எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும்
இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில்
வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற சிறுகதை!
' நான் அவனில்லை'..
- வ.ந.கிரிதரன்
கி.பி.2700
ஆம் ஆண்டிலொருநாள்.... ...
தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில்
தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச்
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது
அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள்
இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள்
அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து
அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற
கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில்
பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும்
மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள்
நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று
ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு,
விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய
பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக்
கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று
விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக்
கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில்
பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும்
காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான்
இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப்
பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப்
பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.
இத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர
மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும்
மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு
இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத்
துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான்
மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த
மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு
கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது
மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத்
தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக்
கொள்ளவேண்டியதுதான்.
இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன் எப்பொழுதுமே தனிமையில் சிந்திப்ப்தை மிகவும்
விரும்புவன. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி, இதற்குச் சமாந்தரமாக இருக்கக் கூடிய ஏனைய
பிரபஞ்சங்கள், காலத்தினூடு பயணித்தல், கருந்துளைகள்... பற்றியெல்லாம் அவன் பல
நூல்கள் , ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவன். பிரபஞ்சத்தின் இருப்பு பற்றி
ஆராய்ந்தவனின் இருப்பு விரைவிலேயே இல்லாமல் போகப் போகிறதா?
அவனது முடிவை அவன் தனித்து நின்று எதிர்நோக்க வேண்டியதுதான். மானிடர்களிடையே
குடும்பம், நட்பு போன்ற உறவுகளற்றுப் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன.
இனப்பெருக்கம் மானிடப் பண்ணைகளில் நடைபெறத் தொடங்கி விட்டிருந்தன. மேலும் குளோனிங்
தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், போர் வீரர்கள், வர்த்தகர்கள்,
கலைஞர்கள், மத குருக்களென ஒரே மாதிரியான மானுடர்கள் உருவாக்கப்பட்டுக்
கொண்டிருந்தார்கள். ஆண் விந்துக்களும், பெண் முட்டைகளும் பாதுகாப்பாகச்
சேமிக்கப்பட்டு பல்வேறு வகைகளில் கலந்து மானுடர் உருவாக்கம் தேவைகளுக்கேற்ப
நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு குடும்ப
உறவுகள் மின்னூல்களில் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. அவற்றைப் பற்றி
எண்ணும்போது அவன் அன்றைய மானுடர்களின் அன்புநிறைந்த வாழ்க்கை வட்டம் பற்றி
ஆச்சரியப்படுவான்.
அவனது சிந்தனையோட்டம் பல்கிக் கிளை விரிந்தோடிக் கொண்டிருந்தது.
'நாளையுடன் இந்த உலகுடனான எனது இந்த இருப்பு முடிந்து விடும். அதன் பிறகு நான்
என்னவாவேன்? " இவ்விதம் அவன் சிந்தித்தான். இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு
நிலையில்தான் இன்னும் மானுடகுலமிருந்தது. பொருளா? சக்தியா? பொருள்முதல்வாதமா?
கருத்து முதல்வாதமா? இவ்விதமான தத்துவப் போராட்டம் இன்னும் முடிவற்று தொடர்ந்து
கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அவன் முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அவன் கண்களின் முன் திடீரென் ஒரு கோளம் போன்றதொரு வடிவம் தோன்றி மறைந்தது. அவன்
திகைப்பு அடங்குவதற்குள் அதனைத் தொடர்ந்து மேலும் சிறிய,பெரிய கோளங்கள் சில தோன்றி
மறைந்தன.
இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரனுக்குச் சிறிது நேரம் நடந்த நிகழ்வுகளைக்
கிரகிப்பதற்குக் கடினமாகவிருந்தது. தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதிலொரு
சந்தேகம் எழுந்தது. அடுத்தநாள் மரண தண்டனையென்பதால் அவனது புத்தி பேதலித்து
விட்டதாயென்ன? இவ்விதமாக அவன் ஒரு முடிவுக்கும் வராமல் திணறிக்கொண்டிருந்த வேளையில்
அவன் முன்னால் மேலுமொரு அதிசயம் நிகழ்ந்தது.
இம்முறை அவன் முன்னால் ஒரு வெள்ளை நிறக் காகிதம், A-1 அளவில் தோன்றி , செங்குத்தாக
அவன் வாசிப்பதற்கு இலகுவாக நின்றது. அக்காகிதம் மறையாமல் நிலைத்து நிற்கவே
அவனுக்குத் தான் காண்பது கனவல்ல என்பது புரிந்தது.
அதில் பின்வருமாறு எழுதியிருந்தது:
'நண்பா! என்ன திகைத்துப் போய் விட்டாயா?'
அதனைப் படித்துவிட்டு அதற்குப் பதிலிறுக்கும் முகமாக 'ஆம்' என்று தலையசைத்தான்
இயற்பியல் விஞ்ஞானி.
இப்பொழுது அந்தக் காகிதம் மறைந்து மீண்டும் தோன்றியது. இம்முறை அதில் கீழுள்ளவாறு
எழுதப் பட்டிருந்தது:
'பயப்படாதே நண்பா! நான் உனது பிரபஞ்சத்துடன் கூடவே இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான
பிரபஞ்சங்களில் ஒன்றினைச் சேர்ந்த உயிரினம். எங்களது பிரபஞ்சம் உங்களுடையதை விட
பதினான்கு வெளிப் பரிமாணங்களும் , ஒரு காலப்பரிமாணமும் கொண்டது. அதனால் உங்களது
பிரபஞ்சத்தினுள் நாம் தோன்றும்போது மட்டும் , உங்களது முப்பரிமாணங்களுக்குரிய
எங்களது உருவத்தின் பகுதிகள் தெரியும். ஆனால் உங்களால் எங்களின்
முழுத்தோற்றத்தினையும் பார்க்க முடியாது. ஆனால் எங்களால் உங்களது தோற்றம் மற்றும்
செய்ற்பாடுகள் அனைத்தையுமே பார்க்க முடியும்..'
'அப்படியா..!' என்று வியந்து போனான் இயற்பியல் விஞ்ஞானி.
அதன்பின் அவர்களுக்கிடையிலான உரையாடற் தொடர்பானது அவன் கூறுவதும், அதற்குப் பதிலாக
அந்தப் பல்பரிமாண உயிரினத்தின் காகிதப் பதில்களுமாகத் தொடர்ந்தது. அதனை
இலகுவாக்கும் பொருட்டுக் கீழுள்ளவாறு உரையாடல் குறிப்பிடப்படும்.
