இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2010  இதழ் 127  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
கே.எஸ்.சுதாகரின் இரு சிறுகதைகள்!

எதிர்பாராதது 1!
- கே.எஸ்.சுதாகர் -


கே.எஸ்.சுதாகர்இரவு ஒன்பது மணியாகியும் சூரியன் மறையவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு, சண்முகமும் வசந்தியும் மேல்மாடி அறைக்குச் சென்றார்கள். மாடிவீட்டில் நான்கு அறைகள் இருந்தன. பாத்றூம், ரொயிலற்றுக்குப் பக்கத்திலிருந்த அறையை அவர்களுக்காக ஒதுக்கியிருந்தான் ஈசன்.

"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கேட்கும்போதே குரலில் ஒரு இடறல் விழுகிறது. கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.

"உங்களுக்கென்ன விசரா பிடிச்சிருக்கு! இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை வந்த விஷயத்தைப் பாருங்கோ."

"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப அவளுக்கு நான் ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."

வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.

அவர்கள் இங்கு வந்த விஷயம் - நண்பன் ஈசனின் மகளின் திருமணம். ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.

பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.

திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில் குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து மிதந்தன.

'ஊரிலை பின்நேரங்களிலை, வேலை முடிஞ்சு - சந்திக்கு ஒரு நடை நடந்தால் அல்லது சைக்கிளிலை ஒரு மிதி மிதிச்சால் இடையிலை எத்தனை பேரைச் சந்தித்து பலதும் பத்தும் கதைக்கிறது. இப்ப நடை போய் - மிதி போய் - காரிலை ஒரு சொகுசுப் பயணம். இடையிலை காண்பவர்களும் - வேட்டைத்திருவிழாவுக்கு வெளிக்கிட்ட கோமாளிகள் போல கட்டை ஒன்று, நெட்டை ஒன்று, சப்பை ஒன்று' - சண்முகத்தின் நினைவு குதி போடுகின்றது.

முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.

மங்கா அவர்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத பாத்திரம்.

எண்பதுகளில் பலாலியில் இருந்த இராணுவம் தமது எல்லைகளை விஸ்தரித்து, அயல்கிராமங்களில் அட்டகாசம் புரிந்தது. மக்கள் சின்னாபின்னமாகி வாழ்விடங்களை விட்டு சிதறி ஓடினார்கள். அப்பொழுது சண்முகமும் வசந்தியும் தெல்லிப்பழையில் இருந்தார்கள். ஒருநாள் இரவு ஒன்பது மணியிருக்கும். வசந்தியின் பெற்றோர்கள் வீட்டின் கதவைத் தட்டினார்கள். அவர்களின் பின்னாலே ஒரு பெண்ணும், அவளை ஒட்டியபடி இரண்டு சின்னஞ்சிறுசுகளும் நின்றார்கள். இவர்களின் வீட்டின் பின்னாலே ஒரு மண்குடிசை இருந்தது. அதிலே அவர்களைக் குடியிருத்தும் நோக்கம். சண்முகத்திற்கு சீதனமாகக் கிடைத்த வீடு. மறுப்பதற்கில்லை. ஓமென்று சொல்லிவிட்டார்.

மங்காவும் அவளது தம்பியும் வந்தது அப்படித்தான். அப்போது மங்கா பத்தாம் வகுப்பும், தம்பி மணிவண்ணன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். பாடசாலை விட்ட பின்பும், சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் மங்கா அவர்களுடைய பிள்ளை அபியைத் தூக்கிக் கொண்டு திரிவாள். அவளின் பின்னாலே மணிவண்ணன் - தானும் அபியைத் தூக்க வேண்டும் என்று கெஞ்சியபடி அலைவான். அபிக்கு சாப்பாடு தீத்துவதும் விளையாட்டுக் காட்டுவதும் அவர்கள் இருவரும்தான். அபி நாள் முழுக்க அவர்களுடனேயே இருப்பாள். இரவில் பாடம் கேட்டுப் படிக்க மங்காவும் மணிவண்ணனும் வீட்டிற்கு வருவார்கள். கணிதமும் விஞ்ஞானமும் சொல்லிக் குடுப்பார் சண்முகம்.

