பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
கவிதைக்கோர்
வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- வ.ந.கிரிதரன் -
கடந்த சனிக்கிழமை , செப்டம்பர் 18, எழுத்தாள நண்பர்களான
தேவகாந்தனையும், டானியல் ஜீவாவினையும் இன்னுமொரு என்னுடைய
நண்பருடன்
ஸ்ஹார்பரோவில் அமைந்திருக்கும் 'காப்பி டைம்' கடையொன்றில்
சந்தித்தேன். எழுத்தாளர் தேவகாந்தனை பற்றிக் கூறத்தேவையில்லை.
தமிழ்
இலக்கிய உலகு நன்கறிந்த எழுத்தாளர்களிலொருவர். இவரது பல நூல்கள
வெளிவந்து நவீன தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளன.
குறிப்பாகக்
'கனவுச் சிறை ' (ஐந்து பாகங்கள்) , பாரத மறு வாசிப்பான 'கதாகாலம்'
, 'யுத்தத்தின் முதல் அதிகாரம்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை
தவிர
கட்டுரைகள், சிறுகதைகளென இவரது எழுத்துலகப் பங்களிப்பு
பன்முகத்தன்மையானது. தற்பொழுது தமிழகத்தில் 'இலக்கு'
பதிப்பகத்தினூடு இவரது
படைப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. எழுத்தாளர் டானியல் ஜீவாவும்
குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது சிறுகதைகள் பல புலம்பெயர்ந்த
தமிழரின்
இருப்பினை நன்கு, ஆக்ரோசத்துடன் வெளிப்படுத்தும் பாங்குடையவை.
அப்பொழுதுதான் டானியல் ஜீவா அன்றிரவு நடைபெறவுள்ள வித்துவான்
வேந்தனாரின் நூல்கள் வெளியீட்டு விழாவினைக் குறிப்பிட்டார். அவரது
மூன்று நூல்கள் அன்றிரவு கனடாக் கந்தசாமி ஆலயத்தில்
வெளியிடப்படவுள்ளதாகவும், தானும் தேவகாந்தனும் அதற்குச்
செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்களுடனான சந்திப்பின்
முடிவில்
அனைவரும் வேந்தனாரின் நூல் வெளியீட்டிற்குச் சென்றோம்.
வித்துவான் வேந்தனாரென்றதும் என் சிந்தனைக் குருவி கடந்த காலத்தை
நோக்கி விரைவாகவே பயணித்தது. 'காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொள்ளும் அம்மா' பாடலைக் கேட்காத எந்தவொரு ஈழத்துச்
சிறுவர், சிறுமியரும் இருக்க மாட்டார்கள். சோமசுந்தரப் புலவரின்
'ஆடிப்பிறப்புக்கு
நாளை விடுதலை' எத்தனை புகழ் வாய்ந்ததோ அத்தனை புகழ் வாய்ந்தது
வேந்தனாரின் 'காலைத் தூக்கி' சிறுவர் பாடல். மேற்படிப் பாடலை என்
சிறு
வயதிலேயே கேட்டறிந்திருந்த எனது யாழ் இந்துக் கல்லூரிக்
காலகட்டத்தில் அதே வேந்தனாரின் புத்திரர்களிலொருவரான வேந்தனார்
இளஞ்சேய்
நண்பர்களிலொருவராக வந்து வாய்த்தார். வேந்தனார் இளஞ்சேய் மேடையில் பேசும்
ஆற்றல் வாய்த்தவர். அப்பொழுது பல தடவைகள் மாலை நேரங்களில்
இளஞ்சேயைச் சந்திப்பதற்காக அவரது கந்தர்மட இல்லத்துக்குச் செல்வது
வழக்கம். அன்றைய வெகுசன சஞ்சிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள்
பலவற்றை அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தார். அவை தவிர வேறு பல
தமிழ் நூல்களும் அவரிடமிருந்தன. நாங்கள் ஒருவருக்கொருவர்
புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதுண்டு. அச்சமயத்தில் அவரது மூத்த
அக்காவான கலையரசி அவர்கள் தனது எம்.ஏ பட்டப்படிப்புக்காக எழுதிய
