லண்டனில் ஈழத்து நூல் கண்காட்சி: முல்லை
அமுதனுக்குப் புகழாரம்!
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
லண்டனில் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியை
மிகுந்த அக்கறையுடனும்இ பேருழைப்புடனும் நிகழ்த்திவரும் முல்லை
அமுதனுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இலங்கையிலும்
புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள்;
வெளியிட்ட பன்னிரண்டாயிரத்துக்கும்; மேற்பட்ட நூல்களை புலம்பெயர்ந்துவாழும்
நாடுகளிலிருந்தும், இலங்கையின் பல்வேறு
பாகங்களிலும் இருந்தும் முல்லை அமுதன் அரும்பாடுபட்டுத் தேடித் திரட்டி நவம்பர்
மாதம் பத்தாம் திகதி ‘இல்போர்ட்’ சென்.லூக்ஸ்
தேவாலய மண்டபத்தில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். பல்வேறு தலைப்புக்களின் கீழ்
நூல்கள் பகுதி பகுதியாக பார்வைக்கு
வைக்கப்பட்டிருந்தன. இலங்கையிலேயே இவ்வளவு பெருந்தொகை நூல்களை ஒரே கண்காட்சியில்
பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே!
லண்டன் போன்ற தலைநகரில் இத்தகைய ஒரு பிரமிப்பூட்டும் ஈழத்து நூல்களின் கண்காட்சி
இடம்பெறுவது எமக்குக் கிடைத்த
வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்;. அறிவியல், சமயம், வரலாறு, சிறுகதை, கவிதை,
நாவல், சமையல், சிறுவர் இலக்கியம்,
விமர்சனம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு தலைப்புக்களின் கீழ் இலங்கையில்
வெளியாகியுள்ள பெருவாரியான நூல்களை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியும்
உற்சாகமும் பரவி இருந்ததை உணரமுடிந்தது.
இவ்வளவு பெருந்தொகையான நூல்களை இலங்கையில் இருந்து
எழுத்தாளர்களிடமிருந்தும்இ பதிப்பாளர்களிடமிருந்தம் லண்டனுக்குத்
தருவிக்க முல்லை அமுதன் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை
வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. இதனைவிட சைமன் காசிச் செட்டியில் இருந்து
டானியல் அன்ரனிவரை மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய ஈழத்து அறிஞர்கள்,
எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தமை இந்த
கண்காட்சிக்கு புதிய மெருகு சேர்த்தது எனலாம். காற்று வெளி சஞ்சிகையின் ஆதரவில்
இடம்பெற்ற இந்தக் கண்காட்சி முடிவில் நடன நிகழ்ச்சிகளும், இசை
நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இக்கண்காட்சி விழாவில் கவிஞர் க.ராஜமனோகரன் தலைமை
தாங்கிய இலக்கியக் கூட்;டத்தில் முக்கிய எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும்
உரையாற்றினர்.
கவிஞர்
ராஜமனோகரன்: புகலிடத்தில் ஈழத்துத்தமிழ் வெளியீடுகளை ஆவணமாக, எதிர்காலத்
தலைமுறையினரும் பயன்படுத்தத் தக்கதாக பொது அமைப்பு ஒன்று செயற்படுதல் அவசியம்
என்று கவிஞர் ராஜமனோகரன் வலியுறுத்தினார். லண்டனில் நாற்பதுக்கும் மேற்பட்ட
வீடுகளை தமது சொந்த ஆதனத்தில் வைத்திருக்கும் சைவஆலயங்கள் இந்த நூல்களைப்
பாதுகாக்கும் ஆவணக் களஞ்சியங்களை செயற் படுத்தத்தக்க வசதியான நிலையில் உள்ளன
என்றும், ஆனால் இத்தகைய ஆலயங்கள் சமூக உணர்வின்றிக் காணப்படுவதாகவும் அவர் தனது
உரையில் தெரிவித்தார்.
கவிஞர்
மு. பொன்னம்பலம்: ஈழத்திலிருந்து வருகை தந்த கவிஞர் மு.பொன்னம்பலம்
உரையாற்றும்போது இயந்திர வேகத்தில்
புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருக்கிறன என்றும், இன்று எழுதுபவர்கள் மற்றையவர்களின்
எழுத்துக்களை படிப்பதே இல்லை என்றும் கவலை தெரிவித்தார். ஈழத்து எழுத்தாளர்கள்
மத்தியில் காணப்படும் குண்டுச் சட்டியில் குதிரை ஓடும் மனோபாவம்
விசனத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். ஈழத்து நூல்களின் வாசிப்பு
பெருமளவு கவலை தருவதாக இருக்கிறது என்றும், இது போன்ற கண்காட்சிகள்
வாசிப்புப்பழக்கத்தை உயர்த்துவதற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
விமர்சகர்
மு. நித்தியானந்தன்: விமர்சகர் மு. நித்தியானந்தன் பேசும்போது முல்லை
அமுதனின் அரும்பெரும் முயற்சியினை
பாராட்டினார். தமிழகத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஏழு லட்சம்பேர்
கலந்து கொண்டனர் என்றும் ஏழு கோடி ரூபாய்க்கும்
அதிகமான புத்தகங்கள் விற்பனை இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்த அவர் தமிழக
மக்கள் மத்தியில் புத்தகம் தொடர்பாகக் காணப்படும் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது
என்றும் குறிப்பிட்டார். ஈழத்தில் ஆண்டுக்கு ஒரு சிறுகதைத்தொகுப்புஇ ஒரு
கவிதைத்தொகுப்பு மட்டுமே வெளியான ஒரு சூழலில் இருந்;து இன்று மாதந்தோறும் இரண்டு
மூன்று நூல்கள், இலக்கிய ஏடுகள் இலங்கையில் வெளியாகிக்கொண்டிருப்பது உற்சாகம்
தருகிறது என்றும் மு. நித்தியானந்தன் தெரிவித்தார். தமிழகத்தின் வாணிப வெளியீட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் புகலிட எழுத்தாளர்களும், ஈழத்து எழுத்தாளர்களும்
சிறைப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டத்தரணி
செ. சிறிஸ்கந்தராஜா: சட்;டத்தரணி செ.சிறிஸ்கந்தராஜா உரையாற்றும்போது ஆறுகோடி
மக்களைக் கொண்ட தமிழ் நாட்டிலும் நூல்களைப் பதிப்பிக்கும்போது ஆயிரம் பிரதிகளையே
அச்சிடுகிறார்கள் என்றும் குறைந்தளவு மக்கள் தொகையைக் கொண்ட ஈழத்திலும் அதே தொகை
நூல்கள்தான் அச்சிடப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இது போன்ற நூல்
கண்காட்சிகளிலும்கூட இலக்கிய ஆர்வலர்கள் சமூகம் தந்து சிறப்பிக்கும் போக்கு இல்லை
என்று குறிப்பிட்டு விசனம் தெரிவித்தார். இன்று நிலைமைகள் போகின்ற போக்கில்
வன்னியில்கூட தமிழ் நூல்களைப் பாதுகாப்பது சாத்தியமாகுமா? என்று சந்தேகம்
தெரிவித்த அவர் ஈழத்து நூல்களுக்கான நிரந்தரமான நூல் காப்பகம் ஒன்றினை லண்டன்
தமிழர்கள் மனம் வைத்தால் நிச்சயமாக அதனைச் செயல்படுத்தலாம் என்று நம்பிக்கை
தெரிவித்தார்.
கரவைக்
கவி வீரவாகு: இந்த அரங்கில் உரையாற்றிய கரவைக்கவி வீரவாகு பெற்றோர்கள் தங்கள்
வாசிப்புப் பழக்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு பழக்கி வரவேண்டும் என்று
தெரிவித்தார். தமிழ்ச் சமூகம் பல்துறை சார்ந்து தங்கள் சிந்தனையை விஸ்தரிக்க
வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நூலகவியலாளர்
என். செல்வராஜா: நூலகவியலாளர் என். செல்வராஜா பேசும்போது தமிழ் மக்களுக்காக
தேசிய நூலகம் ஒன்றினை லண்டனில் நிறுவ வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார்.
லண்டனில் பெரும் நிதிப்பலத்தில் இயங்கிவரும் ஆலயங்கள்கூட நூல் கண்காட்சி
நடத்துவதற்கும் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் கட்டணம் அறவிடுவது நியாயமற்றது
என்று தெரிவித்தார். கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாம் ஒருங்கு திரண்டு
இப்பணியில் ஈடுபடவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சுடரொளி
ஆசிரியர் ஐ. தி. சம்பந்தன்: சுடரொளி ஆசிரியர் ஐ.தி. சம்பந்தன் பேசும்போது
நூல்களை வாசகர் மத்தியில் கொண்டு சேர்ப்பது அவசியமானது என்றும் முல்லை அமுதனின்
முயற்சிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இ.
பத்நாப ஐயர்: இ.பத்மநாப ஐயர் பேசும்போது புலம்பெயர் நாடுகளில் மெல்லத் தமிழ்
இனிச் சாகும் என்ற நிலை வருவதாகக் குறிப்பிட்டார். எமது கலை முயற்சிகளைப்
பாதுகாக்க தர்மசிறீ பண்டாரநாயக்கா போhன்ற சிங்களக் கலைஞர்கள் காட்டும் அக்கறை கூட
தமிழர்கள் காட்டுவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழ் ஆசிரியர் எஸ்.வேணுகோபால்: தமிழ் ஆசிரியர் எஸ். வேணுகோபால்
உரையாற்றும்போது தமிழ் மொழியை லண்டனில் கல்லூரி மட்டத்தில் பயில்வதில் மாணவர்கள்
ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவித்தார். தமிழ் இலகுபடுத்தப்பட்டு
மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது அவசியம் என்று சுட்டிக் காட்டினார்.
முல்லை
அமுதன்: நூல் கண்காட்சியை ஒழுங்கு செய்த முல்லை அமுதன் கூட்டம் முடிவில்
ஆற்றிய உரை கூட்டத்தினரது நெஞ்சை உருக்கியதாக அமைந்திருந்தது. இவ்வளவு
அரும்பாடுபட்டும் நூல் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று
அறியப்பட்டவர்களே வராத நிலைமை விரக்தியையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துவதாக
கவலையோடு தெரிவித்தார். எதற்காக, யாருக்காக இந்த முயற்சிகளை ஏற்படுத்தவேண்டும்
என்ற கேள்விகள் தன் நெஞ்சில் எழுகிறது என்றும் கவலை தெரிவித்தார். எனினும்
முல்லை அமுதனின் முயற்சிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து
எதிர்காலத்தில் அவரது கரங்களைப் பலப்படுத்த
வேண்டும் என்பதே எமது அவாவாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும, வெற்றுச்
சடங்குகளிலும் கலந்துகொள்ளும் நம்மவர்கள் இதுபோன்ற கலை நிகழ்வுகளை புறக்கணிப்பது
ஆரோக்கியமானதல்ல.
மேலும் சில விழாக் காட்சிகள்...
29.11.2007. navajothybaylon@hotmail.co.uk |