அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!
              
              
               இன்னுமொரு 
              பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். 
              அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது, 
              கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் 
              உரையாடலினை ஆரம்பித்தான்:
இன்னுமொரு 
              பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். 
              அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது, 
              கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் 
              உரையாடலினை ஆரம்பித்தான்:
              
              "அருள், எப்ப்டியாவது இன்னுமொரு வேலையைக் கெதியிலை எடுக்க வேணும். 
              உன்னுடைய 'பிளான்' என்ன?"
              
              "நானும் எனக்கேற்ற வேலையொன்றைத் தேடிக் கோண்டுதானிருக்கிறன. கிடைக்க 
              மாட்டேனென்கிறதே. எங்கை போனாலும் 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டை அல்லவா 
              கேட்கிறான்கள். எனக்கென்னென்றால் 'இமிகிரேஷன் ஓபிசு'க்குப் போய் அதை 
              எடுக்கிற வழியை முதலிலை பார்த்தால் நல்லதென்று படுகுது. நீ என்ன 
              சொல்லுறாய்?"
              
              "அருள். நீ சொல்லுறதும் நல்ல 'ஐடியா'தான். இன்றைக்கு முதலிலை அங்கு 
              போய் விசாரித்து விட்டுப் பிறகு அங்கிருந்தே வேலை தேடும் படலத்தைத் 
              தொடங்குவோம்.."
              
              "அதுவும் நல்ல 'ஐடியா'தான். அப்பிடியே செய்வம். அதுக்கொரு முடிவைக் 
              கண்டு விட்டு, அது சரிப்படாதென்றால் நானும் உன்னைப் போல எந்த வேலையை 
              என்றாலும் செய்ய என்னைத் தயார் படுத்த வேண்டும்."
              
              "அது சரி. உனக்கு இமிகிரேசன் ஓபிஸ் எங்கையிருக்கிறதென்று தெரியுமே?'
              
              "26 'பெடரல் பிளாசா'வில்தானொருக்கு. பிரச்சினையென்னவென்றால்..."
              
              "என்ன பிரச்சினை..?
              
              " 'சோசல் இன்சுரன்ஸ் காட்'டை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வேறு சில 
              அடையாள அட்டைகள் தேவை. முதலிலை எங்களுக்கு இன்னும் சட்டரீதியாக வேலை 
              செய்கிறதுக்குரிய பத்திரங்களெதுவுமில்லை. 'பாஸ்போர்ட்' கூட கையிலை 
              இல்லை.."
              
              "'பாஸ்போர்ட்' ஏனில்லை. 'இமிகிரேசனி'டம்தானே குடுத்திருக்கிறம்தானே. 
              அதை அவங்கள் சரிபிழை பார்க்கலாம்தானே"
              
              "அடுத்தது... கோஷ் சொன்னவன்..."
              
              "என்ன சொன்னவன்?"
              
              "பாஸ்போர்ட் அதோடை வேலை தருபவடரிடமிருந்து வேலையை உறுதி செய்தொரு 
              கடிதமும், மற்றது வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரமும் தேவையாம். 
              அவை இருந்தால்தான் 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்' எடுக்கலாமாம்."
              
              "அடக் கோதாரி. இதுக்கு எங்கை போறது. சாணேற முழம் சறுக்கும் போலைக் 
              கிடக்கே.."
              
              "வேறை என்ன செய்யிறது. சும்மா இருக்கிறதை விட முயற்சி செய்யுறது 
              நல்லதுதானே.."
              
              "இது சரி வராட்டி என்ன செய்யிறதாம்..."
              
              "இது சரிவராட்டி ஏதாவது சமூகசேவை செய்யும் அமைப்பொன்றிடமிருந்து 
              சட்டரீதியான சேவையைப் பெற 'டிரை' பண்ணலாம். அபப்டிப் பட்ட பல 
              அமைப்புகள் இங்கை இருக்காம்"
              
              "எதுக்கும் முதலிலை இமிகிரேசன் ஓபிஸுக்குப் போய் அங்கையிருக்கிற ஒரு 
              ஓபிசரைக் கண்டு கதைப்போம். எங்களிடமிருக்கிற நாட்டிலை சட்டவிரோதமாகத் 
              தங்கியிருக்கிற 'இமிகிரேசன் டொக்குமன்றைக்' காட்டி கதைப்போம். 
              தற்போதைக்கு அது ஒன்றதுதான் எங்களிடமிருக்கிற ஒரேயொரு 
              'டொக்குமென்ற்'. முதலிலை அதை வைத்து ஆரம்பிப்பிப்போம்"
              
              "நீ சொல்லுறதும் சரிதான். 'ட்ரை' பண்ணாமல் என்ன நடக்குமென்று 
              முதலிலையே முடிவெடுக்க முடியாது. கேட்காமல் எதுவுமே கிடைக்காதுதானே"
              
              "அதுதான் ஒரு கிறித்தவ பாட்டுக் கூட இருக்குதே.."
              
