| புறநாநூற்றில் கல்விச் சிந்தனை
 - முனைவர் சே.கல்பனா ( விரிவுரையாளர்
 தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் )
 
 
  மனித 
வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் 
சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது 
’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை 
ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் 
அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் 
அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் 
கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். 
 இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் 
சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் 
குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான 
புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது.
 
 காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய 
ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் 
நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள மொழிப்பயன்பாடு 
அவர்களுக்கு இன்றியமையாதாயிற்று.
 
 இயற்கையை எதிர்த்து வாழவேண்டிய மனிதனுக்கு கூரிய அறிவும் சீரிய உணர்வும் மிகுந்து 
தேவையாயிற்று.எனவே அவன் தனக்கு வேண்டிய அறிவை இயற்கையிடமிருந்தே கற்றான்.எனவே 
மாந்தனின் முதல் ஆசிரியர் இயற்கையே.
 
 மன்றங்கள்-பள்ளிகள்
 
 சங்க காலத்தில் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் என்னும் பெயரில் எந்த இலக்கியத்திலும் 
குறிக்கப் பெறவில்லை.அதற்கு இணையாக மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்தன என்பதை
 
 அன்னாய் யிவனோ ரிளமா ணாக்கன்
 தன்னூர் மன்றம் தென்னன் ,செம்மலன்(குறுந்,33-1,2)
 
 என்று கூறுமிடத்து மாணவர்கள் மன்றத்திடை இருந்து கல்வி பயின்றதனைக் குறிப்பால் 
அறியலாம்.
 
 சங்ககாலத்தில் ஊர்ப் பொது மன்றங்களில் தான் அனைத்தும் நடைப்பெற்றன.பொது மன்றங்களில் 
பலா,வேம்பு முதலிய மரங்களின் நிழலில் பாணர்,பொருநர் முதலிய இரவலர்கள் வந்து 
தங்குதலும்,அங்குள்ள மரங்களில் தம் இசைக் கருவிகளைத் தொங்க விடுதலும் மரபாகும்.இச் 
செய்தியின்
 
 மன்றப் பலவின் மாச்சினை மந்தி
 
 இரவலர் நாற்றுய வசிகூடு முழவின்(புறம்,128-1,2)
 மன்றப் பலவின் மால்வரை பொருந்தியென் (புறம்,374-15)
 மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் (புறம்,76;4)
 மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து (புறம்,79;2)
 மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப (புறம்,371;7)
 
 என்னும் புறநானூற்று அடிகள் மூலம் அறியலாம் இங்ஙனம் ஊர்ப்பொது மன்றங்களில் பலர் 
கூடி வாதிடவும் கல்வி கற்கவும் பயன்படுத்தப் பெற்றிருந்தது என்பதை ஊகிக்க 
முடிகின்றது.
 
 சங்க காலப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாக விளங்கியுள்ளனர் என்பதை ஆசிரியன் பெருங் 
கண்ணன்,குலபதி நக்கண்ணனார்,மதுரை ஆசிரியர் கோடங்கொன்றனார்,மதுரை இளம் பாலாசிரியன் 
முதலிய பெயர்களைக் கொண்டே அறியலாம்.புறநானுற்றில் அடைநெடுங்கல்வி யார் என்னும் 
புலவர் ஒருவர் பெயர் காணப்பெறுகிறது.இப்பெயர் கல்வியால் பெற்ற சிறப்புப் பெயராகும்.
 
 ஊதியமில்லாக் கல்வி உருப்படாது என்பது பழமொழி இலவசக் கல்வி நடைபெறும் இந்நாள் 
போலில்லாது அந்நாளில் ஆசிரியருக்குப் பெரும் பொருள் கொடுத்தும்,வேண்டிய உதவிகளைச் 
செய்தும் அவர் சினங்கொள்ளாத வகையில் இரு உன இருந்து,சொல்லெனச் சொல்லி அடக்கத்துடன் 
கல்வி கற்றனர் என்பதை,
 
 உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
 பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம்,183;1,2)
 
 என்ற புறநானூற்றுப் பாடல் வழி அறியமுடிகின்றது.
 
