இலங்கையில் அமைதி திரும்புமா?
இலங்கை
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உத்தியோகப்பற்றற்ற நான்காவது போரில்
(தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது) விடுதலைப் புலிகளின் விமானப்படையணி
முக்கியமானதொரு திருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகக் கிழக்கில்
நடைபெற்ற யுத்தங்களில் தற்பாதுகாப்பு ரீதியிலானதொரு மட்டுப் படுத்தப்பட்டதொரு
எதிர்த்தாக்குதலை மட்டுமே நடாத்திய விடுதலைப் புலிகளின் முக்கியமான படையணிகள்
யுத்த தந்திரோபாயமாகப் பின்வாங்கியிருந்தன. இதனைப் புரிந்துகொள்ளாத கோத்தபாயா ராஜபக்ச
சகோதரர்களின் இன்றைய ஸ்ரீலங்கா அரசு அவற்றை மாபெரும் வெற்றிகளாகக் கருதி விடுதலைப்
புலிகளை எப்படியாவது அழித்தொழித்து விடுவதென்ற முனைப்புடன் பெரும் ஆரவாரத்துடன்
களத்தில் இறங்கியது. அதன் விளைவாக அது கைக்கொண்டு வரும் போர் அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு இடம் பெயர்ந்தார்கள்; மீண்டும் தமிழகத்தை நோக்கி அகதிகளாகப் புலம் பெயர்ந்தனர். நூற்றுக்கணக்கில் காணாமல் போயினர்; படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள், குழந்தைகளெனத் தமிழ் மக்கள் அளவிட முடியாத துன்பங்களுக்கு ஆளாகினர். கணவன், குழந்தைகள் முன்னிலையிலேயே தமிழ்ப் பெண்ணொருத்தி பாலியல்
வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதை அண்மையில் வெளிவந்த செய்தியொன்று தெரிவித்தது.
வங்காலையில், அல்லைப்பிட்டியில் மிகவும் கொடூரமான முறையில் தமிழ்க் குடும்பங்கள்
கொன்றொழிக்கப்பட்டன. இத்தகைய படுகொலைகள், அடக்குமுறைகள் புலிகளைத்
தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடுமென்று கருதினர்.ஆனால் நடைமுறையில்
விளைவுகள் நேர்மாறானவையாகவேயிருக்கின்றன. பரிசுத்த பாப்பாரசரிலிருந்து, பல்வேறு
உலகநாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் இன்று மகிந்த ராஜபக்ச அரசினைக் கண்டிப்பதில் கொண்டு
வந்து நிறுத்தியிருக்கின்றன மகிந்த அரசின் இன்றைய இராணுவத்
தீர்வென்ற செயற்பாடுகள்.
ஆனால்
இம்முறை இலங்கை அரசியல் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமல்ல அரசியல் தீர்வே
சாத்தியமென்று உலகநாடுகள் பல ஸ்ரீலங்கா அரசினை வற்புறுத்தத் தொடங்கின.
இவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமெரிக்காவின் பாணியில் விடுதலைப்
புலிகளுக்கெதிரான யுத்தத்தினைப் புஷ்சின் உலகப் பயங்கரவாதப் போருக்கெதிரான
போரொன்றாக உருவகித்து மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் இன்றைய இலங்கை அரசு
முன்னெடுத்தது. மிக விரைவிலேயே விடுதலைப் புலிகளை ஒழித்து விடுவோமென்று இராஜபக்ச
சகோதரர்கள் சூளுரைத்தனர். விடுதலைப் புலிகள் என்றொரு அமைப்பு இன்று இந்த அளவுக்கு
வளர்ந்திருப்பதற்குக் காரணமே இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை காலமும் இலங்கையினை ஆட்சி செய்து
வந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளின் ஈழத்தமிழர்களின் மீதான அடக்கு ஒடுக்குமுறைகளே
என்பதை இராஜபக்ச சகோதரர்கள் புரிந்து கொள்ளவில்லையென்பதையே இது காட்டுகிறது. இன்று
இதே தவறினைக் கிழக்கில் செய்திருப்பதன மூலம் ஆயிரக்கணக்கில் கிழக்கு மாகாணத்து
மக்கள் சொல்லொணாத்துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீதான கொடிய
அடக்குமுறைகள் ஒருபோதுமே அவர்களை இலங்கை அரசின் பக்கம் திருப்பி விடப்போவதில்லை.
