இலங்கையன்: ஒரு சமூக ஆளுமை
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
“உங்கள்
அப்பா அகஸ்தியரின் எழுத்துக்களிலிருந்து, அவர் சமூகத்தை எப்படி நேசித்தார்
என்பதும், பார்த்தார் என்பதும் யாருக்கும் புரியும். எல்லா விசுவாசத்திலும் மானிட
விசுவாசந்தான் மேலானது. மானிட விசுவாசமற்ற எந்த விசுவாசத்தாலும் இந்த உலகிற்கு
எதுவித பயனுமில்லையென்றுதான் நான் கருதுகிறேன். நான் விஞ்ஞானம், கணிதம் படித்த
சமூகசமதர்மவாதி என்றரீதியில், இந்த உலகம் பற்றித்தான் கவலைப்படுகின்றேன்.
மதங்கள் கூறும் மறு உலகங்கள் பற்றிய நம்பிக்கை இல்லை. ஆகவே கவலைப்படுவதில்லை.
இதுதான் முதலும் கடைசியும். எனவே சமூகத்திற்குச் செய்யக்கூடியவற்றை செய்து வாழும்
பண்பைப் பெறுவதே எமது நோக்காக அமைய வேண்டும். இதற்கமையவே உங்கள் அப்பா சமூக மனித
நோக்குக் கொண்டு வாழ்ந்து மடிந்தார். அது என்றும் சமூகத்தில் நிலைத்து நிற்கக்
கூடியது. ஆனால் அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்க முடியும்.
இதுதான் என்னைப்போன்ற ஒவ்வொருவருடைய கவலையுங்கூட. சமூக சேவையும், மக்கள் சேவையுமே
உண்மையான சோசலிஸவாதிகளின் நோக்கு என யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது.
அகற்கமையவே அப்பா வாழ்ந்தார். அதை மனதிலிருத்தி வாழ்ந்து காட்டுவதே அப்பாவிற்கு
நாம் செய்யக்கூடிய பெரும் அஞ்சலியாகும்”
அமரர் இலங்கையன்; அவர்கள் 1996 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கனடாவிலிருந்து
எனது தந்தை அகஸ்தியரைப்பற்றி
எனக்குத் தனது கைப்பட எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது. கம்யூனிச சித்தாந்தத்தில்
ஊறித் திளைத்தவராய், தனது எழுத்தையும், வாழ்க்கையையும் சமூகத்துக்கு அர்ப்பணித்த
என் தந்தை அகஸ்தியர் மீது இலங்கையன் கொண்டிருந்த பெரும் மதிப்பினை இந்த வாசகங்கள்
புலப்படுத்துகின்றன. என் தந்தையோடு மட்டும் நின்றுவிடாது என்மீதும் நேசம் கொண்டு
இறுதிவரை கடிதத் தொடர்புகளைப் பேணி வந்த இலங்கையனின் மறைவு என் மனதில்;
பெருந்துயரத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும். என் தந்தையைப் போன்று எனது நலனிலும்,
எழுத்திலும் அக்கறை கொண்டு அன்பு காட்டிய அமரர் இலங்கையன் ஈழத்து வரலாற்றில்
தனியிடம் வகிப்பவராவார்.
இலங்கையனின் பவளவிழா மலருக்காக (2005) நான் எழுதிய ‘மனிதநேயம் கொண்டவர்’ என்ற
தலைப்பில் எழுதிய குறிப்பினை வாசித்து தனது மகிழ்ச்சியை இலங்கையன் அவர்கள் என்னிடம்
வெளிப்படுத்தியிருந்தார்.
கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நிபுணத்துவம்கொண்ட கல்விமானாகவும், தமிழில் விஞ்ஞான
பாடங்களைப் போதிப்பதற்கான பாடநூல் ஆசிரியராகவும், பகுத்தறிவாளராகவும், ஒடுக்கப்பட்ட
சமூகத்தின் மாற்றங்காணவிரும்பிய அமைதி வழிச் சிந்தனையாளராகவும், தமிழ்மொழிப்
பற்றாளராகவும், மனிதநேயம் கொண்ட மாமனிதராகவும் இலங்கையன் திகழ்ந்திருக்கிறார்.