இயற்பியல் விஞ்ஞானி: ' உங்களால எங்கள் மொழியை வாசிக்க முடிகிறது. ஏன் பேச
முடியவில்லை..'
அண்டவெளி உயிரினம்: 'எங்களுக்கிடையிலான உரையாடல்களெல்லாம் உங்களைப் போல் கூறுவதும்
பதிலிறுப்பதுமாகத் தொடர்வதில்லை. மாறாக நினைப்பதும், அவற்றை உணர்வதுமாகத் தொடருமொரு
செயற்பாடு. அதனால் எங்களிடையே உங்களுடையதைப் போன்ற ஒலியை மையமாகக் கொண்ட உரையாடல்
நிலவுவதில்லை. அதற்குரிய உறுப்புகளின் தேவைகளும் இருப்பதில்லை.'
இயற்பியல் விஞ்ஞானி: 'எவ்வளவு ஆச்சரியமாகவும், திருப்தியாகவுமிருக்கிறது. என்
இருப்பின் முடிவுக்கண்மையில் எனக்கு இபப்டியொரு அறிதலும், புரிதலுமா? '
அண்டவெளி உயிரினம்: 'என்ன கூறுகிறாய் நண்பா! என்ன உன் இருப்பு முடியும்
தறுவாயிலிருக்கிறதா? ஏன்..?'
இயற்பியல் விஞ்ஞானி இதற்குப் பதிலாகத் தன் கதையினையும், நிறைவேற்றப்படவுள்ள தண்டனை
பற்றியும் குறிப்பிட்டான். இதற்குப் பதிலாகச் சிறிது நேரம் அண்டவெளி
உயிரினத்திடமிருந்து மெளனம் நிலவியது. பின்னர் அது கூறியது.
'இதற்கு நீ ஏன் கவலைபடுகிறாய்? கவலையை விடு! இந்த இக்கட்டிலிருந்து உன்னை நான் தப்ப
வைக்க முடியும். நீ உன் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி விடுதலையானதும் நாம்
அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்."
இயற்பியல் விஞ்ஞானி: 'உன்னால் என்னை எவ்விதம் காப்பாற்ற முடியுமென நினைக்கிறாய்?"
அண்டவெளி உயிரினம்: 'நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதனால் , காலதாமதம்
செய்வ்தற்குரிய தருணமல்ல இது. அதனால்...'
இயற்பியல் விஞ்ஞானி: 'அதனால்....'
அண்டவெளி உயிரினம்: 'முதலில் இன்று உன் சிறைக் காவலர்களுடன் தொடர்பு கொண்டு உன்
இறுதி முறையான மேன்முறையீட்டினை விண்ணப்பித்துவிடு. உங்கள் உலகத்துச்
சட்டதிட்டங்களின்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்வரையில் தகுந்த காரணம்
இருப்பின் , நிரூபிக்கப்படின் அவ்விதமான மேன்முறையீடுகளை விண்ணப்பிக்கலாமல்லவா?'
இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். உண்மைதான்...'
அண்டவெளி உயிரினம்: 'அவ்விதம் உன் மேன்முறையீட்டினை உடனடியாகவே விண்ணப்பித்து
முதலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நீ உண்மையில் இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன்
அல்லனென்று கூறவேண்டும்; நிரூபிக்க வேண்டும். ..'
இய்ற்பியல் விஞ்ஞானி: 'அதெப்படி.. ஒன்றுமே புரியவில்லையே... எதற்காக நான் ,
இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்? நான் பாஸ்கரன் தானே! '
அண்டவெளி உயிரினம்: 'வேறு வழியில்லை.. அதுவொன்றுதான் தற்போதுள்ள இலகுவான வழி..
முதலில் நீ தப்ப வேண்டும். அதன்பின் எங்களுக்கிடையிலான தொடர்பு தொடரட்டும்...'
இயற்பியல் விஞ்ஞானி: '. ஒன்றுமே புரியவில்லையே.. நான் நானில்லையென்றால் வேறு யார்?'
அண்டவெளி உயிரினம்: ' இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரனுக்கு அவனது இதயம் எந்தப்
பக்கத்திலுள்ளது? "
இயற்பியல் விஞ்ஞானி: 'அதிலென்ன சந்தேகம்.. இடது புறத்தில்தான்..'
அண்டவெளி உயிரினம்: 'இயற்பியல் விஞ்ஞானியின் முக்கிய அடையாளங்களிலொன்றான பிறப்பு
மச்சம் எந்தப் பக்கத்திலிருக்கிறது?'
இயற்பில விஞ்ஞானி: 'அது தாடையின் வலப்புறத்தில்தான்...'
அண்டவெளி உயிரினம்: ' அவற்றினை இடம் மாற்றி வைத்து விட்டால் வேலை சுலபமாகிவிடும்.
அதன் பின்னர் உனது மேன்முறையீட்டில் உண்மையான இயற்பியல் விஞ்ஞானியின் இதயம் இடது
ப்றத்தில் இருப்பதையும், அவனது அங்க அடையாளங்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட
வேண்டும். ஆனால் அவை எல்லாமே உன்னைப் பொறுத்தவரையில் இடம் மாறியிருக்கும். ஆக நீ -
நான் அவனில்லை - என்று வாதாட வேண்டும். உன் உடலின் எல்லாப் பாகங்களுமே இடம்
மாறியிருப்பதால் உன் இடது கை வலது கையாகவும், வலது கை இடது கையாகவுமிருக்கும். நீதி
மனறத்திடமிருக்கும் தகவல்களின்படி அவர்களிடமிருப்பது போலியான கைரேகையாகவிருக்கும்..
என்ன புரிகிறதா?'
இயற்பியல் விஞ்ஞானி; 'ஏதோ கொஞ்சம் புரிகிறது. புரியாமலுமிருக்கிறது... ஆனால் ஒன்று
மட்டும் புரிகிறது: நான் அவனில்லையென்று வாதாட வேண்டும் என்று. தற்போதுள்ள என்
அங்கங்கள் தொடக்கம் அனைத்தையுமே தற்போதுள்ள இடத்திலிருந்து இடம் மாற்றி வைத்தால்
இவையெல்லாம் சாத்தியமென்று நீ குறிப்பிடுவதும் புரிகிறது... ஆனால் அவையெல்லாம் -
இடமாற்றம்- எவ்விதம் சாத்தியமென்றுதான் புரியவில்லை '
அண்டவெளி உயிரினம். 'சபாஷ்! நீ கெட்டிக்காரன் தான். உனக்கு எல்லாமே புரிகிறது ஒரு
சிலவற்றைத் தவிர. ஆனால் இவ்விதமான புரிதல் உன்னைப் பொறுத்தவரையில்
இயல்பானதொன்றுதான்...'
