பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
அரசியல்! |
மீள்பிரசுரம்: வீரகேசரி
சிங்கள குடியேற்றங்களை தடுக்க
உலக நாடுகள் முன்வரவேண்டும்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை!
[ தமிழ்
மக்கள் இலங்கையின் வட, கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் குடியேறி
வாழ்கின்றார்கள். அதுபோல் சிங்கள் , முஸ்லீம் மக்களும் சுயமாகத்
தாங்கள் விரும்பியபடி வட, கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று வாழும்
உரிமையினைத் தடுக்க முடியாது. ஆனால் இலங்கை அரசு படையினரின் உதவியுடன்,
தமிழர்கள் அவர்கள் பரம்பரையாக வாழ்ந்த மண்ணில், பலவந்தமாக,
தென்னிலங்கைச் சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள
முடியாது. இத்தகைய சிங்கள மக்களின் இடம்பெயர்தல்கள் எந்தவித அரசியல்,
இராணுவத் தலையீடுகளுமின்றி நடக்க வேண்டுமேயொழிய பலவந்தமாக அல்ல. தமிழ்,
சிங்கள் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு,
நல்லெண்ணத்தின்வாயிலாக நடைபெறவேண்டும். தற்போதுள்ள சூழலில் முக்கியமான
விடயம் இலங்கைத் தமிழர்களின் தீர்க்கப்படாமலிருக்கும் அரசியல்
பிரச்சினை தீர்க்கப்படுதலாகும். அதற்கு முன்னர் இன்னும்
தடுப்புமுகாம்கள், சிறைகளில் வாடும் ஈழத்தமிழர்கள் மீள் குடியேற்றப்பட
வேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லீம் மக்கள் மீள்
குடியேற்றப்பட வேண்டும். வடகிழக்குப் பகுதிகளிலிருந்து படை முகாம்கள்
படிப்படியாக அகற்றப்பட வேண்டும். வலிந்து திணிக்கப்படும் தீர்வுகள்
உண்மையான தீர்வுகளாகாது. எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழ்,
சிங்கள, முஸ்லீம் மக்களுக்கிடையேயுள்ள முற்போக்குச் சக்திகள் அனைத்தும்
ஒன்றிணைந்து இலங்கையில் நிலவும் சிறுபான்மையினப் பிரச்சினைக்குத்
தீர்வினைக் காணப் போராடவேண்டும். இத்நப் பிரச்சினை உடனடியாகத்
தீர்க்கப்படாது போனால், இலங்கை அரசானது இந்தியா, சீனா மற்றும்
மேற்குநாடுகளுக்கிடையில் நிலவும் வேறுபாடுகளைக் காரணமாக வைத்துக்
குளிர்காய முயலுமானால், எதிர்காலத்தில் மீண்டும் பிராந்திய மற்றும்
சர்வதேச வல்லரசுகளின் மறைமுக யுத்தத்திற்குள் சிக்கி இலங்கைச்
சிறுபான்மையினத்தினரின் பிரச்சினைகள் வேறொரு கோணத்தில்
வெடித்தெழுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவென்பதையும் தட்டிக்கழித்துவிட
முடியாது. - பதிவுகள் - ]
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும்
சிங்களக் குடியேற்றங்கள் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தாது.
சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூற
வேண்டும். இத்தகைய குடியேற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் முன்வர
வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத்தின் துணையுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் சிங்களக்
குடியேற்றங்களை கண்டிப்பதுடன் இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக
நிறுத்தவேண்டும் எனக்கோருவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள குடும்பங்களில்
32 குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி நாவற்குழி 'அப்பன் குடியிருப்பு'
பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ்
பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். அந்த அறிக்கையிலேயே
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில்
சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல்
இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது. 20
வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தை
காட்டி ஏறத்தாழ 150 க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில்
06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள்
யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசல கூட வசதி எல்லாம்
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் செய்யப்பட்டிருந்தது. அவர்களும்
நேரடியாக புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை
உடனடியாக அமைச்சர்கள் சந்தித்தனர். பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கொழும்பில் இருந்து சமுர்த்தி அதிகாரிகள் சென்று அவர்களுக்கான நிவாரண
வசதிகள் செய்து கொடுத்தார்கள். மொத்தத்தில் அரசாங்கம் அவர்களை மிகக்
கவனமாக பராமரித்து வருகின்றது.