1930ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 28ஆம் நாள் உடுப்பிட்டியில் பிறந்த
இ.வே.செல்வரத்தினம் எனப்படும் இலங்கையன் தனது 80வது வயது நிறைவைக் கண்டு மரணமுற்ற
இந்தக் காலப் பகுதியில் அவர் கல்வித்துறையிலும், சமூக மேம்பாட்டிலும் காட்டிய
அக்கறை விதந்துரைக்கத்தக்கன. இறுக்கமான சாதிக் கெடுபிடிகளும், நிலவுடைமைச்
சமுதாயத்தின் தாக்கமும், பழமைவாதமும் ஊறிப்போன உடுப்பிட்டிக் கிராமத்தின் தனக்காரக்
குறிச்சியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இலங்கையன் தனது வாழ்க்கை வரலாற்றினை
‘வாழ்வும் வடுவும்’ என்ற நூலிலே பதித்திருக்கிறார். 1930களில்
பின்தங்கிய யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றில் நிலவிய சாதி ஒடுக்கு முறைகள் எவ்வளவு
கொடூரமாக இருந்ததென்பதை அவரது ஆரம்பகால கல்வி அனுபவங்கள் புலப்படுத்துகின்றன.
தீண்டாமை தலைவிரித்தாடிய அக்காலகட்டத்தில் அமெரிக்கன் மிஷன், மெதடிஷ் மிஷன்,
கத்தோலிக்க மிஷன் ஆகிய கிறிஸ்த்தவ மிஷனறிகளினால் நடாத்தப்பட்ட பாடசாலைகள் மட்டுமே
தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் கல்வித் தீபத்தை ஏற்றும் ஒளித்தம்பங்களாகத்
திகழ்ந்தன.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் தமிழ் பாடசாலையில் 5ம் வகுப்பு வரை பயின்ற
இலங்கையன் பின்னர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்து
திறமையாகப் பயின்று, பின் யாழ்ப்பாண வட்டுக்கோட்டைக் கல்லூரியில் புலமைப் பரிசில்
பெற்று, தனது உயர் கல்வியைத் தொடர்ந்து விஞ்ஞானப் பட்டதாரி ஆனார். பின்னர் யாழ்
சம்பத்தரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பதவி நியமனம் பெற்று சிறந்த
ஆசிரியர் என்ற பெயரைச் சம்பாதித்தார். யாழ்ப்பாணத்தின் கல்விச் சிறப்பிற்கு
பெயர்போன ஒரு பாடசாலையில் ஒடுக்கப்பட்ட இனத்தைச்சேர்ந்த இலங்கையன் ஆசிரியராகப்
பணியில் அமர்ந்தமை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு உதாரண புருஷராக இலங்கையனை வரலாற்றில்
அறிமுகப்படுத்தியது. காலி றிச்மன் கல்லூரியிலும் அதன்பின் யாழ் வைத்தீஸ்வரா
வித்தியாலயத்திலும் கணிதம், இரசாயனம், பௌதிக விஞ்ஞான பாடங்களைப் போதிப்பதில்
தலைசிறந்த ஆசிரியராகத் திகழ்ந்தார்.