ஏ.லெவல் எக்ஷாம் எடுத்து முடித்த கையுடன் மங்காவிற்கு திருமணம் நடந்தது. இவர்கள்தான் அவளுக்கு 'தெத்தம்' பண்ணிக் குடுத்தார்கள். தொண்ணூற்றைந்தாம் ஆண்டளவில், வீட்டை மங்காவின் பொறுப்பில் கொடுத்துவிட்டு, நாட்டை விட்டுப் பிரிந்து லண்டன் புறப்பட்டார்கள்.
இரண்டாயிரமாம் ஆண்டளவில் எல்லாருமே யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்ந்தார்கள்.

இதையெல்லாம் ஆர் எதிர்பார்த்தார்கள்? எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை! அதன்பிறகு ஆர் ஆர் எங்கிருக்கின்றார்கள் என்பதையே கண்டு கொள்ள முடியவில்லை.

மங்காவின் இந்த ரெலிபோன் நம்பர்கூட, எதிர்பாராமல் கடைசி நேரத்தில்தான் சண்முகத்தின் கைக்குக் கிட்டியது. அவுஸ்திரேலியாவிற்கு வந்து, மங்காவுடன் தொடர்பு கொண்டு அவளிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என விரும்பினார் சண்முகம். அவர்களுடன் இரண்டொருநாள் தங்கி நின்று வரலாம் என்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

வசந்திக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை. பாத்த மாத்திரத்தில் மனிசரை மட்டுக்கட்டி விடுவாள். அவளின் உச்சஸ்தாயி சண்முகத்தின் நெஞ்சுக்குழிக்குள் நின்று பயம் காட்டினாலும், மனம் கேட்டால்தானே! மங்காவிற்கு ஒருமுறை ரெலிபோன் செய்து பார்க்கலாம் என்ற தோரணையில், மங்காவின் ரெலிபோன் நம்பர் எழுதிய துண்டைத் தூக்கிக் கொண்டு ஹோலிற்குள் இறங்கினார். ஒ•பிஸ் றூம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே ஈசன் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். கடைசி நேர ஆரவாரத்தில் இருந்த அவனிடம் அந்த நம்பரைக் குடுத்து ரெலிபோன் செய்து பார்த்தார். ரெலிபோன் அடித்தது. ஆனால் ஒருவரும் எடுக்கவில்லை.

xxx xxx xxx

கலியாணவீடு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

xxx xxx xxx

நாலு நாட்கள் கடந்து விட்டன. காலை, மதியம், இரவு என்று - ஒரு நாளைக்கு மூன்றுவேளைப்படி மங்காவிற்கு ரெலிபோன் எடுத்துப் பார்த்துவிட்டார் சண்முகம். ரெலிபோன் அடிக்கின்றது. ஆனால் ஒருவரும் எடுப்பதாக இல்லை. அதிசயமாக இன்று வெள்ளி இரவு அவர்களின் 'ஆன்சர்போன்' வேலை செய்தது. தான் வந்து நிற்பதையும் ஈசனின் ரெலிபோன் நம்பரையும் அதில் பதிவு செய்தார் சண்முகம்.

சற்று நேரத்தில் ரெலிபோன் வந்தது. மங்காதான் கதைத்தாள். அதே கணீரென்ற குரல். சண்முகத்தின் குரலைக் கேட்டதும் துள்ளிக் குதித்தாள். எல்லாரையும் பார்க்கவேண்டுமென்று துடியாய் துடித்தாள். நிமிஷத்திற்கு நிமிஷம் 'சண்முகம் அண்ணை, வசந்தி அக்கா' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

"நானும் வசந்தியும்தான் வந்திருக்கிறோம். மகள் வரவில்லை. அவள் கலியாணம் செய்து இப்ப அமெரிக்காவிலை இருக்கிறாள். உமக்கு மூண்டு பிள்ளையள் எண்டு அறிஞ்சன். உங்களை ஒருக்கா வந்து பாக்க வேணும்."
"அண்ணை. நாங்கள்தான் உங்களை வந்து பாக்க வேணும். அதுதான் முறை. அதுக்குப் பிறகுதான் நீங்கள் எங்கடை வீட்டுக்கு வரவேணும். இவருக்கு எங்கை நேரம். ஒரே வேலை வேலையெண்டு அலைஞ்சு திரியிறார்."

"மங்கா! உங்களுக்குக் கஸ்டம் எண்டா நாங்கள் வாறம்."
"இல்லை... இல்லை. சற்றடே அல்லது சண்டே வந்து உங்களை நாங்கள் கூட்டி வரப்போறம்."

