திருமுருகாற்றுப்படையில் முருகனது படைவீடுகளும்
அருளிச்செயல்கள் குறித்த செய்திகளும்!
- முனைவர் சே.கல்பனா - விரிவுரையாளர்
தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைகழகம் -
மிகத் தொன்மை வாய்ந்த முருகப் பெருமான், தொல்காப்பிய காலத்தில் குறிஞ்சி நிலத்
தெய்வமாகப் போற்றப் பெற்றார்.சங்க காலத்தே நிலங்கடந்த தெய்வமாகத் தொழுது வணங்கினர்.
முருக வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது என்பதற்குச் சான்றாக, தமிழ் நாட்டில்
அடிகானல்லூர் என்னும் இடத்தில் பழமை வாய்ந்த இடுகாட்டின் கல்லறையில் வேல் மற்றும்
சேவல் சின்னங்களை கண்டெடுத்துள்ளனர். இதனை ஆய்ந்த,தொல்லியல் வல்லுனர்
பி.டி.ஸ்ரீனிவாசன் அவர்கள் கல்லறை 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் முருக
வழிபாடு தொன்மையான வழிபாடு என்றும் கூறுவதாலும் அறியலாம். சங்க இலக்கியங்களுள்
எட்டுத்தொகை நூல்களில் பரிபாடலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும்
முருகனின் சிறப்பை விரித்துக் கூறுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை
கடவுள் வாழ்த்து முருகனை வாழ்த்தியே தொடங்குகின்றது.
“தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகளொளிக்
குன்றி யேய்க்கும் உடுóக்கைக் குன்றி
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகலும் எய்தின்றால் உலகே"
(குறுந்தொகை,கடவுள் வாழ்த்து)
பரிபாடல் முருகனின் சிறப்பினைக் கூறினாலும், திருமுருகாற்றுப்படையே முருகனின்
பெருமைகளை முழுதும் எடுத்துரைக்கும் முதல்நூல்,முழுநூல் எனலாம்.இதன் சிறப்பினையும்,
பெருமையினையும்,சைவ ஆகமங்கள் ஓதும் ஏற்றம்மிகு இனிய செறிந்த கருத்துக்கள்
நிறைந்திருப்பதையும் கருதி 11-ஆம் திருமுறையில் சேர்க்கப்ட்டுள்ளது.வீட்டின்
முருகனதுபெயர்கள் முருகு என்னும் சொல் அழகு, இளமை,மணம்,கடவுள் தன்மை ஆகியவற்றை
குறிக்கும்.அழகு உறைகின்ற இடமெல்லாம் அம்முருகு கொலு வீற்றிருக்கிறது; முருகன்
வீற்றிருக்கிறான்.மிக அழகு வாய்ந்து செம்மை நிறம் உடையவராக விளங்குவதால் பரிபாடல்
செவ்வேள் எனச் சுட்டும்.மேலும் வேள்,நெடுவேல், வேல்வேள்,
சேஎய், குமரன்,மாஅல்மருகன்,காய்கடவுட்சேய், வெறி கொண்டான் எனப் பல பெயர்களைப்
பரிபாடல் குறிக்கும். திருமுரு காற்றுப்படையில் நக்கீரர் முருகனை 26 திருநாமங்களால்
புகழ்ந்து விளிக்கின்றார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் பாடல்சால் சிறப்புடைய மதுரை மாநகருக்கு மேற்குத் திசையில் உள்ளது
என்பதை அருணகிரிநாதர் திருப்பரங்குன்றம் திருப்புகழில் கூறுகின்றார்.
“குடக்குத் தென்பரம் பொருப்பு ”
இத்தலம் முருகப்பெருமானின் முதல் படை வீடாகும். சிவபெருமானின் தலங்களுள் ஒன்றாகும்.
