இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை!
யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (வயது 44) நடராஜா ரவிராஜ் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். "தெரன" தொலைக்காட்சிக்கான நேர்காணலில் காலை 7 மணி முதல் 8 மணிவரை பங்கேற்றுவிட்டு கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள தனது வீட்டுக்கு ரவிராஜ். திரும்பினார். மக்கள் நடமாட்டம் மிகுந்த கொழும்பு நகரின் மையப்பகுதியான எல்விட்டிகல, மாதா வீதி சந்தியில் எல்விட்டிகல வீடமைப்புத் திட்டம் அருகே உள்ள தனது வீட்டிலிருந்து மீண்டும் வெளியே வந்து தனது வாகனத்தில் (KE 1279) புறப்பட ரவிராஜ் தயாராக இருந்தார். அப்போது உந்துருளியில் வந்தோரால் ரவிராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மிக அருகில் இருந்து நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டில் ரவிராஜின் தலையில் பலத்த சூட்டுக்காயம் ஏற்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டில் ரவிராஜின் பாதுகாவலர் யாழ். சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த பி.சி.லக்ஸ்மண் லொகுவெல சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவிராஜ் காலை 9.20 மணிக்கு உயிரிழந்ததாக கொழும்பு தேசிய மருத்துவமனை விபத்துப் பிரிவின் சிறப்பு மருத்துவர் ஹெக்டர் வீரசிங்க அறிவித்தார். "துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சிறப்பு சத்திர சிகிச்சைப் பிரிவிற்குட்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிறப்பு மருத்துவக் குழுவினர் முயற்சித்தும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது" என்றார் ஹெக்டர் வீரசிங்க. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகளும் தலைக்கவசமும் மீட்கப்பட்டுள்ளன.
விடுதலைக் குரலை உரத்து எழுப்பிய ரவிராஜ் 11962 ஆம் ஆண்டு யூன் 25 ஆம் நாள் யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் ரவிராஜ் பிறந்தார். யாழ். டிறிபேர்க் கல்லூரி மற்றும் சென்ற் ஜோன்ஸ் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 1987 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அதிஉயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். சிறிலங்கா அதி உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், அம்பாறை, மட்டக்களப்பு, வுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக இந்த நிறுவனம் வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
1984 ஆம் ஆண்டு முதல் 1990 முதலும் 1993 ஆம் ஆண்டு முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு த.ஐ.மு.வின் மத்திய குழு உறுப்பினரானார். 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வர்
1998 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை முதல்வர். 1998 ஆம் ஆண்டு த.ஐ.மு.வின் சட்ட ஆலோசகரானார். 2000 ஆம் ஆண்டு த.ஐ.மு.வின் அரசியல் சபைக்குழு உறுப்பினரானார். 2001 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவானார். 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மறுதேர்தலில் மீளவும் தெரிவானார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச அமைதிக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச அமைதி சபை ஆகியவற்றின் சார்பில் அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக காணாமல் போனோர் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் கண்காணிப்புக் குழுவினராகிய மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன், வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரட்ண, அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி ஆகியோருடன் இணைந்து தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
வாகரையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டிக்க வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ரவிராஜ் நடத்தினார்.
ஈழத் தமிழரின் விடுதலைக்கான குரலை உரத்துக் கூறிய ரவிராஜ் மரணத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன்:'ரவிராஜின் படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறிலங்கா தலைநகர் கொழும்பு நகரில் தெருவில் வைத்து வாகனத்தில் பயணித்த போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படுகொலை மிகவும் மன்னிக்க முடியாத கொடூரமான படுகொலையாகும். நிதானத்துடன் தமிழ் மக்களுக்காக பெரும் சேவையாற்றிய அரசியல்வாதி ரவிராஜ். சமாதனத்தின் மூலமாக தீவு காணப்பட வேண்டும் என்று செயற்பட்ட நண்பன். வடக்கு - கிழக்கு வாழ் தமிழர்களின் துயருக்கு தீர்வு காண துடிப்புடன் செயற்பட்டவர்'.
செல்வம் அடைக்கலநாதன்: 'தமிழ் மக்களின் ஜனநாயகக் குரல் இன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடைகளால் பெரும் அவலத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள் துயருக்குத் தீர்வு காண ஓய்வின்றி உழைத்தவர். இந்தத் தோல்வியடைந்த சிறிலங்கா நாட்டின் கொடூர அதிகார வர்க்கத்தையும் கூட மக்களுக்காக சமாதானப்படுத்திடும் வழியையும் கையாண்டவர். அநீதிக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக தென்னிலங்கையிலும் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவினரால் ஜனநாயகக் குரல்களை அடக்கி விடலாம். ஆனால் தமிழ் மக்களின் போராட்டக் குரலை ஒடுக்கிவிட முடியாது'.
சிவாஜிலிங்கம்: 'ரவிராஜின் படுகொலை மிகவும் கோழைத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சிங்களம், தமிழ்- ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வல்லமையாக வாதிடும் சட்டத்தரணி சிறிலங்கா அரசாங்கத்தாலும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள துணை இராணுவக் குழுவினராலும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமையை சர்வதேசம் கண்டிக்க வேண்டும். இத்தகைய படுகொலைகள் மூலமாக தமிழ் மக்களினது சுதந்திர எழுச்சியையும் விடுதலை உணர்வையும் ஒருபோதும் அடக்க முடியாது என்பதையே திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம்'.
மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்: 'என்னுடன் இணைந்து அமைதி வழியிலே சாத்வீக வழியிலே போராட்டங்களை முன்னெடுத்த சக போராளி. ஆட்கடத்தல் தொடர்பிலான கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக பணியாற்றியவர்.தமிழ் மக்களினது அபிலாசைகளை- தமிழ் மக்களினது அவலங்களை சிங்களவருக்கு சிங்கள மொழியிலேயே எடுத்துச் சொல்லும் வலிமை அவருக்கு இருந்தது. சிறிலங்காவின் தலைநகரில் இந்தப் படுகொலை நடந்துள்ளமையானது சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாட்டின் தலைநகரிலேயே பாதுகாப்பு இல்லை என்கிற போது சாதாரணமான தமிழ் மக்களுக்கு எப்படி இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கும்? இந்தப் படுகொலைக்கு சிறிலங்கா அரசாங்கமே அரசாங்கமே முழுப் பொறுப்பு. சிறிலங்கா அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும். ரவிராஜ் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலிருந்து நான் கேட்கிறேன். இந்த நாட்டுக்கு அரசாங்கம் உள்ளதா? காவல்துறை உள்ளதா? என்றார் மனோ கணேசன்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: 'சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், கொழும்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்கள் நேரடியாக அரசாங்கத்துடன் சந்திப்பு நடத்திய நிலையில் கொழும்பில் நடந்துள்ள இத்தகைய அரசியல் படுகொலைகளானது சிறிலங்காவின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்கும் தமிழர் சக்திகள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சிறிலங்கா அரச இயந்த்திரத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பணியாற்றிய ரவிராஜின் இழப்பானது ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசத்தை துயருக்குள்ளாக்கியுள்ளது'.
நன்றி: புதினம்.காம்.