இரட்னா: எம்மினத்தின் திசைகாட்டி!
ஈழப்
புரட்சி அமைப்பின் நிறுவனரும், சிறிலங்காவின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வித்தகனாய்
விளங்கியவருமான இளையதம்பி இரட்னசபாபதி அவர்கள் 12.12.2006 இல்
இலண்டனில், தனது 68வது வயதில் காலமான துயரச் செய்தியை பகிர்ந்து
கொள்கின்றோம். இரட்னா என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர், தமிழ்பேசும்
மக்கள் மத்தியில் முன்வைத்த சிந்தனைகளும், வழிகாட்டல்களும்
ஈழப்போராட்டத்திற்கு அத்திவாரமாய் அமைந்துள்ளதை எவரும் அறிவர்.
காலத்தால் அழியாத அவரது சிந்தனைகளும், அறிவுறுத்தல்களும் என்றும்
நினைவுகூரத்தக்கவை.
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு, தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மைச்
சிங்கள இனத்தவரால் படிப்படியாக ஒதுக்கப்பட்டும், விரட்டப்பட்டும்
வந்த காலங்களில் நாட்டைவிட்டு இடம்பெயர்ந்து இலண்டனில் தஞ்சமடைந்த
தமிழ்பேசும் மக்கள் மத்தியில் 70களில், விழிப்புணர்வை ஏற்படுத்திய
முன்னோடி இரட்னா ஆவார்.
அகிம்சைப் போராட்டத்தை மதிக்கத் தவறிய இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதம்
தரித்த போராட்டத்தின் அவசியத்தை ஏற்றுச் செயற்பட்டவர் இரட்னா.
குறிப்பாக தன்வசம் இருந்த சர்வதேசத் தொடர்புகளைப் பயன்படுத்தி,
இலங்கைத் தமிழ் இளைஞர்களை, இலங்கை அரசின் இராணுவக் கெடுபிடிகளை
எதிர்கொள்ளக்கூடிய வகையில், அதற்கான பயிற்சிநெறிகளை ஏற்படுத்திக்
கொடுத்தவர் என்பதை அனைத்து போராட்ட அமைப்புக்களும் நன்கு அறியும்.
இக்காலங்களில், 1975 இல் அவரால் உருவாக்கப்பட்டதே ஈழப் புரட்சி
அமைப்பு ஆகும். இவ்வமைப்பை நிறுவிய போது, அதன் முதற் பிரகடனமாக அவர்
வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்திலிருந்து அவர்; காட்டிய திசையை நாம்
புரிந்துகொள்ளலாம்:
1. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை என்பது, வடக்கு
கிழக்கு மலையகம் சார்ந்து நோக்கப்படவேண்டிய ஒன்று.
2. தமிழர்கள் செறிந்து வாழும் இப்பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில்
பொருளாதார உள்ளகக் கட்டமைப்பொன்றை நிறுவுவதே போராட்ட அமைப்பொன்றின்
அடிப்படை வேலைத்திட்டமாய் அமையவேண்டும்.
3. அவ்வாறு அமையப்பெற்ற பொருளாதார உறவில், அதனை எதிர்க்கும் எந்த
சக்தியையும் ஆயுதம் தாங்கி எதிர்கொள்ள வேண்டும்.
4. அந்த எதிர்கொள்ளலில் இடம்பெறும் சமநிலையில் அரசியல் தீர்வு
நிர்ணயிக்கப்படவேண்டும்.
இதனடிப்படையில் ஈரோஸ் இயக்கத்தை நெறிப்படுத்திவந்த இரட்ணா அவர்கள்
1983 இல் ஏற்பட்ட பாரிய இனக்கலவரத்தின் விளைவாக, இந்தியத் தலையீடு
மேலோங்கிய நிலையில், பல்வேறு போராட்ட அமைப்புக்கள் தீவிரம்பெற்ற
நிலையில், ஐக்கியம் பற்றியும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்
குறித்தும் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
1985 இல் திம்புப் பேச்சுவார்த்தையின் போது ஈரோஸ் சார்பாகக்
கலந்துகொண்ட இவர், மலையக மக்களின் வாக்குரிமைக்காக
வற்றுபுறுத்தியிருந்தார். இதன் பயனாக திம்புப் பேச்சுவார்த்தையில்
இடம்பெற்ற நான்கம்சக் கோரிக்கையில், மலையக மக்களின் வாக்குரிமையும்
அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. இதன் விளைவால்
இலங்கையரசு மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்க முன்வந்தது.
1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பு, வடக்கு கிழக்கு
எங்கிலும் தமிழ்பேசும் மக்கள் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு
உட்பட்ட நெருக்கடி மிகுந்த காலத்தில் இவர் இந்திய இராணுவ
வெளியேற்றத்தை கோரிக்கையாக முன்வைத்து 1989 இல் இடம்பெற்ற
நாடாளுமன்றத் தேர்தலை, மக்களின் கருத்தை வெளிப்படுத்த ஒரு கருவியாக
பயன்படுத்தியிருந்தார். இத் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை
வாக்குகளைப் பெற்று, இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத்
தெரிவித்ததன் வாயிலாக, வடக்கு கிழக்கில் இந்திய இராணுவ
வெளியேற்றத்துக்கு அடித்தளம் இட்டிருந்தார்.
இவர் எமது போராட்டத்தின் அங்கீகாரம் பற்றியும், சர்வதேச ஆதரவு
பற்றியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் சமகால அரசியலுக்கும் ஓர்
திசைகாட்டியாக விளங்குகின்றது.
ஈழப் போராட்டம் என்பது திருகோணமலையை விடுவிப்பதிலிருந்தே
ஆரம்பிக்கின்றது என்று சுட்டிக்காட்டிய இரட்னா, அப்பிராந்தியத்தை
தக்கவைத்துக்கொள்ளும் போதுதான், சர்வதேச ஆதரவு என்பது எட்டப்படக்
கூடிய விடயமாக அமையும் என கருத்துரைத்திருந்தார். இவர், சர்வதேச
ஆதரவு என்பதை „தார்மீக உதவி“ என்ற வரையறைக்குள் வைத்துக்கொள்ள
வேண்டியது அவசியம் என வலியுறுத்தியமையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
தன் கருத்துக்களாலும், தனிப்பட்ட அணுகுமுறைகளாலும் பகைமையற்ற நிலையை
பேணிவந்த இவர், அனைத்துப் போராட்ட அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி
பொது செயற்திட்டத்தின் கீழ் செயற்படவேண்டும் என்ற அவரது அடிப்படை
விருப்பு நிறைவேறாத நிலையில் அவர் எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.
ஆயினும், அவர் முன்வைத்த கருத்துக்களும், சிந்தனைகளும் எம் இனத்தின்
எதிர்காலத்திற்கு தகுந்த வித்தாகும் என்பது திண்ணம். இவர்
எம்மத்தியில் இன்று இல்லாவிட்டாலும், எம்மினத்தின் திசைகாட்டியாய்
வாழ்ந்துகொண்டிருப்பார்.
வெளியீடு: ஈழப்புரட்சிஅமைப்பு
(ஐரோப்பா) -
பதிவுகளுக்கு அனுப்பியவர்: வி.வசந்தன்
vvishvan@yahoo.co.uk
இறுதி வணக்கம்...உள்ளே