங்கிக் கடப்போம். அக்கரைக்குப் போனதும் வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சட்டையைப் போட்டுக் கொள்வோம். இப்படி குடமுருட்டி, முடிகொண்டான் என்று இரண்டு ஆறுகளைக் கடக்கவேண்டும் தினம் போகும்போதும் வரும்போதும். கடைசியில் கும்பகோணத்தின் தெற்கு எல்லையில் ஓடும் அரசலாறு எங்கள் வழியில் குறுக்கிடும் மூன்றாவது ஆறு. அதன் கரையில் தோணி கிடைக்கும்.

அதிலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். நாங்கள் ஆற்றின் கரையை அடையும் போது தோணி கரையில் இருக்கவேண்டும். தோணி கிளம்பும் சமயத்தில் கையை ஆட்டி நிற்கச் சொல்லி ஓடி வருபவர்களும் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தோணி கிளம்பிவிட்டால் போச்சு. தோணி எதிர்க்கரையை அடைந்து, கும்பகோணம் போகிறவர்கள் இறங்கி பின்னால் இக்கரைக்கு வருபவர்களுக்காக தோணி காத்திருக்கும். தோணியில் ஆட்கள் நிறைந்த பிறகு தான் தோணி இக்கரைக்கு வரும். இங்கு வந்த பிறகு, மறுபடியும் கும்பகோணம் போகிறவர்கள் வந்து தோணி நிறைய காத்திருப்பான். அதற்கும் காத்திருக்கவேண்டும். ஆக, தோணியைத் தவறவிட்டால், அரை மணி, முக்கால் மணி தாமதமாவது சகஜம். இப்படி ஆரம்பத்தில் ஒரு நாள் நான் மிகவும் தாமதமாக ஸ்கூலுக்குப் போனபோது சீனிவாச ஐயங்கார் ஹெட்மாஸ்டர் தான் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் எடுப்பவர். என்னைப் பார்த்ததும் வகுப்பிற்குள் அனுமதிக்கவில்லை. நான் வெளியே நின்றுகொண்டே பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆங்கிலமாயிற்றே. ஐந்தாறு நிமிடம் போலக் கழிந்திருக்கும். அவர் என்னைப் பார்த்து "ஏன் லேட்டா வரே?" என்று கேட்டார். "சார், தோணிக்காகக் காத்திருந்து லேட்டாயிடுத்து சார்". "தோணியா, எங்கேயிருந்து வரே நீ? என்று கேட்டார். "உடையாளூர் சார்." "உடையாளூரா? ரொம்ப தூரமாச்சே. அஞ்சு மைலுக்கு மேலே இருக்குமே?" "ஆமாம் சார். நான் வர்ர போது தோணி கிடைக்கலேன்னா லேட்டாயிடும் சார்." என்றேன். "சரி வா உன் இடத்திலே போய் உட்கார்." என்றார். அவருக்கே இந்தப் பையனை க்ளாசுக்கு வெளியே நிக்க வச்சுட்டோமே என்று வருத்தமாக இருந்தது போலத் தோணிற்று. நான் உட்கார்ந்ததும், அவரே க்ளாசிலிருக்கும் மற்ற பையன்களுக்கு சொல்ல ஆரம்பித்தார். தோணி கிடைக்காவிட்டால், நம் அவஸ்தையைப் பற்றிக் கவலையே இல்லாது, அவன் தோணி ஓட்டும் நிதானம், இரண்டு கரைகளிலும் அவன் தோணி நிரம்ப ஆட்களுக்காகக் காத்திருக்கும் நிதானம், நம் எரிச்சல் எல்லாம், 'இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒடோடி க்ளாசுக்கு வந்தால் இங்கே வாத்தியார், 'வெளியே நில்'லுன்னு அதட்றாரே!,' ன்னு வேடிக்கையாக அவரே வகுப்பில் எல்லா மாணவர்களும் சிரிக்கச் சிரிக்கக் கதை நடத்திப் பின் தான் ஆங்கிலப் பாடத்திற்குத் திரும்பினார். இந்தக் கதை பரவி மற்ற வாத்தியார்களிடமும் எனக்கு இந்தத் தோணி சலுகை கிடைத்தது.

நான் படிப்பில் அப்படியொன்றும் கெட்டிக்காரனில்லை. பாடப் புத்தகங்களோ, வகுப்பு பாடங்களோ என்னைக் கவர்ந்ததில்லை. நான் ஆவலுடன் மிகுந்த சுவாரஸ்யத்துடன் வகுப்பில் கேட்டது சரித்திர பாடம் ஒன்று தான். சுந்தரம் பிள்ளை என்னும் ஆசிரியர்தான் எங்களுக்கு சரித்திர வகுப்பு எடுத்தவர். கலைந்த பாதி நரைத்த சிகை, கோரைப் புற்களென அவர் தலையில் வாரலுக்கு அடங்காது நிமிர்ந்து பரட்டையாக நிற்கும். அவரும் நல்ல உயரமான ஆகிருதி. தூய வெள்ளைக் கதராடை தான் அணிந்திருப்பார். முன் வரிசைப் பற்கள் சற்று நீண்டு வெளியே துருத்தி நிற்கும். ஆனால் பார்க்க அப்படி ஒன்றும் கோரமாக இராதுதான். இருப்பினும் அவர்தான் எங்கள் மரியாதையைப் பெற்றவர். பாடம் நடத்தும்போது மிகுந்த லயிப்போடும் உணர்ச்சிப் பெருக்கோடும் நடத்துவார். அவர் வகுப்புகளைத் தவிர வேறு யாருடைய வகுப்பிலும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை.

வெங்கட் சாமிநாதன்/14.6.08
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner