| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| இலக்கியம்! |  
| விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள் 
 - வெங்கட் சாமிநாதன் -
 
 
  தமிழ் நாட்டில் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தத்தைக் காணமுடியாது போய் 
வருகிறது. வார்த்தைகளே அர்த்தமிழந்து போயுள்ளன. மொழி
செத்துப் போனதற்குக் காரணம், மொழியின் குற்றமில்லை. மொழிக்கு அதன் அர்த்தத்தை நாம் 
கொடுப்பதில்லை. அரசு என்று சொன்னால் அது மக்கள் 
வாழ்க்கையைச் சீர்படுத்தும், வளப்படுத்தும் முன்னெடுத்துச் செல்லும் ஒன்றாக 
நினைப்போம் ஆனால் அரசே நாட்டின் வளத்தையெல்லாம் திட்டமிட்டு 
அழித்து வரும் சக்தியாக மாறியுள்ளது. சட்டக் கல்லூரி என்றால் அங்கு சட்டம் 
கற்பிக்கும் இடம் என்று நினைக்கிறோம் ஆனால் அது மாணவர்களே 
ஒருவரை ஒருவர் கொலை வெறியோடு தாக்குமிடமாகக் காண்கிறோம். சமூக நீதி என்கிறார்கள். 
அங்கு தான் ஒவ்வொரு ஜாதியும் அதன் எண்ணற்ற 
கிளைகளும் இனம் காணப்பட்டு, அதன் வளர்ச்சிக்கு வழி வகை செய்ய கட்சிகளும் தொடங்கி 
ஒவ்வொரு ஜாதிக்கும் சலுகைகள் பெற்று, சீரும் 
சிறப்புமாக ஜாதிகள் வளர்க்கப் படுகின்றன. காவல் துறை சாதாரண மக்களுக்குக் காவலாக 
துணையாக இருக்கும், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் 
என்று எண்ணுகிறோம். ஆனால், அவர்கள் காவல் காப்பது குண்டர்களையும், 
குற்றவாளிகளையும்ம் தான். அவர்கள் தாம் வகிக்கும் பதவிகளைப்
பயன்படுத்தி சட்டம் மீறிய செயல்களில் ஈடுபடுபவதைத்தான் காவல் காக்கிறது. சாதாரண 
மக்களாகிய நாம் ஏதும் ஆபத்தில் பாதுகாப்பு வேண்டி, 
அல்லது ஏதும் புகார் சொல்ல காவல் துறையை அணுகிணால், நம் ஜாதகம் சரியாக இருந்தால் 
நம் புகார் உதாசீனப்படுத்தப்படும், நாம் நல்ல படியாக 
வீடு திரும்பலாம். நம் வேளை கெட்டிருந்தால், நம்மீதே ஏதேனும் பொய் வழக்கைச் சுமத்தி 
நம்மை உள்ளே தள்ளி அடைப்பார்கள். பெரிய இடத்து
சொந்தக்காரர்கள் வீட்டு வேலைக்காரியேகூட ஒரு காவல் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்து 
விடலாம். காவல் துறை மௌனமாகிவிடும். பொது 
இடங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. யாரும் கேட்பதில்லை. அரசே பின் அதற்கு அங்கீகாரம் 
கொடுத்து விடுகிறது. அந்த இடம் மட்டுமல்ல. அந்தக் 
குடிசைக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மின்சாரம், இலவச வேட்டி சட்டை ஒரு 
ரூபாய்க்கு அரிசி, ..ஆக அரசு என்பது இலவசமாக 
எதையும் வாரி வழங்கும் ஒரு அதிகார மையம் என்று அர்த்தம் செய்து 
கொள்ளப்பட்டுவிட்டது. வருடக் கணக்காக ரோடு என்று ஒரு காலத்தில்
இருந்த இடங்கள் குண்டும் குழியுமாக, சாக்கடை நீர் வழிந்தோட காட்சி தருகின்றன. 
பகுத்தறிவை தமிழ் நாட்டுக்குப் போதிப்பவர்கள் தேர்தலில் வெற்றி
பெற வேண்டுதலுடன் தங்கள் ஊர் அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்கிறார்கள். தங்கள் 
கட்சிக்கு வாக்கு அளிக்க நாலாயிரம் ஐயாயிரம் பணமும் 
கொடுத்து மீனாட்சி அம்மன் பேரில், சூடம் கொளுத்தி அல்லது பால்செம்பு மேல் கை வைத்து 
சத்தியம் செய்து தரக் கட்டாயப்படுத்துகிறார்கள். "தங்கள்
பொன்னான வாக்குகளை" தமக்கு அளிக்க மறுத்தால், மண்டை உடையும். வீடு நாசமாகும். 
ஜனநாயகத்துக்கு இந்தமாதிரி அர்த்தங்கள் தான் 
இருப்பதையும் நாம் தமிழ் நாட்டில் கற்று வருகிறோம். 
 சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி இருந்தால் வாழ்வது எப்படி? எப்படியானால் என்ன? 
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த அர்த்த 
மீறல்களே மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், அது தானே விதியாகிறது. ஆனால் மனித 
வாழ்க்கையில் ஆச்சரியங்களும் அவ்வப்போது நிகழ்ந்து 
விடுகின்றன தான். அதைக் கண்டு நாம் உடனே மனம் மகிழ்ந்து விடக்கூடாது. அவை விதி 
விலக்குகள். விதி விலக்குகளுக்கு தர்க்க ரீதியாக ஏதும் 
விளக்கங்கள் காணமுடியாது. வளமுறை என, நியதி இது தான் என ஒன்று இருந்தால் அதில் சில 
விதி விலக்குகள் நேர்ந்தே தீரும் என்பது தான் தர்க்க
விதி. அவை எப்போதாவது அபூர்வமாகத் தான் நிகழும் என்பதும் விதி.
 
