மடலின் படிநிலைகள்
முனைவர்.இரா.குணசீலன் .
தமிழ் விரிவுரையாளர் .
கே.எஸ் .ஆர் கலை அறிவியல் கல்லூரி .
திருச்செங்கோடு நாமக்கல்மாவட்டம் .
முன்னுரை .
இலக்கியங்கள்
மக்களின் வாழ்வியலை இயம்புவன .மனித வாழ்வில் காதல் அடிப்படையானது .காதல்
நிறைவடையவிட்டால்
இன்றும் காதலர் மனம் சாதலையே விரும்புகிறது .இவ்வுணர்வை இலக்கியங்கள் அகப்பொருளில்
உரைக்கின்றன.அகத்துறைகளுள் ஒன்றான மடல் காதலின் முதிர்ந்த நிலையினது .அதனால் தான்
இது பெருந் திணைக்கு உரியதாக உரைக்கப்படுகிறது .காதலும் சாதலும் எக்காலத்தும் யார்
மாட்டும் நிகழ்வதாகும் .இந்த நிகழ்வுக்கும் மடல் என்ற அகத் துறைக்குமான தொடர்பை
இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது .
மடலின் இலக்கணம்
மடல் என்ற சொல் பனங்கருக்கு, பனைமடல் ஆகிய பொருள்களில் இலக்கியங்களில் பயின்று
வருகின்றது .இதனை ,
"மடல்மா கூறும் இடனுமார் உண்டே" (தொல்.1047). என்பர் தொல்காப்பியர்.மேலும் காதல்
பெருகிய நிலையில் காதலியைப்
பெரும் கடைசி முயற்சியாக தலைவன் நாணத்தை விட்டு மடல் ஏறி ஊர் மன்றுக்கு வருவான்
.இதனை ஏறியமடல் திறம்
என்பர் தொல்காப்பியர் .பெண்கள் எந்த திணையிலும் மடல் ஏறுவது இல்லை .அது பொற்புடைய
நெறி அன்று1 .என்பது
தொல்காப்பியர் கருத்து .மடல் மா பெண்டிர் ஏறார் ஏறுவர்
கடவுளர் தலைவராய் வருங்காலை (பன்னிரு பாட்டியல் 147)
என இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது .புறப்பொருள் வெண்பா மாலை மடலூர்தலை ஆண் பெண் என
இரு பாலருக்கும்2
பொதுமைப் படுத்துகிறது .மடல் ஏறியும் காதலி கிடைக்காத நிலையில் 'வரை பாய்தல் 'என்ற
தற்கொலை முயற்சி அமைவதை "ஒருவன் ஒருத்தியிடம் கழி காமத்தனாகி அவளை அடையப்பெறாது
மடல் ஏறி ,வரை பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் உண்டு என்பர்3 மு .இராகவ
ஐயங்கார் காதலுக்காக நிகழும் மடல் ஏற்றத்தை தலைவன் மேற்கொள்ளும் ஒருவகை தற்கொலை
முயற்சியாகவே4 மீனாட்சி சுந்தரனார் கருதுவர் .
ந.சுப்பு ரெட்டியார் ,தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை என்ற நூலில் "காதல்
ஒவ்வாக்காலை நிகழும் வரை பாய்தல் முதலிய
தற்கொலை செயல்களும் இதில் அடங்கும் "5என்று குறிப்பிடுவர் .மடலூர்தல் ஒரு தற்கொலை
முயற்சியாகவே நூல்களில் மிக
நுணுக்கமாக சுட்டப்பட்டுள்ளது .மடல்ஊர்ந்தும் காதலி கிடைக்காவிட்டால் அது
தற்கொலையாகவே முடியும் அது தான்
மலையில் இருந்து கீழே விழுதல் இதுவே வரை பாய்தல் 6என்பர் ம.சீனிவாசன் .
சங்க கால மடல்
சங்ககாலப் புலவர் ஒருவர் மடல் பற்றிப் பாடியதால் 'மடல் பாடிய மாதங்கீரனார்'என்ற
சிறப்புப் பெயர் பெற்றார் .இரண்டு சிறிய பாடல்களுக்காக இப்பெயர்
பெற்றிருக்கமாட்டார் இவ்வொரு துறையில் பல பாடல்கள் ஆக்கியிருப்பார்7என்பர்
வ.சுப .மாணிக்கனார் .
சங்க இலக்கியத்துள் மடல் குறித்து பதின் மூன்று பாடல்கள் உள்ளன நற்றிணை
143,152,342,377.) குறுந்தொகை
(14,17,32,173,182.)யில் உள்ள பாடல்கள் ஐந் திணைக்கு உரிய பாடல்கள் கலித்தொகையில்
(138,199,140,141.)உள்ள பாடல்கள்
நெய்தல் திணை ஆயினும் 'ஏறிய மடல் திறம் ' என்ற பெருந்திணை குறிப்பால் பெருந்திணை
யாகவே கருதப்படுகிறது
.ஐந்திணையில் மடல் கூற்று மட்டுமே நிகழும் பெருந்திணையில் மடலேற்றமும் நிகழும்
.மடல் ஏற்றக் காட்சியை ,
காம நோய் மிகுந்ததால் ஒருவன் மடல் ஏறத் துணிகிறான் (குறுந்தொகை 17-14)தன் செயலுக்கு
பனை மடலால் குதிரை
செய்கிறான் .(கலி 138-12)அக்குதிரைக்கு மணி கட்டுகிறான் .ஆவிரம்பூ மாலை
அணிவிக்கிறான் (குறுந்தொகை 182-2,173-
1)மடல் ஏறும் தன் மார்பில் எலும்பு மாலை சூடுவான் .(குறுந்தொகை -182-3)மடலேருவதால்
தன் நாணத்தை விடுகிறான் .
