நெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி
மனிதத்துவமே. கலாசார மேன்மைகளைக் கேள்விகுள்ளாக்கும் திரைப்படம்
குருட்டுமை Blindness
- எம்.கே.முருகானந்தன். -
அமெரிக்காவின்
மிகவும் பரபரப்பு மிக்க வீதி ஒன்றில் திடீரென வாகன நெரிச்சல். ஒன்றுக்குள்
மற்றொன்றாக நெரிபடுகின்றன. ஹோர்ன் சத்தங்கள் அலறுகின்றன. காரணம் என்னவென்றால்
வாகனம் ஓட்டி வந்த ஒருவருக்கு திடீரென பார்வை மங்கிக் குருடாகிப் போவதுதான்.
இதேபோல விமானங்கள் தாறுமாறாகத் தரை இறக்கப்படுகின்றன. இதுவரை அறியப்படாத புதிய
தொற்றுநோய் காரணமாகவே அவர்களது பார்வை போயிற்று. நோயாளியின் கண்ணைப்
பரிசோதித்த கண்மருத்துவரின் பார்வை அன்று இரவே பறிபோகிறது. மிக வேகமாகத் தொற்றும்
இந்த நோயால் பலர் பார்வையற்றுப் போகிறார்கள். இவ்வாறு குருடாகும் போது பார்வை
இருண்டு போகவில்லை. எல்லாமே பால் போல வெள்ளையாக, வெளிச்சமாக இருக்கும் ஆனால்
உருவங்கள் பொருட்கள் எதுவும் தெரியாது. White
Blindness என்கிறார்கள்.
பன்றிக் காய்ச்சலை விட மிக மோசமாக மக்களைப் பீதிக்கு உள்ளாக்குகிறது. யாருக்கு
எப்பொழுது தொற்றுமோ என்ற அச்சத்தில் அந்த நகரமே பீதியில் உறைகிறது.
பார்வை இழந்தவர்களை முகமூடி அணிந்த சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளில்
ஏற்றி ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு மருத்துவ மனையில் கொண்டு போய் அள்ளிப்
போடுகின்றனர்.
அங்கு அவர்களைக் கவனிக்க மருத்துவர்கள்
கிடையாது. பாராமரிக்க ஊழியர்கள் இல்லை. கூட்டித் துப்பரவு செய்ய எவரும் இல்லை.
பார்வையற்றவர்களுக்கு எதுவுமே முடியவில்லை. தடுமாறுகிறார்கள். தடக்கி
விழுகிறார்கள். காயப்படுகிறார்கள். உதவுவதற்கு எவருமில்லை. ஏதாவது தேவையெனக்
கேட்கப் போனால் வாசலைத் தாண்ட முன்னரே எட்டத்தில் நிற்கும் காவலர்களால்
கேள்வியின்றிச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
கண் மருத்துவரின் மனைவி தனது கணவனுக்கு உதவுவதற்காக தானும் பார்வை இழந்தவள் போல
இரகசியமாக வந்துவிடுகிறாள்.
நல்ல காலம் அவளது பார்வை பறிபோகவில்லை. அவள்
மட்டுமே அவர்களுக்கான ஒரே உதவி. இவர்கள் பிறவிக் குருடர்கள் அல்ல. இற்றை நாள்வரை
பார்வையுள்ள உலகிற்கு பரிச்சயமானவர்களுக்கு திடீரென எல்லாமே
சூன்னியமாகிவிடுகிறது.
உணவு சமைப்பதற்கு யாருமில்லை. உணவு பெட்டிகளில் கொண்டு வந்து வெளியே போடப்படும்.
அதுவும் போதுமானதாக இல்லை. முறையிட யாருமில்லை. பசி, தாகம், இயலாமை, வெறுப்பு.
குளிப்பதற்கு போதிய நீரில்லை. எதிர்காலம் பற்றிய பயம், சட்டம் ஒழுங்கு இல்லாமை.
அதனால் எல்லாம் தான் தோன்றித் தனமாக நடைபெறுகிறது.
வல்லவர்கள் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள். பசி கோர தாண்டமாடுவதால் உடலைக்
கொடுத்தால்தான் உணவு என சில வல்ல மிருகங்கள் அடாத்துகின்றன. ஒரு பெண்
இரக்கமற்றவர்களுக்குப் பலியாகிறாள். மனிதம் மரணித்துவிட கோபமும், ஆக்ரோசமும்,
பொறாமையும், தகாத ஆசைகளும் கோலோச்சுகின்றன. அதற்குள் சிலருக்கு எல்லை மீறிய
காமமும் கிளர்ந்தெழுகிறது.
அவர்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குரியதாகிறது. வேலையாட்கள் இல்லாததாலும்,
இவர்களுக்கு பார்வை தெரியாததாலும் அழுக்கும் அசுத்தமும் சூழ்ந்து கொள்கிறது.