 கற்றோருக்கு எங்கும் சிறப்பு
 
 கற்றவருக்கு தம் நாடும் ஊருமேயன்றி அனைத்து நாடுகளும்,ஊர்களும் சொந்தமாகும்.அதனால் 
ஒருவன் இறக்கும் வரையில் கல்லாமல் வீண்காலம் கழிக்கக் கூடாது என்பர் வள்ளுவர்
 
 யாதானும் நாடாமல் ஊராமல் எனொருவன்
 சாந்துனையும் கல்லாத வாறு (குறள்,397)
 
 கற்றவருக்கு,
 
 யாதுமூரே யாவரும் கேளிர்(புறம்,192;1)
 
 என விளக்குவர் கணியன் பூங்குன்றனார்.
 
 மரங்கொன்ஃ றச்சன் கைவல் சிறாஅர்
 மழுவுடைக் காட்டகத் தற்றே
 எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே (புறம்,192,1)
 
 என்பர் ஔவையார்.
 
 ஆற்றவுங் கற்றார் அறிவுடையார்(பழமொழி நானூறு,4)
 
 என்று பழமொழிநானூறும் கல்வியின் பெருமையைக் கூறும்.
 
 பெற்றோர் பெருமை
 
 குழந்தைகளைப் பெற்றெடுத்த அன்னை தான் பெற்ற பிள்ளைகள் அனைவரிடமும் 
பாசமிக்கவர்கள்தான்.இதனாலன்றோ தாயன்பு தலைசிறந்த அன்பாக மதிக்கப்படுகிறது. 
இப்படிப்பட்ட பாசம் மிக்க தாயும் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கும் மகனையே 
பெரிதும் விரும்புவாள்.இதனை
 
 பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளும்
 
 சிறப்பின் பாலாற் தாயுதனந் திரியும் (புறம்,183;3,4)
 
 என்று புறநானூற்றில் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றின் வழி 
அறியலாம்.
 
 ஈன்ற பொழிதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
 சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள்,69)
 
 என்ற திருவள்ளுவர் வாக்கும் இக்கூற்றையே அணி செய்கிறது.
 
 பெற்றோரைப் பெருமைப்படுத்தும் நிலை கல்விக்குண்டு. எனவே பிச்சை எடுக்கும் 
இழிநிலையிலுங் கூட ஒருவன் கற்க வேண்டும் என்கிறார்.அதிவீரராம்பாண்டியர்
 
 கற்கை நன்றே கற்கை நன்றே
 பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை,15)
 
 கொடுக்கக் குறையாத செல்வம்
 
 பொருட் செல்வம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.ஆனால் கல்விச் செல்வத்தை 
வெள்ளம் அழிக்க இயலாதது; நெருப்பினால் வேகாதது;எடுத்துக் கொடுத்தாலும் 
குறையாது;திருடர்களால் களவாட முடியாது;மம்மர் அறுக்கும் மருந்தாகவும் சிறப்புடையது 
கல்வி.என்பது விவேக சிந்தாமணி தரும் செய்தி
 
 கல்வியின் சிறப்பு சொல்ல சொல்ல விரியும்,கற்றவரே கண்ணுடையார் என்றும் கல்லாதவர் 
முகத்தில் புண்ணுடையார் என்றும்,கல்வியைக் கண்ணைப் போல கருதுதல் வேண்டும் என்றும் 
கற்றவரே தெய்வம் என்றும் இலக்கியங்கள் பலபடப் பாராட்டுகின்றன.
 
 ஒரு நாட்டின் வளம் நிலவளத்தால் மட்டும் அமைவதன்று,கற்றறிந்த சான்றோராலேயே நாடு 
மதிக்கப்பெறுகின்றது.இதனை,
 
 நாடா கொன்றோ காடா கொன்றோ
 அவலா கொன்றோ மிசையா கொன்றோ
 எவ்வழி நல்ல வராடவர்
 அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)
 
 என்ற ஔவையார் வாக்கு வலியுறுத்துகின்றது.
 