              "எந்த பாட்டை நீ சொல்லுறாய்?"
              
              "கேளுங்கள் கிடைக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் 
              கிடைக்குமென்றார் இயேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்"
              
              "சரி கேட்டுப் பார்ப்பம் இமிகிரேசன் ஓபிசரிடம். கிடைத்தால் நல்லது. 
              கிடைக்காவிட்டாலும் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ள 
              வேண்டியதுதான்."
              
              "அருள்! நீ 'மைக்கல் கிரிக்டனின்' ஜுராசிக் பார்க் நாவல் 
              படிச்சனியா?"
              
              "ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் படமாய் வந்து சக்கை போடு போட்டதே அந்த 
              ஜுராசிக் பார்க்கைத்தானே சொல்லுறாய்?"
              
              "அதே ஜுராசிக் பார்க்கைத்தான் சொல்லுறன். உயிரினம் எப்படியும் 
              தப்புறதுக்கு வழியைக் கண்டு பிடித்துவிடுமென்பதை அற்புதமாகச் 
              சொல்லும் கதை. இயற்கையுடன் விளையாடக் கூடாதென்பதையும் இன்னுமொரு 
              கோணத்தில் சொல்லும் கதை. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மாற்றுப் 
              பக்கத்தை, விபரீத விளைவுகளை அறிவுறுத்தும் கதை. எதனையும் 
              வியாபாரமாக்கி, விறபனைப் பொருளாக்கி இலாபம் பண்ணத் துடிக்கும் இன்றைய 
              மேற்குலக சமுதாயத்தின் ஆசைக்கு விழுந்த பலத்த அடியினைச் சொல்லும் 
              கதை. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.."
              
              "அது சரி. அதுக்கும் எங்கட நிலைக்குமென்ன சம்பந்தம். எதுக்காக அதை 
              இங்கை சொல்ல வாறாய் இளங்கோ"
              
              "எதுக்குச் சொல்ல வாறனென்றால்.... 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்' 
              கிடைக்குதோ இல்லையோ நாங்கள் தொடர்ந்தும் வாழத்தான் போறம். இங்கை 
              இருக்கிற வரைக்கும் முடிந்த வரைக்கும் முயற்சி செய்யத்தான் போறம். 
              அந்தக் கார்ட் கிடைத்தால் வாழ்க்கை இலகுவாகக் கழியும். நல்லதொரு வேலை 
              எடுத்து முன்னேறலாம். இல்லையென்றால் எந்த தொட்டாட்டு 
              வேலையையென்றாலும் செய்து இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள 
              வேண்டியதுதான்"
              
              இவ்விதமாக அவர்களுக்கிடையில் உரையாடல் தொடர்ந்தது. எவ்விதமாவது 
              குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரிடம் தங்களது நிலையினை விளக்கிச் 
              சமூகக் காப்புறுதி அட்டையினைப் பெறுவதற்கு இயலுமானவரையில் முயற்சி 
              செய்ய வேண்டும். அவருக்கு இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் 
              நிகழ்வுகளை, நிலைமைகளை, அண்மைக்காலத்து நிகழ்வுகளை குறிப்பாகக் 
              கறுப்பு யூலை 83 நிகழ்வுகளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மேல 
              கட்டவித்து விடப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை, இவறையெல்லாம் 
              விரிவாக ஆதாரங்களுடன் அவருக்கு விபரிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் 
              சம்பந்தமாக மேற்கு நாட்டு வெகுசன ஊடகங்களில் வெளிவந்த செய்திக் 
              குறிப்புகளின் போட்டோப் பிரதிகளை அறுக் சேர்த்து வைத்திருந்தது 
              நல்லதாகப் போய் விட்டது. அவற்றை ஆதாரங்களாகக் காட்ட முடியும். 
              இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடி முன்னெடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட 
              நடவடிக்கைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து அவை பற்றித் தீர்க்கமான 
              முடிவினையெடுத்தார்கள். அதன் பின் அவர்கள் ஏற்கனவே தீர்மானித்தபடி 
              'பெடரல் பிளாசா'விலுள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் செல்ல முடிவு 
              செய்து அன்றைய பயணத்தை அவ்விதமே ஆரம்பித்தார்கள்.!
[தொடரும்]



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