இது சமயகுரவர்கள் நால்வருள் திருஞானசம்பந்தர், சுந்தர மூர்த்தி சுவாமிகளால்
பாடப்பட்டதலமாகும்.. பண்டை தமிழ்நூல்களான கலித்தொகை, அகநானூறு, குறிஞ்சிப்பாட்டு,
சிலப்பதிகாரம், பரிபாடல் முதலான பல நூல்கள் இக்குன்றம் முருகனுக்கும்
முக்கண்ணனுக்கும் பொதுவான தலம் எனக் கூறுகின்றன.
முருகன் எழுந்தருளும் காட்சி
கபில தேவரும் சேக்கிழார் பெருமானும் தம் நூலை உலகம் எனத் தொடங்குவது போல நக்கீரரும்
திருப்பரங்குன்றப் படைவீட்டினை உலகம் என்ற மங்கல சொல்லாச்சி யுடன் தொடங்குகின்றார்.
“உலகம் உவப்ப வலனேற்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடைய நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்” (திருமுருகு,1-6)
நக்கீரர் கதிரவனின் உதயத்தை குமரனுக்கு ஒப்பீட்டுக் கூறுகின்றார். அடுத்த அடியில்
முருகப்பெருமானைப் கதிரவனிடமிருந்து வேறுபடுத்தி,உயர்த்திக் காட்டுகின்றார்.திங்கள்
ஞாயிறு விண்மீன்கள்ஆகியன முருகன் அருளால் தான் விளங்குகின்றன என்றும்,நூலில்
புனைந்த மணிகள் போல் இவ்வுலகங்கள் முருகனால் கட்டி காக்கப்படுகின்றன என வடமொழி ஸ்ரீ
கந்தபுராணம் கூறுவதால் முருகன் ஒளி பிழம்பானவன் என்பதை அறியமுடிகின்றது.இவ்வாறு
ஒளியுருவாய் திகழும் அப்பெருமானின் திருவருள் கிட்டும் அன்பர்களின் உள்ளமும்
வாழ்வும் ஒளிமயமாகும்.அப்பெருமானின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு இருளைக் கொடுக்க
கூடிய இருவினையும் என்றும் நெருங்காது. முருகனின் திருவடிகளில் இடையறாது ஞானஒளி
வீசுவதால் மின் சரணம் என அருணகிரியார் போற்றுகின்றார்.
இயற்கை வளம்
பரங்குன்றத்தின் இயற்கை கொஞ்சும் எழிலை நம் கண்முன் காட்சிப்படுத்துகின்றார்
நக்கீரர்.குன்றத்தில் காணக்கூடிய அடவி, பொழி, அருவி, சுனை,எதிரொலிக்கும் குகை
முதலியன கண்வழிச் சென்று மனத்தினின்று நீங்கா எழிலோவியங்கள்.பரிபாடல் முருகனின்
அறுபடை வீடுகளுள் பரங்குன்றத்தின் இயற்கை வனப்பையே சிறப்பித்துக் கூறுகின்றது.
திருப்பரங் குன்றத்தில் முள்ளைத் தண்டைக் கொண்ட தாமரை மலர்கள், கருமையான சேற்றினை
உடைய அகன்ற வயலிலே மலர்ந்துள்ளன.அத்தாமரை மலரின்கண் வண்டு தேனருந்தி
மலர்படுக்கையிலே உறங்கின. வைகறை வருகின்றது ; கதிரவன் எழுகின்றான் ;தாமரை அரும்பு
பொதி அவிழ்கின்றது.வண்டுகள் விழித்தெழுந்தன.அழகிய சுனையிடத்தே கண்ணைப் போலும்
நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன ;அவை தேனின் மணம்வீசின.நெய்தல் மலர்களிலே அழகிய
சிறகினையுடைய வண்டுக் கூட்டம் படிந்து ஊதித் தேனுன்டது பின் கண்போல் மலர்ந்த சுனை
மலரின்கண் சென்று ஆராவாரித்தன.இத்தகு திருப்பரங் குன்றத்திலே நெஞ்சமர்ந்து
இருத்தலும் உரியன் முருகப் பெருமான்.