இயற்பியல் விஞ்ஞானி: 'என்ன இயல்பானதா.. என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகத்தான்
கூறேன்?'
அண்டவெளி உயிரினம்: 'உன்னால் உணர முடியாது. காரணம்: உனது முப்பரிமாண எல்லைகள்.
அவற்றை மீறி உன்னால் உணர முடியாது. ஆனால் உனக்குக் கீழுள்ளவற்றை ஒப்ப்பிடுவதன்மூலம்
அவற்றை , உன்னிலும் அதிகமான பரிமாணங்களின் சாத்தியங்கள் பற்றிய புரிதலுக்கு உன்
அறிவு போதுமானது. உணர முடியாவிட்டாலும் புரிய முடியும்.'
அண்டவெளி உயிரினம் தொடர்ந்தது: ' மானுட நண்பா! இரு பரிமாணங்களிலுள்ள
உலகமொன்றிருப்பின் அங்குள்ள உயிர்கள் தட்டையானவையாகத்தானிருக்கும். அவற்றால்
உன்னால் உணர முடிந்த உயரத்துடன் கூடிய முப்பரிமாண உலகைப் பார்க்க முடியாது.
அவர்களைப் பொறுத்தவரையில் நீளமும் அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில்
செல்ல வேண்டுமானால் நீள அகலச் சுவர்களை உடைத்துதான் செல்ல வேண்டும். ஆனால்
முப்பரிமாணங்களுள்ள உன்னால் மிக இலகுவாக உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு
அந்தத் தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது
தட்டைச் சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும். நீ அவர்களை உனது மூன்றாவது
பரிமாணமான உயரத்தினுள் எடுத்தவுடனேயே அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தட்டை
உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மறையவில்லை
மூன்றாவது பரிமாணத்தினுள் இருப்பது உனக்கு மட்டும்தான் புரியும். இல்லையா? '
இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். நீ கூறுவது தர்க்கரீதியாகச் சரியாகத்தானிருக்கிறது..'
அண்டவெளி உயிரினம்: 'அதுபோல்தான் .. இடது புறத்தில் இதயமுள்ள தட்டை உயிரினமொன்றை
உனது பரிமாணத்தினுள் எடுத்து, 180 பாகையில் திருப்பி மீண்டும் அதனது உலகினுள்
கொண்டு சென்று விட்டால் என்ன நடக்கும்? அதன் உறுப்புகளின் இடம் மாறியிருக்கும்.
புரிகிறதா? மானுடனே! புரிகிறதா?'
இயற்பியல் விஞ்ஞானி: 'புரிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னை இப்பொழுது உனது அதிஉயர்
வெளிப் பரிமாணங்களிலொன்றினுள் அழைத்துச் சென்று, 180 பாகை திருப்பி , மீண்டும்
இங்கு கொண்டுவந்து இறக்கி விடப்போகின்றாய். அப்படித்தானே!'
அண்டவெளி உயிரினம்: 'பட்சே அதெ! அதே!'
இயற்பியல் விஞ்ஞானி: 'அட உனக்கு மலையாளம் கூடத் தெரியுமா?'
அண்டவெளி உயிரினம்: 'எனக்குத் தெரியாத உன் பிரபஞ்சத்து மொழிகளே இல்லை.
எல்லாவற்றையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். முதலில் நீ விடுதலை பெற்று வா!
அதன் பிறகு உனக்கு நான் இன்னும் பல அதிசயங்களைச் சொல்லித் தருவேன். அவற்றைப்
பாவித்து நீ உன் உலகத்தில் மிகவும் பலமுள்ள ஆளாக மாறலாம். எப்பொழுதுமே என் உதவி
உனக்குண்டு. அதற்கு முன்.. இப்பொழுது உன்னை நான் உனது முப்பரிமாணங்களிலும் மேலான
இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள் காவிச் செல்லப் போகின்றேன். இவ்விதம்
பரிமாணங்களினூடு பயணிப்பதன் மூலம் உன் பிரபஞ்சத்தின் நெடுந்ததொலைவுகளைக் கூட மிக
இலகுவாக, ஒரு சில கணங்களில் கடந்து விட முடியும்..... என்ன தயாரா?'
இயற்பியல் விஞ்ஞானி: கண்களை மூடிக் கொள்கிறான். 'அப்பனே! முருகா! எந்தவிதப்
பிரச்சினைகளுமில்லாமல் மீண்டும் என்னை இந்த மானுட , முப்பரிமாண உலகுக்கே கொண்டு
வந்துவிட நீ அருள் புரிய வேண்டும்..'
அண்டவெளி உயிரினம்: ' என்ன கடவுளை வேண்டிக் கொள்கிறாயா? என் மேல் இன்னும் உனக்கு
நம்பிக்கை வரவில்லையா..'
இயற்பியல்விஞ்ஞானி: சிறிது வெட்கித்தவனாக ' அப்படியொன்றுமில்லை. நீ என்னை இப்பொழுதே
காவிச் செல்லலாம்...'
அடுத்த சில கணங்களில் நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்திலிருந்து
இயற்பியல் விஞ்ஞானி மறைந்து மீண்டும் தோன்றினான்.
என்ன ஆச்சரியம்!
அவனாலே அவனை நம்ப முடியவில்லை. அவனது இதயம் வலது புறத்திலிருந்து துடித்துக்
கொண்டிருந்தது. முன்பு வரை இடது பக்கமாகவிருந்த அவ்னது உடற் பாகங்கள் ,
பிறப்படையாளங்கள், அனைத்துமே வலப்புறமாக இடம் மாறியிருந்தன.
அண்டவெளி உயிரினம்: 'மானுட நண்பனே! சரி மீண்டும் நாளை உனது மறுபிறப்புக்குப்
பின்னர் வருகிறேன். அதன் பின்னர் இன்னும் பலவற்றை உனக்குத் சொல்லித் தருவேன்.
மானுடராகிய உங்களவர்களின் உடல்களைத் திறக்காமல், வெட்டாமல் எவ்விதம் சத்திர
சிகிச்சைகளச் செய்வ்து போன்ற பல விடயங்களில் என்னால் உனக்கு உதவ முடியும். உன்
மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். வருகிறேன். நண்பா! நன்கு இருண்டு
விட்டது. இப்பொழுது நீ நன்கு தூங்கு. விடிந்ததும் முதல் வேலையாக உன் மேன்
முறையீட்டினைச் செய். வருகிறேன்.'