அழுக்கான உடைகளும், கழிவுப் பொருட்களும் மருத்துமனை விடுதியெங்கும் குவிந்து
கிடக்கின்றன.
மலமும், சிறுநீரும் கூட ஆங்காங்கே கிடக்கின்றன. அதில் வழுக்கி விழுந்து
தங்களையும் தமது உடைகளையும் சிலர் அசுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். சிலர்
அணிந்திருந்த தமது உடைகளையும் களைந்து விட்டு அம்மணமாகத் திரிகிறார்கள்.
அந்த அம்மணத்தின் அலங்கோலத்தை மற்றவர்களால் காணமுடியாதிருக்கிறது.
பார்த்திருக்கும் எம் மனம்தான் கூசுகிறது.
ஆம் பார்வையாளர்களின் பாலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதற்காகவே திரைப்படங்களில்
நிர்வாணக் காட்சிகளைச் சேர்க்கிறார்கள். ஆனால் இங்கு அதே நிர்வாணம் மனத்தில்
கவலையை, பரிதாபத்தை, ஏன் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றது.
நிர்வாணத்தினூடாக மனத்தில் வலியை எழச் செய்யும் நெறியாளரும், கமராமென்னும்
பாராட்டுக்குரியவர்கள். Cesar Charlone லின் படப்பிடிப்பு திரைப்படத்தின்
வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். நகரத்தின் சிதைவை அவர் மிக அற்பதமாகவம்,
நுணுக்கமாகவும் மனத்தைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார்.
நெருக்கடிகள் மிக்க சூழலில், சமூக மற்றும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்த
நிலையில், தன்னிச்சையாக காட்டு மிருகங்கள் போல வாழும் கட்டற்ற வாழ்வின் அவலம்
இத்திரைப்படம் போல வோறெங்கும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
போர்த்துக்கலைச் சேர்ந்த Jose Saramago வின் நோபல் பரிசு பெற்ற நாவலின் (1995)
திரைப்பட வடிவம் இது. Fernando Meirelles நெறியாள்கை செய்து திரைப்படமாக
ஆக்கியுள்ளார். அவர் City of God என்ற தனது முதற் திரைப்படம் மூலம் மிகவும்
பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மெக்சிகோ சேரி வாழ்வின் இருண்ட
பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்வையாளர்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Blindness என்ற
இத்திரைப்படத்தில் Julianne Moore, Mark Ruffalo,
Danny Glover, Gael Garcia Bernal ஆகியோர்
முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 120 நிமிடங்கள் வரை சுவார்ஸமாக ஓடுகிறது.
ஒரு அதிகற்பனைக் கதை என்பது உண்மைதான். ஆயினும் இது எதைச் சொல்ல வருகிறது?
ஆழ்ந்த சமூகக் கருத்து ஒன்றைக் குறியீடாகச் சொல்கிறது எனலாம். அந்த மனிதர்களின்
குருட்டுத்தன்மையூடாக சமூகத்தின் குருட்டுத் தன்மையையே சுட்டிக் காட்ட முன்
வருகிறது எனத் தோன்றுகிறது. உண்மையில் கண்பார்வையிழந்தவர்கள் அடைபட்டிருக்கும்
மருத்துவமனையை ஒரு சமூகத்திற்கு ஒப்பிடலாம்.
சட்டம் ஒழுங்கு குலைந்த நிலையில் அவர்களிடையே நிகழும் சம்பவங்களைப் பார்க்கும்
போது, நாம் போற்றும் எமது காலசார உன்னதங்கள் எவ்வளவு போலித்தனமானவை என்பதை உணர
முடிகிறது. உணவுக்காகவும், செக்ஸ்க்காகவும் ஒருவரை ஒருவர் அடித்துக்
கொள்கிறார்கள். கொல்லவும் தயங்கவில்லை.
கட்டுப்பாடுகள் தளர்ந்தால் மிருகங்களுக்கும் மனிதர்களான எங்களுக்கும் இடையே
எவ்வித வித்தியாசமும் கிடையாது.
ஆம் சிந்திக்கத் தூண்டும் இத் திரைப்படம் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
மிக மோசமான உயிருக்கு ஆபத்தான, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம் நிறைந்த
இடர்மிகு சூழலில் மனிதத்துவம் தப்பித்திருக்க முடியுமா? சுரண்டலும்
அடக்குமுறையும் கொடூரமும் தாண்டவமாடும் சூழலில் மரியாதையையும், வினயத்தையும்
எதிர்பார்க்க முடியுமா? அங்கு அன்பும் காதலும் நற்பண்புகளும் தாக்குப் பிடிக்க
முடியுமா?
இவை போன்றவற்றிக்கு இப்படம் விடையைத் தேட முயற்சிப்பதாகவே நான் நினைக்கிறேன்.