“மாடமலி மறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வாய் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாழ் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ்நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றுஅமர்ந்து உறைதலும் உரியன்” (திருமுருகு,71-77)
இங்கு முருனப்பெருமானுடைய திருவடித்தாமரையிலே உயிர் தான் என்ற அகந்தையற்று,ஆணவம்
ஓடுங்கி தன் செயலற்றுக் கிடத்தல் வேண்டும் என்பது குறிப்பு.முருகப்பெருமானுடைய
திருவடிகளை நாடிச் செயல் ஓடுங்கி ஆன்மா, மெய்ஞ்ஞானம் ஓளி பெற்று,முருகனின் கடைக்கண்
நோக்காகிய அருள் பழுத்த தேனைச் சுவைத்துப் பேரின்ப வீடுபேறு அடையும் என்பது உணத்தப்
படுகின்றது.இங்கு மலர்ந்த தாமரை மலரின் தேன் பருகச் சென்ற வண்டுகள் கதிரவன் மறைவால்
மலர்இதழ்க் கதவுகள் மூடியதால் வண்டுகள் அங்கேயே உறங்குகின்றன என்பது உள்ளுறைப்
பொருள்.
சூரபதுமனுக்கு அருளுதல்
மனிதனும் விலங்குமாய் இரண்டு பெரிய உருவினை உடைய சூரபதுமன் மாமர உருவினைக்
கொண்டு,கவிழ்ந்த பூங்கொத்துக்களுடன் கீழ் மேலாக முருகனுக்கு அஞ்சிக் கடலில்
நின்றவனை முருகன் வதம் செய்து கொன்று சேவல் கொடியாகக் கொண்டான் என்ற செய்தியை
நக்கீரர் பதிவு செய்கிறார்.
“இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய்”
திருச்சீரலைவாய்
குறிஞ்சி நிலத்துக்குரிய முருகன்,திருச்சீரலைவாயில் (திருச்செந்தூர்) கடற்கரையில்
எழுந்தருளியுள்ளார்.இத்தலம் தூத்துக்கடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சங்க நூல்களில்
இத்தலம் அலைவாய்,செந்தில் என இரு பெயர்களால் அழைக்கப் படுகின்றது. தொல்காப்பியம்
பொருள் 114 ஆம் சூத்திரம் நச்சினார்க்கினியர் உரையுள் ‘பையுள் மாலை’ என்று
தொடங்கும் பாடலில்,
“நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்” என்று கூறப்படுகின்றது.
நீலத் திரைக்கடல் ஓரத்திலுள்ள அத்தலம் தவம் செய்வதற்குச் சிறந்தது.அங்கு
எழுந்தருளியுள்ள இறைவன் பிறவி என்னும் எழுபிறப்பாகிய பெருங்கடலை கடக்க உதவும்
ஓடக்காரன் என அருணகிரிநாதர் திருவேளைக்காரன் வகுப்பில் குறிப்பிடுகின்றார்.
யாதுநிலை யற்றலையும் ஏழுபிறவிக் கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக்காரனும்”
அறுமுக செயல்கள்
திருச்சீரலவாய் பகுதியில் முருகனின் அறுமுக செயல்கள் கூறப்பெறுகின்றன. முருகனின்
ஒரு முகம் இருண்ட பெரிய உலகம் குற்றமின்றி விளங்கும் பொருட்டுப் பல கதிர்களைத்
தோற்றிவிக்கும்;ஒரு முகம்,அன்பர்கள் துதிக்க அதற்கு மகிழ்ந்து அவர்கள் வேண்டும்
கருமங்களை முடித்துக்கொடுக்கும்;ஒரு முகம் மந்திரமுடைய வேத முறையில் ஒழுகும்
அந்தணரது யாகங்களில் தீமை வராமல் காக்கும்;ஒரு முகம் வேதத்தின் மறை பொருள்களை
ஆராய்ந்த இருடிகள் மகிழும்படி அவற்றை உணர்த்தித் திங்கள்போலத் திசைகளை எல்லாம்
விளைவிக்கும்.ஒருமுகம் மாறுபட்டுப் போர்க்கெழுந்த பகைவரைக் கொன்று கோபித்த
உள்ளத்தோடு போர்க்களத்தை விரும்பும்;ஒருமுகம் குறவரின் இளமையுடைய மகளாகிய
வள்ளியுடன் மகிழ்ச்சியைப் பொருந்தும்.