இயற்பியல் விஞ்ஞானி: - (தனக்குள்) 'பலபரிமாண நண்பனே! உன் உதவிக்கு நன்றி'
இவ்விதமாக எண்ணியவன் தூக்கத்திலாழ்ந்தான். நாளை விடிந்ததும் அவன் தன்
மறுவாழ்வுக்காக வாதாடுவான். தன் அங்க அடையாளங்கள், கை ரேகை, இதயத்தின் இருப்பிடம்
பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து இயம்புவான் 'நான் அவனில்லை'யென்று.
*** *** ***
வ.ந.கிரிதரனின் மேலுமிரு விஞ்ஞானச்
சிறுகதைகள்.
'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!'
- வ.ந.கிரிதரன் -
- கி.பி.3025இல் ஒருநாள்.
- பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே.
- கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,ஆறறிவு
போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர அழிந்தொழிந்து போய் விட்டன.
- ஒரு சில விருட்ச வகைகளே எஞ்சியிருந்தன.
- மனிதர்கள் மாத்திரை உணவு வகைகள் பாவிக்கத்தொடங்கி மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி
விட்டிருந்தன.
- இதற்கிடையில் ஏனைய உயிரினங்களுக்கு ஏற்பட்ட நிலை மனித இனத்துக்கும் ஏற்படும்
காலம் வெகு அண்மையில், ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், அண்மித்து விட்டது. மனிதர்கள்
ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த பூமியின் நிலையினையொத்த கோளமொன்றினைக்
காண்பதற்கான தேடுதலை விரைவுபடுத்த வேண்டிய தேவையிலிருந்தார்கள்.
- கதிரவன் 'சிவப்பு அரக்கன்' நிலைக்கு வருவதற்கு இன்னும் பல பில்லியன்
வருடங்களிருந்தன. அதுமட்டும் மனித இனம் இங்கிருக்க முடியாத நிலையினை மானுட இனம்
ஏற்படுத்தி விட்டது.
- எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய
நீல வண்ணக் கோள்.
- இத்தகையதொரு சூழலில் விஞ்ஞானிகள் அண்டவெளிப்பயணங்களின் வேகத்தினைத்
துரிதப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள்.
- அதில் முன்னணி வகித்த உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி ஆத்மாநாமின் மனம் அன்று
மிகுந்த மகிழ்சியுடனும், ஒரு வித பரபரப்புடனுமிருந்ததற்குக் காரணமிருந்தது.
- அவர் ஒரு முக்கிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த
ஆய்வொன்றின் தொடர்சியினைப் பூரணப்படுத்துமொரு நாளை அண்மிக்கும் வகையிலானது அவரது
ஆய்வு.
- குறைந்தது ஒளி வேகத்திலாவது செல்லும் வகையில் பிரயாணத்தின் வேகமிருக்க வேண்டும்?
கி.பி.2003இல் ஆஸ்திரேலியர்கள் இதற்கான முதல் வித்தினை விதைத்திருந்தார்கள்.
அதற்கான பலனை அறுவடை செய்யுமொரு காலம் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் ஆத்மாநாமின்
முயற்சியினால் அண்மித்துக் கொண்டிருந்தது. அன்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் லேசர்
கதிர்களை அழித்து மீண்டும் சிறிது தொலைவில் உருவாக்கிச் சாதனையொன்றினைப்
புரிந்திருந்தார்கள். 'தொலைகாவு'தலுக்கான (Teleporting) சாத்தியத்தினை அவர்களின்
ஆய்வு அன்று தொடக்கி வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக இன்று
ஆத்மாநாம் ஒரு முழு மனிதனையே 'தொலைகாவு'தல் மூலம் பிரயாணிக்கும் வகையிலானதொரு
பொறியினை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகப் பரீட்சித்துப்பார்க்கவிருக்கின்றார்.
இதற்காக நகரின் இரு எதிரெதிர் திக்குகளில் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில்
அமைந்திருந்த இரு ஆய்வு கூடங்களிலுள்ள இரு 'தொலைகாவும்' அறைகள் பாவிக்கப்படவுள்ளன.
தொலைகாவும் அறை இலக்கம் 1இலிருந்து தொலைகாவும் அறை இலக்கம் 2ற்கு முழு
மனிதரொருவனைக் கடத்துவதற்கான சோதனை அன்று நடக்கவிருந்தது. ஒரு மனிதனின் உடலிலுள்ள,
ட்ரில்லியன்கள் கணக்கிலுள்ள மூலக்கூறுகளையெல்லாம் அழித்து மீண்டும்
உருவாக்குவதென்றால் அவ்வளவு இலேசான காரியங்களிலொன்றாயென்ன!
- மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம்.
விஞ்ஞானப் புனைகதைகளில், விஞ்ஞானத் திரைப்படங்களில் மட்டுமே நிகழ்ந்து
வந்திருந்ததொரு விடயம், இதுவரையில் கற்பனையில் மட்டுமே சாத்தியமாகியிருந்ததொடு
விடயம், இன்று அவரது முயற்சியினால் நடைமுறைச் சாத்தியமாகும் தருணம் ஏற்பட்டுள்ளது.
இந்தப்
பரிசோதனை மட்டும் வெற்றிகரமாக அமைந்து விட்டால்..... அதனை எண்ணவே ஆத்மாநாமின்
சிந்தையெல்லாம் களியால் பொங்கிக் குதித்தது. சரித்திரத்தில், அவரது சாதனை
பொறிக்கப்பட்டுவிடும். சாதாரண சாதனையா என்ன? இந்தப் பரிசோதனை மட்டும் வெற்றியடைந்து
விட்டால்.... மனிதர் ஒரு சில வருடங்களிலேயே அயலிலுள்ள சூரியமண்டலத்திலுள்ள
கோள்களுக்கு பயணிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டு¢விடும்.
- அண்டத்தை அளப்பதற்குரிய வல்லமையினை அவரது ஆய்வின் வெற்றி மனிதருக்கு
வழங்கிவிடும்.
- எத்துணை மகத்தான வெற்றியாக அது அமைந்து விடும்.
"ஆத்மா! உன்னைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னை இந்தக் கடைசித் தருணத்தில்
ஏமாற்றி விடாதேயடா?" இவ்விதம் ஆத்மாநாம் ஒருமுறை தனக்குத்தானே கூறிக்கொண்டார்.
அவர் உண்மையில் தனக்குத்தானே கூறிக்கொண்டாலும் அவர் ஆத்மாவென்று விளித்தது
அவரையல்ல. அவரது பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளத் துணிச்சலுடன் வந்ததொரு
ஆத்மாவான 'ஆத்மா'வைத்தான். இளைஞனான ஆத்மாவைத்தான்.
