அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்... .
"என்ன
பையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ
இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்" என்று
வந்ததும் வராததுமாக இளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன்
மனைவியின் பக்கம் திரும்பி "கொஞ்சநேரம் தனியாக வியாபாரத்தைக்
கவனித்துக் கொள். கொஞ்சநேரம் நான் இளங்கோவுடன் நமது வியாபாரம் பற்றிய
முக்கியமான விடயம் பேச வேண்டும்." என்றான்.
இளங்கோவுக்குச் சிறிது ஆச்சரியமாகப் போய்விட்டது. வந்ததும்
வராததுமாகக் ஹரிபாபு இவ்விதம் கூறியது அவன் எதிர்பார்க்காததொன்று.
ஹரிபாபுவின் உளவியல் பற்றிச் சற்று நேரத்துக்கு முன்னர் அவன் மனைவி
கூறியவை நினைவுக்கு வரவே இலேசாகப் புன்னைகையொன்றும் மலர்ந்தது. அதனை
அவதானித்த ஹரிபாபு "என்ன சிரிக்கிறாய். நான் வேடிக்கையாகக்
கூறுகிறேனென்று நினைத்து விட்டாயா? இல்லை. மிகவும் முக்கியமானதொரு
விடயம் பற்றிக் கதைக்கத்தான் அழைக்கிறேன். கடந்த சில நாட்களாகவே இது
பற்றி உன்னுடன் கதைக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்றுதான் முடிவெடுத்தேன். வா.அங்குள்ள உணவகத்துக்குச் சென்று சிறிது
நேரம் தேநீர் அருந்தி, கதைத்து வருவோம்" என்று கூறவும் இளங்கோ அவன்
கூறப்போகும் அந்த முக்கியமான விடயம் என்னவாகவிருக்குமெனத் தனக்குள்
எண்ணியவனாகக் ஹரிபாபுவைப் பின் தொடர்ந்தான்.
இருவருக்கும் ஹரிபாபுவே தேநீர் வாங்கி வந்தான். இளங்கோவுக்கு அருகில்
அமர்ந்தவனாக அவனே முதலில் உரையாடலை ஆரம்பித்தான்: "இளங்கோ. உனக்கும்
அருள்ராசாவுக்கும் நான் மிகவும் நன்றி கூறவேண்டும். இதுவரையில்
நீங்கள் செய்த உதவியை ஒருபோதுமே மறக்க மாட்டேன்"
இளங்கோ ஹரிபாபுவையே மெளனமாகச் செவிமடுத்துக் கொண்டிருந்தான். ஹரிபாபு
தொடர்ந்தான்: "என்னுடைய வியாபாரம் மீண்டும் மந்தமடைய ஆரம்பித்து
விட்டது. இனி விற்பதுக்கும் அதிகமாகப் பொருட்கள் எதுவுமில்லை. உங்கள்
புண்ணியத்தில் தேங்கிக் கிடந்த பித்தளைச் சிலைகள், ஆபரணங்கள்
போன்றவற்றிலும் கணிசமான அளவுக்கு விற்று விட்டோம். இந்த நிலையில்
என்னிடமுள்ளவற்றை விற்பதற்கு என்னையும் என் மனைவியையும் தவிர
மேலதிகமாக ஆட்கள் தேவையில்லையென நினைக்கிறேன். மேலும் என் மனைவியும்
இன்னுமொரு வாரங்களில் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யப் போகிறா. அதன்
பிறகு நான் மட்டுமே இதனைக் கவனிக்கப் போகிறேன். ஹென்றியும் அதுமுதல்
தன் வியாபாரத்தை மீண்டும் தொடங்க இருக்கிறான்."
இளங்கோவுக்கு விடயம் விளங்கி விட்டது. இங்கும் அவனது வேலை
வழக்கம்போல் தொடரப் போவதில்லை. அடுத்த வேலைக்கு மீண்டும் முழு
மூச்சுடன், வீச்சுடன் முயன்று பார்க்க வேண்டியதுதான். உறுதியான
கைகளும், கால்களும், உள்ளமும், மேலே விரிந்திருக்கும் ஆகாயமும், கீழே
பரந்திருக்கும் பூமியுமிருக்கையில் அச்சப்படுவதற்கென்னவிருக்கிறத.
இருப்புக்கான இந்தப் போராட்டத்தில் முடிந்தவரை போராடிப் பார்க்க
வேண்டியதுதான்.
