அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின்
நினைவாக.....
நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம்
மிக்க விஞ்ஞானப் புனைவுகள்!
- வ.ந.கிரிதரன் -
- அண்மையில் மறைந்த விஞ்ஞானப்
புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என்
வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில்
அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில்
கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப்
பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது
மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை
பிரசுரிக்கப்படுகிறது.-
இருபதாம்
நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக
மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர்
அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர்
ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். ஆர்தர் சி. கிளார்க்
ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து
வந்தாலும் அவர் பிறந்தது இங்கிலாந்திலுள்ள 'மைன்ஹெட்' என்னுமிடத்தில்தான்.
1917இல் பிறந்த
அவர் இலண்டனிலுள்ள 'கிங் காலேஜ்'ஜில் இயற்பியல் மற்றும் கணித்தில் தனது
பட்டப்படிப்பினை முதற்பிரிவுச் சித்தியுடன் நிறைவு
செய்தவர். மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானப் புனை கதை எழுத்தாளராக விளங்கிய
கிளார்க் ஒரு விஞ்ஞானியும் கூடத்தான். தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக்
கோள்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தின் பிதாமகரே இவரேதான்.
ஏனெனில் பூமிக்கான தகவல்பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்கள் பற்றிய கோட்பாட்டினை
அன்றைய காலத்தில், நாற்பதுகளிலேயே, எதிர்வு கூறியவர் இவர். மேலும் இரண்டாம் உலக
மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராகவும் இவர்
பணிபுரிந்திருக்கின்றார்.
விஞ்ஞானப் புனைகதையுலகின் முக்கியமான படைப்பாளியான ஆர்த்ர் சி. கிளார்க்கின்
படைப்புகள் மானுட இனத்தைப் பற்றிய
ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டிருப்பவை. அவரது படைப்புகள் அவற்றின்
தெளிவுக்காகவும், கற்பனை வளமை மிக்க எதிர்வு கூறல்களுக்கும் பிரசித்தி பெற்றவை.
ஏற்கனவே கிடைக்கப்பெற்ற அறிவியற் தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமான, புதிய
கண்டுபிடிப்புகளை எதிர்வு கூறின அவை. அத்தகையதொரு கண்டுபிடிப்பே மேற்படி
'பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்குரிய செயற்கைக் கிரகமெ'ன்பதும்.
இப்பிரபஞ்சத்தில் மானுடர் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்பதில் அசைக்க
முடியாத நம்பிக்கையினைப் புலப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்தார். மானுடர்கள்
ஒருகாலத்தில் அழிந்து விடுவார்களென்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை.
சகலபிரச்சினைகளுக்கும் மத்தியில் அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைத்து
விடுவார்களென்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் எப்படியும் தப்பிப்
பிழைப்பதற்குரிய வழியொன்றினை கண்டு பிடித்து விடுவார்களென்பதில் அவருக்குத்
திடமான நம்பிக்கையிருந்தது. அத்துடன் அவர் மானுடர் மட்டும்தான் இப்பிரபஞ்சத்தின்
ஒரேயொரு நுண்ணறிவுமிக்க, புத்திசாதுரியம் மிக்க உயிரினமென்றும் நம்பவில்லை.
பரந்து, விரிந்து கிடக்குமிந்தப் பிரபஞ்சத்தில், நம்மைப்போன்ற புத்திசாதுரியம்
மிக்க உயிரினங்கள் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை அவர் திடமாகவே
நம்பினார். இத்தகைய காரணங்களினால் மானுடரின் எதிர்காலம் பற்றிய ஆக்கபூர்வமான
நம்பிக்கை, தெளிவு, கற்பனை வளமிக்க அறிவுபூர்வமான எதிர்வு கூறல்கள், இவையே அவரது
படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.
