போக்கும் வரவும்…
- அசை சிவதாசன் -
பல வருடங்களுக்கு முன்னர் மொன்றியலில் ஒரு கத்தோலிக்க இறை வழிபாட்டு வெளியீடொன்றில்
வாசித்த உப கதையொன்று என்னை இன்று
வரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்து வருகிறது. அக் கதையின் மூலம் விவிலிய நூல்
என்கிறார்கள், பின்னால் பலரும் மீள் பிரசுரம்
செய்திருக்கிறார்கள். மூலம் எதுவாயிருந்தாலும் கதை படிப்பினையோடு கூடியது,
சாராம்சம் இதுதான். வாசியுங்கள்.
ஒரு மனிதன் தனது மனம் சஞ்சலப் படும் போதெல்லாம் கடற்கரைக்குப் போய் சற்றுக் காலாற
நடந்து மனமாறித் திரும்புவான். தனது கஷ்ட
துன்பங்களுக்கெல்லாம் காரணம் கடவுளே என்றெண்ணி அவரைத் திட்டித் தீர்த்துக்
கொள்வான். எவ்வளவு வேண்டியும் கடவுள் தனக்கு
உதவுகிறாரில்லையே என்று வாய் விட்டுக் கதறிக் கொள்வான். எவ்வளவு உருகியும் கடவுள்
உதவுவதாக இல்லை. சில வருடங்களின் பின்னர்
அவனது துன்பங்களெல்லாம் தீர்ந்து வாழ்வில் ஒளி வீச ஆரம்பித்தது. அப்போதும் அவன் அதே
கடற்கரைக்குப் போய் மகிழ்ச்சியோடு மனமாறி
வருவான்.
வழமைபோல் கடற்கரைக்குப் போய் காலாற நடந்து வரும்போது அவனுக்கு ஒரு அதிர்ச்சியான
அனுபவம் கிடைத்தது. அவன் நடந்து வந்த பாதையைத்
திரும்பிப் பார்த்தபோது வழக்கத்துக்கு மாறாக அவனது பாதச் சுவடுகளுக்குப் பக்கத்தில்
இன்னுமொரு பாதச் சுவடுகள் தொடர்ந்து வந்து
கொண்டிருந்தன. மனிதர் எவருமே அவனருகில் வராதபோது தன்னுடன் அருகில் வருவது கடவுளாகத்
தானிருக்கும் என்பதை அவனுணர்ந்து
கொண்டான்.
‘நான் கஷ்டங்கள் படுகின்ற போதெல்லாம் உன்னை வருந்தியழைத்தேன். அப்போதெல்லாம் என்னை
உதாசீனம் செய்தாய். இப்போ நான் வசதியோடு
பணக்காரனாக வாழும்போது மட்டும் என்னோடு ஒட்டிக்கொண்டு விட்டாயாக்கும், இங்குள்ள சில
மனிதர்களைப் போல.’ கடவுளை மனமாரத் திட்டித்
தீர்த்துக் கொண்டான்.
‘மகனே, நீ நினைப்பதும் சொல்வதும் தப்பு. நீ கஷ்டப்படும் போதும் நான் உன்னுடனே
வந்தேன். அப்போது நீ பார்த்த அந்த ஒரு சோடி பாதச் சுவடுகள்
என்னுடையவை. அப்போது நான் உன்னைச் சுமந்து வருவது வழக்கம். இப்போது கஷ்ட துன்பம்
நீங்கி நீ சுபீட்சமாக வாழ்கிறாய். இப்போதும்
உன்னுடன் வருகிறேன், உன்னருகில், நண்பனாக. அந்த இரண்டாவது பாதச் சுவடுகள்
என்னுடையவை.’
……..
உங்களில் சிலருக்குக் கடவுள் என்றொரு கருத்துரு மீது நம்பிக்கை இல்லாதிருக்கலாம்.
அதைத் திணிக்கும் தேவையும் தகமையும் எனக்கில்லை.
ஒருவரது வாழ்வு சார் அனுபவங்களே அவரது சித்த சுவாதீனத்தைக் கூர்மைப் படுத்துவதா
அல்லது மழுங்கடிப்பதா என்பதைத் தீர்மானிப்பதாக நான்
கருதுகிறேன். எந்த உயிரிணை, அஃறிணை, அருவ வடிவங்களிடையேயும் உணர்வுப் பரிமாற்றங்கள்
நிகழ்வதில்லை என்பது இன்னும் நிரூபணமாகாத
போது இப்போதில்லையாயினும் எதுவும் எப்போதும் சாத்தியமாகலாம் என்ற திறந்த மனத்தோடு
பிரகடனமற்று வாழ்வை எதிர்கொள்வது நல்லது
என்றே படுகிறது.
கடவுளின் இருப்பு பற்றி ஒரு தடவை அலுவலகத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது
ஒருவர் சொன்னார் ‘ உங்களுக்கோ அல்லது உங்கள்
குடும்பத்தில் யாருக்கோ துரதிர்ஷ்டமாக ஏதாவது நிகழ்ந்தால் அதன் பிறகும் நீங்கள்
இதையேதான் சொல்வீர்களோ தெரியாது’ என்று. பின்னர் தான்
தெரிந்தது அவரது மனைவிக்கு மார்புப் புற்றுநோய் வந்து சிகிச்சை
பெற்றுக்கொண்டிருந்தார் என்பது.