ஆத்மாநாம் பத்திரிகையில் சுகாதார அமைச்சினூடாக வெளியிட்டிருந்த விளம்பரத்தைப்
பார்த்து முன்வந்திருந்த இளைஞர்களில் அவர் தேர்ந்தெடுத்திருந்தது இந்த
ஆத்மாவைத்தான். ஆத்மா உண்மையிலேயேயொரு இயற்பியல்-வானியற் பட்டதாரி. அத்துடன்
அத்துறையில் வெகுஜனப்பத்திரிகைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் பிரபல்யமான
எழுத்தாளன். ஆத்மாநாமின் ஆய்வின் முக்கியத்துவத்தை மனதார விளங்கி, உணர்ந்து, தனது
காலகட்டத்துக்கான பங்களிப்பு என அதனைப் புரிந்து முன்வந்திருந்தான். இந்தப்
பரிசோதனையில் தன்னை இழப்பதற்குமவன் துணிந்து வந்திருந்தான்.
சரியாக காலை மணி பத்துக்குப் பரிசோதனை ஆரம்பிப்பதாகவிருந்தது. ஆத்மாநாம் தனது
கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக மணி ஒன்பது. ஆத்மாநாமை கூட்டிச் செல்வதற்காக
ஆய்வு கூடத்திலிருந்து பணியாட்களிருவர் வாகனத்தில் வந்திருந்தார்கள். தொலைகாவும்
அறை இலக்கம் 1இல் ஏற்கனவே ஆத்மாவுட்பட வெகுசன ஊடகவியலாளர்கள் பலரும் வந்து
காத்திருந்தனர். முதல் நாளிரவிலிருந்தே அவர்களில் பலர் வந்து கூடாரம் அடித்து
விட்டிருந்தார்கள். ஆத்மாநாம் ஆய்வுகூடத்தை அடைந்தபொழுது மணி சரியாக ஒன்பது மணி
பதினைந்து நிமிடங்கள். அவரை எதிர்பார்த்து ஆத்மா காத்திருந்தான். ஏற்கனவே அவன்
உடல்நிலையெல்லாம் சக வைத்தியர்களால் பரிசோதனைகுட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு அவன்
தகுதியானவனென அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தான்.
ஆத்மாநாம் ஆத்மாவைப்பார்த்துக் கேட்டார்: "என்ன திரு.ஆத்மா! பரிசோதனைக்குத் தயாரா?"
ஆத்மா அதற்கு இவ்விதம் பதிலிறுத்தான்: "நான் தயார். நீங்கள் தயாரா?"
இவ்விதம் அவன் கூறியதும், அவனது நகைச்சுவையுணர்வு கண்டு அனைவரும் வியந்து
சிரித்தார்கள். ஆத்மா எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவனாகவிருக்கிறானென்று மூக்கில்
விரல் வைத்து அவனை வாழ்த்தினார்கள்.
ஆத்மாநாம் கேட்டார்: "திரு. ஆத்மா. நீங்கள் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது கூற
விளைகின்றீர்களா?"
அதற்கு ஆத்மா கூறினான்: "அவர்களேதாவது கேட்கும் பட்சத்தில்"
ஆத்மாநாம் ஊடகவியலாளர்களைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்: "நீங்கள்
திரு.ஆத்மாவிடம் ஏதாவது கேட்கவிரும்புகின்றீர்களா""
அதற்குப் பலர் தங்களது கைகளை உயர்த்தினார்கள்.
ஆத்மாநாம் கூறினார்:" எல்லாருக்கும் பதிலிறுப்பது சாத்தியமில்லை. இருவருக்கு
மட்டுமே திரு.ஆத்மா பதிலிறுப்பார்"
ஊடகவியலாளர் ஒருவர் எல்லாரையும் முந்திக்கொண்டு பின்வருமாறு கேட்டார்: "திரு.ஆத்மா!
உங்களுக்கு இத்தகையதொரு விஷப்பரீட்சையில் ஈடுபடும் எண்ணம் எவ்விதமேற்பட்டது?"
இந்த ஆயிரம் வருடங்களில் கேள்வி கேட்பதில் மட்டும் இன்னும் இந்த ஊடகவியலாளர்கள்
இன்னும் கொஞ்சம் கூடப் பரிணாம வளர்சியின்றியிருந்தார்கள் என்பதற்கு சான்றானதொரு
வினா.
அதற்கு ஆத்மா சிறிது யோசித்துவிட்டுக் கீழ்வருமாறு பதிலுரைத்தான்:"இதனை
விஷப்பரீட்சையென்று சொன்ன முட்டாள் யார்? இது என் வரலாற்றுக் கடமை. ஆயிரம்
வருடங்கள் வாழும் வினாடியையொத்த எம் வாழ்வின் பயனாக இதனை நான் கருதுகின்றேன்.
சிறுவயதிலிருந்தே அண்டவெளிப்பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான். அதுதான்
முக்கிய காரணம்." [ கி.பி.3000இல் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வரை வாழும்
நிலையிலிருந்தார்கள். பிறக்கும் ஒவ்வொருவரும் , இருதயம் தொடக்கம், மூளை தவிர, சகல
உடலின் அங்கங்களையும் அடிக்கடி மாற்றுவதன் மூலம் சுமார் ஆயிரம் வருடங்கள்
வாழக்கூடியதொரு நிலை நிலவிய காலகட்டம்.]
எல்லோரும் ஆத்மாவின் தைரியத்தை மெச்சினார்கள். இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்:
"திரு.ஆத்மா! உங்கள் தைரியத்துக்கு நாம் தலை வணங்குகின்றோம். மானுட குலத்தின்
நீட்சிக்குத் தங்கள் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்படும். உங்கள் பயணம்
வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்".
அவரைத் தொடர்ந்து அனவரும் வாழ்த்தி வழியனுப்ப, ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம்
1ற்குள், விஞ்ஞானி ஆத்மாநாம், மற்றும் அவரது உதவியாளர்கள் சகிதம் நுழைந்தான்.
வெளியில் ஏனைய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளெனப் பலர் பார்வையாளர்
கூடத்தில் காத்திருந்தார்கள். பரிசோதனை தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன.
ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 2இலிருந்த சக மருத்துவர்களுடன் கதைத்து அங்கு
எல்லாம் தயார்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அங்கும் ஊடகவியலாளர்கள்,
அரசியல்வாதிகளெனப் பலர் மீள உயிர்த்தெழும் ஆத்மாவை வரவேற்பதற்காகக்
காத்திருந்தார்கள்.