 கல்லார் இழிவு
 
 கற்றார் பெருமை அறியக் கல்லார் இழிவும் அறிதல் வேண்டும்.
 
 தமிழ் மக்கள் கற்றாரைப் பெருமைப்படுத்தியுள்ளதுடன் கல்லாதவரை இகழ்ந்து 
ஒதுக்கியுமுள்ளனர்.
 
 நூல்கள் பல கற்றாரை மாந்தர்களாகவும் கல்லாதவரை விலங்குகளாகவும் கருதுவர் வள்ளுவர்.
 
 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
 கற்றா ரோடேனை யவர் (குறள், 410)
 
 இவரினும் ஒருபடி மேலே சென்று,
 
 வித்தையில்லா மக்கள் விலங்கினும் கடையராவர்
 புத்தியில்லத மாந்தர் புல்லினும் புல்லராவர்
 
 என்பர் கா.நமச்சிவாய முதலியார்.
 
 கல்வி அறிவில்லார் மாடுகள் மேய்க்கின்ற புல்லைவிடப் புல்லராவர் என்பர் 
விளம்பிநாகனார்.
 
 கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
 கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
 
 என்று அறிவுறுத்துவர் திருமூலர்.
 
 துன்பமுற்றாலும் அறிவிலார் செல்வத்தை நினையாது நல்லறிவி னையுடையாரது வறுமையைப் 
பெரிதாக நினைப்போம் என்கிறார் எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
 
 மிகப் பெரெவ்வ முறினு மெனைத்தும்
 உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்
 
 நல்லறிவுடை யோர் நல்குர
 வுள்ளதும் பெருமயா முவந்து நனிபெரிதே (புறம்,197;15-18)
 
 கேள்வியால் வரும் நன்மை
 
 ஒருவன் சிறிதளவாயினும் கற்றவரிடமிருந்து கேட்க வேண்டும்.அக்கேள்வி அறிவு நிறைந்த 
பெருமையைத் தரும் என்பது வள்ளுவர் கருத்து.
 
 பால் புளிப்பினும் பகல் இருளினும்
 நால் வேதநெறி திரியினும்
 திரியாச் சுற்றம் (புறம்,2;17-19)
 
 என முரஞ்சியூர் முடிநாகனார் இக்கருத்துக்கு வலிமை சேர்க்கின்றார்.
 
 சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் வாழ்த்துகிறார்.பால் 
தன் இனிமை ஒழிந்து புளிப்பினும்,ஞாயிறு இருளினும் நான்கு வேதத்தின் ஒழுக்கம் 
வேறுபடினும் சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு நடுக்கமின்றி நிற்பாயாக என 
வாழ்த்துகின்றார்.அமைச்சு சுற்றம் என்பதால் அவர்கள் கேள்விச் செல்வம் இன்றியமையாதது 
நன்மை பயக்கும் என்பதாம்.
 
 கேள்வியின் வகைப்பாடு
 
 பரஞ்சோதி முனிவர் கேள்விகளை நான்கு வகைப்படுத்துகின்றார் அதை,
 
 நன்றும் தீதுணர் நால்வகைக் கேள்வியர் (திருவிளையாடற் புராணம்)
 
 கேள்வியானது மாசறு கேள்வி,வயங்கு கேள்வி,உணர்ந்த கேள்வி,அற்றமில் கேள்வி,அறமலி 
கேள்வி ,ஓங்கிய கேள்வி,வெறுத்த கேள்வி எனப் பல்வேறு அடைமொழி பெற்றுள்ளது.
 
 மறவுரை நீத்த மாசறு கேள்வி
 அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து (சிலம்பு,மதுரைக்காண்டம் 13-34,35)
 
 என இளங்கோவடிகள் மாசறு கேள்வியினை எடுத்துக் காட்டுகின்றார்.அறந்தலைப் 
படுதற்கும்,அழுக்காறு அவா,வெகுளி,இன்னாச்சொல் எனும் நான்கினையும் நீக்கி மனமாசு 
அறுதற்கும் காரணமாக இருந்து நூற் கேள்வி என்பதும் அறியமுடிகிறது.
 
