| 
வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் 
அடிகளாசிரியர்!   
- முனைவர் மு.இளங்கோவன் -
 
  
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் 
தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,
வரலாறு,மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த 
பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள்
எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.
 அவ்வாறு கற்ற நூல்களுள் "தண்ணிழல்" என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.அதனை இயற்றியவர் 
பேராசிரியர் அடிகளாசிரியர்.அவர்களின் 
திருமகனார் அ.சிவபெருமான் அவர்கள் வழியாக அந்நூலும்,அந்நூலாசிரியரான அடிகளாசிரியர் 
அவர்களும் அறிமுகமானார்கள்.அந்நூல்
மரபு இலக்கணத்தில் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றை ஆற்றொழுக்காக நவிலும் 
நூல்.அதனைக் கற்று மகிழத் தமிழில் நல்ல 
பயிற்சியுடையவர்களுக்கே இயலும்.
 
 அந்நாளில் மரபுப்பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றிருந்த யான் அந்நூல் பற்றிப் 
பின்வரும் மதிப்புரையைக் கட்டளைக் கலித்துறையில் 
யாத்து திரு.அடிகளாசிரியர் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன்.அப்பாடல்கள் வருமாறு :
 
 அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்!
 
 வருந்திய நெஞ்சுடன் வண்டமிழ் காக்கச் சிலவினைகள்
 மருந்தெனச் செய்து மயங்கி உழன்று மடிகையிலே
 அருந்தமிழ் வல்ல அடிகளின் தண்ணிழல் நூலமுதம்
 பொருந்தியென் நெஞ்சைப் புலவிருந்(து) ஊட்டிப் புதுக்கியதே!
 
 கழக இலக்கியம் கற்ற அடிகள் புலமைநலம்
 அழகிய நூலினுள் ஆர்ந்து விளங்கி அழகுவிடப்
 பழகு குழந்தை படிப்பதாய்ப் பன்முறை வாய்விடுத்தே
 ஒழுகிய ஓசையில் ஓங்கி ஒலித்தேன்! உவகையுற்றே!
 
 கலிப்பா வகையைக் கண்டு நடுங்கும் புலவரிடைச்
 சலிப்பே எழாஅது செந்தமிழ் வண்ணம் சிறந்திலங்கப்
 புலிப்பால் நிகர்த்த பெருந்தமிழ்ச் சீரைப் புகன்றதுபோல்
 வலிப்பாய் எழுதியும் வண்டமிழ் போற்றியும் வாழுகவே!
 
 வாழும் புலவர் வளமனை வாங்கி,வதிகையிலே
 கூழை உணவினில் கூட்டி மிகவுண்டு,கூர்வறுமை
 ஆழும் அறிஞரே! ஆக்கப் பணிகள் அணிபெறுமேல்
 வீழும் புரட்டுகள்! வெண்ணிலா என்று விளங்குவையே!
 
 எழுதிக் குவித்த எனதின் புலவ! அடிகளரே!
 புழுதியும் குப்பையும் பொத்தகப் பேரில் புறம்வருதல்
 கழுதைகள் சில்ல கடித்தே குதப்பிக் கருத்துரைத்தல்
 இழுவைச் செயலாய் இருக்க,இதனில் விலகினரே!
 
 விருத்த வகையில் விரிதமிழ் யாப்பை விதந்துரைத்துத்
 திருத்திநற் செய்தியைத் தீட்டினீர் தேன்போல் செழுந்தமிழின்
 பருத்த பலநூல் பயின்றீர்! பெரும்புலம் நூல்வடிவில்
 துருத்தி வெளிவரும் தூய்மை தொழுது மகிழ்ந்திடவே!
 
 புறநூல் பயிலப் புகுவோர் நுமதரும் தண்ணிழலைத்
 திறமாய்ப் பயின்று திகழ்தமிழ்க் கோட்டை அடைவரெனில்
 மறக்களம் கண்ட மகிழ்வை அடைவரே! மாற்றறியா
 அறப்பா அமைத்த அறிஞ! அடைக பெரும்புகழே!
 