தந்தை, தாய், சகோதர, சகோதரியின் மேல் வன்முறையினை ஏவிவிட்டுக் கொண்டே இருக்குமொரு
அரசுக்கு மக்கள் ஒருபோதுமே ஆதரவு தரப் போவதில்லை. மாறாக அத்தகையதொரு அரசினை
அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடவே செய்வர். இது வரலாறு நமக்குணர்த்தும் பாடம்.
மக்கள் ஆதரவினைப் பெறாத எந்தவொரு வெற்றியும்
நிலையானதல்லவென்பதை இலங்கை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மேலும் இராஜபக்ச சகோதரர்களின் அதிகாரத்தை மையப்படுத்தும் நடவடிக்கையானது
தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும் பெருத்த பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தினைப் பாவித்துத் தமிழர்களை மட்டுமல்ல தென்னிலங்கை அரசியற் சக்திகளையும் மகிந்த இராஜபக்சவின் அரசு
அடக்கத் தொடங்கிவிட்டதன் வீளைவுதான் சூரியாராச்சி போன்றோர் கைதாவதும்,
தென்னிலங்கைப் பத்திரிகைகள் மீதான அடக்கு முறைகளும். அதன் உச்சக் கட்டம்தான் காவல்
துறையினரிடமிருந்து அதிகாரங்களை ஏற்கனவே அவற்றைத் துஷ்பிரயோகம் செய்து
கொண்டிருக்கும் இராணுவத்திடம் மகிந்த அரசு ஒப்படைத்திருப்பது.
இத்தகையதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் விமானப்படையினர் தென்னிலங்கையின்
வான்பரப்பில் நடாத்திய தாக்குதல்களைப் பார்க்க வேண்டும். 1971இல் ஸ்ரீமாவோ
பணாடாரநாயக்கவின் அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது உலகநாடுகளை நோக்கி ஆதரவுக்
குரலெழுப்பியபோது இந்திய அரசு உடனடியாகவே தனது விமானப்படையினரை அனுப்பி உதவியது.
ஆனால் அந்த உதவிக்கு நன்றியாக ஸ்ரீமா அரசு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின்போது பாகிஸ்தானிய விமானங்களை இலங்கையில்
எரிபொருளெடுக்க அனுமதி வழங்கி உதவியதும் குறிப்பிடத்தக்கது. இன்று விடுதலைப் புலிகள் உலகிலேயே முதன் முறையாகக்
கடற்படை மற்றும் வான்படை கொண்டதொரு ஒரேயொரு அமைப்பாக விளங்குகின்றனர். அது மட்டுமல்ல தமிழர்களின்
வரலாற்றிலேயே முதன் முறையாக வான்படை வைத்துள்ளதொரு அரசியல் சக்தியாக விடுதலைப்
புலிகள் விளங்குகின்றனர். கடந்த இருவருடங்களாக மகிந்த அரசினர் முன்னெடுத்த இராணுவ
நடவடிக்கைகள் இன்று அவர்களை ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குக் கொண்டு வந்து
விட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படையானது தென்னிலங்கையில் மிகப்பெரியதொரு
தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது; ஏற்படுத்தப் போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவரான ரணில் விக்கிரமசிங்க தென்னிலங்கை மக்கள் மேற்படி தாக்குதல்களினால் அடைந்த
துயரங்களையிட்டுக் கவலைப் பட்டிருக்கின்றார். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் பல வருடங்களாக
இலங்கை விமானப்படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வந்திருப்பதை அவர் மறந்து விட்டார். அவர்கள்
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும், இடம்பெயர்ந்தும், காயப்பட்டுமுள்ளனர். ஆனால்
இதுவரையிலான புலிகளின் விமானப்படைத் தாக்குதல்கள் இதுவரையில் இராணுவ இலக்குகள் மீது
மட்டும் தான் தாக்குதல்களை நடாத்தித் திரும்பியுள்ளன. ஆனால் அதே சமயத்தில் இலங்கை
விமானப்படையினரின் அன்றாடத் தாக்குதல்களில் ஒவ்வொரு முறையும் அப்பாவித் தமிழ்
மக்கள் காயப்படுவதும், கொல்லப்படுவதும் நடைபெறுவதைக் காண்கின்றோம்.
