பாடம் படிப்போம்; சிந்திப்போம்;
செயற்படுவோம்!
- நந்திவர்மன் -
அண்மையில்
, கடந்த மே 18இல் , நந்திக்கடலுடன் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம்
ஒரு முடிவுக்கு வந்தது. இந்த முடிவு எதனால் ஏற்பட்டது என்பது பற்றி
சிந்திக்க வேண்டிய நிலையில் தமிழ் மக்களுள்ளனர். பர்மாவின்
எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூ கீ அண்மையில் 15 வருட வீட்டுக்
காவலின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதானது அவரது அரசியல்ரீதியிலான
போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். தென்னாபிரிக்காவின் நெல்சன்
மண்டலாவின் வெற்றியும் இத்தகையதே. அதே நேரத்தில் விடுதலைப்
புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின் வெற்றியினை இலங்கை அரசு இலகுவாக
அடைந்து விடவில்லை. உபகண்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய
வல்லரசுகளையெல்லாம் , அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளையெல்லாம் , உலக
வல்லரசுகளையெல்லாம் தந்திரமாகக் கையாண்டதன் விளைவாக அடைந்த வெற்றி. அது
போல் மார்க்சியக் கோட்பாடுகளின் மையங்களாக விளங்கும் ருஷ்யா, சைனா
உட்பட, முதலாளித்துவத்தின் மையங்களாக விளங்கும் மேற்கு நாடுகளையும்
தனது இறுதிப் போருக்கு ஆதரவாகச் செயற்பட வைத்தது இலங்கை அரசுக்குக்
கிடைத்த வெற்றியினை உறுதி செய்தது.
அதே நேரத்தில் தமிழர்களாகிய நாமோ, மாறிவரும் உலக அரசியற் சூழலை
விளங்கிக் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்தும் பழம் பெருமை
பேசிக்கொண்டேயிருந்தோம். மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. மாறாக
சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பார்களென்ற நம்பிக்கையே அவர்களுக்கு
ஊட்டப்பட்டிருந்தது. விளைவு... சுமார் ஐம்பது கிலோ மீற்றர் தொலைவில்
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் கடுமையான யுத்தம்
நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதில், பெண் போராளிகளும், ஆண் போராளிகளும்
போராட்டத்தில் பலியாகிக் கொண்டிருக்கையில், பதுங்கு குழிகளுக்குள் பெண்
போராளிகளின் அங்கங்கள் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக்
கொண்டிருக்கையில், செல்வச்சன்னிதியில் பக்தர்கள் தீர்த்தம்
ஆடிக்கொண்டிருந்தார்கள் (வீரகேசரியில் இது பற்றிய புகைப்படமொன்று
பிரசுரிக்கப்பட்டிருந்தது). அப்பொழுது ஒரு கேள்வி எழுந்தது? யாருக்காக
இந்த இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்? ஏன்
அவர்கள் மக்களின் அரசியல்ரீதியிலான போராட்டமேதுமின்றித் தனித்து
விடப்பட்டார்கள்? இதற்குக் காரணம் மக்களா? இயக்கங்களா? உண்மையில்
இயக்கங்கள்தான். ஆயுங்களை மிகவும் அதிகமாக நம்பி, மக்களை அரசியல்
மயப்படுத்துவதில் யாருமே கவனமெடுக்கவில்லை. மக்களின் அரசியல்ரீதியிலான
போராட்டங்களின் விளைவாகப் படிப்படியாகத் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டம்
வளர்ச்சியடைவதற்குப் பதில், '1983 கறுப்பு ஜூலை'யினைத் தொடர்ந்து,
சடுதியாகப் பிரச்சினையைத் தனது பிராந்திய நலன்களுக்காகக் கையிலெடுத்த
இந்தியாவின் திட்டங்களுக்கமைய ஆயுத அமைப்புகள் சடுதியாக பலம்பெற்று
உருப்பெருத்தன. அதன் தொடர்ச்சியான விளைவுகளால் மக்கள்
பார்வையாளர்களாகவே வைக்கப்பட்டு, ஆயுதரீதியாகப் பயமுறுத்தப்பட்டு
போராட்டத்திலிருந்து தூரவே தள்ளிவைக்கப்பட்டார்கள். அதன் விளைவும்
ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கொரு காரணம்.