 காதல் இயம்பக் கனித்தமிழ் வாழும் எனமுழங்கி
 நோதல் உறும்புல மன்றில் நுமைப்போல் புறமதனை
 ஈதலைச் செய்தவர் யார்நவில்? எம்போல் இளையவரோ
 மூதர் அவையின் முனைமுகம் தங்க அருளுகவே!
 
 பொருளும் உவமையும் பூட்டிப் புலவயல் சீருறவே
 அருளால் உழுத அடிகளே! அன்னைத் தமிழினத்தார்
 தெருளா(து) உமதடி தெய்வப் பொருளதாய்த் திகழ்தலையின்
 சுருள்முடி தாங்கிச் சுமக்க இனியும் துலங்குவரே!
 
 மீன்கள் உலவும் மிளிர்வயல் தன்னில் மருட்டிசில
 தோன்றி இருப்பின் துணைவிழி காண்குறும்! ஆங்கதுபோல்
 ஈன்றநற் பாட்டில் எதுகையின் மோனையின் ஈட்டமெண்ணி
 ஊன்று வடசொல் உலவுதல் உள்ளம் உணருவதே!
 
 மட்டுரை என்று மனந்தான் மகிழ்ந்தே உவப்புறநீர்
 கட்டுரைப் பாங்கில் கதையை விளக்கினீர்! கண்டுவந்தேன்!
 வெட்டுரை போன்று விரிதமிழ்க் கல்லில் பொறித்திடுநும்
 அட்டியில் நற்கை அகத்தில் தொழுதேன்! அடிபணிந்தே!
 
 (அடிகளாசிரியரின் தண்ணிழல் நூலுக்கு 04.06.1993 இல் யான் எழுதிய மதிப்புரைப்பாடல்)
 
 இப்பாடல்கள் என் அரங்கேறும் சிலம்புகள் (2002)  நூலில் இடம்பெற்றதைத் தவிர வேறு எந்த 
முன்னேற்றமான செய்தியும் இல்லாது 
அடிகளாசிரியர் பற்றி நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தேன்.
 
 திருச்சிராப்பள்ளியில் வதியும் திரு.அடிகளாசிரியர் அவர்களின் மாணவர் புலவர் தமிழகன் 
ஐயா அவர்கள் சிலநாள் அடிகளாசிரியர் 
மாண்பைச் சொல்லக் கேட்டுள்ளேன்.பல நிறுவனங்களில் படிப்பு,ஆய்வு,பணி எனச் 
சுழன்றுகொண்டிருந்த என் வாழ்வில் அண்மைக்
காலமாக அடிகளாசிரியரைக் கண்டு வணங்கும் வேட்கை மேம்பட்டு நின்றது.
 
 சின்னசேலம் அருகில் உள்ள ஊரில் பிறந்து திருவண்ணாமலையில் மின்வாரியத்தில் 
பொறியாளராகப் பணிபுரியும் நண்பர் அ.சிவராமன்
அவர்களின் தொடர்பு அமைந்த பொழுது, அவர் ஊருக்கு அருகில்தான் அடிகளாசிரியரின் ஊர் 
அமைந்திருப்பதாகவும்,அவரைக் காணத் தம் 
நண்பர் வழி உதவுமுடியும் எனவும் உறுதியுரைத்தார்.இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி 
அடிகளாசிரியரைக் கண்டுவிடவேண்டும் என்ற 
முடிவுக்கு வந்தேன்.முதல்நாள் இரவு திட்டமிட்டு 09.08.2008 வைகறையில் துயிலெழுந்து, 
புதுச்சேரி-விழுப்புரம்-கல்லக்குறிச்சி-
வழியாகச் சின்னசேலம் சென்றேன்.
 