"திங்கள் இரவு நாங்கள் லண்டன் திரும்பிறம் பிள்ளை. சண்டே மத்தியானம் லஞ் ஒண்டு இருக்குது. அதாலை சண்டே சரிவராது."
"அப்ப சற்றடே காலமை வாறம். அவரிட்டையும் ஒருக்கா கேட்டிட்டு போன் பண்ணுறன்."

அதன் பிறகு ரெலிபோன் வரவில்லை. சனி வந்தது. சனி இரவும் வந்தது. சண்முகத்தின் நடவடிக்கைகளை வசந்தி கணக்கெடுக்கவில்லை. திரும்பவும் ரெலிபோன் செய்தார் சண்முகம். 'ஆன்சர்போன்'. ஐந்து நிடத்தில் மங்கா திருப்பி எடுத்தாள். மங்கா மான் குட்டி போல என்றார் சண்முகம்.
"மான்குட்டி என்ன ஆன்சர்போனைப் போட்டிட்டு பக்கத்திலையே இருக்குது போல" வசந்தி சமசியப்பட்டாள்.
"இன்னும் அவர் வரேல்லை. பாத்துக் கொண்டிருக்கிறன்" கவலையுடன் சொன்னாள் மங்கா.

"நாளைக்கு மத்தியானத்துக்கு முதல் வர வசதியெண்டா வாங்கோவன்."
"நாளைக்கு எங்கடை மூத்தமகள் ஸ்கொலசிப் எக்ஷாம் எடுக்க இருக்கிறாள். சரியான பிஷி. எக்ஷாம் நடக்கிற ஹோலுக்குப் போகவே ரூ அவேர்ஸ் எடுக்கும். அதுதான் யோசிக்கிறன். உங்களை சந்திக்கேலாமல் போயிடுமோ எண்டு கவலையா இருக்கு. உங்களுக்கொரு 'லஞ்' தருவோமெண்டு இண்டைக்கு ஆயத்தமாக இருந்தன். இந்த மனிசன் எங்கையோ போய் இன்னமும் வரேல்லை."

xxx xxx xxx

ஞாயிறு மதியம் சந்திராவின் வீட்டிற்குச் சாப்பிடச் சென்றார்கள். சந்திரா சண்முகத்திற்கு தூரத்து உறவினள். கலியாணவீட்டின்போது சந்திராவை சந்தித்திருந்தார். அவர்களுக்கு இரண்டு பெண்கள். இருவரும் படித்துவிட்டு கன்பரா, பேர்த் என்று தூர இடங்களில் வேலை செய்கின்றார்கள். சந்திராவும் கணவனும் மட்டுமே வீட்டில். ஜெகன் மிகவும் பண்பானவர். அதிர்ந்து கதைக்க மாட்டார். 'ஊர்ச் சமையல்' சாப்பிட்டது போல இருந்தது. சுவையான பயற்றங்காய் கறி, புடலங்காய் வறை, கரணைக்கிழங்குக் குழம்பு.

"உங்கடை ஊர்ப் பிள்ளையெண்டுதான் நினைக்கிறன் - இஞ்சை எங்களுக்குக் கிட்ட இருக்கிறாள். உங்களுக்குத் தெரியுமா சண்முகம்?" சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சந்திரா கேட்டாள்.

"மங்காதானே! இவருக்கு மூச்சு விட மறந்தாலும் மங்காவை மறக்க மாட்டாரே!" என்றாள் வசந்தி.

"அவள் இதிலை இருந்து இரண்டாவது றோட்டிலை இருக்கிறாள். பெரிய வீடு ஒண்டு கட்டியிருக்கிறாள். இந்த ஏரியாவுக்குள்ளை நல்ல வடிவான வீடு அதுவாத்தானிருக்கும்" சந்திரா சொல்லிக் கொண்டிருக்கும்போது ஜெகன் கொடுப்பிற்குள் சிரித்தார்.

"முந்தி ஓலைக்குடிசையிலை இருந்து கஸ்டப்பட்டதுகள்" வசந்தி முணுமுணுத்தாள்.
"இஞ்சாருங்கோ! உவையளுக்கு ஒருக்கா மங்காவின்ரை வீட்டைக் காட்டுங்கோ."

"மங்காவை இண்டைக்கு வீட்டிலை நிக்கமாட்டினம் எண்டு நினைக்கிறன்" சண்முகம் சொல்ல "பரவாயில்லை, வெளியிலை நிண்டு பாத்திட்டு வாங்கோ" என்றாள் சந்திரா.