ஆத்மாநாம் இறுதியாக ஆத்மாவை பார்த்துக் கூறினார்: "திரு.ஆத்மா! உங்களது இந்தப்
பங்களிப்புக்காகத் தலை வணங்குகின்றேன் மானுட இனம் சார்பில். உங்களைப் போன்ற சூழலை
மீறிய துணிச்சற்காரர்களால்தான் மானுட இனம் இத்துணைதூரத்துக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
வரலாற்றில் நிலைத்து நின்று விட்டீர்கள் இந்த ஒரு செய்கையின் மூலம். திரு.ஆத்மா
உங்களுக்காகத் தலை வணங்குகின்றேன்."
அதற்கு ஆத்மா கூறியவைதான் கீழேயுள்ளவை: "நீங்கள் மிகவும் புகழ்கின்றீர்கள். நான்
செய்யும் இந்தச் சாதாரண காரியத்துக்காக என் மனித இனம் பெரும் பயனடையுமானால் அதுவே
எனக்குப் பெரு மகிழ்ச்சி".
இதன் பின்னர் ஆத்மா தொலைகாவும் அறை இலக்கம் 1இனுள் விஞ்ஞானி ஆத்மாநாமுடன்
நுழைந்தான். அவனைச் சரியாக இருக்கையில் அமர்த்தி விட்டுச் செய்யவேண்டியவை பற்றிய
அறிவுறுத்தல்களை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திவிட்டு ஆத்மாநாம் வெளியில் வந்தார்.
வரும்பொழுது அவர் பின்வருமாறு தமக்குள் எண்ணினார்: 'எத்துணை துணிச்சலான பையன்.
ஆத்மா நீ வாழ்க!'
சரியாகப் பத்துமணிக்கு விஞ்ஞானி ஆத்மாநாம் தொலைகாவும் அறை இலக்கம் 1இனை இயக்கி
வைத்தார்.
அதே கணத்தில் தொலைகாவும் அறை இலக்கம் 2இல் காத்திருந்த விஞ்ஞானிகள் அறைக் கதவினைத்
திறந்தார்கள்.
ஒளிவேகத்தில் தொலைகாவுதல் நடப்பதால் ஆத்மாவின் புத்துயிர்ப்பு அதே சமயத்தில்
நிகழவேண்டும்.
அறையினைத் திறந்த மருத்துவ விஞ்ஞானிகளை வெற்றிகரமாகத் தொலைகாவப்பட்டிருந்த
ஆத்மாவின் ஆத்மாவற்ற ஸ்தூல உடல் வரவேற்றது.
பதிவுகள்ப் பெப்ருவரி 2005; இதழ் 62
*** *** ***
தேவதரிசனம்!
- வ.ந.கிரிதரன் -
கண்ணுக்கெட்டியதூரம் வரையில் விரிந்து பரந்திருந்தது இரவு வான். அந்த இரவின்
கருமையினைக் கிழித்துக் கொண்டு முழுநிலா. அடிவானில் தெரிந்த வட்டநிலா உண்மையில்
நகரின் இன்னுமொரு தெருவிளக்காகத் தொலைவில் தெரிந்தது. அருகில் கட்டிலில் குழந்தையை
அணைத்தபடி தூங்கிக் கிடந்த மனைவியின்மேல் ஒருகணம் பார்வை பதிந்து மீண்டது. மீண்டும்
ஜன்னலினூடு விரிந்து கிடக்கும் இரவு வான் மீது கவனம் குவிந்தது. வழக்கம் போல்
தத்துவ விசாரம். அர்த்தமேதுமுண்டா? வாழ்க்கையின் நிலையாமையினை உணர்ந்த
சித்தார்த்தன் துறந்து சென்றான். துறத்தல்தான் கேள்விக்குரிய பதிலா? அப்பொழுதுதான்
அந்த அதிசயம் என் கண் முன்னால் நிகழ்ந்தது. எனக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில்
என்னருகில் இன்னுமொரு மனித உருவமிருப்பதை அப்பொழுதுதான் அவதானித்தேன். வியப்புடன்
ஒருவித திகிலும் கலந்ததொரு உணர்வு மேலிட வினவினேன்:
"யார் நீ? எப்பொழுது இங்கு வந்தாய்?"
"நான்?" இவ்விதம் கேட்டுவிட்டு ஒரு கணம் அந்த அந்நியன் சிரித்தான். தொடர்ந்தான்:
"விபரிப்பதற்கு அதுவொன்றும் அவ்வளவு சுலபமல்ல நண்பனே! உனக்குப் பொறுமையிருந்தால்
சிறிது விளக்குவேன்."
நான் அந்தப் புதியவனை மெளனமாக எதிர்நோக்கி நின்றேன். அவன் தொடர்ந்தான்.
"என் கால்களைப் பார்க்கிறாயா?" இவ்விதம் கூறியவன் தனது ஆடைகளைச் சிறிது
உயர்த்தினான். எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. அங்கு பாதங்கள் நிலத்தைத் தொடாமல்
அந்தரத்தில் மிதந்ததை அவதானித்ததின் வியப்பின் விளைவே எனது ஆச்சரியத்துக்குக்
காரணம்.
வந்தவன் தொடர்ந்தான்" "இப்பொழுது என் கண்களைச் சிறிது நேரம் பார்." பார்த்தேன்.
ஏற்பட்ட வியப்பு தொடர்ந்தது. அங்கு அசைவற்ற கண்களைக் கண்டேன்.
வந்தவன் மேலும் தொடர்ந்தான்: "இப்பொழுது உண்மை புரிந்ததா?"
நான் சிறிது தடுமாறினேன்: "அப்படியென்றால் நீ.. நீங்கள் தேவர்களில் ஒருவரா?"
அவன்: "பரவாயில்லை! நீ தேவனென்றே கூறலாம். அப்படித்தான் உன்னவர்கள் என்னைக்
கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள என்னை அறிந்தது பூரணமற்றது. கட்டுக் கதைகளால் இட்டு
நிரப்பி விட்டார்கள். அறியாததனாலேற்பட்ட விளைவு. உனக்கு உண்மை பகர்வேன். நீ
அதிசயித்துப் போவாய். புரிந்து கொள்வாய். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மேலும்
நீ காணும் இந்த உருவம் கூட எனது உண்மையான உருவமல்ல. நான் உன்னுலகுனுள் அடியெடுத்து
வைக்கும் சமயங்களிலெல்லாம் இது போன்றுதான் வருவது வழக்கம். சில சமயங்களில் நான்
ஆணாகவும் வருவேன். வேறு சில சமயங்களில் நான் பெண்ணாகவும் வருவேன். இன்னுமோர் சமயம்
நான் ஆணும் பெண்ணும் கலந்த உருவுமெடுப்பேன்."
