மீள்பிரசுரம்: தினமணி.காம்!
"பஞ்சமும் நோயும் நின் அடியார்க்கோ,
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ''
மதுரை,
ஆக. 23: ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய
தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி
சாலையோரத்தில் வாழ்கின்றனர்.
"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?'
-என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில்
வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடியிருந்தார்.
அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள்
கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானவடிவேலு. இந்திய
குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலுவுக்கு தொழிலாளர்
நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார். ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த
மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40).
தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில்
குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது,
பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை
வீட்டில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு
திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி
பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.
காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடிவேலு
இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை
செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.
கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி
மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்தார். ஆனால்
சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால்
வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக்
காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில்
போதிய வருவாய் இல்லை. அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன்
தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இப்போது
தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன்
கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர்.
சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது
சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை
யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை. வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே
விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தனலெட்சுமியும், அவரது
சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம். மழை பெய்தால்
அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும்,
அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார்
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
சாலையோர வாழ்க்கை; காபி, வடையே காலை உணவு! தெருவோரத்தில் தள்ளுவண்டியில்
விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு -என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன்
விவரிக்கிறார் தனலெட்சுமி. வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு
அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி
விரக்தியுடன் சிரிக்கிறார். ""ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதியத்திலாவது என்னை
வேலைக்கு சேர்த்துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு
கண்ணீர்தான் வருகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள்
செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும்
நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ?
வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட
பத்திரப்படுத்தி பாதுகாக்கும் தமிழக அரசு அந்தத் தியாகச்சுடரின் வாரிசுகளுக்கு, வாழ
ஒரு வழியும், வசிக்க பாதுகாப்பான இடமும் அளிப்பது அவசியம் என்பதே அனைவரது
எதிர்பார்ப்பு.
"பஞ்சமும் நோயும் நின் அடியார்க்கோ,
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ''
என்ற பாரதியாரின் பாடல் வரிகள்தான் அந்த இடத்திலிருந்து புறப்பட்டபோது காதில்
ரீங்காரமிட்டது.
நன்றி: தினமணி.காம் |