அத்தியாயம் பதினான்கு: 'வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள 
              அதிகாரி!'
              
              
               வரவேற்புக் 
              கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் 
              தங்களை அறிமுகம் செய்தான்:
வரவேற்புக் 
              கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் 
              தங்களை அறிமுகம் செய்தான்: 
              
              "இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்"
              
              அதற்கு அந்தப் பெண் அதிகாரி "உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். 
              இன்று நீங்கள் என்ன விடயமாக இங்கு வந்திருக்கின்றீர்கள்?" என்று 
              வரவேற்றபடியே எதிர்வினாவொன்றினையும் தொடுத்தாள்.
              
              "எனது பெயர் இளங்கோ. இவனது பெயர் அருள்ராசா. நாங்கள் இருவரும் இங்கு 
              அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள்" என்று 
              கூறிய இளங்கோ அவளுக்கு அமெரிக்கக் குடிவரவு திணைக்களத்தினால் 
              கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தின் புகைப்படப் பிரதியினை எடுத்துக் 
              கொடுத்தான். 
              
              அதனை வாங்கிச் சிறிது நேரம் பார்த்த அந்தப் பெண் அதிகாரி பின்னர் 
              இவ்விதம் கூறினாள்:
              
              "இது நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி. இதனை 
              வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து இது 
              சம்பந்தமாக உங்களுக்குப் பதிலொன்று வரும். அதன் பின்னர் வாருங்கள்.."
              
              "மேடம், அது சம்பந்தமாகத்தான் இங்குள்ள அதிகாரியொருவருடன் பேச 
              விரும்புகின்றோம். இதற்கான பதில் எப்பொழுது வருமோ தெரியாது. இந்த 
              நிலையில் 'சமூகக் காப்புறுதி இலக்க' அட்டைக்குக் கூட விண்ணப்பிக்க 
              முடியாதுள்ளது. எங்களுடன் வந்துள்ள வேறு மாகாணங்களில் வசிக்கும் 
              எல்லோருக்கும் 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டைகள்' 
              வழங்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் எங்களால் எந்தவித வேலையும் 
              செய்யமுடியாமலுள்ளது. அதுதான் அதுபற்றி இங்குள்ள அதிகாரியொருவருடன் 
              கதைக்க விரும்புகின்றோம். இதற்கு உதவினால் 
              நன்றியுள்ளவர்களாகவிருப்போம்."
              
              இவ்விதம் இளங்கோ மிகவும் பணிவாகக் கூறியது அந்தப் பெண் அதிகாரியின் 
              இதயத்தைத் தொட்டுவிட்டது. அதன் பிரதிபலிப்பு குரலில் சிறிது தெரிய 
              அவள் "உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் 
              உங்கள் கோரிக்கைக்கான பதில் வராமல் இங்குள்ளவர்களால் என்ன செய்ய 
              முடியுமோ? எதற்கும் உங்கள் ஆசையை நான் தடுக்க விரும்பவில்லை. முயற்சி 
              செய்து பாருங்கள். உங்களை அழைக்கும்வரையில் அங்குள்ள ஆசனங்களில் 
              சென்று அழைப்பு வரும்வரையில் காத்திருங்கள்" என்றாள்.
              
              இளங்கோவுக்கு அவளது பரிவான குரல் சிறிது ஆறுதலைத் தந்தது. அந்த 
              மகிழ்ச்சி அடுத்து அவன் தொடுத்த வினாவிலும் பிரதிபலித்தது.
              
              "மேடம், இன்னுமொரு சிறு கேள்வி. நாங்களிருவருமே ஒரே சமயத்தில் ஒன்றாக 
              அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தவர்கள். நாங்களிருவருமே ஒரே 
              சமயத்தில் அதிகாரியொருவரைச் சந்திக்க முடியுமா? அல்லது 
              தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டுமா?"
              
              "ஒரே நேரத்தில் சந்திப்பது முடியாத காரியம். தனித்தனியாகத்தான் 
              சந்திக்க வேண்டும். குறைந்தது ஒன்றிரண்டு மணித்தியாலங்களாவது 
              காத்திருக்க வேண்டி வரலாம்."
              
