தம் சேவையால் பெருமை தேடிய பேராசிரியர்
கோபாலபிள்ளை (கோபன்) மகாதேவா
- நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் ) -
“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று” - குறள், புகழ் - 236 -
ஒரு
மனிதன் எழுபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கையைக் கழித்தல் என்பது இலகுவான செயலன்று.
அது ஒரு முழுமனிதன் என்ற உணர்வைத் தோற்றுவிக்க முற்படுகின்றது என்றே
கருதுகின்றேன். இலங்கையில் கட்டிடப் பொறியியலில் விசேட பட்டதாரியும் உலகறிந்த
உற்பத்திப் பொறியியல் பரிபாலனப் பேராசிரியருமான கலாநிதி கோபன் மகாதேவா லண்டன்
பேர்மிங்காம் சர்வகலாசாலையில் முதுமானிப்பட்டம், கலாநிதிப்பட்டம், முனைவர்
பட்டங்கள் பெற்ற பெரும் கல்விமானாவார். உலகறிந்த உற்பத்திப் பொறியியல் பரிபாலனப்
பேராசிரியரான கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமைபெற்றவராவார்.
யாழ்ப்பாண மகாணத்தில் சாவகச்சேரி வட்டாரத்தில், மட்டுவில் தெற்கு என்ற
கிராமத்தில் பிறந்த பெருமைக்குரிய பேராசிரியர் தன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து
தனது தாய் மாமனாரான வைத்தியர் வெற்றிவேலர், தனது பெரிய தந்தை கந்தையா இருவருமே
தன்னைச் சொந்தப் பிள்ளைபோல் வளர்த்து கல்வியூட்டி ஆளாக்கிளார்கள் என்று
காலைக்கதிரில் சந்திப்பின்போது
பேராசிரியர் கூறியிருந்தமை என் நெஞ்சை நெகிழ்த்தியது.
750ற்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளையும், ஆசிரியர் தொழில்நுட்பம், பொறியியல்,
விஞ்ஞானம், பரிபாலனத்துறை, தொழில்
அபிவிருத்தி, கல்விமுறை, பயிற்சிக்கலை, ஈழத்து அரசியல்போன்ற விடயங்கள் குறித்து
நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும்,
சிறுகதைகளையும் எழுதிய பேராசிரியர் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி
வெளியிட்டுள்ளார் என்பது எமக்கு ஒரு அரிய
வரப்பிரசாதமாகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும்
அவரது அறிவுத் திறமையையும், உலகின்;
நோக்கினையும் எடுத்து விளம்புவனவாகத் திகழ்கின்றன. இத்தகைய சிறந்த ஆற்றல் மிக்க
ஒருவரை லண்டனில் நடைபெறும் இலக்கிய
நிகழ்வுகளின் போது சந்தித்து பழகும் ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதை நான் ஒரு
பாக்கியமாகவே நினைக்கின்றேன்.
மிக அண்மையில் எனது தந்தை அகஸ்தியர் எழுதிய நூல்களுடன் அவரின் இல்லம் செல்லும்
இனிய வாய்ப்பு ஏற்பட்டது. அவரின்
அன்புத் துணைவியார் டாக்டர் சீதாதேவியின் கனிவான சிரித்த முகமும், விசாலமான மனம்
கொண்ட பேராசிரியரின் அன்பு கலந்த
வரவேற்பும் என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என் தந்தையின் அர்ப்பணிப்பு
மிகுந்த சில நூல்களை வாசித்தபோது என் தந்தை மீது
மிகுந்த அபிமானம் தனக்கு ஏற்பட்டதாக பேராசிரியர் கூறியபோது மிகவும் மனம்
நெகிழ்ந்துபோனேன.; பேராசிரியர் கோபன் மகாதேவா
இலக்கியத்துறையில் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு எழுத்துருவாக்கும் பணியை எத்துணை
ஒழுங்கு முறையோடு செயற்பட்டு வருகின்றார் என்பதை அவரின் வரவேற்பறையின் விதவிதமான
நூல்களின் அடுக்குகள் உணர்த்தி நின்றன. எந்த ஒரு படைப்பாளியின் இலக்கியத்தையும்
சுவைத்து ஆழ்ந்து வாசிக்கும் பேராசிரியரின் சிறந்த கலையை என்னால்
அவதானிக்கமுடிந்தது. இது அவர் எதனையும் ஆராய்ந்து ஆர்வத்தோடு அவதானிக்கின்ற
வெளிப்பாட்டின் தனிப் பண்பாகக் கருதத் தோன்றுகின்றது.
பேராசிரியரின் கோபன் மகாதேவாவின் ‘Poems in Tamil’ என்ற வாழ்க்கையும் கவிதையும்
என்ற நூல் 2004 ம் ஆண்டு என் கையில்
கிடைக்கப்பபெற்று சுவைத்துப் படித்திருந்தேன். மரபுக் கவிதையும் புதுக்கவிதையும்
கலந்த ஒரு புதுப்பாணியாக அவரது அனுபவங்களின் சிதறல்கள் கவிதைப் பூக்களாகி
மலர்ந்திருந்தன. அண்மையில் பிரித்தானிய இலக்கிய சங்கம் வெளியிட்ட ‘பூந்துணர்’என்ற
தொகுப்பு மலரில் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் பதினைந்து கவிதைகள்
அலங்கரிக்கின்றன.
