மும்பையில் மாபெரும் மனிதச்சங்கிலி
அறப்போராட்டம்
- புதியமாதவி, மும்பை -
தமிழகமெங்கும்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடப்பதை அறிகிறோம். இந்திப்
போராட்டத்தின் போது எழுந்த ஓர் எழுச்சியை ஏன் அதைவிட அதிகமான எழுச்சியை பொது
மக்களிடம் காணலாம். ஆனால் இந்த எழுச்சியை எப்படி அவரவர் சுயலாபங்களுக்காக
பயன்படுத்திக்கொள்வது என்பதில் தான் ஒவ்வொரு கட்சிகள், இயக்கங்கள் , தலைவர்கள்
நடத்தும் கோமாளித்தனங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
ஒருபக்கம் தனனைத் தமிழனத்தலைவராக அடையாளம் காட்டுவதில் பேருவகைக் கொண்டிருந்த
கலைஞரின் பொய்முகம் கிழிந்து தொங்கும் பரிதாபக்காட்சி.. இன்னொரு புறம் அம்மா.ஜெ.
கூடாரத்தில் இருந்து கொண்டே பேசும் வை..கோவின் வீரவசனங்கள், டில்லியில் சோனியா
அம்மையாருடன் அருகிலிருந்து உரையாடியதைப் பெருமையாகச் சொல்லிப் பூரித்துப் போகும்
மருத்துவரய்யா.. இதைவிடுத்து அய்யா.பழ.நெடுமாறன் தலைமையில் ஓரணி.. இப்படியாக
பழக்கப்பட்டுப்போன பேரணிகள், போராடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிகழ்வாக
அமைந்திருந்தது நேற்று 01/03/2009- ஞாயிறு பிற்பகல் 3 மணிமுதல் மாலை 6 மணிவரை
நடந்து முடிந்த மும்பைத் தமிழர்களின் மனிதச் சங்கிலிப் போராட்டம்.
"தமிழ்ச்சாதி" என்ற தலைப்பில் போராட்டத்திற்கான அழைப்பை முன்வைத்திருந்தார்கள்.
அதிலும் குறிப்பாக "இப்போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்த அரசியல் தலைவர்களின்
படங்களையோ அல்லது அரசியல் கட்சிகளின் கொடிகளையோ கொண்டுவரக்கூடாது "
"போராட்டத்தில் எந்த தனிமனிதரையோ அரசியல் கட்சிகளையோ எதிர்த்தோ பாராட்டியோ குரல்
எழுப்பக் கூடாது "
"இதை மறுப்பவர்கள் தயவு செய்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்"
என்ற வேண்டுகோளுடன் வெளிவந்த தமிழ்ச்சாதியின் துண்டறிக்கை பொதுமக்களிடம் மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றது. இயக்கம் சாராதா அரசியல் சார்பில்லாத பலர் குடும்பம் குடும்பமாக
கலந்து கொண்டு தங்கள் ஈழ ஆதரவையும் போர் எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டார்கள்.
மும்பையில் 1983ல் பெரியவர் வரதராசமுதலியார் அவர்கள் தலைமையில் தமிழர்ப்பேரவை
நடத்திய பேரணியில் 10 இலட்சம் தமிழர்கள் கலந்து கொண்டார்கள், மும்பை
ஃப்ளோராபவுண்டனில் நடந்தப் பேரணி அது. ஆசாத் மைதானம் வரை வந்து மும்பையிலிருக்கும்
இலங்கைத் தூதரகம் நோக்கிச் சென்று தங்கள் எதிர்ப்பை சிங்கள அரசுக்கு காட்டும்
வகையில் நடத்தப்பட்ட பேரணி அது. அந்தப் பேரணியிலும் நேற்று மும்பையில் நடந்த
மனிதச்சங்கிலி அறப்போராட்டத்திலும் இரண்டிலும் கலந்து கொண்ட பாண்டூப் திருவள்ளுவர்
மன்ற தலைவர் ப்ரைட் மேல்நிலைப் பள்ளி, அய்யா தேவதாசன் அவர்களிடம் இது குறித்து
கேட்ட போது அவர் சொன்னதாவது:
"அன்றைக்கு நடந்தப் பேரணி, கூட்டம் கூட்டமாக ரெயிலில் பயணம் செய்து ஒவ்வொரு
ஸ்டேஷனிலும் உரத்தக் குரலுடன் தலைநகரை நோக்கி நகர்ந்தது. ஆனால் வரதராசமுதலியாருடன்
நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். அந்தப் பேரணியில் கலந்து
கொண்டவர்களில் 25% ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தரக் கூடியவர்கள் என்றால் மீதி 75%
பெரியவர் வரதராச முதலியாரின் ஆள் பலம், அதிகார பலம் , பண பலம் கண்டு கூடியக்
கூட்டம். ஆனால் இன்று நடந்து முடிந்திருக்கும்
மனிதச்சங்கிலியில் எந்த ஒரு தனிநபரையும் நான் சொல்ல மாட்டேன். இதில் கலந்து
கொண்டவர்கள் அனைவரும் 100% ஈழம் தமிழர்களுக்காக கூடிய கூட்டம். இரண்டு
நிகழ்வுக்கும் சாட்சியாக நிற்கும் எனக்கு இந்த மாற்றமும் இந்த எழுச்சியும்
மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது."