 முன்பே திடமிட்டபடி மின்துறைப் பொறியாளர் வேலுமணி அவர்கள் எனக்காக உந்து வண்டியுடன் 
சின்னசேலம் பேருந்து நிலையத்தில் 
காத்திருந்தார்.காலை பத்து மணிக்குதான் என்னால் அங்குச் செல்லமுடிந்தது.பேருந்து 
மெதுவாகச் சென்றதால் காலத் தாழ்ச்சி.
 
 சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் கூகையூர் செல்லும் கரிச்சாலையில் 
மகிழ்ச்சியாகப் பயணம் செய்தோம். திருச்சிராப்பள்ளி
செல்லும் சாலை என்பதால் சாலை வசதி நன்கு உள்ளது என்றார் வேலுமணி.மக்கள் வாழ்வதற்கு 
ஏற்ற இடமாக அப்பாதையின் 
இருமருங்கும் இருப்பதால் நல்ல விலைக்கு நிலம் விற்பத்தாகவும் சொன்னார்.வீடுகள் 
அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலங்களில் 
இருந்தது.சுற்றுச்சுவர் இல்லை.படல் இல்லை.காப்பாளர் இல்லை.இயற்கை வாழ்க்கை 
நிகழ்த்தும் அம்மக்கள் கொடுத்து
வைத்தவர்கள்தான்.கிணற்றுப் பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மட்டும் இருக்கும் 
அப்பகுதியில் புதியஅரிசி ஆலைகள் மிகுதி.நெல் 
அறைக்க ஏற்ற பதமான சூழல் அங்கு உள்ளது.
 
 சோளம்,கரும்பு,மஞ்சள்,கருணைக்கிழங்கு,வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சின்ன சேலம் 
பகுதியில் அதிகம் பயிரிடப்படுகின்றன.இங்கு 
விளையும் மஞ்சளுக்கு ஈரோட்டுச் சந்தையில் நல்ல விலை கிடைக்குமாம்.மஞ்சள் 
அறுவடை,சோளம் அறுவடை பற்றிய செய்திகளை
நண்பர் வேலுமணி அவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்.போகும் பொழுது வழியில் ஒரு 
கொல்லையில் சோளத்தட்டைகள் உள்ள 
வயலில் இறங்கி ஒரு உந்து ஏரோட்டத் தொங்கியது.அங்கிருந்த தட்டைகள் கண்ணுக்குத் 
தெரியாதபடி மண்ணுடன் மண்ணாக 
மக்கச்செய்யும்படி, நொய்மணலாக அந்த வண்டி மாற்றியது.இதனை மீண்டும் திரும்பி 
வரும்பொழுது கண்டேன்.
 
 இதமான காற்றை உள்வாங்கிக்கொண்டே 12 கல் தொலைவில் இருந்த கூகையூர் என்னும் ஊரை 
அடைந்தோம்.அவ்வூர் குகையூர் எனவும் <
அழைக்கப்படும்.வெள்ளாற்றங்கரையின் வடகரையில் அமைதியான பண்புடைய மக்கள் காணப்படும் 
அவ்வூரில் இறங்கி,அடிகளாசிரியர் 
வீடு எது? என வினவினேன்.
 