தேநீர் குடித்த பின்னர், ஜெகன் அவர்களைத் தனது காரினில் ஏற்றிக் கொண்டார். ஊரைச் சுற்றிக் கொண்டே மங்காவின் வீட்டிற்கு முன்னால் கார் நின்றது.

மாடமாளிகையைப் போன்று நிலத்துள்ளிருந்து குத்திட்டு எழுந்து நின்றது மங்காவின் வீடு. மாலைச் சூரிய ஒளியில் தகதகவென பளிங்குமாளிகை போலக் காட்சி கொடுத்தது. இந்தப் பெரிய கண்டத்திலை இப்படிப்பட்டதொரு மாடமாளிகையைக் கட்டியதையிட்டு சண்முகத்தின் மனம் பெருமகிழ்வு கொள்கிறது. வீட்டிற்குள்ளிருந்து ஒரு பொம்மைக்கார் வெளியே வந்தது. கையில் 'றிமோற் கொன்ரோல்' ஒன்றினால் துரத்திக் கொண்டு ஒரு பையன் உள்ளிருந்து வெளியே ஓடி வந்தான். மங்காவின் கடைசி என்றார் ஜெகன்.

"தம்பி, அம்மா அப்பாவை நிக்கினமா?"
"அம்மா! ஜெகன் அங்கிள் யாரையோ கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்." திரும்பவும் பொம்மைக்காரைத் துரத்திக் கொண்டு
வீட்டுக்குள்ளே ஓடினான் அந்தச் சிறுவன்.

மங்காவின் கணவர் கதவைத் திறந்தார். திடுக்கிட்டுப் போனார்.

"வாருங்கோ... மங்கா நீங்கள் வந்திருக்கிறதாகச் சொன்னவா. எங்கை நேரம்? ஒரே பிஷி. இதிலை உள்ளுக்கை வந்து இருங்கோ. மங்கா 'பாத் றூமிலை" நிக்கிறா. சொல்லிப் போட்டு வாறன்."

ஹோலிற்குள் ஒரு பெண் இருந்து ரி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். அளவுக்கு மீறிய செல்வச் செழிப்பு உள்ளே தெரிந்தது. ஒரு அரண்மனை கொள்ளுகிற மரத்தளபாடங்களால் வீடு மூச்சிரைத்து நின்றது. எங்கடை நாட்டிலை பணம் ஒரு பிரச்சினை. இஞ்சை பணத்தாலைதான் பிரச்சினை என்பதை வீடு காட்டியது.

"இவ மங்காவின்ரை மூத்த மகள்" அறிமுகம் செய்தார் ஜெகன்.
"பிள்ளை, உமக்கிண்டைக்கு 'ஸ்கொலசிப் ரெஸ்ற்' இல்லையா?" வசந்தி அவளைத் துருவினாள்.
"நோ அன்ரி!"
"வேறை யாருக்கேன்... தம்பி தங்கைச்சிக்கெண்டு இருக்குதா பிள்ளை?"
"நோ அன்ரி. ருடே இஸ் சண்டே"

"ருடே இஸ் சண்டேயாம். பெரிய உண்மையைக் கண்டு பிடிச்சிருக்கிறாள் இந்தப் பிள்ளை" சண்முகத்தைப் பார்த்து முணுமுணுத்தாள் வசந்தி. மங்கா தலையைக் குனிந்தபடி உள்ளிருந்து வந்தாள். அவளிற்கு இவர்களாகவே அங்கு போனது பிடிக்கவில்லை. முகம் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தது.

"நீங்களே வந்திட்டியள். நாங்கள் பின்னேரம் மட்டிலை உங்களிட்டை வருவோம் எண்டிருந்தனாங்கள். ஒரே வேலை. பிள்ளைகளுக்குப் படிப்பு. ஞாயிற்றுக்கிழமையிலைதான் நாங்கள் ஒண்டா இருந்து '•பமிலியா' சாப்பிட்டு 'என்யொய்' பண்ணிறனாங்கள்."

'•பமிலியா' சாப்பிட்டு 'என்யொய்' பண்ணிறனாங்கள்!' சண்முகத்தின் உச்சந்தலையில் அது அடித்தது. மங்கா - அவள் முந்திய மங்கா அல்ல என்பதைக் கண்டு கொண்டார் சண்முகம்.