 நல்ல பல நூல்கள்க் கேட்டு அறிவு நிரம்பிய ஒருவனை
 
 ........நன்பல
 கேள்வியால் முற்றிய வேள்வியந்தணர்.(புறம்,361;3,4 )
 
 எனப் புறநானூறு காட்டும்.
 
 செந்நாப் புலவராகிய கபிலர் செறிவுமிக்க கேள்வியும்,விளங்கிய புகழும் மிக்கவர் 
என்பதை,
 
 செறுத்த செய்யுட்செய் செந்நாவின்
 வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறம்,53;11,12)
 
 எனப் பொருந்தில் இளங்கீரனார் குறிப்பிடுகின்றார்.
 
 கல்வியின் பயன்
 
 கல்வியின் பயன்களை இலக்கியங்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.சங்ககாலத்திற்குப் பின்னர் 
கல்வி என்பது சமயக் கல்வியாகத் தான் இருந்துள்ளது.சமயக் கல்வி சமய ஒழுங்கு 
முறைப்படி செயலாற்றுதலையும்,நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தியது.
 
 சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை அகற்றி நல்வழிப்படுத்தலே கல்வியின் 
தலையாய பயனாகும்.பிறர் நலம் நாடும் பண்பினைக் கற்றலினாய பயன்களுள் ஒன்றாகக் 
குறிப்பிடலாம்.
 
 கற்றதன் பயன் மனிதத் தன்மையோடு வாழ்தல் என்பதை உண்டால் அம்ம இவ்வுலகம் (புறம்,182) 
என்று தொடங்கும் புறப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கற்றோர் இந்திரர் 
அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணார்;பிறருக்குக் கொடுத்தே உண்பார்.யாரிடமும் 
சினம் கொண்டு ஒதுங்க மாட்டார்.பிறர் துன்பங்களைக் கண்டு தாங்களும் 
அஞ்சுவர்;புகழுக்காக உயிரையும் கொடுப்பர்;பழிவருமெனில் உலகமே கிடைப்பதாயினும் 
கொள்ளார்.தனக்கென வாழாமல் பிறர்கென வாழ்வார் என்று விளக்குகிறது.
 
 சாதிக் கொடுமை அகல,கல்வி ஒன்றே உயர்ந்த கருவி என்பதை,
 
 கீழ்பா லொருவன் கற்பின்
 மேற்பா லொருவன் அவன்கட் படுமே ( புறம், 183)
 
 என்ற புறநானூற்றுத் தொடர் நன்கு வலியுறுத்துகின்றது.
 
 சங்க காலத்தில் சங்கப் புலவர்கள் பலர் ஆசிரியர்களாகத் திகழ்ந்துள்ளனர். 
சமுதாயத்தில் ஆசிரியர்கள் மிகவும் மதிக்கப் பெற்றனர்.உற்றுழி உதவியும் உறுபொருள் 
கொடுத்தும் மாணவர்கள் கல்வி கற்றனர்.
 
 மாணாக்கர் முதல் கடை இடையென மூவகையினர்.
 
 கற்றோர் எங்கும் சிறப்புப் பெற்றனர்.கல்வி எழுமைக்கும் ஏமாப்பாயிற்று, பிள்ளைகளின் 
கல்வியறிவு பெற்றோரைப் பெருமைப்படுத்தியது.
 
 மம்மர் அறுக்கும் மருந்தாகிய கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது.
 
 கல்லார் இழிவுடையோராகக் கருதப்பட்டனர்.கல்வியைப் போல கேள்விக் கல்வியும் 
சிறந்தது.விரைந்து கற்க அது பயன்பட்டது.
 
 கற்றதன் பயன் மனிதத் தன்மையுடன் வாழ்வதே,சாதிக் கொடுமைகள் அகல,கல்வி ஒன்றே உயர்ந்த 
கருவி.
 
 kalpanasekkizhar@gmail.com
 |