இன்னுமொரு காரணம் .. கிளர்ச்சிகளை ஒடுக்க
அரசுகள் பயன்படுத்துமொரு தந்திரம். பொதுவாக பலம்பெற்று வரும் ஆயுதப்
போராட்டங்கள், அவற்றுக்குரிய தளப்பிரதேசங்களை மையமாக வைத்து
வளர்ச்சியடையும் தருணங்களில், போராட்ட அமைப்புகளை அமைதிப்
பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்துக் காலத்தைக் கடத்தி, அமைப்புகளின்
பலத்தினை உடைத்து, இடையில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு,
தளப்பிரதேசங்களை மையமாகக் கொண்டு முடங்கிக் கிடக்கும் அமைப்புகளின்
மீது தாக்குதல்களைத் தொடுப்பது. அதன் மூலம் நாட்டின் ஏனைய பகுதிகளில்
போராடும் அமைப்புகளை நடமாடிட முடியாதவாறு செய்து விட முடிகிறது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான அமைதிப் பேச்சு
வார்தைகளின் போது இலங்கை அரசானது மிகவும் தந்திரமாக தமிழ் மக்களிடையே
நிலவிய வடக்கு, கிழக்குப் பிரதேச உணர்வுகளைப் பயன்படுத்தி புலிகள்
அமைப்பை இரண்டாக உடைத்தது; அதன் மூலம் கிழக்கில் விடுதலைப் புலிகளின்
நடமாட்டத்திற்கு உலை வைத்தது. அடுத்தது வடக்கில் விடுதலைப் புலிகளின்
தளப்பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவர்களை நடமுடியாதவாறு
செய்தது. இதற்கு இலங்கை அரசு கையாண்ட தந்திரம்: தமக்குச் சார்பான தமிழ்
அமைப்புகளையும், புலனாய்வுப் பிரிவினரையும், படையினைரையும் ஒன்றிணைத்து
தமிழ் மக்களின் போராட்டம் அரசியல்ரீதியில் வெடிக்காமலிருக்கும்படி
பார்த்துக்கொண்டதுதான். ஆதரவாளர்களை வெள்ளைவான் கொண்டு கடத்தல், கொலை
செய்தல் போன்ற நடவடிக்கைகள் மக்களை முடமாக்கின. உண்மையில் அத்தருணத்தில் மக்கள அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்தால் தொடர்ந்தும் எத்தகைய இன்னலகளுக்கு மத்தியிலும் போராடும் அமைப்புகளைப் பாதுகாத்திருந்திருப்பார்கள். தொடர்ந்தும் அரசபாதுகாப்புப் படையினரின் பகுதிகளிலும் அவ்வப்போது தொடர்ச்சியான கரந்தடித் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கும். இறுதி யுத்தக்காலகட்டத்தில் மக்களோடு மக்களாக மீண்டும் போராடும் அமைப்புகள் மறைந்திருக்கும் சந்தர்ப்பமேற்றிருக்கும். மேலும் தமிழ் மக்களை
அரசியல்மயப்படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்குமென்பதற்கு அண்மையில்
நடந்த உதாரணமொன்றினையும் சுட்டிக் காட்டலாம். வடக்கில் காணாமல் போன மக்களை மையமாக
வைத்து ஜே.வி.பி.யினர் வடக்கில் அரசியல்ரீதியிலான போராட்டமொன்றினை
முன்னெடுத்தவேளை அவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அப்பொழுது தமிழ் மக்கள் ஒன்று திரண்டு போராடி அவர்களை மீட்டதாக
ஜே.வி.பி.யினரே கூறியிருக்கின்றார்கள். மக்களை அமைப்புகளை
அரசியல்ரீதியில் அரசியல் மயப்படுத்திப் போராட்டத்தினை
முன்னெடுத்திருந்தால் அதே மக்கள் அமைப்புகளை இறுதியில் காத்திருக்கும்
வகையில் போராடியிருந்திருப்பார்கள். அவ்விதம் நிகழாததற்கு ஆயுதங்களை
அதிகமாகவே நம்பி, மக்கள் சக்தியினைப் புறக்கணித்ததே முக்கியமானதொரு
காரணியாகத் தென்படுகிறது. மக்களுக்காகத்தான் போராட்டங்களேதவிர தனிப்பட்டமனிதர்களுக்காகவோ அல்லது அமைப்புகளுக்காகவோ அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.நடந்தவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பது
அவசியம். படிப்போம். சிந்திப்போம். அதன் விளைவாக ஏற்படும்
ஞானத்தினடிப்படையில் செயற்படுவோம். |