ஹரிபாபு இறுதியில் இவ்விதம் கூறினான்: "நாளைக்கு நீ மட்டும் வேலைக்கு
வந்தால் போதுமானது. உன் நண்பன் வரத் தேவையில்லை. நாளையிலிருந்து
நீயும் வரவேண்டிய தேவையில்லை. ஆனால் அதற்காகத் தொடர்புகளை
விட்டுவிடாதே. மீண்டும் எனக்கு உங்களது உதவி தேவைப்பட்டால்
அழைப்பேன். அச்சமயம் உங்களுக்கும் தற்போதுள்ளதைப்போல் நேரமிருந்தால்
வந்து உதவலாம்"
இதற்கு இளங்கோவின் பதிலிவ்விதமாகவிருந்தது: "நிச்சயமாக உங்களுக்கு
உதவத் தயாராகவேயிருக்கிறோம். எங்கள் வாழ்வின் சோதனையானதொரு
காலகட்டத்தில் நீங்கள் செய்த உதவியை நிச்சயம் நாங்கள் மறக்கவே
மாட்டோம். குறுகியகாலமே உங்களுடன் வேலை செய்யச் சந்தர்ப்பம்
கிடைத்ததென்றாலும் எங்கள் நேரமறிந்து நீங்கள் செயத இந்த உதவி இந்த
உலகைவிட மிகப்பெரியது. எங்கள் இலக்கியத்தில் இதுபற்றிய அழகானதொரு
கவிதையேயுண்டு. 'காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின்
மாணப் பெரிது' என்று இரு அடிகளில் ஒரு கவிஞன் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கூறிச் சென்றிருக்கிறான்"
இவ்விதம் இளங்கோ மிகவும் விரிவாக நன்றி கூறிப் பதிலளித்தவிதம்
ஹரிபாபுவைச் சிறிது நெகிழவைத்தது. அத்துடன் அவன் "உங்களது நிலை
என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. உங்கள் நாட்டு நிலை விரைவில்
சீரடைந்து நீங்கள் உங்கள் குடும்பத்தவர்களுடன் சேர நான் எப்பொழுதுமே
பிரார்த்திப்பேன். நீ மிகவும் பெருந்தன்மையாக எனக்கு நன்றி
கூறினாலும் உண்மையில் உங்களது கவிஞன் கூறியது எங்களுக்கு நீங்கள்
செய்த உதவிக்குத் தான்மிகவும் பொருந்தும். காலமறிந்து
நீங்களளிருவரும் செய்த இந்த உதவியினை நாங்களும் நிச்சயம் மறக்க
மாட்டோம். மற்றது..." என்று கூறிச் சிறிது நிறுத்தினான்.
"மேலே கூறுங்கள் ஹரிபாபு" என்றுவிட்டு அவன் பதிலுக்காகக்
காத்திருந்தான் இளங்கோ. ஹரிபாபு தொடர்ந்தான்: "நீங்கள் விரும்பினால
எனது கடையில் இலவசமாக , உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் மட்டும்,
தங்கலாம். எனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை. அங்கு விற்பதற்குரிய
பொருட்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால்..."
"ஆனால்..."
"ஆனால்... குளிப்பதற்குரிய வசதிகளில்லை. கழிவறை மட்டும்தானுள்ளது.
முகம் கழுவலாம். குளிப்பதற்கு வேண்டுமானால் என்னிருப்பிடத்தில் வந்து
குளிக்கலாம். என்ன சொல்லுகிறாய்?"
இளங்கோவுக்கு ஹரிபாபுவின் யோசனை பிடித்திருந்தது. "தற்போது
எங்களுக்கு இருப்பிடப் பிரச்சினையேதுமில்லை. ஆனால் எல்லாம்
எங்களுக்கு வேலை கிடைப்பதைப் பொறுத்திருக்கிறது. எதற்கும்
அருள்ராசாவுடனும் இதுபற்றிக் கதைத்துவிட்டு என் பதிலைக் கூறுகிறேன்.
நீங்கள் இவ்விதம் கேட்டது உங்களது நல்ல உள்ளத்தைத்தான் காட்டுகிறது.
நன்றி ஹரிபாபு. குளிப்பது பிரச்சினையென்றாலும் அவ்வப்போது
உங்களிருப்பிடத்தில் வந்து குளிப்பதுவும் அவ்வளவு சிரமானதல்ல எங்களது
தற்போதைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது."
அன்று மாலை ஹரிபாபுவுக்கும், அவனது மனைவி இந்திராவுக்கும் நன்றி
கூறிவிட்டுத் தன்னிருப்பிடம் நோக்கித் திரும்புவதற்காக இளங்கோ
திரும்பிக் கொண்டிருந்தபொழுது அவனது கவனத்தைக் கிறிஸ்தோபர்
வீதியிலிருந்த தோலாடைகளை விற்பனை செய்யுமொரு இத்தாலியனின் ஜவுளிக்கடை
கவர்ந்தது. கடையின் கண்ணாடி ஜன்னலில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரம்தான்
உண்மையில் அவனது கவனத்தைக் கவர்ந்ததென்று கூறவேண்டும். அதில்
'எங்களது விளம்பரங்களை மாலை நேரத்தில் இச்சுற்றாடலில் குறைந்தது
மூன்று மணித்தியாலங்களாவது விநியோகம் செய்வதற்குப் பணியாட்கள் தேவை.