 தமிழ் இலக்கியப் படைப்புக்களில் சிறந்தது எனத் தான் கருதும் ஒரு நூலுக்கு சாகித்ய 
அகாடமி வருடாவருடம் பரிசளித்து வருகிறது. 1956 
-லிருந்தோ என்னவோ சரியாக நினைவில் இல்லை. அந்த இலக்கியப் பரிசு ஆரம்பத்திலிருந்து 
இலக்கியத்துக்காகவும் இல்லை. அது பரிசாகவும் 
இருக்கவில்லை. அளிக்கப்படுவது தான் பரிசு. தானே எல்லா முயற்சிகளையும் செய்து 
எடுத்துக் கொள்வது எப்படி பரிசாகும்? ஏதோ ஒரு எழுத்துக்குத் 
தான் அது போய்ச் சேர்வது தான் விதியாக இருந்ததே அல்லாது இலக்கியத்துக்கு தரப்பட்டது 
விதி விலக்காகத் தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு
வருஷமும் 70-80 பேருக்கு கோயில் சுண்டல் மாதிரி கலைமாமணி விருது 
வினியோகிக்கப்பட்டால், அது எப்படி விருது ஆகும்?. பெறுபவர் எப்படி 
கலைமாமணி ஆவர்? இந்த டிஸம்பர்- ஜனவரி மாதம் சென்னையில் சங்கீத விழாக்காலம். 
சென்னையில் கிட்டத்தட்ட 700 சபாக்கள் இருப்பதாகச் 
சொல்கிறார்கள். போன வருஷம் ஹிந்து பத்திரிகையில் இந்த சங்கீத பருவத்தின் போது 
ஒவ்வொரு சபாவும் தினம் தினம் கொடுத்து கௌரவிக்கும் 
பட்டங்களும் விருதுகளும் ஏதோ பிட் நோட்டீஸ் வினியோகிப்பது போல் இருந்தது. இந்த 
முப்பது நாட்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் 
வழங்கப்பட்டிருந்தன. அந்தப் பட்டங்களின் பெயர்களும் வேடிக்கையாக இருந்தன. (சங்கீத 
கலா நிபுணர், நாத ரத்னா, சங்கீத மாமணி, தமிழ்
இசைப்புரவலர்), இப்படி எத்தனை சொல்லிக் கொண்டே போவது?. ஏதோ ஒரு பட்டம் வேண்டும், 
கொடுக்கவேண்டும். அதற்கு அர்த்தம் இருக்க 
வேண்டியதில்லை. பெறுபவருக்கும் சந்தோஷம் தான். அந்த சந்தோஷம் ஒரு நாளைக்குத் தான். 
பிறகு அது எல்லோராலும் மறக்கப்பட்டு விடும். 
ஜி.என்.பி. செம்மங்குடி, அரியக்குடி, மகாராஜபுரம் என்று தான் பெயர் நிலைக்கிறது. 
இந்தப் பட்டங்களை யார் கண்டார்கள்? இருப்பினும், இந்தப் 
பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது. சிலருக்கு தங்கள் பெயர்களால் தெரியவருதல் அவமானமாக 
இருக்கிறது. பட்டங்களே போதும் என்று 
இருக்கிறார்கள். பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டால் அவர்களுக்கு கோபம் வரும்.
 
 ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். இந்தப் பட்டங்களும் விருதுகளும் இல்லாமலே 
சங்கீதத்தில் தம் பெயரை நிலைநாட்டிக்கொண்டவர்களுக்குத் தான் 
தரப்படுகிறது. ஆதலால் அவர்கள் பெயர்கள் நிற்கின்றன. பட்டங்கள் உதிர்ந்து 
விடுகின்றன. ஆனால் இலக்கியத்துறையில், விருதுகள், பரிசுகள்
பெருமபாலும் வாங்கப்பட்டவையே அல்லாது வழங்கப்பட்டவை அல்ல ஆதலால், தகுதி பற்றி 
பேசவேண்டியதில்லை. இது அனேகமாக எல்லாப் 
பரிசுகளுக்கும் பொருந்தும். சாகித்ய அகாடமி மாத்திரமல்ல, தமிழ் வளர்ச்சிக் கழகம், 
அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு போன்று தமிழ் நாட்டு
பரிசுகள் விருதுகள் அனைத்துக்கும் பொருந்தும். இது அறுபது வருடங்களாகத் தொடர்ந்து 
வருவதால் இதுவே பரிசு வழங்கலின் விதியும் ஆகி, இதுவே
இன்றைய தமிழ் இலக்கிய மரபும் ஆகிவிட்டது. பின் விதி விலக்குகளும் மரபு மீறலும் 
எப்போதாவது தவறி நிகழும் தானே.
 
 அப்படி தவறி நிகழ்ந்தது தமிழ் நாட்டில் அல்ல. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் 
நிகழ்கிறது. இது எப்படி நிகழ்கிறது, என்று எனக்கு விளக்கத்
தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா வாழ் தமிழர் சிலர் சேர்ந்து வாழ்நாள் சாதனையாளர்கள் 
எனத் தேர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு அளிக்கும் 
விளக்கு பரிசு அது தொடங்கப்பட்ட வருடத்திலிருந்து இன்று வரை அதற்கான இலக்கியத் 
தகுதி பெற்றவர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு 
முறை கூட அது தவறியதில்லை. தகுதி பெற்றவர்கள் என்பதற்கும் மேலாக, அவர்கள் தமிழ் 
நாட்டு இலக்கிய உலகம், பல்கலைக் கழகங்கள்
மதிக்காதவர்களும், உதாசீனப்படுத்தப் பட்டவர்களும் ஆவர். விளக்கு பரிசு தொடக்கத்தில் 
அளிக்கப் பெற்ற சி.சு.செல்லப்பாவிலிருந்து இந்த வருடம் 
அப்பரிசைப் பெற்றுள்ள எஸ் வைதீஸ்வரன் வரை. (சி.சு.செல்லப்பா, சி.மணி, ஞானக் 
கூத்தன், எஸ்.ராமானுஜம், பூமணி, நகுலன்........) செல்லப்பாவை 
நாடி தமிழக, அகாடமி பரிசு வந்த போதிலும் தான் அந்தப் பரிசுகளைப் பெறுவது தனக்கு 
அவமானம் என்று அதை உதறியவர் செல்லப்பா. எஸ்
வைதீஸ்வரன், புதுக்கவிதையின் பிறப்பிலிருந்து கவிதை எழுதி வரும் முன்னோடி. ஐம்பது 
ஆண்டுகளுக்கு மேலாயிற்று. தன்னை யாரும் 
கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு இருக்கும் தான். இருபது வயதில் ஒரு புதிய 
கவிதை மரபு முன்னோடிகளில் ஒருவராக 
அறியப்பட்டு, இப்போது அவரது 70 வயதிலும் அவரைப் பற்றி யாரும் பேசவில்லை, அவரை 
கௌரவிக்கவில்லை என்றால் ஆதங்கம் இராதா என்ன?
இப்போதாவது அவர் மனம் சமாதானம் அடைந்திருக்கும். அவரையும் கவிஞர் என்றும், அவரது 
பங்களிப்பும் அங்கீகரிப்பிற்கும் கௌரவிப்பிற்கும்
உரியது என்றும் கண்டு கொண்டது விளக்கு பரிசுக்கு பொறுப்பானவர்கள் தாம். இன்னொரு 
தமிழ் பண்பாட்டு மரபு மீறல், விளக்கு பரிசுக்கு 
உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்ட குழுவினர் யாரும் இதுகாறும், பரிசைத் 
தாமே முறை வைத்து எடுத்துக் கொள்ளவில்லை. இதற்காகவே 
நாம் இவர்களைப் பாராட்ட வேண்டும். இவர்களும் தமிழ் இலக்கிய உலத்திலிருந்து 
பெறப்பட்டவர்கள் தாம். இது எப்படி நிகழ்கிறது?
 
 ஒரு மரபு ஆரம்பத்திலிருந்து ஸ்தாபிதமான பிறகு, அதை மீற பின் வருபவர்கள் யாரும் 
எண்ணினாலும் அது வெட்கக் கேடான செயலாகிப் போகும். 
சாகித்ய அகாடமி பரிசோ, ஆரம்பத்திலிருந்தே வேறு ஒரு மரபைத் தான் தொடங்கி வைத்தது. 
தமிழ் ஆலோசனைக் குழுவின் தலைவருக்கே சாகித்ய 
அகாடமியின் முதல் இலக்கியப் பரிசு போய்ச் சேர்ந்தது. அதுவும் 50 வருஷ பழமையாகிப் 
போன மரபு. மீறுவது கஷ்டம் தான்.
 