(குறுந்தொகை-182-4)மடன்மாவை சிறுவர்கள் இழுக்க மடலேறி மறுகில் வருகிறான் .(நற்றிணை
-220-4)அவனைக் கண்டோர்
ஆரவாரம் செய்வர் .அவன் தன் தலைவியை உலகறிய உரைப்பான் .(குறுந்தொகை-35-5)அதனால்
ஊரார் அவனுக்குரிய
தலைவியை எண்ணி தூற்றுவர் .(குறுந்தொகை- 14-4) மடலேரியவன் அன்பு மனம் கருதிய ஊரார்
,பெற்றோர் கூடியிருந்து அவன் விரும்பியவளுடன் மனம் செய்து வைப்பார்(கலி-141)இதுவே
சங்க கால மடலேற்ற முறையாகும் .
இவ்வாறு கண்டவருக்கு இரக்கம் தோன்ற தலைவன் மடலேறி தெருவில் தன் காதலைப் பாடி வந்தமை
கண்டு அவள்
பெற்றோர் திருமணம் முடித்து வைத்தனர்.இதனை
"வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட"(கலி-141) என கலித்தொகை சுட்டும்.வருந்த
என்பதால் ஊரார் மடலேரியவன் பக்கம் சார்ந்தனர் என்பதும் "திருந்திழைக்கு ஒத்த
"என்பதால் தலைவியும் இவனை காதலிக்கிறாள் என்பதும் பெறப்படுகிறது
."பொருந்தார்" என்ற சொல்லினாலும் உவமயினாலும் இக்காதல் உறவிற்கு பெற்றோர்கள் மனம்
பொருந்தவில்லை என்பதும்
,வேறு என் செய்வது என்று கருதி வலிமையான மன்னனுக்கு கப்பம் கட்டுவது போல
கட்டாயத்திற்காக கொடுத்தனர் என்பர்
வ.சுப.மாணிக்கனார் .
இதிலிருந்து சங்க காலத்தில் காதலுக்காக மடலேறும் காதலனின் அன்பு மனம் புலனாகும்
.மடலேர்தலின் ஒரு கூறாக வரை
பாய்தல் என்ற தற்கொலை முயற்சியை சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன . குறுந்தொகை
(17)யில் பயின்று வரும் 'பிறிதும்
ஆகுப 'என்ற சொல் மடலோடு ஒப்புநோக்கத் தக்கதாக உள்ளது .'பிறிதும் ஆகுப'என்பது
வரைபாய்தலே என்பர்8
நச்சினார்க்கினியர். மிகுந்த காமத்தால் மலை மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து
கொள்வோரை ,
'ஆராக் காமம் அடூ உ நின்று அலைப்ப
விறு வரை வீழ்னர் '(அகம்-322-2.3)
என்று அகநானூறு குறிப்பிடுகிறது .இவ்வாறு மடலேருதலும் வரைபாய்தலும் சங்க காலத்திய
வழக்ககவே அறியமுடிகிறது .
"சங்கப்பாடல்களை நோக்கி இதனை ஒரு சமூக வழக்கமாகவே கொள்வர் செக் நாட்டு ஆய்வாளர்
கமில் சுவலபில் ."9பண்டைத்
தமிழரிடையே நிலவிய ஏறு தழுவுதல் போல இதுவும் ஒரு சமூக வழக்காகும்10 என்பர் அறிஞர்
ஹார்டி
.மேற்க்கண்டவற்றால்மடலேறுதல் ,வரைபாய்தல் ஆகியன சமூக வழக்கமாகவே அறியமுடிகிறது
.மடலேருதலுக்கு இனமான
ஒரு செயலாகவே கோவை நூல்களும் வரைபய்தலை உரைக்கின்றன 11.
குயில்ப்பாட்டில் பாரதியார்
"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் .(குயில்-1087)என்றுரைப்பர் .
காமத்தின் உச்ச நிலை அடைந்தவன் மடலேறியோ , வரை பாய்ந்தோ உயிரை மாய்த்துக்
கொள்கிறான் .இதனை சிறந்த
தத்துவமாக்குகிறார் எச்.எ.கிருட்டினபிள்ளை "ஏசுநாதர் மக்கள் மீது கொண்ட
ஆராக்காதலால் சிலுவை ஏறி தன்னுயிரை
மாய்த்தாகக் "12குறிப்பிடுவர் . வைரமுத்து 'வில்லோடு வா நிலவே ' என்ற புதினத்தில்
காதலன் தன் காதலியை பெரும்
கடைசி முயற்சியாக மடலேருவதையும் ,வரைபாய்வத்தையும் சிறப்பாக எடுத்துரைப்பார் .