சோமசுந்தரப் புலவர் பற்றிய ஆய்வுப் பிரதியொன்றினையும் அவரது
அறையினுள் கண்டிருக்கின்றேன். அப்பொழுது அவரது இன்னுமொரு அக்காவான
தமிழரசி அவர்களும், அவரது அம்மாவும், அவரது உறவினர்கள் இருவரும் (
ஒருவர் பின்னாளில் பல வைத்தியராகப் பரிணமித்தவர்; மற்றவரைக்
கனடாவில் சந்தித்திருக்கின்றேன்; பெயர் ஞாபகமில்லை)
அங்கிருப்பார்கள். இளஞ்சேயைச் சந்தித்தபின்னரே அவரது தந்தையாரான
வித்துவான்
வேந்தனாரே மேற்படி புகழ்பெற்ற சிறுவர் பாடலான 'காலைத் தூக்கிக்
கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொள்ளும் அம்மா' பாடலுக்குச் சொந்தக்காரர்
என்னும்
விடயம் தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன். அச்சமயத்தில்தான் அவரது மூத்த
அக்காவான கலையரசி அவர்களின் திருமணம் நடைபெற்றது. வகுப்பு
மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, சிறு பரிசுப் பொருளொன்றினையும்
வாங்கி, நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கண்மையிலுள்ள ஆலயமொன்றில்
நடைபெற்ற திருமணத்திற்குக் காலையில் சென்றது இப்பொழுதும்
ஞாபகமிருக்கிறது. அதன் பின்னர் கால ஓட்டத்தில் சிக்குண்டுப்
பல்வேறு திசைகளில்
பிரிந்து விட்ட சமயத்தில் வேந்தனாரின் குடும்ப அங்கத்தவரான
இன்னுமொருவருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. மொறட்டுவைப்
ப்ல்கலைக கழக
வாழ்வில் அச்சமயம் அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றிக்
கொண்டிருந்த வேந்தனார் இளங்கோதான் அவர். அச்சமயத்தில் மொறட்டுவைப்
பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க செயற்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக்
கொண்டிருந்த காலகட்டமாதலால் அவை சம்மந்தமான விடயங்களுக்காக
அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அச்சமயங்களில்
கொழும்பில் சில சமயங்களில் பேரூந்துப் பயணங்களில் அங்கு
பணிபுரிந்து
கொண்டிருந்த இளஞ்சேயைச் சந்தித்திருக்கின்றேன். பின்னர் அவரது
வாழ்வில் நடைபெற்ற துயரகரமான சம்பவமொன்றின்போதும் அவரைச்
சந்திக்கும்படி சூழ்நிலை அமைந்தது. அவரது இன்னுமொரு அக்காவான,
கொழும்புப் பலகலைக் கழகமொன்றின் கலைப்பீட மாணவியான தமிழரசியின்
திடீர் மறைவின்போதுதான். வெள்ளவத்தையில் ஒரு சில சமயங்களில்
வேந்தனார் இளங்கோவை மாணவர்களாகச் சென்று சந்தித்த சமயங்களில்
எங்களுக்கெல்லாம் தேநீர் போட்டுக் கொண்டு வந்து தரும் அவரின்
திடீர் மறைவு எங்களுக்கு அச்சமயத்தில் அதிர்ச்சியினைத் தந்தது.
அவர் மறைந்த
அன்றிரவெல்லாம் பல்கலைக் கழக மாணவர்கள் பலருடன் வேந்தனார்
இளங்கோவின் வெள்ளவத்தை இருப்பிடத்தில் கழித்த நினைவுகளும்
அவ்வப்போது ஞாபகத்தில் வந்து போவதுண்டு. அதன் பிறகு நாட்டுச்
சூழலில் அனைவரும் திக்குக்கொன்றாகச் சிதறி விட்டோம். சில
வருடங்களுக்கு
முன்னர் வேந்தனார் இளங்கோவின் மரணச் செய்தி கேட்டபோதுதான் அவர்
ஆஸ்த்ரேலியாவிலிருந்ததே தெரிய வந்தது. அது பற்றிய
குறிப்பொன்றினையும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன்.