1964ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் பாடப்புத்தகக் குழுவில் ஒருவராக நியமனம் பெற்று,
க.பொ.த. சாதாரண தர வகுப்பிற்கான இரசாயனப் பாட நூலினை தயாரிக்கும் பணியிலே
ஈடுபட்டார். அதன்பின் மன்னாரில் 1972 இல் விஞ்ஞானக்கல்வி அதிகாரியாக பதவி நியமனம்
பெற்று மன்னாரின் கல்வி வளர்ச்சியில் வரலாற்றுச் சாதனை படைத்தார் என்றே
கூறவேண்டும். மன்னார் மாவட்டத்தில் எந்தவோரு பாடசாலையிலும் க.பொ.த. விஞ்ஞானப் போதனை
எங்குமே ஆரம்பிக்கப்படாத நிலையில், அங்கு உயாதர விஞ்ஞான வகுப்புகளை ஆரம்பித்து
இலங்கையன் ஆற்றிய பணிகள் மன்னார் கல்வி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட
வேண்டியவை. மன்னார் மாவட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர் சங்கம் ஒன்றை நிறுவி மன்னாரில்
விஞ்ஞான அறிவை வளர்க்க இலங்கையன் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
1977ஆம் ஆண்டு கொழும்பு தெற்கு மாவட்டத்தில் விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகப் பதவி
நியமனம் பெற்று இந்த வட்டாரத்தின் கல்விப் பணியிலே மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
1980ஆம் ஆண்டில் நைஜீரியாவுக்கு விஞ்ஞான ஆசிரியராக பதவி பெற்று
1987ஆம் ஆண்டுவரை அங்கு பணியாற்றினார். 1983ஆம்ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இன
வன்முறைகளினிமித்தம் சொந்த
ஊருக்குத் திரும்பமுடியாத சூழ்நிலையில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். கனடாவிலும்
தனது நீண்ட ஆசிரிய அனுபவத்தின் பின்னணியில் வெஸ்ரன் தமிழ் சங்கத்தை நிறுவி
சிறுவர்களுக்கான சமய, தமிழ், நடன வகுப்புகளை நடத்துவதில்;. உற்சாகமாகப் பணி
புரிந்தார்.
கனடாவில் வெளியான செந்தமிழர், தமிழ்ஓசை, நான்காவது பரிமாணம், தமிழருவி, தாயகம்,
தமிழர் தகவல், முழக்கம், சுதந்திரன்,
உதயன், தேடல் ஆகிய சஞ்சிகைகளில் விஞ்ஞானக் கட்டுரைகளையும், தமிழ் மொழி சார்ந்த
கட்டுரைகளையும் எழுதி வந்தார். இவரது கல்விச் சேவைக்காக கனடாவின் முக்கிய
அமைப்புக்கள் இலங்கையனுக்கு உயர்ந்த விருதுகள் வழங்கி கௌரவித்தனர். பஞ்சமர் என்று
முத்திரை குத்தப்பட்ட ஒரு சமூகத்தில்தோன்றி உயர் கல்விபெற்று அந்த சமூகத்தின்
முன்னேற்றத்துக்கான அமைப்புக்களில் இலங்கையன்
இறுதிவரை அக்கறையோடு பங்குகொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம்
தாழ்த்தப்பட்ட சங்கம், வடமராட்சி சேவா சங்கம் ஆகிய அமைப்புக்களைத் தொடர்ந்து
சிறுபான்மைத் தமிழர் மகாசபை வேறூன்றி சாதியொழிப்பு இயக்கத்திற்காக பாடுபட்ட
எழுச்சிப் பாரம்பரியத்திற்கு இலங்கையனும் ஒரு முக்கிய பங்காளியாவார். கட்சி
அரசியலுக்கப்பால் சாதிய ஒழிப்பை கொண்டு வருவதில் இலங்கையன் நிதானமான பங்கை
வகித்திருக்கிறார். தமிழரசுக் கட்சி, கொம்யூனிஸ் கட்சிகள் போன்ற அரசியல் கட்சிகளின்
குறுக்கீடுகளினால் ஒடுக்கபட்ட சமூகத்தின் வலிமை குறைந்துகொண்டு போவதை இலங்கையன்
உணர்ந்தவராகக் காணப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வேட்கைகள் தனிப்பட்ட
அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அடக்கிவிடப்படுவதன் அபாயத்தை
உணர்ந்தவராகவும் இலங்கையன் காணப்பட்டார். இலங்கையன் எழுதிய ‘வாழ்வும்
வடுவும்’ என்ற வரலாற்று நூல் இலங்கையனின் வாழ்க்கை வரலாறு மட்டும் அல்லாமல்
யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்;தின் ஒரு வரலாறாக இனம் காணப்படுகின்றது.
பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் , உயர்ந்த ஆசிரியரின் மனோ பக்குவத்தோடும்
செயற்பட்ட ‘இலங்கையன்’ என்ற பெயர் ஈழத்து வரலாற்றில் என்றும் ஒளி
வீசிக்கொண்டிருக்கும்.
5.4.2009
navajothybaylon@hotmail.co.uk |