| 
எதிர்வினை 3: இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை!- ஜெயமோகன் -
 
  அன்புள்ள 
கிரிதரன், உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே 
மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம். ஆனால் உங்கள் கடிதத்தில் 
உள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள். 1. நான் இலக்கியத்தில் 
முக்கியமானவர்களாக எண்ணும் முன்னோடிகள், சமகாலபடைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் 
பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் எழுதிவருபவன் என என் வாசகர்கள் அறிவார்கள். என் 
எழுத்துக்களில் கணிசமான பகுதி அதுவே. அவற்றில் பெரும்பகுதி நூல்களாக்வும் 
கிடைக்கின்றன. வாசிக்கச்செய்ய என்னால் இயலாதல்லவா?
 
 
  2
குழுக் குற்றச்சாட்டு எளிதானது. ஆனால் என் வாசகர்கள் முன் எடுபடாது. கடந்த இருபது 
வருடங்களில் நான் முன்வைத்து, முக்கியப்படுத்தி, கவனத்தை ஈர்த்து, விவாதித்த 
படைப்பாளிகளின் பெயர்களை முடியும்போது பட்டியலிட்டுப் பாருங்கள். குறைந்தபட்ச 
நுண்ணுணர்வுள்ள ஒரு வாசகன் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாத எல்லா முக்கியப் 
படைப்பாளிகளும் அதில் அடங்குவார்கள். அவர்கள் மட்டும் அடங்கியதுதான் என் குழுவா? அப்படியென்றால் அது எனக்கு மகிழ்ச்சியே. 
அக்குழு சாதனைகள் செய்தது, புறக்கணிக்கபப்டுவது. அதைச் சேர்ந்தவன் தான் நான். 
நீங்கள் வெளியே உள்ள பெரும்பான்மையின் குரல் என்றால் உங்கள் தேர்வு உங்களுக்குச் 
சரிதான்.
 
jeyamohan.writer@gmail.com 
[இத்துடன் இயல்விருது பற்றிய இந்த விவாதம் முற்றுப் 
பெற்றது. ஜெயமோகனே கூறியிருப்பதுபோல் கூறவேண்டியதெல்லாம் கூறியாகிவிட்டது.] 
 |