அவரது
'பிள்ளைப் பிராயத்தின் முடிவு' ( Childhood's End) என்னும் விஞ்ஞானப்
புனைகதையானது மானுடர் உளரீதியில் இன்னுமொரு தளத்துக்குப் (Overmind)
வளர்ச்சியுறுவதை விபரிக்கும். 'பூமியொளி' (Earthlight) என்னும் 1951இல் வெளியான
அவரது குறுநாவல் மானுட இனமானது தன்னைத்தானே அழித்துக் கொள்ளாதென்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தும்.. அன்றைய காலகட்டத்தில் வெளியான இவரது 'த சென்டினல்' The
Sentinel) இன்னுமொரு புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதையாகும். இது 1996இல்
சந்திரனுக்குப் பயணிக்கும் வில்சனென்னும் நிலவியல் அறிஞரொருவரின் பயணத்தை அவரது
கூற்றில் வெளிப்படுத்துமொரு புனைவாகும். சந்திரனில் வேற்றுலகத்து
உயிரினமொன்றினால் பூமியில் மானுடர் தோன்றுவதற்குப் முன்பே அமைக்கப்பட்டிருந்த படிகத்திலான 'பிரமிட்'டினைப்பற்றி
விபரிக்கும். மேற்படி படிகப் பிரமிட்டானது பூமியிலுள்ள ஒருவரால் அங்கு
அமைக்கப்பட்டிருக்கக் கூடுமென்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட வில்சன் பின்னர்
தன்னைப் போல் சந்திரனுக்கு முன்னர் பயணித்த வேற்றுலகத்து உயிரொன்றின் வேலையே
அதுவென்று நம்பிக்கை கொள்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டா'னது மானுடருக்கும்,
வேற்றுலகத்து வாசிகளுக்குமிடையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய சந்திப்பொன்றினை
எதிர்வு கூறுமொரு குறியீடாகவே கருதப்படுகிறது. மேலும் அந்தப் பிரமிட்டின்
அமைப்பானது அவ்வகை உயிரினமொன்றினால் அமைக்கப்பட்டதொரு எசசரிக்கைக் கருவியே.
அதனைக்
கண்டு பிடிக்கும் உயிரினத்தைப் பற்றிய தகவல்களை அந்த வேற்றுலகத்துவாசிகளுக்கு
அறிவிப்பதற்காக மேற்படி 'சென்டினல்' என்னும் அந்தப் படிகப் பிரமிட்டானது
சந்திரனில் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்று மில்லியன் கணக்கில் இத்தகைய படிகப்
பிரமிட்டுகள் பிரபஞ்சமெங்கும் அந்த வேற்றுலக வாசிகளினால்
அமைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று மேற்படி புனைகதையில் ஆர்தர் சி கிளார்க்
விபரிக்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டி'னை மேற்படி வேற்றுலகவாசிகள் பூமியில்
அமைக்காமல் சந்திரனில் எதற்காக அமைத்திருக்க வேண்டும்? அதற்குமொரு
தர்க்கரீதியிலான காரணமொன்றினைக் கிளார்க் முன்வைக்கின்றார். சந்திரனை அடைவதற்கு
பூமியில் வசிக்கும் மானுடர் வெற்றிடத்துடன் சூழ்ந்த விண்வெளியினைக் கடக்கும்
வல்லமை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் மிக்க இனமொன்றினால்தான் மேற்படி
'படிகப்பிரமிட்டி'னைக் கண்டுபிடிக்க முடியும்? அத்தகைய அறிவுள்ள உயிரினங்களுடன்தான்
மேற்படி
வேற்றுலகத்து வாசிகள் தொடர்பு கொள்ள விரும்பியிருக்க வேண்டும். மானுடர் அதனை
அறியும்பொருட்டுத்தான் அதனைப் பூமியில் அமைக்காது சந்திரனில்
அமைத்திருக்கவேண்டும். மேற்படி விஞ்ஞானப் புனைவு கிளார்க்கின் மானுடரின் தப்பிப்
பிழைத்தலுக்கான ஆற்றலினையும், நுண்ணறிவு மிக்க வேற்றுலகத்துவாசிகள் இருப்பதற்கான
சாத்தியங்கள் பற்றியும், அததகைய உயிரினங்களுடனான தகவல் பரிமாற்றத்திற்கான
சாத்தியம் பற்றிய அவரது அசைக்க முடியாத நம்பிக்கையினையும் வெளிப்படுத்துமொரு
அறிவியற் புனைவாகும்.
மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்' பற்றிய சிந்தனை கிளார்க்கின் கிடைக்கும் தகவல்களின்
அடிப்படையில் அறிவுபூர்வமாகப் புனையப்படும் அவரது கற்பனையாற்றலினையும்
புலப்படுத்துகிறது. எவ்விதம் பிரமிட்டானது பூமியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப்
பறந்து,
காலவெள்ளத்தில் மூழ்கிப் போன எகிப்திய நாகரிகத்தைப் பறைசாற்றுகிறதோ அவ்வாறே
மேற்படி 'படிகப்பிரமிட்டும்' சந்திரனில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த
நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்'டானது 'சென்டினல்'
(Sentnal) என்று
அழைக்கப்படுகிறது. 'சென்டினல்' என்றால் அதற்கு அவதானிப்பவர் என்றொரு அர்த்தமும்
உண்டு. தம்மையொத்த அறிவுபூர்வமான
உயிரினமொன்றின வருகைக்காகக் காத்து நிற்கும், அவதானித்து நிற்கும் அந்தப்
'படிகப்பிரமிட்'டுக்கு 'சென்டினல்' என்னும் பெயர் நன்கு
பொருத்தமானதே.
மேலுமொரு விடயத்தினையும் மேற்படி 'சென்டினல்' என்னும் விஞ்ஞானப் புனைகதை
வெளிப்படுத்துகிறது. அது சந்திரனில் மனிதரால் காலடியெடுத்து வைக்கமுடியுமென்ற,
சந்திரப் பயணத்துக்கான சாத்தியம் பற்றிய, அவரது நம்பிக்கைதானது. மேற்படி கதை
எழுதப்பட்டது 1951இல். ஆனால் உண்மையிலேயே மனிதர் சந்திரனில் காலடியெடுத்து
வைத்தது 1969இல். மேற்படி மானுடரின்
எதிர்காலச் சாத்தியப்பாடுகள் பற்றிய நம்பிக்கையானது கிளார்க்கின் படைப்புகளில்
காணப்படும் முக்கியமானதொரு அம்சமென்று
விமர்சகர்கள் பலர் விதந்துரைத்திருக்கின்றார்கள்.
இவ்விதமான மானுடர் பற்றி, வேற்றுலகத்துவாசிகள் பற்றிய நம்பிக்கையினைக் கிளார்க்
பெற்றது எவ்விதம்? இதற்கு அவரது
'பிரமிப்பூட்டும் நாட்கள்' (Astounding Days) என்னும் சுயசரிதை நூல் விடை
பகர்கிறது. மேற்படி நூலில் தனது பதின்மூன்று வயதில்
தான் முதன்முதலாக முதலாவது விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையொன்றினை வாசித்ததாகவும்,
அன்றிலிருந்து தனது வாழ்க்கை அடியோடு மாறிவிட்டதாகவும் அவர்
குறிப்பிட்டிருக்கின்றார். தற்பொழுது 'அனலாக்' (Analog) என்று வெளிவரும்
விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையானது அக்காலகட்டத்தில் 'பிரமிப்பூட்டும் உயர்தர
விஞ்ஞானக் கதைகள்' ( Astounding Stories of Super Science) என்னும் பெயரில்
வெளிவந்து கொண்டிருந்தது. அச்சஞ்சிகையே கிளார்க்கின் வாழ்க்கையினை அடியோடு
மாற்றிய மேற்படி சஞ்சிகையாகும். தனது
சுயசரிதையில் கிளார்க் மேறபடி சஞ்சிகை எவ்விதம் அவரது 'டீன்' வயதுப் பருவத்தில்
அவர்மேல் ஆதிக்கம் செலுத்தியதென்பதை
விபரிப்பார். மேற்படி சஞ்சிகையின் முதலாவது ஆசிரியத் தலையங்கத்தில் 'நாளை
பிரமிப்பூட்டும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உங்களது குழந்தைகள் அல்லது
அவர்களின் குழந்தைகள் சந்திரனுக்கான பயணத்தை மேற்கொள்வார்கள்' என்று
குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் கிளார்க் அவை மிகவும் நம்பிக்கையான்
சொற்களென்பார். உண்மையில் 1930இல் வாழ்ந்தவர்களின் பிள்ளைகளே சந்திரனில்
காலடியெடுத்து வைத்தார்களென்பார்.