 மறுபடியும் ஒரு வெளிநாடு வாழ் தமிழர்களின் மரபு மீறிய செயல்பாடு. கனடா வாழ் 
தமிழர்கள் தொடங்கி வைத்துள்ள இயல் விருது. கனடா 
இலக்கியத் தோட்டமும், டோரண்டோ பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆராய்ச்சி மையமும் 
சேர்ந்து வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான இயல்
விருது. இதுவும் அது தொடங்கப்பட்ட 2003-ம் ஆண்டிலிருந்து இன்று வரை. இதன் இவ்விருது 
பெற்ற சாதனையாளர்கள் சுந்தர ராமசாமியிருந்து
இவ்வருடம் பரிசு பெற்றுள்ள அம்பை வரை. இடையில், கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், 
தாஸிஸியஸ், ஜார்ஜ் எல்.ஹார்ட், எஸ். பத்மனாபன் ஐயர், 
லக்ஷ்மி ஹோர்ம்ஸ்ட்ராங்) என இவர்கள் எல்லோரும் தமிழ் தமிழ் இலக்கியத்திற்கு வளம் 
சேர்த்தவர்கள். அதன் எல்லைகளை விஸ்தரித்தவர்கள். 
மற்றவர் பயணிக்காத பாதையில் சென்று புதிய தடம் அமைத்தவர்கள். மிக குறிப்பாகவும் 
முக்கியமாகவும், தமிழ் இலக்கிய உலகம் மதிக்காதவர்கள்.
அங்கீகரிக்காதவர்கள். அம்பை, எனக்குத் தெரிந்த இன்றைய அம்பை 1970களிலிருந்து எழுதி 
வருபவர். பெண்ணுக்கான தனித்வத்தை, ஆணின் நிழலாக 
அல்ல, வலியுறுத்தியவர். பெண்மையை மறுப்பவர் அல்ல. 1970-க்கும் முன்னாலேயே எழுதத் 
தொடங்கியவர் தான். கலைமகள் பரிசும் தன் நாவல் 
அந்தி மாலைக்குப் பெற்றவர். தன் அந்த ஆரம்ப எழுத்துக்களை மறுக்கும் வலிமை அவருக்கு 
இருந்தது. சிறகுகள் முறியும் தொடங்கி நான்கு 
சிறுகதைத் தொகுதிகள், Purple Sea என்ற தலைப்பில் அவரது கதைகள் ஆங்கிலத்திலும், பெண் 
எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்தையும் பற்றிய 
ஆராய்ச்சி நூல் ஒன்று ஆங்கிலத்தில் (Face Behind the Mask). இந்திய பரப்பில் 
பல்வேறு துறைகளில் தம் ஆளுமையைப் பதிப்பித்த சாதனையாளர்கள் 
பலர் தம் வாய்மொழியாகவே தம் பயணத்தைப் பற்றிய உரையாடல் தொகுப்புகள் இரண்டு 
பயணப்படாத பாதைகள், சொல்லாத கதைகள் என 
வெளிவந்திருக்கின்றன. Sparrow என்ற அவரது நிறுவனம், பெண்கள் நிலையையும் அவர்களின் 
சாதனைகளைப் பற்றியுமான செய்திகளைத் 
தொகுத்துவருகிறது. பெணகளின் உரிமை பற்றிக் கதைகள் எழுதுவது மட்டுமல்ல, பல்வேறு 
தளங்களிலும், துறைகளிலும் அவர்களது நிலை பற்றியும் 
சாதனைகள் பற்றியுமான சேகரிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் அம்பை. 40 வருட 
கால ஈடுபாடு பற்றிய தெரிவோ, அங்கீகாரமோ தமிழ்
நாட்டிலிருந்து அவருக்குக் கிடைத்ததில்லை. ஆச்சரியப்படுவதற்கில்லை. 
டோரண்டோவிலிருக்கும் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து
அங்கீகாரமும் பாராட்டும் 2008=ம் வருடத்திய இயல் விருதாக அம்பையை நாடி வந்துள்ளது.
 
 ஆனால் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகள் இங்கும் நிகழ் ஆரம்பித்துள்ளன. பல்கலைக் 
கழகமோ, சாகித்ய அகாடமியோ மாறிவிடவில்லை. இரு 
சினிமா இயக்குனர்கள், ஜெர்ரி, ஜேடி தொடங்கியுள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை 
யின் சாரல் என்ற பெயரில் ஒரு இலக்கிய விருது,
தொடக்கத்திலேயே திலீப் குமாருக்கு வழங்கியுள்ளது. திலீப் குமார் எழுதிக் 
குவிப்பவரும் இல்லை. பிரபலமும் இல்லை. தொடர்ந்து எழுதுபவரும் 
இல்லை. தனக்கு எழுதத் தோன்றிய போது அவ்வப்போது எழுதுபவர். சமீப காலத்தில் அவ்வளவாக 
எழுதவில்லையாதலால், இலக்கிய
வட்டத்துக்குள்ளேயே கூட அவர் பெயரை எவ்வளவு பேர் நினைவு கொள்வார்கள் என்பது 
தெரியாது. எந்தக் குழுவோடும், அரசியல் சக்திகளோடும் 
தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டவர் இல்லை. தனிக் கட்டை. அவரது சிறுகதைகள் என இரு 
தொகுப்புகளே வந்துள்ளன. பரபரப்பூட்டும் எழுத்தும் 
இல்லை. தமிழ் நாட்டில் வாழும் குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழில் 
எழுதியுள்ளது கடந்த இருபத்தைந்து வருட காலத்தில் மிகக் கொஞ்சம் 
என்றே சொல்லவேண்டும். எனினும் தமிழ் நாட்டில் வாழும் குஜராத்தி மக்களின் வாழ்க்கை 
அவர் கதைகளில் பதிவாகியுள்ளது. அதுவே தான் என்று 
சொல்லக் கூடாது. அவரைச் சுற்றிய வாழ்க்கை அது. மிகக் குறைவாக எழுதிய போதிலும் அவரது 
எழுத்தின் தனித்வமும், அவரது இலக்கிய 
ஆளுமையும் அவரை மறந்து விடாது குறிப்பாக எடுத்துச் சொல்லத்தக்கவை. ஆரவாரமற்ற, 
ஜொலிப்புகள், சோதனைகள் என ஏதும் அற்ற, அமைதியும், 
அதே சமயம் வாழ்க்கைச் சிக்கல்களின் முரண் நகையும் கொண்ட எழுத்து அவரது. தமிழ் 
நாட்டில் வாழும் ஒரு இலக்கியப் பரிசுத் தேர்வுக் குழு சாரல்
விருதுக்கு அவரது பெயரைச் சலித்து எடுத்திருப்பது, ஒரு ஆச்சரியமான நிகழ்வு ஆகும். 
ஐம்பது அறுபது வருட காலம் பேணிய தமிழ்ப்பண்புக்கு 
விரோதமான மரபு மீறிய செயலாகும். இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு விளக்கத் 
தெரியாது. சில ஆச்சரியங்கள் இப்படி நிகழ்ந்து விடுகின்றன.
 
 இதையெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க ஒரு நிகழ்வு தமிழக முதல்வர், சென்னை 
புத்தகக் காட்சி நடைபெறும் சந்தர்ப்பத்தில் வழங்கும், 
கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது. தமிழ் நாடு அரசோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, 
அல்லது பல்கலைக் கழகங்கள் போன்ற நிறுவனங்களோ
நினைத்தும் பார்க்காத ஐவருக்கு இவ்விருது இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் 
ஒருவரான ந.முத்துசாமி, இன்றைய தமிழின் சிறந்த 
சிறுகதையாளர். அதோடு தெருக்கூத்திலும், நவீன நாடகத்திலும் அவர் முழு மூச்சாக 
ஆழ்ந்து விட்ட காலத்திலிருந்து அதிகம் சிறுகதை எழுதுவதில் 
கவனம் செலுத்தாதவர். அதனாலேயே அவர் சிறந்த சிறுகதைக்காரர் என்பது நம்மில் பலருக்கு 
மறந்து வருகிறது. அவரும் அது பற்றிக் கவலைப் 
பட்டதாகத் தெரியவில்லை. ந.முத்துசாமியின் நவீன நாடக முயற்சிகளில் எனக்கு ஈர்ப்பு 
இல்லாது போனாலும், அவர் அதில் ஆழ்ந்த நம்பிக்கையோடும், 
தீவிர முயற்சியோடும் கடந்த முப்பது வருடங்களாக தன்னை ஆழ்த்திக்கொண்டுள்ளார். தான் 
நம்பியதில் வாழ்க்கையைச் செலவிடுவது என்பது பெரிய 
விஷயம். அவரது கூத்துப்பட்டறை தன்னை ஒரு தனித்வம் கொண்ட ஸ்தாபனமாக நிறுவிக்கொண்டு 
விட்டது. அதிலிருந்து பயிற்சி பெற்றுள்ள பசுபதி 
போன்றவர்கள் தமிழ் சினிமாவில் கூட தம் தனித்வத்தை பதித்துள்ளார்கள். அவரது தீவிர 
தொடர்ந்த செயல்பாட்டினால் இப்போது நவீன நாடகத்தைத் 
தவிர வேறு எதுவும் இங்கு செல்லுபடியாவ தில்லை. நவீன நாடகமும் அப்படி ஒன்றும் பெரிய 
சாதனைகளை முன் வைத்துவிட்டது என்றும் 
சொல்வதற்கில்லை. எல்லோரும் நவீன நாடக சங்கீர்த்தனம் தான் செய்கிறார்கள். இப்படி 
எல்லோரையும் தன் வழிக்கு வரச்செய்து 'கோவிந்தா' போடச் 
செய்துள்ளது முத்துசாமியின் சாதனை தான். அது எதாகிலும் ந.முத்துசாமியின் தீவிரமும் 
நம்பிக்கையும் தொடர்ந்த செயல்பாடும் மதிக்கத் தக்கவை. 
அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அவரது நவீன நாடக பங்களிப்புக்காகத் தான் 
என நான் நினைக்கிறேன்.
 
 அடுத்து புதுக்கவிதையின் தொடக்க காலத்திலிருந்து ஒரு முன்னோடியாக விளங்கிய கவிஞர் 
சி.மணி. என்ன காரணத்தாலோ ஒரு கட்டத்திற்குப் 
பிறகு அவரிடமிருந்து கவிதை எதுவும் வரவில்லை. ஆரம்ப காலத்தில் நிறைய எழுதியவர். 
யாப்பறிந்த புதுக்கவிதைக்காரர். உடன் வாழும் சமூகத்தை, 
மதிப்புகளை எள்ளி நகையாடின அவர் கவிதைகள். அன்றாடம் பத்திரிகையின் முதல் பக்கத்தில் 
பெயர் வந்துகொண்டே இருத்தல் தான் வாழ்வதற்கு 
அடையாளம் என்பது அரசியலில் மாத்திரமில்லை, தமிழ் இலக்கிய சமூகத்திலும் 
செல்லுபடியாகும் மதிப்பு. தொடர்ந்து எழுதிக்கொண்டே இராவிட்டால் 
மறக்கப்படுவார்கள். அப்படி மறக்கப்பட்டவர் சி.மணி. கன்·பூசியஸ¤க்கும் முந்தி 
வாழ்ந்த சீன ஞானி லாவோ ட்ஸ¤வின் தாவோ தே ஜிங் கவிதைகளை 
மொழிபெயர்த்துள்ளது குறிப்பிடவேண்டிய கவித்வ செயல். ஆனால் இவையெல்லாம் இன்றைய தமிழ் 
இலக்கிய சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பவை 
அல்ல. பரபரப்பு இல்லாதது எதையும் தமிழ் இலக்கிய சமூகம் கண்டு கொள்ளாது. அந்த 
சி.மணியை, தினம் தினம் தன் இருப்பை நமக்கு நினைவு 
படுத்திக்கொண்டிராத சி.மணியை, கலைஞர் பொற்கிழிக்கு தேர்ந்தது பெரிய விஷயம் தான். 
தமிழ் மரபு மீறிய செயல்தான்.
 
 மூன்றாவதாக விருது பெறுபவர் எஸ். முத்தையா. சென்னையைப் பற்றி, நம் பாரம்பரியம் 
பற்றி தொடர்ந்து ஹிந்து பத்திரிகையில் எழுதி வருபவர். 
நான் வெறுப்புற்று ஹிந்து பத்திரிகை வாங்குவதை நிறுத்திய பிறகு நான் இழந்து நிற்பது 
எஸ். முத்தையாவின் பத்திகளைத் தான். தமிழ் நாட்டில் நம்
பாரம்பரியத்தைப் பற்றிய அக்கறை இல்லை என்று சொல்லத்தான் வேண்டும். யாரிடம் அக்கறை 
இருக்க வேண்டுமோ அவர்களிடமே இல்லை. நம் 
சரித்திர சின்னங்கள், பாரம்பரிய சொத்துக்கள் அழிந்து கொண்டு வருகின்றன. நாம் 
அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் சொல்ல வேண்டும். 
சென்னையிலேயே பல அழிந்து கொண்டு வருகின்றன. அவற்றின் இடத்தில் பகாசுர காங்கிரீட் 
கட்டிடங்கள் எழுப்புவது முன்னேற்றம் என்ற நினைப்பில் 
செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம். இன்னிலையில் எஸ்.. முத்தையாவின் குரல் யாரும் 
கேட்காத கானகக் குரல் தான். அவர் கலைஞர் கருணாநிதி 
பொற்கிழி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒரு முரண் நகை தான். நான் தான் 
சொன்னேனே என்னென்னவெல்லாமோ தர்க்கத்தால் 
விளக்கமுடியாதவை நடந்து விடுகின்றன. ஆச்சரியம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமக்கு 
மகிழ்ச்சி தரும் நிகழ்வுதான், பாராட்டப்படவேண்டிய 
தேர்வு தான். போன வருடம் விருது வழங்கப்பட்டது ஆன்ற தமிழ் மரபை ஒட்டித்தானாமே. 
சொன்னார்கள். கேள்விப்பட்டேன். இப்படி நிகழவில்லையே. 
ஆக, அடுத்த முறை தேர்வுக் குழு மாறும்போது ஆச்சரியங்கள் இருக்கும் என்று சொல்ல 
முடியாது.
 