              இவ்விதம் அந்தப் பெண் அதிகாரி கூறவும் அவளுக்கு மீண்டுமொருமுறை 
              நன்றியினைத் தெரிவித்துக்கொண்டு கூடத்திலிருந்த நாற்காலிகளில் 
              காத்திருக்கும் ஏனையவர்களுடன் வந்தமர்ந்து கொண்டார்கள் இளங்கோவும் 
              அருள்ராசாவும்.
              
              "அருள், எனக்கென்றால் சரிவருமென்று தெரியவில்லை. எதுக்கும் முயற்சி 
              செய்து பார்ப்பதில் தவறில்லைதானே. முயற்சி செய்து பார்ப்போம். குடியா 
              முழுகி விடப்போகுது."
              
              "என்னடா இளங்கோ. 'பொசிட்டிவ்வா திங்க்' பண்ணுற நீயே இப்பிடி தளர்ந்து 
              விடலாமா? சரிவருமென்று எண்ணிக்கொண்டே இறங்கினால் எல்லாம் வெற்றிதான். 
              இறங்குவம். காலை விடுவம். நல்லதே நடக்குமென்று நம்புவோம்"
              
              "ஓம் அருள். நீ சொல்லுறதும் சரிதான். எவ்வளவுதான் 'பொசிட்டிவ்'வாக 
              இருந்தாலும் சில சமயங்களில் மனசு சலிச்சு விடத்தான் செய்கிறது."
              
              "அதுக்குமொரு காரணமில்லாமலில்லை."
              
              "என்ன காரணம்.."
              
              "எப்பொழுதுமே எங்கட, மனுசரின்ற , குணவியல்புகள் ஒரே மாதிரி 
              இருக்காதாம். ஏறி இறங்கிக் கொண்டுதானிருக்குமாம். நிலவு பிறை 
              நிலவாகி, முழுநிலவாகி, அமாவாசையில் மறைந்து மீண்டும் வளரத் 
              தொடங்கிறதே. அது மாதிரித்தான் எங்கள் குணவியல்புகளும். சில நேரம் 
              எந்தவிதக் காரணமுமில்லாமல் ஒரு பிரச்சினையுமில்லாத நேரத்தில் மனசு 
              சலிச்சுச் சோர்ந்து கிடக்கும். இன்னொரு சமயம் தலைக்கு மேலை 
              பிரச்சினைகள் கூடுகட்டியிருக்கைக்கே மனசு கிடந்து உற்சாகமும், 
              ஆனந்தமும் பொங்கக் கூத்தடிக்கும்."
              
              இளங்கோவுக்கு அருளின் விளக்கம் ஆச்சரியத்தை அளித்தது.
              
              " அருள், நீ கூறுவது சரிதான். இவ்வளவு விசயம் தெரிந்து 
              வைத்திருக்கிறாயே.. ஆச்சரியம்தான். உளவியல் மருத்துவராகப் போயிருக்க 
              வேண்டும். 'மிஸ்' பண்ணியிட்டாய்."
              
              இவ்விதமாக அவர்களிருவரும் அளவளவியபடியிருந்த வேளையில் அவனது பெயரை 
              உள்ளிருந்து வந்த வெள்ளையின அதிகாரியொருவன் அழைத்தான். 
              
              "யாரது.. இளங்கோ"
              
              "நான்தான்" என்றவாறெழுந்த இளங்கோ அருள்ராசா பக்கம் திரும்பியபடி 
              "எங்கேயும் போயிடாதே. நான் வரும்வரைக்கும் இங்கைதான் நில்" என்றவன் 
              அந்த அதிகாரியைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான். தன் காரியாலய 
              அறைக்கு அவனை அழைத்துச் சென்ற அந்த அதிகாரி அருகிலிருந்த 
              ஆசனத்திலமரும்படி சைகை காட்டினான்.
              
              "என் பெயர் 'டிம் லாங்கின்'. சரி, இன்றைக்கு எதற்காக இங்கு விஜயம் 
              செய்திருக்கிறாய்?"
              
              அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் இளங்கோ தன்னிடமிருந்த ஆவணங்களை, 
              இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பத்திரிகைச் செய்திகளின் போட்டோப் 
              பிரதிகளை, அண்மைய யூலைக் கலவரத்தைப் பற்றி வெளிவந்த தகவல்கள், 
              புகைப்படங்களை எடுத்துக் காட்டினான். அதிலொன்று நிர்வாணமாக்கப்பட்ட 
              தமிழனொருவனைச் சுற்றி, அந்த அப்பாவியைக் கொல்வதற்கு முன்னதாக 
              குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த காடையர் கும்பலின் படம். 
              அதனைப் பார்த்ததும் அந்த அதிகாரி முகம் சுளித்தான். 
              "காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள்" என்று தனக்குள்ளேயும் சிறிது 
              கூறிக் கொண்டான்.
              
              அந்த அதிகாரியும் சிறிது மடங்கக் கூடிய ஆசாமியாக அவனுக்குப் பட்டது.
              
              "சேர், இலங்கைத் தமிழர்கள் இனரீதியில் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் 
              புகைப்படப்பிரதியில் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்குமந்த 
              அப்பாவியுமொரு தமிழன்தான். நானுமொரு ஈழத்தமிழன்தான்..." 
              
              இவ்விதம் அந்த அதிகாரிக்குத் தன் நிலையினை விபரிக்க முற்படுகையில் 
              இளங்கோவுக்கு அந்தக் கணத்தில் அந்தப் புகைப்படப்பிரதியிலுள்ள அந்த 
              அப்பாவித் தமிழனின் நிலை மிகவும் தெளிவாக, அனுபவரீதியாகப் புரிந்தது. 
              நெஞ்சுணர்ந்தது. இரத்தம் சொட்டுமுடலுடன், நிர்வாணக் கோலத்தில், 
              கூனிக்குறுகியபடி, வெறிபிடித்தாடும் மிருகங்களுக்கு 
              மத்தியிலிருந்தபோது அவன் என்ன நினைத்திருப்பானோ? ஊரிலெங்கோ காத்து 
              நிற்கும் அவனது மனைவியை அல்லது 'எப்போ அப்பா வருவாரோ'வென்று இன்பக் 
              கனவுகளுடன் காத்து நிற்குமொரு இளங்குருத்தை அல்லது நோகும் நெஞ்சுடன் 
              துஞ்சாதெங்கோ விழித்திருக்கும் காதலியை , முதுமையில் அவனுதவியை நாடி 
              நிற்குமந்ததாயை, சகோதரனை, சகோதரியையெல்லாம் நினைத்திருப்பானோ? அவனது 
              அந்தக் கூனிக் குறுகிய தோற்றம் ஈழத்தமிழர்களின் துயரத்தினொரு 
              குறியீடாக விளங்கியதுபோல் பட்டது.
              
              "சேர், வேலை செய்யாமல் இங்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது மிகவும் 
              சிரமமாகவுள்ளது. வேலை எடுக்க வேண்டுமென்றால் 'சமூகக் காப்புறுதி 
              இலக்கத்தைக் ' கேட்கிறார்கள்.."
              
              அதனைக் கேட்டதும் அந்த அதிகாரி சிறிது சிரித்தான். அத்துடன் " 
              நியுயார்க்கிலிருக்கிறாய். நியுயார்க் உயர்ந்த கட்டடங்களுக்கு 
              மட்டும் புகழ்பெற்றதொன்றில்லை. இன்னுமொன்றிற்கும் அது புகழ் மிக்கது. 
              தெரியுமா?" என்றதும் 
              
              இளங்கோ "தெரியும். கேளிக்கையான இரவு வாழ்க்கைக்கும் புகழ் 
              பெற்றதுதான்" என்று பதிலிறுத்துச் சிரித்தான். அதற்கு 'டிம் 
              லாங்கின்' தன் பருத்த தொந்தியசையச் சிரித்தான்: "மிக விரைவிலேயே நீ 
              நல்லாத்தான் நியூயார்க்கைப் புரிந்து வைத்திருக்கிறாய். ஏதாவது 
              அனுபவங்களுண்டா?" என்றும் கண்களைச் சிமிட்டினான்; அத்துடன் "அதுவல்ல 
              சரியான பதில்" என்றும் 'பொடி' வைத்துப் பேசினான்.
              
              "எனககுத் தெரியவில்லையே" என்று பதிலுக்கு இளங்கோ தலையைச் சொரிந்தான்.
              