ஒரு இத்தாலியரின் வீட்டிற்குப் போயிருந்தபோது எதேச்சையாக அவரது வீட்டிலிருந்த
குளிரூட்டும் சாதனத்தில் ஒட்டிக்கொண்டிருந்த சாயி பாபாவின்
படம் என் அவதானத்தை ஈர்த்தது. ஒருவாறு மூக்கை நுழைத்து விடயத்தை அறிந்து கொண்டேன்.
அவ்வில்லத்தரசி கர்ப்பிணியாகவிருக்கும்போது
புற்றுநோய் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் குழந்தையா தாயா என்ற மரணப் போராட்டத்தின்
போது அவளின் ஒரு ‘இந்திய’ நண்பியின் இரக்க
ஆலோசனையின் பிரகாரம் சாயி பஜனைக்குச் சென்றாரென்றும் சில நாட்களில் புற்றுநோய்
மாயமாய் மறைந்து விட்டதென்றும் அருகில் நின்ற ஏழு
வயதுச் சிறுமியொன்றை இழுத்து முன்னிறுத்தி ‘இவள் தான் அந்தக் ‘கர்ப்பக் கிறகம்’
என்பதாகச் சம்பாஷணை முடிந்தது.
இப்படியாகப் பல கதைகளும் உப கதைகளும் உலகின் பல சமூகங்களிடையேயும் உலா வருவதை
நீங்களும் அறிந்திருப்பீர்கள். நம்புவர்களும்,
நம்பாதிருப்பவர்களையும்விட நம்பவில்லை என்று நடித்துவிட்டு மனதுள்ளே ஒளித்து
விளையாடுபவர்களே வாழ்வில் பெரிதும் சிரமப் படுகிறார்கள்
என்பதும் அறியாத விடயமல்ல.
‘முடிவே பாதைகளைத் தீர்மானிக்கின்றது’ என்ற மக்கியாவல்லியின் கோட்பாட்டின் பிரகாரம்
நடைபெற்றதற்கு யார் பொறுப்பாளி என்பதல்ல காரியம்
நடைபெற்றால் சரி வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போகும் இவ்வுலகத்தில் கடவுள் அருகில்
நடந்து வருவதற்கே உளவாலோசனை பெற்றுத்தான்
வரவேண்டும்.
இப்படியான சந்தர்ப்பத்தில் உலகில் இரு வேறிடங்களில் இரு வேறு மனிதப் பிறவிகள் மூலம்
கடவுள் தன் பிரசன்னத்தைக் காட்டியிருப்பதாக என்
மனம் இடித்துரைப்பதைச் சொல்லியேயாக வேண்டும்.
முதலாவது சீனாவில். ஒரு யூரியூப் (YOUTUBE) காணொளியில் பார்க்க முடிந்தது அந்தப்
பெண் ‘கடவுள்’ பற்றியது. இரண்டு கைகளையும் இழந்த ஒரு
நடுத்தர வயதுச் சீனப் பெண் தன் இரு பாதங்களையும் கைகளாகப் பாவித்து நண்டு பிடித்து
உணவு சமைத்துக் கணவன் குழந்தைகளுடன் உணவருந்தி
மகிழ்வது பற்றியது. இரண்டாவது தென்னமெரிக்காவில் (?). இடுப்பின் கீழ் கால்களை இழந்த
ஒரு பெண்ணை மணந்து இரு அழகிய குழந்தைகளோடு
பவனி வரும் ஒரு ‘ஆண் கடவுள்’ பற்றியது.
முதலாவதில் இரண்டு கைகளைத் தோளோடு இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காது
கால்களைக் கைகளாக்கித் தையலூசியில் நூல்
கோர்க்குமளவிற்கு வாழ்வை இலகுவாக்கிக் கொண்ட அப்பெண் கடவுளை அழைப்பதாகவோ அல்லது
நிந்திப்பதாகவோ காட்டப்படவில்லை. அவளே
தான் கடவுள்.
இரண்டாவதில் இடுப்பேயில்லாத ஒரு பெண்ணுக்குத் தாய்மையைக் கொடுத்து சமூகத்தில் ஒரு
சமத்துவமான பிரஜையாக வாழ வழி செய்து கொடுத்த
அந்த அசாதாரண மானிடனின் வடிவத்தில் கடவுள் அவளைச் சுமக்கிறாரா?
மேலே சொன்னவை சில. கேட்டவை, பார்த்தவை, அனுபவித்தவை. வாழ்வில் சில காரியங்கள்
நியமங்களை மீறிய நடப்பதற்கு காரணம் காண
முடியாது. இவற்றைப் பகிர்வதனால் சிறு வட்டங்களுக்குள் உலகைச் சுருக்கிக்
கொண்டவர்கள் வெளியில் வருவது சாத்தியமாகுமானல்-
பகிர்தலைத் தொடர்வேன்.
tam@veedu.com
Jan.15,2009 |