இவ்வளவும் நண்பர் டானியல் ஜீவா வேந்தனார் புத்தக வெளியீடு பற்றிக்
கூறியதும் என் சிந்தையில் மீண்டும் நிழலாடின. வித்துவான்
வேந்தனாரைப்
பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது.
வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள,
முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர்
எனக்குத் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில்
தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு
எடுத்தியம்பின.
"பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்"
என்று அவர் பாடினார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய
கவிஞன் அவர்.
மேலும் மேற்படி 'கவிஞன்' என்னும் கவிதையில் அவர் பின்வருமாறும்
பாடுவார்:
"பஞ்சனையில் வீற்றிருந்தே பனுவல் பார்த்துப்
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்தே போகும்.."
"வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கை யின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்பு வோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதி னாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்"
அதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும்
என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள்
பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள்
எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத
கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள்.
பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம்.
இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில்
அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும்.
தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில்
பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா? இதுபோல்தான் இன்றைய
பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை
இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர்
இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத்
தொடர்ந்து இவரது பல
சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. 'நாட்டில்
அன்பு' என்னுமொரு சிறுவர் கவிதையில் வேந்தனார் பின்வருமாறு
கூறுவார்:
"பொருளும் நிலமும் எவர்க்கும்
பொதுவாய் இருத்தல் வேண்டும்
அருளுந் தொண்டும் உலகை
ஆளப் பார்க்க வேண்டும்"
பொருளும் நிலமும் எவர்க்கும் பொதுவாய் இருத்தல் வேண்டும் என்னும்
தனது எண்ணத்தை அவர் எத்துணை அழகாகக் குழந்தைகளுக்குக்
கூறுகின்றார் பாருங்கள்! பொதுவுடமைத் தத்துவத்தினை இதனைவிட
எளிமையாகக் குழந்தைகளுக்குப் புரியும்படி கூற முடியுமா?
இரசிகமணி கனகசெந்திநாதன் வேந்தனாரின் கவிதைகளில் குறிப்பாகச்
சிறுவர் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர். வேந்தனாரின் கவிதைகளைப்
பற்றி, சிறுவர் கவிதைகளைப் பற்றி 'வியத்தகு குழந்தைப் பாடல்கள்
பாடிய வேந்தனார்' (தினகரன்), 'பாட்டி எங்கள் பாட்டி' (ஈழநாடு),
'பாலைக் காய்ச்சிச்
சீனிபோட்ட பாவலன்' மற்றும் 'வித்துவான் வேந்தனார்' (ஈழகேசரியில்
வெளிவந்த ஈழத்துப் பேனா மன்னர்கள் தொடரில்) எனக் கட்டுரைகள் பல
எழுதியவர். சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் அவற்றைப் பற்றிச்
சிலாகித்துப் பேசியவர்.
வேந்தனாரது குழந்தைக் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு சிறப்பு சக
உயிர்களிடத்தில் அவர் காட்டும் அன்பு. பரிவு. 'மான்' என்னும்
கவிதையில் மான்களை வேட்டையாடும் மானிடர்களின் செயலை
'குட்டியோடு மான்கள்
கூடித் திரியும் போது
சுட்டு வீழ்த்த லாமோ
துன்பஞ் செய்ய லாமோ' எனச் சாடுவார். மான்களை
'துனபப் படுத்தி டாமல்
தோழ ராகக் கொள்வோம்' என்பார். இவ்விதமே 'அணில்' கவிதையிலும்
'கூட்டில் அணிலைப் பூட்டி - வைத்தல்
கொடுமை கொடுமை யடா
காட்டில் மரத்தில் அணில்கள் - வாழும்
காட்சி இனிய தடா' என்றும்,
'துள்ளும் அணிலின் கூட்டம் - எங்கள்
சொந்தத் தோழ ரெடா' என்றும் பாடுவார்.