 நான்காவதாக விருது பெறும் கிரீஷ் கர்னாட், கன்னட நாடகாசிரியர். துக்ளக் தொடங்கி 
அவர் எழுதிய நாடகங்கள் இந்திய நாடக உலகில் ஒரு புது 
அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. தொடர்ந்து எழுதி வருபவர், மிகப் புகழ் பெற்றவர் தன் 
நாடகங்களுக்கான கருவை சரித்திரம் புராணம், myth என 
பலவற்றிலிருந்து எடுத்தாலும் நாம் தமிழர் கொண்டாடும் நவீன நாடகம் எழுதுபவர் இல்லை. 
அவர் பெற்றுள்ள விருதுகளுக்கும் இந்திய பரப்பு 
முழுதிலும் அவரது தாக்கத்திற்கும் அளவில்லை. ஆக, அவர் கலைஞர் பொற்கிழிக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமான விஷயம் தான். 
உரியவரல்ல என்பதல்ல. பொற்கிழி விருதின் தேர்வுத் தளம் இந்தியப் பரப்பளவுக்கு 
விரிகிறதோ என்னவோ. ஒரு வேளை ஒரு வேற்று மொழிக்கும் 
ஒரு விருது என்று ஒதுக்கப்பட்டுள்ளதோ என்னவோ.
 
 ஐந்தாம் விருது ஆர். சூடாமணி அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் 
பிற்பாதியிலிருந்து எழுதி வருகிறார். பெண்கள் உலகம். 
அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர் கதைகளிலும் நாவல்களிலும் விரியும். 
சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன உளைச்சல்கள். 
நான் படித்தவரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள் அறியார்கள் என்று 
நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும் இருந்தன. 
அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய பெண்ணியம் ஆட்சி 
செய்யும் காலத்தில் ஆர் சூடாமணியைப் பற்றி 
என்ன கவலை? அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை 
நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம் தான்.
 
 எனக்கு ஆச்சரியம் தராத, தமிழ் மரபு மீறப்படாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி, 
முடிக்கவேண்டும். நிறைய ஆச்சரியங்களை எதிர்கொள்ளும் தினவு 
நம்மிடம் இல்லை. தமிழ் தெலுங்கு, ப்ராகிருதம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய எல்லா 
மொழிகளிலும் நிறைந்த பாண்டித்யமும் அறிவும் பெற்றிருந்த 
பன்மொழிப் புலவர் என்று அறியப்பட்ட மு.க.ஜகன்னாத ராஜா தந்து 76-வது வயதில் போன 
மாதம் மறைந்து விட்டார். தெலுங்கு, ப்ராகிருதம், 
ஸமஸ்கிருதம் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து நிறைய பண்டைய நூலகளை அவர் 
தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தனது 75-76 
வயது காலத்தில் அவர் இப்பல மொழிகள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு மொழிபெயர்த்துள்ள 
நூலகள் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேல் இருக்கும். இவற்றின் 
எண்ணிக்கையிலும், சிறப்பிலும் இந்த தொடர்ந்த செயல்பாடு மகத்தான பங்களிப்பு என்று 
சொல்ல வேண்டும். ஆனால் அவரது வாழ்நாள் சாதனை 
எத்தகைய தாக்கத்தையும் தமிழ் இலக்கிய உலகில் நிகழ்த்தவில்லை. காதா சப்த சதி, முகத 
மாலா, சுமதி சதகம், கன்யா சுல்கம், வஜ்ஜாலக்கம் என 
அவர் தமிழுக்கு மொழிபெயர்த்த காவியங்கள் நிறைய. பௌத்த, சமண தத்துவ நூல்களும் நிறைய 
மொழிபெயர்த்துள்ளார். பாரதி கவிதைகள், 
திருக்குறள், முத்தொள்ளாயிரம் புற நானூறு போன்ற பல தமிழிலிருந்து மலையாளம், 
தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளார். 
எல்லாமாக கிட்டத்தட்ட 50-60 நூல்கள் இருக்கும். இவரைப் போல பல மொழிகளை அறிந்து 
மொழிபரிமாற்றம் செய்துள்ளவர்கள், ஒரு பாலமாகத் 
திகழ்ந்தவர்கள் தமிழில் இல்லை. இவரது மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமியின் மொழி 
பெயர்ப்புப் பரிசுகளும் வாய்ப்புக்களும் கிடைத்தனதான். 
ஆனால் தமிழ் இலக்கிய உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு ஆதரவு அளித்தது, பல 
நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திர 
தேசத்திலிருந்து குடி பெயர்ந்து கடைசியாக ராஜபாளையத்தில் வசித்து வரும் ராஜூ க்கள் 
சமூகம் தான், "நம்ம சமூகத்தில் இப்படி நிறைய படித்தவர், 
நிறைய எழுதுகிறவர் இருப்பது நமக்குப் பெருமை, அவரை ஆதரிக்க வேண்டும்" என்று 
பெருமைப் பட்டு ஆதரித்தார்கள். தமிழ் இலக்கிய சமூகத்திற்கு 
அவரைத் தெரியாது. கன்யா சுல்கத்தையும், வஜ்ஜாலக்கத்தையும் மொழிபெயர்த்தால் அது 
எப்படி கவனம் பெறும்?. அதில் என்ன பரபரப்பும் கவர்ச்சியும் 
இருக்கக் கூடும். இதில் தான் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லாது போய்விட்டது. விதி 
விலக்குகள் சில விதியாகிவிடாது.
 