 அடிகளாசிரியர் வாழும் இல்லம்
 
  
சாலையை ஒட்டியிருந்த இரண்டாவது வீட்டை அடையாளம் கண்டேன்.அமைதியாக ஒரு கோயில் உள்ளே 
நுழைவதுபோல் மெதுவாகச் 
சென்றேன்.கூரை வீடு என்றாலும் நெருக்கடி இல்லாமல் அகன்று இருந்து.வீட்டின் உள்ளே 
திண்ணை போன்ற பகுதியில் அகவை முதிர்ந்த 
தோற்றத்துடன் துறவி போலும் மழிக்கப்படாத முகத்துடன் அகவை முதிர்ந்த அறிஞர் 
உட்கார்ந்திருந்தார்.வணக்கம் தெரிவித்து அவர்களின் 
தமிழ்த் திருவடிகளைப் பணிவுடன் தொட்டு வணங்கினேன். ஆம். பதினைந்து ஆண்டுகளாக நான் 
காண நினைத்த வடிவம் 
அஃது.பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்கள்தான் நான் கண்டு வணங்கிய வடிவம்.99 
அகவையாகும் நிலையிலும் நல்ல பார்வை 
நலத்துடனும் நினைவாற்றலுடன் காணப்பட்டார்.அவருக்குக் காது கேட்காதோ என நான் 
நினைத்துக் கத்திப்பேச முயன்ற பொழுதெல்லாம் 
அதற்குத் தேவை இல்லாமல் போனது.
 நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.புதுச்சேரியிலிருந்து வந்துள்ளமையைச் சொன்னதும் 
அவர் மகன் புதுச்சேரியில் இருப்பதைச்
சொன்னார்கள்.நான் வாழும் வீட்டின் அருகில்தான் அவர் குடியிருப்பதை 
உணர்ந்துகொண்டேன். அவர் பற்றி சொல்லி அவருடன்>
தொடர்புகொள்ளும்படி சொன்னார்கள்.
 
 வழக்கமாகக் கால் மணி நேரம் மட்டும் அமர்ந்து உரையாடிவிட்டு ஓய்வெடுக்கும்படியான 
தளர்ந்த உடல்நிலை கொண்ட பேராசிரியர் 
அடிகளாசிரியர் ஒரு மணிநேரம் என்னுடன் பேசியவண்ணம் இருந்தார். அவர் பேச்சைக் கால் 
மணி நேரம் அளவு என் நாடாப்பெட்டியில் 
பதிந்துகொண்டேன்.பேச்சு குழறாமல் இருந்தது.ஆனால் முதுமை கனிந்திருந்ததை உணர 
முடிந்தது.
 
 அவர் இளமைக்காலம் தொடங்கி தமிழ்ப் பேராசிரியராக, ஆய்வறிஞராக விளங்கிய அவர் தம் 
வாழ்க்கை வரலாற்றைப் பதினைந்து 
ஆண்டுகளுக்கு முன்பே யான் அவர்தம் இளையமகன் முனைவர்.அ.சிவபெருமான்(அண்ணாமலைப் 
பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர்) 
அவர்கள் வழியாக ஓரளவு அறிந்தவன் எனினும் ஐயா வழியாக, அவர் பற்றிய சில வாழ்க்கை 
நிகழ்வுகளைக் கேட்டுப்பதிவு
செய்துகொண்டேன். அவரைப்பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டேன்.அனைத்திற்கும் 
பேராசிரியர் அவர்கள் எனக்கு அனுமதி தந்து 
ஒத்துழைப்பு நல்கினார்கள்.
 
 இடையிடையே அன்பர்கள் சிலர் வந்து அடிகளாரிடம் திருநீறு பெற்று வாழ்த்துப் பெற்றுச் 
சென்றார்கள்.அடிகளாசிரியர் தமிழ்க்கடல்
மறைமலையடிகளாரிடத்து நிறைந்த ஈடுபாடு கொண்டவர்.அவர் கொள்கையில் ஈர்ப்புண்டு தம் 
பெயரை அடிகளாசிரியர் என
அமைத்துக்கொண்டாராம்.மறைமலைஅடிகளார் மயிலம் கல்லூரிக்கு வந்தபொழுது அடிகளாரை 
வரவேற்று,
 
 எத்தனையோ புலவர்கள்முன்பு இருந்தார்கள் என்றாலும் இவர்கள் எல்லாம்
 அத்தனையும் தமிழ்த்தாயை ஆரியத்தின் அடிச்சி என ஆக்கி வைத்தார்!
 உத்தியினில் மிகச்சிறந்த உரவோனே! நீயுதிக்க ஒருதா னாகி
 முத்தனைய தமிழ்சிறக்கும் வகைகண்டாய் நீவாழி! முன்பி னோடே!
 
 என்று பாடியதை அடிகளாசிரியர் நினைவிலிருந்து சொன்னமை கண்டு வியப்படைந்தேன்.இப்பாடல் 
கேட்ட அடிகளார் தமக்கு இத்தகுதிகள் 
உண்டு என ஏற்றுக்கொண்டாராம்.
 
 யார் இந்த அடிகளாசிரியர்?
 
 பேராசிரியர் அடிகளாசிரியர் என்றால் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு 
அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்.தொல்காப்பியப் பதிப்பில் 
இவருக்கு இணையாக ஒருவரைக் காட்டமுடியதபடி ஆழமான,விளக்கமான பதிப்பை வழங்கியவர். தம் 
ஆராய்ச்சியால் உழைத்து 
உருவாக்கிய இலக்கண நூல்களைப் பிறர் பதிப்பிக்க முன்வராதபொழுது தாமே அச்சிட்டு 
வெளியிட்டவர்.விற்பவரும் வாங்குவோரும் 
இன்மையால் ஊர் ஊராக விற்கச் சென்று விற்பனை ஆகாமல் பல்வேறு பொருள் தட்டுப்பாடுகளால் 
தளர்வுற்றவர்.
 
 கடைசிவரை கூரை வீட்டில் வாழும்படி இவர் வறுமையில் வாட நேர்ந்தது. முத்தமிழ்க் 
காவலர்கள் கூட இவர் தொல்காப்பியத்தை 
விலைக்கு வாங்காமல் அலைய வைத்தமை இவர் வாழ்வில் காணக் கிடைக்கும் 
செய்திகளாகும்.கும்பகோணத்தில் இருந்த வணிகர்
ஒருவர் வெள்ளிக்கிழமை எனத் தம் பணப்பெட்டியைத் திறக்காதபொழுது அவருக்கு இலவயமாக ஒரு 
தொல்காப்பியப் பதிப்பை 
அன்பளிப்பாக வழங்கிய கொடையுள்ளம் கொண்டவர் நம் அடிகளாசிரியர்.
 
 தொல்காப்பியம்(1969)
 
 தமிழ்க் கல்வெட்டுகள்,சோதிடம் பற்றிய பேரறிவு பெற்றவர் இவர்.தொல்காப்பியம் 
எழுத்ததிகாரம் (இளம்பூரணம்), சொல்லதிகாரம் 
(சேனாவரையம்), பொருளதிகாரம்(செய்யுளியல்-பேராசிரியம்),தொல்காப்பியம் 
பொருளதிகாரம்(ஏனைய இயல்கள்) எனத் தொல்காப்பியப்
பதிப்புகளில் ஈடுபட்டு இவர் வெளிப்படுத்தியுள்ள பதிப்பு நூல்கள் உலகத் தரத்தின.பல 
பாடவேறுபாடுகளை நுட்பமாகக் 
கண்டவர்கள்,புதுப்புதுப் பொருள்களைக் கண்டு சொன்னவர்.யோகக்கலையில் வல்லவர்.பல 
நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.தஞ்சாவூர் 
சரசுவதி மகாலுக்காகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.பல நூல்கள் இன்னும் 
பதிப்பிக்கப்பெறாமல் உள்ளன.ஏறத்தாழ அறுபது நூல்கள் 
இவரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் தொல்காப்பியப் பதிப்புகளும் சமயநூல் 
பதிப்புகளும் குறிப்பிடத்தகுந்தன.
 
 அடிகளாசிரியரின் தமிழ் வாழ்க்கை
 
 அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள 
கூகையூரில் பிறந்தவர்(1910 சாதாரண 
ஆண்டு,சித்திரைத் திங்கள் ஐந்தாம் நாள்,ஞாயிற்றுக்கிழமை).இவர் தம் பெற்றோர் 
பெரியசாமி ஐயர்(பார்ப்பனர்களைக் குறிக்கும் ஐயர் 
இல்லை),குங்கும அம்மாள்.வீரசைவ மரபினர்.அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி 
என்பதாகும்.மறைமலையடிகளார்
தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என 
அமைத்துக்கொண்டார்.
 
 அடிகளாசிரியரின் ஏழாம் அகவையில் தந்தையார் இயற்கை எய்தினார்.எனவே அடிகளாசிரியர் தம் 
தாய்மாமனான பெரம்பலூருக்கு 
அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த 
கு.சுப்பிரமணியதேவர்,கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் 
வளர்ந்தார். தாய்மாமன்கள் மருத்துவம்,சோதிடம் வல்லவர்கள்.அவர்கள் வீட்டில் தங்கித் 
தமிழும் வடமொழியும் பயின்றார்.
 
 பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக 
அறிந்தவர்.முசிறியில் வாழ்ந்த அரசினர் உயர்நிலைப் 
பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய வீ.குமார வீரையர் என்பவரிடம் நன்னூல் 
காண்டிகையுரையைப் பாடம் கேட்டார்.1937 இல் இவர் 
தனித்தேர்வராகத் தேர்வெழுதி 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் 
பட்டம் பெற்றார்.
 
 14.07.1938 இல் மயிலம் திருமடத்தில் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் 
இவர் முதல் ஆசிரியராக அமர்த்தம் 
பெற்றார்.அங்கு விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.அதுபொழுது 
மறைமலையடிகளார்,நா.மு.வேங்கடசாமி 
நாட்டார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகியதாக அறியமுடிகிறது.
 
 அடிகளாசிரியர் அவர்களின் துணைவியார் பெயர் சம்பத்து(அகவை 80).கூகையூரில் 
அடிகளாசிரியருடன் வாழ்ந்து வருகிறார்.இவர்களுக்கு 
எட்டு மழலைச்செல்வங்கள் வாய்த்தன.அவர்களுள் ஆண்மக்கள் 
நால்வர்.1.அ.பேராசிரியர்(மறைவு),2. இளங்கோவன்,3. 
அ.நச்சினார்க்கினியன்,4.அ.சிவபெருமான்.பெண்மக்கள் நால்வர்.1.திருநாவுக்கரசி,2. 
குமுத வல்லி,
3.செந்தாமரை,4.சிவா(மறைவு).அடிகளாசிரியர் வீரசைவ மரபினர் என்பதால் இறையீடுபாடு 
கொண்டு விளங்குகிறார்கள்.
 
 கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இவருக்கு அணுக்கமான நட்பிற்கு உரியவர்கள்.தந்தை 
பெரியாரை உயர்வாக மதிப்பவர்.பிறர் மனம் 
புண்படாதபடி பழகும் பாங்கினர்.எளிய வாழ்க்கை, தூய வாழ்க்கை 
இவருடையது.இவருக்குப்பணிவிடை செய்யும் அன்பர் அடிகளாசிரியரை 
மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொள்கிறார்.கிழமைதோறும் மருத்துவர் ஒருவர் வந்து 
அடிகளாசிரியர் உடல்நிலையை ஆய்வு செய்து
அறிவுரை சொல்கின்றார்.இம்மருத்துவர் அடிகளாசிரியர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர் 
என்பதால் தம் மருத்துவ ஆய்வைத் 
தொழிலாகச் செய்யாமல் தன் குருவிற்குச்செய்யும் பணிவிடையாகச் செய்வதை அறியமுடிந்தது.
 
 03.07.1950 முதல் 03.07.1970 வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் 
பேராசிரியராகப் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை 
உருவாக்கினார்.இவர் வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்கள் விரும்பிப் 
பாடம்கேட்பது உண்டாம்.கடுஞ்சொல்
சொல்லாதவர்.இவருக்குச் சினம் வருவதே இல்லையாம்.இவர்மேல் மாணவர்களுக்கு மிகப்பெரிய 
மதிப்பு இருந்தது. நாற்பதாண்டுகளுக்கு 
முன்பு இவரிடம் படித்த மாணவர்கள் கூட இப்பொழுதும் இவரை வீடு தேடி வந்து பார்த்துச் 
செல்கின்றனர் என்றால் இவரின் பெருமை
 விளங்கும்.
 
 கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த 
வகுப்புகளை இலவயமாக 
நடத்தியுள்ளார்.இதில் பல மாணவர்கள் கற்றுள்ளனர்.இங்குப் பணிபுரியும்பொழுது பல தமிழ் 
நூல்களைப் பதிப்பிக்கும் பணியில்
ஈடுபட்டார்.சரசுவதிமகால் நூலகம் இதில் இவரைப் பயன்படுத்திக் கொண்டது.
 
 1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப்(1977) 
பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.
 
 20.01.1982 முதல் 01.10.1985 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் 
சிறப்புநிலை இணைப்பேராசிரியராக அமர்ந்து
தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார்.மூப்பின் காரணமாகத் தாமே 
அப்பணியிலிருந்து விலகி வந்தாலும், வீட்டிலிருந்தபடியே 
அப்பணியை நிறைவுசெய்து வழங்கினார்.அவ்வகையில் தொல்காப்பியம் செய்யுளியல்,பிற 
இயல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் 
வெளியிட்டது.இவர்தம் அருமை உணர்ந்த மாணவர்கள் பலர் இவரை வந்து காண்பதும் உரையாடி 
மகிழ்வதுமாக உள்ளனர்.அதிசயப் 
பிறவியாக எந்தநோய் நொடியும் இன்றி, கூரைவீட்டில் வாழ்ந்துவரும் தமிழறிஞரை வணங்கி 
மகிழ்ந்த நினைவுகளுடன் வெள்ளாற்றங் 
கரையில் இருந்து கோயில்களையும் இயற்கை அழகையும் கண்டு மகிழ்ந்த மன நிறைவுடன் 
புதுச்சேரிக்குப் பேருந்தேறினேன்.
 
 அடிகளாசிரியர் தமிழுலகிற்கு வழங்கிய தமிழ்க்கொடை
 
 1.அருணகிரி அந்தாதி(1967) சரசுவதி மகால் வெளியீடு.
 2.மருதூரந்தாதி உரை(1968)
 3.காலச்சக்கரம் 1969,79(சோதிடம்)
 4.வராகர் ஓரா சாத்திரம் 1970,78,90
 5.சிவஞானதீபம் உரை 1970
 6.சிவப்பிரகாச விகாசம் 1977
 7.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உரை 1938
 8.சேக்கிழார் பிள்ளைத்தமிழ் உரை 1967
 9.தமிழகக் கல்வெட்டு விளக்கவுரை 1967(மு.கோவிந்தராசனாருடன்)
 10.திருவலஞ்சுழி தேவாரப்பாடல்கள் உரை 1958
 11.திருவாசகக்கோயில் திருப்பதிகம் உரை 1956
 12.சிவபுராணச் சிற்றுரை 1986,99
 13.சதமணிமாலை மூலமும் உரையும் 1990
 14.சித்தாந்த சிகாமணி அங்கத் தலத்திரட்டு உரை 1991
 15.சிவஞானபால தேசிகர் திருப்பள்ளி எழுச்சி உரை 1991
 16.குதம்பைச்சித்தர் பாடலும் உரையும் 1999
 17இட்டலிங்க அபிடேகமாலை மூலமும் உரையும் 2001
 18.சசிவன்ன போதம் மூலமும் உரையும் 2002
 19.பஞ்சதிகார விளக்கம் மூலமும் உரையும் 2003
 
 பதிப்பு நூல்கள்
 
 20.வீரசைவப் பிரமாணம் 1936
 21.சதமணிமாலை 1938
 22.சிவப்பிரகாச விகாசம் 1939
 23.காமநாதர் கோவை 1957
 24.மேன்மைப் பதிகம் 1957
 25.சதுர்லிங்க தசகோத்திர சதகம் 1958
 