ஆர்வமுள்ளவர்கள் உள்ளே வந்து விண்ணப்பிக்கவும்' என்று
எழுதப்பட்டிருந்தது. இளங்கோவுக்கு அவ்விளம்பரம் எத்தகைய
மகிழ்ச்சியினைத் தந்ததென்று கூறத் தேவையில்லை. உடனடியாகவே உள்ளே
நுழைந்தான். அவன் ஜன்னலிருந்த விளம்பரத்தைப் பார்த்துக்
கொண்டிருந்ததை ஏற்கனவே அவதானித்துக் கொண்டிருந்த அக்கடையின்
சொந்தக்காரனான இத்தாலியன் "நண்பனே! நான் உதவி உனக்குச் செய்யலாமா?"
என்று கூறியவாறே அருகில் வந்தான்.
அதற்கு இளங்கோ "நிச்சயமாக" என்றவன் தொடர்ந்து "நீங்கள்தான்
இக்கடையின் சொந்தக்காரரா" என்றான். அதற்கு அந்த இத்தாலியன் "சரியாகச்
சொன்னாய் நண்பனே! நானேதான் இக்கடையின் உரிமையாளன். கார்லோ இந்தக்
கடையின் சொந்தக்காரன்தான். என்ன விழி பிதுங்குகிறாய். கார்லோ என்பது
எனபெயர்தான். அதுசரி உன் பெயரென்ன?" என்றான்.
இளங்கோவுக்கு கார்லோவென்னும் அந்த இத்தாலியனின் உரையாடற்போக்கு
சிறிது ஆச்சரியத்தைத் தந்தது. ஏனோ தெரியவில்லை அச்சமயத்தில் அவன்
ஹரிபாபுவை ஒருகணம் நினைத்துக் கொண்டான்.
"என் பெயர் இளங்கோ.. நானும் இச்சமயத்தில் வேலை பகுதி நேரமோ அல்லது
முழு நேரமோ தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நாங்கள்
தேடிக்கொண்டிருக்கிறோம்..."
இத்தாலிய உரிமையாளன் கார்லா: "நாங்களா.... மற்றது யார்?"
இளங்கோ: "அவன் என் நண்பன். இருவரும்தான் வேலை தேடிக்
கொண்டிருக்கிறோம். நீங்கள் விளம்பரங்களை விநியோகம் செய்யப்
பணியாட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில்
அறிவித்திருக்கிறீர்கள். அந்த வேலை பற்றித்தான் மேலதிகமாக அறிய
விரும்புகிறேன்."
கார்லா: "நீ முன்பு இதுபோல் ஏதாவது விளம்பர விநியோகம்
செய்திருக்கிறாயா?"
இளங்கோ: "இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரையில் கடுமையாக வேலை
செய்வேன்"
அவனது
பதிலும் அதில் கலந்திருந்த உண்மையான உணர்வும், ஆர்வமும், உற்சாகமும்
அந்த இத்தாலிய உரிமையாளனைக் கவர்ந்தது. அதன் விளைவாக அவனது அடுத்து
வந்த சொற்களிருந்தன: "உண்மையில் உன்னைப் போன்ற ஆர்வமும், உற்சாகமும்
மிக்க உண்மையான பணியாட்களே எமக்குத் தேவை. குறைந்தது மூன்று
வாரங்களாவது எமக்கு உனது உதவி இந்த விடயத்தில் தேவைப்படும். நீயும் ,
உனது நண்பன் விரும்பினால் அவனும் எமக்கு இந்த விடயத்தில் உதவலாம்.
நாங்கள் குறிப்பிடும் இரு சந்திகளில் நீ ஒரு சந்தியிலும், உனது
நண்பன் அடுத்த சந்தியிலும் எங்கள் விளம்பரங்களை விநியோகிக்க
வேண்டும். அவ்வளவுதான். ஆறு நாட்களும் திங்கள் முதல் சனி வரை ,
குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் இவ்விதம் விநியோகிக்க வேண்டும்.
மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் தருவோம். பகுதி நேரமாக எழுபத்தி
இரண்டு டாலர்கள் வாரத்திற்கு உழைக்கலாம். விரும்பினால் நாளைக்கே
நீயும் உனது நண்பனும் வேலையை ஆரம்பிக்கலாம். இப்பொழுதே நீ உன்
பதிலைக் கூறத்தேவையில்லை. வீடு சென்று உனது நண்பனுடனும் இதுபற்றி
ஆறுதலாகக் கதை. இருவரும் விரும்பினால் நாளை மாலை உன் நண்பனையும்
அழைத்துக் கொண்டு வந்து வேலையை ஆரம்பி"
ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்குமென்று கூறுவது இதனைத்தானென்று
பட்டது இளங்கோவுக்கு. மனதில் இலேசானதொரு உணர்வு படர்ந்தது. ஒரு
வாரத்துக்கு 72 டாலர்கள். வீட்டு வாடகைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட
உணவுக்கும் போதுமானது. இத்தாலியத் துணிக்கடைக்காரன் கார்லோவின்
புண்ணியத்தில் ஒருவாறு இன்னும் சிறிது காலம் வண்டியோட்டலாமென்று
பட்டது.
[தொடரும்]