 /12.1.09
 
 கோயில் என்னும் அற்புதம்
 
 - வெங்கட் சாமிநாதன் -
 
 
  அற்புதக் கோயில்கள் என்று சொல்கிறார் கே ஆர். ஸ்ரீனிவாசரகவன். தவறில்லை. அவர் கண்ட 
கோயில்களின் அற்புதங்களைச் சொல்கிறார் அவர். 
ஆனால் கோயிலே ஒரு அற்புதமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. கோயில்கள் எங்கும் எந்த 
நாட்டிலும் உண்டு தான். அந்தந்த நாட்டு மதங்களைச் 
சார்ந்து அங்குள்ள கோயில்களை மசூதி என்றும், சர்ச் என்றும், விஹார் என்றும் சினகாக் 
என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவிலும் மற்ற 
மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில் கள் இருக்கின்றன தான். 
எல்லாம் பவித்திரமான இடங்கள் தான். ஆனால்
தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக 
ஆழமானதும் பரவலானதும் ஆகும். அதிலும் தமிழ் நாட்டின்
கோயில்கள் நம் மனதில், நம் வாழ்க்கையில், தமிழ் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளதற்கு 
இணையாக வேறு எதையும் சொல்ல முடியுமா என்பது
சந்தேகம் தான். அதைத் தான் கோயிலே ஒரு அற்புதம் என்று சொன்னேன். 
 கோயில் எல்லோருக்கும் வழிபடும் இடமாக உள்ளது, உலகம் முழுதிலும். பிரார்த்தனை 
செய்யும் இடமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் 
ஆண்டவனை நி¨னைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு சென்று நம்மை இழக்கும் இடமாக, 
நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இடமாகவும் 
உள்ளது. இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப்போக்கும் வழிமுறையும் நம் மனதை செயல்களை 
அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்ளும் 
இடமாகவும் இருந்துவருகிறது. பெருமாலான கோயில்கள், அதாவது வழிபாட்டு இடங்கள் 
கட்டிடக் கலை உன்னதத்தை உணர்த்தும் சின்னமாகவும் 
இருக்கிறது. வானை முட்டும் கோபுரங்கள், மினார்கள் நம் மண்ணுலக அன்றாட வாழ்க்கைப் 
பிணைப்புகளிலிருந்துகொண்டும் அல்லது அவற்றிலிருந்து 
விடுபட்டும் வானை நோக்கி நம் பார்வையை இட்டுச் செல்லும் சின்னமாகவும் திகழ்கின்றன. 
பரந்து விரிந்து மண்ணையும், நெடிது உயர்ந்து 
விண்ணையும் இணைக்கும் தத்துவத்தை படிமமாக்குவது கோயில். மண்ணில் கால் பதித்து 
விண்ணை லட்சியமாகக் காட்டுவது கோயில். கோயிலின் 
உள்ளே கால் வைத்ததுமே அதன் பிரம்மாண்டம் நம்மை ஆட்கொள்ளும். நம் அகங்காரத்தை 
அழிக்கும். இப்பிரபஞ்சத்துள் நம் சிற்றுருவை நினைவு 
படுத்தும். உலகம் முழுதுக்கும் இவை பொதுவான விஷய சிதங்கள்.
 
 ஆனால் தென்னகக் கோயில்கள் அவற்றின் ஆயிரம் இரண்டாயிரம் என நீளும் வாழும் 
சரித்திரைத்தைப் பறை சாற்றும். வாழும் சரித்திரம் என்றேன். 
அழிந்து அல்லது அழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புணரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்று 
நினைவுகள் கொண்ட கோயில்கள் பல இந்தியாவில் உண்டு. 
இன்றும் நாம் காணும் சோமநாதபுர கோயிலோ காசி விஸ்வநாதர் ஆலயமோ அவற்றின் வரலாற்றுத் 
தொடக்கத்தில் இருந்தவை அல்ல. ஆனால் 
காஞ்சி கோயில்களோ, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோ அவற்றின் தொடக்க கால உருவை இன்னும் 
தம்முள் கொண்டவை. அவை 1500- 2000 
ஆயிரம் கால நீட்சியின் சின்னங்களை, சாட்சியங்கள் தம்முள் கொண்டவை. பூதத்தாழ்வாரும் 
சுந்தரரும் வழிபட்ட கோயில்கள் இன்றும் நம்மிடையே 
வாழ்கின்றன. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பல பிரகாரங்களை, மண்டபங்களைத் தாண்டி 
கற்பக்கிரஹம் வரையிலான நம் சில நூறு காலடித் 
தடங்கள், இன்றிலிருந்து பல சரித்திர காலகட்டங்களைக் கடந்து தமிழ் நாகரீகத்தின் 
வரலாற்றுத் தொடக்கத்தைத் தொடும் நீண்ட பயணத்தின் 
தடங்களை நமக்கு வழியில் பல சான்றுகளோடு உணர்த்தும். கோயில் பிரகாரச் சுற்றுச் சுவர் 
கல்வெட்டுக்கள் கோயிலின் அவ்வக்கால நிர்மாண, நிர்வாக 
சரித்திரத்தைச் சொல்லும் ஆவணங்களாகும்.
 
 தமிழ் வாழ்க்கையே கோயிலை மையமாகக் கொண்டதுதான். கோயில் தமிழனுக்கு வாழ்வளித்தது. 
அவன் கலைகளுக்கு ஊட்டம் கொடுத்து வளமும் 
வாழ்வும் கொடுத்தது கோயில். சங்கீதமும் நாட்டியமும் ஓவியமும், சிற்பமும் வளர்ந்தது 
அங்கு.தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி படைக்கக் 
காரணமாக இருந்தது கோயில். தமிழ் நாட்டுக் கோயில்களிலிருந்து பிறந்த பக்தி இயக்கம் 
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் 
முழுதுக்குமான கலை, இலக்கிய,மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்துள்ளது. அந்த 
ஆதர்சத்தின் நீட்சியை காரைக்கால் அம்மையாரிலிருந்து, 
பூதத்தாழ்வாரிலிருந்து தொடங்கி, இங்கு பாரதி வரையும், வங்கத்தில் தாகூர் வரையும் 
காணலாம். தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் 
பிறப்பித்தவை இக்கோயில்கள் தாம். ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் தாம் நடைப்யணம் 
கொண்டு தரிசித்த பெருமாணை, அவன் வதியும் 
கோயிலையும், ஊரையும் பாடிக் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பும் தந்து, தமிழுக்கு 
இலக்கிய வளமும் தந்து, கலைகளை வாழச் செய்த போன்ற ஒரு 
மரபும் சரித்திரமும் உலகில் வேறு எங்கு காணப்படுகிறது?. தமிழ் வாழ்க்கையோடு 
பின்னிப் பிணைந்து அதற்குக் குணமும் வழிமுறையும் தந்த 
சரித்திரம் கொண்டவை நம் கோயில்கள். நம் கோயில்கள் கட்டிடகக் கலை வளர்ச்சியைச் 
சொல்லும் நிதர்சன ஆவணம். சிற்பக் கலைக் கூடம். ஒவியக் 
கலைக் கூடம். தஞ்சை பெரிய கோவிலிலிருந்து காஞ்சி மாவட்ட ஏதோ ஒரு கிராமத்து துர்க்கை 
அம்மன் கோயில் வரை கோயில்கள் பக்திக்கு
மாத்திரம் உறைவிடமாக இல்லை. நாடகத்தையும் ஆடல் பாடல்களையும் கூத்துக்களையும் 
நாட்டுப் புற கலை வடிவங்களையும் வளர்த்தன. ஒரு 
ஊரின் மையமாக இருந்து கொண்டு அந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் 
ஒன்றாக, ஒரு நாகரீகமாக அது இருந்துள்ளது.
தென்னிந்திய மனதுக்கு, இன்னும் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மனதுக்கு கோயில் 
என்ற பதம், சப்தம், படிமம், எண்ணற்ற அர்த்தங்களைக் 
கொடுக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது. வரலாறு, அர்ப்பணம், பிரார்த்தனை, இலக்கியம், 
கலைகள், தத்துவம், வாழ்க்கை முறை, தெய்வம், மீட்சி என அத்தனையும் தன்னுள் கொண்ட, ஒன்றிணைந்த ஒரு அனுபவம். கோயில் வேறு எங்கும் இத்தனை 
அர்த்தங்களை, அனுபவங்களைத் தரும் ஒன்றாக 
இருக்கவில்லை. எனவே, கோயிலே ஒரு அற்புதம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
 