ஆனால் இவர்கள் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரு துண்டு நிலம் சொந்தமாக
கிடையாது. இவர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்களுமல்ல. ஆனால் இவர்களை
யாழ்ப்பாணத்தில் குடியேற்ற வேண்டுமென்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது.
இதன் முதற்படியாக புகையிரத நிலையத்தில் இருந்த ஒரு பகுதியினர் 10ஆம்
திகதி இரவு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு நாவற்குழி 'அப்பன்
குடியிருப்பு' என்ற பகுதியில் தற்காலிக வீடுகள் அமைத்து தங்க
வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ஏற்கனவே குடியிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சென்று
மீளக்குடியேற வந்த பொழுது இந்நிலம் வீடமைப்பு அதிகார சபைக்கு
சொந்தமானதென கூறி அவர்கள் அங்கு மீளக் குடியமர்வது அரசாங்கத்தால்
மறுதலிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தில் இன்று சிங்கள மக்கள்
குடியேற்றப்படுகின்றனர்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 90,000 மக்கள் அதியுயர் பாதுகாப்பு
வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் இருந்து விரட்டப்பட்டு இன்னும்
அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் கடந்த 20
வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு போக முடியவில்லை. உயர் நீதிமன்றம்
மீள் குடியேற அனுமதி அளித்தும் இராணுவம் அதனை இன்னும் அனுமதிக்கவில்லை.
இவர்களில் ஒரு பகுதியினரை குடியேற அனுமதித்தாலும் இராணுவ முகாம்
விஸ்தரிப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அதற்கான பாதுகாப்பு என்ற
பெயரில் ஒரு தொகுதி மக்கள் மீளக் குடியேற முடியாத நிலையே இன்றுள்ளது.
இந்நிலையில் 20 வருடம் அப்படி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில்
உள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் என்ன கொழும்பிலா காணியும் வீடும்
கட்டிக் கொடுக்கப் போகின்றது?
1977,81,83 ஆம் ஆண்டுகளில் அடித்து விரட்டப்பட்ட்ட எத்தனை தமிழ்
மக்களின் சொத்துக்கள் தென் பகுதியில் மீளக்கொடுக்கப்பட்டன.
உயிர்த்தப்பினால் போதுமென, எல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழ் மக்கள்
வெளிநாடுகளுக்கு செல்லவில்லையா? தென்பகுதியில் தமிழ் மக்களுக்கு
பாதுகாப்பு இல்லையென கூறி அவர்களை அரசாங்கம் கப்பலில்
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பவில்லையா? இன்று யாழ்ப்பாணத்திலும்
அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கக்கூடாது என்பதற்காகவா இந்த சிங்கள
குடியேற்றம் இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம்
குடிசன பரம்பல் விகிதாசாரத்தில் அரசு மாற்றத்தை ஏற்படுத்த
முயற்சிப்பதுடன், கிழக்கு மாகாணத்தைப்போன்று தமிழ் மக்கள்
பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு,
அவர்களின் தனித்துவமும் பறிபோகும் சூழலும் ஏற்படுகின்றது.
இராணுவத்தின் துணையுடன் அரசாங்கம் செய்யும் இவ்வின ஒழித்தல்
நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன்
இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமெனவும் அரசாங்கத்தை
கோருகின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்னும் இடம்பெயர்ந்திருக்கும் 90,000 தமிழ்
மக்களுக்கு மீளக்குடியேற அனுமதிக்கப்படவேண்டும். அப்படி மீளக்குடியேற
முடியாத மக்கள் இருப்பின் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குடியிருக்க
நிலம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து அந்த
மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மக்களை அகதி முகாம்களில்
வைத்துக் கொண்டு வெளியில் இருந்து வரும் சிங்கள மக்களை குடியேற்றுவது,
நீதியானதுமல்ல எந்த வகையிலும் ஏற்றக் கொள்ளக்கூடியதுமல்ல,
இராணுவத்தின் துணையுடன் தமிழ் மக்களை பயமுறுத்தி இப்படி சிங்கள
குடியேற்றங்களை அரசு முன்னெடுக்குமாயின் கோபமும் விரக்தியும் தான்
உருவாகுமே தவிர இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படாது. சிங்கள
முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துச்
சொல்லவேண்டும். யுத்தத்திற்கு பின் இலங்கை அரசாங்கம் எடுக்கும்
இவ்வாறான நடவடிக்கை உலக நாடுகள் நிறுத்த முன் வரவேண்டுமெனவும் தமிழ்
தேசியக்கூட்டமைப்பு கோருகின்றது.
நன்றி - வீரகேசரி
|
|
|
|
©©©©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|