மும்பை கிழக்கு விரைவுச்சாலை -(eastern express highway) வழிநெடுக மனிதர்கள்,
அதிலும் குறிப்பாகப் பெண்கள், பள்ளி குழந்தைகளின் வரிசை.. மும்பை கிங்சர்க்கிளில்
ஆரம்பித்து மாதுங்கா, சயான் வழியாக செம்பூர் சென்று நீள்வட்டப் பாதையில் திரும்பி
மீண்டும் சயான் கிழக்கு விரைவுச்சாலையைத் தொட்டது மனிதச்சங்கிலி. இடையில்
காட்கோபர், விக்ரோலி இரண்டு இடத்திலும் சங்கிலி தொடர் விடுபட்டிருந்தது.
மனிதச்சங்கிலியின் சில காட்சிகள் :
நீண்ட கறுப்பு துணியில் வெள்ளை எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களுடன் ஒரு
பகுதி, ஈழத்தில் தமிழர்கள் படும் இன்னலையும் இலங்கை சிங்கள இராணுவம் தமிழ் மக்கள்
மீது கட்டவழித்து விட்டிருக்கும் அராஜகச்செயல்கள், வன்கொடுமைகளையும் அப்படியே
சித்தரிக்கும் காட்சிகளுடன் ஓரணி, இரு சக்கரவாகனத்தில் பதாகைகளுடன் தங்கள்
எதிர்ப்பைக் காட்டும் வகையில் கிழக்கு விரைவுச்சாலையில் வலம் வந்த இளைஞர்கள்,
கொதிக்கும் வெயிலில் கலையாமல் கட்டுக்கோப்பாக 3 மணி நேரம் நின்று போக்குவரத்துக்கு
எவ்வித இடையூறுமில்லாமல் அறப்போராட்டம் நடத்திய
பொதுமக்களை மும்பை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறது. தமிழ்ச்சங்கங்கள்,
அரசியல் கட்சி தொண்டர்கள், எழுத்தாளர்கள், சாதிச்சங்கங்கள், ரசிகர் மன்றங்கள்,
இயக்கங்கள் என்று அவரவருக்கான மேடைகளில் கூட்டங்கள் மட்டுமே சந்தித்திருந்த
பிரபலங்களும் மனிதச்சங்கிலியில் முதல் முறையாக தமிழ்ச்சாதி என்ற ஒற்றை
அடையாளத்துடன் நின்ற முதல் நிகழ்வாகவே மும்பை இந்நிகழ்வை பதிவு செய்திருக்கிறது.
போராட்ட ஏற்பாடுகளை கவனித்த விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் இளம்தலைமுறைக்கும்
தாமாகவே முன்வந்து குடிநீர், மோர், குளிர்பானங்களை வழங்கிய முகம் தெரியாத
விளம்பரம் வேண்டாத பெரிய மனிதர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
இனவெறி அரசே தமிழ் மக்கள் மீது தொடரும் போரை நிறுத்து! உலக நாடுகளே.. ...
தமிழினத்தை காப்பாற்றுங்கள்!
என்று மும்பையிலிருந்து அறச்சினத்துடன் ஓர் அறப்போராட்டமாகவே நடந்த மனிதச்சங்கிலி
கோஷங்களை விட எங்கள் மவுனம் மிகவும் வலிமையானது என்பதை இந்திய அரசுக்கு
உணர்த்தியிருக்கிறது.
puthiyamaadhavi@hotmail.com
|