 ஆனால் தமிழ் வாழ்க்கை இப்போது இந்த அடையாளங்களையெல்லாம் இழந்து வருகிறது. இன்னமும் 
சரியாகச் சொல்லப் போனால், முனைந்து 
அழிக்கப்பட்டு வருகிறது. கோயில் என்னும் அற்புதம் தன் பல திறத்த, பல வண்ண 
அடையாளங்கள் ஒவ்வொன்றாய் இழ்ந்து வருகிறது. அந்த அழிவின் 
வேகமும் அளவும் குணமும் இடத்துக்கு இடம் வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஒவ்வொரு 
கோவிலிலும் அழிவு என்பது ஒரு நிச்சயத்துடன் 
படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. நிகழ்த்தப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள் 
அபகரிக்கப்பட்டுவிட்டன.கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் 
அசுத்தப்படுத்தப்படுகின்றன. கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிகின்றன. பராமரிப்பு 
காணும் இடங்களில் அதன் வரலாற்று அடையாளங்கள், அதன் 
புனிதத்வம் அழிக்கப்பட்டு வருகின்றன.
 
 ஒரு கலையுணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட சமூகத்தில், தமிழ் நாட்டின் ஒவ்வொரு 
கோவிலும் அதன் முழுமையில், அழிவிலிருந்து 
காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்த இரண்டும் இன்றைய சமூகத்தில் வரண்டுவிட்டன. ஒரு 
போலியான பகுத்தறிவின் தாக்கத்தில், கலையுணர்வும் 
வரலாற்றுணர்வும் அற்ற பகுத்தறிவு அது, அழிவு தான் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
 
 ஒவ்வொரு கோயிலைப் பற்றிம் அதன் எல்லா அம்சங்களையும் விவரிக்கும் முழுமையான ஆவணமாவது 
கிடைக்கச் செய்யவேண்டும்.
 
 கே.ஆர். ஸ்ரீனிவாச ராகவன் அற்புதக் கோயில்கள் என்று பதினான்கு கோயில்கள் பற்றி 
அவற்றில் தான் கண்ட சிறப்பம்சங்களை, சொல்லிச் செல்கிறார். 
இவற்றில் சிதம்பரம் போன்ற புகழ்பெற்ற ஸ்தலமும் உண்டு. திருமங்கலக் குடி போன்ற 
அவ்வளவாக தெரியவராத ஸ்தலமும் உண்டு. கோயில் தரும் 
அர்த்தங்கள், அனுபவங்கள் பலவற்றைச் சொன்னேன். கோயில் ஒவ்வொருவருக்கும் கொடுக்க 
ஒன்று அல்லது பல அர்த்தங்களும் அனுபவங்களும் 
கொண்டது. எல்லாமே முக்கியமானவை தான் சிறப்பானவை தான்.
 
 சிதம்பரம் கோயிலைப் பற்றி நிறையச் சொல்கிறார். அதன் வரலாற்றுத் தொடக்கத்தையும், 
கோயிலை ஒட்டிய சரித்திர, இலக்கிய நிகழ்வுகளையும் 
கோயிலின் கட்டிட, சிற்பச் சிறப்புகளைத் தொகுத்துச் சொல்லும் போது, நமக்கே வியப்பாக 
இருக்கும். புராணக் கதைகளும் சுவாரஸ்யம் தருகின்றன. 
மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் திருவாசகத்தை எழுதிச்சென்றது, சேந்தன் அமுதனார் இறைவன் 
வேண்ட திருப்பல்லாண்டு பாடியது, ராஜராஜன் 
கட்டளையின் பேரில் நம்பியாண்டார் நம்பி தேவாரப் பாடல்களைக் கண்டெடுத்தது, 
சேக்கிழார் பெரியபுராணம் பாடியது, இப்படி சொல்லிக்கொண்டே 
போகலாம். "குவித்த புருவமும், கொவ்வைச் செவ்வாய் குமிண் சிரிப்பும்......," 
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...." போன்ற உன்னத கவிதைகள் 
பிறந்த விடம் என்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். கோயில் முழுதையும் சுற்றி 
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களையும், சிற்ப 
வேலைப்பாடுகளையும் விவரிக்கிறார். சிதம்பரத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருப்பதால் 
நிறையச் சொல்கிறார்.
 
 ஆனால் ஸ்ரீனிவாசராகவனுக்கு கோயில் மிக முக்கியமாக ஒரு வழிபாட்டுத் தலம். மனிதன் தன் 
வாழ்வின் வேதனையைத் தீர்க்க தெய்வத்திடம் 
முறையிட்டு வேண்டிக்கொள்ளும் இடம். மனித ஜீவனில் வேதனைகளுக்கு ஏமாற்றங்களுக்கு 
குறையுண்டா? சில சமயங்களில் ரொம்ப சின்ன 
விஷயங்கள் கூட கிட்டாதவையங்கள் ஆகிவிடுகின்றன. எவ்வளவோ பெரிய தலைகள் உதவியும் கூட 
சாதாரண காரியங்கள் கூட நடப்பதில்லை. 
அப்படிப்பட்ட சமயங்களில் முறையிட்டுக்கொள்ள தன் வேதனையைச் சொல்ல ஒரு பெரிய சக்தி 
வேண்டும். தெய்வ நம்பிக்கை அதைத்தான் தருகிறது. 
வேதனைகள், ஏமாற்றங்களிடையேயும் ஒரு நம்பிக்கை பெற்று நிம்மதி கொள்ளமுடிய வேண்டும். 
வறுமையிலேயே தியாகராஜர் தன் ஜீவனை 
முடித்துக்கொண்டவர். "ப்ரோசேவாரெவரே ரகுபதீ நினுவினா?" என்றும் "ஏமி நேரமு நன்னு 
ப்ரோவ எந்த பாரமு.?." என்று எந்நாளும் 
முறையிட்டுக்கொண்டேதான் இருந்தார். ராமர் கேட்பார், காப்பாற்றுவார் என்ற பல மான 
நம்பிக்கையிலேயே அவர் ஜீவன் கழிந்துவிட்டது. அந்த 
நம்பிக்கை அவருக்கு பலம் தந்தது. வறுமை நீங்கவில்லை தான். ராமர் கேட்கவில்லை தான். 
வறுமை அவருக்கு வேதனை தரவில்லை. நாமெல்லாம் 
எளிய ஜீவன்கள். நமக்கு முறையிட, நம்பிக்கை தர ஒரு தெய்வம் வேண்டும். தெய்வ 
நம்பிக்கை நமக்கு நிம்மதியான வாழ்வு தரும்.
 
