- வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மானின் அலுவலக்த்தை நோக்கி!
கார்லோவிற்காக
மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு
அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது
அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத்
தொடங்கினான். அருள்ராசா கிறிஸ்தோபர் வீதி, ஏழாவது அவென்யு மற்றும்
நான்காவது தெரு மேற்கும் சந்திக்குமிடத்தில் அவற்றை விநியோகிக்கத்
தொடங்கினான். அவர்களைப் பொறுத்தவரையில் அவ்விதமாக விளம்பரங்களை
விநியோகிப்பது பெரிதும் சிரமமானதாகவிருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்த
கூச்சமெல்லாம் ஒரு சில நிமிடங்களிலேயே மறைந்து விட்டது. 'ஒன்றுக்கு
இரண்டு. ஒன்று வாங்கினால் இன்னுமொன்று இலவசம். (Two for one!)'
இதுதான் கார்லோவின் மலிவு விற்பனை விளம்ப்ர வாசகங்கள். ஒன்றுக்கு
இரண்டு என்று கூவிக் கூவி விளம்பரங்களை விநியோகிப்பதும் சிறிது
இலகுவாகவிருந்தது. ஒன்றுக்கு இரண்டு என்றதும் நடைபாதையால் நடந்து
சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் நின்று அதுபற்றி விசாரித்தார்கள்.
அதன்பின் விளம்பரங்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆளுக்கு ஆயிரம்
விளம்பரங்களையாவது விநியோகிக்க வேண்டும். அவ்விதம் ஆயிரம்
விளம்பரங்களை ஒருவர் விநியோகித்தால் அவற்றை வாங்கிய ஆயிரம் பேரில்
குறைந்தது நூறு பேர்களாவது கார்லோவின் கடைக்கு விஜயம் செய்வார்கள்.
அவர்களில் குறைந்தது பத்துப் பதினைந்து பேராவது ஏதாவது வாங்கிச
செல்வார்கள். இவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கும்போது
பெரும்பாலும் நடைபாதைவாசிகள் நின்று விசாரித்து வாங்கிச் சென்றதால்
வேலை மிகவும் இலகுவானதாகப் பட்டது. அதேசமயம் பல்வேறு வயதினராக,
நிறத்தினராக, மொழியினராக, மதத்தினராக, நாட்டினராக
நடைபாதைவாசிகளிருந்தார்கள். பலர் அவர்களுடன் சிறிது நேரமாவது நின்று
நிதானித்து சிறியதொரு சம்பாசணையினை நிகழ்த்தினார்கள். ஒரு சிலர்
அவர்களது பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரித்தார்கள். இன்னும் சிலர்
அவர்களது தாய்நாடு பற்றிய தங்களது பூகோளவியல் சம்பந்தமான தமது
அறிவினை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுத்தார்கள் அல்லது
பகிர்ந்து கொண்டார்கள்.
இளங்கோவைப் பொறுத்தவறையில் அவ்விதமாக விளம்பரங்களை விநியோகிக்கையில்
மேலும் சிலரின் நட்பினைச் சம்பாதித்துக் கொண்டான். அவர்களிலொருத்தி
'ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா' அமைப்பினச் சேர்ந்த இங்கிரிட். இங்கிரிட்
சேலை உடுத்தித் தொலைவிலிருந்து பார்க்கையில் ஓரிந்தியப் பெண்ணாகவே
காட்சி தந்தாள். ஆரம்பத்தில் அவளுடனான சந்திப்பு பின்வருமாறு
அமைந்திருந்தது.
இளங்கோவை முதன்முதலாக அவ்விடத்தில் விளம்பரங்களுடன் கண்டதும்
அந்நடைபாதையிலிருந்து 'ஹரே கிருஷ்ணா! ஹரே ! ராமா!'
அமைப்பினரின் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த இங்கிரிட் தானே
வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். "ஹாய்! என்பெயர்
இங்கிரிட். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா! அமைப்புக்காகத் தொண்டராக
பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். நீ யாருக்காக வேலை செய்கின்றாய். அது
என்ன? எவற்றை நீ விநியோகித்துக் கொண்டிருக்கிறாய்?"
அதற்கு அவன் "கார்லோவின் ஆடைக்கடைக்காக விளம்பரங்கள்
விநியோகிக்கின்றோம். தற்போது அங்கு ஒன்றுக்கு இரண்டு என்று மலிவு
விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பினால் நீங்களும்
ஒருமுறை சென்று பாருங்களேன்." என்று கூறிவிட்டு அவளுக்கும் இரண்டு
மேலதிக விளம்பரங்களை கொடுத்தான். அதைச் சிறிது நேரம் வாசித்துவிட்டு
அவள் 'பிரயோசனமான மலிவு விற்பனைதான். வேலை முடிந்து செல்லும்போது
ஒருமுறை சென்று பார்க்க வேண்டியதுதான்." என்று பதிலுரைத்தாள்.
அத்துடன் அவள் அவனின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களையும்
அனுதாபத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவனதும், அவனது
நண்பனினதும் நிலையையெண்ணி அனுதாபம் கொண்ட இங்கிரிட் அவர்களுக்குப்
பலனளிக்கக் கூடியதோர் ஆலோசனையினையும் வழங்கினாள். அது வருமாறு:
"எங்களது ஆலயத்திற்கு வந்தால் உங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும்.
அவ்வப்போது வரப்பாருங்கள். உணவுக்கு உணவு. இந்த நகர அலைச்சலிலிருந்து
கொஞ்சநேரமாவது நிம்மதியான ஓய்வு". அத்துடன் ஒருநாள் அவர்களிருவரையும்
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆலயத்துக்கும் அழைத்தும் சென்றாள்.