இதை வெளிப்படுத்துவதற்காக மிகவும் அருவருப்பான காட்சிகளுடாகவும் எங்களை அழைத்துச்
செல்கிறார் நெறியாளர். நரகத்தின் ஊடாக சொர்க்கம் நோக்கிய பயணம் எனலாம்.
இறுதியில் என்ன நடக்கிறது? உணவு அடியோடு இல்லை. எந்தவித உதவிகளும் கிட்டவில்லை.
இந்த நிலையில் அங்கு திடீரென நெருப்புப் பற்றிக் கொள்கிறது. சிலர் அதற்குள்
அகப்பட்டுவிட மற்றவர்கள் உயிரைப் பயணம் வைத்து வெளியேற முயல்கிறார்கள்.
என்ன ஆச்சரியம்!
வழமையாக தலைக்குறி தென்பட்டவுடன் துப்பாக்கியால் சுடும் காவலருள் ஒருவனைக் கூடக்
காணவில்லை. 'we are free..' என ஆனந்தத்தில் கத்திக்கொண்டு வெளியேறுகிறார்கள்.
வெளியேறினாலும் நிம்மதி கிட்டவில்லை.
மேலும் துன்பங்கள் காத்திருக்கின்றன.
நகரில் யாரையும் காணமுடியவில்லை.
உதவிக்கு அழைக்க யாரும் தென்படவில்லை.
மனித நடமாட்டம் இன்றி நகரம் வெளிச்சோறிக் கிடக்கிறது.
வாகனங்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டுள்ளன.
குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
உணவு பெற முடியவில்லை.
ஓரிடத்தில் இறந்து கிடக்கும் மனிதன் ஒருவனைக் நாய்கள் குதறியெடுத்துத் தின்று
பசியைத் தணிக்கின்றன.
நகரத்தின் வெறுமை எம்மையும் அப்பிக் கொள்கிறது.
Blindness என்பது மிகுந்த கருத்தாழம் கொண்ட தலைப்பு என எண்ணத் தோன்றுகிறது. இங்கு
பார்வை இழந்தவர்கள் அல்லது குருடர்கள் என்று தலைப்பிடப்படவில்லை என்பதைக் கவனிக்க
வேண்டும். குருட்டுத்தன்மை அல்லது குருட்டிமை என்றே சொல்கிறது.
Blindness என்ற
இத்திரைப்படம் குருட்டுமையை கண்பார்வை இழந்தவர்களின் செயற்பாடுகள் மூலமாகவும்,
மற்றொரு புறத்தில் பார்வையிழந்தவர்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது கண்ணை
மூடிக்கொண்ட சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஊடாகவும் உணர்த்த முயல்கிறது.
நாம் எங்களது பிரச்சனைகளை மட்டுமே 'பார்க்கிறோம்'. எங்கள் தேவைகளை மட்டுமே
முனைப்புடன் நோக்குகிறோம். மற்றவர்கள் துன்பங்களைப் பார்ப்பதில்லை அல்லது
தயக்கத்துடன் அல்லது அரைமனத்துடன் மட்டுமே பார்க்கிறோம். இதுவே குருட்டுமை
எனலாம்.
ஆம் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் எல்லோரும், அவர்களின் அரசு உட்பட தமது
நலன்களையே எண்ணிக் கொண்டன. தமது தேவைகளையே பூர்த்தி செய்தன. தமது எதிர்காலம்
பற்றியே சிந்தித்தன. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக கைவிடப்பட்ட, பார்வையிழந்த
மக்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை.
அவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது தேவை பற்றியோ கவனம் செலுத்தவில்லை. தமது
நலனிற்காக அவர்களைப் பலியிட்டன. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று
கூடக் கவலைப்படவில்லை. அவர்கள் எப்பாடு பட்டாலும் படட்டும் நாம் சுகமாக
வாழவேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்ந்தன.
ஜனநாயகம், மக்கள் நலன், என்றெல்லாம் தலைவர்களும் அரசுகளும் கூச்சல் போடுவதும்
தம்பட்டம் அடிப்பதும் போலித்தனம்தானா? அரசுகள் இவ்வாறுதானா நடந்து கொள்ளும்.
ஆனால் திரைப்படம் இத்துடன் முடிந்து விடவில்லை. கிளைமக்ஸ் இனித்தான் வருகிறது.
ஓரளவு முன்பே யூகித்ததுதான். அதையும் கூறி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது
அல்லவா?
உண்மையில் இது ஒரு சுவாரஸ்மான மனத்தை அலைக்கழிக்கும் திரைப்படம். பல அடிப்படை
விடயங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. ஆனால் சந்தோஸமாக நேரத்தைக்
கழிக்கக் கூடிய பொழுதுபோக்குப் படம் அல்ல என்பதும் உண்மையே.
Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
kathirmuruga@hotmail.com |