"நீங்கள் லஞ் முடிச்சிட்டியளோ? இல்லைத்தானே! நீங்கள் லஞ் எடுங்கோ. நாங்களும் பிஷிதான். பிறகு வசதி வந்தா வாறம். எல்லாரையும் பாத்திட்டோம்தானே!" வசந்தி முந்திக் கொண்டாள். சண்முகம் அவர்களின் •பமிலிக்குள் ஒண்றாக இல்லாத போது எப்படி அவரால் பேச முடியும்? மங்கா இன்னமும் தனது குடும்பத்தினுள் ஒருத்தியாகத்தான் இருக்கின்றாள் என்ற அவரது நினைப்பில் மண் விழுந்த பொழுது - அவர் ஊமையாகிப் போனார்.

"இல்லை... இல்லை... ரீ எண்டாலும் குடிச்சிட்டுப் போங்கோ!"

ஒரு வாய் சாப்பிடச் சொல்லி கேட்க மாட்டாளா? எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி! கடைசி அபியைப்பற்றியாவது?
வாழ்க்கை வசதிகள் எல்லாம் விரிந்து கொண்டு போகிற இந்த இயந்திர உலகத்தில் - சொந்தம், சுற்றம், நட்பு எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் போன்ற ஒரு உணர்வில், சண்முகத்தின் குமுறல் பெருமூச்சாகிறது.


"அப்பிடியெண்டாப் பிள்ளை கொஞ்சம் தண்ணீர் தாரும். குடிச்சிட்டுப் போவம்" இதையும் வசந்திதான் சொல்கின்றாள்.

தண்ணீர் வந்தது. குடித்தார்கள். வசந்தி தனது கைகளில் கொஞ்சம் நீரைத் தெளித்து பத்தோடு பதினொன்றாக கையையும் கழுவிக் கொண்டாள்.

அவர்கள் வீட்டுத் தொலைபேசி அடித்தது. "அப்பா... ரெலிபோன். எடுக்கவா? விடவா?" கோட்லஸ்போன் ஒன்றைத் தூக்கிக் கொண்டு மகன் வந்தான். "நம்பரைப் பாரும் மங்கா!" என்றார் கணவர். "புது நம்பராக் கிடக்கு" தலையைச் சொறிந்தாள் மங்கா. "அப்ப எடுக்காதையும்" உரப்பாகச் சொன்னார் கணவர்.

தெரியாத நம்பரில் இருந்து நாலைந்து நாளாக - அந்த 'கோலர் டிஸ்பிளே போனுக்கு' அடிச்சு அடிச்சு களைச்சுப் போனேனே! சன்முகத்தின் மனம் அழுதது.

"எழும்புங்கோ! எழும்புங்கோ!!" வசந்தி துரிதப்படுத்தினாள். சண்முகம் மங்காவை 'தங்கைச்சி' என்று கூப்பிடுவார். சிலவேளைகளில் பாசம் பொங்கினால் 'பிள்ளை' என்பார். ஏனோ வாய் தவறி, "மங்கா நாங்கள் போட்டு வாறம்" என்றார்.

"மங்கா மங்கா எண்டு இந்த மனிசன் ஒரு கிழமையாக் கிடந்து தவிச்சுது. அதுவும் இப்ப முடிஞ்சுது" காருக்குள் வசந்தி புறுபுறுத்தபடியே வந்தாள்.

"ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. மங்காவுக்கு இப்ப ஏதோ கஸ்டகாலம் போல" சமாதானம் சொன்னார் சண்முகம்.
"இந்த மனிசனைத் திருத்தேலாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிறவிக்குணம்" என்றாள் வசந்தி.

(kssutha@hotmail.com)
நன்றி : தினக்குரல்


எதிர்பாராதது - 2!
- கே.எஸ்.சுதாகர் -


கே.எஸ்.சுதாகர்நாங்கள் இங்கு வந்த விஷயம் - நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்.

ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான்.

ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

"மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

"தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

"தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி. மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.
"இதென்ன தம்பி! பாய்" மூன்றாவது தடவை சொன்னபோது அவன் சிணுங்கினான்.
"அம்மா! அன்ரி நெடுகலும் என்னைப் பாயச் சொல்லுறா. கால் நோகுது"

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்திக்கு அப்போதும் புரியவில்லை. இவன் என்ன மூலைக்கு மூலை தாவுகிறான் என நினைத்துக் கொண்டாள்.

"மனேசுக்கு தமிழ் அவ்வளவு விளங்காது" மாதுமை சிரித்தபடியே குசினிக்குள்ளிருந்து வெளியே வந்தாள். தானே போய் பாயொன்றை எடுத்து வந்து வசந்தியிடம் கொடுத்தாள்.