திரு ஆவினன்குடி(பழனி)
இன்றைய பழனி என்கின்ற புகழ்பெற்ற தலமே திரு ஆவினன் குடியாகும்.ஆவியர்குடி
என்பது,குறுநில மன்னர்களின் குடிகளில் ஒன்று. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன்
இக்குடியில் பிறந்தவன். ஆவி,வையாவி என்பன அக்குடி பெயர்களாகும். அருணகிரியார்
திருப்புகழில் வைகாவூர் நாடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே என இந்த
நாட்டையும் ஊரையும் குறிப்பிட்டுப் பாடுகின்றார். அங்கு முருகன் குற்றமற்ற
அறக்கற்பினை உடைய தெய்வானையுடன் சில நாள் திருவாவினங்குடியில் உறைவான்.
“தாஇல் கொள்கை மல்ந்தையொடு சில்நாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் ” (175,176)
பிரமனைச் சிறை மீட்டல்
கயிலைக்கு வந்த அயன் முருகப் பெருமானைக் கண்டும் காணாதது போல் சிறுவன் தானே எண்ணி
இறுமாந்து சென்றான்.பிரமனின் அகந்தையை அகற்றி நல்லருள் வழங்க முருகன் சிறைப்
பிடித்தான்.பிரமனை மீட்க திரு ஆவினன் குடிக்குத் திருமால்,சிவன்,இந்திரன் முதலான
தெய்வங்களும், அவர்களுடைய கணங்களும் வருகின்றனர்.
“நாற்பெருந் தெய்வத்து நன்நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்” (160,161)
இவர்கள் அறுமுகனிடம் இரந்து கேட்டதால்,முருகப் பெருமான் அயனின் அகந்தையை அகற்றி,
வேத பொருளை உணர்த்தி சிறையிலிருந்து விடுவிக்கின்றார் என்ற செய்தி திருஆவினன்
குடிப்பகுதியில் காணப்பெறுகிறது. இதனையே இராமலிங்க அடிகள்
“மூவர் நாயகனென மறைவாழ்த்திடு,முத்தியின் வித்தே எனப் பாடுகின்றார்.
திருவேரகம்
திருஏரகம் எப்பகுதியில் உள்ளது என்பதில் ஆய்வாளர்கள்
வேறுபடுகின்றனர்.நச்சினார்க்கினியர் மலை நாடகத்து ஒரு திருப்பதி என்று
கூறுகின்றார்.சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் வெண்குன்றத்தைச் சாமிமலை எனலாம்,
ஏரகம் மற்றொரு திருப்பதி என்கிறார்.சிலர்,நாஞ்சில் நாட்டிலுள்ள குமரக்கோயில் தலமே
ஏரகம் என்பர்.அருணகிரியார் கந்தபுராண கடவுள் வாழ்த்தில் திருஏரகம் என்பது தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள சுவாமிமலை என்றே குறிப்பிடுகின்றார்.இத் தலம் தந்தைக்கு உபதேசித்த
தலம்.இங்கு இறைவன் யோகநிலையில் இருந்து அருளுகின்றான். இத்தலத்தில்
இருபிறப்பாளராகிய அந்தணர்கள் முருகனை வழிப்படும் மாண்பினை நக்கீரர்
கூறுகின்றார்.(177-189)
குன்றுதோறாடல்
முருகப் பெருமான் பல குன்றுகளிலும் எந்தருளியுள்ளான்.அனைத்து குன்றுகளையும் ஒரே
தொகுதியாக்கி குன்றுதோறாடல் என்று கூறுகின்றார். குன்று வாழ் எளிய மக்கள் முருகனைப்
பாடி பரவி கூத்தாடும் சிறப்பினை நக்கீரர் கூறுகின்றார்.குறிங்சி நிலக் குறவர்கள்
முருகனைப் போல வேடமிட்டுக் கொண்டு ;மது உண்டு மகிழ்ந்து ;தம் மகளிரோடு சேர்ந்து
தொண்டகம் என்னும் பறையைக் கொட்டிக் கொண்டு குரவையாடுகின்றனர்.(189-197)
முருகனை திருவாவினன் குடியில் முனிவரும் மூவரும் தேவரும் வணங்குகின்றனர்.ஏரகத்தில்
முருகனை அந்தணர் ஏத்துகின்றனர்.இங்கு எளிய குறவர்களும் அவர்களுடைய சுற்றத்தாரும்
வணங்குகின்றனர். கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் தூய அன்போடு இறைவனை யார்
வழிப்பட்டாலும் முருகன் அருள் பாலிப்பார் என்பதை அறியமுடிகின்றது.