அவனே தொடர்ந்தான்: "உண்மையில் உன்னால் ஒருபோதுமே ஒரு நிலைக்குமேல் என்னை அறியவே
முடியாது. இருக்கும் உன் அறிவின் துணையுடன் ஓரளவு புரிய மட்டும் தான் முடியும்."
"எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.." எனக்குச் சிறிது குழப்பமாகவிருந்தது.
"உனக்கு உண்மையில் புரிந்தால் மேலும் குழம்பி விடுவாய்."
"குழப்பமா?"
"ஆம்! கூறுகிறேன் கவனமாகக் கேள்."
சிறிது நேரம் இருவருக்குமிடையில் மெளனம் நிலவியது.
அவனே தொடர்ந்தான்: " நண்பனே! நீ வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. இந்த வெளி. கழித்துக்
கொண்டிருக்கின்றாயே இந்த நேரம். உண்மையில் இந்தப் பரிமாணங்களுக்குள் சிக்கிக்
கிடக்கும் உன்னால் எவ்விதம் உண்மையினை அறிதல் சாத்தியம். உண்மையில்
இன்னுமொன்றினையும் அறிந்தால் .."
"அறிந்தால்..."
"உண்மையில் இந்தப் பிரபஞ்சம். நீ காணும் இந்தப் பிரபஞ்சம். நான் என் ஓய்வு
நேரத்தில் உருவாக்கியதொரு விளையாட்டு. உன்னைப் போல் தான் நானும் என் இருப்பினைப்
பற்றிய விசாரங்களுக்குள் சிக்கிக் கிடந்த வேளை விடை புரியாமல் தவித்த போது ஏற்பட்ட
வெறுப்பின் விளைவாக என் முழு அதிகாரத்தின் கீழுள்ளதொரு உலகினைப் படைக்க
விரும்பினேன். அதன்பொருட்டு நான் உருவாக்கிய விளையாட்டே நீ காணும் இந்தப் பூவுலகு;
அண்டசாரசரங்கள்..எல்லாம். புரிந்ததா?"
"புரியவில்லையே நண்பனே?"
"நீ பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றாய். அவற்றைக் கடந்தவன் நான். உனது
பரிமாணங்களுக்குள் நீ கணினி விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதைப் போல் நான் என்
பரிமாணங்களுக்குள்ளிருந்து உருவாக்கிய விளையாட்டுத்தான் நீ வாழும், நீ காணும், நீ
உணருமிந்த உலகு. உன்னவரைப் பொறுத்த அளவில் நான் தேவன். கடவுள். எது எப்படியோ... உன்
பரிமாணங்களை மீறியவன் நான். ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு. உன்னைப் போல் தான்
என் பரிமாணங்களுக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில் எனக்கும்
ஒன்றுமே தெரியாது. அதற்காகவே என் இருப்பும் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னைப் போன்ற
முப்பரிமாணப் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குள்ளும் என்னால் உடனடியாக உன்னையொத்த
வடிவினை எடுத்து மிக இலகுவாக உட்சென்று பங்கு பற்ற முடியும். உண்மையில் உன்னுடன்
இங்கு உரையாடிக் கொண்டிருப்பபதைப் போன்றதொரு தோற்றமே ஒருவித ஏமாற்றுத்தான். நான்
உருவாக்கிய இந்த விளையாட்டுக்குள் செல்வதற்காக நான் உருவாக்கியதொரு பொய்யான
தோற்றந்தான் இது. உண்மையில் நான் உன்னைப் பொறுத்தவரையில் உருவமற்றவன் எல்லா
உருவங்களையும் எந்நேரத்திலும் எடுக்கக் கூடியவன். பரிமாணங்களை மீறியவன். சகலவிதமான
பரிமாணங்களுக்குள்ளும் புகுந்து விளையாடக் கூடியவன். இருந்தும் நானும் ஒரு
குறிப்பிட்ட பரிமாணங்களை எல்லையாகக் கொண்டவன் தான். உனக்கும் எனக்குமிடையிலான
வித்தியாசம்... நீ என்னை விடக் குறைந்த அளவிலான பரிமாணங்களுக்குள் வாழுமோர் ஐந்து
அவ்வளவே. வெளியையும் காலத்தையும் உன்னால் என்றுமே மீற முடியாது. ஆனால் அதற்காக உனது
பரிமாணங்களுக்கப்பாலெதுவுமில்லையென்று ஆகி விடமாட்டாது. நீ நான் உருவாக்கியதொரு
விளையாட்டின் அங்கம் தான். ஆயினும் உன்னைப் பொறுத்த வரையில் இயலுமானவரையில்
இருக்கும் சூழல்களுக்கேற்றபடி நீ ஓரளவுக்காகவாது சுயமாக இயங்கும்படி நான் உன்னை,
இந்த உலகை, இங்குள்ள அனைத்து உயிர்களையுமே உருவாக்கியுள்ளேன். இந்த எனது
விளையாட்டில் காணப்படும் அனைத்துமே சூழலுக்கு ஈடு கொடுத்து தங்களைத் தாங்களே
அறிதற்கு, புடமிடுதற்கு முடியும். அதற்கு ஏற்றவகையில் நான் எழுதிய , வடிவமைத்த
விளையாட்டு இருப்பதை நீ இங்கு காணும் உயிர்கள் அனைத்தினதும் அடிபப்டை
இயல்புகளிலிருந்து இலேசாகப் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் முற்றாக அறிந்து
கொள்ளல் சாத்தியமற்றது. அந்த வகையில் நீ உருவாக்கும் கம்யூட்டர் வீடியோ
விளையாட்டுக்களை விட எனது இந்த விளையாட்டு அதி அறிவியல் நுட்பம் கொண்டது. இந்தப்
பிரபஞ்சத்தில் நான் எழுதிய விளையாட்டில் பல இன்னும் தீர்க்கப்படாத குறைகள் உள்ளன.
நீ எழுதும் கணினி ஆணைத்தொடர்களில் காணப்படும் வழுக்கள் போன்றவைதான் அவையும்.
குறைகளற்ற 'புறோகிறாம்'கள் ஏதேனும் உண்டா. ஆனால் உன்னைப் போல் நான் எனது இந்த
விளையாட்டின் பிரச்சினைகளில் தலையிட்டுத் திருத்துவதில்லை. உன்னைப் போல் புதிய
புதிய பதிப்புக்களை வெளியிடுவதில்லை. எனது படைப்புக்களான உங்களிடமே அதற்குரிய
ஆற்றலையும் கூடவே சேர்த்தே படைத்துள்ளேன். நீ சுயமாக இயங்கும் இயந்திர மனிதர்களை,
'ரோபோட்'டுக்களைப் படைப்பதை ஒத்ததிது. உனது அறியும் ஆற்றல் எனது முக்கியமான
அம்சங்களிலொன்று. அதனை நீ எவ்விதம் பாவிக்கின்றாயென்பதில் தான் உனது பிரபஞ்சத்தில்
காணப்படும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய வழிவகைகள் உள்ளன."