ஆர்தர்
சி. கிளார்க்கின் மேற்படி விஞ்ஞானச் சஞ்சிகையுனான சிறுவயதுத் தொடர்பும்,
வாசிக்கும் பழக்கமுமே மானுடரின் எதிர்காலம் பற்றிய, நுண்ணறிவுமிக்க
வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய நம்பிக்கையினை
அவருக்கேற்படுத்தின. அதுவே அவரது படைப்புகள் பலவற்றில் காணப்படும் முக்கியமான
அம்சங்களிலொன்றாக விளங்குவதற்குக் காரணம். அதே சமயம் தெளிவும், எளிமையும், ஆழமும்
மற்றும் அறிவுபூர்வமான கற்பனைச் சிறப்பும் அவரது படைப்புகளில் விரவிக்
கிடப்பதற்கு முக்கியமான காரணங்களாக அவரது வாசிப்புப் பழக்கம், கல்விப் பின்புலம்,
மற்றும் அவரது தொழில்ரீதியிலான அனுபவங்களே காரணங்களெனக் குறிப்பிடலாம். ஒரு பானை
சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப, மேற்படி 'சென்டினல்' விஞ்ஞானப்
புனைகதையானது அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களை
வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இன்னுமொரு விடயத்திற்கும் மேற்படி
புனைகதையானது அடிப்படையாக விளங்குகின்றது. ஆர்தர் சி. கிளார்க்கென்றால் ஆஸ்கார்
விருதுகளைப் பெற்ற '2001: ஏ
ஸ்பேஸ் ஒடிசி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ஞாபகம் அனைவருக்குமே வராமல் போகாது.
ஸ்ரான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படத்திற்கு
குப்ரிக்குடன் இணைந்து திரைப்பட வசனமெழுதியவர் கிளார்க். 'சென்டினல்' என்னும்
மேற்படி புனைகதையினை இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் வேண்டுகோளின்பேரில்
விரிவாக்கி உருவாக்கிய நாவலே '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி'. திரைப்படம் நாவல்
வெளிவருவதற்கு முன்னர் வெளிவந்தாலும் நாவல் திரைப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு
முன்னரே கிளார்க்கால் எழுதி முடிக்கப்பட்ட் விட்டது. ஆயினும் அந்நாவல்
உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கேயென்பதை ஒப்புக்
கொள்ளத்தான் வேண்டும். அவரது வேண்டுகோளின்பேரில்தான் கிளார்க் அந்நாவலை
எழுதினார். அதற்கான பெயர் கூட ஸ்டான்லி குப்ரிக்கினால் வைக்கப்பட்டதாகக் கிளார்க்
கூறியுள்ளார்.
மானுடரின் தப்பிப் பிழைக்கும் ஆற்றல் மிக்க எதிர்காலம், நுண்ணறிவு மிக்க வேற்றுலக
வாசிகள் இருப்பதற்கான சாத்தியம்
போன்றவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை , அறிவுபூர்வமான வளமான
கற்பனையாற்றல், தெளிவு, எளிமை
மற்றும் ஆழம் ஆகியவற்றைப் புலப்படுத்தும் விஞ்ஞானப் புனைகதைகளுக்காகவும் ,
அறிவுபூர்வமான எதிர்வு கூறல்களுக்காகவும் ஆர்தர் சி. கிளார்க் எப்பொழுதும் நினைவு
கூரப்படுவார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் மக்களின் விண்வெளிப்பயணம் விரைவில்
சாத்தியமாகுமென்றும், அப்பொழுது சாதாரண மக்கள் சந்திரனுக்கு மட்டுமல்ல
அதற்கப்பாலும் இலகுவாகப் பயணிப்பார்களென்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.
ஏற்கனவே சாத்தியமாகியுள்ள அவரது எதிர்வு கூறல்கள் பலவற்றைப் போலவே இந்த நம்பிக்கை
மிக்க எதிர்வு கூறலும் சாத்தியமாகிவருவதையே தற்போதைய நிகழ்வுகள்
புலப்படுத்துகின்றன.
ngiri2704@rogers.com |