அன்று இரவுக்குள் வசந்திக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. அப்பொழுதும் மனேஸ் 'கேம் போய்' (Game Boy) விளையாடிக் கொண்டிருந்தான். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா வேளைகளிலும் அந்த 'கேம்' அவனது கையிலிருந்தது. வசந்தி கனடாவில் இருந்து கொண்டு வந்த 'மிக்ஷ'ரில் எல்லாரிற்கும் பகிர்ந்து கொடுத்தாள். ஒரு சிறிய 'கப்'பிற்குள் போட்டு மனேசிடம் நீட்டினாள்.

"இந்தா மனேஸ்! கொட்டாமைச் சாப்பிடு"

அவன் அதை என்னவென்றுகூடப் பார்க்கவில்லை. 'கேம்' விளையாடியபடியே, "அன்ரி, எனக்குக் 'கொட்டாமை' வேண்டாம். நான் ஒருநாளும் அது சாப்பிடேல்லை" என்றான்.

"என்ன மாதுமை உங்கடை பிள்ளையளுக்கு தமிழ் படிப்பிக்கேல்லையா?" ஆச்சரியத்தில் வசந்தியின் குரல் இராகமாகியது.
"எங்கை வசந்தி நேரம். மூத்தவளையைக் கவனிச்சதிலை இவனை விட்டிட்டம்" சமாதானம் சொன்னாள் மாதுமை.

எங்கட சொந்த நாட்டிலை, கூடுதலான பெற்றோர் தங்கடை பிள்ளைகளுக்கு நாட்டியமோ மிருதங்கமோ பழக்கவில்லை. ஆனா எல்லாரும் பிள்ளையளுக்கு தமிழ் படிப்பிச்சவை.

ஈசனும் மாதுமையும் தமது நெடுநாளைய கனவை இரவென்றும் பகலென்றும் பாராமல் நன்கு திட்டமிட்டிருந்தார்கள். ஈசன் அந்த வாரம் முழுவதும் லீவு போட்டிருந்தான். எப்படி அரங்கேற்றத்தை நடத்தி முடிப்பது என்ற சிந்தனையில் அலைந்து திரிந்தான்.

xxx xxx xxx

அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பிரதம விருந்தினராக வந்தவரின் உரையிலிருந்து மாதிரிக்கு சில வைர வரிகள்:

"ஒரே நாளில் - ஒரே மேடையில் - ஒரே வேளையில் - நான்கு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம்.

அவுஸ்திரேலியாவில்,

கடுங்காற்றுடன் மழை பெய்து - பாலங்களைத் தகர்த்து, வீட்டுக்கூரைகளைப்பெயர்த்தால் - இப்படி பதினேழு வருடங்களுக்கு முன்பும் ஒரு தடவை நடந்தது என்பார்கள்.

பூமி வரண்டு, காடு பற்றி எரிந்து, மழை பெய்யாமல் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் போது - இப்படி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பும் ஒரு தடவை வந்தது என்பார்கள்.

ஒருபோதும் 'இதுவே முதல் தடவை' என்று சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட இடத்தில் - மெல்பேர்ண் மாநகரில் - ஒரே நாளில் - ஒரே மேடையில் - ஒரே வேளையில் - நான்கு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம்.

இவற்றிற்கெல்லாம் காரணம் - நாட்டிய தாரகை, நர்த்தன வித்தகி ரேவதி விக்னேஸ்வரன். அவரே அந்தப் பெருமைக்குரியவர். ஆசிரியரின் சிரேஷ்ட புத்திரி அகல்யா - தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாசன் தம்பதிகளின் மகள் ரேகா - ஈசனின் இரண்டு பிள்ளைகள் சைந்தவி, வைஷ்ணவி. மொத்தம் நான்கு பெண்கள். இவர்களின் கால்கள் பம்பரங்கள்"

அன்று இரவு இரண்டு மணி வரை தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அரங்கேற்றத்தை புகழ்ந்து தள்ளினார்கள். வெற்றிக்களிப்பில் ஈசன் திளைத்துப் போனான். அதிகாலை மூன்று மணிக்குத்தான் உறக்கத்திற்குப் போனான். அந்த உறக்கமும் - இன்னொரு புலம்பெயர்ந்த நாட்டின் தொலைபேசி அழைப்பினால் ஐந்து மணியளவில் கலைந்தது. இனி ரெலிபோன் வயரைக் கழற்றிப் போட்டு படுத்தால்தான் உறங்கலாம் என்று முடிவெடுத்தான் ஈசன். மறுபடி காலை ஒன்பது மணிக்கு மீண்டும் ரெலிபோன் இணைப்பை தொடுத்தபோது, அலாரம் வைத்தால் போல் மீண்டும் புகழாரம் ஆரம்பித்தது.