இவ்விதம் கூறிய எனது படைப்புக்குக் காரணகர்த்தா மேலும் கூறினான்: "இப்பொழுது சிறிது
நேரம் என்னுடன் பயணிக்க உனக்கு விருப்பமா? விரும்பினால் இன்னும் சிறிது உண்மையினை
உனக்குக் காட்ட என்னால் முடியும்."
எனக்கு இடையிலொரு சந்தேகம் எழுந்தது. கேட்டேன்: "உன் படைப்பிலொரு அற்பப் புழுவான
என்மேல் ஏனிவ்விதம் பரிவு காட்டுகின்றாய்? ஆர்வம் கொள்கிறாய்?"
அதற்கு அவன் சிரித்தான்: "யார் சொன்னது உன்மேல் மட்டும் தான் இவ்விதம் ஆர்வம்
காட்டுகின்றேனென்று. இது போல் உன்னவர் பலபேரிடம் அவ்வப்போது நான் இரக்கம் கொண்டு
காட்சியளிப்பதுண்டு. அறிதலுக்கு உதவுவதுண்டு. பொதுவாக என் அறிவின் குழந்தைகளான
உங்களில் எவரெவர் சிந்திக்கும் ஆற்றலைப் பாவித்துச் சூழலை மீறிச் சிந்திக்க
விளைகின்றார்களோ அவர்களிடத்தில் எனக்கு மிகுந்த பாசம் உண்டாவதை என்னால் ஒருபோதுமே
தவிர்க்க முடிவதில்லை. அவர்களுக்கு உதவுவது எனக்கு மிகவும் உவப்பானதொரு
பொழுதுபோக்கு. எனது படைப்புகளின் திறமை கண்டு நானே அத்தகைய சமயங்களில்
பிரமிப்பதுண்டு. நான் உருவாக்கிய விளையாட்டின் அடிப்படையினைப் புரிந்து கொள்ள
நீங்கள் முனைவது எனக்கு என் விளையாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறும் முக்கியமான
செயல்களிலொன்று. நன்கு இயங்கும் உனது 'புறோகிறாம்' கண்டு நீ வியப்பது, களிப்பது
போன்றது தான் இதுவும். பயணத்தைத் தொடங்குவோமா?"
ஆமெனத் தலையசைத்தேன்.
என் கடவுள் , தேவன் (எப்படி வேண்டுமானலும் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனக்கு
ஆட்சேபணையேதுமில்லை) தொடர்ந்தான்: "இப்பொழுது நான் உன்னை என் பரிமாணங்களுக்குள்
காவிச் செல்லப் போகின்றேன். உன் நகரின் முக்கியமான, பலத்த காவலுள்ள
சிறைச்சாலையொன்றிற்குச் செல்லப் போகின்றேன். மிகவும் பயங்கரமான காவலுள்ள
அச்சிறைச்சாலையில் பல பயங்கரச் செயல்களைப் புரிந்த உன்னவர்களை உன்னவர்கள் அடைத்து
வைத்திருக்கின்றார்கள்."
இவ்விதம் அவன் கூறியதைத் தொடர்ந்து என்னைக் கடவுள் தன் பரிமாணத்தினுள் எடுத்துச்
சென்றான். அதே கணத்திலேயே நானும் அவனும் என் நகரின் முக்கியமான அந்தச்
சிறைச்சாலையினுள் நின்றோம். சிறைக்கைதிகளுக்கு மத்தியில் நாம் நின்றோம். ஆனால்
அவர்களில் யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இரவானதால் எல்லோரும்
துயில்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
"என்ன வியப்பிது. யாருமே எம்மைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே" என்றேன்.
அதற்கு அந்தக் காரணகர்த்தா கூறினான்: "அதிலென்ன ஆச்சரியம். நாமிருவரும் இன்னும்
எனது பரிமாணத்தினுள் தான் இருக்கின்றோம். அதுதான் காரணம். அவர்களால் தான் அவர்களது
பரிமாணங்களை மீறமுடியாதே. நான் இப்பொழுது அவர்களில் சிலரை, உன்னவர்களைப்
பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் சிலரை எனது பரிமாணத்தினுள்
காவி வரப் போகின்றேன். "
அதனைத் தொடர்ந்து சிலரை அவன் மிக இலகுவாகவே தனது உலகுனுள் எடுத்து வந்தான்.
சிறைச்சாலையினுள் ஒருவித பதட்டமான சூழல் உருவாகியதை அவதானிக்க முடிந்தது.
கடவுள் கூறினான்: "அவர்கள் தமது உலகிலிருந்து மாயமாக மறைந்த இவர்களைத்
தேடுகின்றார்கள். அதுதான் பதட்டத்தின் காரணம்"
"என்ன வழக்கம் போல் கனவுதானா?"
குரல் கேட்கவே திரும்பினேன். எதிரில் துணைவி மரகதவல்லி. எனக்குச் சிறிது
குழப்பமாகவிருந்தது. கனவா...இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் வெறும் கனவா. இவ்வளவு
நேரமும் என்னுடன் இவ்வளவு அறிவுபூர்வமாக உரையாடிக் கொண்டிருந்த கடவுள்
கனவுத்தோற்றம் மட்டுமே தானா? இருப்பின் இரகசியத்தினை ஓரளவு அறிந்து விட்டேனென்று
களிப்படைந்ததெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே தானா? இது தான் இவ்விதமென்றால் மறுநாட்
காலையோ எனக்கு இன்னும் வியப்பளிப்பதாக புலர்ந்தது. முக்கிய தினசரியொன்றின் அன்றைய
காலைப் பதிப்பின் முக்கிய செய்தி பின்வருமாறு
தொடங்கியிருந்தது:"சிறைச்சாலையிலிருந்து கைதிகள் மறைவு! மறைவின் காரணம் புரியாத
சிறைக் கைதிகள், காவலர்கள் திகைப்பு! பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வெளியில்
மறைந்தனர் கைதிகள் சிலர். கூடு விட்டுக் கூடு பாய்ந்தனரா? விடை தெரியாத புதிர்."
அப்படியானால்....?
பதிவுகள் நவம்பர் 2004; இதழ் 59, திண்ணை
மின்னஞ்சல்: ngiri2704@rogers.com |