இன்றைய சமூகத்தில் நிகழும் தற்கொலைகள் பல சூழலில் நிக்ழ்கின்றன் .எனினும் காதல்
தோல்வியால் நிகழும் செய்து
கொள்ளும் தற்கொலைகளே மிகுதியாகும் .சான்றாக,
ரயில் முன் பாய்ந்துகாதலர்கள் தற்கொலை (காலைக் கதிர்-14.11.07)
என்ற செய்தியைக் குறிப்பிடலாம் ."நீலகிரி மலைவானரில் ஒரு வழக்கம் இருப்பதாகத்
தெரிகிறது .படுகு இனத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியை அடைய முடியாத சூழலில்
அவளை எவ்வாறேனும் அடைவேன் .இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் .என்று பலரும்
அறிய சபதம் செய்வதும் அவளை அடைய முயல்வதும் அம்முயற்சியில் பெரும்பாலும் வெற்றியே
பெறுவதும் இன்றும்
வழக்கில் இருப்பதாக அறிஞர் தர்ஸ்டன் குறிப்பிடுவர் .
முடிவுரை :
காதலன் காதலியைப் பெரும் வழிகளில் ஒன்றாக மடல் இருந்துள்ளது .பெருந்தினைக்கு
உரியதாக மடலை தொல்காபியர்
சுட்டுவர்.எனினும் சங்க இலக்கியத்தில் அன்பின் ஐந்திணை யாகவே மடலேற்றம்
இடம்பெறுகிறது . நச்சினார்க்கினியர்
,மு.இராகவையங்கார் ,மீனாட்சி சுந்தரனார் ,சுப்பு ரெட்டியார் .ம.பே.சீனிவாசன் போன்ற
தமிழ் அறிஞர்கள் மடலேற்றத்தை
தற்கொலையாகவே கருதுவர். கமில் சுவலபில் ,ஹார்டி போன்ற அறிஞர்கள் மடலேருதலின் ஒரு
கூறாக தற்கொலையைக்
கருதுவர் .மேலும் இது ஏறு தழுவுதல் போன்ற சமூக வழக்கே என்று உரைப்பார்கள் .கோவை
நூல்களில் மடலேறுதல் வரை
பாய்தலோடு ஒப்பவைத்து உரைக்கப்படுகிறது .பாரதியாரின் குயில்ப்பாட்டு காதல் போயின்
சாதல் என்றுரைக்கிறது .வைரமுத்து 'வில்லோடு வா நிலவே 'புதினத்தில் காதலுக்காக
வரைபாய்ந்து தற்கொலை செய்து கொள்வதை உரைத்துள்ளார் .எச் .கிருட்டின பிள்ளை இயேசு
மக்கள் மீது கொண்ட காதலுக்காக மடலேருவதாக இயம்புவர் .
இன்றைய சமுதாயத்தில் காதலில் தோல்வியுற்றால் தற்கொலை செய்து கொள்வது இயல்பாக உள்ளது
.இன்றும் நீலகிரி
மலைவானரிடம் ,தான் விரும்ம்பிய பெண் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வது
வழக்கமாக உள்ளது .
இலக்கியங்கள் சுட்டும் மடலேற்றம் உலகியல் வழக்கமாகும். மடலேற்றத்தின் சிறு கூறாக
தற்கொலை அமைகிறது .
தற்கொலை பண்டை காலத்தில் வரை பாய்தலாக இருந்தது .இன்றோ தூக்கிட்டுக் கொள்ளுதல்
,விசம்குடித்தல் ,தீ
வைத்துக்கொள்ளுதல் ,ரயில் முன் பாய்தல் என பல வகையினதாகஅமைகிறது .
சான்றெண் விளக்கம்1.
தொல்காப்பியர் – நூற்பா -981
2. புறப்பொருள் வெண்பாமாலை – பெருந்திணைப்படலம்-17
3. மு.இராகவையங்கார், தொல்காப்பியர் ஆராய்ச்சி –பக்-37,40.
4. T.P.Meenakshi Sundaram History of Tamil Literature,9 – 143
5. ந.சுப்புரெட்டியார் – தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை – ப -44
6. ம.பெ.சீனிவாசன் – திருமங்கையாழ்வார் மடல்கள் – ப -37
7. வ.சுப.மாணிக்கம் – தமிழ்க்காதல் – ப -197
8. தொல்காப்பியம், களவியல் – நச்சினார்க்கினியர் உரை – ப-39
9. Kamil Zuvelaebil , Literary carvention in Adam Poetry –P – 24.
10. Friedhelm Hardy , Viraha Bhaki , P – 147
11. தஞ்சை வாணன் கோவை -102, திருப்பதிக் கோவை-128, கலைசைக் கோவை-115
12. Edgar Thurston, Ethnographic Notes in Sounthern
India -1 Part 1,p-21
gunathamizh@gmail.com |