ஈசனுக்கு அளவுக்கு மிஞ்சிய புகழாரம் சலிப்பைத் தந்தது. வசந்தியைக் கொஞ்ச நேரம் தொலைபேசி அழைப்புகளைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு அடுத்த வேலைக்குத் தாவினான் ஈசன். கொப்பி ஒன்றை எடுத்து பெயரைப் பதிந்து காசுகளை எண்ணினான். நானும் அவனுக்கு ஒத்தாசை புரிந்தேன். ஏழாயிரத்துச் சொச்சம் தேறியது.

"ஈசா, அரங்கேற்றம் நடந்து முடிய எவ்வளவு செலவாயிற்று?" நான் கேட்டேன்.
"ஐம்பதுக்கு மேலை முடிஞ்சுது. இரண்டு பிள்ளையள் எண்டா அப்பிடித்தான் வரும்."
"சரி பரவாயில்லை. வளர்ந்த பிள்ளையள்தானே! உழைச்சுத் தந்திடுங்கள்."

சூடான தேநீர் வந்தது. சைந்தவி கொண்டுவந்து தந்துவிட்டு பக்கத்தில் நின்றாள்.

"பிள்ளை சைந்தவி, எங்கை தங்கைச்சி. அவளையும் கூட்டிக் கொண்டு ஒருக்கால் வாரும்."

சிட்டாகப் பறந்து சென்ற அவள் வைஷ்ணவியுடன் திரும்பினாள்.

"பிள்ளையள், அப்பா அரங்கேற்றம் வைச்சு கஸ்டப்பட்டுப் போனார். நீங்கள் இரண்டுபேரும்தான் அவருடைய கடனை அடைக்க வேணும்."
"என்ன சொல்லுறியள் அங்கிள்? நாங்கள் கேட்டனாங்களா எங்களுக்கு டான்ஸ் பழக்கி விடுங்க எண்டு. எங்களுக்கு டான்ஸ் விருப்பமில்லை. அம்மா அப்பாவை தங்கட விருப்பத்துக்காகத்தான் எங்களைப் பழகச் சொன்னவை. அவையள்தான் அதின்ரை செலவைப் பாக்கவேணும்" இரண்டு பிள்ளைகளும் தடுக்கித் தடுக்கி தமிழில் தாவினார்கள்.

கதவு வாசலில் நின்ற வசந்தி, அந்தப் பதிலினால் வெளிப்படையாகவே தனது வாயைத் திறந்து சிரித்தாள். அவளால் எதையுமே அடக்கிப் பழக்கமில்லை. என்னுடைய இந்தக் கேள்வியினால் ஈசனின் மனம் புண்பட்டிருக்க வேண்டும். அவன் தனது பிள்ளைகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் சிறிது ஆட்டம் கண்டிருக்க வேண்டும். மெளனமாக இருந்தான்.

"பிள்ளையள் நாங்கள் எங்கடை கடமையைத்தான் செய்யிறம். நீங்கள் இலங்கையிலை இருக்கேக்கை எவ்வளவு விருப்பத்தோடை டான்ஸ் படிச்சனியள். அதைத் தொடர வேண்டும் எண்டதுதான் எங்கடை விருப்பம்" மாதுமை சொன்னாள்.

"அவுஸ்திரேலியா அரசு இந்த நாட்டில் வாழும் சகல இனமக்களுக்கும் அவரவர் கலை இலக்கியம் பண்பாடுகளைப் பேணிப் பாதுகாக்க எத்தனையோ வழிகளில் உதவி செய்யுது. எங்கடை சமுதாயத்திலை எங்கையோ ஒரு தவறு ஏற்பட்டிருக்க வேண்டும். நாங்கள் அரசு தாற உதவிகளைச் சரியாகப் பாவித்தோமெண்டால், நாங்களும் எங்கடை மண்வாசத்தோடை இங்கை வாழலாம்"

அதன் பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு சினத்துடன் பதில் அளித்தான் ஈசன்.