              டிம் லாங்கினே தொடர்ந்தான்: "சரி சிறியதொரு துப்பு தருகிறேன். கண்டு 
              பிடிக்கிறாயா பார்க்கிறேன். உன் இன்றைய இருப்பிலேயே பதிலும் 
              அடங்கியுள்ளது. அதாவது என் கேள்விக்குரிய சரியான பதில் உன் இன்றைய 
              இருப்பிலுள்ளது. எங்கே பதிலை இப்பொழுது கூறு பார்க்கலாம்?"
              
              இளங்கோவுக்கு அந்த வெள்ளையினத்து அதிகாரியின் போக்கு சிறிது 
              வியப்பினைத் தந்தது. மிகவும் வேடிக்கையாகப் பேசுகிறான். வழக்கமான 
              அதிகாரிகளுக்குரிய கண்டிப்பு, கர்வமெதுவுமில்லாமல் மிலவும் இயல்பாக, 
              நட்புணர்வுடன், குதூகலமிக்க சிறுவனொருவனின் ஆனந்த உணர்வுகுடன் அவன் 
              பேசுகிறான். அவனது கேள்விக்கு பதிலிறுக்க முடியாமல் இளங்கோ 
              வெற்றிகரமாகப் பின்வாங்கினான்.
              
              டிம் லாங்கினே தொடர்ந்தான்: "நியூயார்க் மில்லியன் கணக்கில் 
              வசிக்கும் சட்டவிரோதக் குடிகளுக்கும் பெயர் போனதென்பதை எவ்விதம் நீ 
              மறக்கலாம்? நீயே அவர்களிலொருவன்தானே. இவர்களெல்லாருமே இங்கு 
              எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்கலுமில்லாமல்தான் வேலை செய்கிறார்கள். 
              அவர்களைப் போல் உன்னாலும் வேலை செய்ய முடியும். போய்ச் செய். 
              உன்னுடைய கோப்புக்குக்குரிய சரியான மறுமொழி வாஷிங்டனிலுள்ள இராஜாங்க 
              திணைக்களத்திலிருந்துதான் வரவேண்டும். அதன்பிறகுதான் எங்களால் 
              எதுவும் செய்ய முடியும். இருந்தாலும் உன் நிலை பற்றிய என் 
              பரிந்துரையினை அனுப்பி வைக்கிறேன். விரைவிலேயே உனக்கு 
              அவர்களிடமிருந்து பதில் வருமென்று எதிர்பார்க்கிறேன். அதுவரையில் 
              நியூயார்க் உன்னையும் வாழவைக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்."
              
              "அது சரி.. களவாக வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்களது அதிகாரிகள் 
              யாராவது என்னைப் பிடித்து விட்டால்.." என்று இளங்கோ இழுத்தான். 
              அதற்கு டிம் லாங்கின் "நீ தற்போது வைத்திருக்கிற ஆவணங்களைக் காட்டு. 
              அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீ சட்டவிரோதமாகவிருந்தாலும் 
              ச்ட்டரீதியாகத்தான் பதிவு செய்து இருக்கிறாய். எனவே அவர்கள் புரிந்து 
              கொள்வார்கள். வெருட்டினால் பசி பொறுக்கவில்லை. அதுதான் வேலை 
              செய்கிறேன். வேண்டுமானால் தடுப்பு முகாமிலேயே கொண்டு சேர்த்து 
              விடுங்கள் என்று சொல். ஆளை விடு என்று ஓட்டம் பிடித்து விடுவார்கள். 
              ஒன்றுக்கும் பயப்படாதே. அமெரிக்கா நிச்சயம் உன்னை வாழ வைக்கும்" 
              என்று பதிலுரைத்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். அவனுக்கு நன்றி 
              கூறி விட்டு வெளியில் வந்த இளங்கோவின் சிந்தையில் அந்த அமெரிக்கக் 
              குடிவரவுத் திணைக்கள அதிகாரியின் பருத்த தொந்தியும், வேடிக்கையான 
              பேச்சும், நியூயார்க்கில் சட்டவிரோதமாக வேலை செய்து வாழ்வதெப்படி, 
              அகப்பட்டால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து 
              தப்புவதெப்படியென்று டிம் லாங்கின் தந்த ஆலோசனைகளும் அவனைப் புதிர் 
              நிறைந்ததொரு மனிதனாகப் புலப்படுத்தின; சிரிப்பும் கூடவே வந்தது. 
              
              [தொடரும்]



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




