- த. சரீஷ் (பாரீஸ்) -
              
              
              ஒரு பாடலேனும் 
              பாடநினைத்து...
              இயலாமல்போன 
              என் கனவுகள் கால்முளைத்து
              எங்கேயோ வேகமாக 
              ஓடிக்கொண்டிருக்கிறது...!
              
              மெல்ல மெல்ல
              உணர்வின் வழிவந்த
              எதையோ ஒன்றை 
              எழுதத்துடித்து தோற்றுப்போன 
              என் எழுதுகோல் 
              கண்களை அகலத்திறந்து
              எதையோ...
              வெறித்தனமாய் 
              பார்த்துக்கொண்டிருக்கிறது...!
              
              மீண்டும் மீண்டும்
              நீந்திவரும் நினைவுகள்
              என்னுள்ளே....
              உரச உரச உண்டாகும்
              இதமான சுமையை
              சுமக்கமுடியாதுபோன 
              என் மனசு 
              தனக்குள்ளேயே...
              பேய்த்தனமாய் 
              பேசிக்கொண்டிருக்கிறது...!
              
              மனச்சிறைக் கம்பிகளை 
              உடைத்து
              சுவடுகள் தேடி ஓடிய 
              என் சுவாசக்காற்று
              ஏனோ தெரியவில்லை
              திரும்பிவந்து...
              இதயக்குகைக்குள் 
              செத்துக்கிடக்கிறது...!
              
              இருப்பினும்... 
              இந்த இருட்டில் 
              யாரங்கே.....
              என் மனவானத்து
              பலகோடி நிலவுகளுக்கு
              ஒவ்வொன்றாக ஒளிகொடுப்பது...? 
              
              அது....
              ஒரு நாள்
              ஒரு இராகம்
              ஒரு கவிதை...!
              மறுபடி மறுபடி
              அலைபாயும் 
              உயிருள்ள உணர்வாக 
              அவள்.... நான்...!!! 
              
              poet.sharish@gmail.com
              (06.02.2007)



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