 ஸ்ரீனிவாசராகவன் ஒவ்வொரு கோவிலுக்கும் நம்மை இட்டுச் செல்வது பிரதான்யமாக 
பிரார்த்தனைக்கும் குறைகள் நீங்க வேண்டுதல் 
செய்துகொள்ளவும் தான். சிதம்பரத்தை விட்டு விடுவோம் திருநாகேஸ்வரம், 
திருமங்கலக்குடி, திருக்கருகாவூர், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கடவூர், 
திருவானைக்கா, திருப்புறம்பியம், சிக்கல், ஸ்ரீவாஞ்சியம், திருச்சேறை, நாச்சியார் 
கோயில், திருமணஞ்சேர் என்று அவர் இட்டுச் செல்லும் ஸ்தலங்களில் 
நாச்சியார் கோயில் திருக்கடவூர் போன்றவற்றை நம்மில் பலர் கேட்டிருக்கலாம். மற்றவை 
எல்லாம் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. அவற்றின் 
விசேஷங்களும் தெரியாது பலருக்கு. வேளக்குடி கிருஷ்ணன் தினம் கண்ணன் பேருரையோடு 
எல்லா திவ்ய தேசங்களுக்கும் இட்டுச் செல்கிறார். அவர் 
நமக்குச் சொல்லும் பெயர்கள் பல ஆழ்வார்கள் காலத்திய பெயர்கள். இன்று அவற்றின் பெயரோ 
அவை எங்கு இருக்கின்றன என்பதோ தெரியாது.
ஸ்ரீனிவாசராகவன் ஒவ்வொரு கோவிலும் இருக்கும் ஊருக்குச் செல்லும் ரயில், பஸ் 
வசதிகள், செல்லவேண்டிய தூரம், ஸ்தல விருக்ஷம் எது, பாடல் 
பெற்ற ஸ்தலமானால், பாடியது யார், என்ன பாடல், அந்த ஊரின் கோயிலின் விசேஷங்கள் 
அபிஷேக ஆராதனைகள் நடக்கும் நேரம், என்னென்ன 
குறைகளுக்கு என்னென்ன பரிகாரங்கள், அதற்கான செலவு விவரங்கள். முன்னதாகவே ஏற்பாடுகள் 
செய்துகொள்ள, அல்லது வரமுடியாதவர்கள் 
தம்மிருப்பிடத்தில் இருந்தே விசேஷ பூஜைகள் செய்துகொள்ள தொடர்புகொள்ளவேண்டிய முகவரி, 
தொலைபேசி, பின் செலவு விவரங்கள் 
அனைத்தையும் ஒவ்வொரு கோவிலுக்குமாக தந்துள்ளார்.
 
 உதாரணமாக, திருக்கருகாவூர் கருகாத்த நாயகி கோயில் - (சுருக்கமாக) தஞ்சை ஜில்லா, 
பாபநாசம் அருகில் - கும்பகோணம் சென்று திருகருகாவூர் 
செல்வது எளிது -புத்திர தோஷம் நீங்க, குழந்தைப்பேறு பெற,. சுகப்பிரசவம் அமைய 
பிரத்யேக வழிபாடுகள் -வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி 
வழிபடவேண்டும். நேரில் வரமுடியாதவர்கள் ரூபாய் 40 அனுப்பினால் நெய் தீபம் ஏற்றி 
பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அன்னையில் பாதத்தில் 
வைத்து மந்திரிக்கப்படும் நெய்யை தினம் அருந்தினால் கருத் தரிக்கும். பார்சல் மூலம் 
இந்த நெய்யைப் பெற கட்டணம் ரூ 75. குழந்தைப் பேறு 
பெற்றபின் குழந்தையைத் தங்கத் தட்டில் இட்டு பிரார்த்தனையை நிறைவேற்ற கட்டணம் ரூ 
555 இப்படி பல்வேறு கட்டணங்கள்: காலை 5.30 முதல்
பகல் 12.30 வரை, பின்னர் மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை வழிபாட்டுக்காக கோவில் 
திறந்திருக்கும்.... இத்யாதி, இத்யாதி.
 
 திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம், தக்ஷகன், ஆதிசேஷன், கார்க்கோடகம் போன்ற நாகராஜாக்கள் 
பூஜித்ததால், திருநாகேஸ்வரம் என்று பெயர் பெற்றது. 
நாக தோஷம், ராகு தோஷம் கடுமையாக இருந்தால் பரிகாரம் செய்வதற்கான இடம். என்று 
சொல்லும் ஆசிரியர், ராகுவுக்கு அப்படி என்ன தனிச் சிறப்பு 
என்று ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு, "ஜாதகக்கட்டத்தில் ராகுவிற்கு என்று தனி வீடு 
(ராசி) எதுவும் கிடையாது என்று ஆரம்பித்து ஜாதக 
சாஸ்திரத்தை விரிவாக எடுத்துச் சொல்கிறார். அதோடு அற்புதக் கோயில் என்றாரே, அந்த 
அற்புதம் என்னவென்று சொல்லவேண்டாமா? ஸிம்ஹி 
தேவியுடன் எழுந்தருளியுள்ள ராகு பகவானுக்கு மற்ற அபிஷேகங்களுடன் பால் அபிஷேகம் 
நடக்கிறது. தலையிலிருந்து வழிந்து கழுத்தை 
அடியும்போது, பால் நீல நிறம் அடைகிறது. ஏன்? பக்தர்களின் தோஷங்களை தான் 
ஏற்றுக்கொள்வதாலா என்றும் கேட்டுக்கொள்கிறார், ஆசிரியர். இப்படி 
அற்புதங்கள் காணும் இடங்களில் அந்த அற்புதங்களையும் விவரிக்கிறார்.
 
 கோயிலின் அர்த்தங்கள் அதன் பயன்பாடுகள், தரும் அனுபவங்கள் என நிறையச் சொன்னேன். 
நம்மில் பலருக்கு கோயில் தெய்வத்தின் 
இருப்பிடமாதலால் முதன்மையாக வழிபாட்டுக்கான, வேண்டுதலுக்கான, நம் குறைகளை 
முறையிடுவதற்கான இடம். வாழ்க்கையில் நிம்மதி பெற அது 
மிக முக்கியம் ஸ்ரீனிவாச ராகவனின் புத்தகம் அற்புதக் கோயில்கள் அதை மிக 
பயன்படுமுறையில் நிறைவேற்றுகிறது. அத்தோடு கோயிலில் காணும் 
சிற்பங்கள், இலக்கியத்தில் பெற்ற சிறப்பு போன்ற இன்னும் பல விஷயங்களையும் 
தருகிறார்.
 
 
 அற்புதக் கோயில்கள்: கே.ஆர். ஸ்ரீனிவாசராகவன், வரம், New Horizon Media Pvt Ltd., 
33/15 Eldams Road, Alwarpet, Chennai-18
 
 /7.1.09
 
 vswaminathan.venkat@gmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |