நீர்வை பொன்னையன்: எண்பது வயதிலும் மனிதநேய எழுத்துப் பணி
துறக்காதவர் சாகித்தியப் பரிசு கிடைக்காத சிறந்த மூத்த படைப்பாளி
எம்கே.முருகானந்தன்
எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள்? தமது ஆத்ம திருப்திக்காக
எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தாங்கள் கொண்ட இலட்சியத்தை
மக்களிடையே
ரப்ப வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். சமூகத்தில்
தனது அடையாளத்தை பதிக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும்
இருக்கிறார்கள். எல்லோரும் எழுதுகிறார்களே நானும் முயன்று பார்க்கலாம்
என முயற்சிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பலரும் இவ்வாறான
எண்ணத்துடன் எழுத்துத்துறைக்குள் நுழைகிறார்கள். ஆனால் கால வெள்ளத்தில்
பொறுப்புணர்வு அதிகரித்து, சமூக அக்கறையும் மேலோங்க அவர்களது பார்வை
விரிவடைகிறது.
‘நாம் ஏன் எழுதுகிறோம்’ என்று தனது எழுத்துலகப் பாதையை வெளியுலகிற்கு
துல்லியமாக வெளிச்சம்போட்டுக் காட்டி எழுதுபவர்கள் ஒரு
சிலராகத்தான் இருக்க முடியும். உள்ளத்தில் கள்ளமில்லாத
படைப்பாளியால்தான் அவ்வாறு எழுத முடியும்.
அண்மையில் 80 வயதை எட்டிய ஒருவர் தனது இளமைப் பருவம் முதல் கடந்த
சுமார் 5 தசாப்தங்களாக கொள்கைப் பிடிப்போடு சிறுகதைகளைப்
படைத்து வருகிறார். கலைத்துவமாகவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக
சிறப்பாகவும் எழுதி வருகிறார். அடக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும்
அவரது
படைப்புகள் குரல் கொடுக்கின்றன. முற்போக்கு இலக்கியத்தில் அவருக்கெனத்
தனியிடம் உண்டு. இலங்கையின் பெரும்பாலான பத்திரிகைகள் அவரது
படைப்புகளை விருப்போடு பிரசுரிக்கின்றன. வாசகர் மட்டத்திலும்
எழுத்தாளர் மத்தியிலும் மதிக்கப்படுபவர். ஆயினும் இன்றுவரை அவருக்கு
இலங்கைத் தேசிய சாஹித்தியப் பரிசு கிடைக்கவில்லை.
இவரது முதல் சிறுகதைத் தொகுதி 1961 ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதியாக
அவ்வாண்டின் நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் ‘சிறுகதை
என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க
வேண்டியது அவசியமில்லை’ எனத் தடுத்துவிட்டதாக தெரிகிறது.
அந்த ஒரே ஒரு வருடம் மட்டும் சிறுகதைக்கென சாஹித்தியப் பரிசு
வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது. இது ஆச்சரியமான
செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு
விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன, தனிப்பட உள்நோக்கம் கொண்ட
செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
அவர் பரிசுகளைத் தேடி ஒருபோதும் ஓடியதில்லை. முற் கூறிய சாஹித்திய
மண்டலம் உட்பட எந்தப் போட்டிக்கும் தனது நூலை அனுப்பியதில்லை.
‘ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்தே வரவேண்டும்.
பாரதிக்கும் கார்க்கிக்கும் யார் பரிசு கொடுத்தார்கள்’ எனக் கூறி
போட்டிகளையும் பரிசுகளையும் நிராகிரிக்கிறார் அவர். இருந்தபோதும்;
கொழும்பு பல்கலைக் கழகம் 1998 லும், போராதனைப் பல்கலைக்கழகம்
2009லும் அவரது படைப்புப் பணிகளைச் சிலாகித்து இலக்கிய விருதுகள்
வழங்கிக் கௌரவிக்கத் தவறவில்லை.
அவர்தான் நீர்வை பொன்னையன். சிறந்த தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும்
பரிசு பெறாத சிறுகதைத் தொகுதி ‘மேடும் பள்ளமும்’ ஆகும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாது ஒழிய வேண்டும் என்ற
மனிதநேயக் கொள்கையை தனது கல்விப் பிராயத்திலேயே
வரித்துக் கொண்டவர் அவர். தனது ஊரில் ஆரம்பக் கல்வியைப் பெற்றாலும்
பட்டப் படிப்பை மேற்கொண்டது வங்காளத்தில். போராட்ட உணர்வும்
முற்போக்குக் கொள்கைகளும் இவரது உள்ளத்தில் பதிவதற்கு அங்கிருந்த
சூழலும் முக்கிய காரணங்கள் ஆகின்றன.
இளமைப் பிராயத்திலேயே முற்போக்கு எண்ணங்கள் தனதுள்ளத்தில் ஆழப் பதிந்த
அவர் தான் கொண்ட இலட்சியத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்
என்பதற்காகவே எழுதுகிறார். எழுத்து இவரைப் பொறுத்த வரையில் ஒரு சமூகப்
பணி. தன்னை ஒரு சமூகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார்.
சாதி, மதம், பிரதேசம், பொருளாதாரம் ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்படும்
சகல மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து தன் எழுத்தாணியை
கூர்மையாகப் பயன்படுத்துகிறார்.
மண்ணின் மீது பற்றுக் கொண்டவர் இவர்;. இதனால் தனது பிறப்பிடமான
நீர்வேலியை தனது பெயரோடு நீர்வை என இணைத்து கொண்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்பது தெளிவாக இருக்க
வேண்டும் என்பதற்காக பொன்னையா என்ற தனது பெயரையே
பொன்னையன் எனச் சுருக்கிக் கொண்டவர். இருந்தபோதும் நீர்வை பொன்னையனான
அவர் நண்பர்கள் பலருக்கும் நீர்வை மட்டுமே.
நீர்வை பிரதானமாக ஒரு சிறுகதைப் படைப்பாளி. இலக்கியம் சார்ந்த
கட்டுரைகளை அவர் எழுதியபோதும், அவற்றில் சில ‘நாம் ஏன் எழுதுகிறோம’;
என்ற கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தபோதும், அவர் தன்னை சிறுகதையாளனாகவே
முனைப்புப் படுத்தியுள்ளார்.
ஈழத்து முற்போக்கு சிறுகதை எழுத்தாளர்களின் மூத்த தலைமுறையைச் சார்ந்த
இவரது ஆரம்பகாலப் படைப்புகளே மிகுந்த கலைத்துவம்
மிக்கவையாக அமைந்தது ஆச்சரியமிக்கது. இவரொத்த பலரும் சூழலுக்கு ஒவ்வாத
நிகழ்வுகள் கொண்ட, கற்பனை வரட்சியான, பிரச்சார வாசனையால்
வெறுக்க வைக்கும், கலைவரட்சியுடனான போர்முலா ரீதியான கதைகளாகக்
கட்டிக்கொண்டிருந்த நேரத்திலேயே மண்மணம் மிக்க கலைத்துவப் படைப்பகளைத் தந்துள்ளார்.
எமது நாடு ஒரு விவசாய நாடு. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சொந்தக்
காணியற்றவர்கள். குத்தகைக் காணிகளில் பயிர் செய்பவர்கள். வயல்கள்
மாத்திரமின்றித் தோட்டப் பயிர்களும் குடாநாடெங்கும் செழித்தருந்தன.
ஆனால் விவசாயிகள் வறுமையில் வாடினர். இவர்களைப் பற்றி தமது
படைப்புகளில் பேசாது கற்பனையான தொழிலாள வர்க்கப் பிரச்சனைகள் பற்றி
பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தபோது நீர்வை மட்டும் விவசாயிகள் பிரச்சனையை தனது
படைப்பகளில் முதன்மைப் படுத்தினார். குடாநாட்டு விவசாயிகளைப் பற்றி
மட்டுமின்றி வன்னிப் பிரதேச விவசாயிகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல்
எழுதத் தவறவில்லை.
முக்கியமாக மேடும் பள்ளமும் என்ற இவரது முதற் தொகுப்பில் உள்ள
சிறுகதைகளில் கிராமிய மணம் ரம்யமானது. அத்துடன் பல்வேறுவிதமான
பாணியில் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலைநேர்த்தியில் அவை
மிகச் சேர்ந்தவை.
வங்காளத்தில் படிக்கும்போது மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு
பற்றியதால் அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம்,
போன்றவற்றில் பரந்த அனுபவம் கிட்டியது, அத்துடன் அங்கு கற்கும்
காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப்
படிக்கும் வாய்ப்புக் கிட்டியதாலும் இவருக்கு நவீன இலக்கியங்களுடனான
பரிச்சியம் கிட்டியது. இவற்றின் ஊடாக படைப்புகளில் கருத்தாளம்
இருக்கும் அதே நேரம் உருவ நேர்த்தியும் கலையழகும் சேர்ந்திருக்க
வேண்டியதின் அவசியத்தைப் புரிந்திருக்கிறார். இதனால்தான் நீர்வையால்
தனது
சமகால எழுத்தாளர்கள் பலருக்கும் இல்லாதவாறு சிறுகதைப் படைப்பின்
சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது. யதார்த்தம், நனவோடை, குறுங்கதை போன்ற
மாறுபட்ட வடிவங்களை பரீட்சித்து அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கல்வி கற்று இலங்கை திரும்பிய நீர்வை தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டு
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முழு நேர அரசியல் பணியாளராக
இருந்ததால் தொழிலாளர்களுடனும், உழைக்கும் மக்களினதும் நெருங்கிய
தொடர்பு ஏற்பட்டது. அவர்களது பிரச்சனைiயை அனுபவபூர்வமாக அறிந்தார்.
அவர்களது பிரச்சனைகளுக்காக அவர்களுடன் இணைந்து போராட்டங்களில்
பங்கெடுத்தார். இதனால் இவர் எழுதிய கட்சி அரசியல் சிறுகதைகளிலும்
செயற்கைத்தன்மை இருக்கவில்லை. பிரச்சார வாடை அவற்றில் இருந்தபோதும்
பட்டறிவும் அனுவமும் இணைந்ததால் அவற்றில் உண்மைத்தன்மை
வெளிப்பட்டது.
இவர் அதிகம் எழுதுபவரல்ல. இதுவரை சுமார் 70-80 சிறுகதைகள் மட்டுமே
எழுதியுள்ளார்.
மேடும் பள்ளமும், உதயம், பாதை, ஜன்மம், வேட்கை, நீர்வை பொன்னையன்
சிறுகதைகள், நிமிர்வு ஆகியன இவரது ஏழு சிறுகதைத் தொகுப்புகளாகும்.
இவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்கள் என்ன என யோசிக்கும்போது பல
விடயங்கள் முக்கியமாகப் படுகின்றன. நீர்வையின் படைப்புகள்
கருத்தாளம் நிறைந்தவை. எப்பொழுதும் அவை சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய
அவசியமான கருத்துக்களை முன்வைப்பவையாக இருக்கும்.
தேர்ந்தெடுத்த சொற்கள், சுருக்கமான வசன அமைப்பு, தெளிவான நடை,
உரையாடல்கள் ஊடாக கதை சொல்லும் பாணி, சிறப்பான முடிவு, செறிவான
குறும் தலைப்புகள் எனப் பலவாகும்.
பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் கதை சொல்லும் கலையை நீர்வை
பரீட்சித்திருக்கிறார். இவற்றில் பல அவரது படைப்புலகின் ஆரம்ப கட்டங்களில் இடம் பெற்றன. தனக்கென ஒரு பாணி உருவாகியதும் அதன்
வழியிலேயே நீண்ட காலம் பயணித்தார். ஆயினும் அண்மைக் காலங்களில்
அதன் வடிவம் சார்ந்த மற்றொரு புது முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்க
முடிகிறது. கதை முழுவதையும் தனித்தனி வாக்கியங்களாக பந்தி
பிரிக்காமல் எழுதி வருகிறார். சிறிய வசனங்கள். கவிதையாக இல்லாமல் அதே
நேரம் புதுக்கவிதை போன்ற தோற்றத்துடன் படைக்கப்படுகின்றன.
அண்மையில் வெளிவந்த ‘நிமிர்வு’ தொகுதியில் இத்தகைய படைப்புகளைக்
காண்கிறோம்.
ஏற்கனவே குறிப்பட்ட ‘நாம் ஏன் எழுதுகிறோம்’ என்பது இவரது கட்டுரைத்
தொகுதியாகும்.
‘உலகத்து நாட்டார் கதை’ என்பது இவரால் மீள மொழியப்பட்ட நாட்டார் கதைத்
தொகுப்பு. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலுள்ள நாட்டார்
கதைகளின் தொகுப்பு இது பல பதிப்புகள் கண்ட ஒரு சிறந்த நூலாகும்.
விபவி கலாசார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராக நீண்ட காலம்
கடமையாற்றியதுடன், ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்ற’த்தின்
முக்கிய அங்கத்தவராகவும் செயற்படுகிறார். ஆயினும் தாய்ச் சங்கமான
‘முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் ஆரம்ப காலம் முதல் அதன்
செயற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்தவர். அதன் வளரச்சிக்கு உதவியவர்.
அதன் மகாநாடுகள் சிறப்பாக நடைபெற முக்கிய பணியாற்றியவர்.
அவ்வாறு இருக்க எதற்காக இப்பொழுது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய
மன்றம் எனப் பிரிந்து நின்று செயற்படுகிறீர்கள் எனக் கேட்டபொழுது,
“முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயலிழந்து போய் பல வருடங்களாகிறது.
அதற்கு புத்துயிர் கொடுக்க பல முயற்சிகள் செய்தும் முடியாமல்
போயிற்று. அதன் நீண்ட காலச் செயலாளரான பிரேம்ஜி கனடாவிலிருந்து வந்து
முயன்றும் முடியாமல் போயிற்று. எனவே முற்போக்கு கருத்துகளை
உடைய படைப்பாளிகளை ஒன்று சேர்த்து பணியாற்ற வேண்டியது காலத்தின்
தேவையாக இருந்தது” என்கிறார்.
“சிறுகதை, கவிதை நூல் வெளியீடுகளுக்கு அப்பால், மூத்த முற்போக்கு
சிறுகதையாளர்களையும் கவிஞர்களையும் இன்றைய சமுதாயத்தினருக்கு
அறிமுகப்படுத்தும் வண்ணம் தொகுப்பு நூல் வெளியீடுவது, தோழர்
காரத்திகேசன், பேராசிரியர்.க.கைலாசபதி போன்றோரது நினைவுச்
சொற்பொழிவுகள்
நடாத்துவது, இலக்கியச் செல்நெறிகள், இலங்கையின் கல்வி முறை, சூழலியல்,
சேதுசமுத்திரத் திட்டம், புவிவெப்படைதல், உலகமயமாதல் போன்ற
சமூதாய மேம்பாடு நோக்கிய விடயங்களில் கருத்தரங்குகளும்
நூல்வெளியீடுகளும் என இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் முழு
மூச்சுடன் செயலாற்றி வருகிறது.” என அதன் செயற்பாடுகளை விளக்கினார்.
இவர் பிறந்தது 1930 ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதியாகும்.
யாருக்கும் தெரியாமல், எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அவரது 80 பிறந்த
தினம் கடந்த
மார்ச் மாதத்தில் கடந்துவிட்டது. மணிவிழா, பவளவிழா என எழுத்தளார்கள்
பலரும் (நான் உட்பட) தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்து
உலகில் இவர் வித்தியாசமானவர். தன்னை முதன்மைப்படுத்தாதவர்.
கொள்கைகளுக்காக வாழ்பவர்.
வயதில் முதிர்ந்தாலும் சோர்வின் சாயல் படியாது, இளமைத் துடிப்புடன்
இன்றும் தொடர்ந்து செயற்படும் நீர்வை பொன்னையன் பல்லாண்டு காலம்
வாழ்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட வேண்டி வாழ்த்துகிறேன்.
Dr.M.K.Muruganandan
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
kathirmuruga@gmail.com |