'கூண்டிற் கிளி' என்னும் கவிதையில் பவளம் என்னும் சிறுமி கூண்டில்
கிளியை அடைத்து வைத்திருக்கின்றாள். கூண்டில் அடைத்து வைப்பதன்
மூலம் அக்கிளியைப் பூனையிடமிருந்து காப்பதாகவும், அதற்கு உணவுகள்
தருவதாகவும் எண்ணுகின்றாள். அவளைப் பார்த்துக் அந்தக் கிளியானது
கூண்டினுள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் வாழும் தன் அடிமை வாழ்வினை
விளக்குகின்றது. இறுதியில் உண்மையினைப் புரிந்து கொண்ட பவளம்
அக்கிளியைப் பார்த்து
'நல்ல மொழிகள் கூறியே
நாண வைத்தாய் என்னைநீ
செல்வக் கிளியென் தோழியே
சிறையை நீக்கி விடுகின்றேன்.
கூட்டில் உங்கள் குலத்தினைக்
கொண்ட டைத்தல் கொடியது
காட்டில் வானிற் பறந்துநீர்
காணும் இன்பம் பெரியது.'
என்று கூறியவாறு
'பவளம் கூட்டைத் திறந்தனள்
பச்சைக் கிளியும் பறந்தது
அவளும் வானைப் பார்த்தனள்
அன்புக் குரலுங் கேட்டது'
இவ்விதமாக குழந்தைப் பாடல்களில் சக உயிர்களிடத்தில் அன்பு
காட்டுதலை வலியுறுத்தும் வேந்தனார் பெரியவர்களுக்காக எழுதிய
கவிதைகளிலும்
இவ்விதமே தன் எண்ணங்களைப் பாரதியைப் போல் வெளிப்படுத்துவார்.
சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளிலொன்று தெய்வங்களுக்குப் பலி
கொடுப்பது. அதனைப் பற்றியதொரு கவிதை 'உலகம் எங்கள் தாயகம்'. அதில்
அக்கொடுஞ் செயலினை
' ஆட்டை அன்புக் கோவில்முன்
அறுக்கும் கொடுமை அகற்றுவோம்
நாட்டில் இந்தக் கொடுமையோ
நாங்கள் காட்டு மறவரோ.' என்று சீற்றத்துடன் கண்டிக்கும் கவிஞர்
நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமையினையும் கண்டிப்பார்
'பாழுஞ் சாதிப் பகுப்பெலாம்
பட்ட தென்று பாடுங்கள்' என்று.
வேந்தனாரின் இளம் பருவம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இலங்கை,
இந்தியா போன்ற நாடுகள் அடிமைகளாக இருந்த காலகட்டம். அன்றைய
சூழலில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து
பாரதியைப் போல் வேந்தனாரும் கவிதைகளை யாத்தார். அதே வேந்தனார்
பின்னர்
தமிழின், தமிழரின் இன்றைய நிலையினை எண்ணிப் பொருமினார்.
இவற்றிற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றியெல்லாம் அவர் நெஞ்சு
தொடுத்த
வினாக்களையும், அவற்றிற்கான அவரது விடைகளையும் புலப்படுத்தும்
வகையிலுள்ளன அவரது கவிதைகள் குறிப்பாகக் காவியங்கள்.
தமிழரின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணங்கள் எவையாகவிருக்கும்?