பழமுதிர்சோலை
மதுரைக்கு வடக்கே உள்ள அழகர்மலையை,பழமுதிர்சோலை என்றும், திருமா லிருஞ்சோலை என்றும்
வழங்குவர்.பண்டைக் காலத்தில் திருமாலுக்கும், முருகனுக்கும் ஒருங்கே இருந்திருக்க
வேண்டும். சிலப்பதிகாரத்தில் புண்ணிய சரவண என்ற குறிப்பு காணப்பெறுகிறது. முருகன்
சரவண பொய்கையில் அவதரித்தான் எனப் புராணங்கள் கூறுகின்றன.அழகர்மலை பற்றிய
மான்மியத்தில்,முருகன் திருமாலை வழிபாடு செய்ததற்கான செய்திக்
காணப்படுகின்றது.இதனால் இத்தலம் முருகன் எழுந்தருளியுள்ள தலம் எனத் தெளியலாம்.
நக்கீரர் மற்ற தலங்களில் உறைபவன், சேர்பவன், அசைபவன், உரியன், ஆடுபவன் என்று
கூறுகின்றார்.ஆனால் இங்கு பழமுதிர்சோலை மலை கிழவோனே அதாவது பழமுதிர்சோலைக்கு
உரியவன் என்கிறார்.
முருகன் பெருமான் ஊர் தொறும் எடுக்கும் விழாக்களிலும், ஆர்வலர்கள் உள்ளத்
திருக்கோயில்களிலும்,வெறியாடு களத்தினும்,சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து
பிரப்பரிசியாக வைத்து,ஆட்டை அறுத்து,கோழிக்கொடியை நிறுத்தி,எடுக்கும் தலைமை
பொருந்தின விழாக்களிடத்தும் நிறைந்திருப்பான்.
“சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்” (218-220)
நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம், திருச்சீரலவாய்,
திருவாவினன்குடி,திருஏரகம்,குன்றுதோறாடல், பழமுதிர் சோலை என முருகனின் அறுபடை
வீட்டின் சிறப்புக்களும் கூறப் பெற்றுள்ளன. அறுபடைவீடுகளுள் ஒன்றான திருஏரகம்
எப்பகுதியைச் சார்ந்தது என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.இவற்றுள்
அருணகிரியார் திருஎரகம் என்ற ஊர் தஞ்சைக்கருகில் உள்ள சாமிமலை என்று கூறுவதே
பொருத்தமுடையது.குன்றுதோராடல் என்பது முருகன் எழுந்தருளிய பல மலைகளைக்
குறிக்கும்.பழமுதிர்சோலை அழகர்மலை என்றும் திருமாலிருஞ்சேலை என்றும்
வழங்கப் பெறுகிறது. திருப்பரங்குன்றம் சிவனுக்குரிய தலம் என்றும் சமயக்குரவர்களால்
பாடப்பட்ட தலமாக விளங்குகின்றது. மேலும் சூரபதுமனை வெற்றிக் கொண்டு,அவனை
சேவல்கொடியாக அருளிய செயலும்,பிரமனை சிறைப்படுத்தி வேத பொருளை உணர்த்திய
நிகழ்ச்சியும் கூறப்பட்டுள்ளன.
seekal_zhar@yahoo.com |