2005 ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘எனக்கு மட்டும்
உதிக்கும் சூரியன்’ என்ற நூல்
வெளியீட்டு நிகழ்வின்போது அவரது அன்பு மனைவி டாக்டர் சீதாதேவியுடன்
சமூகமளித்திருந்ததோடு, எனது நூலின் வடிவமைப்பு
குறித்தும் கவிதைகள் குறித்தும் சிலாகித்துப் பேசியிருந்தமை இன்றும் எனக்கு
நினைவிருக்கிறது. பழகுவதற்கு இனியவரான பேராசிரியர் கோபன் மகாதேவா நிறைகளை
மகிழ்வுடன் எடுத்துக் கூறுவதோடு குறைகளை நேருக்கு நேர் எடுத்துக் கூறுவதற்கு
ஒருபோதும் பின்னிற்கமாட்டார் என்பதனை என்னால் கண்டுகொள்ளமுடிந்தது.
1974 ஆம் ஆண்டு அனைத்துலகத் தமிழாராட்சி மகாநாட்டை வணக்கத்துக்குரிய தனிநாயகம்
அடிகளார், டாக்டர் ஜேம்ஸ் ரட்னம் போன்ற இலங்கையின் மிகப் பெரிய கல்விமான்களாடு
இணைந்து பிரதான செயலாளராக பேராசிரியர் கோபன் மகாதேவா செயற்பட்டவர். கொழும்பில்
நடைபெறவிருந்த நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மகாநாட்டை அப்போது பிரதம
மந்திரியாக இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்காவிடம்; தனது கோரிக்கையை முன்நிறுத்தி
வாதாடி வெற்றிபெற்று யாழ்ப்பாண மண்;;ணில் நான்காவது அனைத்துலக தமிழாராட்சி
மகாநாட்டை திறமையுடன் நடாத்திய முக்கிய பங்காளி பேராசிரியர் கோபன் மகாதேவா ஆவார்.
யாழ்ப்பாணம்
நவீன சந்தை, யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் நவீன சந்தை போன்றவற்றை மையிற் நிறுவனம்
மூலமாக பொறுப்பேற்றுக் கட்டிவித்தவரும், வடஇலங்கை வர்த்தகர் கைத்தொழிலாளர்
சம்மேளனத்தை நிறுவி அதன் முதல் தலைவராகக் கடமையாற்றி அச்சுவேலி
கைத்தொழில்பேட்டைக்கு அத்திவாரமிட்ட பெருமைக்குரியவரும் பேராசிரியர் கோபன்
மகாதேவா என்றால் அது மிகை ஆகாது. ஆச்சரியம் என்னவென்றால் பொறியியல், அரசியல்,
இலக்கியத்துறை என்று மட்டுமல்லாது நாடகத்துறையிலும் ஆர்வத்துடன் தரமான கட்டுரைகளை
எழுதியிருக்கிறார். திருக்குறள் தாத்தா, செல்லாச்சிப் பாட்டி என்னும் இரு குறும்
படங்களையும் எழுதிய கோபன் மகாதேவா அதனை நெறிப்படுத்தி நடித்துமுள்ளார்.
2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரு நடாமோகனின் மேற்பார்வையில் இயங்கும் ‘லண்டன்
தமிழ் வானொலியின்;’ எனது தயாரிப்பில்
இடம்பெறும் ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் இவருடன் நேர்காணல் ஒன்றை
நிகழ்த்தியிருந்தேன். பல்கலை வித்தகரான பேராசியர்
கோபன் மகாதேவா அவர்களின் அந்தச் செவ்வி பல்வேறுபட்ட நாடுகளிலுள்ள நேயர்களின்
மிகப் பெரும் வரவேற்பை பெற்றுக்
கொண்டதை இங்கே மகிழ்வோடு கூற விரும்புகிறேன்.
நீண்ட காலம் பிரித்தானியாவில் வாழ்ந்த அனுபவம் கொண்ட பேராசிரியர் கோபன் மகாதேவா
பண்பானவர், பொறுமையின் இருப்பிடம், நேர்மைஇ ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்பு,
சலிப்பின்மை, சொன்ன வாக்கைக் காப்பாற்றுகின்ற பெரும் தன்மை போன்ற சிறப்பான
பண்புகளைக் கொண்டவர். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற அன்புக்கினிய பேராசிரியருக்கு
பவள விழா ஆண்டை நினைவுகூருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
பேராசிரிய தம்பதிகளும், அவரது வழித்தோன்றல்களும் பூரண சுகத்துடன் சீர்
சிறப்புக்களுடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து பணியாற்றி புகழ் பெறவேண்டுமென மனதார
வாழ்த்துகிறேன்.
5.8.2009. (வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்;) (05.01.1934 பிறந்த பேராசிரியர்
கோபன் மகாதேவா அவர்களின் 75 ஆவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை பிரசுரம்
காண்கின்றது)
navajothybaylon@hotmail.co.uk |