அவரது கவிதைகளினூடு அவற்றைக் காண்போம். தமிழரின் தாழ்ந்த
நிலைக்கு முக்கியமான காரணங்களிலிரண்டு சாதிப் பாகுபாடும், சமயப்
பிரிவுகளும். இதனையே அவரது 'வீரர் முரசு' கவிதையில் வரும்
பின்வரும்
வரிகள் புலப்படுத்தும்:
' ஆளு கின்ற எம்மை யின்றும்
அடிமை யாக வைத்திடும்
தாழு கின்ற சாதி சமயச்
சண்டைக் கான மெரியவே
மூளு கின்ற சுதந்தி ரத்தீ
முனைந்தெ ழுந்த துடிப்பினாற்
சூழு கின்றோம் தமிழ ரென்று
சொல்லி முரசைக் கொட்டுவோம்'
மேற்படி விழாவில் வேந்தனாரின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
'தன்னேர் இல்லாத தமிழ்' என்னும அவரது கட்டுரைகளை உள்ளடக்கிய
தொகுதி, 'கவிதைப் பூம்பொழில்' என்னும் அவரது கவிதைகளை உள்ளடக்கிய
தொகுதி, மேலும் மேற்படி 'கவிதைப் பூம்பொழில்' தொகுதியிலுள்ள
குழந்தைப் பாடல்களை மட்டும் தொகுத்து அழகான வர்ண ஓவியங்களுடன்
வெளியான 'குழந்தை மொழி' என்னும் குழந்தைக் கவிதைத் தொகுதி.
மேற்படி மூன்று தொகுதிகளையும் வாங்குவோருக்கு இலவசமாக 'வித்துவான்
வேந்தனார்' என்னும் அவரைப் பற்றி, அவரது மறைவையொட்டிப் பிறர்
எழுதிய அனுதாபச் செய்திகள், கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி
வழங்கப்பட்டது. 'வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்'
என்னும் தனது
கட்டுரையில் இரசிகமணி கனக் செந்திநாதன் பின்வருமாறு கூடி
முடித்திருப்பார்: " அவரது குழந்தைப் பாடல்கள் தனிநூலாக அழகான
படங்களுடன்
பெரிய அளவில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து ஈழத்துக் குழந்தைகளின்
நாவை இனிக்கச் செய்தல் வேண்டும் என்பது எனது அவா' என்ற அவரது
அவாவினை வித்துவான் வேந்தனாரின் குடும்பத்தினரின் உதவியுடன் எழுத்தாளர் எஸ்.பொ.வின்'மித்ர
ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்' (தமிழகம்) பதிப்பகத்தினர் நிறைவேற்றி
வைத்திருக்கின்றார்கள்.
இக்கட்டுரை வேந்தனாரின் படைப்புகள் பற்றியதொரு விரிவான
கட்டுரையல்ல. மேற்படி நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய
விரிவான
விமர்சனப் பார்வையுமல்ல. மேற்படி நிகழ்வு பற்றிய செய்தி, என்
சிந்தையில் ஏற்படுத்திய எண்ண அதிர்வுகளே. ஒன்று மட்டும் உண்மை.
பாரதியைப்
போல், புதுமைப் பித்தனைப் போல் வேந்தனாரின் வாழ்வு குறுகியதாக
அமைந்த போதிலும், அக்குறுகிய காலகட்டத்தில் அவர் சாதித்தவை
அளப்பரியன. அவரது படைப்புகள் மேலும் பல மீள்பதிப்புகளாக, புத்தம்
புதிய பதிப்புகளாக வெளிவர வேண்டும். இலக்கியமென்ற பெயரில்
குப்பைகளையெல்லாம் நூற்றுக் கணக்கில் வெளியிடும் பதிப்பகங்கள்,
வேந்தனார் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் நூலுருவாக்க
வேண்டும். இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் அவரவர்
குடும்பத்தவரே வெளியிட வேண்டுமென்ற நிலை எதிர்காலத்திலாவது மாற
வேண்டும். இந்த விடயத்தில் தமிழகம் ஈழத்தமிழர்களை விட ஒருபடி மேல்.
வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான 'அம்மாவின் அன்பு'
என்னும் தலைப்பில் வெளியான 'காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. '
பாடலின்
முழு வடிவமும் கீழே:
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.
புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா.
அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.
பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்த
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா.
பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.
செப்டம்பர் 20, 2010
ngiri2704@rogers.com.
|
|
|
|
©©©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|