 ஆராய்ச்சி நூல்கள்
 
 26.தொல்காப்பியம்- எழுத்தத்திகாரம்-இளம்பூரணம் அரிய ஆராய்ச்சிப்பதிப்பு 1966
 27.ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம்(செ.ப.)
 28.தமிழ் இலக்கண இலக்கியங்களில் சைவசித்தாந்தம்,1978
 29.தொல்காப்பியம்-சொல்-இளம்பூரணம் த.ப. 1990
 30தொல்காப்பியம்-பொருள்-செய்யுளியல் த.ப.1985
 31.தொல்காப்பியம்-பொருள்-எட்டு இயல்கள் (அச்சில்)
 
 படைப்பிலக்கிய நூல்கள்
 
 32.பிள்ளைப்பாட்டு 1945
 33.திரு அரசிலிக்காதை 1948
 34.குழந்தை இலக்கியம் 1963
 35.சான்றாண்மை 1964-1975
 
 சான்றாண்மை (1964)
 
 36.சென்னிமலை முருகன் தோத்திரம் 1980
 37.அரசியல் இயக்கம் 1981
 38.பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் 1983
 39.அருள்மிகு மாரியம்மன் திருப்பதிகம் 1982
 40.உளத்தூய்மை,1984,1994
 41.தண்ணிழல் 1990
 42.மறவர் நத்தக் குன்றமரும் திருமுருகன் 1993
 43.தொழிலியல் 1993
 44.மெய்பொருட்காதை
 45.தமிழ் மாண்பும் தமிழ்த்தொண்டும் 1996
 46.ஒண்பான்கோள் வணக்கப்பாடல்கள் 1993
 47. சிறுவர் இலக்கியம்
 
 சிறுவர் இலக்கியம்
 
 உரைநடை
 
 48.எங்களூர்
 49.தொடக்கப்பள்ளி - நாடகம்
 50.வீரசைவ சிவபூசாவிதி 1949
 51.விலையேற்றமும் வாழும் வழியும் 1984
 52.திருமூலரும் பேருரையும் 1998
 53.காயத்துள் நின்ற கடவுள்,1999
 54.திருவாசக அநுபூதி 2000
 55.கீதையின் அறிவுப்பொருள் 2000
 56.திருமந்திர உணர்வு 2001
 57.தொல்காப்பியச் செய்யுளியல்-உரைநடை (அச்சில்)
 58,திருமந்திரத்தில் எட்டாம் திரும்முறை,2005
 
 வெளிவர வேண்டிய நூல்கள்
 
 1.கலித்தொகை உரை (குறிஞ்சிக்கலி)
 2.பிரபுலிங்கலீலை
 3.அடிகளாசிரியர் சமுதாயப்பாடல்கள்
 4.அடிகளாசிரியரின் இலக்கணக் கட்டுரைகள்
 5.அடிகளாசிரியரின் இலக்கியக் கட்டுரைகள்
 6.திருக்குறள் உரை
 7.முப்பால் உரைநடை
 8.சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம் மூலமும் உரையும்
 
 பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் முகவரி
 
 பேராசிரியர் திரு.அடிகளாசிரியர்
 குகையூர்-அஞ்சல்
 நயினார் பாளையம்-வழி
 கல்லக்குறிச்சி-வட்டம்
 விழுப்புரம் மாவட்டம்
 6006 306
 
 பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்களின் திருமகனார்:
 
 முனைவர் அ.சிவபெருமான்
 தமிழ் இணைப்பேராசிரியர்.
 அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
 அண்ணாமலைநகர்,சிதம்பரம்.
 செல்பேசி: 9443099936
 
 * கட்டுரை,படங்களை எடுத்தாள விரும்புபவர்கள் இத்தள முகவரி 
குறிப்பிடுவதுடன்,இணைப்பும் வழங்க வேண்டுகிறேன்.
 
 muelangovan@gmail.com
 http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_11.html
 |