அதனால்தான் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகளெல்லாம் இலங்கை அரசுக்கெதிராகக்
குரல் கொடுக்கின்றன. ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை நடாத்துகின்றன.
இன்னுமொரு முக்கியமானதொரு அரசியல் நிகழ்வு யாதெனில்.. முன்னரெல்லாம் இத்தகைய
யுத்தங்களின் போது ஒருமித்துக் குரலெழுப்பிய தென்னிலங்கை அரசியற் சக்திகள் இம்முறை அவ்விதம் குரலெழுப்பவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய மகிந்த அரசின் இராணுவ
நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கின்றார். இராணுவத் தீர்வின் மூலம் ஈழத் தமிழர்களின்
பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்று பகிரங்கமாகவே கூறி வருகின்றார்.
தென்னிலங்கையின் பல அரசியல் சக்திகள், ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இத்தகையதொரு போக்கிணையே காண முடிகின்றது. அத்தகைய சக்திகள் மீதெல்லாம் இராஜபக்ச சகோதரர்கள் பாய்ந்து வருகின்றார்கள்.
தற்போதைய சூழலில் விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசுக்குமிடையிலான ரணில் அரசு
ஆரம்பித்த யுத்த நிறுத்தப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பேச்சு வார்த்தை நடக்கிறதோ, இல்லையோ இரு பகுதியினருமே தம்மைப் பலப்படுத்தும்
நடவடிக்கைகளில் ஈடுபடத்தான் போகின்றார்கள். தமக்கென்றொரு தளப்பிரதேசமொன்றினையும்,
இராணுவ, கடற்படை மற்றும் விமானபடை அணியினையும் வைத்துள்ள அமைப்பொன்றினைப் பார்த்து
எல்லாவற்றையும் அழித்து விட்டுத்தான் தீர்வு பற்றிப் பேசப்போகின்றோமென்று சொல்லுவது
நடைமுறைக்கொவ்வாதது. இரு பகுதியினருமே தத்தமது குறை, நிறைகள், பலம் மற்றும்
பலவீனங்களுடன்தான் முன்பு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மேற்படி
யுத்த நிறுத்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் ஓரளவாவது நிம்மதியாகவிருந்தார்கள்.
ஆனால் அப்போதும் அவ்வப்போது தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான படுகொலைகள்
மட்டும் துரதிருஷ்டவசமாகத் தொடரத்தான் செய்தன. மீண்டும் யுத்தநிறுத்தப்
பேச்சுவார்த்தைகள் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும். நடைமுறைக்குச் சாத்தியமான, நியாயமானதொரு தீர்வினை நோக்கி அப்பேச்சுவார்த்தை நகர்வதாகவிருக்க வேண்டும். அதே சமயம் ஜனநாயக உரிமைகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக, எந்தவித அமைப்புகளின் பயமுறுத்தல்களுமின்றி, இயல்பானதொரு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் நிலைமை திரும்ப வேண்டும். முரண்பாடுகளைப் பிரித்தாளும் ஆதிக்க சக்திகள் தத்தமது நலன்களுக்குப் பாவிக்க முனைவதிலிருந்து கவனத்தினைத் திருப்பி மக்களின் சுபீட்சத்தின் பக்கம் திருப்ப வேண்டும்.
அதேசமயம் சகலவிதமான அரசியல் ரீதியிலான கொலைகளும் நிறுத்தப்பட்டு இயலுமானவரையில்
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு மேற்படி பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவுக் கரம்
நீட்ட வேண்டும். இல்லா விட்டால் விரிவடையும் மோதல்களால் பாதிக்கப்படப் போவது
அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த அப்பாவி மக்கள்தான். இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தவற விடும் பட்சத்தில் ஏற்கனவே உத்தியோகப்பற்றற்றரீதியில் பிரிவுபட்டுக் கிடக்கும் இலங்கைத் தீவானது நிரந்தரமாகவே சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் பிளவுண்டு விடும் நிலைமையினைத் தான் சர்வதேச அரசியற் சூழல் புலப்படுத்துகின்றது.
- நிருபதுங்கன் - |