"இனிமேல் இஞ்சை ஆற்றையேன் ரெலிபோன் கோல் வந்தால் எல்லாத்தையும் அடிச்சுடைச்சுப் போடுவன்" சத்தமிட்டான் ஈசன்.
"அரங்கேற்றம் வைச்சால் நாலு பேர் ரெலிபோன் எடுப்பினம்தானே! அதுக்கேன் கொதிச்சுக் கூத்தாடுகிறியள். நீங்கள்தான் குடும்பத்தலைவன் எண்ட முறையிலை அவையோடை கதைக்க வேணும்" என்று சொன்ன மாதுமைக்கு "வேலைக்குப் போட்டன் எண்டு சொல்லிச் சமாளியும்" என்றான் ஈசன்.

"என்ன கதை இது. உங்களுக்கு கொலஸ்ரோல், சுகர் எல்லாம் இருக்கு. இரண்டு வேலைக்குப் போறியள் எண்டா ஆர்தான் நம்புவினம்?"
"என்னவெண்டாதல் சொல்லிச் சமாளியும். கடைக்குப் போட்டன் எண்டு சொல்லும்."

அவர்களுக்கிடையில் பிரச்சினையைக் கிழப்பி விட்டிட்டேனோ? மனம் சங்கடப்பட்டது.

"எங்களோடை படிச்சான் சண்முகேஸ்வரன், அவன் இப்ப உதவி அரசாங்க அதிபராக எடுபட்டு யாழ்ப்பாணத்திலை வேலை செய்கிறானாமே!" கதையைத் திசை திருப்பினேன் நான். மேசை லாச்சிக்குள் எதையோ தடவினான் ஈசன். பின்னர் கடிதங்கள் அடங்கிய ஒரு கட்டை எடுத்தான்.

பேப்பரிலை நியூஸ் பாத்த உடனை அவன்ரை அட்ரஷைத் தேடிப் பிடிச்சு அவனுக்கொரு வாழ்த்துக் கடிதம் அனுப்பினனான். இந்தாரும் சண்முகேஸ்வரன் எழுதின மறுமொழியை. வாசிச்சுப் பார்" கடிதத்தை எடுத்து நீட்டினான் ஈசன்.

கடிதத்தை மேலோட்டமாகப் படித்துக் கொண்டே, "ஏன் நல்லாத்தானே எழுதியிருக்கிறான்" என்றேன்.

"நல்லாத்தான் இருக்கு. ஆனா எப்பிடிக் கடித்தத்தை முடிச்சிருக்கிறான் எண்டதைப் பார்."

"நீங்கள் எல்லாரும், உங்கே இப்பொழுது அப்பிள் தோட்டத்தில் வேலை செய்வீர்கள் என நம்புகின்றேன்"

கடித்தத்தின் கடைசி வசனம் என்னைத் திடுக்கிடச் செய்தது.

xxx xxx xxx

அதன்பிறகு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு மாதுமையே பதில் சொன்னாள். இரவு வேளைகளிலும் ஈசன் வேலைக்குப் போய்விட்டதாக மனமறிந்து பொய் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டாள். ஈசன் படுக்கை அறையினுள் புதைந்து கிடந்தார். அரங்கேற்றம் செய்த உடற் சோர்வாக இருக்குமோ? வழமைக்கு மாறாக அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டின.

ஈசன் தனது பிள்ளைகளின் சுடு சொல்லினால் ஊமையாகிக் கிடந்தான். மறுநாள் எங்களை கனடாவிற்கு வழியனுப்பி வைக்கும் போது கூட 'எயர்போர்ட்'டில் ஈசன் சுறுசுறுப்பின்றியே இருந்தான்.

கனடா வந்து சேர இரண்டு நாட்கள் எடுத்தன. வந்திறங்கிய செய்தியைச் சொல்வதற்காக ஈசனுக்கு ரெலிபோன் செய்தேன். மாதுமைதான் எடுத்தாள்.

"நாங்கள் சுகமாக வந்து சேர்ந்து விட்டோம். உங்களின் அன்புக்கும் உதவிகளுக்கும் நன்றி. ஒருக்கா ஈசனிட்டைக் குடுங்கோ கதைக்கவேணும்."

"ஈசன் வேலைக்குப் போய் விட்டார்."

"என்ன? எனக்குமா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்? இப்ப உங்கை இரவு பதினொரு மணியல்லவா?"

"பதினொரு மணிதான். ஆனா உண்மையிலேயே ஈசன் வேலைக்குப் போய்விட்டார். இரண்டாவது வேலை."

(kssutha@hotmail.com)
நன்றி : பூமராங்


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்