இவ்விதமாகக்
காலம் ஓடிக்கொண்டிருந்த சமயம் திடீரென ஒருநாள் அவர்களது நியுயார்க்
சட்டத்தரணி அனிஸ்மானிடமிருந்து அழைப்பொன்று வந்தது. அனிஸ்மானின் சட்ட
அலுவலகம் மான்ஹட்டனில் அமைந்ததிருந்த 'அந்நாள்' புகழ் எம்பயர் ஸ்டேட்
கட்டடத்தில், முப்பத்துநான்காவது மாடியில் அமைந்திருந்தது. விரைவில்
தன்னை வந்து சந்திக்கும்படி தனது செய்தியினைப் பதிவு செய்திருந்தான்.
அத்துடன் அவர்களது அகதிக்கோரிக்கை பற்றிய வழக்குகள் மற்றும் வேலை
செய்வதற்கான தற்காலிக வேலை அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்பது
சம்பந்தமான விடயங்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடத் தான் விரும்புவதாக
அந்தச் செய்தியில் அவன் மேலும் தெரிவித்திருந்தான்.
இவ்விதமானதொரு காலகட்டத்தில் ஒருநாள் இளங்கோவும் அருள்ராசாவும்
அவர்களது வழக்கறிஞரான அனஸ்மானைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள்.
உலகப் புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்'கில் காலடி வைத்தபொழுது
அருள்ராசா கூறினான்:" ஒரு பத்து வருசத்துக்கு முந்தி இதைப்போலை
இந்தக் கட்டடத்திலை காலடி வைக்கிறதைப் போலை கனவு கண்டிருப்பியா
அல்லது நினைச்சுத்
தானிருந்திருப்பியா?"
அருள்ராசாவின் கேள்விக்கு இயலுமானவரையில் நியாயமாக, உண்மையாகப்
பதிலளிக்க விரும்பிய இளங்கோ "நீ சொல்லுறது
ஒருவிதத்திலலை சரிதான். கனவிலை கூட இப்பிடி கண்டிருக்கவில்லைதான்"
இவ்விதமாகக் கதைத்தபடி சென்று கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல்
இறுதியில் சட்டத்தரணி அனிஸ்மானுடனான சந்திப்பு
பற்றியே மீண்டும் மீண்டும் வந்து வந்து நின்றது. அனிஸ்மானின்
நினைவுடன் இளங்கோ அருள்ராசாவுக்குப் பின்வருமாறு
ஞாபகப்படுத்தினான்: "எதுக்காக அனிஸ்மான் இப்படித் திடீரென்று விரைவாக
அழைத்திருக்கிறானோ தெரியவில்லை. எதுக்கும் இந்த
முறை கட்டாயம் அவனிட்டை வேலைக்கான அனுமதிப்பத்திரம் பெறுவது
பற்றியும், அகதிக் கோரிக்கை பற்றிய வழக்கு பற்றிய
விபரங்கள்பற்றியும் நிறையக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இவன்
ஏன் இருந்தாற்போலை திடீரென்று கூப்பிட்டிருக்கிறானோ?
எனக்கென்றால் ஆச்சரியமாகததானிருக்குது."
அருள்ராசா சிரித்தபடியே "இளங்கோ! இன்னும் கொஞ்ச நேரத்திலை அவனைச்
சந்திக்கப் போகிறோம். அவனிடமே கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுறதுதானே!
அதுக்குள்ளை என்ன அவசரம்?" என்றான்.
அருள்ராசா இவ்விதம் சிறிது சிரிப்புடன் கூறவும் இளங்கோவுக்குச்
சிறிது வெட்கமாகவிருந்தது. அந்த வெட்கத்தை இயலுமானவரையில் மறைததவனாக
"இந்த நியூயோர்க் குடிவரவுத் திணைக்களத்தில் ஒரு விடயத்தை
எதிர்பார்ப்பதென்பது கல்லிலை நார் உரிப்பது மாதிரி. பார்ப்பம் இந்தக்
கல்லிலை நாரி உரிப்பதிலை அனிஸ்மான் எந்த அளவுக்குத்
திறமைசாலியென்று."
இதற்கு
அருள்ராசா " சும்மா சொல்லக் கூடாது. இந்த யூதர்கள் வலு
கெட்டிக்காரங்கள். கார்ல் மார்க்சைப் பார்! ஐன்ஸ்டனைப் பார்!
சிக்மண்ட் பிராய்ட்டைப் பார். இன்றைய நோம் சாம்ஸ்கியைப் பார்.
இப்பிடி எந்தத் துறையிலும் பிரகாசிக்கிறது அவங்கதான். பிசின்சிலை
இறங்கி நல்லாக் காசைச் சேமித்து வைக்கிறதும் அவங்கள்தான். இந்தத்
தனியுடமையை ஒழிச்சுப் பொதுவுடமையைப் பரப்ப வேண்டுமென்ற புரட்சித்
தத்துவததை உலகுக்குப் போதித்ததும் அவங்கள்தான். ஆச்சரியமாயில்லை?".
இளங்கோ அதுவரையில் அவ்விதமானதொரு கோணத்தில் சிந்தித்துப்
பார்த்ததில்லை. அருள்ராசா கூறியதும்தான் அவ்விதம் ஒப்பிட்டுச்
சிந்தித்துப் பார்த்தான். ஆச்சரியமாகத்தானிருந்தது. இவ்விதமாக
உரையாடியபடி நண்பர்களிருவரும் அவர்களது நியுயார்க் சட்டத்தரணியான
அனிஸ்மானின் அலுவலகமிருந்த திக்கை நோக்கி நடையைக் கட்டினார்கள்.
[தொடரும்]